Friday, June 24, 2005

21. நனி நாகரீகம்...ரொம்ப தூரம்.

இன்றைய (25.06.'05 வெள்ளிக்கிழமை) இந்து செய்தித்தாளைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது - வந்திருந்த புகைப்படத்தில், நடுவில் சோனியா காந்தி இருக்க இருபுறமும் லல்லுவும் பஸ்வானும். எல்லோர் முகத்திலும் சிரிப்பு. தில்லியில் பஸ்வானின் மகள் திருமணத்தில் எடுத்த படம்.

பொதுவாகவே நமது அரசியல்வாதிகள் மத்தியில் பரஸ்பர உறவுகள் அவர்களின் கட்சி அரசியலைப் பொறுத்தே இருக்கும். இன்றிருக்கும் அரசியல் சூழ்நிலையைப் பொறுத்ததே இன்றைய உறவுகள்; நேற்று வரையிருந்த உறவுகளைப் பற்றி எந்தவித கவலையுமின்றி இன்று அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது நமக்குத் தலை சுற்றுவது வழக்கம். இன்றைய 'அம்மையார்' நேற்று 'சகோதரி'யாக இருந்திருக்கலாம்; நேற்றைய 'கொலைகாரன்; இன்றைக்குத் 'தம்பி'யாக இருக்கலாம்; நாமும் அது 'காலத்தின் கோலம்' என்று தலையிலடித்துக்கொண்டு நம் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நண்பர்களாக ஒரு காலத்தில் இருந்து இப்போது எதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு அரசியல்வாதிகள் தமது அரசியல் மாச்சரியங்களை மறந்து ஒருவர் வீட்டு திருமணத்திற்கு அடுத்தவர் வரும் இந்த நல்ல பண்புக்காக அவர்களை வாழ்த்தத்தான் வேண்டும்.

அவர்களை வாழ்த்தும் அதே நேரத்தில் நம்மூர் அரசியல்வாதிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. இரண்டு திராவிட கட்சிகளுமே "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்". யார் வீட்டுக் கல்யாணமாயினும் இவர்களுக்கு அவை கட்சி மேடைகள்தான். திருமணநாள் இரு வீட்டாருக்கும் எவ்வளவு முக்கியமான, மகிழ்ச்சிகரமான் நாள்; அன்று எதற்கு அங்கு அரசியல்? அழைப்பவர்களைக் குறை சொல்வதா; அழைக்கப்பட்டவர்களைச் சொல்வதா; இதை ஒரு வழக்கமாக்கிவிட்ட திராவிடக்கட்சிகளைக் குறை கூறுவதா, தெரியவில்லை. (மற்றொன்றும் நினைவுக்கு வருகிறது; நாம் பெற்ற பிள்ளைக்கு, காலமெல்லாம் நாம் நம் பிள்ளைகளைக் கூப்பிடுவதற்குரிய பெயரை யாரோ அவசர அவசரமாக வைத்துவிட்டுப் போகும் அவலத்திற்கு யாரை நொந்துகொள்வது?)


இந்த விஷயங்களில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையொன்றாலும், புரட்சித்தலைவி காலத்தில் நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் சமூகப்பண்புகள் மிகவுமே நீர்த்துப்போய்விட்டன. சுனாமி மீட்பு நிதியாக தன் தந்தையின் பங்கு என்று ஸ்டாலின் பணவோலையுடன் முதலமைச்சரைக் கண்டபோது, கலைஞருக்குத் தன் வாழ்த்துக்களைச் சொன்னதாக வந்த பத்திரிக்கைச்செய்தி ஒன்று மட்டுமே நான் இதுவரை நம் முதலமைச்சர் சாதாரணமாக நம்மைப்போன்று நடந்துகொண்டதாக அறிகிறேன். மற்றபடி அவருக்கும் இதுபோன்ற சமூகப்பண்புகளுக்கும் (etiquettes)வெகு தூரம் என்பது மட்டுமின்றி அவரது கட்சிக்காரர்களுக்கும் அவைகளை வெகு தூ.....ரமாக்கிவிட்டார். நடந்து முடிந்த காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் தோற்ற தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளருக்குக் கை கொடுத்து வாழ்த்தியதாகச் செய்தித்தாள்களில் வாசித்தது சந்தோஷமாக இருந்தது. நிச்சயமாக அதற்காக தி.மு.க. தலைமையிடம் அவரைத் தண்டித்திருக்காது. தண்டிக்காது என்பதால்தான் அவர் அந்த நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார். ஆனால், ஒருவேளை அ.தி.மு.க. தோற்று அவர் எதிராளிக்குக் கை கொடுத்திருந்தால் ... ? இங்கே, கட்சி வேறு வேறாக இருந்தால் அப்பா-பிள்ளைகளாக இருந்தாலும் அடித்துக் கொண்டால்தான் அமைச்சர் பதவி கிடைக்கும். இந்த லட்சணம் சாவு வீடு வரை வந்து விடுவதுதான் மிகவும் வேதனை. பழைய நண்பரோ,மாஜி கட்சிக்காரரோ - யாராயிருந்தாலும், செத்தால் அங்கே போய் மாலை போட்டால் நாளைக்கு நமக்கு 'என்ன' கிடைக்கும் என்று பயப்படவேண்டிய நிலையில் உள்ள நமது அரசியல்வாதிகளைப் பார்த்து சிரிப்பதா; அழுவதா?


நனி நாகரீகம் பற்றி அய்யன் சொன்னதை எல்லாம் மேற்கோள் காட்டும் நமது அரசியல்வாதிகள் இன்னும்
கொஞ்சம் பண்போடு இருக்க முயற்சிக்கலாமே. ம்ம்ம்..இப்போதைக்கு முடியாதுதான்.

4 comments:

வீ. எம் said...

நல்ல பதிவு தருமி...! வாழ்த்துக்கள்.

//மற்றொன்றும் நினைவுக்கு வருகிறது; நாம் பெற்ற பிள்ளைக்கு, காலமெல்லாம் நாம் நம் பிள்ளைகளைக் கூப்பிடுவதற்குரிய பெயரை யாரோ அவசர அவசரமாக வைத்துவிட்டுப் போகும் அவலத்திற்கு யாரை நொந்துகொள்வது?)//
நல்லா சொன்னீங்க... எப்போ தான் மாறுமோ !??

Thekkikattan|தெகா said...

தருமி, உங்களின் நியாயமான கோபம் இந்த சமூகப் பண்பாடு ரீதியில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நமது மக்கள் இன்னும் அந்த primitive stageலேயே இருப்பார்களோ. தனது எமொஷனை அப்படியே வெளிக்காட்டிக் கொள்வதை வைத்துப் பார்க்கும் பொழுது அப்படித்தான் தெரிகிறது.

இங்கு ஜனாதிபதி தேர்தலின் பொருத்து நடக்கும் தர்க்கத்தில் எது போன்ற கேள்விகளை கேட்டு ஒருவரின் மேல் ஒருவர் எதனை அள்ளி அடித்துக் கொண்டாலும், இருதியில் சிரித்த முகத்துடன் எப்படி அவர்களால் கை குழுக்கி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லிக் கொள்ள முடிகிறது? ரொம்ப்....ப தூரத்தில் நாம் இருக்கிறோம் அந்த சபை நாகரீகத்தை அடைய என்று நினைக்கிறேன்.

சுட்டி 21. நனி நாகரீகம்...ரொம்ப தூரம்.

தருமி said...

இந்தத் திராவிடச் சூ(சு)ழலிலிருந்து விடுபடும் நாளும் அருகில் இல்லையென்றே தோன்றுகிறது.

தருமி said...

இப்பவும் அவனைப் பார்த்து நீ சிரிச்சே... ஆஹான்னு மீசையை முறுக்குறாங்க நம்ம ஆளுக ...

Post a Comment