Thursday, October 09, 2025

மொழிபெயர்ப்பு விருது விழா


அருட்செல்வர் நா. மகாலிங்கம் காந்தியின் மீதுள்ள தனது பக்தியையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் வண்ணம், காந்தி பிறந்த நாளைப் பல்லாண்டுகளாகக் கொண்டாடி வருகிறார். காந்தியோடு அண்ணல் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாளையும் இணைத்துப் பெரு விழாவாக ஆண்டாண்டு தோறும் கொண்டாடினார்.

 

      அருட்செல்வர் நா. மகாலிஙம்

               

                                               முனைவர்  ம. மாணிக்கம்

தந்தையார் மறைந்த பின் அந்தப் பணியை அதே போல் சிறப்பாக அவரது மகனார் முனைவர் மாணிக்கம் அவர்கள்  தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்த ஆண்டு நடந்த விழா தொடந்து 58 ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு பெரும் விழா.

புதிதாக சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணிமன்றம் அருசெல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் மூலமாகப் பல மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்படுமின்றன. அதனோடு இணைந்து ஆண்டு தோறும் பல சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருது கொடுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியிலிருந்து இந்த விழா ஐந்தாம் தேதி வரை நடந்து முடிந்தது. காந்தி பிறந்த நாளான இரண்டாம் தேதி அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா பெரிதும் விமரிசையாக நடந்தது.

இவ்விழாவில் இருவருக்கு முதல் விருதும்(தலைக்கு 1,00,000), இருவருக்கு இரண்டாம் பரிசுகள் இருவருக்கும்(50,000), நால்வருக்கு மூன்றாம் பரிசுகளும்(25,000) கொடுத்தார்கள்.

இவ்விழாவில் எனக்கு மூன்றாம் பரிசு(தான்!) கிடைத்தது. பேரரசன் அசோகர்  என்ற நான் மொழிபெயர்த்த நூலுக்குக் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. எதிர் வெளியீடாக இந்த நூல் வெளிவந்தது. வெளியீட்டாளர் அனுஷ் அவர்களுக்கும், விருதளித்த மொழிபெயர்ப்பு மையத்திற்கும், அதனை நடாத்தி வரும் முனைவர் மாணிக்கம் அவர்களுக்கும்,  அதில் சிறப்பான பங்களித்துக் கொண்டிருக்கும் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.

விழாவின் வரவேற்பாளர் முனைவர் ஒளவை ந. அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்ச்சித் துறை) அவர்களின் பேச்சு அருமையாக இருந்தது. (அவரின் தந்தை முனைவர் ஒளவை நடராசன் அவர்களும், அவரது தாத்தா ஒளவை சு. துரைசாமி அவர்களும் என் கல்லூரிக் காலத்தில் (61-64) ஆண்டுகளில் என் தமிழ் ஆசிரியர்களாக மதுரை தியாகராசர் கல்லூரியில் இருந்தார்கள் என்ற மகிழ்ச்சிச் செய்தியை அருள் அவர்களிடமும் தெரிவித்தேன். எனக்கும் மகிழ்ச்சி. செய்தி கேட்ட அவருக்கும் பேருவகை.) வாழ்க நீ எம்மான் என்ற தலைப்பில் பேசிய திருமதி பாரதி பாஸ்கர், தான் மிகப் பெரும் மேடைப் பேச்சாளர் என்பதை ஒவ்வொரு சொல்லிலும் உறுதியாக்கினார்.

குடும்பத்தினர் அனைவரும் - முக்கியமாக, என் பேரக் குழந்தைகள் நால்வரும் - வந்திருந்தது எனக்குப் பேரின்பமாக இருந்தது.

விழாவிற்குப் போனோம்; விருது வாங்கினோம்; மகிழ்ச்சியைக் கொண்டாட பெயரன்கள் விருந்துண்ண அழைத்துச் சென்றனர்.

 

 






















 


Monday, October 06, 2025

என் கதை - 3 - (நான் பங்கேற்ற என் அப்பாவின் திருமணம்)

*

அப்பாவின் கல்யாண வைபோகமே…

அப்பா-அம்மா கல்யாணம் - நன்கு அழுத்தமாக நினைவில் நிற்கிற முதல் நினைவு அதுதான் என்று நினைக்கிறேன். பெத்த அம்மா இறக்கும்போது எனக்கு வயது ஒன்றரை, இரண்டு இருந்திருக்கும். ரொம்ப அம்மாவைத் தொந்தரவு செய்வேனாம். அம்மா இறந்ததும் அம்மாவுக்கு மாலை போடச் சொன்னார்களாம்; அம்மாவுக்கு முத்தம் கொடுத்தேனாம். எல்லாம் சொல்லக் கேள்வி. தொடச்சி வச்சது மாதிரி ஒன்றும் சுத்தமாக ஞாபகமில்லை. ஆனால் அதற்குப் பிறகு சின்ன வயது விதயங்கள் பலவும் நினனவில் இருக்கின்றன. பழைய போட்டோ ஆல்பம் ஒன்றைப் பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்ப்பது போன்ற உணர்வு. பக்கங்கள் புரளப் புரள அதில் உள்ள படங்கள் ஒவ்வொன்றும் உயிர்த்து, என்னைச் சுற்றிச் சுற்றி நிஜ நடப்புகள் போல, ஒரு திரைப்படமாக உயிர்த்துடிப்போடு இயங்க ஆரம்பிக்கின்றன.

அந்தத் திருமண நிகழ்ச்சி தெளிவாகவே என் கண்முன் விரிகிறது. அருகில் அம்மாவின் ஊர் - குறும்பலாப் பேரி. கிராமத்துக் கிறித்துவக் கோயில்; அதற்குரிய எளிமையோடு இருக்கிறது. எனக்குத் தனியாக ஒரு நாற்காலி; எங்கிருந்து எடுத்து வந்திருந்தார்களோ. ஏனெனில் அந்தக் கோயிலில் ஏது நாற்காலியெல்லாம் அப்போது இருந்திருக்கப் போகிறது. அப்பாவுக்கும், பொண்ணுக்கும் இரண்டு நாற்காலிகள். ஆனால், அப்பா கோயிலின் முன்னால் அந்த பீடத்திற்குப் பக்கத்தில் முழங்கால் போட்டு ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்பா இளம் க்ரீம் கலரில் அந்தக் காலத்து Gaberdine துணியில் கோட், சூட் போட்டு இருந்தார்கள். நான் ஆல்டரின் பக்கத்தில் அந்த பெரிய சேருக்குள் அடங்கி உட்கார்ந்திருந்தேன். பெண்ணைப் பார்க்கும் டென்ஷன்; சிறிது நேரம் கழித்து கோயில் வாசல் பக்கம் கொட்டுச் சத்தம். திறந்த காரில் பெண் வந்தாகிவிட்டது. சிகப்பா, அழகாக இருந்தார்கள். (என் அம்மா கருப்போ, புது நிறமோ; ஆனா நிச்சயமா சிகப்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன்.) மஞ்சள் பட்டுப் புடவையும், தலையில் கிறித்துவ முறைப்படி ரீத், நெட் எல்லாம் போட்டிருந்தது. சின்னப் பிள்ளைகள் கூட்டமாய் பொண்ணைச்சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் அந்த திறந்த கார், கிறித்துவ முறையில் அலங்காரம் - இவை எல்லாமே அவர்களுக்கு ரொம்ப வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும்.

பிறகு கல்யாணம் நடந்தது. பின் அந்த திறந்த காரில் ஊர்வலம். அதில் ஒன்று மட்டும் ஞாபகமிருக்கிறது. காரில் உட்கார்ந்திருந்தேனோ என்னவோ தெரியவில்லை; ஆனால், ஏதோ ஒரு நேரத்தில் என் பாளையன்கோட்டை பெரியம்மா என்னைத் தூக்கி காரில் அப்பாவுக்கும், 'பொண்ணு'க்கும் நடுவில் உட்காரவைத்தார்கள்.


                        

இன்னும் கொஞ்சம் கல்யாண நிகழ்ச்சிகள் நினைவில் இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு முன்பு சொல்லவேண்டிய வேறு சில விதயங்களைச் சொல்லிவிட்டு பிறகு இதற்கு வருகிறேன். என் ஐந்தாவது வயதில் அப்பாவின் கல்யாணம் நடந்திருக்க வேண்டும்; ஏனெனில், கல்யாணம் முடிந்த கையோடு கிராம வாழ்க்கையை முடித்துக் கொண்டு, மதுரைக்குச் சென்று பள்ளியில் சேர்ந்தேன். அப்பாவின் கல்யாண நிகழ்ச்சிகள் நினைவில் இருக்கும் அளவு அதற்கு முன் நடந்தவைகள் அவ்வளவு தெளிவாக நினைவில் இல்லை. அங்கங்கே விலகும் ஒரு பனி மூட்டம் வழியாக பார்ப்பதுபோல் சில காட்சிகள் - சில தெளிவாக; சில மஞ்சுவுக்கு ஊடாக.

நான் பிறந்து சில மாதங்களிலேயே அம்மாவுக்கு அந்தக் காலத்து பயங்கர நோயான எலும்புருக்கி - T.B. - வந்து விட்டதாம்; ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். நோய் முற்றிவிட்ட நிலையில் மதுரை அரசாங்க மருத்துவமனையில் சில நாட்கள் இருந்திருக்கிறார்கள். பின்னாளில் சில உறவினர்களுடன் அந்த மருத்துவமனை செல்லும்போது, அம்மா இருந்த கட்டிடம், வார்டு என்று என்னிடம் அடையாளம் காட்ட முயன்றதுண்டு. நான் அதை மனதில் வாங்கிக் கொள்ள முயன்றதேயில்லை; அது மட்டுமல்லாது அந்த சேதியை நான் அறியவும் விரும்பவில்லை. மருந்துகள் குணமளிக்க முடியாத நிலையில் அம்மா ‘நான் இங்கு சாகவேண்டாம்; ஊருக்குப் போய் விடுவோம்’ என்று சொல்லிவிட்டார்களாம். தென்காசி அருகிலுள்ள அம்மா ஊருக்கு - குறும்பலாப்பேரி - கொண்டு சென்றார்களாம். என்னை முடிந்தவரை அம்மா ‘தள்ளி’யே வைத்திருக்க முயற்சித்திருக்கிறார்கள் - மகனுக்கும் நோய் வந்துவிடக்கூடாதே என்று. நான் ரொம்பவும் அழுது தொல்லை கொடுத்தேனாம். ஊருக்குப் போன ஓரிரு மாதங்களில் அம்மா இறந்து போனார்கள்.

அம்மா இறந்த பிறகு அப்பா தனியாளாக மதுரையில் இருக்க நான் ஊரில் என் அப்பம்மாவிடம் இருந்தேன். வீட்டில் அப்பாவின் நான்கு தங்கைகளில் இருவர் அப்போது அங்கே இருந்தார்கள். பாட்டையா ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். செயிண்ட். ஜோசஃப் பாடசாலை என்று பெயர். அத்தைகள் இருவருமே அங்கே டீச்சர்களாக இருந்தார்கள். அப்பம்மாவும், பாட்டையாவும் காலங்காத்தால வயல்களுக்கு வேலைக்குப் போனால் பொழுது சாஞ்சதுக்குப் பிறகுதான் திரும்புவார்கள். இதனால் நான் இரண்டு வயதிலிருந்தே பள்ளிக்கூடம் போக ஆரம்பித்துவிட்டேன்.

அப்பா விடுமுறைகளில் ஊருக்கு வரும்போதெல்லாம் ஒரு நிகழ்ச்சி தவறாமல் அரங்கேறும். அதுவரை நான் பாட்டுக்கு விளையாடிக்கிட்டு இருப்பேன். அப்பா வந்ததும் என் அத்தைமார்கள், அப்பம்மா எல்லாரும் என்ன மாத்தி மாத்தி தூக்கி வச்சிக்கிடுவாங்க; ரொம்ப அழுதிருவாங்க. அதப் பாத்து நானும் அழுதிருவேன். இறந்துபோன அம்மா, அம்மா இல்லாத பிள்ளையாக இருக்கிற நான் - எல்லாம் உள்ளே இருக்கிற சோக நெருப்பை அப்பாவுடைய வரவு ஊதிப் பெருக்கிவிடும். அப்பாவும், பாட்டையாவும்தான் இந்த சூழலை மாத்துவாங்க - ஏதாவது பேசி; மதுரையில் மழ இருக்கா, வெயிலு எப்படி இருக்கு அப்டின்னு ஏதாவது பேசி.

அப்பா வரும்போதெல்லாம் ஏதாவது வாங்கிட்டு வருவாங்க. எனக்குப் பிடிச்சது என்னன்னா, திராட்சைப் பழம். அப்போவெல்லாம் பச்சை திராட்சைதான் எங்கேயும் கிடைக்கும். நல்லா புளிக்கும். நரிகூட நிஜமாவே வேண்டாம்னு போச்சே, அது. கருப்புத் திராட்சை -ஹைதராபாத் திராட்சை என்பார்கள் - நல்லா இனிக்கும்; அத அப்பா வாங்கிட்டு வர்ரப்போவெல்லாம் ஒரே ஜாலி.

ஒருதடவை அந்த மாதிரி வரும்பொது எனக்கு ஒரு மூணு சக்கர சைக்கிள் வந்திச்சு. சரியான கனம்; கெட்டிக் கம்பில பண்ணுனது. பச்சைக் கலர். வீல் சைடு எல்லாம் ஒரு மாதிரி சிகப்பு. கெட்டி ரப்பர்ல டயர். அழகா பேப்பர் போட்டு சுத்தி வந்து இறங்கிச்சி. அடேங்கப்பா! எப்படித்தான் நியூஸ் பரவுச்சோ…கொஞ்ச நேரத்தில ஊர்ல இருக்கிற சின்ன பசங்க பூரா வந்திட்டாங்கல்லா நம்ம வீட்டுக்கு.

அப்போ சைக்கிள் ஓட்ற வயசும் இல்ல; அதனால நமக்கு ஒரு டிரைவர் செட் பண்ணியாச்சி. வேற யாரு; நம்ம தங்கச்சாமி தான். வீட்டுக்குப் பின்னால பெரிய காலி இடம் இருக்கும். நம்ம டிரைவரோடு போயிட வேண்டியதுதான்; என்ன உக்கார வச்சு தங்கச்சாமி சுத்தி சுத்தி தள்ளிக்கிட்டே ஓடுவான். வேணுமான்னு கேட்டாகூட வேண்டான்னுட்டு, தள்ளி உடுவான். நமக்கு ‘ஸ்டீயரிங் கன்ட்ரோல்’ மட்டும்தான். ஒருநாள் எனக்கும், தங்கச்சாமிக்கும் படு ஜாலி. வேக வேகமா சுத்திக்கிட்டு இருந்தோம். டபார்னு கால சக்கரத்துக்குள்ள விட்டுட்டேன். பெரு விரல் நசுங்கி ஒரே ரத்தம். தங்கச்சாமி என் அத்தைமார்களுக்குப் பயந்து பின் வாசல் வழியே ஓடிப் போய்ட்டான். ஆனா, இதில் ஒரு நல்லது நடந்தது. அதுக்குப் பிறகு வண்டிக்கு டிரைவர் கிடையாது. அதனால நானே ஓட்டப்பழகினேன்.. அதன் பின் அத்தைகளின் கையைப் பிடித்து நடந்து வந்த நான் சைக்கிளில் சென்று வர ஆரம்பித்தேன். என் சைக்கிள் மட்டுமே அந்தப் பள்ளியில் மரத்தடியில் ‘பார்க்’ செய்யப்பட்ட சைக்கிளாக இருக்கும். நான் சைக்கிளில் செல்வதைப் பார்க்க வழியில் உள்ள வீட்டிலிருந்து பெரிசுகளின் தலைகள் கூட எட்டிப் பார்க்கும்.


கிராமத்துப் பிள்ளைகளோடு விளையாடி ஒன்றாக இருந்தாலும் எல்லோருக்கும் நான் ஒரு ‘தாயில்லாப் பிள்ளை’. அந்தக் கண்ணோட்டத்தில்தான் என்னைப் பார்ப்பார்கள். அதை எனக்குப் புரியும் வகையில் ‘ஸ்பெஷல் அன்பைப் பொழிவார்கள். I was the most pampered and petted child in the village. அதுவே என் பின்னாளைய வாழ்வில் ஒரு அழியா தடத்தை ஏற்படுத்திவிட்டது. அதன் பாதிப்பு என்னிடம் இன்று வரை இருப்பதாகவே நினைக்கிறேன்.
சரி சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போய்ட்டோமோ? கல்யாணத்திற்கு வருவோம். அது என்னவென தெரியல…காட்சிகள் எல்லாம் சினிமாவில் cut-shots என்பார்களே அது மாதிரி தொடர்பில்லாமல் துண்டு துண்டுக் காட்சிகளாகத் தெரிகின்றன. அம்மா-அப்பாவின் நடுவில் கல்யாண ஊர்வலக் காரில் உட்கார்த்தப் பட்டது ‘தெரிகிறது’. அதை விடவும் வழி நெடுகச் சென்ற ஊர்வலத்தில் நானே பலரின் கவனத்தை ஈர்ப்பவனாகி விட்டேன். அதை நான் அப்போதே உணர்ந்ததாக இப்போதுகூட எனக்குத் தோன்றுகிறது.

அடுத்த cut-shot! இது கல்யாண நாளின் மாலை நேரம். அந்தி சாய்ந்து விட்டது. இடம்: அப்பாவின் ஊர் (காசியாபுரம்), எங்கள் வீடு. அந்தக் காலத்தில் - ஏன் இப்பவும் கூட, கிராமத்தில் ஒரு கல்யாணம் என்றால் ஊர் ஒட்டு மொத்தமும் கல்யாண வீட்டில்தான் இருக்கும் - வீடு முழுவதும் ஆட்கள். நாலைந்து ‘பெட்ரோமாக்ஸ் லைட்டுகள்’. அதுவும் அந்தக் காலத்திற்கு பெரிய novelties. வீட்டுக்கு முன்புறம் இரண்டு தலைவாசல்கள் இருக்கும். வடக்குப் பக்க வாசல்தான் பொதுவாக எப்போதும் எல்லோரும் பயன்படுத்தும் வழி; தெக்குப் பக்கம் உள்ளது அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஏனென்று தெரியாது - நான் தனியாக அந்த தெக்கு வாசலில் உட்கார்ந்து கொண்டு, அந்த பெட்ரோமாக்ஸ் விளக்கைச்சுற்றி விளையாடிக்கொண்டிருந்த என் வயசுப் பசங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் யாரோ வந்து நின்னது மாதிரி இருந்திச்சி; திரும்பிப் பார்த்தேன். அப்பாதான் பட்டு வேஷ்டி கட்டிக்கிட்டு நின்னாங்க. பக்கத்தில் உக்காந்தாங்க; கொஞ்ச நேரம் ஏதும் பேசலை. நானும்தான். பிறகு அப்பா மெல்ல கேட்டாங்க: ‘வந்திருக்கிறது உனக்கு யார்?’என்று கேட்டார்கள் . ‘சித்தி’. அப்படிதான் எனக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள்; அதைச் சொன்னேன். ‘இல்லப்பா, அது உனக்கு அம்மா’ என்றார்கள்.

அதிலிருந்து அப்படித்தான்.

Friday, October 03, 2025

என் கதை - 2 - ( இன்று நான் ‘தனியாக’ நின்று கொண்டிருக்கிறேன்.)

பதிவு: 1 https://dharumi.blogspot.com/2025/10/1.html


3.10,25 



29.9.2025 ஏதோ ஒரு விதத்தில் இந்த நாள் ஒரு முக்கியமான நாளாக வாழ்நாளில் அமைந்துவிட்டது என்று நினைக்கிறேன். என்ன பெரிதாக அன்று நடந்தது என்று கேட்கலாம். பெரிய விஷயம் ஒன்றுமில்லை. சில நாட்களுக்கு முன்பு வயதாகிப் போய்விட்டதா .. சில கோளாறுகள் வரத்தானே செய்யும் ..  பார்வையில் ஒரு சிறு கோளாறு. கண்ணில் தெரியும் பிரேமில் இடது பக்கம் ஓரத்தில் சில பொருட்கள் கண்ணுக்கு தெரியாமல் போனது. மருத்துவர்கள் இது பிரச்சனை இல்லை; சரியாகிவிடும் என்றார்கள். சரியாக ஆகிறதோ இல்லையோ நான் அதற்காகப் பழகிக் கொண்டிருக்கிறேன். அன்று வாசிக்க முடியவில்லை; எழுத முடியவில்லை; கணினியில் வேலை செய்ய முடியவில்லை. இப்பொழுது அதற்கெல்லாம் பழகிவிட்டேன். நேரம் ஆக ஆக அந்தப் பழுதோடு பழகிவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். இப்போது வாசிப்பதில், எழுதுவதில், கணினியில் அதிகப் பிரச்சனையில்லை. ஆனால் வண்டி ஓட்டும்போது எல்லாம் கண நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாமென்று எல்லோரும் பயமுறுத்திக் கொண்டு இருந்தனர். பார்வையிலும் கோளாறு என்றால் எதற்காக வண்டி ஓட்ட வேண்டும் என்று ஒரு நல்ல புத்தி மனதிற்குள் லேசாக எட்டிப் பார்த்தது. அதுவுமில்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் ஹெல்மெட்டோடு ஒரு படத்தை முகநூலில் போட்டிருந்தேன். நண்பர்கள் பலரும் திட்டினார்கள். இந்த வயதிலுமா வண்டி ஓட்டுகிறாய் என்ற கண்டனங்கள்.  வீட்டில் ஏற்கனவே பிள்ளைகளும் துணைவியாரும் போட்ட தடைகளைத் தாண்டி அவர்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் கொஞ்சம் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் நினைவுபடுத்திப் பார்த்த பிறகு.  சரி போதும் ... வண்டி ஓட்டியது போதும்; எல்லோரும் எதிர்பார்ப்பது போலவே நம் கையைக் கட்டி காலைக் கட்டி அதாவது வண்டி ஓட்டுவதை நிறுத்தி விடுவோம் என்று நினைத்தேன். ஆனாலும் வண்டி கண்முன்னே நின்றால் அதை ஓட்டாமல் இருக்க முடியவில்லை. துருதுருவென்றிருந்தது. என்ன செய்யலாம்?

பிள்ளைகளிடம் யாருக்கு வண்டி வேண்டும் என்று கேட்டேன். பெரியவள் எனக்கு வேண்டாம் என்றாள். சின்னவள் சரியென்றாள். சரி உன் டிரைவரை அனுப்பு என்றேன். செல்வம் வந்தார். வண்டியை எடுத்தார்.  ஒரு பத்தடி சென்றதும் வண்டி நின்று விட்டது. நான் பக்கத்தில் போனேன். செல்வம் சொன்னார்: வண்டிக்கு உங்களை விட்டுப் போக மனமில்லை போலும்என்றார்.

பக்கத்தில் போய் வண்டியைத் தட்டிக் கொடுத்து, ‘போய் வா என்று சொன்னேன். வண்டியும் உடனே புறப்பட்டு விட்டது. வண்டி சென்றது .. வண்டி சென்று விட்டது.

இதில் என்ன பெரிய விசேஷம் என்றா கேட்கிறீர்களா? கணக்குப் போட்டுப் பார்த்தேன். எழுவதில் இருந்து 55 ஆண்டுகள் ஏதோ ஒரு வாகனத்தோடு இருந்திருக்கிறேன். 1970 அக்டோபர் மாதம் ஜாவா MDA 2107 என்று ஒரு வண்டியை வாங்கினேன். 22 வருடம் அந்த வண்டி என்னுடன் இருந்தது. கவசாக்கி என்றொரு புது வண்டி வாங்கி, பழைய ஜாவாவை கடைசியில் விற்று, அதை ஒரு நண்பன் வந்து எடுத்துக் கொண்டு போனான். அந்த வண்டியை அனுப்பிவிட்டு திரும்பிப் பார்த்தால் பின்னால் என் சின்ன மகள் அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு அந்த வண்டியைப் பிரிவது அத்தனை சிரமமாக, கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் பிள்ளைகள் பிறக்கும் முன்பே அந்த வண்டி என்னிடம் இருந்தது. அவர்களோடு சேர்ந்து வளர்ந்த ஓர் உயிர் போல அவள் நினைத்து கண் கலங்கி நின்றாள்.

அது எனக்கு இன்று நினைவுக்கு வந்தது. சின்ன மகள் அழுது கொண்டிருந்ததும்,  இன்று வண்டி என்னை விட்டுப் போகும் பொழுது எனக்குக் கொஞ்சம் பழைய நினைவுகள் வந்தன. ஜாவா வண்டி வாங்கி 22 வருடம் வைத்திருந்தேன். பிறகு  இரு சக்கர வண்டிகள் நிறைய வாங்கி மாற்றி மாற்றிக் கொண்டிருந்திருக்கிறேன். அதன்பின் நான்கு சக்கர வண்டி மூன்று - முதலில் ஒரு பியட், அடுத்து ஒரு எஸ்டீம், இறுதியில் புதிய I.10. மூன்றையும் 20 - 25 வருடம் ஓட்டியிருப்பேன். சென்னைக்கு மாற்றலாகி வந்தபின் காரை அதிகமாக ஓட்ட முடியவில்லை. வழியும் தெரியாது; ஒண்ணும் தெரியாது. வீட்டுக்கு வெளியே மெட்றோ வேலை. எல்லாவற்றையும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போலிருந்தது. காரை பேரனிடம் கொடுத்து விட்டேன். அதன் பின் நாலாண்டுகளாகப் பக்கத்து தெருவுக்குள் மட்டும் இருசக்கர வண்டியில் போய் வந்தேன். ஊர்சுற்றல் அத்தனை சுருங்கி விட்டது.

ஆனால் இன்று வாகனம் ஏதும் இல்லாமல் தனியாக, மொட்டையாக நிற்பதாக ஒரு சின்ன நினைப்பு வந்தது. 55 ஆண்டுகளுக்குப் பிறகு வண்டியேதும் இல்லாமல் தனியாக நிற்பது போன்ற ஓர் உணர்வு. உணர்வு என்பதை விட ஓர் உறுத்தல். அதைவிட இனிமேல் என்ன செய்வது? 55 வருட பழக்கம் .. நினைத்தால் வண்டி எடுத்துக்கொண்டு போகும் ஒரு எளிய வாழ்க்கை இருந்தது; எளிய வாழ்க்கை என்றால் பக்கத்தில் உள்ள கடைக்குப் போக வேண்டும் என்றால் கூட வண்டியை எடுக்கும் பழக்கம் தொத்திக் கொண்டு விட்டது. இனிமேல் அப்படி இருக்க முடியாது என்பது ஒரு சின்ன ... நெருடல் என்பது சரியான வார்த்தையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவ்வளவுதான். சிறகுகளை தானே வெட்டிக் கொண்ட பறவை போல் நிற்கிறேன்.

 இன்று நான் தனியாக நின்று கொண்டிருக்கிறேன்.

Wednesday, October 01, 2025

என் கதை - 1

 *


என் கதை என்று இதற்குப் பெயர் வைப்போமா; என் வாழ்க்கை என்ற  பெயர் வைக்கலாமா என்று ஒரு சின்ன குழப்பம். யோசித்துப் பார்த்தேன். வாழ்க்கை என்று வைத்தால் எல்லாமே மிகச் சரியாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். பலவற்றை மறைக்க முடியாத ஒரு சூழல் உருவாகும். நாம் என்ன சத்திய சோதனையா எழுதுகிறோம். இல்லியே. பின் எதற்கு அந்த வம்பு என்று நினைத்து, என் கதை என்ற பெயரையே வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். இப்போதுதான் உள்ளதையும் சொல்லலாம்; குறைத்தும் சொல்லலாம்; கூட்டியும் சொல்லலாம். எல்லாம் என் இஷ்டம் என்பது போல் ஒரு சுதந்திரம் கிடைத்துவிடும். அதுதான் நல்லது என்று தோன்றுகிறது கதை என்றால் புதுப் பாத்திரங்களை உருவாக்கலாம்; இருக்கும் பாத்திரங்களை மறைக்கலாம்; எத்தனை வசதி .. எத்தனை வசதி. ஆகவே என் கதை என்பதே சரியான தலைப்பாக இருக்கும் என்று முடிவு செய்துவிட்டேன்.

ஆல்வின் டாப்ளர்(Alvin Toffler)எழுதிய பியூச்சர் ஷாக்(Future Shock) என்ற புத்தகம் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத்தில் எல்லாமே மாறும். அந்த மாற்றங்கள் எல்லாமே அதிர்ச்சி தரும் மாற்றங்களாக நாளை இருக்கலாம் என்று அவர் ஒரு ஜோசியம் சொன்னார். உண்மைதான். அதுவும் என்னைப்போல் நீண்ட வாழ்க்கை வாழும் - நான் எண்பதைத் தாண்டி விட்டேன் - மக்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு ஆச்சரியமான வாழ்க்கைதான்.  காலணா கொடுத்து ஒரு நாட்டு வாழைப்பழம் சாப்பிட்ட காலம் ஞாபகம் வருகிறது; இன்று அதே பழத்தை 10 அல்லது 12 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு சூழலும் தெரிகிறது. இரண்டையும் பார்த்து விட்டோம். ஒரு ஸ்கூட்டர் வாங்க ஆறு ஆண்டுகள்; ஒரு போன் தொடர்பு வாங்குவதற்கு ஆறு ஆண்டுகள் என்று இருந்த காலம் மாறி விட்டது. இன்று கனவு கண்டாலே பைக் வாங்கிக் கொள்ளுங்கள் என்று காலையில் கதவைத் தட்டுகிறார்கள். இன்று கடைக்குப் போனால் சிம் கார்டு உடனே வாங்கி ஒரு போன் வாங்க முடியும்; எல்லாம் கணத்தில் முடிகிறது. 

நான் சிறுவனாக பள்ளிப்படிப்பிலிருந்த பொழுது பள்ளிக்கு அருகில் ஒரு எல்ஐசி அலுவலகம் இருந்தது. அதில் திடீரென்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடந்தது. அப்பொழுதிருந்த என்னுடைய அறிவுக்கு அவர்கள் சொன்னது என்னவென்றால், கம்ப்யூட்டர் வந்துவிட்டது; ஆகவே எங்களுடைய வேலை வாய்ப்புகள் போய்விடும். அதனால் கம்ப்யூட்டர் வேண்டாம் என்றார்கள். அப்போது பஞ்ச் கார்டு கார்டு பயனுக்கு வந்தது. அது வந்தால் எங்களுக்கு வேலை வாய்ப்பு விடும் என்று அச்சப்பட்டார்கள். இன்று பன்ச் கார்டு வந்தது; பிளாப்பி வந்தது; மென்தகடு வந்தது; எல்லாற்றையும் தாண்டி இப்பொழுது செயற்கை அறிவு வந்துவிட்டது. அன்று பஞ்ச் கார்டு பயமுறுத்தியது; இன்று செயற்கை அறிவு பயப்படுத்துகிறது. சினிமாவில் வந்தது போல் செயற்கை அறிவு நம்மை ஆள ஆரம்பித்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் இருக்கிறது. இந்த இரண்டு வெவ்வேறு முனைகளை வாழ்க்கையில் நாங்கள் பார்த்து விட்டோம். 

நிச்சயமாக என் வயதுக்காரர்கள் எல்லோருமே கொஞ்சம் அதிர்ஷ்டசாலிகள்தான் நாங்கள் ஃபியூச்சர் ஷாக்கில் சொன்ன அதிர்ச்சி தரும் எதிர்காலங்களைப் பார்த்து விட்டோம். நாங்கள் நினைக்காததெல்லாம் நடக்கிறது. ஒரு காலத்தில் தொலைபேசியில் பேசுபவர்கள் அடுத்த பக்கம் கோபமாகப் பேசினார்களா என்றால், அவர்கள் முகமாக தெரிகிறது என்று சொன்ன காலம் போய் இன்று வீடியோ கால்கள் வந்தாச்சு. குழந்தைகள் கூட அவைகளை மிகவும் எளிதாகப் பயன்படுத்துகிறார்கள். 

எனக்கு இன்னும் ஓர் ஆச்சரியம். முதல் முதலாக ஒரு கைத்தொலைபேசியில் ஒரு போட்டோவைத் தொட்டு அப்படியே கையை வைத்து இழுத்ததும் படம் பெரிதாகத் தோன்றியது. அப்போது நான் போட்டோகிராபியில் அதீத ஆர்வத்தோடு இருந்தேன். எனக்கு அது அத்தனை ஆச்சரியமாக இருந்தது. ஒரு படம் - அதை இரண்டுவிரல் வைத்து இழுத்தால் படம் பெரிதானது. இப்போது கைப்பேசியில் புகைப்படம் எடுத்ததோடு வீடியோவும் எடுக்கிறோம். இன்னும் எத்தனையோ வித்தைகளைச் செய்கிறோம். எல்லாம் ஒரு கணத்தில் நடக்கிறது. கனவுகளாக இருந்தவைகள் எல்லாம் நினைவுகளாக மாறிக்கொண்டே வருகின்றன. அதுவும் மிக மிக வேகமாக, எங்களைப் போன்றவர்கள் எட்டிப்பிடிக்க முடியாத அளவிற்கு வெகுவேகமாக வளர்ச்சியில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு பற்றி இப்பொழுதுதான் பேச ஆரம்பித்தோம் ஆனால் நானோ பனானா(Nano Banana) என்று ஒரு புதிய ஆப் வந்திருக்கிறதாம். நம் எதிர்பார்ப்புகளையும் தாண்டி அது ஏதோ பல வித்தைகள் செய்கின்றது.

நடக்கும் மாற்றங்களைக் கணிக்கவும் முடியவில்லை; புரிந்து கொள்ளவும் முடியவில்லை; ஜீரணிக்கவும் முடியவில்லை. என்ன, ஏது என்று தெரிவதற்குள் புதியதொரு மாற்றம். அன்று ஃபியூச்சர் ஷாக் என்றார்; ஆனால் அதை வாழ்க்கையில் நேரடியாகப் பார்த்து, அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பக்கம் மகிழ்ச்சி; ஒரு பக்கம் அதிர்ச்சி; மற்றொரு பக்கம் அச்சம். எல்லாமே நடக்கின்றன. அந்த அச்சத்தை தவிர்த்து விட்டு, ஆச்சரியப்பட மட்டும் பழகிக் கொண்டே இருக்கிறோம். எங்கள் காலம் முடிவதற்குள் இன்னும் எத்தனை எத்தனை பார்க்கப் போகிறோமோ? யாருக்குத்தான் தெரியும்! நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்பார்கள். அது ஒரு தத்துவமாகப் பேசப்பட்டது. ஆனால் இப்பொழுது அனுபவமாக இருக்கிறது. அறிவியல் மாற்றங்கள் அத்தனை வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் விமானங்கள் வைத்துக் கொண்டு போர் நடந்தது. ஹிரோஷிமா நாசகாகி அழிந்தன; ஆனால் இப்பொழுது மனிதர்கள் போரிடுவதில்லை; ட்ரோன்கள் போரிடுகின்றன. ட்ரோன்கள் ஆட்களைக் கொல்கின்றன; உடைமைகளை அழிக்கின்றன. இன்னும் அடுத்த அறிவியல் மாற்றத்தில் ரோபோக்கள் சண்டையில் இறங்கும். சினிமாவில் பார்த்த ரோபோ போலவே இங்கேயும் ரோபோ யுத்தம் புரியும். ஏன் காதலும் செய்யும்போலும்!!!

ஏதோ ஒரு ட்ரோன் இன்னொரு ட்ரோனை காதலித்தால் அதோடு நின்று விட்டால் நல்லது. நம்மையும் காதலிக்க ஆரம்பித்தால் நிலைமை என்ன ஆகுமோ!

....   தொடரும்

Tuesday, September 30, 2025

விஜய்க்கு நல்லதொரு வாய்ப்பு காத்திருக்கிறது ......


ஆஹா .. இப்படி ஒரு தருணம் வேறு நடிகர்களுக்கு வாய்க்கவில்லை. இவருக்குத்தான் அந்த வாய்ப்பு வாய் பிளந்துக் காத்திருக்கிறது. அந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்துவாரா        என்பது தான் நம் முன்னும், விஜய் முன்னும் நிற்கும் கேள்வி. அதில் தான் நம் எல்லோரின் ஜாதக பலனும் இருக்கிறது.

அவருக்கு முன்பு பல பேர் இருந்தாலும் முக்கியமாக சமீபத்தில் இருந்த இரு பெருசுகள் பற்றிச் சொல்லியாகணும். அதுல மொதல்ல வந்த பெருசு ... ரொம்ப பெரிய ஆளு சூப்பர் ஸ்டாருன்னு எல்லோரும் அவரைச் சொல்வாங்க. புலி வருது கதை மாதிரி ரொம்ப நாளா ஒரு கதை சொல்லிக்கிட்டு இருந்தார். இந்தா வந்துட்டேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. ஒரு ஸ்டேஜ்ல நமக்கு இது ஒத்து வராதுன்ற ஞானம் கிடச்சிது. மனுசன் பொழச்சிக்கிட்டாரு. உடம்பு சரியல்லைன்னு சொல்லிட்டு ஆட்டய விட்டு விலகிட்டார். ஆனா படம் மட்டும் அடுத்தடுத்து தொடர்ந்து வந்துகிட்டு இருக்கு. ஏம்பா, உடம்பு சரியில்லைன்னு சொன்னியே .. அதனால அரசியலுக்கு வரலைன்னு சொன்னியே. ஆனா இப்போ மட்டும் தொடர்ந்து நடிக்க முடியுதேஅப்டின்னு யாரும் புத்திசாலித்தனமா கேட்க நம்ம கூட்டத்தில யாருக்கும் அறிவில்லையே. அவருக்குத் தெரியும். நடிச்சா அதுவும் அவர் செய்றதுதான் இஸ்டைல் அப்டிம்பாங்க. (நாய்க்கு பிஸ்கட் போடுறது மாதிரி சிகரெட்டைத் தூக்கிப் போட்டு உதட்டால கடிச்சாரா ... அப்பவே நம்ம ஆளுக .. அடடா, இதுல்ல ஸ்டைல் அப்டின்னாங்க. அப்பவே நம்ம நாடித் துடிப்பு அந்த பெருசுக்குப் புரிஞ்சிருச்சி) அதுனால நாலு படத்தில நடிச்சமா .. பிள்ளை குட்டிகளுக்குக் காசு சேர்த்தோமான்னு தோணிச்சு. அரசியல் சோலிய முடிச்சிட்டு காசு சோலிய பாக்க வந்துட்டாரு.

ஒரு பெருசின் ஆட்டம் இப்படி முடிஞ்சிது.

அடுத்த பெருசு. திரைத்துரையில் உள்ள அத்தனையையும் கரச்சிக் குடிச்ச ஆளு. அதோடு நிறுத்தியிருக்கலாம். அவரோட சொந்த அண்ணனே சொன்னாரு – இவரு தேவையில்லாம அரசியலுக்குள்ள போக வேண்டாம்னாரு. பெரியவங்க சொன்னா கேக்கணும்ல. கட்சிக்கு நல்ல பெயர் கூட வச்சாரு. அதோட சரி. கட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுத்தப்பவே தெரிஞ்சிது இந்த ஆட்டம் ஒரு செல்லாத ஆட்டம்னு. சினேகிதன் பாவம் .. பாட்டெழுதிக்கிட்டு இருந்தாரு. அவருக்கு ஒரு போஸ்ட். அந்த அம்மா ஸ்ரீ ப்ரியா. அவங்களுக்கு ஒரு போஸ்ட். ஒரு தேர்தலையும் சந்திச்சாங்க. டார்ச் லைட் வெளிச்சம் போதலை. விக்ரம் படம் வந்திச்சு .. காசும் ஏறுச்சு. அந்தப் பெருசு மாதிரி இந்தப் பெருசும் படம் பண்ண ஆரம்பிச்சாச்சு. நாமளும் பொழச்சோம்.

இரண்டாம் பெருசின் ஆட்டமும் இப்படி முடிஞ்சிது.

அடுத்து வந்தாரய்யா நம்ம வெற்றி, அதாவது விஜய். சினிமாவில ஒரே டெம்ப்ளேட். அதுவும் மக்களுக்குக் கன்னா பின்னான்னு பிடிச்சுப் போச்சு. அது எப்டின்னு யாருக்கும் தெரியலை. அட .. எங்க வீட்லயே .. என் பேத்திகள் தமிழே பேசாதுக. தமிழ்ப் படம் பார்த்ததே அதிகமா இருக்காது. ஆனா உங்களுக்குப் பிடிச்ச நடிகர் யாருன்னா இந்த ஆளு பேரைச் சொல்லுதுக. என்ன மந்திரமோ என்ன மாயமோ! அட .. பக்கத்து வீட்டுப் பையன்.. புத்திசாலிப் பய. IIMல படிச்ச பயல். ஆனால் விஜய் படத்துக்கு FDFS என்பான். என்னத்த சொல்ல!

இந்த ஆளுக்கு CM பதவி மேல கண்ணு. அதுவும் சினிமாவில இருந்த வர்ரவங்க எல்லோரும் நேரே அப்படியே CM ஆகிற கனவுல தான் வர்ராங்க. எம்.ஜி.ஆர். ஒரு ஆள் மட்டும் தப்பிப் பொழச்சி, இன்னும் நம்ம உயரை வாங்குறார். ஏன்னா, அவர் மாதிரி எல்லோரும் CM ஆகணும்னு துடிக்கிறாங்க.

இவரு டாப் ரேங்கில் இருந்து அப்படியே அனைத்தையும் உட்டுட்டு அரசியலுக்கு வந்திருக்காரு. சினிமா வசனமெல்லாம் யாரோ எழுதிக் கொடுக்கிறத எழுத்தைக் கூட்டி ஒரு மாதிரி வாசிச்சாரு. 26 தேர்தல் களத்தில் குதிக்கிறேன்னு சொல்லிட்டு குதிச்சாரு. பார்த்துக் குதிச்சிருக்கலாம். கரூர் நிகழ்ச்சியில் மூக்கு ஒடஞ்சி போனது மாதிரி தெரியுது. ஆனா அவர் படைபெருசா தெரியுது. அதெல்லாம் ஒட்டா மாறுமான்னு தெரியலை. அதுவும் இந்த மனுசன் காரவன் உள்ள உக்காந்து, மணிரத்னம் படத்தில வர்ரது மாதிரி light and dark lighting தனக்குத்தானே கொடுத்ததை ஒரு வீடியோவில பார்த்தேன். Narcist .. அப்படி ஒரு ஜாலியா அந்த lighting கொடுத்ததைப் பார்த்தேன். அதன் பின்னாலிருந்த அர்த்தம் எனக்கு அனர்த்தனமாகத் தோன்றியது. சின்னப் பிள்ளைத்தனமாகவும் தெரிந்தது.

41 பேரு செத்தாச்சு. என்னைப் பொருத்த வரை அவருக்கு வந்த கூட்டம் அவருக்கே பூமராங் மாதிரி எதிர்த்து அடிச்சிருச்சி. நல்ல புத்திசாலியாக இருந்து, இதாண்டா சான்ஸ் என்று சொல்லி அரசியலை விட்டு விலகி, லோகேஷ் இயக்கம், அனிருத் ம்யூசிக் அப்டின்னு போய்ட்டு காசு பார்க்க போனால் புத்திசாலித் தனம்.

முந்திப் போன இரு பெருசுகளும் வழியைக் காமிச்சிருக்காங்க. அந்த வழியா இவரும் போனா அவருக்குக் காசு செழிக்கும். நமக்கு வாழ்வு பொழைக்கும்.

என்ன நடக்குமோ ...?