Sunday, November 26, 2006

190. அம்மா இங்கே வாங்க / அம்மா இங்கே வா...

*


அம்மா இங்கே வாங்க / அம்மா இங்கே வா... இதில் எது சரி?


வலது பக்கம் ஓட்டுப் பொட்டி இருக்கு; ஒண்ணு போட்டுட்டு போங்க...

கல்யாணமான புதிதில் கட்டிய மனைவியை 'வாங்க..போங்க'ன்னு மரியாதையா பேசணும்னு பெரியார் சொன்னதாக வாசிச்சப்போ, 'அதெல்லாம் எதுக்கு..வயசு நம்மளவிட கம்மி, அதுக்குப் பிறகு வாங்க போங்கன்னு எதுக்குச் சொல்லணு'ம்னு நினைச்சேன். ஆனால் இப்போவெல்லாம் எல்லோருமே மனைவியைப் பற்றி அடுத்தவர்களிடம் பேசும்போது மனைவிக்கு மரியாதை கொடுத்தே பேசுவதைப் பார்க்க முடிகிறது. நல்ல பழக்கம்; நானும் மாறிட்டேன். என்ன அவர் சொன்னதை நாம் ஏத்துக்கிறதுக்கு இத்தனை வருஷம் ஆயிருக்கு.ஆனா அத சொல்றதுக்காக இப்போ இந்தப் பதிவை எழுதவில்லை.

அடுத்து இன்னொரு விஷயம். அந்த என் சின்ன வயதில் பல படித்த குடும்பங்களில் (படிக்காவிட்டாலும்தான்) டாடி,மம்மி என்று அப்பா அம்மாவைக் கூப்பிடுவது ஃபாஷனாக இருந்தது. எப்படியோ அதுவும் நல்லபடியாக அப்பா, அம்மாவாக மாறிப்போச்சு.

அடுத்து பார்த்த ஒன்று; இது கடந்த 10 ஆண்டுகளுக்குள்தான் - பிள்ளைகளைப் பெற்றோர்களே 'வாங்க..போங்க; என்று பேசுவது. சின்னக் குழந்தைகளைக் கூட. இதற்குக் கொடுக்கும் காரணம்;நாமே மரியாதை கொடுத்துப் பிள்ளைகளிடம் பேசுவதால் அவர்களும் அதேபோல் பெற்றோருக்கு மட்டுமல்லாமல் எல்லோரையும் மரியாதையாக பேசிப் பழகுவார்கள் என்பது. இதுவும் நன்றாக இருக்கிறது. அதுபோன்ற குழந்தைகள் மற்றவரைப் பற்றிப் பேசும்போது நாகரீகமாகப் பேசுவதைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக எல்லா மாணவர்களும் தங்களுக்குள் பேசும்போது ஆசிரியர்களை எப்படிப் பேசுவார்கள் என்பது தெரியுமே. இந்தக் குழந்தைகள் எல்லோரையுமே நேரில் பேசும்போதும் சரி, மற்றபடியும் சரி நல்லவிதமாகப் பேசுவதைப் பார்க்க முடிகிறது.

இப்படி நிஜ வாழ்வில் நல்ல விஷயங்களாக சிலவைகள் மாறி வருவதை பார்க்க முடியும் அதே நேரத்தில் நம் திரையுலகில் இது அப்படியே உல்ட்டாவாக நடந்து வருகிறது ஏனென்று தெரியவில்லை. அதிலும் பெரிய திரையையும் விட சின்னத்திரையில் இது மிக அதிகமாகத் தெரிகிறது. இன்றைய நிலையில் சின்னத்திரை நம் வாழ்க்கையோடு ஒன்றி விட்ட நிலையில் சினிமாக்களை விடவும் சின்னத்திரை சீரியல்களே நம்மை, அதுவும் நம் குழந்தைகளை மிகவும் நேரடியாகப் பாதிக்கும் சூழல் உள்ளது. ஏனென்றே தெரியவில்லை - நம் சின்னத்திரை இயக்குனர்கள் தங்கள் படைப்புகளில் பலவற்றிலும் சின்னக் குழந்தைகளோ, வளர்ந்த பிள்ளைகளோ தங்கள் அப்பா, அம்மாவை ஒருமையில் அழைத்துப் பேசுவதாகவே காண்பிக்கிறார்கள். பொதுவாக தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, 'நாங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கிறோம்; நடப்பதைத்தான் காட்டுகிறோம்' என்று சொல்லி தப்பிப்பதுதான் அவர்கள் வழக்கம். ஓரிரு சமூகங்களில் பெற்றோரை, குறிப்பாக அம்மாவை ஒருமையில் அழைப்பது பழக்கமாக இருக்கலாம். ஆனாலும் பெரும்பான்மையான சமூகங்களில் பெற்றோரை மரியாதையோடு அழைப்பதையே பார்க்கிறோம். பின் ஏன் நமது இயக்குனர்கள் இப்படிக் காண்பிக்கிறார்களோ தெரியவில்லை.

நம் சீரியல் இயக்குனர்களுக்குப் பெரிய சமூகக் கடமை இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது தவறுதான். இருந்தாலும் இல்லாத ஒன்றை ஏன் இப்படி பிரபலப்படுத்துகிறார்கள்? அப்படியே ஏதோ ஒரு சமூகத்தில் இருக்கிறது என்றாலும் பெரும்பான்மை சமூகங்களில் இருப்பதைப் பிரதிபலிக்கக் கூடாதா? ஏன் அந்த சிறுபான்மை மக்களின் வழக்கத்தை எல்லோரின் வழக்கமாக மாற்றும் முயற்சியா இது? இந்த சீரியல்களுக்கு வசனம் எழுதுபவர்கள் இதை கொஞ்சம் யோசிக்கக் கூடாதா? இரண்டு options இருக்கும்போது அவர்கள் ஏன் தவறான ஒன்றை இப்படி இறுகப் பிடித்துக்கொண்டு தொங்க வேண்டுமோ தெரியவில்லை.

யாராவது அவங்ககிட்ட இதைச் சொல்லுங்களேன், ப்ளீஸ்.

*
ஓட்டு போட்டுட்டீங்களா?
*

24 comments:

Machi said...

சின்னத்திரையில் நல்ல செய்தியை சொல்லறதா? விவரம் புரியாத ஆளா இருக்கிறீங்களே. நல்ல செய்தியை சொன்னா யார் பார்ப்பாங்க? தொடரோட ரேட்டிங் கீழ போயிரும்பா.

துளசி கோபால் said...

அடுத்தவங்ககிட்டேப் பேசும்போது, 'அப்பா வந்துட்டார், அம்மா வந்துட்டாங்க'
இப்படிச் சொல்வோமே தவிர அம்மாகிட்டே நேரிடையாப் பேசும்போது,
'அம்மா இங்கே பாரும்மா, இதைச் செஞ்சு தாம்மா'ன்னெல்லாம்தான்
சொல்லி இருக்கேன்.

ஒருவேளை ரொம்ப உரிமையாலெ இப்படி ஒருமையிலே சொல்றோமோ?:-)


சின்னத்திரை: நீங்கதான் சொல்லணும்.

பொன்ஸ்~~Poorna said...

//அடுத்தவங்ககிட்டேப் பேசும்போது, 'அப்பா வந்துட்டார், அம்மா வந்துட்டாங்க'
இப்படிச் சொல்வோமே தவிர அம்மாகிட்டே நேரிடையாப் பேசும்போது,
'அம்மா இங்கே பாரும்மா, இதைச் செஞ்சு தாம்மா'ன்னெல்லாம்தான்
சொல்லி இருக்கேன்.
//
அதே அதே..

தருமி said...

குறும்பன்,

one should treat morals and
one need not teach morals
அப்டிம்பாங்க.

இது ஒரு நல்ல வழக்கம்னு போர்டு ஒண்ணும் போடாம, சும்மா காமிச்சாலே சமூகத்துக்குள்ளே பாஸிட்டிவான விஷயங்கள் permaeate ஆயிடாதா..? அதவிட நெகட்டிவான விஷயங்களை, வாங்க..போங்கன்னு பேசிக்கிட்டு இருக்கிற குழந்தைகளையும் மாத்தக் கூடாதல்லவா?

தருமி said...

துளசி, பொன்ஸ்,

//ஒருவேளை ரொம்ப உரிமையாலெ இப்படி ஒருமையிலே சொல்றோமோ?://

அப்பாட்ட மட்டும் ஏன் அந்த உரிமை எடுத்துக்கிறதில்லை? ஆனாலும் ரொம்பத்தான் partiality :)

பொன்ஸ்~~Poorna said...

//அப்பாட்ட மட்டும் ஏன் அந்த உரிமை எடுத்துக்கிறதில்லை? ஆனாலும் ரொம்பத்தான் partiality :) //
தருமி, எங்க வீட்ல நோ பார்ஷியாலிடி.. அப்பாவும் அம்மாவும், மகனும் மகளும், எல்லாமே ஒண்ணு தான்.. :)

இராம்/Raam said...

ஐயா,

நான் இன்னவரைக்கும் எங்க அப்பா,அம்மாவே வாங்க,போங்கன்னு சொன்னதே கிடையாது... :-)))

Anonymous said...

தருமி ஐயா,

உங்கள் பதிவை படித்தேன்.எனக்கு கொஞ்சம் அதிசயமாக தான் உள்ளது.

காரணம் எனக்கு தெரிந்த வரை என் அப்பா-அம்மா, அப்பப்பா-அப்பாச்சி என வீட்டில் அனைவரும் மனைவியை "அம்மா" என்றும், கணவனை "அப்பா" என்றும் தான் அழைப்பார்கள்.

இந்த பதிவை படித்த பின்னர், அப்பாவிடம் கேட்டேன், அப்பபாவின் தந்தையார் கூட அப்படி தான் அழைப்பார்களாம்.

சிறுவயதில் இருந்து நான் பார்த்து பேசின தமிழர்கள் என்றால் எனகு குடும்பம் தான்.

சில வருடங்களுக்கு முன்னர் வேறு தமிழர்களை சந்தித்த போது, ஆரம்பத்தில் எனக்கு "நீ" "வா" "போ என ஒருமையில் அழைப்பது...படிக்கவே, கேட்கவே கஸ்டமாக இருக்கும்.

காரணம் எனது பெற்றோர், அப்படி சொல்வது கெட்ட வார்த்தை சொல்வது போல் என சொல்லி வளர்த்திருக்கின்றார்கள்.

இப்பொழுது வலைப்பூக்களிலும், இணைய பக்கங்களிலும் பார்த்து பார்த்து கொஞ்சம் பழகிவிட்டது.

அத்துடன் பிறந்த குழந்தை என்றாலும் "நீங்கள்..வாங்கள்..போங்கள்" என தான் எங்கள் குடும்பத்தில் சொல்வார்கள்.

"நீ, வா" என பேசுவது ஒரு வழக்கு முறை (சரியான தமிழ் வார்த்தையா என தெரியவில்லை) என நான் நினைத்திருந்தேன்.

மேலும் இது தொடர்பான தகவல்களை அறிய ஆவல்.

நன்றி

Thekkikattan|தெகா said...

தருமி,

எனக்கு இங்க பல பேர் சொல்வது மாதிரியேத்தான் படுகிறது. கொஞ்சம் அதிகமான friendlyயான முறையில் இருப்பதாக படுகிறது இந்த ஒருமை ஒரு சில நேரங்களில்... வேதா சொல்வது போல உரிமை + நல்ல நண்பனுக்குரிய புரிதல்கள்...

எனது தம்பி எனது அப்பாவை தொலைபேசியில் அழைக்கும் பொழுது அவரின் பெயரைச் சொல்லி "என்ன அண்ணாமலை எப்படிப் போகுது" என்று விளிப்பான் அதற்கு அடுத்தப் பக்கமிருந்து பலத்த சிரிப்பொலியே பதிலாகக் கிடைக்கும். கேட்கும் எனக்கும் சிரிப்பை அடக்க முடியாது.

ஆனால், மற்றவர்களிடத்தே சுட்டி பேசும் பொழுது அவர்களுக்குரிய மரியாதை உள்ளத்திலிருந்து அப்படியே தப்பாமல் கிடைக்கிறது.

சரியா, தவறா...??

ஸயீத் said...

அம்மாவை மட்டுமே பெரும்பாலோர் ஒருமையிலும் ஆனால் அப்பாவை மரியாதையுடனும் அழைக்கிறார்கள் இதற்கு காரணம் குழந்தையிலிருந்து நாம் அதிகமாக இருப்பது அம்மாவுடன் தான், நாம் அவருடன் அதிகமாக பிண்ணிப்பிணைந்து விடுவதால் அவருடன் இயற்கையிலேயே கூடுதலான நட்பு கிடைத்து விடுகிறது.

நம்மைப் பெற்றோர் வயதான காலத்தில் நம்முடன் இருக்கும் பொழுது நாம் அவர்களுக்குச் செய்யும் சேவைதான் அவர்களை உண்மையில் சந்தோஷமடயச் செய்யும். இன்றய சீரியல் கலாச்சாரத்தால் பெற்றோர்களை நம்மவர்கள் முதியோர் இல்லத்திற்க்கு அனுப்பாமல் இருந்தால் சரி.

மங்கை said...

தருமி சார்

நான் அப்பா கிட்ட தான் அதிக ஒட்டுதல்..செல்லம்...எல்லாம்...

மத்தவங்க முன்னால நாம அவங்ககிட்ட நடந்துக்குறதுல இருக்குன்னு நான் நினைக்குறேன் தருமி ஐயா...

இருந்தாலும் this depends...something
what idea parents have about this..

அப்பாவ மட்டும் வாங்க போங்கன்னு கோபிடறது...reflects the patriachal society..

:-)))...சரியாங்க ஐயா..... தப்பா இருந்தா மன்னிக்கவும்...சந்தடி சாக்குல இப்படி ஒன்ன சொல்லீட்டேன்

The Buddha said...

வீட்டுக்கு வீடு இது மாறுபடும் என்றாலும் என்னை (என் வீட்டை) பொறுத்த மட்டில் "வாங்க..போங்க"தான். எனக்கு அதில் பெருமையே. வீட்டிலே தொடங்குவதால் மரியாதை ரத்தத்திலேயே கலந்துவிடும். என்னால் யாரையுமே சுலபமாக "வா...போ" என சொல்ல இயலாது. இது ஒரு பெர்ஸனல் சாய்ஸ். சரி-தவறு என சொல்ல முடியாது

தருமி said...

ராம்,
தூயா,
வேதா,
(எப்படி இப்படி ரெண்டெழுத்து பேருள்ள ஆட்களா வந்தீங்க வரிசையா..?!)

நன்றி.

தருமி said...

த்க்ஸ்,

என் பிள்ளைகளும் செம ஜாலி மூட்ல 'ஹலோ sam' அப்டின்னு சொல்றது உண்டுதான்.

தருமி said...

ஸயீத்,

நன்றி

தருமி said...

மங்கை,
சந்தடி சாக்குல இப்படி
//அப்பாவ மட்டும் வாங்க போங்கன்னு கோபிடறது...reflects the patriachal society..//
சொல்லிட்டு போய்ட்டீங்க...

இந்த FCS அப்டின்னா தெரியுமில்லீங்க.. :)

பி.கு. ஸ்மைலி போட்டுட்டேன்!!

தருமி said...

the buddha,
நானும் நீங்க நினைப்பதையே நினைக்கிறேன்.

நன்றி.

Anonymous said...

ஸார்,
எங்க வீட்டில அம்மாவை "வா, போ" என்றும் அப்பாவை "வாங்க போங்க" என்றும் கூப்பிடுவோம். Most of the சொந்தக்காரங்க வீட்டுலயும் அப்பிடித்தான். இந்த பதிவையும் பின்னூட்டங்களையும் பார்க்கும் போது ஒன்று தோன்றியது. நம்ம தமிழ் ரைம்ஸ்ல என்ன சொல்லித்தரோம்?
"அம்மா இங்கே வா வா,
ஆசை முத்தம் தா தா..."

அன்புடன்,
காட்டான்.

தருமி said...

இந்த நிமிடம் வரை ஓட்டு விவரம்:
ஆம் :........20 பேர்;விழுக்காடு 62
தேவையில்லை:18 பேர்;விழுக்காடு 38

நான் சொன்னதற்கு அதிக வாக்குகள் (62%) கிடைத்திருந்தாலும் நான் சொன்னது போல் பெருவாரியான மக்கள் என் கருத்தில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, அதை ஒப்புக் கொள்கிறேன்.

ஆகவே, சின்னத்திரைக்காரர்களைத் தப்பு சொல்வது தப்பென்று புரிந்து அதை withdraw செய்து கொள்கிறேன்.

ஆயினும், புத்தா சொன்னது போல் - //வீட்டிலே தொடங்குவதால் மரியாதை ரத்தத்திலேயே கலந்துவிடும்.// குழந்தைகள் எல்லோருக்கும் மரியாதை தருவதை வீட்டிலிலிருந்தே பழக வேண்டுமென்பது எனக்குச் சரியாகப் படுகிறது.

ஓட்டெடுப்புதான் முடிந்துவிட்டதே..ஆகவே எடுத்து விடுகிறேன்.

நன்றி.

மங்கை said...

//இந்த FCS அப்டின்னா தெரியுமில்லீங்க..:) //

ஐயோ..தருமி ஐயா.. FCS னு என்ன நினச்சுட்டீங்களா...அப்படியெல்லாம் இல்லை ஐயா...

எதையும் எப்பவும் பொதுப்படையாக்கறது எனக்கு பிடிக்காது
ச்ச்சும்ம்மா..கிண்டல்க்கு தான் patriachal society னு சொன்னேன்...

FCS/MCS.. இதுல ரெண்டுலேயும் எனக்கு உடண்பாடு இல்லை..

இன்னொன்னும் சொல்லீடறேன் ஐயா.. பெண் என்ற ஒரே காரணத்தினால நான் யாராலும் எந்த விதத்திலும் பாதிக்கபடவில்லை.. சராசரி மனிதனுக்கு ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது.. ஆனால் அது நான் பெண்ணாக இருப்பதால் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை..

ரொம்ப பேசீட்டனா சார்..சரி முடிச்சுடறேன்..:-))

தருமி said...

கிண்டல்க்கு தான் patriachal society னு சொன்னேன்...//
அதனாலதான் பதிலுக்குக் கிண்டல் செய்தேன்; தவறாக எடுத்துக் கொள்ளவில்லையென்பது பதிலில் தெரிகிறது. அதற்கு முதலில் நன்றி.

//FCS/MCP.. இதுல ரெண்டுலேயும் எனக்கு உடண்பாடு இல்லை..//
அப்டியா சொல்றீங்க..

//ரொம்ப பேசீட்டனா...?//
எங்கங்க நீங்க இன்னும் பேசவே ஆரம்பிக்கலைன்னு நினச்சுக்கிட்ட இருக்கேன்.

ஜிஎஸ்ஆர் said...

எனக்கென்னமோ அதிகம் அன்பு வச்சுருக்குவங்கள நாம வா போ- இப்படித்தான் அழைக்கிறோம் சரி உங்களையே முதன் முறை நான் பார்க்கிறேன் என வைத்துக்கொள்வோம் நாட்கள் செல்ல செல்ல அன்பும் புரிதலும் கூடும் போது ஒருமையில் தான் அழைக்க தொடங்குவோம் அதில் இன்றும் தவறிருப்பதாக் எனக்கு தெரியவில்லை


வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

cheena (சீனா) said...

அன்பின் தருமி அண்ணே !

அண்ணே சொல்லணுமா அய்யா சொல்லணுமா - கோயம்புத்தூர்காரருக்கு ரெண்டு வயசு தான் கம்மின்னு சொல்லி இருக்கீங்க - ம்ம்ம்ம்


நான் துளசி கச்சி - என் புள்ளைங்களும் எங்கள வா போ தான் - பேத்திகளும் பேரன்களும் யூ தான் ( நீ நீங்கள் இரண்டுக்கும் யூ தானா )
ஆனா தெக்ஸ் மாதிரி இன்னும் பேர் சொல்லிக் கூபீடல

ஆகா எப்பவோ எழுதுனதுக்கு இன்னிக்குப் பதிலான்னு கேக்காதீங்க

வரட்டா

cheena (சீனா) said...

எங்க வூட்ல பார்சியாலிட்டி கிடையாது - எனக்கும் என் துணைவிக்கும் ஒரே மரியாதைதான் - ரெண்டுபேரையுமே சகட்டு மேனிக்கு வா போ நீ தான்

Post a Comment