Monday, April 16, 2007

212. அந்த அழகிய நிமிடங்கள்...

எந்த வேலைய யாரு செய்யணும்னு ஒரு விவஸ்தை வேணும். சும்மா ஒருத்தர் கேட்டதற்காக செய்றது அப்டிங்கிறது ஒரு பெரிய விஷப் பரிட்சைதான். இருந்தாலும் தலைவிதின்னு ஒண்ணு இருக்கே; விடுதா நம்மள அது....

இப்போ பாருங்க நம்ம கொத்ஸ் இந்த அழகு பத்திய ஒரு பதிவை ஆரம்பிச்சாரு ... அழகான ஆளுகளுக்கெல்லாம்தான் இப்படி அழகான ஐடியா வரும். அப்போ அவரு அழகாத்தான் இருக்கணும். அதுக்குப் பிறகு நம்ம ராம் என்னைய மாட்டி உட்டுருக்காரு ... அவர பத்தி நான் சொல்லணுமா ..இளஞ்சிங்கம்.. மதுரைக்கார பாசக்கார பயர் ..(பயர் அப்டின்னா என்னன்னு கேக்குறீங்களா? "பய" அப்டின்றத கொஞ்சம் மரியாதையா சொல்லணும்னா "பயர்" அப்டின்னுதான சொல்லணும்?! இல்லீங்களா?) இந்த மாதிரி ஆளுக 'அழகு' பத்தி பேசுனா அதில அர்த்தம் இருக்கு; காடு வா .. வா .. அப்டின்ற கட்டத்தில இருக்கிற என்னையக் கூப்பிட்டு, அழகு பத்தி சொல்லுடா அப்டின்னா என்னத்த சொல்றது. நமக்கும் அழகுக்கும் காத தூரம்; என்னத்தன்னு சொல்றது .. சொல்லுங்க .. ஒண்ணும் தெரியலை போங்க ... அழகுக்கும் நமக்கும் உள்ள தொலைவு ரொம்ப அப்டிங்கிறதினால. அழகான விஷயங்களைப் பத்தி சொல்றதை விடவும் என் வாழ்வின் சில அழகான தருணங்கள் பத்தி சொல்லலாமுன்னு நினைக்கிறேன் ...

1. ... 74, செப்டம்பர் 12 மதியம் 2.20க்கு ஒரு சம்பவங்க ... மூத்தவளை மொதல்ல பார்த்தது .. அதுவரை புதுசா பொறந்த குழந்தைய அவ்வளவு close-up-ல் பார்த்ததுகூட கிடையாது; அப்படியே அதுவரை பார்த்ததும் கண்ணு சரியா திறக்காம, மூஞ்செல்லாம் ஒரு மாதிரியா சப்பையா அரைகுறை மூஞ்சுகளாகவே இருந்துதான் பார்த்து இருக்கேன். ஆனா இப்ப முழுமையான, ரோஸ்கலர்ல கன்னம், திறந்த கண்கள், நல்ல நீளமா மாமியார் கையில் இருந்த அந்தக் குழந்தைய பார்த்த அந்த நிமிடம் இன்னும் பச்சுன்னு மனசுல இருக்கு; எப்பவும் இருக்கும். ரெண்டு மணிக்குக் குழந்தையோட அழுகைச் சத்தம் கேட்டு, இரண்டு பத்துக்கு பெண் குழந்தைன்னு சேதி கேட்டு, இரண்டு இருபதுக்கு நேரில பார்த்த அந்த நிமிடம் வாழ்க்கையில் உறைந்து நின்று விட்ட அழகு நிமிடம்.

2... மூத்த பிள்ளையா பிறக்கிறதில ஒரு லாபம் இருக்கு. பெத்தவங்களுக்கும், மத்தவங்களுக்கும் அது ஒரு புது அனுபவம்தான். பிள்ளையா பிறந்த நேரமே மனசுல பசுமையா இருக்கிறப்போ அந்த பிள்ளைக்கு ஒரு பிள்ளை பிறக்கிறதும், அதை ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து பார்க்கிறதும் ... ம்..ம்ம்ம்... அதுக்கெல்லாம் ரொம்பவே கொடுத்து வைத்திருக்கணுமாம். எனக்கு அந்தக் கொடுப்பினை இருந்திச்சி .. 18 மணி நேர டென்ஷன் முடிந்து, முதல் பேரப் பிள்ளைய பார்த்த அந்த முதல் நிமிடங்களும் மனசெல்லாம் நிறைஞ்ச, உறைஞ்ச நிமிடங்கள். நினைக்கும் போதெல்லாம் மனசுக்குள் ஒரு விம்மலைக் கொண்டு வரும் நிமிடங்கள்.

இந்த இரு அழகிய நிமிடங்களைத் தவிர நினைத்துப் பார்த்தால் வேறு எந்த நிமிடங்களோ, விஷயங்களோ ரொம்ப பெரிதாகத் தோன்றவில்லை. ஆனாலும், 6 அழகிய விஷயங்கள் வேண்டுமாமே .. கொஞ்சம் முயற்சித்துப் பார்க்க வேண்டும் ...

3.... எப்போதுமே குளிர்னா ரொம்ப பிடிக்கும்; igloo-வில இருக்கிறதுமாதிரி கற்பனை பண்ணினாக் கூட நல்லாவே இருப்பதுண்டு. கொடைக்கானல் எத்தனையோ முறை சென்றிருந்தாலும் ஒரு தடவை டிசம்பர் மாதம் சென்றபோது, நடு இரவு தாண்டி குளிராடையைப் போட்டுக் கொண்டு, நண்பர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தனியாக இரவில் நிலவைப் பார்த்துக் கொண்டு நடுக் காடு ஒன்றில், சில்வண்டு - Cicada - வின் இறைச்சல் மிகச் சரியாக ஒவ்வொரு 18 வினாடிக்கு ஒரு முறை (மனசுக்குள் 36 எண்ணினால் சரியாக 18 வினாடி என்ற கணக்கு - photography darkroom-ல் பழக்கப் படுத்தியது ) ஆரம்பித்து, 6 வினாடிகள் தொடர்ந்து ... மறுபடி 18 வினாடிகள் காத்திருந்து அடுத்த அந்தச் சில்வண்டுகளின் ஒலியைக் கேட்டு ... தொடர்ந்த அந்த தனிமையான, வித்தியாசமான, கொஞ்சம் பயம் கலந்த அந்தக் குளிர் இரவின் அழகு - அது மற்றொரு உறைந்து மனதில் நின்று விட்ட அழகான தருணம்.

4.... நம்ம அமெரிக்கா போனதை எப்படிதான் நம்ம பதிவர் மக்களுக்குச் சொல்ல முடியும்; இந்த மாதிரி நேரத்தை உட்டுட்டா எப்ப முடியும்? அதனால் அங்க பார்த்த அழகு நிமிடம் பற்றிச் சொல்லி விட வேண்டாமா?

ஏற்கெனவே சொன்னது மாதிரி குளிர்னா ரொம்ப பிடிக்கும்.பனிமழை, பனியா உறைஞ்சி இருக்கிறதைப் பார்க்க அனுபவிக்க ஆசை. ஆனா மதுரக்காரனுக்கு இது நடக்குற வேலையா? திடீர்னு அமெரிக்கப் பயணம் அப்டின்னதும் நினைவுக்கு முதலில் வந்தது பனி உறைந்த சாலைகளும், பனி மூடிய மரங்களும்தான். ஆனால் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தரை இறங்கியவனுக்கு பனிக்காலமெல்லாம் முடிஞ்சி போச்சு அப்டின்னது ஒரே சோகமா போச்சு... இரண்டாவது நாளோ, மூன்றாவது நாளோ ஒரு ஒரு ரூபாய் நோட்டு (இன்னும் அது இருக்கிறதா என்ன?) அகலத்தில் இருந்த ஒரு உறை பனியைப் பார்த்த போது, ம்ம்.. இவ்வளவுதானா என்ற சோகம் மட்டுமே மிஞ்சி நின்றது. ஆனால் அதன்பின் ஒரு நாள் ... காலை பத்து மணியளவில் கல்லூரிக்குள் நுழைந்தவன் மதியம் மூன்று மணிக்கே வெளியே வந்தேன். காலையில் நுழையும்போது மித வெயில்; பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. மூன்று மணிக்கு வெளியே வந்தபோது எங்கும் ஐஸ்; எதிலும் ஐஸ் ... தரையெங்கும் வெள்ளை வெளேரென்று மூடியிருந்தது. ரொம்பவே வித்தியாசமான உலகமாக இருந்தது. அப்பாடா... ஐஸ் மூடிய உலகத்தைப் பார்த்து விட்டோம் என்ற நினைவில், கல்லூரிக் கட்டிட வாசலிலேயே நிறைய நேரம் நின்று அந்தப் புதிய உலகத்தை, உறைந்த பனியைப் பார்த்துக் கொண்டு உறைந்து நின்ற அந்த நிமிடங்கள்...

இதுபோல் இன்னும் சில பல நிமிடங்கள் உண்டுதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அதில நிறைய வெளியே சொல்ல முடியாத, சொல்லக் கூடாத நிமிடங்கள் அப்டின்னு வச்சுக்குங்களேன். அதனால் சாய்ஸ்ல விட்டதா வச்சுக்கிட்டு, ஆறுக்கு நாலு மட்டும் சொல்லிட்டு முடிச்சிக்கிறேன்.

ஆனால் அடுத்து வர்ர, நான் அழைக்கிற மூன்று பேர்களும் அந்த ஆறு அழகுகளை அடுக்கி வைக்கும்படி கேட்டுக்கிட்டு ...
அழைக்கட்டுமா அந்த மூன்று பேரை ...

1. T.B.R. ஜோசப் ( நம்ம வயசுக்கு ஏத்த மாதிரி நம்ம ஜோட்டு ஆளைக் கூப்பிட வேண்டாமா, என்ன?)

2. மதுமிதா - கவிஞர்கள் சொல்ல, பேச வேண்டிய அழகான விஷயத்துக்கு ஒரு கவித்துவ பதிவரையாவது கூப்பிட வேண்டாமா..?

3. நல்லடியார் - பேசு பொருள் பலவும் இருக்கிறதல்லவா .. அதனால் இவரை அப்படி இதைபற்றிப் பேசுமாறு அழைக்கிறேன்.

வாருங்கள் ... உங்கள் பார்வையில், உங்களுக்குப் பிடித்த அழகான 6 விஷயங்களைச் சொல்லுங்களேன்.

23 comments:

நண்பன் said...

அய்ய்ய்ய்ய்யோஓஓஓஓ

தருமி,

உங்களுக்கும் இந்த மாதிரியான சிறுபிள்ளைத்தங்களெல்லாம் உண்டா?

வேடிக்கை தான். ஆனாலும், மூத்தவளைப் பார்த்ததை சொன்னது அழகு தான்....

(இந்த மாதிரியான பதிவுகளுக்கு நான் பின்னூட்டம் கூட போட விரும்புவதில்லை... உங்களுக்காக மட்டும் தான் இந்தப் பின்னூட்டம்....)

அன்புடன்
நண்பன்

delphine said...

அதுவரை புதுசா பொறந்த குழந்தைய அவ்வளவு close-up-ல் பார்த்ததுகூட கிடையாது;//////This bundle of joy is the best and most beautiful in Gods Creation. As a doctor I always feel very happy that I am the first one to hold these bundles of joys in my hands as soon as they come out into this world..

இலவசக்கொத்தனார் said...

//அப்போ அவரு அழகாத்தான் இருக்கணும்.//

என்னங்க நம்ம ப்ரொபைல் படம் பார்க்கலையா? அப்புறம் என்ன சந்தேகமாச் சொல்லிக்கிட்டு? :-D

//பயர் அப்டின்னா என்னன்னு கேக்குறீங்களா? //

பயர் அப்படின்னா தீ தானேங்க? நம்ம ராயலைப் போல தீ உண்டா? :-D

//அழகு பத்தி சொல்லுடா அப்டின்னா என்னத்த சொல்றது.//

சமீபத்தில் 1947ல் அப்படின்னு ஆரம்பிக்க வேண்டியதுதானே? பல காலகட்டங்களில் அழகு எப்படின்னு தெரிஞ்சுக்கத்தான் நான் வல்லியம்மா, துளசி டீச்சர், தம்பி அப்படின்னு தேடிப் பிடிச்சு கூப்பிட்டேன். ஹிஹி.

//அந்த நிமிடம் வாழ்க்கையில் உறைந்து நின்று விட்ட அழகு நிமிடம்.//

மீ மீ ( அதாங்க மீ டூ!)

//மூன்று மணிக்கு வெளியே வந்தபோது எங்கும் ஐஸ்; எதிலும் ஐஸ் ... தரையெங்கும் வெள்ளை வெளேரென்று மூடியிருந்தது. //

அது ஐஸ் அப்படின்னு சொல்லக்கூடாது. ஸ்நோ அதாவது பனிமழை. நல்ல மணல் மாதிரி இருக்கும், விளையாடலாம். எல்லாருக்கும் பிடிக்கும். ஆனா ஐஸ் வந்து உறைபனி. வழுக்கி விடும். யாருக்கும் பிடிக்காது.

தருமி said...

நண்பன்,
//உங்களுக்கும் இந்த மாதிரியான சிறுபிள்ளைத்தங்களெல்லாம் உண்டா?//
எதச் சொல்றீங்க .. இந்த tag செஞ்சு விளையாடுறதைச் சொல்றீங்களா .. இதுக்காகவே அடுத்த சான்ஸ் வந்தா உங்களதான் மொதல்ல மாட்டி உடணும் .. பாருங்க!

//உங்களுக்காக மட்டும் தான் இந்தப் பின்னூட்டம்....)// மிக்க நன்றி. ஆனா அடுத்த தடவை ஜாக்கிரதை..உங்களத்தான் மொதல்ல tag பண்ணுவேன்.

தருமி said...

டெல்ஃபின்,
thanks for sharing your first-hand and first-to-handle experiences.

//most beautiful in Gods Creation.//
அப்புறம் ஏன் என்ன மட்டும் 'அப்படி' படைச்சாரு? :)

தருமி said...

கொத்ஸ்,

ஆமா ..ஆமா. உங்க ப்ரோஃபைல் படம் பார்த்தேன்..நல்லாத்தான் இருக்கீங்க.. ரொம்பத்தான் ஸ்டைலு போங்க ..கைல ஒரு மீனப்பிடிச்சி தூக்கிக் கிட்டு இருந்திருந்தா போஸ் இன்னும் நல்லா இருந்திருக்கும் !

//சமீபத்தில் 1947ல் அப்படின்னு ஆரம்பிக்க வேண்டியதுதானே? //
ரொம்ப stale ஆக இருக்காது?

ஐஸ் - திருத்தினதுக்கு நன்றிங்க .. எங்களுக்கு எங்க இதெல்லாம் தெரியுது. பஞ்சத்துக்கு ஆண்டி ..!

இராம் said...

//அதுக்குப் பிறகு நம்ம ராம் என்னைய மாட்டி உட்டுருக்காரு ... அவர பத்தி நான் சொல்லணுமா ..இளஞ்சிங்கம்.. மதுரைக்கார பாசக்கார பயர் ..(பயர் அப்டின்னா என்னன்னு கேக்குறீங்களா? "பய" அப்டின்றத கொஞ்சம் மரியாதையா சொல்லணும்னா "பயர்" அப்டின்னுதான சொல்லணும்?! இல்லீங்களா?) இந்த மாதிரி ஆளுக 'அழகு' பத்தி பேசுனா அதில அர்த்தம் இருக்கு;//


ஐயா,

இதை படிக்கிறோப்போ என்னை நீங்க வஞ்சம் தீர்த்துக்கிட்ட மாதிரியிலே இருக்கு :)

//நமக்கும் அழகுக்கும் காத தூரம்; என்னத்தன்னு சொல்றது .. //

இந்த பதிவிலே இருக்கிற ஒங்களோட போட்டோ பார்த்துட்டுமா நீங்க அழகு இல்லைன்னு சொல்லுறிங்க.... :)

ஆனாலும் உங்களுக்கு அநியாத்துக்கு தன்னட்டக்கம் சார் :)))

delphine said...

every one is beautiful in one way or other. Only thing you should know how to appreciate it. Got it Dharumi Sir..

sam said...

ராம்,
ஆனாலும் நீங்க ஒரு professional blackmailer தான் ..இப்படியா... ஒரு ஊருக்காரவுகளுக்கு உள்ள .. என்னமோ போங்க..........

Ponniyinselvan said...

I wish the bloggers could choose some light and BEAUTIFUL subjects like this and make blogging and reading enjoyable,instead of talking about religion , caste, creed, and such disputable issues.I religiously doubt ,that no one is going to change for the better and step forward to a religionless,casteless community.I am sure your intention is good,i.e, creating an awareness but what's the result? so please continue with more 'azhaku'postings.
[strictly not to a dustbin.should be published or else you will be sued.]
ponniyinselvan

தருமி said...

Ponniyinselvan,
life is a pile of good and bad..so also all our writings. and also what is not so good for you may look quite an essential thing for the other.

அழகு மட்டுமே வாழ்க்கையா? பசியும், பட்டினியும், ஏற்றமும் தாழ்வும் - எல்லாமும் உள்ளதுதானே வாழ்க்கை ... இல்லையா...

Ponniyinselvan said...

dharumi,
life has both beautiful and ugly things.i agree.the nature made + and - are alright.My point is ,the man made [and for some men for their selfishness made]ugly things need not be discussed,because,instead of refining ,more barbarism mushrooms.that's what i feel.
ponniyinselvan [karthik]

தருமி said...

As you said there are so many man-made அசிங்கம். my attempt may be to make at least few to realise that...அதோடு, கலகத்தில்தானே/கலக்குவதில்தானே தெளிவும் பிறக்கும்...

பிரச்சனைகளைத் தாண்டிப் போவது சரியா? அவைகளை எதிர்கொள்வது சரியா?

Narayanaswamy.G. said...

kalakkinal mudhalil midhakkum.....appuram theliyum!

Vajra said...

news for you

http://sankarmanicka.blogspot.com/2007/04/blog-post_25.html

G.Ragavan said...

// நம்ம ராம் என்னைய மாட்டி உட்டுருக்காரு ... அவர பத்தி நான் சொல்லணுமா ..இளஞ்சிங்கம்.. மதுரைக்கார பாசக்கார பயர் ..(பயர் அப்டின்னா என்னன்னு கேக்குறீங்களா? "பய" அப்டின்றத கொஞ்சம் மரியாதையா சொல்லணும்னா "பயர்" அப்டின்னுதான சொல்லணும்?! இல்லீங்களா?) //

ஒரு சின்ன திருத்தம். பையர்-னு சொல்லுங்க. அப்புறம் ஐ-ய விட்டுட்டீங்கன்னு மதுரக்காரப்பய சண்டைக்கு வந்துரப் போறான். :-))))

// இதுபோல் இன்னும் சில பல நிமிடங்கள் உண்டுதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அதில நிறைய வெளியே சொல்ல முடியாத, சொல்லக் கூடாத நிமிடங்கள் அப்டின்னு வச்சுக்குங்களேன். //

சரிங்க சார். வெச்சுக்கிறோம். நீங்களும் அந்த அழகான நினைவுகளை மனசுக்குள்ள சந்தோஷமா எப்பவும் வெச்சிக்கோங்க. ஏன்னா...பல சமயங்கள்ள நினைவுகள் சிறந்த மருந்துகளாச் செயல்படுது.

அழகாச் சொல்றவங்களாத்தான் பாத்துக் கூப்பிட்டிருக்கீங்க. அவங்க சொல்றதக் கேக்கவும் காத்திருக்கோம்.

துளசி கோபால் said...

ரொம்ப அழகாச் சொல்லிட்டீங்க.

ஆமாம்....... 'முதல் இண்டர்நேஷனல் வலைப்பதிவர் சந்திப்பு' நடந்த
நிமிஷங்கள் மனசில் உறையலையா? (-:

சும்மா........:-)))))

மதுமிதா said...

மன்னிக்கவும்
அருமையா கொடுத்திருக்கிறீங்க
தாமதமா வரவேண்டியதாகி விட்டது.

இந்த வாரம் பதிவிடுகிறேன்
நன்றி தருமி அழைப்புக்கு

பதிவிடாதவங்களை பதிவிடச் செய்யனும்னு விரதமா?????

மதுமிதா said...

தாமதமாக வர வேண்டியதாகி விட்டது. மன்னிக்கவும்.

நன்றி தருமி.

siva gnanamji(#18100882083107547329) said...

மே 04 ல் காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்ட கவிதாயினி, செப்டம்பர் 07 மீண்டும் கேட்டுள்ளார்
அனேகமாக ஜனவரியில் மீண்டும் ஒரு
பின்னூட்டத்தை அவரிடமிருந்து எதிர்பார்ப்போம்!

மதுமிதா said...

http://madhumithaa.blogspot.com/2007/09/blog-post.html

நன்றி தருமி.

cheena (சீனா) said...

அழகுத் தர்ணங்களை அழகாகச் சொல்லிய தங்களின் அந்த நிமிடங்கள் என் வாழ்க்கையிலும் நடந்தனவே.

1974 அக்ட்டோபர்த் திங்கள் 5ம் நாள் முதல் பெண் - மூத்த பெண் பிறந்தாள் - மருத்துவ மனையில் அவளைக் கண்டதும் அடைந்த மகிழ்ச்சி இங்கு என்னால் எழுத முடியாது

அந்த மூத்தவளுக்கு ஒரு புள்ளே - எனது முதல் பேரப் புள்ளே - பொறந்தப்போ - 2000ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி - மருத்துவ மனையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தது - அறுவைச் சிகிச்சையில் பயந்தது - அவளோ சிரித்துக் கொண்டே அறுவை அரங்கத்தினுள் சென்றது - சில மணி நேரங்களில் அழகான பெண் குழந்தை ஒன்று செவிலியரின் கரங்களில் தூங்கிக்கொண்டே வந்தது - அது சில மணி நேரங்கள் கழித்து கத்தியது - அப்பப்பா - மறக்க இயலுமா அழகிய தருணங்களை.

நமது வாழ்வில் நிறைய ஒற்றுமைகள் உண்டென நினைக்கிறேன்

தருமி said...

சீனா,
//நமது வாழ்வில் நிறைய ஒற்றுமைகள் உண்டென நினைக்கிறேன்//
i do feel the same.

சில வித்தியாச - ஒற்றுமைகள்: உங்கள் முதல் தேதி- எனக்கு அதே வருடம்; ஆனால், ஒரு மாதம் முன்னால் !
அடுத்த தேதி: அடுத்த ஆண்டு மே !முதல் பேரன். 18மணி நேர காத்திருப்பிற்குப் பின்... ம்ம்..ம்

Post a Comment