Friday, August 22, 2025

துப்ப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம். இரு வேறு கருத்துகள்.


                                                     



சென்னையில் இப்போது நடக்கும் துப்புரவாளர்களின் போராட்டத்தைப் பற்றிப் பேசும் போது திருமாவளன் கூறிய கருத்து பற்றி சில விவாதங்கள் எழுந்துள்ளன.  “இந்தப் போராட்டம் தேவையில்லை; தனியாரிடம் சென்றால் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு அமர்த்தலாம். இதனால் இந்த வேலைக்கு இவர்கள் தான் என்ற சனாதன அமைப்பு மாறலாம். துப்புரவு தொழிலுக்கே பிறந்தவர்கள் நாம் என்ற நினைப்பு இந்தப் பணியாளர்களிடமிருந்து மாறவேண்டும்” என்று சொல்லியுள்ளார்.

இதே கருத்தை 20 வருடங்களுக்கு முன் நான் என் வலைப்பூவில் எழுதினேன். அதில் ...

https://dharumi.blogspot.com/2005/11/110.html

 

Friday, November 25, 2005

110. திருமாவுக்கு ஒரு வார்த்தை…

மரியாதைக்குரிய திருமா,

நான் சொல்ல வந்தது:

* இதே போல அவர்கள் எப்படி படிப்பினால் மட்டுமே உயர முடியும் என்பதையும் அழுத்தமாக மனதில் ஊன்றுங்கள்.

 

* குலத்தொழிலை விட்டு வெளியே வந்தாகவேண்டும் என்ற உண்மையை வலியுறுத்துங்கள்.

.... இப்படி ஒரு பதிவை 20 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளேன். ஆனால் இன்று வரை நிலை மாறவேயில்லை.

 பழைய நிகழ்வு:

பல ஆண்டுகளுக்கு முன்பாக இதேபோன்ற ஒரு போராட்டம் மதுரையில் மேல மாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்பில் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதைத் தாண்டிப் போன நான் இந்தப் போராட்டம் தோல்வியுற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு போனேன். இன்று இருப்பதை விட அன்று அதிக இடதுசாரி சிந்தனையோடு இருந்தும் அந்த எண்ணம் வந்தது.

இந்தப் போராட்டங்களால் ஒரு சாதியினருக்கு சனாதனம் ஒதுக்கிக் கொடுத்த அந்த சாதியினரே தொடர்ந்து செய்து வருகின்றனர். இன்னும் அது எங்களுக்கே சொந்தம் என்று இன்றும் அவர்களே தொடர்ந்து அவைகளைக் கேட்டுப் போராட்டம் நடத்தும் அளவில் தான் இருக்கிறார்கள்.

 

அன்று ...ஓர் இழவு வீட்டிற்குச் சென்றிருந்தேன். வ்யதான ஒருவர் இறந்திருந்தார். முக்குலத்தோர் வீடு. தப்பு கொட்ட ஆட்கள் வந்திருந்தனர், ஆடினார்கள்; பாடினார்கள்: சங்கு ஊதினார்கள். நடுவில் ஓய்வெடுக்க சிறிது நிறுத்தினார்கள். வந்ததே கோபம் அங்கிருந்த பலருக்கு. அதிலும் வீட்டினருக்கான அல்லக் கைகள்  இருப்பார்களே ... அவர்கள் தாம் தூம் என்று குதித்தார்கள்.மிக மிகக் கெட்ட வார்த்தைளால் அவர்கள் பரம்பரையையை வக்கிரமாகத் திட்டினார்கள். கேட்கச் சகிக்கவில்லை.

அடுத்த நாள் நான் கல்லூரி செல்லும் வழியில் மீனாட்சி கல்லூரிக்கு அருகில் இந்த சாவுக் கொட்டு அடிப்பவர்கள் ஒரு முனையில் வழக்கமாகத் தங்கியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நேரே அவர்களிடம் போனேன். இந்த வேலைக்குத்தான் நீங்கள் போக வேண்டுமா? அவனவன் சாதிக்காரனே சங்கூதட்டும்; மோளம் அடிக்கட்டும்; நீங்கள் ஏன் போக வேண்டும்? வேறு வேலைக்குப் போகக் கூடாதா? என்று ஆழ்ந்த கவலையோடு கேட்டேன். அவர்களோ மிக எளிதாக ஒரு பதிலைக் கூறிவிட்டார்கள். எங்களுக்கு வேறு வேலை தெரியாது. இதை விட்டால் எங்கள் பிழைப்புக்கு நாங்கள் என்ன செய்வது என்றார்கள். மனதிற்குள் பல பதில்கள் வந்தன. ஆனால் அவர்களிடம் சொல்லிப் பயனில்லை என்று சென்று விட்டேன்.

***

சில ஆண்டுகள் கழித்து இன்னொரு நிகழ்வு. வாசித்துப் பாருங்கள்.

https://dharumi.blogspot.com/2012/10/596.html

நிலமை மாற வேண்டும். ..........