Monday, October 13, 2025

1350. என் கதை – 4 A TOUCH OF PHILOSOPHY




*



இரண்டு வயதில் அம்மாவை இழந்து, ஐந்து வயது வரை கிராமத்து வாழ்க்கை வாழ்ந்து, அந்த வயதில் அப்பா மறுமணம் செய்ததும் நாங்கள் மூவருமாக அப்பா வேலை செய்து கொண்டிருந்த மதுரைக்கு வந்து புது வாழ்க்கையை ஆரம்பித்தோம். ஐந்தாம் வகுப்பு சென்றதிலிருந்து ஒரு புதிய பொறுப்பு வீட்டில் எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்பாவும், அம்மாவும் காலையில் 5 மணிக்கெல்லாம் அருகில் இருக்கும் புனித மரியன்னை கோவிலுக்கு பூசை பார்க்கப் போவார்கள். அப்போதே என்னையும் எழுப்பி விட்டாலும் நான் தூக்கத்திலே தான் இருப்பேன். அப்பா கோவிலிலிருந்து home tuition போய் விடுவார்கள். அம்மா வந்து மீண்டும் எழுப்ப, நான் ஆறுமணி பூசைக்குப் புறப்பட்டுப் போவேன். ஐந்தாம் வகுப்பு வந்த பின் கொடுக்கப்பட்ட புதிய பொறுப்பின்படி நான் கோவிலுக்கு ஒரு தூக்குப் பாத்திரத்துடன் போவேன், பூசை முடிந்ததும் அங்குள்ள குருமார்கள் விடுதியில் உள்ள மாட்டுப் பண்ணையிலிருந்து வீட்டுக்குப் பால் வாங்கிக் கொண்டு போகவேண்டும்.

வீட்டிலிருந்து கோவிலுக்குப் போகும் தூரம் ஒரு கிலோ மீட்டர் இருக்கும். நாங்கள் இருந்தது தெற்கு மாரட்டு வீதி. இந்த வீதிக்கு இணையாக வெளிப்பக்கம் அல்லது தெற்குப் பக்கம் தெற்கு வெளிவீதி இருக்கும். அது பெரிய வீதி. பஸ் போக்குவரத்து எல்லாமே அந்த வீதியில் தான். வீட்டிலிருந்து அரை கி, மீட்டர் தூரத்திலிருந்த தவுட்டுச் சந்தையைத் தாண்டியதும் இந்த இரண்டு வீதிகளும் இணைந்து ஒன்றாகி விடும். முதல் அரை கி,மீ. தூரத்தில் நான் காலையில் போகும்போது அநேகமாக ஆட்களே இருக்க மாட்டார்கள். விரைவாகப் போவதற்காக ஒரு புது டெக்னிக் கண்டுபிடித்து வைத்திருந்தேன். ஏதாவது ஒரு சிறு கல்லை காலால் எத்திக் கொண்டே போனால் போகும் தூரமே தெரியாது. இந்த வீதி வெளி வீதியோடு ஒன்றானதும் ஒழுங்காக பிளாட்பாரத்தில் ஏறிப் போகணும். இந்தப் பழக்கம் வெகு நாள் நீடித்தது.

இளங்காலையில் தனியாக நடந்து போகும்போது மனசுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடும். அதில் முக்கியமான எண்ணம் என் அம்மாவைச் சுற்றி வரும். இறப்பு என்பது பற்றி எல்லாம் தெரிந்திருந்தது. அப்படியானால் இனிமேல் அம்மாவைப் பார்க்கவே முடியாதா என்ற ஏக்கம் அந்த வயதில் மிக அதிகமாக இருந்தது. அம்மா உயிரோடு இருந்திருந்தால் ஒரு வேளை நான்  அம்மாவைப் பற்றி அதிகமாக நினைத்திருக்க மாட்டேன். அந்த ஏக்கம் ஏதும் இருந்திருக்காது. ஆனால் இழந்ததால் எனக்கு அம்மா நினைப்பு மிகப் பல வருடங்கள் மனதில் அடிக்கடி தோன்றும்.

காலையில் தனியாக நடக்கும் அந்த வயதில் அம்மாவைப் பற்றிய நினைவும் ஏக்கமும் மிக அதிகமாக இருந்தன. வீட்டில் எல்லோருடன் இருக்கும்போது இல்லாத நினைவுகள் இந்தத் தனிமையில் நிறையவே வந்து என்னைச் சூழ்ந்து கொள்ளும். அந்த வயதில் -பத்திலிருந்து அநேகமாக பதினைந்து வயது வரை அப்போதெல்லாம் மனதில் ஒன்று வழக்கமாகத் தோன்றும். நான் செல்லும் வழியில் சரியாகப் பாதி வழியில் ஒரு தெரு முக்கில் பத்திரகாளியம்மன் கோவில் ஒன்று உண்டு.  அந்தக் கோவில் வாசலுக்கு முன்னால் இரண்டு தூண்களில் டோம் லைட் என்று சொல்வோமே அது போன்ற இரு வெள்ளை மின்சார விளக்குகள் இருக்கும். அந்த்த் தூண்களில் உட்கார்ந்து கொள்ள இடமிருக்கும். நடந்து போகும்போது சில சமயங்களில் அந்தத் திண்டின் மீது உட்கார்வேன். என்னவோ ஒரு ஞாபகம். அந்த விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்திருந்த போது முதல்  தடவையாக ஒரு புதிய எண்ணம் வந்தது போல் நினைக்கின்றேன்..

இப்போது நான் உயிரோடு இருக்கிறேன்; அம்மா என்னை விட்டுவிட்டு இறந்து விட்டார்கள். ஆனால் இதெல்லாம் உண்மையல்ல. நான் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு நாள்  நான் விழித்தெழுவேன். அப்போது அம்மா அங்கே இருப்பார்கள். என்னை அணைத்துக் கொள்வார்கள். இப்படி ஓர் எண்ணம் ஓடும். ஏனோ இதில் எனக்கொரு தனி சுகம். மீண்டும் .. விழித்தெழுந்ததும் .. அம்மாவைப் பார்த்து விடுவேன் என்ற நம்பிக்கை மனதிலிருக்கும்..

இந்த நினைவு எத்தனை ஆண்டுகள் என்னைச் சமாதானப்படுத்தியது என்பது நினைவில்லை. வயதாக வயதாக இந்த நினைவுகள் மங்க ஆரம்பித்தன. பத்துப் பன்னிரெண்டு வயதில் தோன்றிய இந்த நினைவுகளை நான் அடியோடு மறந்து விடவில்லை. ஆனால் நாற்பது வயதில் இன்னொன்று நடந்தது. இப்போது தாவோயிஸம் (Daoism) என்ற சைனா கலாச்சாரத்தில் உள்ள சுவாங் த்சு (Chuang Tzu) என்பவரும், லாவோ த்சு (Laou Tzu) என்பவரும்  இணைந்து எழுதிய “சுவாங்சீ” என்ற நூலில் சொல்லப்பட்ட ஒரு கருத்தோடு எனக்குச் சிறு வயதில் வரும் நினைவும் ஒன்றாக  இருப்பதாக எனக்குத் தோன்றியது. இந்த இருவரில் சுவாங் த்சு என்பவர் ஒரு நாள் தூக்கத்தில் ஒரு கனவைக் காண்கிறார். கனவில் ஒரு வண்ணத்துப் பூச்சி அங்குமிங்கும் பறந்து திரிகிறது. தடையேதுமில்லாமல் பறக்கிறது. சுவாங் த்சு விழிக்கின்றார். இப்போது சுவாங்சீ அங்கே இருக்கிறார். வண்ணத்துப் பூச்சி அங்கே இப்போதில்லை.

சுவாங் த்சு மனதில் ஒரு ஐயம் எழுகிறது. அவர் தூங்கும் போது வண்ணத்துப் பூச்சி பறந்து திரிந்தது. விழித்ததும் அங்கே மனிதனாக சுவாங் த்சு மட்டும் இருக்கிறார். அவருக்கு வந்த  ஐயம் - மனிதனாக இருந்து ஒரு வண்ணத்துப் பூச்சியைக் கனவில் கண்டேனா?; அல்லது ஒரு வண்ணத்துப் பூச்சியின் கனவில் நான் ஒரு மனிதனாக இருக்கின்றேனா? இந்த எழுத்துகளுக்குப் பின்னால் இருக்கும் பல்வேறு கருத்துகளுக்கு தத்துவ விளக்கங்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் முதன் முதல் இதை நான் வாசித்த போது, எனக்குச் சிறு வயதில் தோன்றிய நினைவுகள் மீண்டும் வந்தன. ஒரு ஆச்சரியம். பெரும் தத்துவ அறிஞர்கள் சொன்ன ஒரு விஷயத்தின் ஒரு பகுதியை நான் என்னையறியாமலேயே மிகச் சிறு வயதிலேயே ஏறத்தாழ அதே போல் நினைத்திருக்கின்றேனே என்று ஆச்சரியப்பட்டேன். இந்த ஆச்சரியம் வயது முதிர்ந்த பிறகும் மேலும் அதிகமாகத் தொடர்ந்தது என்பது இன்னொரு ஆச்சரியம்.

பத்து வயதில் தெரிந்ததும்,  நாற்பது வயதில் தெரிந்ததும் ஒன்றாக இருந்தது எப்படி?  இது போன்ற ஒரு தத்துவத் தொடர்பு கிடைத்தது என்று நாற்பதுகளில் ஆச்சரியப் பட்டேன். ஆனால் எழுபதுகளில் கேள்விப்பட்ட இன்னொரு தத்துவமும் இதனோடு தொடார்பு கொண்டிருப்பதைப் பார்த்து மேலும் எனக்கொரு பெரும் ஆச்சரியம்.

நெடுநாட்களுக்கு மாலையில் நடக்கும் போதெல்லாம் ராஜாவே என் கூட வந்து கொண்டிருந்தார். பின் சில ஆண்டுகள் கழித்து பவா செல்லதுரை நெருங்கி கூடவே வந்தார். அது சில மாதங்கள். அடுத்து மதுரைக் கல்லூரி முதல்வர் பேரா. முரளி உடன் வர ஆரம்பித்தார். ஒரு மணி நேரத்திற்குத் தொடர்ந்து பேச எத்தனை மணி நேரம் தயாரிப்பில் இருப்பாரென்று நினைத்துப் பிரமித்திருக்கிறேன். அவரது  “பேச்சொளி” (புதியதொரு சொல்லை உருவாக்கியுள்ளேன். ) ஒன்றில்  ஆல்பெர் காம்யூ (Albert Camus) என்பவரைப் பற்றியும் அவரது தத்துவமான  அபத்தம்’ (absurdity) பற்றியும் பேசினார்> இதுவரை  அதை மூன்று முறையாவது கேட்டிருப்பேன்.

நம்ம பெரியார் சொன்னதை வேறு தத்துவ மொழியில் நீட்டி முழக்கிச் சொன்னது போலிருந்தது.  ஒரே வார்த்தையில் பெரியார் சொன்னார்: “வெங்காயம்”. அதை உறித்துப் பார்த்தால் என்ன மிச்சமாகும்? ஏதுமில்லை! நம் வாழ்வும் அப்படித்தான். உறித்துப் பார்த்தால் ஒன்றுமில்லை. ஏன் ஓடுகிறோம்?; ஏன் உழைக்கிறோம்?; ஒரு வழியில் சிந்தித்தால் இல்லாத ஒன்றைத் தேடி ஓடுகிறோமோ? வாழும் வாழ்க்கையில் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா? என்னதான் கிடைக்கிறது இறுதியில். முரளி காம்யூ எழுதிய ‘Stranger’ என்ற மிகவும் அதிகாமக மொழிபெயர்க்கப்பட்ட  நூலைப் பற்றி சொல்லியிருந்தார். அந்நியன்என்று தமிழில்  வந்திருக்கும் நூலையும் வாசித்து விட்டேன். விசித்திரமான நடை. எனக்கென்னவோ தஸ்தயேவ்ஸ்கி எழுதிய – நானும் மொழிபெயர்த்துள்ள – ‘Notes from Underground’ (“நிலவறையில் இருந்த சில குறிப்புகள்”) நடை போலவே இதிலும் இருந்தது. இரண்டுமே நினைவோட்டத்தைப் பதிவு செய்யும் நடையில் உள்ளன. ஒரு வெறுமை அந்த நடையில் இருந்தன. மனம் தளர்ந்த நிலை. பொருளில்லா வாழ்க்கை அங்கே இடம் பிடித்தது. தஸ்தயேவ்ஸ்கி நூலின் பின்புலத்தில் இருளும், கடும் பனியும் இருந்தன; காம்யூவின் நூலில் கூச வைக்கும் சூரிய ஒளியும், வெம்மையான வெயிலும் இருந்தன.

என் சிந்தனை ஓட்டத்தை மீண்டும் ரீவைண்ட் செய்தேன். பத்து வயதில் இப்போது வாழும் வாழ்க்கை ஒரு தூக்கமென்று நினைத்தேன்; விழித்தால் அம்மா வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கைக் கோடு தெரிந்தது போலிருந்தது. இது அன்றைய அறியாத வயதில் வந்த நினைப்பும், நம்பிக்கையும். 40 வயதில் அதே போல் இரு வேறு நினைவுகள் அந்த தத்துவ அறிஞருக்கு. அதில் எது உண்மை; எது கற்பனை என்ற கேள்வியைத் தனக்குத் தானே எழுப்புகிறார். 70 வயதில் காம்யூ வருகிறார். அவர் வாழ்க்கையே ஓர் அபத்தம் என்கிறார். ஏதோ ஒரு பூஜ்யத்திற்கு உள்ளே உள்ள ஒரு ராஜ்யத்திற்குள் சுற்றி வருவது போல் தெரிகிறதே.

எது உண்மை; எது பொய்மை?

உண்மையில் வாழ்க்கை என்பதுதான் என்ன?

விளக்கங்கள் குழப்புகின்றன.

வயதாகி விட்டதால் வரும் குழப்பங்கள் என்று தூக்கியெறிய முடியாது. காம்யூவும், தாவோயிச தத்துவ அறிஞரும் வயதான காலத்தில் இவ்வாறு சிந்திக்கவில்லையே!

 










No comments:

Post a Comment