Monday, May 01, 2006

157. தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள்

Image and video hosting by TinyPic


நம் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப்பொருத்தவரை அது நமது தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள்தான். அவர்கள் நம் தமிழ்க் கலாச்சாரத்தைக் கடைப்பிடித்து, காப்பாற்றுவது போல் வேறு யாருமே செய்ய முடியுமா என்ன?

நம் பழைய தமிழ்ப் படங்களில் ராஜா ராணி படமென்றால் குதிரையில், சமூகப் படமென்றால் ஒரு ஃபியட் காரில் கதாநாயகர் வருவார். குதிரைக்கோ, காருக்கோ தண்ணீர் தாகம் எடுக்கும். உடனே அங்கே ஒரு நீர் நிலை. தண்ணீர் எடுக்கப் போவார்.கதாநாயகி குடத்தோடு வந்து அங்கே மிகச்சரியாக ‘பொத்’தென்று விழுவார். நம்ம தலை ‘படாரென’த் தூக்குவார். இனி ‘தொட்ட’ பாவம் அவரை விடாது. ‘என்னைத் தொட்டுத் தூக்கியவரே இனி என் நாதர்’ என்று நாதி சொல்லிவிடுவார். அனேகமாக இதை அடுத்து ஒரு one-night stand இருக்கும்; நாதியும் கர்ப்பமாகி விடுவார். அதெல்லாம் விடுங்க..தொட்டவரைக் கணவராக ‘வரிக்கும்’ அந்தக் கற்புக்கரசிகளின் வாயிலாக நம் இயக்குனர்கள் நம் தமிழ்ப் பெண்டிரின் கற்பை எப்படிக் காப்பாற்றி விட்டார்கள், பாருங்கள்!

நாதா, நாதி stage போய், ‘மாமா’ stage, அடுத்து அத்தான் stage வந்தது. அதிலும் இந்தக் கற்புக் கதைதான் தொடர்ந்தது. chain snapping என்பதற்குப் பயந்து தாலியை வீட்டில் பத்திரமாய் கழற்றிவிட்டு, பதிலாக ஒரு பித்தளைச் சங்கிலியைத் தாலிமாதிரி போட்டுக் கொள்வதோ, வெயிலுக்கும் இல்லை சாதாரணமாகவே கூட வீட்டில் தாலியைக் கழற்றி வைப்பதோ இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாய் ஆகிவிட்டது. அதில் ஏதும் தவறு இருப்பதாகவும் எனக்குப் படவில்லை. ஆனால் நம் இயக்குனர்களுக்கோ இன்னும் அந்த தாலி செண்டிமெண்ட் எக்கச்சக்கமா ஒர்க் அவுட் ஆகுது. தாலியை அறுத்துவிடுவது போல் வில்லன் பக்கத்தில் வந்தாலே அதே நேரத்தில் தாலி கட்டியவன் உயிரே போய்விடுவது போல நம் கதாநாயகிகள் போராடுவார்கள். அதைவிட, (சின்னத்தம்பியில்) ஒரு வயதான கைம்பெண் - அவரின் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றினாலே ஏதோ அமிலம் ஊற்றினது மாதிரியும், குங்குமத்தை நெற்றியில் இட்டாலே என்னவோ ஆனது மாதிரியோ, ஆகிவிட்டது மாதிரியோ நம் இயக்குனர்கள் செண்டிமெண்டை உருக்கி ஓடவிட்டு விடுவார்கள். தாலியை வீட்டில் கழற்றிவிட்டு திரையரங்கிற்கு வந்திருக்கும் நம் தமிழ்க் குலப் பெண்களும் பதைபதைத்து விடுவார்கள் என்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

மாங்கா புளிச்சுதோ, வாய் புளிச்சுதோன்னு இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள் என்று நீங்கள் சொல்லலாம்.
ஆகவே கொஞ்சம் தனித் தனிப் படங்களைப் பார்க்கலாமா?

பெளர்ணமி அலைகள்: நல்ல படம். இளம் விதவை (அம்பிகா)வும், வீட்டுக்கு வாடகைக்கு வந்த எழுத்தாளனும் (சிவகுமார்) நன்கு பழக, அம்பிகாவின் மாமனார் தன் மருமகள் மறு திருமணம் செய்துகொண்டால் நல்லது என்று நினைக்க, மாமியார் அதைத் தவறு என்று கணவனிடம் வாதாடுவார். விதவைத் திருமணத்தைப் பற்றிய சமூகத்தின் இரு நிலைப்பாடுகள் அந்த இரு பாத்திரங்கள் மூலமாய் அழகாய் விவாதிக்கப்படும். மாமனாரின் கருத்து வெல்கிறது. இதுவரை படம் பார்க்கும் அனைவருக்குமே மறு மணம் என்பது ஆதரிக்கப் பட வேண்டிய ஒன்று என்ற மனநிலையை வெற்றிகரமாக நிறுவிய இயக்குனருக்கு (யாரென்று மறந்து போய் விட்டது) அதற்குப் பிறகு நம் சாபக்கேடான filmy compromises நினைவுக்கு வந்து அச்சுறுத்த, அதனால் கதாநாயகன் குங்குமம் வைத்ததும் தன் நெற்றியில் நெருப்பினால் சுட்டுக்குகொண்டு பாவப்பரிகாரம் செய்து கொள்வதாக முடித்து விடுவார். மறுமணம் செய்து கொண்டால் என்ன ஆகும் நம் தமிழ்ப் பண்பாடு என்று நினைத்திருப்பார் அந்த இயக்குனர்.

இதற்கு விமர்சனம் எழுதிய குமுதம் தன் ‘புத்திசாலித்தனத்தை’ நன்கு காண்பித்திருந்தது. பெளர்ணமியன்று கடலில் அலைகளின் தாக்கம் அதிகமாக இருப்பது போல் அவ்விதவைப் பெண்ணின் வாழ்க்கையிலும் சில உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்ற பொருளில் இயக்குனர் அழகாக வைத்த பெயர் என்பது புரியாமல், இந்தப் படத்துக்கும் பெளர்ணமி அலைகளுக்கும் என்ன தொடர்போ என்று தன் விமர்சனத்திற்கு முட்டாள்தனமாக முத்தாய்ப்பு வைத்திருந்தது.

அந்த ஏழு நாட்கள்: இயக்குனர் பாக்யராஜ். கல்யாணமான உடனேயே கணவனுக்கு (ராஜேஷ்) தன் மனைவி (அம்பிகா) ஏற்கெனவே காதலித்த கதை தெரிய, காதலனையும் (பாக்யராஜ்) தேடிப்பிடித்து அவனிடம் ஒப்படைக்கும்போது காதலன் தாலியைக் காட்டி..blah…blah…

இதில் வேதனை என்னவென்றல் பாக்யராஜ் இப்படத்தின் கிளைமேக்ஸாக இரு முடிவுகள் - ஒன்று தாலி செண்டிமெண்ட்; இன்னொன்று காதலனோடு சேர்ப்பது - வைத்திருந்தாராம். முடிவெடுக்க தன் இயக்குனர் பாரதிராஜா, சீனியர் இயக்குனர் பாலச்சந்தர் இருவரையும் அழைத்து ப்ரிவியூ காண்பித்து இரண்டில் எதை வைக்கலாம் என்று கேட்டு, தாலி செண்டிமெண்ட்தான் என்று மூவருமாகத் தீர்மானித்தார்களாம். இதே டைரக்டர்கள்தான் ‘மனசுல ஒருத்தன சுமந்துகிட்டு இன்னொருத்தனோடு எப்படி வாழ்றது’ன்னு பக்கம் பக்கமா வசனம் எழுதவும் செய்வாங்க… கேட்டா இப்படி படம் எடுத்தாதான் படம் ஓடும் அப்டின்னு ஒரு தியரி…நம்ம ஆளுக சிவாஜியின் ‘வசந்த மாளிகை’ படத்துக்கு சுப முடிவைத் தமிழ் நாட்டுக்கும், சோக முடிவை கேரளாவிற்கும் வைத்து ஒரே படத்துக்கு இரண்டு க்ளைமேக்ஸுகள் செய்தவர்கள்தானே!

புதுப் புது அர்த்தங்கள்: இயக்குனர் திலகம் பாலச்சந்தரின் படம். இரண்டு ஜோடிகள். தத்தம் துணைகளால் அல்லல் பட்டு கதாநாயகனும் (ரகுமான்), கதாநாயகியும் தற்செயலாகச் சந்தித்து தங்கள் கதைகளைப் பகிர்ந்து, தங்களுக்குள் அன்பை வளர்த்துக் கொண்டு திருமணத்திற்குத் தயாராகும் நிலைக்கு வருகிறார்கள். இங்கு நம் தமிழ்ப் பண்பாடு குறுக்கே வந்து விழுந்து விடுகிறது. பைத்தியமாகிவிட்ட தன் மனைவியிடம் கதாநாயகனும், காலிழந்த கணவனை - அந்தக் கொடுமைக்காரக் கணவன் மனம்கூட திருந்தவில்லை; காலை மட்டும்தான் இழக்கிறான் - கண்டதும் ஓடிப்போய் தாங்கிக்கொள்கிறாள் நம் தமிழ்க்குலப் பெண். இவர்கள் மீண்டும் சேருவதற்கு எந்த நல்ல காரணங்களும் சொல்லப் படுவதில்லை. இதில் பெரிய சோகம் அந்தப் படத்திற்கு வைத்த தலைப்பு. எந்தவித சமூக பொறுப்பும் அற்ற ஒரு கதை - பெண்ணை ஒரு தனிஆளாக அல்லாது வெறும் ஒரு ஆணின் துணையாக மட்டுமே கருதும் கருத்தாக்கம்; கல்லானாலும் கணவன்..blah…blah… என்பதையே கட்டுறுத்தும் இந்தக் கதைக்கு எப்படி இந்தத் தலைப்பு பொருந்துகிறதோ எனக்குத் தெரியவில்லை.

இப்படியாகப் பல படங்கள்; ஒரே மாதிரியான கண்ணோட்டங்கள். சமூகம் என்னவோ தன் போக்கில் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும் இன்னும் தமிழ்க் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் (!?) கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் நம் இயக்குனர்கள். இந்த நேரத்தில் ஒரு வார்த்தை; நம்மில் பலருக்குமே இந்த ‘தமிழ்ப் பண்பாடு’ என்ற வார்த்தையில் ஒரு மயக்கம் உண்டு. அது ஏதோ உண்மை என்று நம்மை நினைக்க வைத்த பெருமை நம் தமிழ்ப் பேச்சாளர்கள், அரசியல்வாதிகள், முக்கியமாக நமது சினிமாக்காரர்களுக்கு உண்டு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொய்யை யார் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. உலகம் முழுவதும் இருக்கிற பண்பாடுதான் நம்ம ஊர்லயும். இங்க மட்டும் ஒழுக்கக் குன்றுகளாக மனிதர்கள் இருப்பது போலவும் மற்ற மக்கள் எல்லோரும் மாக்களாக உலாத்துவது போலவும் ஒரு பிரம்மை. இங்கே ஒருவன் ஒருத்தி என்றிருந்திருந்தால் சிலப்பதிகாரம் வந்திருக்காது; பிறன்மனை விழையாமை என்ற வள்ளுவ அதிகாரம் வந்திருக்காது. நாமும் மற்றவர்கள் போலவே நல்லதும் கெட்டதும் கலந்த குணக்காரர்கள்தான். நாம் ஒன்றும் ஸ்பெஷல் ஐட்டம் இல்லை.
Pathivu Toolbar ©2005thamizmanam.com


May 01 2006 11:09 pm சினிமா
118 Responses
மதி கந்தசாமி Says:
May 1st, 2006 at 11:23 pm
நச்!!!

ரொம்ப சின்ன வயதில் நீங்க மேல சொன்னமாதிரிச் சில தமிழ்ப்படங்களைப் பார்த்து + அம்புலிமாமா கதைகளையும் படிச்சு ஆம்பிளைகளோட உயிர், அவர்களின் மனைவிமாரின் தாலியில்தான் இருக்கோன்னு நினைச்சிருக்கேன். நிசமா! )

Sivabalan V Says:
May 1st, 2006 at 11:24 pm
//‘வசந்த மாளிகை’ படத்துக்கு சுப முடிவைத் தமிழ் நாட்டுக்கும், சோக முடிவை கேரளாவிற்கும் // Really?

Good Blog! Good analysis!!

செல்வன் Says:
May 1st, 2006 at 11:26 pm
நீங்கள் சொன்ன மேற்படி படங்களை எனக்கு பார்க்கவே பிடிக்காது.காரணம் அந்த தாலி சென்டிமென்ட் தான்.

ஆனா பாலச்சந்தரே கல்கி மாதிரி படங்களை எல்லாம் எடுத்தாரே?கொஞ்சம் வித்யாசமா சிந்திக்க முயன்றார்.படம் ஊத்தி மூடியதால் பீல்டை விட்டே போய்விட்டார்.

டீவி சீரியல்களில் தாலியை வைத்து பல புரட்சிகள் நடப்பதாக கேள்விப்பட்டேன்.அது பற்றி ஏதேனும் தெரியுமா

-/. Says:
May 1st, 2006 at 11:29 pm
இதிலே சேர்க்கவேண்டிய இன்னும் சில படங்கள்
நூல்வேலி,
சொல்லத்தான் நினைக்கிறேன்
மூன்றுமுடிச்சு
எந்த பாலசந்தர் படமென்றாலும்

குமரன் Says:
May 1st, 2006 at 11:29 pm
//ஆம்பிளைகளோட உயிர், அவர்களின் மனைவிமாரின் தாலியில்தான் இருக்கோன்னு நினைச்சிருக்கேன்//

:-) Me too….

DJ Says:
May 1st, 2006 at 11:42 pm

சின்னத்திரை இயக்குநனர்களும் இப்ப திரைப்பட இயக்குநனர்களை மிஞ்சும் அளவில் தமிழ்ப்பண்பாட்டைக் காக்க வெளிக்கிட்டுவிட்டாரக்ள் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்!

Padma Arvind Says:
May 2nd, 2006 at 3:10 am
தருமி, இரண்டு வாரம் முன்பு குமுதத்தில் திருமாங்கல்யத்தின் சிறப்பு பற்றி கட்டுரை படித்தேன். இந்த வாரம் சக்தி விகடனில் (தாலி இல்லை)திருமாங்கல்யம் அணிந்தால் நேரே மோட்சம்தானாம்.

ஷங்கர் Says:
May 2nd, 2006 at 3:41 am
தருமி,

அருமையான பதிவு. உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

-ஷங்கர்.

நந்தன் Nandhan Says:
May 2nd, 2006 at 3:51 am
அய்யா,

நம்ம கலாசாரக் காவல்களை இப்படி மண்னை கவ்வ விடலாமா
அதுவும் அந்த சின்னதம்பி சீன்….விட்டா கல்தோன்றி மந்தோன்றா காலத்துக்கே நம்மள கூட்டிடு போய்டுவாங்க…
இது தொடர்பா நான் ஆதி காலத்துல எழுதின ஒரு பதிவு இங்கே…

வசந்தன் Says:
May 2nd, 2006 at 4:14 am
நீங்கள் மாற்றாக வந்த சில புரட்சிகரப் படங்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
‘வீரா’வில் ரஜனி செய்தது மாபெரும் புரட்சி,
பாலுவின் ‘இரட்டை வால் குருவி’ அடுத்தபடி.

பார்த்தீபனின் புதிய பாதையை எல்லோரும் (குறிப்பாக ஊடகங்கள்) ஆகா ஓகோ என்று புகழ்ந்ததைப் பார்த்துவிட்டு இரண்டுவருடங்கள் முன்புதான் அப்படத்தைப் பார்த்தேன். அதுவரை, கமலுக்கு அடுத்தபடியாக விசாலமான சிந்தனையும் பல்திறமையும் கொண்டவராக பார்த்தீபனை நினைத்திருந்தேன்.

ஷ்ரேயா Says:
May 2nd, 2006 at 4:57 am
அப்டிப் போடுங்க தருமி.!!

இவங்க சென்டி”மென்டலை” இப்பிடி சொல்லிட்டேஏ..ஏ.. போகலாம். கைம்பெண் கட்டாயம் வெள்ளைதான் அணிஞ்சிருப்பாங்க(அணிஞ்சுக்கணும்!!). மஞ்சள்நீர் ஊத்தினா சேலை நிறம் மாறாது? நிறம் மாறினப்புறம் அவுங்க விதவை இல்லையே!!!

விஜய்யும் சிம்ரனும் நடிச்ச ஒரு படம்..கண்றாவி, 3 மணித்தியாலத்தை அநியாயமாக்கின இன்னொரு ப(ப்ப)டம். கதையெல்லாம் மறந்து போச்சு(நல்லதுக்குத்தான்! ) ஆனா, முடிவுலே குழந்தை அம்மா தாலியும் அப்பா கையையுமோ என்னவோ தன் ஒவ்வொரு கையாலே பிடிச்சு “அவங்களை இணைத்து வைக்கும். சுப(ஸ்ப)ம்!”

//பெண்ணை ஒரு தனிஆளாக அல்லாது வெறும் ஒரு ஆணின் துணையாக மட்டுமே கருதும் கருத்தாக்கம்;//

இதனாலேயே “மறுபடியும்” படம் கொஞ்சம் பிடித்திருந்தது.

suresh - penathal Says:
May 2nd, 2006 at 9:12 am
நீங்கள் சொன்ன படங்கள் எல்லாமே மிதவாதப்படங்கள் (பௌர்ணமி அலைகள்னு போட்டு நான் பாடும் பாடல் கதையை எழுதி இருக்கீங்களே?).

இதுலேயும் தீவிரவாதம் உண்டு - அதுதான் ஆன்மீகப்படங்கள் - இதுலே தாலி ஆடினால், மெழுகுவர்த்தி ஆடினால், குங்குமம் கலைந்தால் the rightful owner of the தாலி மரணிப்பது உறுதி. unless, of course, தெய்வீக குறுக்கீடு இல்லாவிட்டால் மட்டுமே. (எனக்கென்னவோ இந்தப்படங்களை தங்கள் கருத்துகளை மக்களிடம் பரப்புவதற்காக திராவிடர் கழகம் தான் sponsor செய்கிறதோ என்று ஒரு சந்தேகம் உண்டு.

தருமி Says:
May 2nd, 2006 at 12:38 pm
மதி,
உங்களுக்குச் சின்னவயதில் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து மீண்டு விட்டீர்கள். அந்த ‘மீட்பு’ இல்லாமல் எத்தனை ஜீவன்களோ இன்னும். (உங்களுக்குள்ள பதிலில் ஸ்மைலி இல்லாமல் போகலாமா )

தருமி Says:
May 2nd, 2006 at 12:42 pm
சிவபாலன்,
என்ன இப்படி கேட்டுட்டீங்க…நிஜமாலுமேதான். நம்ம ஆளுகளுக்கு அந்தக் காலத்திலேயே tragedies பிடிக்காதென்பது நம் இயக்குனர்களின் ஆழ்ந்த கருத்து. கல்யாண பரிசு (ஒ-வரக்கூடாது; எண்ணிக்கை 8 வந்திரும்!) - இதனாலேயே ஒரு மைல்கல்லாக அமைந்தது.

sankar Says:
May 2nd, 2006 at 12:42 pm
//
எனக்கென்னவோ இந்தப்படங்களை தங்கள் கருத்துகளை மக்களிடம் பரப்புவதற்காக திராவிடர் கழகம் தான் sponsor செய்கிறதோ என்று ஒரு சந்தேகம் உண்டு.
//

பெரும்பான்மையான தமிழ் இயக்குனர்கள் மற்றும் ஒரு சில நடிகர்கள், திராவிட இயக்கங்களின் sympathizers ஆக இருப்பது உண்மை.

உண்மையாக, தலி செண்டிமெண்ட், கல்லானாலும் கணவன், தான் தமிழ் பண்பாடா?

தமிழர்களுக்கு என்று ஒரு நல்ல பண்பாடு இருக்கிறது ஆனால், அது நம் கோலிவுட் (ஒரிஜினலா பெயர் கூட வைக்கத் தெரியவில்லை!!) படங்கள் காட்டுவது அல்ல.

ஷங்கர்

தருமி Says:
May 2nd, 2006 at 12:44 pm
கல்யாண பரிசு (ஒ-வரக்கூடாது—-மன்னிக்கணும்; ‘ப்’ வரக்கூடாது…

pot"tea"kadai Says:
May 2nd, 2006 at 12:52 pm
“அனேகமாக இதை அடுத்து ஒரு one-night stand இருக்கும்; நாதியும் கர்ப்பமாகி விடுவார்”

இதை காமிக்கும் போது “கலாச்சார எழவு” அவங்க கண்ணுக்குத் தெரியாது.

//இயக்குனர் திலகம் பாலச்சந்தரின் படம்//

வித்தியாசமாகப் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று “MCP” மனப்பான்மையை உரமூட்டி வளர்த்து வருபவர்.

என்னத்த சொல்றது…இன்னும் நிறைய உதாரணங்களைக் கொடுக்கலாம். “கமெர்ஷியல்” மனப்பான்மை மட்டுமே உள்ள தமிழ் சினிமாத் துறை திருந்துவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு. அன்னம் போல “ஒளிப்பதிவு” போன்ற சமாச்சாரத்தை மட்டும் ரசித்து விட்டு மற்றதை விட்டுட வேண்டியது தான்.

ramachandranusha Says:
May 2nd, 2006 at 1:02 pm
தருமி சார், ரகுவரன் ஒரு படத்தில் ஐநோ வை ஐநூறு முறை சொல்வாரே அந்த படம் என்று நினைக்கிறேன். அவர் கட்டிய
தாலி டாய்லட் பிளஷ் பிடியில் மாட்டி, இழுக்கப்பட்டு ஓட்டையில் விழுந்து, ஜெயசித்ரா தெரியாமல் பிளஷ் பிடியைப் பிடிக்க,ஓட்டைக்குள் போய்விடும். பார்க்க வருத்தமாய் இருந்தது. நல்லா ஆறுபவுனுக்கு குறையாத தாலியுடன் கூடிய தங்கக்கொடி அதைப் பார்த்திருக்கீங்களா?

பத்மா, திருமாங்கல்யம் வேற, தாலி வேறையா? எங்க விட்டுக்காரர் எதைக் கட்டினார்? அது என்ன நேரா சொர்க்கம்?
அப்ப, இந்து பெண்களுக்கு சொர்க்கம் கேரண்டியா?

Dharan Says:
May 2nd, 2006 at 1:34 pm
இந்திய தமிழக கலாச்சாரம் பற்றி எனக்கு நிரம்ப சந்தேகம் உண்டு..

http://manamay.blogspot.com/2006/04/blog-post_114590688834090905.html

மற்றபடி இன்றைய சினிமா மாறி இருக்கிறது என்றே தோன்றுகிறது…

பொன்ஸ் Says:
May 2nd, 2006 at 1:51 pm
பாத்துங்க.. மருத்துவர் ராமனாதன்,… சாரி, மருத்துவர் ராமதாஸ், நீங்க தமிழையும் தமிழர்களையும் அவமானப் படுத்திட்டீங்கன்னு கிளம்பிட போறாரு..

முத்து(தமிழினி) Says:
May 2nd, 2006 at 2:22 pm
தருமி,

இந்த படங்கள் எல்லாம் வெற்றி படங்கள்தானே?

எப்படியோ கட்டுடைத்தலைவி குஷ்புவிற்கு பிறகாவது தமிழரின் உண்மையாக கலாச்சாரம் என்ன என்பதைப்பற்றி மக்கள் பேசுவது சந்தோசம் அளிக்கிறது.

மதியின் பின்னூட்டம் சூப்பர்…சிரிப்பை அடக்கவே முடியவில்லை

பொன்ஸ் Says:
May 2nd, 2006 at 2:23 pm
மிஸ் ஆன ஸ்மைலிக்காக

தருமி Says:
May 2nd, 2006 at 2:25 pm
பார்ட்னர்,
“பாலச்சந்தரே கல்கி மாதிரி படங்களை எல்லாம் எடுத்தாரே?..//
என்ன பார்ட்னர் சொல்றீங்க… if i understand you right, do you mean to say kalki is a good movie?????
அம்மாடியோவ், (என்னைப் பொறுத்தவரை)முட்டாள்தனமான படங்கள் பத்து சொல்லு அப்டின்னா, கல்கியை அதில் சேர்ப்பேன். ஒரு பெண் ஒருவனைத் தண்டிப்பதற்காக அவனுடன் சேர்ந்து கர்ப்பம் தரிப்பாளாம். அட ஆண்டவா! இதென்ன கொடுமை. is there any logic or sense in that concept?? i prefer she does -what is that word for that - barbitoed or something…you got what i mean. ஒங்க ஊர்லதான் நடந்தது. to punish a lousy hubby she simply removed his organ when the guy was sleeping.i can understand the latter and not your kalki’s philosophy!!!

தருமி Says:
May 2nd, 2006 at 2:30 pm
-/.
என்னங்க ரொம்ப symbolic-ஆன பெயரா வச்சிக்கிட்டீங்க போலும்! என்னன்னுதான் புரியலை. உங்கள் எப்படி கூப்பிடறது?

வந்ததுக்கும் சொன்ன சேதிக்கும் நன்றி

தருமி Says:
May 2nd, 2006 at 2:32 pm
kumaran,
இது மாதிரி என்னவெல்லாம் நினச்சிக்கிட்டு இருந்தீங்களோ…இல்ல?

தருமி Says:
May 2nd, 2006 at 2:35 pm
DJ,
அடுத்த பதிவுக்கு ‘முதலடி’ எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.

அதயும் எழுதிடுவோம்…வந்திருங்க…

பொன்ஸ் Says:
May 2nd, 2006 at 2:40 pm
தருமி, சின்னத் திரைக் கூத்துக்கள் பத்தி எழுத ஒரு பதிவு போதுமா?

தருமி Says:
May 2nd, 2006 at 2:41 pm
பதமா,
எத்தனை பவுன்ல தாலி…இல்ல…திருமாங்கல்யம் இருந்தா அப்டின்னு ஏதாவது சொல்லியிருந்துச்சா…ஏன்னா தங்க நகைக்கடைக்காரங்க எல்லாருமா சேர்ந்து தங்கத்தில, இத்தனை பவுனில திருமாங்கல்யம் செய்தா இன்னின்ன பலன் அப்டின்னு சொன்னாங்கன்னு வச்சுக்கிங்க…அவங்க பாடு கொண்டாட்டம்தான். நம்ம ஆளுக ‘திருமாங்கல்ய வாஸ்து’ அப்டின்னு ஒரு புது branch of science ஆரம்பிச்சிடுவாங்க…

அடடே , தருமிக்கு கற்பனை கரை புரண்டு ஓடுதே…இத வச்சே ஒரு கதை எழுதலாம்போல இருக்கு

தருமி Says:
May 2nd, 2006 at 2:47 pm
நன்றி ஷங்கர். பணி அப்டின்னு பெரிய வார்த்தையெல்லாம் போட்டுட்டீங்களே

நந்தன்,
ஒரு முக்கியமான கதையமைப்பை விட்டுட்டீங்களே..அத அங்கே சேர்த்துட்டேனே.

தருமி Says:
May 2nd, 2006 at 2:50 pm
ஆமா வசந்தன் கட்டாயமா சேர்க்க வேண்டிய studpid படங்களில் புதிய பாதையும் ஒன்று. முட்டாள்தனத்தை அடிப்படையாகக் கொண்ட படம்.

தருமி Says:
May 2nd, 2006 at 2:55 pm
ஷ்ரேயா,
இனிமே நம்ம பதிவில எப்போ ‘மழை’ வந்து…என்னத்த…அப்டின்னு நெனச்சுக்கிட்டு இருந்தப்போ …வாங்க ஷ்ரேயா வாங்க…எங்கள எல்லாம் ஞாபகம் இருக்கா?

‘மறுபடியும்’ நல்ல படம்…நம்ம ஊரு ஒரிஜினல் இல்லியேன்னு கொஞ்சம் வருத்தம்….

தருமி Says:
May 2nd, 2006 at 3:03 pm
சுரேஷ்,
அடடா, அப்படி ஒரு தப்பு ஆகிப்போச்சா?? அந்தக் கதை என்னென்னு நினைவில்லையே.
சரி அப்படியே விட்டு விடுகிறேன். தலைய விட்டுட்டு உடம்ப மட்டும் எடுத்துக்கட்டும்…

“திராவிடர் கழகம் தான் sponsor செய்கிறதோ …” எப்படிங்க, இதில வீரமணி (ஐயங்கார்)-க்கு என்ன லாபம்? நான் அவரை அப்படித்தான் செல்லமா கூப்பிடறது..ஹி..ஹி..

முத்துகுமரன் Says:
May 2nd, 2006 at 3:04 pm
//ஒரு பெண் ஒருவனைத் தண்டிப்பதற்காக அவனுடன் சேர்ந்து கர்ப்பம் தரிப்பாளாம். அட ஆண்டவா! இதென்ன கொடுமை.//

புரட்சி!! புரட்சி!!!!!

கோ.இராகவன் Says:
May 2nd, 2006 at 3:05 pm
நல்ல பதிவு தருமி…இதத்தான் தலைதலையா நானும் கத்துறேன்…ஒருத்தன் கேக்க மாட்டேங்குறான்…..சிலப்பதிகாரத்தைக் கூட ஒழுங்கா புரிஞ்சிக்காம பேசுறவங்கதான் நெறையா இருக்காங்க…கண்ணகி கணவனை மறுபேச்சுப் பேசாம இருந்து வாழ்ந்ததுக்குக் கற்புக்கரசீன்னு போற்றப்படலைன்னு தெரியுமா? சிலப்பதிகாரம் படிச்சவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். எதை வெச்சிக் கண்ணகி கற்புக்கரசீன்னு முடிவுக்கு வர்ராங்கன்னு தெரிஞ்சா வியப்புதான் பலருக்கு மிஞ்சும்….

ஒரு படம்…கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படம். சாரதான்னு. அதுல கணவன் விபத்துல ஆண்மைய இழந்துருவான். அவளுக்கு இரண்டாம் கல்யாணம் செய்ய கணவனும் அவனுடைய அம்மாவும் முயற்சி செய்வார்கள். உண்மையிலேயே மிகவும் புரட்சிகரமான படம்தான். ஆனால் சரியா படம் முடியும் போது மேடையிலேயே கதாநாயகியைக் கொன்னு கற்பைக் காப்பாத்துவாங்க. உள்ளபடிக்குச் சொன்னா…அந்தக் காலத்துல இந்த அளவுக்கு எடுத்ததே அதிசயம்.

அதுவுமில்லாம….இந்த மாதிரி அபத்தங்களை எதுத்தா….நம்ம நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு அலையுறோம்னும் சொல்ல ஆட்கள் உண்டு. ))))

தருமி Says:
May 2nd, 2006 at 3:19 pm
மன்னிக்கணும் sankar,
“தமிழர்களுக்கு என்று ஒரு நல்ல பண்பாடு இருக்கிறது …”//
இதைத்தான் நான் கெட்ட வார்த்தை என்கிறேன். கோவிச்சுக்காம சொல்லுங்க சங்கர்…எந்த விஷயத்தில நாம மற்றவங்கள விட மேலானவங்க…என்ன சிறப்புப் ‘பண்பு’ மற்றவங்ககிட்ட இல்லாதது நம்மட்ட இருக்குன்னு சொல்ல முடியுமா?

எல்லோரிடமும் இருப்பது ஒரே ‘மனிதப் பண்பாடு’. இவைகள் நாம் வாழும் சமூகக்கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள், mores, valeus, taboos - இவற்றுக் ஏற்றாற்போல மாறுமே ஒழிய மனிதப் பண்பும், பண்பாடும் எங்கும் எல்லோருக்கும் ஒன்றே. வெறும் மேடைப் பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு நமக்குள்நாமே ஒரு போலி image-யை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதே என்கருத்து, சங்கர்.
மாற்றுக் கருத்துக்களிருப்பின் மீண்டும் வாருங்கள்;விவாதிப்போம்.

swamy red bull Says:
May 2nd, 2006 at 3:20 pm
//கட்டுடைத்தலைவி குஷ்புவிற்கு //முத்து(தமிழினி) Says:
May 2nd, 2006 at 3:24 pm
“தமிழர்களுக்கு என்று ஒரு நல்ல பண்பாடு இருக்கிறது …”//

இதைத்தான் நான் கெட்ட வார்த்தை என்கிறேன். கோவிச்சுக்காம சொல்லுங்க சங்கர்…எந்த விஷயத்தில நாம மற்றவங்கள விட மேலானவங்க…என்ன சிறப்புப் ‘பண்பு’ மற்றவங்ககிட்ட இல்லாதது நம்மட்ட இருக்குன்னு சொல்ல முடியுமா?

இதை ரொம்ப காலமாச் சொல்றாங்க..தனி பதிவு போட்டு என்னன்னு கேளுங்க தருமி…

தருமி Says:
May 2nd, 2006 at 3:28 pm
ramachandranusha
I know…ஆனா மரந்து போச்சு…உங்க சோகம் புரியுது..

இந்து பெண்களுக்கு சொர்க்கம் கேரண்டியா? // என்னங்க விளையாடுறீங்களா? நானும்தான் எங்க வீட்டுக்காரம்மாவுக்குத் தாலி..இல்லீங்க..திருமாங்கல்யம் கட்டுனேன். அப்போ அவங்களுக்கு சொர்க்கம். நானும் எப்படியாவது அவங்ககூட ‘ஒட்னிஸ்’ போட்டுக்கிட்டு போயிடுவேனே

sankar Says:
May 2nd, 2006 at 3:29 pm
//
எல்லோரிடமும் இருப்பது ஒரே ‘மனிதப் பண்பாடு’. இவைகள் நாம் வாழும் சமூகக்கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள், mores, valeus, taboos - இவற்றுக் ஏற்றாற்போல மாறுமே ஒழிய மனிதப் பண்பும், பண்பாடும் எங்கும் எல்லோருக்கும் ஒன்றே. வெறும் மேடைப் பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு நமக்குள்நாமே ஒரு போலி image-யை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதே என்கருத்து, சங்கர்.
//

ஐயா, நீங்கள் விவாதிக்க விரும்பும் தளம் வேறு. நான் கூறிய தளம் வேறு. நான் சொன்னது, சினிமாவில் காட்டப்படும் கேவலத்தை “தமிழ் பண்பாடு” என்று சினிமா இயக்குனர்கள் கூறுவதையும் உண்மையாக வெளியில் என்ன நடக்கிறது என்பதையும் பற்றிய என் கருத்து.

மற்றபடி நீங்கள் கூறும் பொதுவான “மனிதப் பண்பாடு” என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

நன்றி,
ஷங்கர்.

தருமி Says:
May 2nd, 2006 at 3:30 pm
பொட்டீக்ஸ்,
அன்னம் மாதிரி குடிச்சிட்டு போகலாம்தான்; ஆனா அப்பப்போ தொண்டைக்குள்ள ஏதாவது தட்டுப்பட்டு விடுகிறதே…

தருமி Says:
May 2nd, 2006 at 3:33 pm
தரண்,
ஏற்கென்வே சங்கருக்குச் சொன்ன பதில் உங்கள் பதிவில் நீங்கள் கேட்டுள்ள கேள்விக்குப் பதிலாக இருக்கும் என்றே நினைக்கிறேன். மீண்டும் உங்கள் பதிவுக்கு வருகிறேன்.
‘புதுப் புது அர்த்தங்கள்’ படத்துக்கு ஏதாவது சொல்லுவீங்கன்னு பார்த்தேன். ஒண்ணும் சொல்லலை..

தருமி Says:
May 2nd, 2006 at 3:35 pm
பொன்ஸ்,
நீங்க சொன்ன இரண்டு பேர்ல இரண்டாமவர் வந்ததே இல்லை! முதலாமவர் வந்து போய்க்கிட்டு இருந்தார்; இப்போ கொஞ்ச நாளா ஆளே காணோம்; ‘டூ’ போட்டுட்டார் போலும்; பார்த்தா சொல்லுங்க

தருமி Says:
May 2nd, 2006 at 3:38 pm
நட்சத்திரமே,
வருக…உங்கள் வரவுக்கு (to use the regular cliche: amidst your busy schedule this week) நன்றி

திரு Says:
May 2nd, 2006 at 3:41 pm
//இவர்கள் மீண்டும் சேருவதற்கு எந்த நல்ல காரணங்களும் சொல்லப் படுவதில்லை. இதில் பெரிய சோகம் அந்தப் படத்திற்கு வைத்த தலைப்பு. எந்தவித சமூக பொறுப்பும் அற்ற ஒரு கதை - பெண்ணை ஒரு தனிஆளாக அல்லாது வெறும் ஒரு ஆணின் துணையாக மட்டுமே கருதும் கருத்தாக்கம்; கல்லானாலும் கணவன்..blah…blah… என்பதையே கட்டுறுத்தும் இந்தக் கதைக்கு எப்படி இந்தத் தலைப்பு பொருந்துகிறதோ எனக்குத் தெரியவில்லை.//

பழைய பழைய அர்த்தங்கள்-னு வச்சிருக்கலாம் பதிவு அருமை தருமி.

ramachandranusha Says:
May 2nd, 2006 at 3:54 pm
தருமி சார், தமிழர் பண்பாடு என்றால் மற்ற இந்திய சினிமா மொழியில் “சன்ஸ்கிருதி” (ஸ்பெல்லிங் கரைட்டா), பல
படம்களில் பாரத் சன்ஸ்கிருதி வரும். இந்தி சீரியல், படங்களில் “மங்கல் சூத்ரூ” பெருமை பேசப்படும். ஆனால் சாதாரணமாய் வட இந்தியர்கள் தாலி/ மங்கல்யம் அணிவதில்லை.
இன்னும் என் கேள்விக்கு பதில் வரவில்லை. தாலி என்பது செயில் கோர்க்கப்படும்/ முதலில் கயிற்றில் கட்டப்படும் வஸ்து
என்றல்லவா நினைத்திருந்தேன். திருமாங்கல்யம்/ தாலி (டெலி சீரியல் பெயர் இல்லைங்க) என்ன வித்தியாசம்?

தருமி Says:
May 2nd, 2006 at 4:08 pm
முத்துக்குமரன்,
ஆனாலும் இந்த வார்த்தை ‘புரட்சி’ அப்டிங்கிறதுக்கு என்ன அர்த்தம்னே தெரியாம போச்சுங்க..

தருமி Says:
May 2nd, 2006 at 4:21 pm
ஜீரா,
இந்த மாதிரி அபத்தங்களை எதுத்தா…” // ‘நீ அப்படி இருந்தா அதுக்காக எல்லாருமா அப்படி’ ஜப்டின்னும் பதில் வாரும்.
சரி, அத விடுங்க, ஒரு பொடி வச்சு சொல்லியிருக்கீங்க…கண்ணகி கற்புக்கரசி அப்டிங்கிறதுக்கு உள்ள காரணம் சொல்லுங்களேன், please

தருமி Says:
May 2nd, 2006 at 4:30 pm
வாங்க செங்காளை,
“கட்டுடைத்தலைவி குஷ்புவிற்கு ..”//
அப்டின்னா ன்னங்க அர்த்தம்?

(பழங் கதைகள் எனும் )கட்டுக்களை உடைத்த தலைவி என்றுதானே பொருள்??

தருமி Says:
May 2nd, 2006 at 4:35 pm
சங்கர்,
“எனக்கு மாற்றுக் கருத்து இல்லை”// மன்னிச்சிக்கோங்க…தவறா புரிஞ்சிக்கிட்டேனோ?

டோண்டு N. ராகவன் Says:
May 2nd, 2006 at 5:17 pm
i prefer she does -what is that word for that - barbitoed or something-you got what i mean
It is called Bobbitted, after the fellow Bobbit, whose wife deided, he shall no longer be a fellow.

கல்யாண பரிசு (ஒ-வரக்கூடாது’-மன்னிக்கணும்; ‘ப்’ வரக்கூடாது’)
ஒ வரக்கூடாது என்பதும் சரிதான், ஒ = ஒற்று மிகுதல்.

“திருமாங்கல்யம் அணிந்தால் நேரே மோட்சம்தானாம்.”
யாருக்கு? கணவருக்கா?

ஆனால் நம் சக பிளாக்கர்களிலும் இந்த இரட்டை நிலைதானே தலை விரித்தாடுகிறது? ஆண் பெண் கற்பு நிலைகளை பற்றி நான் போட்ட 3 பதிவுகளையும் அவற்றுக்கு வந்த பின்னூட்டங்களையும் பாருங்களேன்.

http://dondu.blogspot.com/2005/10/1_11.html
http://dondu.blogspot.com/2005/10/2_14.html
http://dondu.blogspot.com/2005/10/3.html

உங்கள் பதிவு பிளாக்கரில் இல்லாததாலும், ஆகவே எலிக்குட்டி மற்றும் போட்டோ சோதனையெல்லாம் இங்கே பலிக்காததாலும், இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க அதன் நகலை என்னுடைய ஆண் பெண் கற்புநிலை பற்றிய மூன்றாம் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

முத்து(தமிழினி) Says:
May 2nd, 2006 at 5:37 pm
//கட்டுடைத்தலைவி குஷ்புவிற்கு//

முதல்ல இந்த வார்த்தை பேடண்ட் உரிமை நம்மது..நம்ப பின்னூட்டத்தில் இருந்து எடுத்து என்நண்பன் ரெட்புல் சிரிச்சாரு..அத்த நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க..

குஷ்பு சொன்னது தப்பேயில்லை..ஆனால் யார் இங்க யோக்கியம்னு கேட்டாங்கள்ள..தன்னை வைச்சு அடுத்தவங்களை எடை போட்டாங்கள்ள..அதுதான் தவறு…

இன்னொன்று வயசுக்கு வந்தவங்க கல்யாணத்திற்கு முன்னாடி தப்பு பண்ணியே ஆகணும்கிற தொனி அவங்க பேச்சில் இருந்தமாதிரி எனக்கு பட்டது…

மணியன் Says:
May 2nd, 2006 at 6:01 pm
தமிழ் சினிமாவின் தாலி சென்டிமென்ட் பொதுமக்களாலேயே தாங்க முடியாமல் நக்கலடிக்கப் படும் விதயம் தான்.

ஆனாலும் நிங்கள் சொன்ன ‘அறிவுஜீவி’ இயக்குனர்களின் வாழைப்பழத்தில் ஊசியேற்றும் ஆணாதிக்கக் கருத்துக்களும் பண்பாடு என்பதைவிட ஆங்கிலத்தில் (ஃப்ரென்ச்சா ?) Cliche’ எனப்படும் கட்டமைப்புகளில் திரையுலகம் தடுமாறுவதையும் அனைவரும் விவாதிக்க ஒரு களம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள்.நல்ல பதிவு.

ramachandranusha Says:
May 2nd, 2006 at 6:52 pm
50

selvan Says:
May 2nd, 2006 at 8:47 pm
if i understand you right, do you mean to say kalki is a good movie?????
அம்மாடியோவ், (என்னைப் பொறுத்தவரை)முட்டாள்தனமான படங்கள் பத்து சொல்லு அப்டின்னா, கல்கியை அதில் சேர்ப்பேன். ஒரு பெண் ஒருவனைத் தண்டிப்பதற்காக அவனுடன் சேர்ந்து கர்ப்பம் தரிப்பாளாம். அட ஆண்டவா! இதென்ன கொடுமை. is there any logic or sense in that concept??//

No partner.

In the climax of that movie balachandar would have shown that the heroine, after having a baby with prakasraj ,marries Rahman.Thankfully Balachandar did not show it as kalki and sri geetha and renuka living with a reformed prakashraj

Kalki sucks.I agree.But atleast the thali sentiment was broken in that movie

ஷ்ரேயா Says:
May 3rd, 2006 at 5:01 am
ஆகா..கிடைச்ச இடைவெளியில நைசா கடிச்சிட்டீங்களே!

புதிய பாதை படம் பார்த்ததில்ல.. எடுத்துப்பார்த்து 3 மணித்தியாலம் வீணாக்காமே, யாரவது கதைச் சுருக்கம் சொல்லுங்கப்பு.
“மறுபடியும்” அசல் யாருடையது? என்ன மொழி?

Padma arvind Says:
May 3rd, 2006 at 3:57 pm
This is for Sankar: http://reallogic.org/thenthuli/?p=121

தருமி Says:
May 3rd, 2006 at 4:42 pm
ரா.உஷா,
you are off the target. better luck for the 75th

தருமி Says:
May 3rd, 2006 at 4:47 pm
முத்து-தமிழினி,
“இதை ரொம்ப காலமாச் சொல்றாங்க..தனி பதிவு போட்டு என்னன்னு கேளுங்க தருமி… .” //
பத்மா நேரடி அனுபவமாக, ஆழமாக ஒரு பதிவு எழுதியுள்ளார்கள்.http://reallogic.org/thenthuli/?p=121

யார் எழுதி என்ன செய்ய? நம் மீடியாக்கள் நாம் ஒருபடி ஏறினால் இரண்டு படி இறக்க ஆவன செய்கின்றனவே

தருமி Says:
May 3rd, 2006 at 4:51 pm
நன்றி திரு.

முத்து-தமிழினி,
கட்டுடைத்த'’ - ஐயா, உங்கள் காப்பி ரைட் மீறினதுக்கு ரொம சாரிங்க

தருமி Says:
May 3rd, 2006 at 5:00 pm
டோண்டு,
1. ஆங்கில வார்த்தை எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி. அவனது மனைவியின் பெயர்: Joanna Ferrell, அப்படியானால் bobbitted என்பதற்குப் பதில் ferrelled என்றுதானே வைத்திருக்க வேண்டும்
2. இலக்கணம் புரியலை.
3. முழுமையாக நீங்கள் சொல்வதில் கருத்துடன்பாடு இல்லை.

தருமி Says:
May 3rd, 2006 at 5:02 pm
அய்யன்மீர் / அம்மாமீர்
யாராவது இங்க வாங்களேன்; வந்து தாலி/திருமாங்கல்யம் - இரண்டுக்கும் உள்ள 6 ஒற்றுமை/வேற்றுமைகளைக் கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்.
உஷா படுத்துராங்களே

Prasanna Says:
May 3rd, 2006 at 9:22 pm
அய்யோ! இவனுங்க பண்ற அநியாயம் பெரிய அநியாயம்ங்க. அதாவது பெண் புத்தி பின் புத்தினு படம் எடுத்தவங்க தான. கலாபக் காதலன் அப்படின்னு ஒரு படம். சைட் டைட்டில் “காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது?” படம் பார்த்துட்டு எனக்கு என்ன சொல்லன்னே தெரியல. அதாவது அந்த ஹீரோ வ அவன் பொண்டாட்டியோட தங்கச்சி கரெக்ட் பண்ண ட்ரை பண்ணும். அவன் அதுக்காக ஊர்ல இருந்து ஒருத்தன கூப்டு வந்து அவள பலாத்காரம் பண்ண ஐடியா குடுப்பார்.அந்த பொண்ணு அப்புறம் அவன கல்யாணம் பண்ணிகிட்டு அப்புரம் தற்கொலை பண்ணிகிட்டு செத்து போயிடும்.

கற்பழிக்கப்பட்ட பெண் கற்பழிச்சவன் கூட தான் சேர்ந்து வாழணுமா?? தனியா வாழக் கூடாதா?
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல! நான் எனக்கு வரப்போற மனைவி எப்படி இருந்தாலும் கவலை இல்லை. குஷ்பு சொன்ன மாதிரி இருந்தா கூட. இப்பொ எல்லம் என்னல்லாமோ நடக்குது. தப்பு நடக்க வாய்ப்பே இல்லைனு சொல்றதுகில்ல. அதனால கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க எப்படி நடந்துக்குறாங்கனு தான் பார்க்கணும்.

இதே மாதிரி ஒரு கருத்தை எங்க அண்ணன் கல்யாணத்துக்கு முந்தின நாள் பேசிகிட்டு இருக்கும்போது சொன்னதுக்காக பயங்கரமா வாங்கி கட்டிகிட்டேன். என்னத்த கருத்து சுதந்திரம்!!!

தருமி சார், ஒரு 200 பின்னூட்டம் அடிக்கும் போல இருக்கு. வாழ்த்துக்கள்.
அன்பில் தம்பி,
பிரசன்னா

தருமி Says:
May 3rd, 2006 at 9:28 pm
ப்ரசன்னா,
ரொம்ப ஓப்பனா பேசிட்டீங்க…

“ஒரு 200 பின்னூட்டம் அடிக்கும் போல இருக்கு. “//
- அதெல்லாம் இல்ல தம்பி. நம்ம ரேஞ்ச் 75 தாண்டாது

பொன்ஸ் Says:
May 3rd, 2006 at 9:41 pm
தருமி, அப்படியே 200 கிட்ட போறா மாதிரி இருந்தாலும், நீங்க “ஐயோ. எனக்கே கஷ்டமா இருக்கே.. இத விட நல்ல பதிவெல்லாம் இருக்கறச்சேன்னு இதுக்குப் போய் இப்படி சேருதேன்னு” சொல்லுவீங்க.. எப்படிங்க 75 தாண்டும்??

தருமி Says:
May 3rd, 2006 at 10:04 pm
என்னங்க பொன்ஸ் பண்றது? அப்பப்போ இந்த பாழாப்போன மனசு உண்மையைச் சொல்லிடுது
அப்படியும் இங்க என்ன ஆச்சுன்னு பாத்தீங்களா?

தருமி Says:
May 3rd, 2006 at 10:08 pm
Partner,
“…thali sentiment was broken in that movie ..” - you’re are right on that point..

தருமி Says:
May 3rd, 2006 at 10:09 pm


வசந்தன்,

உங்கள் குளுவிற்கு நன்றி. ஒரு மாதிரியாக ஒருவரை அனுமானித்துள்ளேன்.
தருமி Says:
May 3rd, 2006 at 10:10 pm
ஷ்ரேயா,
story on one line: காசுக்காகத் தன்னைக் கற்பழித்த ரெளடியைத் தேடிப்பிடித்துக் காதலித்து, கைப்பிடித்து… டண்ட டய்ங்.(அதாவது, செத்துருவா..க.நாயகன் குழந்தையோடு walks into the sun!)
எப்டி கதை?

மறுபடியும்: இந்தி - ஷியாம் பெனகல் ..??

ஷ்ரேயா Says:
May 4th, 2006 at 8:25 am
இரண்டு கேள்விகள் தருமி.

1. புதிய பாதை கதை சொன்னதுக்கு நன்றி. ஆனா ஏன் கதாநாயகி அப்பிடிச் செய்றாங்க/செய்யணும்? வல்லுறவுக்குட்படுத்தியவனைத் தான் கட்டிக்கணும்கிற “பண்பாடா”? (அப்பாவி கோவிந்தன் மாதிரிக் கேட்கிறேனோ??)

2. நேற்றிரவு சிப்பிக்குள் முத்து பார்த்தேன். கமல்(லின் பாத்திரம்) கட்டும் தாலியை அதிர்ச்சியுடன் பார்க்கும் ராதிகா(வின் பாத்திரம்), ஏன் அதைக் கழற்றவில்லை? (இதைக் கேட்டதுக்கு வீட்லே “அப்பிடிக் கழட்டிட்டா படம் இதோடயே முடிஞ்சுரும்” னாங்க)

துளசி கோபால் Says:
May 4th, 2006 at 9:51 am
அடடே… இப்படி ஒண்ணு இங்கே நடந்துக்கிட்டு இருக்கறதைக் கவனிக்காம என்ன செஞ்சுக்கிட்டு இருந்தேன்?

நம்ம கருத்தைச் சொல்லலைன்னா எப்படி? நல்லா இருக்குமா?

‘கள்’ ஆனாலும் கணவன் & ‘ஃபுல்’ ஆனாலும் புருஷன். இதை முதல்லே புரிஞ்சுக்கிடுங்க.

ஆச்சா… இப்ப

தாலிவாஸ்து.

சொர்க்கத்துக்கு நேரே போகணுமுன்னா 21 பவுன் தாலிச்சங்கிலியிலே நல்லதா ரெண்டு பக்கமும் கல்வச்ச
மோப்பு(முகப்பு) சேர்த்த தாலியைக் கட்டணும். கூடவே புருஷனும் போகணுமுன்னா மோப்புலே வைரக்கல்
பதிச்சிருக்கணும்.

முக்கியமாக் கவனிக்க வேண்டியது. மேற்படி நகைக்கான செலவு முழுசும் கணவனே செய்யணும்.

அம்மா வீட்டுலெ செலவு செஞ்சிருந்தா, புருஷனுக்கு நரகம்தான்.

தருமி Says:
May 4th, 2006 at 12:54 pm
கெடுத்தீங்களே துளசி,
வீட்டுக்கார அம்மா தாலியிலே 21 பவுன் இல்ல; ரெண்டு மோப்பு இல்ல; ஒண்ணுதான். - இந்த ரேஞ்சுக்கு என்ன பலன் அப்டின்னு சொல்லுங்க. நிச்சயமா எனக்கு நரகம்தான்…நாங்க வைரத்துக்கு எங்க போறது, சொல்லுங்க? ஆனாலும் சொர்க்கம் இவ்வளவு காஸ்ட்லின்னு தெரியாம போச்சு..விடுங்க, நாங்க நல்ல கம்பெனி இருக்கிற எடத்துக்குப் போய்க்கிறோம்.

அதுசரி, உஷா சந்தேகம் யார் தீர்க்கிறது?

தருமி Says:
May 4th, 2006 at 12:58 pm
என்ன ஷ்ரேயா,
இதுகூட தெரியலைன்னா என்ன பண்றது? அதான் ஏற்கெனவே சொல்லியிருக்கோம்ல!
“இனி ‘தொட்ட’ பாவம் அவரை விடாது. ‘என்னைத் தொட்டுத் தூக்கியவரே இனி என் நாதர்’ என்று நாதி சொல்லிவிடுவார். …தொட்டவரைக் கணவராக ‘வரிக்கும்’ அந்தக் கற்புக்கரசிகளின் வாயிலாக நம் இயக்குனர்கள் நம் தமிழ்ப் பெண்டிரின் கற்பை எப்படிக் காப்பாற்றி விட்டார்கள், பாருங்கள்!”//
இப்பவாவது புரியுதா?
2=-வது கேள்விக்கு வீட்டிலேயே நல்ல பதில் சொல்லிட்டாங்களே!

பொன்ஸ் Says:
May 4th, 2006 at 1:00 pm
//அம்மா வீட்டுலெ செலவு செஞ்சிருந்தா, புருஷனுக்கு நரகம்தான். //
:)
அப்போ தமிழ் நாட்டுல இருக்கற எல்லா புருஷங்களுக்கும் நரகம் தானாக்கா? )

கமல் Says:
May 4th, 2006 at 7:38 pm
தாலிதானம் படத்தைச் சொல்லாமல் விட்டுட்டீங்களே! லக்ஷ்மியோட நடிப்புக்காகவே பலமுறை பார்க்கலாம்.

துளசியோட தாலிவாஸ்து நல்லா ஒர்க் அவுட் ஆகுது. நேத்து என் அம்மாவிடம் போனில் சொன்னேன். அப்புறம் அவங்க பக்கத்து மற்றும் எதிர் வீட்டாரிடம் சொல்லப்போய், ஊர் முழுக்க இதுதான் இப்போ ‘ஹாட் டாபிக்’காம். இதைக்கேட்டு, அடுத்த மாதம் கல்யாணம் பண்ணிக்கப்போகும் எங்க தெருப்பையன் ஒருத்தன் பேயறைஞ்சமாதிரி ஆயிட்டானாம்! எதுக்கும் இப்பவே காப்புரிமை பதிவு செஞ்சுடுங்க!

நன்றி
கமல்

தருமி Says:
May 4th, 2006 at 9:08 pm
துளசி,
கமல் சொன்னது கேட்டுச்சா..? அப்டியே எனக்கும் ஒரு பார்ட்னர்ஷிப்

பொன்ஸ் வேற என்னமோ கேட்டிருக்காங்க…

தருமி Says:
May 4th, 2006 at 9:10 pm
மக்களே,
என்ன ஆச்சு, இந்தக் கடைசியா போடுற 10 பின்னூட்டங்கள் திடீர்னு குண்டு குண்டா வருதே ..ஏன்? எப்படி? மறுபடி ஒழுங்கா கொண்டு வர்ரது எப்படி? Help…help…

Prasanna Says:
May 4th, 2006 at 9:46 pm
சிவாஜி யோட மாஸ்டர் பீஸ் எல்லாம் லிஸ்ட் போட்டா போட்டுகிட்டே இருக்க வேண்டியது தான். இங்க மட்டுமா இந்த நிலமை. எனக்கு கிளமெண்ட் ஈஸ்ட்வுட் பத்தி தெரியாது, ஆன சீன் கானெரி தெரியும். அர்னால்ட் தெரியும், ஆனா அந்த காலத்துல வேற நடிகர பத்தி தெரியாது. ஆக்சன் ஹீரோஸ் எப்பவுமே மவுசு தான்.

கமல் Says:
May 4th, 2006 at 10:19 pm
மறுபடியும் ஒழுங்கா வராது சார்! இனிமேல் வர்ற எல்லாப் பின்னூட்டங்களும் இப்படித்தான் வரும்னு நினைக்கிறேன்.

வசந்தன் clue-விற்கு நன்றி சொன்ன பின்னூட்டத்தில, / க்கு அப்புறம் b போடுவதற்கு பதிலாக b க்கு அப்புறம் / போட்டுட்டீங்க. அதனால வந்த வினை இது.

html expert யாராவது இருந்தா சொல்லுங்களேன்.

முந்தைய பின்னூட்டத்தில இதைச் சரிபண்ண ஒரு முயற்சி பண்ணினேன். ஆனால் முடியவில்லை.

நன்றி
கமல்

ஷ்ரேயா Says:
May 5th, 2006 at 7:45 am
நீங்க சொல்றதும் சரிதான் தருமி.
என் கேள்வித் தொடர்ல அடுத்தது: ஏன் இப்பிடி “நாதி” (நாதியில்லாம)”தொட்ட” நாதனைத் தான் போய்க் கட்டிக்கணும்னு எடுக்கிறாங்க?(அப்ப இவங்க “பண்பாட்டு”ப்படி பாத்தா, பாலியல் தொழிலாளர்களெல்லாம் யாரைக் கட்டுவதாம்?)

யார் இந்த பண்பாட்டு யோசனையை முதல்லே தமிழ்சினிமாலே (உங்களுக்கு வயசாச்சுன்னு சொல்லல ) கதையா எடுத்தது? யாராவது இயக்குன நண்பர்கள் இருந்தால் கேட்டுச் சொல்லுங்க. (ஆமா, இவங்கெல்லாம் படக்கதையைப் பற்றி வீட்டுலே, சினிமா தவிர்ந்த ஒரு நட்பு/சொந்தக்காரங்க வட்டத்துக்கிட்டே கருத்துக் கேட்க மாட்டாங்களா??)

துளசி கோபால் Says:
May 5th, 2006 at 2:39 pm
அய்யோ ஷ்ரேயா,

பாலியல் ‘தொழிலாளி’ன்னு சொல்றீங்க. தொழிலுக்கும் கல்யாணத்துக்கும் முடிச்சுப் போட முடியுமா?

தருமி Says:
May 5th, 2006 at 3:11 pm
அடுத்த பதிவாவது ஒழுங்கா வந்திருமில்ல, கமல்

தருமி Says:
May 5th, 2006 at 3:14 pm
ப்ரஸன்னா,

ஆக்சன் ஹீரோஸ் எப்பவுமே மவுசு தான். // நம்ம எம்.ஜி.ஆர்.,இ.த. விஜய் மாதிரி ..இல்ல

சிவமுருகன் Says:
May 5th, 2006 at 8:19 pm
//தொட்டவரைக் கணவராக ‘வரிக்கும்’ //
யதார்தத்திற்க்கு ஒத்து வருமா? பஸ்ல போறோம், பஜாருக்கு போறோம். சும்மா யாராவது ஒரசிட்டா அத்த எல்லாம் ‘வரி’க்கவோ ‘வாரிக்கவோ’ முடியுமா?

கடந்த கால சினிமாவில் ஒகே.
நிகழ்கால சினிமாவில்?

புகைபடம் அருமை நீங்க தான் கிளிக்கிஇருப்பீங்க.

Chozanaadan Says:
May 5th, 2006 at 11:19 pm
Just a test

Chozanaadan Says:
May 5th, 2006 at 11:24 pm
Another Another test to Remove the Bold

Chozanaadan Says:
May 5th, 2006 at 11:35 pm
another test. vidamattomla

தருமி Says:
May 5th, 2006 at 11:37 pm
நன்றி சோழநாடன்,
ரொம்ப நன்றிங்க. ஆனாலும் இன்னும் ‘குண்டு குண்டு’ன்னுதான் வருது

தருமி Says:
May 5th, 2006 at 11:40 pm
சிவமுருகன்,
“கடந்த கால சினிமாவில் ஒகே.
நிகழ்கால சினிமாவில்?”//
- புதிய பாதை நிகழ்கால சினிமாதானே? அந்தக் கதை என்ன? இன்னும் அதுமாதிரிதான் (நம்ம சினிமாவில) நடந்துகிட்டு இருக்கு; இல்லையா?

Chozanaadan Says:
May 5th, 2006 at 11:42 pm
தருமி,
முயற்சி செய்தேன் முடியவில்லை . நீங்கள் வசந்தனுக்கு கொடுத்த பதிலில் Bold tagஐ மூடும்போது என்று போட்டு விட்டீர்கள். அதுதான் காரணம். அந்த பின்னூட்டத்தை அழித்தால் சரியாகுமென்று நினைக்கின்றேன்.
[எனது சோதனை பின்னூட்டங்களையும் அழித்து விடவும். நான் கொடுக்கும் ஒற்றை tagஐ incorrect format என்பதால் பின்னூட்ட validation தின்று விடுகிறது. உங்கள் பின்னூட்டத்தை மட்டும் incorrect format உடன் எப்படி ஏற்றுக்கொண்டதென்று தெரியவில்லை ]

Chozanaadan Says:
May 5th, 2006 at 11:44 pm
///Bold tagஐ மூடும்போது என்று போட்டு ///
Bold tagஐ மூடும்போது என்று போட்டு

Chozanaadan Says:
May 5th, 2006 at 11:48 pm
Can you please send a mail to me at Chozanaadan[at]yahoo[dot]com.

KOZHUNDU Says:
May 6th, 2006 at 4:02 pm
91யில இருக்கு. 100க்கு போயிடுவோம்.
திருமாங்கல்யம் படம் பார்க்கலயா? தேர்தல் நேரம். பார்த்து பதில் சொல்லுங்க!
அன்புடன்
சாம்

KOZHUNDU Says:
May 6th, 2006 at 4:13 pm
லொரென பாபிட்ன்னு ஒருத்தர் இருக்காருங்க.
அன்புடன்
சாம்

தருமி Says:
May 6th, 2006 at 4:26 pm
பாபிட் விஷயம் டோண்டு விளக்கிட்டார்.
இந்த ‘திருமாங்கல்யம்’ விஷயம் நீங்க சொல்ல வர்ரது என்னென்ன புரியலையே (இழுக்கிறதுக்காக ஒண்ணும் அப்படி சொல்லலை:???:)

pot"tea"kadai Says:
May 6th, 2006 at 4:31 pm
இன்னைக்கு ரெண்டு படம் பாத்தேன்…
1) மைக்கேல் மதன காம ராஜன்
2)மீண்டும் கோகிலா

ஒன்னுத்துல நெரைய “டெக்னிகல்” டீடெய்ல்ஸ் இருந்தது…இன்னொன்னு இம்சையா இருந்தது…
உங்க கருத்து என்ன?

கவுன்ட் டவுன் போட்டுடவா…

முத்து(தமிழினி) Says:
May 6th, 2006 at 4:31 pm
ஹலோ,

திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணியில் பேராசிரியர் இணைந்துவிட்டதால் சில முற்போக்கு கருத்துக்களை மாற்றிக்கொள்வார் என்று மட்டும் தப்புகணக்கு போட்டுவிடவேண்டாம்.

இன்னும் அவருக்கு குஷ்பு பிடிக்கும்.சின்னதம்பி படத்தை அவர் பதினைந்து முறை பார்த்ததற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

pot"tea"kadai Says:
May 6th, 2006 at 4:32 pm
இன்னும் 4 தான்…ஒரு கை கொடுத்தீங்கனா …100ஐ அசால்டா அடிச்சிடலாம்!

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:34 pm
பாருங்க….

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:35 pm
உங்களுக்கு ஒத்தாசையா ஒருத்தரையும் காணோம்

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:36 pm
பார்ட்னர் செல்வனையும் காணோம்

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:37 pm
உங்க நளபாகத்தை ருசித்த முத்து தமிழினியையும் காணோம்

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:38 pm
அப்பபப்ப வந்து போற டீக்கடைகாரரையும் காணோம்

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:39 pm
மாநாட்டுக்கு வந்தவங்களையும் காணோம்…

கவலப்படாதீங்க நான் இருக்கேன்

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:40 pm
100வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துகள் தருமி சார்

KOZHUNDU Says:
May 6th, 2006 at 4:48 pm
நம்ம சி எம்மோட நூறாவது படம். அவங்க அந்தப் படத்தில அழுத மாதிரி வேற எந்தப் படத்திலயும்
அழுததில்ல. தெலுங்குக்காரங்க எடுத்த படம். இப்படியா படம் எடுப்பாங்க! இவங்க ரசனையே தனி. திருமாங்கல்யத்துக்கு அவ்வளவு முக்கியம். புருசன் யாருன்னு கூட ஞாபகம் இல்லை!
அன்புடன்
சாம்

தருமி Says:
May 6th, 2006 at 8:38 pm
நின்னு அடிச்சி ஆடுன முத்துக்குமரனுக்கு ஒரு ஜே!
ஊர்ப்பாசம்னா ஊர்ப்பாசம்தான்.

Prasanna Says:
May 6th, 2006 at 9:03 pm
////ப்ரஸன்னா,

ஆக்சன் ஹீரோஸ் எப்பவுமே மவுசு தான். // நம்ம எம்.ஜி.ஆர்.,இ.த. விஜய் மாதிரி ..இல்ல : ///

சான்ஸ் கிடைச்சா பழய எம்.ஜி.ஆர் பாட்டு பாருங்க. பாட்டுல வர ஒவ்வொரு வரிக்கும் அபிநயம் பிடிப்பார். அய்யோ விஜய் ஆக்சன் தான, இப்பொ தான் ஷாஜஹான் படம் பார்த்தேன். கொடுமையிலும் கொடுமை. எப்படித்தான்…..

பொன்ஸ் Says:
May 6th, 2006 at 9:04 pm
தருமி,
போனமுறை நீங்க மனசாட்சி அது இதுன்னு எனக்கு ஒத்து வராத (’தமிழ் பண்பாட்டுக் காவலர்களுக்கும்’ ஒத்து வராத) காரக்டரை எல்லாம் கூப்பிட்டதுனால நான் இந்தப் பக்கம் வரலை.. இப்போ எங்க குரு பதிவுல கை கொடுக்க சொன்னீங்கன்னு வந்திருக்கேன்.. ஆமாம்..

Prasanna Says:
May 6th, 2006 at 9:04 pm
நான் சொன்னதுல பாதி நிறைவேறிட்டு போல இருக்கு. வாழ்த்துக்கள்.
பிரசன்னா

தருமி Says:
May 6th, 2006 at 9:24 pm
தமிழினி,
“அவருக்கு குஷ்பு பிடிக்கும்.”//
- இப்போ மாத்தியாச்சே..சொல்லலையா உங்க கிட்ட..?
இப்போ இன்னொரு படத்தை 16 தடவை பாத்தாச்சே, தெரியாதா தல?

தருமி Says:
May 6th, 2006 at 9:26 pm
வெளியே நின்னு கைதட்டி encourage செய்து centuryக்கு வழிகாட்டிய துணைத்தலை பொட்டீக்ஸுக்கு நன்றி

தருமி Says:
May 6th, 2006 at 9:30 pm
கொழுந்து,
நல்லவேளை அந்தப் படம் பார்க்கவில்லை.
“திருமாங்கல்யத்துக்கு அவ்வளவு முக்கியம். புருசன் யாருன்னு கூட ஞாபகம் இல்லை!”//
- பொதுவாகவே, தாலிக்குக் கிடைக்கிற மரியாதை அதைக் கட்டியவனுக்கு பொதுவா கிடைக்கிறதில்லை என்பதே ஒரு வேடிக்கை

சமுத்ரா Says:
May 6th, 2006 at 9:39 pm
//தமிழர்களுக்கு என்று ஒரு நல்ல பண்பாடு இருக்கிறது //

எனக்கு தெரிந்து தமிழர்கள் எல்லோருக்கும் பொதுவாக இருப்பது இட்லி தோசை மட்டுமே.

தருமி Says:
May 6th, 2006 at 10:37 pm
that’s a good one, Samudra

துளசி கோபால் Says:
May 7th, 2006 at 2:24 am
தருமி,

//பொதுவாகவே, தாலிக்குக் கிடைக்கிற மரியாதை அதைக் கட்டியவனுக்கு பொதுவா கிடைக்கிறதில்லை என்பதே ஒரு ……//

ஏன்னா தாலி தங்கத்துலே செஞ்சது.மதிப்பு கூடுதல்.
இப்போ கிராம் 1000 ரூபாயாமே

தருமி Says:
May 7th, 2006 at 9:09 am
துளசி, ஒண்ணுதெரியுமா? உங்க பின்னூட்டத்தை முதலில் பெயர் பார்க்காமலே வாசிக்க ஆரம்பித்து, பாதியிலேயே, ‘ஆஹா, இது துளசி மாதிரி இருக்கே’ன்னு பார்த்தா நீங்களேதான்!

கண்டுபிடிச்ச என் ‘தெறமய’ சொல்லவா? இல்ல, இப்படி தனக்கென ஒரு ஸ்டைலை வச்சிருக்கிறத சொல்லவா? எதுன்னு தெரியலையே! (சிவாஜி ஸ்டைல்?)

துளசி கோபால் Says:
May 7th, 2006 at 11:45 am
தமிழ்மணத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதிச்சிட்டேன்னு சொல்றீங்கதானே?

‘வாழ்க’ போட ஏன் தயக்கம்? எலக்ஷன் திருவிழா முடிவுக்கு வந்துருச்சேன்னு கலக்கமா?

தருமி Says:
May 7th, 2006 at 7:48 pm
துளசி,
“தமிழ்மணத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதிச்சிட்டேன்னு சொல்றீங்கதானே?”//
நெஜம்ம்ம்மாதான் துளசி.

வாழ்க துளசி வாழ்க…உங்களுக்கு வாழ்கன்னு சொல்லாம நான் வேறு யாருக்கு’மா சொல்லமுடியும்? (மறுபடியும் சிவாஜி ஸ்டைல்)

4 comments:

மிஸஸ்.டவுட் said...

//உலகம் முழுவதும் இருக்கிற பண்பாடுதான் நம்ம ஊர்லயும். இங்க மட்டும் ஒழுக்கக் குன்றுகளாக மனிதர்கள் இருப்பது போலவும் மற்ற மக்கள் எல்லோரும் மாக்களாக உலாத்துவது போலவும் ஒரு பிரம்மை. இங்கே ஒருவன் ஒருத்தி என்றிருந்திருந்தால் சிலப்பதிகாரம் வந்திருக்காது; பிறன்மனை விழையாமை என்ற வள்ளுவ அதிகாரம் வந்திருக்காது. நாமும் மற்றவர்கள் போலவே நல்லதும் கெட்டதும் கலந்த குணக்காரர்கள்தான். நாம் ஒன்றும் ஸ்பெஷல் ஐட்டம் இல்லை.
//

நியாயமான வார்த்தைகள் ...இதை யாரும் ஒத்துக் கொள்வதாகத் தான் தெரியவில்லை. "உத்தமர் " வேஷம் போடுவதில் ஆண்களுக்குப் பெண்களும் சளைத்தவர்கள் இல்லை இங்கே! இங்கே என்றில்லை எங்கேயும் தான் இது நிகழ்கிறது .நம்மால் வேடிக்கை பார்க்கவும் விமர்சிக்கவும் தானே முடிகிறது...

கலகலப்ரியா said...

செம... சூப்பர்ப் போஸ்ட்...

Thekkikattan|தெகா said...

வாவ்! கலக்கலான போஸ்டா இருந்திருக்கே! 2006ல எல்லாம் குழந்தையா இருந்த நான் அப்போதான் தரையில பொரண்டு படுத்துக்க கத்துக்கிட்டு இருந்திருப்பேன் போல... :))

அருமையான தொகுப்பும், அட்டகாசமான கலந்துரையாடலும்.

தருமி said...

நன்றி -
கலகலப்ரியா & தெக்ஸ்

Post a Comment