Thursday, March 20, 2014

731. Prof. J.VASANTHAN - A FRIEND





******






******



கல்லூரி நண்பர் பேரா. ஜே. வசந்தன் ஜனவரி மாதம் இறந்து போனார்.

பல காலம் அவரோடு நன்கு பழகியும் எனக்குப் புதிதாகக் கிடைத்த ஒரு தகவல் என்னை அவர் மேல் மேலும் மரியாதை கொள்ள வைத்தது. 1972-75-ல் Shankar’s weekly கார்டூன்களுக்காகவே மிகவும் பிரபலமான அந்த சஞ்சிகையில் வாரம் மூன்று கார்டூன்கள் வரைந்து வந்துள்ளார். அவரது படங்கள், கார்டூன்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் கார்டூன் புகழ் Shankar’s weekly –ல் தொடர்ந்து வரைந்து கொடுத்து வந்தார் என்பது புதிய செய்தியாக இருந்தது.

 பன்முக அறிஞர் அவர். மிக நல்ல ஆசிரியர் என்று பெரும்புகழ் கொண்டவர். இவர் மீதிருந்த மரியாதையால் புனைப்பெயராகவோ, தன் பிள்ளைகளுக்கோ இவரது பெயரை வைத்துக் கொண்ட சில நண்பர்களை எனக்குத் தெரியும். ஷேக்ஸ்பியர் நாடகங்களை எடுப்பதில் பெரும் வல்லுனர் என்று பெயர் பெற்றவர். ஆசிரிய-மாணவ உறவு இவரிடம் மேம்பட்டு இருக்கும். பிரகாஷ் காரத் இவரது அந்த நாளைய மாணவர். இருப்பினும் இன்னும் அவர் மதுரை வந்தால் இவர் வீட்டுக்குக் கட்டாயம் வந்து போவார் என்ற அளவுக்கு அந்த உறவு நீடித்தது.

ஷேக்ஸ்பியர் பாடம் எடுப்பதோடு நில்லாமல் அவரது பல நாடகங்களைக் கல்லூரியில் அரங்கேற்றினார். அவரது நாடக இயக்கத்தின் மேன்மை கருதி, மதுரையில் உள்ள பல பள்ளிகள் அவரது நாடகங்களுக்கு வழக்கமாக தங்கள் மாணவர்களை அனுப்பி வைப்பது வழக்கம். Curtain Club என்ற அவரது நாடகக் குழு தொடர்ந்து பல ஆங்கில நாடகங்களை இயக்கி வந்தது. இந்த நாடகங்களில் மேடையில் இருக்கும் 'properties' தனிக் களையோடு மிகப் பொருத்தமாக அமையும். இவையும், ஆடையமைப்பு போன்ற எல்லா  கலைப் படைப்புகளும் இவரது ஆற்றலே.

படங்கள் வரைவதிலும் தனித் திறமை இருந்தது. அதிலும் கிறித்துவும், காந்தியும் சோகமாக இருப்பது போல் அவர் தனித் தனியே வரைந்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  
சித்திரங்கள் நல்ல கற்பனை வளத்தோடு இருக்கும். நிறைய கதை கட்டுரைகள் எழுதினார். அவர் தன் வாழ்க்கை நிகழ்வுகளை இந்து தினசரியில் Down the Memory Lane என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்தார். அவைகளில் பலவற்றை நான் அவரது பெயரில் ஒரு வலைப்பூ http://jvasanthan-penbrush.blogspot.in ஆரம்பித்து அதில் இட்டு வந்தேன். நண்பனாக நான் அவருக்கு செய்த ஒரே மரியாதை அது மட்டும் தான்!

சிறு குழந்தைகளுக்கான கோகுலம் ஆங்கில இதழிலும், தமிழ்ப்படுத்தப் பட்டு தமிழ் இதழிலும் வந்தது. ஜெயபாலன் என்ற அரசனும் அவனது மந்திரிகளும் என்று கதை போகும். அது பெரியவர்களுக்கு நல்ல அரசியல் parody; குழந்தைகளுக்கு நகைச் சுவையான தொடர் கதை. இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில், இந்துக் கட்டுரையாகட்டும், கோகுலம் கதைத் தொகுப்புகளாகட்டும் எல்லாவற்றிற்கும் அவரது சித்திரங்களே அழகூட்டும்.

அறுபதுகளிலேயே புனே சென்று, அங்குள்ள Film Institute-ல் திரைப்பட்த் திறனாய்வு பற்றி ஒரு பாடத்திட்டம் படித்து வந்தார். அந்தக் காலத்தில் Film Fare என்றொரு ஆங்கில சினிமாப் பத்திரிகை மும்பையிலிருந்து வந்தது. அதில் நிறைய சினிமா விமர்சனங்கள் எழுதுவார். அந்தக் காலத்தில், மதுரையில் படங்கள் ரொம்பவும் போர் அடித்தால் கூட்டத்திலிருந்து ’பருத்திப் பால்….’ அப்டின்னு திடீர்னு பெரிய சத்தம் வரும். அல்லது ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்ற சத்தம் வரும். இதை அவர் Film Fare-ல் எழுதி அதைப் பிரபலமாக்கினார். அங்கும் கட்டுரைகளுக்கு இவர் படங்களே இருக்கும்.

அவரோடு உட்கார்ந்து ஆங்கில, தமிழ்ப்படங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. சிவாஜி, சாவித்திரி நடிப்பு பற்றி மிக அழகாகத் தொகுத்துச் சொல்வார். தேவர் மகனில் அப்பாவும் மகனும் பேசும் இடத்தில் சிவாஜியின் கையசைப்பு பற்றி அழகாகக் கூறுவார். ஆங்கிலப் படங்களும் நடிகர்களும் அவருக்கு அத்து படி! படங்களை அணு அணுவாக ரசிப்பதை நன்கு கற்றும் கொடுப்பார். அதிகமாக electronic gadgets வருவதற்கு முன்பே வீடியோ காசெட்டுகளில் படங்களில் உள்ள சில நல்ல காட்சிகளைத் தொகுத்து அவர் திரைப்பட திறனாய்வு பற்றிய சொற்பொழிவுகள் ஆட்களை அப்படியே கட்டுப் போட்டு வைத்திருக்கும்.

நான் ஆரம்ப நாளிலிருந்து என் புகைப்படங்களை அவரிடம் காண்பிப்பது வழக்கம். நல்ல திறனாய்வோடு புதிய கருத்துகளும் கூறுவார். மலர்கள், சூரிய அஸ்தமனம் போன்றவைகளை படம் எடுத்துக் காண்பிக்கும் போது உங்களுக்கு இஷ்டமானால் இந்தப் படங்களை எடுங்கள்; ஆனால் என்னிடம் காண்பிக்க வேண்டாம் என்றார் ஒரு தடவை. ஏனென்றேன். மலர்கள் அழகானவை; அவைகள் நீங்கள் ஒன்றும் புதியதாக அழகாகக் காட்ட வேண்டியதில்லை. அது போல் சூரிய ஒளியில் மேகம் - அது  யார் எடுத்தாலும் நன்றாக வரும். உங்கள் திறமைகளுக்கு இவைகளில் இடமில்லை. Pick something on the road. Show your creativity என்பார். ரகுராய் படங்களைப் பார்த்து விட்டு ஜொள்ளு விடுவேன். அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள். அதில் நிறைய post processing இருக்கிறது என்றார். இதெல்லாம் போட்டோஷாப் வருவதற்கு மிக முந்திய கால கட்டம்!

மிக அமைதியான மனிதர். அவர் சத்தம் போட்டு பேசி நான் பார்த்ததேயில்லை. அவருக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்த பெரும் சொத்து கடைசியில் அவருக்கு வராமல் போயிற்று. நாங்கள் சில நண்பர்கள்கூட அதைப் பற்றிப் பேசி வருந்தினோம். ஆனால் அவரிடம் எந்த ஏமாற்றமோ, வருத்தமோ சிறிதும் இல்லை. அதிசயமான மனிதர் தான்! சொற்பொழிவுகளிலோ, சாதாரண உரையாடல்களிலோ ஜோக்குகள் சாதாரணமாக வந்து விழும். ஆனால் அவைகளை அவர் சொல்லும் பாணி அலாதியானது. ஜோக்குகளுக்காக தனியே குரலை மாற்ற மாட்டார்; ஏற்றி இறக்கிப் பேச மாட்டார். But there will be meaningful pauses; they have their own impact. Such a nice technique!

அவரது மறைவிற்குப் பின் கல்லூரிப் பிரச்சனைகளுக்காக நான் நடத்தி வரும் வலைப்பூவில் சில நண்பர்களின், மாணவர்களின்  கட்டுரைகளைப் பதிப்பித்தேன். அப்போது ஒரு நண்பர் இவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி விட்டு, அதன் பின்  எனக்கு அனுப்பவில்லை. ஏனென்று கேட்டேன். நிறைய பேர் எழுதி விட்டார்களே, அதனால் என் கட்டுரையும் வேண்டுமா  என்றார். அவரிடம் ‘நம்ம செத்தா யாரும் இப்படி எழுதப் போவதில்லை. ஆனால்  JV-க்கு அப்படியில்லை. நிறைய பேர் எழுதத்தான் செய்வார்கள்; அதனால் உங்கள் கட்டுரையையும் போட்டு விடுவோம்’ என்றேன். உண்மைதானே!

கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனாலும் அதைப் பற்றி (என்னைப் போல் இல்லாமல்...) யாரிடமும் எதுவும் பேச மாட்டார். ஆனால் வாழ்க்கையில் முற்றுமாக தானொரு கடவுள் மறுப்பாளன் என்பதைத் தன் சாவில் கூட நிரூபித்து விட்டார். எவ்வளவு தூரம் என்றால் அவர் கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும் அவரது மரணத்திற்குப் பின் அவரது உடலுக்கோ, நினைவுக்கோ வழக்கமாக மக்கள் செய்யக் கூடிய எந்த நிகழ்வுகள் - rituals - ஏதும் இல்லாத அளவிற்கு தன் குடும்பத்தையும் பக்குவப் படுத்தியிருந்தார்.

கண்களைத் தானம் செய்திருந்தார். இறந்த பின் உடல் நேரே மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. வழக்கமாக நாம் செய்யும் மூன்றாம் நாள், பதின்மூன்றாம் நாள் போன்ற நிகழ்வுகள் ஏதுமில்லை.

அவர் விட்டுச் சென்ற இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அவரது சித்திரங்களைப் பார்த்து நண்பர்களும், குடும்பமும் அவரது பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். சென்ற 14ம் தேதி அதற்காக ஒரு கூட்டம் நடந்தது. அதிலும் வழக்கமான இறை வணக்கம் போன்ற ஏதுமில்லை. அவரது மனைவி ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்தார்கள். பேசியவர்களும் வெறும் சோகத்தில் ஊறிய வார்த்தைகளை மட்டும் பேசவில்லை. வசந்தனது பெருமைக்குரிய sense of humour அந்தக் கூட்டத்தில் பேசியவர்களின் பேச்சிலும் இருந்தது. கூட்டத்தில் பேசிய பாப்பையா தன் நண்பன் பல திறமை கொண்டவர்; ஆனால் அவரது புகழ் குடத்தில் இட்ட விளக்காக அமைந்து விட்டதே என்று வருந்தினார்.

J. VASANTHAN'S  ART  FOUNDATION என்றதொரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு இது ஒரு ஆரம்பப் புள்ளியாக, சித்திரக் கலை வளர்க்க ஓரமைப்பாக இது வளர வேண்டுமென்ற ஆவலோடு இது அமைக்கப்பட்டுள்ளது.

JV-ன் மரணத்திற்குப் பிறகு  எனக்கொரு ஒரு சின்ன வருத்தம். வசந்தன் தன் குடும்பத்தினருக்கு அளித்துள்ளது போல் நான் என் குடும்பத்தினருக்கு என் மரணத்திற்கு பின் எனக்கு நடப்பவைபற்றிய ஒரு ‘விழிப்புணர்வை’க் கொடுத்திருக்கிறேனா என்று தெரியவில்லை!



*
இன்னொரு தகவல்: இளம் வயதில் இயக்குனர் பீம்சிங்கைப் போய் பார்த்திருக்கிறார். அவர் அமர்ந்திருக்க இவர் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது வசந்தன் தன் இளங்க்லைக் கல்வியில் ஆங்கிலத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர் என்பதும், தங்க மெடல் பெற்றவர் என்றதும் எழுந்து நின்று பேச ஆரம்பித்தாராம் பீம்சிங். அதோடு நீங்கள் திரையுலகிற்கு வருவதை விட ஒரு நல்ல ஆசிரியராக இருப்பதே மேல் என்றாராம். (அந்தக் காலத்து ஆட்களிடம் கேட்டால் தான் மாநில முதலிடம் என்பதும், ஆங்கிலத்தில் “முதல் வகுப்பு” என்பதும் எப்படிப்பட்ட பெரிய வெற்றிகள் என்பது புரியும்!)


*
http://www.thehindu.com/features/metroplus/a-legacy-of-art/article5810161.ece







Wednesday, March 19, 2014

730. இந்து மதம் எங்கே போகிறது? --- 5








*****  



***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

*****

அதர்வண வேதம் சொல்லும் அறிவுரை.
 “மக்களே ஒன்று கூடுங்கள். கடவுள் ஒருவன் தான். அவனை யார் கூப்பிடுகிறார்களோ அவர்களின் வீட்டுக்கே அவன் போவான். அவன் பழமைக்கும் பழமையானவன். புதுமைக்கும் புதுமையானவரன். கடவுள் ஒருவன் என்றாலும் அவனை வழிபடும் வழிகள் லோகத்தில் பல்வேறு பட்டதாக உள்ளன. அவனை வழிபடும் முறைகள் பல்விதம் என்றாலும் எல்லாம் சரியே. அதனால் அவன் பெயரால் யாரும் யாரையும் தூஷிப்பதோ, நிந்திப்பதோ கூடாது. (231)

சுமார் 30-40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்துக்கு அருகிலேயே உள்ள நாச்சியார் கோயில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் அதிகாரிகள் தமிழில் அர்ச்சனை பண்ண்ணும்னு முடிவெடுத்திருக்கிறோம். அதனால் தமிழில் எப்படி எப்படி அர்ச்சனைகள் செய்யலாம்னு எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார்கள். தமிழில் எப்படி எப்படி என்று மொழிப்போர் நடத்த ஆரம்பித்தார்கள் சில பட்டாச்சாரியார்கள். (233)

 மற்றவர்கள் மறுத்த போது நான் எழுதி வைத்திருந்ததைக் கொடுத்தேன்.

உயர்வு அற உயர் நலம் உடையவன் போற்றி ... 
மயர்வு அற மதி நிலம் அருளினன் போற்றி ... 
அயர்வு அற அமரர்கள் அதிபதி போற்றி ... – இப்படியாக நாராயணனைப் போற்றும் நாமங்கள் 108 எழுதிக் கொடுத்தேன். நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் தொடங்கி சில பாசுரங்களை ‘சஹஸ்ரநாமம் பாணியில்’ எடுத்துக் கொடுத்ததுதான். (234)

பகவானின் ஆயிரம் பெயர்களைக் கூறி அவரைப் போற்றிச் சொல்வது தான் சஹஸ்ரநாமம். இதைப் படித்த பார்த்த அதிகாரிகளுக்கு பரம இன்பம்.

தமிழில் இவ்வளவு இனிமையான கருத்து அடர்த்தியுள்ள பக்தி கானங்கள் இருக்கும்போது ஏன் சமஸ்கிருத பாஷையைக் கட்டிக்கொண்டு நாம் அழ வேண்டும்?

இதுபோல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தரும் ‘நல்ல தமிழ் சொற்கோவைகளுடன்’ தமிழிலேயே இறை பூஜைகள் செய்யலாமே என்றனர்.

அதன்படி ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் அடிப்படையில் நான் எழுதிக் கொடுத்த 108 தமிழ் நாம வழிபாட்டு மொழிகள் அப்போதே அர்ச்சகர்களின் எதிர்ப்போடு, 30-40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் சாரங்க பாணி பெருமாள் கோவிலில் அரங்கேற்றப்பட்டது. (235)

ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் தமிழ் ஆழ்வார்களின் அருளிச் செயலான நாலாயிரம் இறைப்பாட்டுகளை திவ்யம் (தூய்மை)+ பிரபந்தம் (திரட்டு) என்ற இரு சமஸ்கிருத சொற்களால் தான் நாம் இன்றளவும் அழைத்து வருகிறோம்.

இனிமேலாவது ‘ஆழ்வார்களின் நாலாயிர அருளிச் செயல்’ என்பது தான் இந்தப் புனித நூலுக்கு தமிழ்ப்பெயர்.

சமஸ்கிருதம் எப்படி தமிழைக் கட்டிப் போட்டது? (236)

ஆகமக்காரர்களின் ஆதிக்கம் அவர்கள் முழு முதல் சமஸ்கிருதக்காரர்கள். ஆனதால் தமிழன் வெளியே நிறுத்தப்பட்டான். சமஸ்கிருதர்கள் உள்ளே சென்றார்கள். தமிழ்ப் பூக்களைத் தூவி சமஸ்கிருத அர்ச்சனை நடத்தினார்கள்.

இப்படி ’சமஸ்கிருத சர்க்கார்’ நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் தான் ... நமது தமிழ் பக்தி இலக்கியத்தை முன்னிறுத்துவதற்காக, ஆங்காங்கே ஆழ்வார்கள் தோன்றினார்கள்.

5-ம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் 12 ஆழ்வார்கள் தோன்றினார்கள். (239)

தினம் தினம் கேட்கும் சமஸ்கிருத சுப்ரபாத வடிவத்தை நாம் இப்போது கேட்கிற சுப்ரபாதம் இயற்றப்பட்டதற்கு அறுநூறு வருஷங்கள் முன்னதாகவே அற்புதமாக இயற்றியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். இனிய தமிழில் ’திருப்பள்ளியெழுச்சி’ என்றும் பெயர் கொண்ட அந்த பத்து முத்தான பாடல்களை ‘ஆழ்வார்கள் அருளிச் செயல்’ புத்தகத்தில் 917 முதல் 920 வரையிலான பாடல்கள் சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன். (241)

 ”கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து 
அணைந்தான்; கனை இருள் அகன்றது 
காலை அம் பொழுதாய் 
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம் 
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி 
எதிர்திசை நிறைந்தனர். இவரொடும் புகுந்த 
இருங் களிற்று ஈட்டமும் பிடியொரு முரசும் 
அதிர்தலில் அலை கடல் போன்றுவிது எங்கும் 
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே ..’ (242)

இந்தத் தமிழ்ப்பாடலுக்கு என்ன குறைச்சல்....?

ஆனால் நாமோ logic இல்லாத சமஸ்கிருத வெங்கடேச சுப்ரபாதத்தை தினந்தோறும் காலையில் போட்டுக் கேட்கிறோம். (243) 

சுப்ரபாதத்தைப் போல திருப்பள்ளியெழுச்சி என தமிழ்ப் பெயரில் மாற்றி இனியாவது எவரேனும் அதற்கு நல்ல இசையமைத்து விடியற்காலையில் தமிழ் மணக்கச் செய்வார்களா? (244)

திருப்பாணாழ்வாரின் தமிழைக் கேட்பதற்காக ஆளனுப்பி அரங்கத்துப் பெருமாள் அவரை மரியாதையோடு தூக்கி வரச் செய்ததாக கதை உண்டு.

ஆனால் ஸ்ரீரங்கத்தில் இது எப்படி நடக்கும் என்றால் … மூலவரான ரங்கநாதன் படுத்தபடியே தமிழில் கேட்கக் காத்திருக்க … உற்சவரை அதாவது உற்சவ மூர்த்தியை வெளியே ஒரு மண்டபத்திற்கு தூக்கி வருவார்கள். அங்கே வைத்து நாலாயிரம் அருளிச் செயலையும் இசையோடு பாடி முடிப்பார்கள். இதற்கு அரயர் சேவை என்ற பெயர். இது முடிந்த பிறகு … அதாவது தமிழ்ப் பாடல்கள் முடிந்த பிறகு உற்சவரை மறுபடியும் உள்ளே கொண்டு போய் வைத்து விடுவார்கள். ஆக தமிழ் உள்ளே போகக் கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கி வருகிறார்கள்! (246)

வைணவத்தில் இப்படி. சைவத்தில் எப்படி?
’தென்னாடுடைய சிவனே போற்றி 
என்னாட்டவருக்கும் இறைவா போற்றி’ 

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார். 

திருமறைக்காட்டு சிவன் கோயில் மணி வாசல் வேதங்களால் பூஜிக்கப்பட்டு அடைக்கப்பட்ட கதவை சிவனடியார்கள் திறக்க முடியாமல் கஷ்டப்பட்ட போது திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிக் கதவைத் திறந்தார்கள். பல்லாண்டு காலம் வேதக்காரர்களால் பூட்டப்பட்ட கதவை தமிழ் பாடி திறக்க வேண்டும் என்ற கருத்துருவே நமக்குப் போதும்.(248)

இப்படியெல்லாம் தமிழோடு பின்னிப் பிணைந்திருக்கும் சிவ பெருமானுக்கு கோயிலில் நடக்கும் பூஜை புனஸ்காரங்களில் என்ன நிலைமை?

சிவாச்சாரியார் திருநீற்றுப் பட்டை அணிந்து கொண்டு லிங்கத்தை நெருங்கிச் செல்வார். பூஜைகள் செய்வார். அவர் வாயில் தமிழே இருக்காது; சமஸ்கிருதம் தான்.(249)

தமிழ் இப்படி தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்தது. சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள். மிலேச்ச பாஷை பேசியவர்கள் தோற்றார்கள். மிலேச்ச என்றால் non Aryan என்று பொருள்.



*


Monday, March 17, 2014

729. தருமி பக்கம் (15) -- அந்தக் காலத்தில ....






*

அதீதம் இணைய இதழில் வெளி வந்த பதிவின் மறு பதிப்பு ....



*



சின்ன வயதில் ஊருக்குப் போனதும் ரொம்ப வித்தியாசமாகக் கண்ணில் படுவது அங்கங்கு மக்கள் உட்கார்ந்து கொண்டு பீடி சுற்றுவது தான். தனியாக உட்கார்ந்து யாரும் பீடி சுற்றுவதைக் காணவே முடியாது. பகலில் இரண்டு பேராவது உட்கார்ந்து பீடி சுற்றுவார்கள். இரவில் எண்ணிக்கை கூடி விடும். எங்கே தான் உட்கார்ந்து பீடி சுற்றுவது என்று எந்தக் கணக்கும் கிடையாது.
`````````````````````

இப்போதெல்லாம் கணினியில் நிறைய நேரம் உட்கார்வதால் அங்கங்கே உடம்பு பிடித்துக் கொள்ளும். அந்த டைப் நாற்காலி போட்டுக்கோ.. அல்லது இந்த மாதிரி நாற்காலி போட்டுக்கோ என்றெல்லாம் ஆளுக்காளாய் உத்தரவு போடுகிறார்கள். இல்லாவிட்டால் முதுகு வலி என்று ஆரம்பித்து பல பிரச்சனைகள் வரும் என்று பயங்காட்டுகிறார்கள். ஆனால் பீடி சுற்றும் இந்த மக்களுக்கு அப்படி யாரும் ஆலோசனை சொல்வதில்லை போலும். அது அரையடி அகலத்தில் இருக்கும் மெத்தைப் படியிலிருந்து ஆரம்பித்து, கல், மண், சாலை இப்படி எதையும் தள்ளாது எங்கே இடம் இருக்கிறதோ அங்கே உட்கார்ந்து பீடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அநேகமாக நான் பார்த்த ஒரே ஒரு ஒற்றுமை உட்கார்ந்து பீடி சுற்றும் ஒவ்வொருவரும் லேசாக முதுகை முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே சுற்றுவார்கள். பய பிள்ளைகள் முதுகை எதிலும் சாய்க்காமலேயே மணிக்கணக்காக உட்கார்ந்து கொண்டே பீடி சுற்றுவார்கள். யாரும் பீடி சுற்றியதால் முதுகு வலி என்று சொல்லி நான் கேட்டதேயில்லை.

இரவில் ஒரு சின்ன சிம்னி விளக்கு அவர்கள் பீடித் தட்டிலேயே உட்கார்ந்திருக்கும். மின்னொளி வந்த பின் இரவில் சாலை விளக்குகளைக் கூட விட்டு விடுவதில்லை. அதைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு சுற்று நடக்கும். அநேகமாக இப்படிக் கூட்டமாக உட்கார்ந்து பீடி சுற்றும் போது யாராவது ஒருவரிடமிருந்து ஏதாவது ஒரு பாட்டு ஹம்மிங்காக வந்து கொண்டிருக்கும். அது தான் அங்கே RR – rerecording! அது இல்லாவிட்டால் ஏதேதோ பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

பீடி சுற்றும் போது அவர்களின் நடுவில் உட்கார்ந்திருக்க பிடிக்கும். அநேகமாக அப்போது மக்கள் மதுரையைப் பற்றியெல்லாம் கேட்பார்கள். அம்புட்டு பெரிய ஊரிலிருந்து நாங்க கிராமத்துக்கு வந்திருக்கோம்ல ... ரொம்ப மெக்கானிக்கலாக வேலை செய்வார்கள். சார்லி சாப்ளினின் Modern Times படத்தில் வருவது மாதிரி அவர்கள் எல்லோரும் அப்படியே மெஷினாக மாறி விட்டார்களோ என்று தோன்றும்.

இதை உங்களுக்கு எப்படி புரிய வைப்பது ...? பீடி சுற்றலை காட்சிகளாக மாற்றுவோமே ... பீடிக்கடையிலிருந்து பீடி இலை வாங்கி வருவார்கள். கடையில் பெரும் பெரும் மூட்டையாக பீடி இலைகள் லாரியில் வந்து இறங்கும். வட நாட்டிலிருந்து வருவதாகச் சொல்லுவார்கள். சனிக்கிழமை கணக்குப் போடும் போது பழைய இலைக்கு சுற்றிய பீடிகளைக் கொடுத்து விட்டு, புதிதாக இலை, தூள், தேங்காய் நார் வாங்கி வருவார்கள். வந்ததும் இலைகளைச் சிறிது சிறிதாக எடுத்து ஒரு சின்ன பழைய சாக்குத் துண்டுகளில் மடித்து வைத்து, அதன் மேல் சிறிது நீர் தெளித்து பதம் போட்டு வைத்திருப்பார்கள். பின் இந்த இலைகளை எடுத்து கருப்புக் கலரில் இரும்பு கத்திரிக்கோல்கள் இருக்கும். அதை வைத்து நானும் இலைகளை வெட்டிப் பார்த்திருக்கிறேன். ம்ஹூம்... நம்மால் ஒரு இலை கூட வெட்ட முடியாது. அந்த கத்திரிக்கோல்களைக் கையாள தனித் திறமை வேண்டியதிருக்கும். ஏதோ ஒரு கோணத்தில் பிடித்தால் தான் அது வெட்டும். அவரவர் கத்திரிக்கோல் அவரவருக்குத் தான் சரியாக இருக்கும். கைவந்த கத்திரிக்கோல்கள்!

இந்த இலை வெட்டுவது தான் எனக்கு மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கும். சொக்கலால் பீடிக்கு நாமாகவே வெட்ட வேண்டும். ஆனால் அதன் பின் வந்த கணேஷ் பீடிக்கு தகரத்தில் ஒரு ‘டெம்ப்ளேட்’ கொடுத்து விடுவார்கள். கணேஷ் பீடிக்கு இலை வெட்டும் போது இந்த தகரத்தை இலை மேல் வைத்து அதே அளவில் வெட்டணும். ஆனால் சொக்கலால் பீடிக்கு இப்படி ‘டெம்ப்ளேட்’ ஏதும் கிடையாது. அங்கு உங்கள் ‘கற்பனை’ தான் முக்கியம். இலை எடுக்கும் ‘ஷணத்திலேயே’ இதை எப்படி வெட்டுவது எப்படி என்று அவர்கள் மூளைக்குக் கட்டளை போய் விடும் போலும். கையும், கத்திரியும், பீடி இலையும் நடனமாடும். அப்படி இப்படி என்று வெட்டுவார்கள். ஒரு இலையிலிருந்து எத்தனை அதிக இலை வெட்டும் கலை கைவந்திருக்கும் அவர்களுக்கு. In a jiffy ... என்பார்களே அதே போல் விறு விறுவென்று இலைகளை சரியான அளவில் வெட்டுவார்கள்.

வெட்டிய இலைகள் மறுபடியும் நனைந்த சாக்குப் பைக்குள் போய் விடும். பீடி சுற்ற அந்த இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நனைந்த சாக்குப் பைகளிலிருந்து வெளி வரும். இந்தச் சாக்குப் பைகள் அநேகமாக அவர்கள் மடி மேல் உட்கார்ந்திருக்கும். நனைந்த பையின் ஈரம் மடியில் படும் சுகத்திற்காக அங்கே வைத்திருப்பார்களோ என்னவோ! அந்தப் பைகளின் மேல் வட்ட வடிவ பீடித் தட்டு, வலது கைக்குப் பக்கத்தில் பீடி இலைகள் இடம் எடுத்துக் கொள்ளும். எதிர்ப் புறத்தில் பீடி இலை இருக்கும். அநேகமாக எல்லோரும் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு பீடி சுற்றுவார்கள். ஆடிக்கொண்டே பீடி சுற்றுவதிலும், காலை இப்படி நீட்டிக் கொண்டிருப்பதிலும் anatomy –ல் ஏதோ ஒரு லாபமோ, வசதியோ இருக்கும் போலும். இப்போது முதுகு வலி என்று சொல்பவர்கள் இதை வைத்து ஏதாவது ஆராய்ச்சி …கீராய்ச்சி செய்து உண்மை கண்டு பிடித்தால் லோகத்தில் பலருக்கும் லாபம்!

ஆ .. விட்ட இடத்திலிருந்து தொடருவோம் … அவர்கள் காலுக்கடியில் தேங்காய் நார் இருக்கும். கணேஷ் பீடி வந்ததும் அவர்கள் சிகப்பு கலரில் நூல் கொடுத்து விடுவார்கள். அதை வெட்ட பல் தான் ஆயுதம். ஒரு இலையை எடுப்பார்கள். வலது கையால் ஒரு கை எடுத்து இடது கைக்குள் வருவதற்குள், அந்த ஒரு கணத்திற்குள் அந்த இலை சரியான கோணத்தில் கொடுக்கப்படும். (இதை Modern Times Technique 1 என்று வைத்துக்கொள்வோம். இனி இதை MTT என்று சொல்வோம்.) அடுத்து ஸ்விட்ச் போட்டது போல் வலது கை பீடித் தூளிற்குப் போய் சரியான அளவு தூளை எடுத்து இலை மேல் போடுவார்கள் – MTT-2. அடுத்த MTT-3 இருக்கிறதே இது தான் ரொம்ப ஆச்சரியமானது. பீடி இலையின் எதிர்ப் புறத்தை இடது கட்டை விரலால் ‘என்னவோ செய்து’ பீடி உருட்டலின் முதல் சுருட்டலைச் செய்து விடுவார்கள். இதைப் படிக்க நானும் அந்தக் காலத்தில் முயன்றேன்.முடியவில்லை. ‘போடா …போ .. படிக்கிற பிள்ளை உனக்கெதெற்கு இந்த வேலை’ என்று சொல்லி என்னை விரட்டி விடுவார்கள். அந்த முதல் சுருட்டல் மிகவும் ஆச்சரியான ஒன்று தான். ஏனெனில் அதைச் சீராகச் செய்யாவிடில் பீடி அதன் ‘shape’க்கு வரவே வராது. MTT-4 அப்படி சுருட்டியதும் பீடி உயரத்தில் ஒரு சின்ன இரும்புக் கம்பி வைத்திருப்பார்கள். அதுவும் ஏறத்தாழ பீடி வடிவத்தில் இருக்கும். ஒரு புறம் தட்டையாகவும் ஊசியாகவும் இருக்கும்; அடுத்த பக்கம் மொழுக்கென்று இருக்கும். மொழுக் பக்கத்தை வைத்து சுருட்டிய பீடியின் தலைப் பகுதியை அழுத்தி எடுப்பார்கள் MTT-5. ஊசிப் பக்கம் வைத்து பீடியின் அடுத்த முனையில் உள்ள பகுதியை மடித்து ஒழுங்காக்குவார்கள். MTT-6 அடுத்து வலது கையால் ஒரு தேங்காய் நார் வரும். அப்படியே ஒரு சுற்றுச் சுற்றி கத்திரியால் வெட்டி சீர் செய்வார்கள். MTT-7 அப்பாடா … ஒரு பீடியின் உருவாக்கக் கதை முடிந்தது!

இப்படி முடிந்த பீடிகளை ...25 பீடி என்று நினைக்கிறேன். ஒரு பண்டிலாகக் கட்டுவார்கள். இதில் பெரும் ஆச்சரியம் அப்படிக் கட்டும் போது எல்லா பீடிகளும் ஒரே நீளத்தில், ஒரே அளவில் இருக்கும். ஆனால் அவர்கள் சோகம் அவர்களுக்கு. சனிக்கிழமை காலையிலிருந்தே ‘கணக்குக் கொடுக்க’ மக்கள் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அங்கே போனதும் பண்டில் பண்டிலாக எடுத்துப் பார்ப்பார்கள். அவர்களும் experts தானே. சில பண்டில்கள் எடையில் குறைவாக இருக்குமோ என்னவோ அதிலிருந்து ரெண்டு மூணு பீடிகளை உருவுவார்கள். முதலில் பீடியின் நடுப்பகுதியை அமுக்கிப் பார்ப்பார்கள். தூள் குறையாக இருந்தால் அது ‘கழிவில்’ போய் விடும். ஒரே பண்டிலில் இரண்டு மூன்று பீடிகளுக்கு மேல் அப்படியிருந்தால் அந்த பண்டில் மொத்தமும் கழிவு தான். எப்படியும் யார் கொண்டு போனாலும் சில கழிவுகள் ஒரு கட்டாயம்.

ஆனால் பீடி கணக்குப் போட்டு விட்டு வீட்டுக்கு வரும் மக்கள் மனது சந்தோஷமாக இருக்கும். கணக்குப் போட்டதும் அந்த வார சம்பளம் வந்து விடும். அடுத்த வாரத்திற்குரிய இலை, தூள் எல்லாம் வந்து விடும். அன்று மாலை டூரிங் தியேட்டர் பொங்கி வழியும். அநேகமாக அப்போது சனிக்கிழமை தான் புதுப்படங்கள் போடுவார்கள். தியேட்டர் போகும் வழியில் இருக்கும் ரிப்பன் கடை ஜே .. ஜே … என்றிருக்கும்.

ஊரில் எல்லோரும் பீடி சுற்றுவார்கள். ஆனால் எங்கள் பாட்டையா, பெரிய பாட்டையா இவர்கள் வீடுகளில் பீடி சுற்றுவது இருக்காது. Below our dignity என்பது பாட்டையாக்களின் கருத்து. நான் சின்ன வயதில் போகும் போது அப்பா வீட்டில் யாரும் பீடி சுற்ற மாட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள் அப்டின்னு யாராவது வீட்டுப் படியில் உட்கார்ந்து சுற்றுவார்கள். ஆனால் வீட்டுக்குள் யாரும் கிடையாது. இதற்கு நேர் எதிர்மறை அம்மா வீட்டில். அங்கு பீடி சுற்றுவது இருந்தது. இப்போது எல்லாம் நேர் எதிராகப் போய் விட்டது என்று நினைக்கிறேன். அம்மா வீட்டில் பீடி சுற்றுவது நின்று பல காலமாகி விட்டது. ஆனால் அப்பா வீட்டில் ஒரு சித்தப்பா வீட்டில் கொஞ்ச நாள் இருந்து இப்போது இல்லாமல் போய் விட்டது. சித்தப்பா வீட்டுப் பேரப் பிள்ளைகள் எல்லோரும் பெரிய படிப்பாளிகளாகி விட்டார்கள். நன்றாகப் படிக்கிறார்கள்.

ஆனால் ஊரில் பல ஆண்டுகளாக இன்னொரு ஏமாற்றமான மாற்றம் நடந்து விட்டது. பீடி சுற்றுவது பெண்களின் அலுவல் என்பது மாறி ஆண்களும் பீடி சுற்ற ஆரம்பித்த போது இது அவ்வளவு நல்லாயில்லையே என்று நினைத்தேன்.

என்ன தான் காசு சம்பாரித்தாலும் இது ஒரு ஈசி வேலை; பெண்களுக்கானது; ஆண்களும் இதில் ஈடுபட்டால் பொருளாதாரத்திற்கு தடையாக இருக்காதா என்று நினைத்ததுண்டு.






 *



728. இந்து மதம் எங்கே போகிறது? --- 4






***





***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்


 *****


ஆண் தெய்வம், பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள். (176)

உற்சவங்களில் ஆண் மகன் எங்கே வேண்டுமானாலும் போவான். ஆனால் பெண்ணானவள் அதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும். தெய்வங்களிடையிலேயே கூட இப்படித்தான் நடக்கிறது.

பாரிவேட்டை படித்திருப்பீர்கள். அதாவது ஆண்  தெய்வம் கோவிலை விட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இதை சகித்துக் கொண்டு பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ளேயேதான் இருக்க வேண்டும். (179)

பிராட்டிக்குப் புறப்பாடு என்றால் கோவில் பிரகாரத்தைச் சுற்றி வருவது தான். அதற்கு மேல் எங்கேயும் வெளியே போகக்கூடாது என்பது தான் பொது விதி.

பெண் தெய்வங்களுக்கு எவ்வளவு கட்டுப்பாடுகள்.
இதெல்லாம் எதற்கு?

தெய்வ விஷயத்திலேயே இப்படித்தான் இருக்கிறது. பெண் தெய்வம் படி தாண்டக் கூடாது என சாஸ்திரம் கோடு போட்டு வைத்திருக்கிறது.

பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன் போகத்துக்காக இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போதனையும் தெய்வங்களிடமிருந்தே ஆரம்பித்து விட்டனர். (180)

ஸ்ரீரங்கம் கோவிலில் ரங்கநாதனின் சன்னதியிலிருந்து இரவு நேரத்தில் அவரது ஆனந்த நாடி அதாவது தேக சம்பந்தம் வைத்துக் கொள்வதற்கு உபயோகப்படுத்துகிற அங்கத்தை ரங்கநாயகி சன்னதிக்குள் அனுப்பி தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டுவிடுகிறார் என்பதை குணரத்தின கோசத்திலேயே கூத்தாழ்வாரின் மகன் பராசரபட்டர் விளக்கியுள்ளார்.

இப்படியெல்லாம் பெண்களை போகப்பொருளாகக் காட்டுவது வைணவமும் மட்டுமல்ல ... சைவமும் இதற்கு சளைத்ததில்லை. (182).

இன்றும் ‘அத்வைதம்’ என்று பேச்சுக்குப் பேச்சு பேசும் காஞ்சி சங்கராச்சாரியர்கள் எங்கெங்கே போய் வருகிறார்கள்? சென்னை, பம்பாய், காசி, டெல்லி என டூர் அடித்து, அதோடு  கோர்ட் வரைக்கும் போய் விட்டார்கள்.

ஆனால் ... அவர்கள் பூஜிக்கும் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் பிரகாரத்தைத் தாண்டி வெளியே வந்திருக்கிறாளா என்று விசாரித்துப் பாருங்களேன்.

ஆண் பெண் ஏறத்தாழ்வுகளை ஏற்படுத்தி வைத்திருந்த ஆகம சம்பிரதாயங்கள், தெய்வங்களிலும் வர்க்க பேதங்களையும் வகைப் படுத்தி வைத்திருக்கின்றன. (183)

சைவத்தில் எப்படி?
பரமசிவனும் தில்லை காளி இருவருக்குள்ளும் நடனப் போட்டி. காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங்களும் பார்ப்பவர்களை வசீகரித்தன. சிவனின் தாண்டவம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை.(191)

ஒரு பெண்ணிடம் தோற்பதா? இனியும் இவளை ஆட விடக்கூடாது என முடிவு கட்டிய சிவன் தன் இடது காலை சற்றே தூக்கினார். வலது காலை ஊன்றி இடது காலை உயர தூக்கிக் கொண்டே போக, சபையே ஒரு கணம் அதிர்ந்தது. ஏன்..? வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காகத்தான் இடது காலை விலக்கி தூக்கியிருக்கிறார் சிவன்.

வெற்றியின் விளிம்பில் நடனமாடிக்கொண்டிருந்த தில்லை காளி இக்காட்சியைப் பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது. தலை குனிந்தாள். ஆனால் சிவபெருமான் தொடர்ந்து தாண்டவமாடிக் கொண்டிருந்தார். ஆக, சிவன் ஜெயித்தார் என்றாகி விட்டது. ...

இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

ஆணிடம் பெண் போட்டி போடக்கூடாது. அப்படியே திமிராக போட்டி போட்டாலும் ஜெயித்து விடக்கூடாது. அவளைத் தோற்கடிக்க ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். (192)

முருகன் என்றால் யார்?
சமஸ்கிருதத்தில் கந்தன், சரவண பவ என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

வடக்கிலுள்ள கதை:
சிவன் பார்வதி மேல் ஒரு நாள் காமமுற்று அவளை அழைக்கிறான். இப்போது வேண்டாமென்று பார்வதி மறுத்தும், சிவன் தொடர்கிறார். சிவன் பார்வதி மேல் பாய்ந்து படர்ந்தார். (194)

அந்த ஷணத்தில் பார்வதி விலகிக் கொள்ள, பரமசிவனின் உயிர்த்துளிகள் அப்படியே ஆகாயத்திலிருந்து கங்கையிலிருந்து விழுந்தன. ஆற்றோடு போன துளிகள் நாணல் காட்டுக்குள் தேங்கி ... குழந்தையாக அவதரித்தது. நாணலுக்கு சமஸ்கிருதத்தில் சரம் என்று பெயர். காட்டுக்கு வனம். இது சரவனம் என்றாகி, இப்போது சரவணனாகி விட்டது. (195)

ஏன் கந்தன் என்ற பெயர். அது கந்தன் அல்ல; ஸ்கந்தன். ஆணுடைய சுக்லம் – உயிர்த்துளிகள் என்பது அதன் பொருள்.(196)

பிள்ளையார் என்பது தமிழ் வழியில் ஒன்று. ஆனால் சமஸ்கிருதத்தில் கதை வேறாகிறது.
பார்வதி குளிக்கும் போது மறைவாக பரமசிவன் அவளை நோட்டமிடுகிறார். தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பதைத் தன் சக்தியால் புரிந்த பார்வதி உடுத்திக்கொண்டு, தன்னைப் பார்த்தவனைக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார். (197)

பரமசிவனைக் கண்டுபிடித்த பார்வதி,  இது உமது திருவிளையாடல் என்றால் என் திருவிளையாடலைப் பாரும் என்று சொல்லி, ‘நான் குளித்ததைப் பார்த்த நீர், யானைத் தலையனாகவும், மனித உடம்பனாகவும் மாறக்கடவது’ என்று சாபமிட்டார். (198)

இன்றும் ஆற்றங்கரையில் பிள்ளையார் இருப்பது எதற்கு என்றால், ‘டேய்! குளிப்பது உன் பத்தினியாகவிருந்தாலும் எட்டிப் பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று சொல்வதற்குத்தான்.

பிள்ளையார் வேதத்திலேயே வந்தார்; இவர்தான் உலகத்தின் தொடக்கம்; என்றெல்லாம் பின்னால் பிள்ளையார் சுழி போட்டார்கள். ஆனால் அதெல்லாம் கிடையாது. கூட்டமான மக்கள் இருந்த போது அவர்களுள் உள்ள சிறு கூட்டங்களுக்குத் தலைவர்களாக பலர் இருந்திருப்பார்கள். அவர்களே கணபதிகள்.(199)

இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் நமக்கெல்லாம் ஒழுக்கத்தையும் சத் நெறிகளையும் வழங்க வேண்டிய தெய்வங்கள் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணர்த்ததான்.

நவராத்திரி, கொலு என்பதெல்லாம் பெண் தெய்வங்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர்களின் ஆராதனைக்காக நடத்துவது என்பது இப்போது பொதுவான நம்பிக்கை. ஆனால் விசேஷம் வேறு.

மகிஷாசுரன் என்றொரு அரக்கன். எருமைத் தலையை உடையவன். (200) இவனை அழிக்க பெண்களால் தான் முடியும். பெண் தெய்வங்கள் ஒன்று கூடி இவனை அழிக்க திட்டமிடுகிறார்கள். ஆனால் வேதம் பெண்களுக்குக் கொடுத்த பலத்தை புராணம் பலவீனமாக்கியது. (202)

பெண்களின் வேண்டுகோளின் படி தேவர்கள் தங்கள் பலத்தையெல்லாம் பராசக்தியிடம் கொடுக்கிறார்கள். அவளும் அரக்கனை அழிக்கிறாள். இப்போது அவளை எல்லோரும் புகழ வேண்டும். ஆனால் யாரும் புகழவில்லை. ஏனெனில் தேவர்கள் அனைவரும் பலத்தைக் கொடுத்து விட்டதால் அப்படியே அசைவற்று பொம்மைகளாய் நின்றார்கள். (203)

புராணக்காரர்கள் பல ஜோடனைகள் பண்ணி கொலுவின் உண்மையான த்த்துவத்தையே கொன்று விட்டார்கள்.

பழங்காலத்தில் மன்னர்கள் மழைக்காலத்தில் தங்கள் படை ஆயுதங்களை பாதுகாத்து, நிறுத்தி வைத்து, அவைகளுக்கு வணக்கம் செலுத்துவார்கள். மழை முடிந்ததும் போரெடுத்து வெல்வார்கள். இது தான் கொலுவின் உண்மையான மூலம். (206)

கொலு கோவில்களில் வைப்படுவதில்லை. அவரவர் வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். ஒருவேளை, ‘பெண்களைப் போற்றினாலும் வீட்டுக்குள்ளே வைத்துப் போற்றிக் கொள் .. வெளியே வேண்டாம்’ என்று சொல்லாமல் சொல்கிறதோ!(207)

ஆயுதம் என்பது மனிதர்களுக்குத் தானே வேண்டும்; தெய்வங்களிடமும் எதற்கு ஆயுதம் இருக்க வேண்டும்?

இதற்கான பதிலையும் வேதத்திலேயே தேடுவோம்.

ரிஷிகள் வேதத்தில் இருவகை தெய்வங்களைப் பற்றிக் கூறுகிறார்கள். அதில் ஒன்று ருத்ரன். (208)

இவன் கையில் எப்போதும் வில்லும் அம்பும். இவனுக்கு எதிர்மறையாக ருத்ரனின் இன்னொரு வடிவமாக சாந்த சொரூபன் – விஷ்ணு. (210)

இவர் கையில் பஞ்சாயுதம் – ஐந்து ஆயுதங்கள் – சங்கு, சக்கரம், கதை, சாரங்கம், கட்கம். இதில் சங்கு, சுதர்சனார் என்று மரியாதையாக அழைக்கப்படுகிறது. சக்கரத்தாழ்வார் என்றும் மரியாதையாக அழைக்கப்படுகிறார். இவரது கையில் 16 வகை ஆயுதங்கள்! (213)

யாகங்களுக்கு பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளம் தான் தட்சணை. ருத்ரன் அழுகும் போது அவனது கண்ணீர் வெள்ளியாக மாறி விடும். இதனால் வெள்ளி தட்சணையாகக் கொடுக்க முடியாது. ஆகவே வீடு, ஆஸ்ரமம் இவைகளோடு தங்கம் கொடுக்கலாம். (219)

 யாகங்களின் முக்கியத்துவம் என்ன? அவைகள் நம் பாவங்களைன் தொலைக்கப் பயன்படுகிறது. (222)

பாவங்கள் எல்லாம் வேத மந்த்ரங்களை உச்சரிக்கும் போது அழிந்து விடும். (225)

பாவ மன்னிப்புக்கான ஒன்று சந்தியாவந்தனம். காலையில் எழுந்த்தும் சூரிய தேவனிடம் வேண்டுவது. (226)

நித்தமும் மூன்று முறை இதைச் செய்ய வேண்டும். கிறிஸ்துவர்களின் பாவமன்னிப்பு பழக்கத்தை ஜெயேந்திர்ர் போன்றவர்கள் தூற்றுகிறார்கள் என்றால் ... அவர்கள் வேதம் அறியாதவர்கள். (229)





*

Friday, March 14, 2014

727. இந்து மதம் எங்கே போகிறது ? --- 3









இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

*****


எனது 15 வது வயதில் ஆரிய சமாஜம் உருவானது. தாயனந்த சரஸ்வதி என்பவரால் வட நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இவ்வமைப்பு பிராமணர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. (82)

‘வேதத்தை பிராமணர்கள் தங்களது தொழிற்கருவியாக பயன்படுத்தி விட்டனர். .. வேதத்தை பிராமணர்கள் மட்டுமல்ல எல்லோரும் படிக்க வேண்டும். வேதப் பொருள்களை அனைவரும் உணர வேண்டும். இதை எதிர்த்து அந்த  பிராமண சபை உருவானது.

 பெரியாரும் இந்தக் காலத்தில் பிராமணர்களை, பிராமணீயத்தை கடுமையாக விமரிசித்து வந்தார். (83)

பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம். இந்த புனிதமான கோயில்களுக்குள் சூத்திரனோ, பஞ்சமனோ ஒரு அடி எடுத்து வைத்தால் கூட அனுஷ்டானங்கள் கறைப்பட்டு விடும். – இது ஆகம கொள்கை.

இந்த சமயங்களில் பல ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. (100)

இந்த நிலைமையில் தான் பண்டித ஜவஹர்லால் நேருஜியின் மந்திரி சபையில் ‘ஹிந்து கோடு பில்’ கொண்டு வருவது பற்றிய ஆலோசனையில் இறங்கினார்கள்.(103)

பல எதிர்ப்புகளுக்கு நடுவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்று நேருஜி சட்டம் கொண்டு வந்தார். (107)

இந்தியா முழுவதும் உள்ள மடங்களை ஒன்று சேர்க்க சங்கராச்சாரியார் முயன்றார்;

ஆனால் வட இந்தியா முழுவதும் உள்ள மடங்கள் ‘சாது சம்மேளன்’ என்ற பெயரில் ஒன்றாகின.

அடுத்து தமிழ்நாட்டு மடங்களை ஒன்று சேர்க்க முனைந்தார். Association of Mutts ஒன்று உருவானது. (110)

ஒவ்வொரு மடமும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை இவ்வமைப்புக்குக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தினால் ஒற்றுமை குலைந்தது.

ஒரு கூட்டத்தில் மதுரை ஆதினம் ஒரு பிரச்சனையைக் கிளப்பினார். கோவில்களைக் கட்டியது மன்னர்கள். அதற்கு உதவி செய்தது, உழைப்பு கொடுத்தது, வியர்வை சிந்தியது, வீர்யம் கொடுத்தது, கல் சுமந்தது, மண் சுமந்தது எல்லாம் பிராமணர் இல்லாதோர். ஆனால் பூசை செய்வது மட்டும் பிராமணர்களா? கல் சுமந்து, மண் சுமந்து கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க பூசை செய்ய தடையா? வடநாட்டு காசியில் போல், இங்கும் அவரவர் பூசை செய்து கொள்ள விட வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெற வேண்டும். அதற்கு இந்த அமைப்பு உதவ வேண்டும் என்றார். (113)

ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழனாக வடக்கேயிருந்து வெற்றி சூடி திரும்பி வரும்போது, வடக்கிலிருந்த நாதமுனி என்ற வித்வானைத் தன்னுடன் அழைத்து வந்து, அவரைத் தன் குருவாக ஆக்கிக் கொண்டான். நாதமுனியின் பரம்பரை சோழ அரசோடு இணைந்து வந்தது. நாதமுனியின் பேரன் ஆளவந்தார். இந்த ஆள்வாரின் பேத்தியின் பிள்ளை விசிஷ்டாத்வைதம் கண்ட ஸ்ரீராமானுஜர்.(115)

மண்டையோட்டு வழிபாட்டுக் கலாச்சாரம். சார்வாகன் என்பவரின் நாஸ்திக கூட்டம், பெளத்த இருட்டு, ஜைனம், ஆதிசங்கரர் போதித்த மாயாவாதம் என்ற அத்வைதம் - எல்லாவற்றையும் அடக்கி ஒடுக்க வந்தவர் ஸ்ரீராமானுஜர். (117)

உலகில் எதுவுமே மாயை என்பது தவறு. பகவானுக்கு ரூபம் உண்டு. அவன் வைகுந்தத்தின் வசிக்கிறான். அவன் தான் ஜீவாத்மாவாகிய நம்மையும் உலகத்தையும் படைத்தான். பகவானின் உருவம் மனசு கற்பித்ததில்லை. அவன் நிஜமான உருவம் கொண்டவன் . பக்கத்தில் பிராட்டியோடு வைகுண்டத்தில் இருக்கும் பகவானை நாமெல்லாம் தியானிக்க வேண்டும் என்பது தான் ராமானுஜ உபதேசம்.

உபநிஷத்தின் வியாக்யானமான ப்ரம்மசூத்திரம் முக்கியமான வேதாந்த நூல்.

இதைப் படித்து உரை எழுதுவது அதாவது பாஷ்யம் பண்னுவது மிகக் கடினமான காரியம். அப்படிப்பட்ட ப்ரம்ம சூத்திரத்திற்கு சங்கரர் உரை எழுதினார். அது மத்வ பாஷ்யம் எனப்பட்டது.

அதே ப்ரம்ம சூத்திரத்திற்கு ராமானுஜரும் உரை எழுதினார். அது ஸ்ரீ பாஷ்யம் என்று மேன்மையாக அழைக்கப்படுகிறது. (119)

 ’பகவானின் உருவத்தை நித்யமும் தியானித்து உபாஸனம் செய்பவர்களுக்குத் தான் மோட்சம். இது பிராமணர்களுக்கு மட்டும் தான். பிராமணர் அல்லாத சூத்திரர்கள் மோட்சம் வேண்டும் என்றால் ... இந்தப் பிறவியை இப்படியே கழித்து, அடுத்த ஜென்மாவில் பிராமணனாக பிறக்க பகவானை பிரார்த்திக்க வேண்டும்.

ஒரு வேளை அடுத்த பிறவியில் பிராமணர்களாகப் பிறக்க அவர்களுக்கு பிராப்தம் கிடைக்குமானால் வேத உபநிஷத்துகளைக் கற்று பகவானைத் தொடர்ந்து தியானித்து மோட்சம் பெறலாம்.

அது போலவே ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்திரர்கள். எனவே அவர்கள் அடுத்த ஜென்மாவில் ப்ராமண புருஷனாக அவதரித்தால் தான் மோட்சத்துக்கு பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும்’, என்கிறார் ராமானுஜர்.(121)

திருமணச் சடங்குகளில் ரிஷிகளும், கோமாமிசமும் (பசு மாட்டுக் கறி) அவஸ்யமானவை என்கிறது வேத விதி. (146)

இப்போதும் திருமணங்களில் கோமாமிசம் சாப்பிடவேண்டிய சடங்குக்கான மந்த்ரத்தைச் சொல்கிறார்கள். அப்போது பெண்ணும் மாப்பிள்ளையும் தேங்காய் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்! காலத்தின் மாற்றத்தால் சடங்குகளை மாற்றிக் கொண்ட பிராமணர்கள் மந்த்ரங்களை மட்டும் இன்னும் விடாப்பிடியாய் பிடித்திருக்கிறார்கள்.(147)

பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது. பெண்களுக்கு உபநயனம் உள்ளிட்ட எவ்வித மந்த்ர சம்ஸ்காரங்களும் கிடையாது.(171)

8 வயசிலேயே கல்யாணம் பண்ணிக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் குடித்தனம் நடத்து. இல்லாவிடில், ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை .. உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப் படுமே கழிவு, அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படி ஒரு தண்டனையைப் பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை. (164)

(இந்த தண்டனையைப் பற்றியேதும் எழுத வேண்டாமென நினைத்து விட்டு விட்டேன். ஆனால் பின்னூட்டத்தில் ஒருவர்  //இந்துமதத்தை இவ்வளவு வக்கிர வர்ணனை செய்வதால் உங்கள் சார்பு நிலைதான் தெரிகிறது. .நான் அரண்மனையைப் பற்றிச் சொல்கிறேன். நீங்களோ அதிலுள்ள கழிவறையை கிளறிவிட்டு நாறுகிறதே என்கிறீர்கள் என்ன சொல்வது?// என்று வருந்தி எழுதியிருந்தார். ஆகவே விட்டுப் போனதை மறுபடியும் எழுதி “அரண்மனை”யின் அழகைப் பற்றி விலாவரியாக எழுதும்படியாகி விட்டது..) 


வேதமே இப்படி சொல்கிறதென்றால் மநு சும்மா விடுமா? வேதத்தை விட இன்னும் தெளிவாகச் சொல்கிறது. விதவைகளை சிதையிலேயே வைத்து தீர்த்துக் கட்டு என உத்தரவிடுகிறது. (173)

விதவைகளுக்குக் மொட்டை அடிக்கக் கூடாது என்று வடகலை வைணவர்கள் வலியுறுத்தினார்கள். அதெல்லாம் இல்லை மொட்டையடித்தே ஆகவேண்டும் என்பது தென்கலைக்காரர்களின் தரப்பு வாதம்.

வடகலை, தென்கலை என்றால் யார் யார்? பிரம்மத்துவம் எனப்படும் கடவுள் தன்மை பெருமாளின் துணைவியான பிராட்டி அதாவது தாயாருக்கு உண்டா என்ற பிரச்சனை எழுந்தது. பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் பங்கு கிடையாது; உதவும் சக்தி கிடையாது. வெறும் சிபாரிசு மட்டும் செய்ய முடியும் என்பது தென்கலைக்காரர்களின் வாதம். இதற்கு ‘புருஷகாரத்வம்’ என்பது சம்ப்ரதாயப் பெயர். இதனாலேயே விதவை மொட்டையடிக்க வேண்டும் என்றார்கள் இவர்கள். வட கலைக்காரர்களோ பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் குறிப்பிட்ட பங்கு இருக்கிறது என்று நம்பினார்கள்.இதனாலேயே இவர்கள் விதவைகள் மொட்டையடிக்க வேண்டியதில்லை என்றார்கள்.

இன்னும் 24 விஷயங்களின் அடிப்படையில் இந்த இருவரும் கருத்து வேறுபாடு கொண்டவர்கள். பின்பு 40 விஷயங்கள் என்று வளர்ந்து விட்டது.(174)





*