Pick the odd man out:
1. தெக்ஸ்
2. லக்கி லுக்
3. ஞாநி
4. சுகுணா திவாகர்
5. சிறில் அலெக்ஸ் - இன்னும் கொஞ்சம் பெயர்கள் உண்டு. இப்போதைக்கு இது போதும்.
உங்கள் பதில் என்னவாக இருக்கும்? ஒருவேளை ஞாநி தவிர எல்லோரும் நம் தமிழ்ப் பதிவர்கள் என்று கொண்டால், சரியான விடை: ஞாநி. சரிதான்.
என் பதிலும் அதுவாகத்தான் இருக்கும்; ஆனால் அதற்குரிய காரணம் மட்டும் வேறு. ஞாநி தவிர மற்ற அனைவரும் நான் அறிந்தவர்கள்; பழகியவர்கள்; நண்பர்கள். ஞாநியை டிவியில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன்.
பகுதி I:
இந்த மனுஷன் ஞாநி, ஆ.வி.யில் 'ஓ! பக்கங்கள்' & 'அறிந்தும் அறியாமலும்' அப்டின்னு எழுதிட்டு வர்ரார். ஓரளவு தவறாமல் வாசித்து வருகிறேன். நன்றாகத்தான் எழுதிவருகிறார். என்ன ஆச்சுன்னு தெரியலை, பாவம் இந்த மனுஷன் இப்போதைக்கு கொஞ்ச நாளாக நம் தமிழ்ப் பதிவர்களுக்கு punch bag ஆக மாறியுள்ளார்.
முதலில் அவர் எப்படி செக்ஸ் பற்றி எழுதலாம்னு ஒரு சுடு பதிவொன்று வந்தது. அப்போது அதை நான் வாசித்தேன்.மன்னிக்கணும், எழுதியது யார் என்பது மறந்துவிட்டது. தொடர்ந்து தெக்கிகாட்டான் ஒரு பதிவு போட்டார். அவர்களது பதிவில் அவர்கள் வைத்த குற்றச்சாட்டு - ஞாநி என்ன Sexology படித்த மருத்துவரா, அல்லது அத்துறையில் மேற்படிப்பு படித்தவரா; இப்படி அரைவேக்காடுகள் எழுதி அதில் தவறு இருந்துவிட்டால் மக்கள் அப்படியே தவறான ஒன்றை தவறாகப் புரிந்து கொண்டு தவறிப் போய்விடமாட்டார்களா என்ற அங்கலாய்ப்புடன் எழுதியிருந்தார்கள்! நானும் ஞாநியின் அந்தக் கட்டுரைகளையும் வரி வரியாக இல்லாவிட்டாலும் ஓரளவு வாசித்துள்ளேன். வரி வரியாக வாசிக்காததற்குரிய காரணம் 'இதெல்லாம்தான் எனக்குத் தெரியுமே!' அப்படி என்கிற 'மேதாவித்தனம்"தான். என்ன எழுதிவந்தார்?
இளம் பருவத்து உடம்பின், மனத்தின் மாறுபாடுகள், அதனால் குழந்தைகளுக்கு வரக்கூடிய குழப்பம், ஊடகங்களில் வரும் சில தவறான தகவல்கள் (சிறப்பாக, masturbation பற்றி) தரக்கூடிய அச்சங்கள் என்பது போன்றவற்றைப் பற்றி எழுதி வந்தார். நம் இளம் வாழ்க்கையை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தாலே நாம் எல்லோரும் இதைப் போல் எழுத முடியுமே. இதற்கென்று தனிக் கல்வி பெற்று வரவேண்டுமா என்ன? ஆனால் அவர் அப்படி மேம்போக்காக நிச்சயமாக எழுதவில்லை. இந்த அறிவியல் உண்மைகளை, சொந்த அனுபவத்தோடு சேர்த்து ஒரு basic sex education பற்றி யார் வேண்டுமானாலும் எழுதலாமே. அதைத்தான் அவர் செய்தார். நன்றாகவும் செய்திருந்தார். அது ஒன்றும் பெரிய அறிவியல் கட்டுரை அல்ல; மக்களை எளிதாக சேரக்கூடிய ஓர் ஊடகத்தில் தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டு நான்கு நல்ல விஷயங்களை, நான்கு பேர் தெரிந்து கொள்ள காரணமாயிருந்துள்ளார். அந்த ஒரு புதிய நல்ல முயற்சிக்காக அவரை வாழ்த்த வேண்டும்.
அந்தந்த துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் மட்டும்தான் எழுதவேண்டும் என்றால் நானும் நீங்களும் எதை எழுத முடியும். என் முந்திய பதிவு நம் தமிழ் சினிமா இயக்குனர்களை நோக்கி எழுதப்பட்டது. சினிமா பார்ப்பவன் என்பதைத் தவிர எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? நீ முதலில் போய் நாலைந்து படம் இயக்கிப் பார்த்துவிட்டு அதன் பிறகு இதையெல்லாம் எழுது என்று யாரும் சண்டைக்கு வரவில்லையே. அது சினிமா, அதுவும் நீ உன் பதிவில் எழுதுகிறாய்; யார் அதைப் படிக்கிறார்கள்(!)? அப்படியே படித்தாலும் அதன் தாக்கம் பெருமளவில் இருக்காது; ஆனால், ஆ.வி. பொன்ற ஒரு வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதும், பதிவுகளில் எழுதுவதும் ஒன்றா என்பீர்களாயின், நிச்சயமாக ஞாநி செக்ஸ் பற்றியெழுதியதில் என்ன தகவல் தவறு கண்டீர்கள் என்று சொல்லுங்கள். அதைவிட்டு விட்டு, எழுதுவதே தப்பு என்பது என்ன நியாயம்? அப்படியென்றால், ஹைகூ பற்றியும், சங்கப் பாடல்கள் பற்றியும் ஏன் சுஜாதா எழுதுகிறார் என்றா கேட்பீர்கள்? இல்லை, வெண்பா பற்றி நம் பதிவர்கள் ஜீவாவும், கொத்ஸும் எப்படி எழுதலாம்; அவர்கள் என்ன வித்வான் தேர்வு எழுதினார்களா, இல்லை, புலவர் பட்டம் பெற்றார்களா? என்றா கேட்பீர்கள்? செல்லாவும் CVR-ம், ஆனந்தும் எங்கே போய் நிழற்படக் கலை பற்றிப் படித்துப் பட்டம் பெற்றுவிட்டு வந்து கட்டுரை எழுதுகிறார்கள்? இப்படியே கேட்டுக் கொண்டே போனால் ....
யாரும் எதையும் எழுதுவதற்கு இந்தந்த தகுதி வேண்டுமென்று சொல்ல நமக்கென்ன அருகதை. அருகதை என்பதைக் கூட விடுங்கள். யாரும் எதையும் எழுதலாம்; எழுதட்டும். ஆனால் தவறாக எழுதியதாகத் தெரிந்தால், வாருங்கள், உண்டு இல்லை என்று பார்த்துவிடுவோம்.ஞாநி பாலியல் பற்றி இதுவரை எழுதியதில் உள்ள தகவல் பிழைகளைப் பட்டியலிடுங்கள். நாமா அவரா என்று பார்த்துவிடுவோம். அதைவிட்டு விட்டு அவன் அதை எழுதக் கூடாது; இவன் இதை எழுதக் கூடாதென்பது ஒரு வேடிக்கையான விவாதம் மட்டுமல்ல; எழுதுபவனுக்கு வேதனையானதும் கூட. அதோடு இதுபோன்ற விஷயங்களை நீங்கள் சொல்லும் "படித்தவர்களை" வைத்து எழுதச் சொல்லிப் பாருங்கள்; படிக்க ஆளிருக்காது. வேறொன்றுமில்லை; அவர்கள் அனேகமாக ஆழமாக எழுதுவார்கள் பல ஆதாரங்கள் அது இது என்று. அப்படிப்பட்ட அறிவியல் கட்டுரைகளை எத்தனை பேர் வாசிப்பார்கள்.
கடைசி வார ஆ.வி.யில் அரவாணிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். நான் உயிரியல் படித்தவன்தான். இருப்பினும் எனக்கும் புதிய தகவல்களாக இருக்குமளவிற்கு அந்தக் கட்டுரையை ஞாநி எழுதியுள்ளார். தயவு செய்து வாசித்துவிட்டுச் சொல்லுங்கள் - அது ஒரு நல்ல தகவல் நிறைந்த கட்டுரையா இல்லையா என்று.
யார் எழுதுகிறார்கள் என்பதா முக்கியம்; எழுதப்பட்டது சரியானதுதானா என்பதுதானே முக்கியம்.
பகுதி II
அதே ஞாநி கலைஞர் ஓய்வு பெறவேண்டிய நேரமிது என்று ஒரு கட்டுரை எழுதிவிட்டார். கெட்டுது போங்க நிலமை .. இவர் எப்படி இதைச் சொல்லலாமென கண்டனங்கள். ஞாநியென்ன தெருவில் போகும் எவனும் கேட்கலாம் இந்தக் கேள்வியை. காரணம் கலைஞர் இப்போது நமது முதலமைச்சர். என்னை ஆள்பவன் இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதில் எந்த ஒரு குடிமகனுக்கும் ஓர் அளவுகோல் இருக்கும். ஏன், எம்.ஜி.ஆர். பேசக்கூட முடியாமல் இருந்தாரே (அப்போ நாங்க வேற, கல்லூரி ஆசிரியர்கள் ஸ்ட்ரைக் செஞ்சிட்டு, சிறைக்குள் மாட்டிக்கிட்டு இருந்தப்போ, முதலமைச்சரின் உடல் நிலையினால் எங்கள் விடுதலை நீட்டிக்கப் பட்ட போது .. )பேச முடியாத ஆளெல்லாம் அந்த நாற்காலியில் இருந்தால் இப்படித்தான் என்றுதான் பேசினோம்; தவறில்லையே அதில்.
அதோடு நரைத்த தலையோடு எந்த அரசியல் தலைவர் இருந்தாலும் 'அடுத்தது யார்?' என்று ஒரு பெரிய கேள்விக் குறியோடு ஊடகங்கள் வலம் வருவது உலகளாவிய ஒரு விஷயம். தி.மு.க. கட்சிக்காரர்களையும் சேர்த்தே சொல்கிறேன் - சென்ற தேர்தல் முடிந்து கலைஞர் முதல்வர் ஆனதும் இன்னும் ஓரிரு மாதங்களில் ஸ்டாலின் முதல்வராக்கப் பட்டு, கலைஞர் கட்சித்தலைமையில் இருந்துகொண்டு வழி நடத்துவாரென்பதுதானே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவ்வளவு ஏன், சமீபத்தில் சேலத்தில் அவர் பேசியதை வைத்து விரைவில் அரசியல் மாற்றம் வரும் என்ற பேச்சு கட்சி வட்டாரங்களிலேயே வந்ததே. ஒருவேளை எல்லோரும் நினைத்தது போல் அப்போதே ஸ்டாலினுக்குப் பட்டம் சூட்டியிருந்தால் (Stalin is definitely my personal choice.) சில விஷயங்கள் நடந்தேறாமல் போயிருந்திருக்கும். இப்போது ஸ்டாலினுக்கே போட்டி என்பது போன்ற சேதிகளுக்கு இடமில்லாமல் போயிருந்திருக்கும். But all these are just hypothetical...
விஷயத்துக்கு வருவோம்.
ஞாநி இந்தக் கட்டுரைக்கு எதிர்ப்புகள் வருமென்று தெரிந்தே எழுதியிருக்கிறார் என்பது அவரது முதல் பத்தியிலேயே தெரிகிறது. //பாரதி வழியில் பேசாப் பொருளைப் பேசத் துணியும் ஒரு முயற்சி!// (ஆச்சரியக்குறியும் அவர் போட்டதுதான்!!) இந்தத் துணிச்சலுக்காகவே அவருக்கு என் வாழ்த்துக்கள். Calling a spade a spade ( இதில் ஒன்பதாவது )எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால்.
கலைஞரை எங்கும் குறையாகப் பேசாமல் அவரது வயது, அதனால் அவருக்கு இயல்பாக ஏற்படக்கூடிய தொல்லைகள் இவைகளைப் பற்றிப் பேசிவிட்டு, இனி அவர் //அடைய வேண்டிய புதிய புகழும் எதுவும் இல்லை; சந்திப்பதற்கான புதிய விமர்சனங்களும் இல்லை// என்று சொல்லி ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்திருப்பதைக் கூறுகிறார்.இத்தனைக்கும் பிறகு //பதவியைத் தூக்கி எறிய வேண்டாம்; கை மாற்றிவிட்டுப் போவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்?// என்று கேட்டிருப்பதில் என்ன தவறு என்பது எனக்குப் புரியவில்லை. இதில் என்ன உள்குத்து இருக்கிறது?
//தனக்குப் பாதுகாப்பாக நடந்துவரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார்: "பாத்ரூம்ல கால் இடறிடுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டாயிடுச்சு"// - இது ஞாநி எழுதியுள்ளது. தடித்த எழுத்துக்கள் என்னுடையவை. அந்த தடித்த எழுத்துக்களை விலக்கி விட்டு மறுபடியும் வாசித்துப் பாருங்கள். 'ஒண்ணுக்குக்கு போக முடியாமல் வேட்டியை ஈரமாக்கிக்கொண்டார்' என்று ஞாநி எழுதுகிறார் - இப்படி உள்ளது சுகுணாவின் பதிவில். கண்ணகி சிலை விவகாரத்திலும் இதே போல் ஒரு பதிவில் (எந்தப் பதிவென்று தெரியவில்லை)ஒரு குற்றச்சாட்டு. அதையும் வாசித்துப் பார்த்தேன். ஞாநியின் கூற்றில் தவறில்லை. குற்றச்சாட்டில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சுதான் இருந்தது. அந்த விகடன் ஏதென்று தெரியாததால் இங்கு முழுதாக அதை மேற்கோளிட முடியவில்லை.
என்னை, என் நாட்டைத் தலைமை தாங்குபவன் அறிவாளியாக இருக்க வேண்டும் - எல்லோரும் எதிர்பார்ப்பதுதான்; தவறில்லையே! அவன் திறமைசாலியாக இருக்க வேண்டும் - எல்லோரும் எதிர்பார்ப்பதுதான்; தவறில்லையே! அதேபோல் நல்ல திடகாத்திரக்காரனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு. சொல்லப் போனால் முழு ஆற்றலோடு இயங்க நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது நமது உரிமை. கிளிண்டனையும், டோனி ப்ளேயரையும், இன்றைய புஷ்ஷையும் பார்க்கும்போதும், நமது சங்கர் தயாள் சர்மாக்களையும், வாஜ்பாய்களையும் பார்க்கும்போதும் சங்கடமாகத்தான் எனக்கு இருக்கிறது. சொல்வது தவறென்றாலும் சொல்கிறேன்: இதில் முந்தியவருக்கு நான் வைத்த பெயர் lame duck. அதன்பிறகு வாஜ்பாயும் அப்படி ஆனபோது முந்தியவருக்கு lame duck -senior என்ற பட்டத்தையும், பிந்தியவருக்கு lame duck (both literally and figuratively )- Junior என்ற பெயரையும் வைத்தேன்.
நமக்குப் பிடித்ததை மட்டும்தான் எல்லோரும் எழுத வேண்டுமென்பது எப்படி முதிர்ச்சியான அறிவுள்ள எதிர்பார்ப்பாக இருக்க முடியும். அமெரிக்க அதிபராக தேர்தலில் நிற்பவர்களின் பழைய கால வாழ்க்கையையே புரட்டி எடுத்துப் போட்டு விடுகிறார்கள். யாருடைய தேர்தல் என்று நினைவில்லை. ஆனால், அதிபருக்கு நின்ற ஒருவர் தனது கல்லூரிக் காலத்தில் ஒரு பாட்டில் பியர் அடித்து காவல்துறையிடம் மாட்டியது பத்திரிக்கைகளில் போட்டு பூதாகரமாக்கியது அங்கு நடந்தது. ஒவ்வொரு வேட்பாளரின் தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களும் பத்திரிக்கைகளில் அலசப் படுகின்றன. நான் எப்படியும் இருப்பேன்; ஆனால் எனக்குத் தலைவனாக இருக்க வேண்டியவன் ஒழுங்கானவனாக இருக்க வேண்டுமென்பது அந்த நாட்டுக்காரர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இங்கே அப்படியெல்லாம் ஏதுமில்லை. நம்மை மாதிரி எல்லாம் (ஒழுங்காக) இல்லாமல் இருப்பதே எல்லா அரசியல்வாதிகளுக்குரிய லட்சணம் என்பது நம் ஊர் ஒழுங்கு. அதுதான் போகிறது, இளம் வயதுக்குரிய ஆரோக்கியமான உடல் நிலையோடு இருக்க வேண்டுமென்பது கூடவா தவறு?
சங்கர் தயாள் சர்மாவையும் வாஜ்பாயியையும் பற்றி நீ முன்பு எழுதினாயா? இப்போது மட்டும கலைஞரைப்பற்றி எழுத வந்துவிட்டாயே அப்டின்னு ஒரு கேள்வி (யெஸ்.பா.,அது நீங்க கேட்டதுதானே?) சரி அய்யா, நான் அப்போது அவர்களைப் பற்றி எழுதாதது தவறுதான் என்று ஞாநி சொல்லிவிட்டால் அவர் இப்போது எழுதியதை சரியென ஒப்புக் கொள்வீர்களா? அன்னைக்கி நீ அது செய்யலை. இன்னைக்கி எப்படி நீ செய்யலாம் என்பது என்ன விவாதம்! அட! யார்மேல கரிசனமோ அவரைப் பற்றி எழுதத்தான் செய்வாங்க - இதுவும் ஒரு வாதம்தான்!
//கருணாநிதியின் உடல்நிலை குறித்துக் கவலைப்படவேண்டியவர்கள் கருணாநிதியும் அவர் குடும்பத்தாரும் அவர் கட்சிக்காரர்களும்தானே தவிர ஞாநியோ நாமோ அல்ல// - இது சுகுணா. இல்லை சுகுணா, அவர் நம் முதல்வர். அவரைப் பற்றி, அவரது செயல்பாடுகள் குறித்து, நாமும் ஞாநியும் கவலைப் படலாம்; படணும். எவனாவது மழைநீர் சேமிப்பு செய்யாம இருந்து பாருங்க அப்டின்னு சொன்னது மாதிரி, எவனாவது ஹெல்மட் போடாம இருந்து பாருங்கன்னு சொல்ற அளவுக்கு மனசுல திண்மை இருக்கணும், மேடைக்குத் துள்ளி ஓடி ஏறி, தொடர்பா பேசுற அளவுக்கு உடம்புல சக்தி இருக்கணும் அப்டின்ற கவலை/எதிர்பார்ப்பு நமக்கும் வேணும்; ஞாநிக்கும் வேணும். ஏன்னா, அவர் பொது மனுஷன்; நம் முதல்வர்.
//சமீபகாலமாக ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.// இதுவும் சுகுணா. என்ன சுகுணா இது? இப்போ ஆட்சி பீடத்தில் இருக்கிறவங்களைத்தான் அதிகமா விமர்சிக்கணும். நீங்களே ஒத்துக்கிறீங்க, அந்த ஆளு ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார்; ஆனால் 'சமீபகாலமாக ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார்' அப்டின்றீங்க. அதுதானே இயல்பு.
இதெல்லாம் போகட்டும். கடைசியாக ஒன்று: ஜெயேந்திரர் விஷயத்தில் ஞாநியின் நிலைப்பாடு நமக்கெல்லாம் உகந்ததாக இருந்ததல்லவா? அப்போது தெரியாத அவரது பூணூல் இப்போது மட்டும் நம் கண்களுக்கு ஏன் தெரியவேண்டும்? நமக்குப் பிடிக்காத ஒன்றை செஞ்சிட்டா உடனே அதைப் பார்க்கணுமா? வேண்டாங்க .. ஏன் அப்டி சொல்றேன்னா, எனக்குத் தெரிஞ்சே ஜாதி மறுப்பை உளமார உணர்ந்து பூணூலைத் தூக்கி எறிஞ்சவங்க இருக்காங்க. அந்தமாதிரி நல்ல மனுசங்களும் நீங்க இப்படி பேசுறதைப் பார்த்து மறுபடியும் பூணூலை எடுத்துப் போட்டுக்கணுமா?
உங்கள் கோபங்கள் எங்கே எப்படி இருக்கணும்னு அப்டீன்ற என் எதிர்பார்ப்பை இடப் பங்கீடு குறித்தான என் கட்டுரைகளில் கூறியுள்ளேன். உங்களைப் போன்ற அரசியல் தொடர்பும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் கவனிக்க வேண்டுமென்றே என் கடைசிக் கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்: சமூகநீதிக்குப் போராடுவதாகக் கூறும் அரசியல், சமூகக் கட்சிகளாவது இந்த தொடரும் அநியாயங்களுக்கு எதிர்க்குரல் கொடுக்கக் கூடாதா? இந்த தொடரும் அநியாயங்களை யாரும் நிறுத்தவே முடியாதா? (இப்பதிவை வாசிக்கும் மக்கள் அந்த என் பழைய பதிவிற்கும் வந்துவிட்டு போங்கள்; சந்தோஷமாயிருக்கும் எனக்கு)
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: வயதுக்குரிய உங்கள் கோபம் எங்கே, எப்படி, எதற்குப் பயன்பட வேண்டுமோ அங்கே பாயட்டும். சமீபத்தில் பெங்களூரு I.I.Sc.-ல் தலித் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொள்ளும்படியான சூழ்நிலை இருப்பதைப் பார்த்துக் கோபப்படுங்கள்; நான் குறிப்பிட்டுள்ள என் பதிவில் கூறியிருக்கும் அநியாயங்களுக்கு எதிராகக் கோபப்படுங்கள். ஆனால், ஞாநியின் மீது நீங்கள் கொண்டுள்ள கோபம் கிஞ்சித்தும் நியாயமற்றது. இங்கே உங்கள் கோபமும், சக்தியும் வீண் விரயமாகிறது. இது வேண்டாமே!
பி.கு. நான் யாரை சந்தோஷப்படுத்த இப்படி எழுதியிருக்கக் கூடும் என்று ஐயம் தோன்றும். (இல்லையா, லக்கி?) நானே சொல்லி விடுகிறேன். இக்கட்டுரையை எழுதியது என் திருப்திக்காக, என் மகிழ்ச்சிக்காக மட்டுமே.
51 comments:
இப்படியெல்லாம் கொஞ்சம் சுயபுத்தியோடு எழுதியிருக்கிறீர்களே! போச்சு போச்சு! இங்கே ரெண்டே பக்கம்தான் இருக்கு, நீங்க எதாவது ஒண்ணில் கட்டாயம் சேர்ந்தாகணும், இல்லாட்டி எதிலாவது ஒண்ணில் உங்களை நாங்க சேத்துடுவோம், ஆமா சொல்லிட்டேன்:-)
ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் தருமி. கருணாநிதி வேட்டி நனைத்த கதைக்கு என்ன ஆதாரமிருக்கிறது? அதைப் போகிறபோக்கில் சொல்லும்போது வக்கிரமாகத்தான் திரிகிறது. மேலும் ஆளுங்கட்சியை விமர்சிப்பது என்கிற நோக்கத்தையும் தாண்டி ஜெயலலிதாவைவிட கருணாநிதியே எதிர்ப்பே ஞாநியிடம் மேலோங்கியுள்ளது என்பது எனது வாசிப்பின் புரிதல். மற்றபடி ஞாநி பாலியல்கட்டுரை எழுதக்கூடாது என்பதெல்லாம் பேத்தல்.
அருமையான கருத்துக்கள் தருமி சார்.மிக விளக்கமாக,அமைதியாக எதிர்கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்.
ரொம்ப பொறுப்புணர்ச்சியுடன் எழுதப்பட்ட பதிவு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தருமி ஐயா,
நண்பர்களின் பதிவு வரிசையில் முடிவுரையாக உங்கள் பதிவை எடுத்துக் கொள்ளலாம். சாலமன் பாப்பையா போல தீர்ப்பச் சொல்லிட்டீங்க :)
இந்த விஷயத்தை கோபத்துடன் அணுகுவது தேவையற்றது. ஞானியின் கட்டுரைக்குத் தூண்டுகோலாக அமைந்தது கலைஞரின் பேச்சுதான் என்பதும் தெளிவாகிறது.
கட்சி என்பது ஒரு ராஜாங்கம். அதன் அரசர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் எனும் போக்கு எத்தகைய தலைவர்களை உருவாக்கும்? (இதற்கு சிறந்த உதாரணம் கலைஞர் அல்ல)
தமிழக அரசியல் மற்றும் இந்திய அரசியல் சூழ்நிலையும் தற்பொழுது இருக்கும் நிலையில் அனுபவமிக்க ஒரு தலைவரை விலகிக் கொள்ளச்சொல்வது கற்றுக்குட்டிதனமல்லவா?
சொல்லவேண்டியதை சொல்லாமல் இருப்பது தவறுசொல்லக்கூடாத நேரத்தில் சொல்வது அதைவிடப் பெருந்தவறு சீன ஆக்ரமிப்பின்பொழுது ஏற்பட்ட கருத்து வெறுபாடுகள் நினைவில் இல்லையா ஆசானே?
//இந்தத் துணிச்சலுக்காகவே அவருக்கு என் வாழ்த்துக்கள். Calling a spade a spade ( இதில் ஒன்பதாவது )எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால்.//
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். நல்லா பிரிச்சி ஆடியிருக்கீங்க, இதை சொல்லவே துணிச்சல் வேணும்.
Hi There!
I think you are 100% right! I worte in Lucklook's comment section also my views. I think one should not reject ideas because of it's source! Or even worse whenever there is something is said/written, why do we want to search for the "brahmin" link in that?!!! I can not believe some of the posts here!
You have nailed it, buddy! I think we are losing the focus by turning our attention to non-issues! Like you said it's need to be channeled to the right cause.
Good work! Keep going!!
இவ்வளோ பெரிய கட்டுரையை முழுவதுமாக வாசித்தது இதுவே முதல் முறை!!!
மிக அருமையாக இருக்கிறது!!!
ஆமாம் குசும்பன். ரொம்பவே நீளமாயிருச்சி. இதில ரொம்ப digressions வேற. வாத்தியார் புத்தி!
மிகவும் தீர்க்கமாக யோசித்து சிறந்த சொற்களால் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.
உங்கள் பதிவு யாரையாவது கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் என்பது என் நம்பிக்கை. மிதக்கும் வெளி மற்றும் சிவஞானம்ஜி இவர்களின் பின்னூட்டங்கள் என் நம்பிக்கையை அசைத்துப் பார்க்கிறது. ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இப்போதைய சூழ்நிலையில் நீங்களும் பேசாப் பொருளைப் பேசத் துணிந்து விட்டீர்கள்..வரும் பின்னூட்டங்களை கவனிப்போம்.
தருமி அய்யா
உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன்.
மிகவும் நன்றாக உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியதோடு, நண்பர்களின் மனநிலையையும் தெரிந்து வெளிப்படுத்தியிருப்பது அருமை ஐயா.
கோபங்களையும், விவாதங்களையும் வீணாக்காமல் பயனுள்ள விசயங்களுக்காக செலவிடுங்கள் என தெளிவாக்கியிருக்கிறீர்கள்.
இது பதிவர்களையும், தமிழ்ப்பதிவுகளையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான சிறந்த முயற்சி என்றே நினைக்கிறேன்.
- வெயிலான்.
http://veyilaan.wordpress.com/
தருமி,
ஞானி எழுதியதை படித்து உணர்ச்சிவசப்பட்டவர்களில் நானும் ஒருவன் .ஆனாலும் நம்ம வாத்தியார் மாறுபட்டு ஏதோ சொல்லுறார் என்று வாசித்ததில் கோபம் கொஞ்சம் அடங்கியிருக்கிறது .நன்றி .அதே நேரத்தில் சிவஞானம்ஜி ஐயா சொல்லியிருப்பது மிகச்சரி என்பதே என் கருத்து .சொல்லபட்ட நேரத்தில் நிகழ்ந்த சம்பவங்களும் ,கலைஞரின் தலைக்கு விலை வைத்ததும் ,பல முனைகளில் இருந்து கலைஞருக்கு அம்புகள் எய்யப்படும்நேரத்தில் ,ஞானிக்கு வந்த ஞானோதயம் தேவையில்லாதது .ஞானிக்கு உண்மையிலேயே உள் நோக்கம் இல்லையென்றே வைத்துக்கொள்ளுவோம் .ஆனால் வடநாட்டு நாதாரிகளும் ,உள் நாட்டு கோள்மூட்டிகளும் கலைஞரை எள்ளி நகையாடும் போது ,கருணாநிதியை துரத்த வேண்டும் ,வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கொக்கரிக்கும் போது ,சமயம் பார்த்து அதே நேரத்தில் கலைஞர் மீது அக்கரை வருவதாக சொல்லுவது என்னால் நம்ப முடியவில்லை ..அதனால் விளைந்த பயன் என்ன ? டோண்டு-வுக்கு கலைஞரை திட்டி 2 பதிவு எழுத வாய்ப்பு கிடைத்தது அவ்வளவு தான்.
நல்ல கட்டுரை, தமிழ் வலையின் இன்றைய தவறான போக்கை திசை மாற்றும் என்ற நம்பிக்கை தரும் கட்டுரை.
நிரம்ப யோசித்து, நிதானமாக, யாரையும் புண்ணாக்காமல் எழுதியதற்கு வாழ்த்துக்கள்.
Dharumi,
your comment on my recent post:
anyway, let us agree to disagree on அம்முவாகிய நான் ...
let us meet some other time at some other point!
CHEERIO!
never thought thar some other point will be so soon :-)
அன்று சக பதிவரிடம் பேசும் பொழுது என்ன எங்க தலைவரை நக்கல் அடிச்சிட்டீங்க என்று வருத்த பட்டார்.
"அது என்னா குயிக் லஞ் மாதிரி குயிக் உண்ணாவிரதம் என்று" எப்படி நீங்க சொல்லாம் என்றார், நான் அவரிடம் கேட்டேன் ஏன் உங்க தலைவர் ஒரு போராட்டத்தில் முழுமையாக பங்கு ஏற்கவில்லை என்று அதுக்கு அவர் சொன்னார் 85 வயது பெரியவர் எப்படி சாப்பிடாம இருக்க முடியும் என்று கேட்டார்...
என்னங்க இது மக்களுக்கா ஒரு போராட்டம் நடக்கும் பொழுது ஓரு தலைவரால் போராட முடியவில்லை வயது தடையாக இருக்கிறது அப்படின்னா ஏங்க தளபதியை முதல்வர் ஆக்க கூடாது ஏன் தலைவர் இப்படி செய்கிறார் என்று கேட்டேன், எனக்கு போராட்டம் என்றால் முதலில் ரோட்டில் இறங்கி வந்து போராட கூடிய தலைவனாக இருக்கவேண்டும் என்றேன்.
அதுக்கு அவர் சொன்னார் தலைவர் 2 மணி வரை முரசொலிக்கு கடிதம் எழுதுகிறார், பின் அது இது என்றார்.
எனக்கும் பிடித்த தலைவர் கலைஞர்தான் ஆனால் எது செய்தாலும் பிடிக்கனும் என்று அவசியம் இல்லை என்றேன்!!!!
ஏன் தளபதியை துனை முதல் அமைச்சரவது ஆக்கலாம் அல்லவா!!!
தருமி said...
ஆமாம் குசும்பன். ரொம்பவே நீளமாயிருச்சி. இதில ரொம்ப digressions வேற. வாத்தியார் புத்தி///
அச்சச்சோ அப்படி சொல்லவில்லை நான் உங்கள் எழுத்து என்னை முழுவதுமாக படிக்க வைத்து விட்டது என்றேன்.
பெனாத்தல்,
ha! ... fantastic and timely comment. enjoyed it.
தருமிய்யா,
நான் அன்னைக்கு யாரோட பதிவையோ படித்துவிட்டு உங்ககிட்ட இப்படி எழுதறது சரியா, தவறா என்ற எனது ஐயத்தை தீர்க்க கூகுளில் பேசிக் கொண்டதை நீங்கள் நான் பதிவாக (போடாத ஒன்றை) போட்டதாக ஞாபகத்திலிருந்து எழுதி என்னைய இந்த விளையாட்டில் இழுத்து வைத்து விட்டீர்களே.
எப்படியோ என்னையும் ஞாபகத்தில் நிறுத்தி "பேஸ்மட்டம் வீக்" ஆளை இங்கு கொண்டு வந்ததற்கு ஒரு சிறப்பு நன்றி :-)
என்னமோ எதுக்கும் கொஞ்சம் கவனமாகவே முதுக்கு பின்பு ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு :-)))
நான் என்ன ஃபீல் பண்ணேனோ அதை அப்படியே சொல்லியிருக்கீங்க.
உங்க அளவு தேர்ந்தெடுத்த வார்த்தைகளைத் தரமுடியாது மேலும் அரசியல் பேசும் தேவையும் கிடையாது என்பதால் ஞானி பற்றிய பதிவுகள் குறித்தான பின்னூட்டமோ கருத்தோ சொல்லவில்லை.
வயதுக்கு வரும் தன் பெண்பிள்ளைகளுக்கு படிக்காத தாய் கூட அது பற்றிய விழிப்புண்ர்வைத் தர முடியும்.தீர்க்கமான மருத்துவ விளக்கம் தரமுடியாது போனாலும் அடிப்படை உடற்கூறு குறீத்தான அறிவை ஆண் பெண் அனைவருமேஅறிந்திருப்பர்.ஞானியின் கட்டுரையால் மட்டுமே தவறான வழிகாட்டுதல்கள் ஏற்படலாம் என்று அஞ்சுவது மடமை.
மேலும் முடிந்தவரை இது குறித்தான ஒரு ஆய்வோ கருத்து சேகரிப்போ இல்லாமல் ஒரு ஜனரஞ்சகமான பத்திரிக்கையீல் எழுதத் துணிய மாட்டார்கள்.
தவறுகள் இருப்பின் எந்த மருத்துவரும் சுட்டிக் காட்டியிருப்பார்களே.
அரவாணிகள் பற்றிய கட்டுரையின் மூலம் பல புதிய அறிந்திராத தகவல்கள் கிடைத்தது உண்மையே.
கலைஞர் பற்றிய கட்டுரையில் தவறிருக்கிறதா அரசியல் காழ்ப்புணர்வு உள்ளதா அல்லது உண்மையிலேயே ஒரு முதுமைக்கான கரிசனமா என்பது அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்பதால் கருத்துச் சொல்ல விரும்பவில்லை.ஆனாலும் நாகரிகம் கருதியாயினும் வேட்டி விவகாரத்தை ஞானி தவிர்த்திருக்கலாம்
துணிவான உங்கள் கட்டுரைக்குப் பாராட்டுக்கள்.
கருத்துச் சுதந்திரம் யார்க்கும் உண்டுதானே
என்ன இருந்தாலும், வாத்தியாரல தான் இப்படி அழகா சொல்லி கொடுக்க முடியும்.. எனக்கும் இந்த aggressive எதிர்கருத்து பதிவர்களுக்கு யாரால புரிய வைக்க முடியும்னு யோசிச்சிட்ட்டு இருந்தேன்...
பொறுமையா சொல்லியிருக்கிறீங்க.. இதுவரை வந்த பின்னூட்டத்தை பார்த்தா அவங்களும் பொறுமையா படிச்சு கருத்தை அசை போட்டுட்டு இருக்காங்கனு புரியுது....
காந்தி பிறந்த நாளில், சாதியத்திற்கு அரசியல் அங்கிகாரம் வாங்கித்தந்த மாகாத்துமா. வயதான காலத்தில் சும்மா இருக்காமல் இந்து முசுலீம் சமாதானத்திற்கு பாக்கிட்தான் கிளம்பியவரை சுட்டுக் கொல்லப்பட்டதில் தவறு என்ன இருக்கிறது என்று பதிவு போட்டால் எப்படி இருக்கும். எதற்கும் இடம் பொருள் ஏவல் வேண்டும். எத்தனையோ முறை உடல் முடியவில்லை என்று மருத்துவமனைக்கு சென்றும் தங்கியும் வந்துள்ளார், அப்போதெல்லாம் ஓய்வெடுக்க சொல்ல தோன்றவில்லை அவருக்கு, இபோது தான் தோன்றுகிறது என்றால், காந்தியை பற்றி அவரது பிறந்த நாளில் இப்படி பதிவு போடுவதில் தவறில்லை என்றுதான் அர்த்தம். அந்த கட்டுரையில் உள் நோக்கம் இல்லவே இல்லைதான்.... நீதிமன்ற தீர்ப்பு போல்........
ஞாநி பற்றிய இடுகைகளைப் படித்தபின் விகடனில் ஞாநியின் கட்டுரையையும் படித்தேன். உங்களைப் போலவே நானும் நினைத்து சில நண்பர்களிடம் கருத்துச் சொன்னேன். கலைஞர் மேல் அக்கறையுடன் எழுதப் பட்டது போலவே எனக்குத் தோன்றிய அக்கட்டுரையில், அவர் வேட்டி நனைத்த கதையைக் கொஞ்சம் இலைமறை காய்மறையாகச் சொல்லியிருக்கலாம் என்று மட்டும் எண்ணினேன்.
பக்குவமாக எழுதிப் பலரையும் புரியவைத்தமைக்கு உங்களுக்குப் பாராட்டுக்கள்!
நன்றி - சொ. சங்கரபாண்டி
//ஞானியின் கட்டுரைக்குத் தூண்டுகோலாக அமைந்தது கலைஞரின் பேச்சுதான் என்பதும் தெளிவாகிறது.//
இது உண்மை.
//அன்னைக்கி நீ அது செய்யலை. இன்னைக்கி எப்படி நீ செய்யலாம் என்பது என்ன விவாதம்!//
இதுதான் பிரச்சினையே. அன்று செய்யாததை இன்று மட்டுமல்ல என்றுமே செய்யக்கூடாதென எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு படைப்பாளியின் படைப்பு நமக்கு பிடிக்காவிட்டால் அல்லது எமது கருத்துக்களுக்கு ஒத்துப்போகாவிட்டால் உடனேயே அந்த படைப்பாளியின் ஜாதி எல்லோருக்கும் ஞாபகம் வந்துவிடுகிறது.
எனக்குப் பிடித்தது எல்லோருக்கும் பிடிக்க வேண்டுமென்கிற எண்ணமே இதற்க்கு காரணம்.
ஞானி மாதிரியே நல்ல எழுத்தாற்றல் உங்களுக்கு :-)))))
இன்னமும் என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன். கலைஞர் மீது பச்சாதாபம் ஏற்படுத்த ஞானிக்கு மட்டுமல்ல யாருக்கும் உரிமையில்லை.
சென்ற வார விகடனிலேயே கலைஞரையும், அத்வானியையும் ஒரே தட்டில் வைத்து விமர்சித்து (அத்வானி கெட்டவர் என்று தனித்து சொல்லமுடியவில்லையாம், கலைஞரையும் சேர்த்து சொல்லி நடுநிலை காட்டுகிறாராம்) அதற்கு அடுத்தவாரமே "அய்யோ கலைஞருக்கு வயசாயிடிச்சி, அவருக்கு ஓய்வு கொடுங்கப்பா" என்று கேட்டிருக்கிறார் ஞானி.
இப்படி எழுத எனக்கு வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் எழுதுகிறேன். ஞானிக்கு கூடத்தான் சிறுவயதிலிருந்தே கண்பார்வை மிக மோசமாக இருக்கிறது. கண்களுக்கு ஓய்வு கொடுத்து சும்மா இருக்க வேண்டியது தானே. ஏன் அவர் கண்களை வருத்தி காண்டாக்ட் லென்சு போட்டு அறுபது வயது கடந்தும் இன்னமும் துன்பப்பட்டு எழுதிவருகிறார்? ஞானியின் லாஜிக் ஞானிக்கே எதிரானதாக இருக்கும்.
மாவீரன் பிடல் காஸ்ட்ரோ சுத்தமாக செயலிழந்த நிலையில் தன் அதிகாரத்தை கைமாற்றி இருக்கிறார். அவர் உடல்நிலை மேம்பட்டு மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் (வருவார் என்று நம்புகிறார்கள்) "அவர் ஏன் வந்தார்?" என்று க்யூபாவின் கொசு கூட கேட்காது.
அன்புடன்
லக்கிலுக்
//Kasi Arumugam - காசி said...
இப்படியெல்லாம் கொஞ்சம் சுயபுத்தியோடு எழுதியிருக்கிறீர்களே! போச்சு போச்சு! இங்கே ரெண்டே பக்கம்தான் இருக்கு, நீங்க எதாவது ஒண்ணில் கட்டாயம் சேர்ந்தாகணும், இல்லாட்டி எதிலாவது ஒண்ணில் உங்களை நாங்க சேத்துடுவோம், ஆமா சொல்லிட்டேன்:-)//
Perfect!
//என் கருத்து ...
இன்றைய முதியவர்கள் சும்மா ஓய்வில் இருக்கிறார்களா? நிச்சயமாயில்ல. பணி ஓய்வுக்குப்பின் காலத்தை 'ஜாலியா' கழிப்பதெல்லாம் நம்ம ஊர் பழக்கமா? முதியவர்கள் தங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை நிச்சயம் செய்துகொண்டுதானிருக்கிறார்கள் குறிப்பா சமூக சேவை.
ஒருவர் ஓய்வு பெறவேண்டுமா இல்லையா என்பதை வாய்ப்பிருந்தால் அவரே தீர்மானிக்கலாமே.
இத்தனை காலம் பொதுவாழ்க்கையில் இருந்து பழக்கப்பட்டவர் மக்களுக்காக உழைத்தவர் தனது ஓய்வைத் தானே முடிவு செய்யும் வாய்ப்பை மக்கள் தருவது சமூக அவலமா?
காமெடி! ஞானியுடன் இதில் ஒத்துப்போக இயலவில்லை.
உங்க கை வலிக்கும் இனிமேல் எழுதாதீங்கண்ணு ஞானியிடம் சொன்னா எப்டி இருக்கும்?//
மேலே இருந்த கருத்தை சொன்னவர் தான் கீழே இருந்த கருத்தையும் சொல்லியிருக்கிறார்.
//தருமி ஐயா,
நண்பர்களின் பதிவு வரிசையில் முடிவுரையாக உங்கள் பதிவை எடுத்துக் கொள்ளலாம். சாலமன் பாப்பையா போல தீர்ப்பச் சொல்லிட்டீங்க :)
இந்த விஷயத்தை கோபத்துடன் அணுகுவது தேவையற்றது. ஞானியின் கட்டுரைக்குத் தூண்டுகோலாக அமைந்தது கலைஞரின் பேச்சுதான் என்பதும் தெளிவாகிறது.
கட்சி என்பது ஒரு ராஜாங்கம். அதன் அரசர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் எனும் போக்கு எத்தகைய தலைவர்களை உருவாக்கும்? (இதற்கு சிறந்த உதாரணம் கலைஞர் அல்ல)//
இதையெல்லாம் சுட்டிக் காட்டினா 'லக்கி, தலைவர் பாசம் உன் கண்ணை மறைக்குது'ன்னு சொல்றாங்க.
என்னுடைய சார்புநிலையை மிக தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். நான் திமுக சார்புடையவன், திராவிட சிந்தனைகள் சார்புடையவன். என்னிடம் யாரும் நடுநிலைமை என்று சொல்லக்கூடிய அபத்தத்தை எதிர்பார்க்க வேண்டாம்.
தருமி அய்யா,
ப்ரீயாக இருந்தால் :-) ஞானியின் கட்டுரையை ஆதரிப்பவர்கள் யார்? எதிர்ப்பவர்கள் யார்?னு ஒரு லிஸ்ட் எடுத்துப் பாருங்க.
"ஏதோ ஒண்ணு" லைட்டா புரியும் :-)))))
//மிதக்கும்வெளி said...
... ஆளுங்கட்சியை விமர்சிப்பது என்கிற நோக்கத்தையும் தாண்டி ஜெயலலிதாவைவிட கருணாநிதியே எதிர்ப்பே ஞாநியிடம் மேலோங்கியுள்ளது என்பது எனது வாசிப்பின் புரிதல். //
I do believe so. However, I don't believe that his discrimination is because of caste.
தருமி ஐயா
இந்த கட்டுரைக்கான பின்புலம் நேர்மை என்பதாக மட்டுமே இருக்க முடியும்.ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியரால் இப்படி ஆப்டிமிஸ்டிக்காகத்தான் யோசிக்க முடியும் என்பது உண்மையாக இருக்குமெனில் வர்க்க அரசியலும் நிசம்தான்..
ஞாநி ஒரு சிறந்த கட்டுரையாளர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.அவரது நிலைப்பாடு சிந்தனை இவைகளின் மீதும் எந்த எதிர் கருத்துமில்லை அப்படியே எதிர்கருத்துக்கள் இருக்கமலேயே போய்விடுவதுமில்லை அவ்வப்போது எழுப்பப்படும் கேள்விகள் எல்லாவகையிலேயும் ஒன்றினை உறுதி படுத்திக் கொள்ளவே....
பாலியல் தொடர் எழுதுவதற்கு முன் அவரின் முன் வைக்கப்பட்ட கேள்விகள் சந்தேகங்கள் எதிர்ப்புகள் இப்போதும் இருக்கின்றனவா? அந்த எதிர்ப்பை சிறப்பாய் எழுதுவதன் மூலம் எதிர்கொண்டது அவரின் தனித்திறமை என்றுதான் சொல்ல வேண்டும்..அதே சமயத்தில் கலைஞர் கட்டுரையை அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியவில்லை
இந்தியாவை பொறுத்தமட்டில் தலைவனாக இருக்க வேண்டிய அடிப்படை தகுதியே கிழவராக இருக்க வேண்டும் எனபதுதான் ..இந்த சூழலில் இந்த கட்டுரையை எப்படி எடுத்துக் கொள்வது?
நம்ம ஊருல யாருதான் காமம் பத்தி எழுதினா ஒத்துகிறாங்க, இதுல எத்தன பேரு ஒன்னுக்கு போயிட்டு கை கழுவுரான் கேழுங்க பெருசு, அப்படின்னா காமசூத்திரம் எழுதுனவரு மட்டும் வைதியரா, இவிங்கல்லுக்கு யாரும் (படம் இல்லாம) எழுதக் கூடாது வந்துருவாங்க அவுத்து போட்டுக்கிட்டு
தருமி அய்யா,
உங்களிடமிருந்து இப்படி ஒரு ஆழம் குறைந்த கட்டுரையை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. இனி பழகிக்கொள்கிறேன்.
1. தடித்த எழுத்துக்களை புகுத்தினால் எந்த நயவஞ்சகத்தன்மையுடைய வாசகங்களின் மேலும் தேன் தடவிய வார்த்தைக்களைச் சொருகி அர்த்தம் மழுங்கிப்போகச் செய்யமுடியும்.
2. ஞானி அப்படி நயவஞ்சகமாகத்தான் எழுதினாரா இல்லையா என்பது இங்கே பதிவுலகிலே யாருக்கும் தெரியாது. இன்னும் கூட அவர் தமிழ்கமக்களுக்கும் + கலைஞருக்கும் நல்லதை மனதில் கொண்டுதான் எழுதினாரா என்றும் கூட தெரியாது. உங்கள் கட்டுரையிலும் அதற்கான வலிமையான வாதங்களோ / ஆதரங்களோ கிடைக்கவில்லை.
3. சுகுனா, லக்கி,யெஸ்பா எல்லாம் தோரயமாக எழுதினாலும் சரி, குறித்து மேற்கோளிட்டு, அல்லது தடித்த எழுத்துக்களை இட்டு நிரப்பி எழுதினாலுமே அதன் அடிநாதமாக இருப்பது,
சமூக அக்கறை என்ற பேரில் எழுதப்படும் சமூகத்தில் பெருமளவில் வாசிக்கப்படும் பத்த்ரிக்கையில் எழுதுபவர் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறாரா என்று சந்தேகங்களை கிளப்புவதற்குத்தான். உங்களுக்கு எப்படி தடித்டஹ் எழுத்தைச் செருகி மழுங்க வைக்கும் சுதந்திரம் உள்ளதோ அப்படியே அவர்களுக்கு ஞாநி மீதான சந்தேகத்தை எழுப்பும் சுதந்திரம் உள்ளது.
4. நீங்கள் சிறையிலிருந்தால் கூட எம்ஜிஆர் ஏன் பதவியை "இன்னொருவருக்கு விட்டுத்தரவில்லை" என்று கேட்கவில்லை. அது நடக்கவும் இல்லை. நடந்திருக்கவும் நடந்திருக்காது.
ஆனால் ஞானி , கலைஞர் வேட்டியை ஈரமாக்கிக்கொண்டவுடன் உங்களுக்கு மக்களை ஆளும் முதல்வரின் உடல்நிலை பற்றி கவலை வந்து விடுகிறது.
இப்படியே கேட்டுக்கொண்டே போகலாம்? இது வும் ஒரு வாதம். :))
5. நாமெல்லாம் நல்லா அறுபது வரைக்கும் வேலை செய்துட்டுத்தானே பணி ஓய்வு அவனா வெளியே தள்ளுறான்னு வீட்டுக்குப் போறோம். வேட்டி ஈரமாயிடுச்சுன்னு சீக்கிரமா யாராவது வாலண்டரி ரிடையர்மண்டு வாங்குறமா? அட வீட்டில் இருக்குறவுங்க நம்ம குடும்பத்தை ஆளும் தலைவரோட உடல் நிலை கெட்டுபோகுதுன்னு சொன்னாக்கூட செய்யமாட்டோம் அதுதான் உண்மை! நமக்கு ஒரு நியாயம் கலைஞருக்கு ஒரு நியாயமா?
கடைசியா ஞானி, அபபடி வக்கிரத்தோட எழுதினாரா அல்லது அரசியல் இலாபத்துக்காக எழுதினாரா அவருக்குத்துத்தான் வெளிச்சம்.
அப்படி கலைஞர் மேலெ அக்கறை இருந்தா விகடன் எழுத்ததேவை இல்லைங்க! சும்மா கலைஞர் வட்டாரத்துல கடிதாசியாக்கூட எழுதி இருக்கலாம்.
இதுவும் ஒரு வாதம் பாருங்கோ :)
விட்டுப்போனது.
ஞானியின் சட்டைக்குள் நெளியுது பூனூல் என்பதெல்லாம் வெறும் க்ளீசே வுக்கு உதவும் .
அதை நான் ஏற்கவும் இல்லை. பிரச்சினை இங்கு இரட்டை வேடம் போடுகிறாரா அதற்கான
முகாந்திரம் இருக்க இல்லை என்றுதான் பார்க்கனும்.
தருமி அய்யா,
கலைஞர் பற்றி ஞாநி எழுதிய கட்டுரை சம்பந்தமான உங்களது புரிதல்/கருத்தில் மாறுபடுகிறேன். எனது இந்த நிலைபாட்டிற்கு காரணம் ஞாநி பிறப்பால் பார்ப்பனர் என்பதாலோ, விமர்சிக்கப்பட்டவர் "கலைஞர்" என்பதாலோ அல்ல.
1) கலைஞர் முதல்வர் என்ற அடிப்படையில் நிர்வாகத்திறன், கடமைகளை செயலாற்றும் வேகம்...போன்றவைகளில் ஞாநி திறனாய்வு செய்திருந்தால் முதல்வர் என்ற முறையிலான திறனாய்வாக அமைந்திருக்கும். ஞாநியின் கட்டுரையில் அவை துளியும் இல்லை.
//பாத்ரூம்ல கால் இடறிடுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டா-யிடுச்சு!// அடைப்புக்குள் இருப்பவை ஞாநியின் கட்டுரையின் பகுதி.
கழிவறையில் கால் இடறுவது வயோதிகர்களுக்கு மட்டுமே வருமா? அதற்கும் முதல்வராக இருப்பதற்கும் என்ன தொடர்பு? இந்த புள்ளியில் ஞாநியை பார்த்து முகம் சுழிக்க வைக்கிறது.
2) தொடர்கிறார் ஞாநி //ஒரு மனிதராக அவர் வதைக்கப்படுவதை, வதைபடுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கப் பொறுக்கவில்லை. பொது வாழ்க்கையில் பல துறைகளில் மிகுந்த புத்திக்கூர்மையுடன் செயல்படுவதைத் தன் முத்திரையாக நிலை நிறுத்தி வைத்திருக்கும் அவர் ஏன் ஓய்வுபெற்று, தான் விரும்பியபடி பொழுதைக் கழிக்க முடியாமல், சூழ்நிலையின் கைதியாக இருக்க வேண்டும்?//
இங்கு தெளிவாகவே கலைஞர் மீது வயோதிகர் என்ற வகையில் பரிதாபப்படுகிறார் ஞாநி. கவனியுங்கள்! முதல்வர் என்ற அதிகாரத்தில் இருப்பது பற்றிய பார்வையல்ல இது. இந்திய அரசியலில் கலைஞர் மட்டுமா முதியவர்? அத்வானி, வாஜ்பாய்.....? கலைஞர் வதைபடுவதாக தெரிவித்தாரா? ஏன் ஞாநிக்கு அப்போது அக்கறை? அதுவும் தற்போதைய அரசியல் சூழலில்? கலைஞர் மீது வருத்தப்படும் ஞாநிக்கு பல கோடி உழைக்கும் மக்கள் 70 வயதை கடந்தும் ஓய்வு இல்லாமல் நாள் தோறும் உடல் உழைப்பில் ஈடுபட்டு, 'வதைபட்டு', 'சூழ்நிலை கைதியாக' இருப்பது தெரியுமா? கலைஞர் என்பதால் மட்டுமே வரும் 'உண்மையான' அக்கறையாக இருப்பின்; அது எவ்வகையில் சாரும்?
3) போகிற போக்கில் கல்லெறிவது போல தொடர்கிறார் ஞாநி. //தன்னை உண்மையான பகுத்தறிவாளராக உரத்துச் சொல்வதற்குத் தடையாக இருக்கும் முதலமைச்சர் பதவி என்ற துண்டை உதறிவிட்டு, எழுத்தாளர், இலக்கியவாதி, சமூகச் சிந்தனையாளராக சுதந்திரமாகச் செயல்பட, இந்த வயதில்கூட முடியாதென்றால் எப்படி?//
இதே ஞாநி தான் முந்தைய கட்டுரையில் போலி பகுத்தறிவு என கலைஞரை சாடியிருந்தார். அதே கட்டுரையில் இராமாயண பாராயணத்தை நடத்தி பாரதியை துணையாக பிடித்து வந்தார் ஞாநி (பாரதியின் கீதை உரையையும் கூட பஜனை செய்திருக்கலாம், பரிதாபம் தவறவிட்டுவிட்டார் ஞாநி!). பெரியாரை பின்பற்றுபவன் என சொல்லும் ஞாநி சறுக்கிய புள்ளியை இந்த கட்டுரையில் காணலாம்.
கண்ணகி சிலை விசயத்தில் ஞாநி 'கரடிப்பொம்மை' என எழுதியதால் கலைஞரின்/உடன்பிறப்புகளின் எதிர்ப்பை சந்தித்தார். அதை தொடர்ந்த ஞாநியின் வன்மமாக இதை கருதமுடிகிறதே தவிர 'விட்டு விடுதலையாகி, சிட்டுக் குருவியைப் போலே சுதந்திரமாகச் சிறகடிக்க' எழுதியதாக கருதமுடியவில்லை. இங்கே இன்னொரு எழுத்தாளனையும் குறிப்பிடுவது அவசியம்.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் (எனது நினைவு சரியாக இருப்பின் ஆண்டும், எழுத்தாளனும் சரியான தகவல் தான். எனக்கும் வயசானதால நினைவு தப்ப வாய்ப்பிருக்கில்ல ;)) பாவலர்.அறிவுமதி அவர்கள் 'நந்தன் வழி' இதழில் (திரு.அருணாச்சலம் நடத்திய இதழ்) கலைஞர் ஆட்சி அதிகாரத்தை கழகத்தவருக்கு விட்டு பெரியார் பணியை கையிலெடுக்கவேண்டுமென உருக்கமான கவிதை வடித்திருந்தார் (கவிதை தற்போது என் வசமில்லை :() அதற்கும் ஞாநியின் கட்டுரைக்கும் 'இந்து'சமுத்திர இடைவெளியுண்டு.
டிஸ்கி: மற்றபடி முதல்வர், திராவிட இயக்கத்தின் தலைவர்களில் முதுமையானவர் என்ற வகைகளில் கலைஞர் மீதான விமர்சன பார்வையுண்டு. அவை பிறிதொரு காலத்தில் எழுதலாம்.
வாத்தியார் வாத்தியார்தான்னு புரிஞ்சுபோச்சுங்க தருமி.
'நடு'நிலமையான பதிவு.
அருமையான இடுகை தருமி. ஞானியின் எழுத்துக்கள் மீதான விமர்சனங்கள் வைக்கப்படவேண்டியவையே அவரவரின் ஏற்புடைய, ஏற்பில்லாக் கோணங்களின் அடிப்படையில். ஆனால் எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் "பூணூல் நெளிவதாகவே" எழுதப்படும் பார்வைகள் இதுதாண்டித் தமிழ்ப்பதிவுலகில் வேறு எவ்வகை விமர்சனங்களை எதிர்பார்க்கமுடியும்? என்ற சிந்தனையையே ஏற்படுத்தியது. சங்கராச்சாரியாரை சங்கராச்சாரி என்று ஞானி எழுதும்போது பூணூல் அறுந்து விழுந்திருந்தது. இப்போது வந்து ஒட்டிக்கொண்டுவிட்டதாக்கும்:))
ஞானி மீதான விமர்சனங்கள் வந்தபோது என்றில்லை, வலைப்பதிவுகளிலேயே நான் எழுதிய இடுகை ஒன்றின் பின்னான தொடர் விவாதங்கள், வழமையான "விட்ட தலை, விடுகின்ற தலை, விடாத தலை" (விடுதலை என்ற வினைத்தொகையை விரித்து எழுதினேன் என்பதன்றி இதில் வேறொன்றுமில்லை) வீரப் பிரகடனங்களின் பின்னேயே கூட ஒரு இடுகை எழுத எண்ணங்கள் இருந்தன. ஆனாலும் இடைவிடாத தமிழ்ச்சுகந்தம் வீசும் இத்தரு நிழலில் குளிர்நீரோ, போர்ப்பறையோ( ஒரு பதிவரை இன்னொரு பதிவர் பறைதல்தான் இப்பறையின் பொருளா என நீங்கள் கேட்டாலும் நான் மௌனமாய் அக்கேள்வியை ஸ்பரிசித்து நகர்வேனன்றிப் பதில்சொல்லேன்) வாங்கிப் பருகவோ கண்டுகளிக்கவோ வந்துபோகவே நேரம் வாய்க்காத நாட்களில் உட்கார்ந்து எழுதுவது முயற்கொம்பே.
நன்றாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள். வாழ்வின் நிறம் மட்டுமல்ல எழுத்துக்களில் வைக்கப்படும் விடுதலையின் நிறங்களும், அந்த எழுத்தைக் கையாளுபவனின் தனிப்பட்ட நிறங்களும் கூட வேறுவேறானவையாக இருப்பதற்கான சாத்தியங்களில் இங்கு ஆரோக்கியமான மாற்றுப்பார்வைகள் அவசியமாகின்றன. அதை வழங்கும் உங்களைப்போன்றோருக்கு நன்றி தருமி.
தருமி ஐயா,
2006 தேர்தல் முடிந்த நேரத்தில் நான் எழுதிய பதிவு
ஸ்டாலின் முதல்வராக வேண்டும், கலைஞர் விலகவேண்டும்
http://blog.tamilsasi.com/2006/05/blog-post_11.html
இதே கருத்தை தான் ஞாநி அவர்களும் கூறியுள்ளார். ஞாநியின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. அதே நேரத்தில் ஞாநியின் கருத்துகளுக்கு காரணம் கலைஞர் மீதான "நல்லெண்ணம்" என நினைக்க முடியவில்லை.
அவரின் பல கட்டுரைகள் கலைஞர் எதிர்ப்பு என்பதை முன்வைத்ததால் இந்தக் கட்டுரையையும் அவ்வாறு சந்தேகிக்க ஒரு காரணம்.
தருமி ஐயா....
ஞாநியின் எழுத்துக்களில் நீங்க பார்க்ககூடியது தனிநபர் தாக்குதல் கிடையாது....
நம்ம எல்லோருக்குமே இருக்கற கோபம்....
அதை ரொம்ப தெளிவா, பக்குவமா இங்கே சொன்னது ரொம்ப நிறைவா இருந்தது.
சில மாதங்களுக்கு முன்னாடி உங்க வீட்டு முன்னாடி நின்னு ஞாநியின் எழுத்துக்களை பத்தி பேசினது ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்.
கொஞ்சம் வேலை இருந்ததுனால அதிகம் இந்தப்பக்கம் வர முடியலை....
இல்லைனா முதல்லயே இந்த பதிவை ஞாநிக்கு அனுப்பிருப்பேன்.
Better late than Never.
தருமி அய்யா,
மிக அருமையான கருத்துகள்! படிக்கும்போது உங்களமாதிரி ஒரு வாத்தியார் கிடைத்திருந்தால் எங்கயோ போயிருப்பேன் :)
//மாவீரன் பிடல் காஸ்ட்ரோ சுத்தமாக செயலிழந்த நிலையில் தன் அதிகாரத்தை கைமாற்றி இருக்கிறார். அவர் உடல்நிலை மேம்பட்டு மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் (வருவார் என்று நம்புகிறார்கள்) "அவர் ஏன் வந்தார்?" என்று க்யூபாவின் கொசு கூட கேட்காது. //
தமிழ்நாடு என்ன க்யூபாவா இல்லை முதலமைச்சர் என்ன சர்வாதிகாரியா? மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியை மக்கள் விமர்சனம் செய்யக்கூடாதா? சுத்த அபத்தம்! பிடிக்கவில்லையென்றால் நீங்கள் க்யூபாவுக்கு போகலாமே!
///நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: வயதுக்குரிய உங்கள் கோபம் எங்கே, எப்படி, எதற்குப் பயன்பட வேண்டுமோ அங்கே பாயட்டும். சமீபத்தில் பெங்களூரு I.I.Sc.-ல் தலித் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொள்ளும்படியான சூழ்நிலை இருப்பதைப் பார்த்துக் கோபப்படுங்கள்; நான் குறிப்பிட்டுள்ள என் பதிவில் கூறியிருக்கும் அநியாயங்களுக்கு எதிராகக் கோபப்படுங்கள்///
சபாஷ் வாத்தியாரே:-)
தருமி சார். ரெண்டு கருத்துகள்.
1. ஞாநி பாலியல் பத்தி எழுதக்கூடாதுன்னு சொல்றது ஒளறல்ங்குறது என்னுடைய கருத்தும் கூட. ஒத்துப் போகிறேன்.
2. கருணாநிதிக்கு ஓய்வு பற்றிய கட்டுரையில் உங்கள் கருத்தோடு முழுமையாக ஒத்துப்போக முடியவில்லை. முழுமை என்ற சொல் இங்கே முக்கியம். ஏனென்றால்.... கருணாநிதிக்கு இப்பொழுது ஓய்வு தேவை என்பது என்னுடைய கருத்தும் கூட. அதுவுமில்லாமல் சங்கர் தயாள் சர்மாவும் வாஜ்பாயும் தொலைக்காட்சியில் வரும்பொழுது எனக்குத் தோன்றியதுதான் கருணாநிதியைப் பார்க்கும் பொழுதும் தோன்றுகிறது. அந்த வகையில் ஓய்வு தேவை என்பதில் ஐயமில்லை.
அதே நேரத்தில் அதை எழுதிய விதத்தில் உடன்பாடு இல்லை. வேட்டி நனைவதைப் பற்றியெல்லாம் பேசுவது அதிகமாகவே தெரிகிறது. அந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது அசௌகரியமாகவே இருந்தது என்பதையும் மறுக்க முடியாது. அவர் சொல்ல வந்ததை வேறுவிதமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் எந்த விதமாகச் சொல்லியிருந்தாலும் இதே விளைவுதான் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
மிக நல்ல பதிவு.
//அருமையான கருத்துக்கள் தருமி சார்.மிக விளக்கமாக,அமைதியாக எதிர்கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்.//
ஆமாம்...உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன்...ஒரு மாநிலத்தை ஆளும் ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பாக்கப்படுவது தவறில்லை. காலமும், சூழ்நிலையும் தவறாகும் பட்சத்தில் சொல்ல வந்த நல்ல கருத்தும் அடிபட்டு திரிக்கப்படும் என்று ஏதோ ஒரு குறளில் படித்த நினைவு.
//ஞானிக்கு கூடத்தான் சிறுவயதிலிருந்தே கண்பார்வை மிக மோசமாக இருக்கிறது. கண்களுக்கு ஓய்வு கொடுத்து சும்மா இருக்க வேண்டியது தானே. ஏன் அவர் கண்களை வருத்தி காண்டாக்ட் லென்சு போட்டு அறுபது வயது கடந்தும் இன்னமும் துன்பப்பட்டு எழுதிவருகிறார்?//
நியாயம் தான். ஆனால், ஞாநி ஒன்றும் எந்த அரசாங்க உத்தியோகமோ அல்லது பதவியிலோ இல்லை. அதனால் அவரின் மூப்பு பொதுவில் எதையும் பாதிக்க போவதில்லை. அவர் தன்னை வருத்திக் கொள்கிறார் என்றால் அவர் பிழைப்புக்காக. மாறாக. கலைஞர் ஒரு மாநிலத்தின் முதல்வர். அவர் தவறாக எடுக்கும் எந்த முடிவும் அது நம்மையும் சேர்த்தே பாதிக்கும். அப்படிப்பட்ட பதவியிலிருப்பவர் கொஞ்சம் active-ஆக இருக்கலாம் என்பது என் எண்ணம்.
எனக்கு என்னவோ அந்த மனிதரை இந்த வயதிலும் வேலை வாங்குவது போலத்தான் இருக்கு. ஆனால், முடிவெடுக்க வேண்டியது கலைஞர் தான்.
சொல்ல வந்ததை நல்லா தெளிவா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
ஆனா இங்க தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்தான் என சாதிப்பவர்கள்தான் இரு பக்கமும் அதிகம். அதனால இதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான். போகட்டும்.
இனிமே பதிவு போட்டா ஒரு மெயில் தட்டி விடுங்க சாமி. வந்து படிக்க வசதியா இருக்குமில்ல. (நான் கூகிள் ரீடர் பார்ப்பதை விட மெயில் பார்ப்பதுதான் அதிகம்.) :))
அப்புறம் சிவஞானம்ஜி அவர்களுக்கு. இப்படி நல்லா இருக்கும் போதே, வாரிசை ஆள வைத்து அவங்க தவறு செய்யும் போது திருத்தினா நல்லா இருக்குமே. அதில்லாமல் நாளை அவர்கள் திடீரென்று அந்நிலைக்குத் தள்ளப்பட்டால் இந்த மாதிரி ஆலோசனை கிடைக்காதல்லவா?
விவாதங்கள் சூடு பிடித்து திரு.ரத்னேஷ் அவர்களுக்கு ஞாநி எழுதிய கடிதத்தோடு இந்த விவாதம் நின்று போகட்டுமே!எழுத்து சுதந்திரமும் கூடவே தருமி போன்றவர்களது சிந்தனை சிதறல்களும் தமிழ்மணத்தை வலம் வரட்டும்.
Really Nice, Nanbar Sonathu Bola Piruthu Mechitenga Mr. Dharumi.
I Became Your Fan.
Sorry enaku Computerla Tamil Type Panna Varathu.
//Sorry enaku Computerla Tamil Type Panna Varathu//
no, that's a very lame excuse. உடனே பழகியிரலாம். கஷ்டமேயில்லை. வாங்க .. வாங்க .. நம் தமிழுக்கும் வாங்க
டியர் தருமி,
நான் ஆனந்த விகடனிற்க்கு, ஜூலை 28ந் தேதி எழுதிய கடிதம்.
"
ஆசிரியருக்கு,
நான் தாங்கள் இதழின் இருபது ஆண்டு கால வாசகன். இதுவரை கடிதம் எதுவும் எழுதியதில்லை. ஆனால் ஞாநியின் சமீபகால அரசியல் கட்டுரைகள் இந்த கடிதத்தை எழுத வைத்துவிட்டது. உண்மையில் சொல்லபோனால் அவரது எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அறிந்தும் அறியாமலும் ஒரு அற்புதமான தொடர். ஓ பக்கங்கள் மிகவும் அருமையாக ஆரம்பிக்கப்பட்டது. நிறைய சாதித்தும் உள்ளது (பெண் குடியரசு தலைவர் உட்பட). ஆனால் சமீபமாக கலைஞரை பற்றி தரம் தாழ்த்தியே எழுதி வருகிறார். அவரின் ஒவ்வொரு செயலையும் விமர்சிக்கின்றார். இதுபோலவே நாடு போற்றும் நம் முன்னாள் குடியரசு தலைவரை பற்றி தன்னுடைய 106 வது கட்டுரையில் அவர் எழுதியது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது விசயமாக நிச்சயம் ஏதேனும் மறுப்பு வாசகர் கடிதம் பிரசுரமாகும் என எதிர்பார்த்தேன் ஆகவில்லை.
கலாமை ஆரம்பித்தில் இருந்தே அவருக்கு பிடிக்கவில்லை. குடியரசு தலைவர் மறு வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட கூடாது என்றார். அவரின் தோற்றத்தை விமர்சித்தார். இப்போது "கனவு காணுங்கள்" என்பதையே விமர்சிக்கின்றார். இந்த இதழில் கூட கனவு - 3 என்ற தலைப்பில் மறுபடியும் அவரை விமர்சிக்கின்றார். மீண்டும் மீண்டும் நீங்கள் அதை பிரசுரிக்கின்றீர்கள். இதை நான் மட்டுமல்ல இங்கு மற்ற பல நண்பர்களும் என்னுடன் பகிர்ந்து கொண்டனர். இதற்க்கு விளக்கம் பெற வேண்டித்தான் இதுவரை கடிதமே எழுதாத நான் எழுதுகிறேன்
மக்கள் குடியரசு தலைவர் என்று அழைக்கப்படும் கலாமிற்க்கு ஞாநியின் சர்டிபிகேட் தேவையில்லை. ஞாநி என்பவர் ஒரு தனி மனிதர். அவருக்கு யார் மேல் வேண்டுமானாலும் விருப்பு வெறுப்பு இருக்கலாம். அவருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுப்பதால் அவரின் மன விகாரங்கள் வெளியே தெரிகிறது. கலாம் ஒரு சிறந்த ரோல் மாடல். எளிமையானவர். மக்கள் அவர் மீண்டும் குடியரசு தலைவர் ஆக வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் இந்திய ஜனநாயகம் அதை அனுமதிக்கவில்லை. ஞாநி எழுதலாம் விகடன் அப்படியில்லை பாரம்பரியமிக்க ஒரு பத்திரிக்கை. விகடனுக்கென்று என்று ஒரு ஸ்டேண்டர்டு உண்டு. என்னுடைய ஒரே கேள்வி விகடன் ஞாநியின் கருத்தை ஏற்கின்றதா. ஆம் எனில் இந்த பிரச்சினை பற்றி இத்தோடு விட்டு விடுங்கள். இல்லை எனில் விரிவாக அறிவிப்பு செய்யுங்கள்.
வாசகர்களின் கருத்திற்க்கு மதிப்பு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கடிதம் எழுதப்பட்டது. "
ஆனால் விகடனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சிறிது நாட்களுக்கு முன்பு மறுபடி கலைஞர் பிரச்சினை கிளம்பிய போது கட்டுரை நிறுத்தப்பட்டது. மறுபடி தொடர்கிறது. ஞாநியை பற்றி, அவரின் எழுத்துக்கள் வசீகரிக்ககூடியவை. கருத்துக்கள் விசமத்தனமானவை.
//அந்தமாதிரி நல்ல மனுசங்களும் நீங்க இப்படி பேசுறதைப் பார்த்து மறுபடியும் பூணூலை எடுத்துப் போட்டுக்கணுமா?//
அப்ப பூணல் போட்டவர் எல்லாம் கெட்டவனா??? பூணல் என்பது ஒரு நம்பிக்கை.. குல்லா போட்ட முஸ்லீம் அனைவரும் தீவிரவாதியா?? என்ன தல இது.. பிராமணன் இரட்டை குவளை டி கடை நடத்தவில்லை.. சுவர் கட்டவில்லை.. மாறாக அவனை F.C என்று விளித்து ஒட்டு வாங்கும் அரசியல் நமக்கு வேண்டாமே..
errotan,
உங்க கேள்விக்குப் (அப்ப பூணல் போட்டவர் எல்லாம் கெட்டவனா???)பதில் நீங்கள் மேற்கோளிட்டிய பகுதிக்கு முந்திய சொற்றொடரில் (ஜாதி மறுப்பை உளமார உணர்ந்து பூணூலைத் தூக்கி எறிஞ்சவங்க இருக்காங்க. அந்தமாதிரி நல்ல மனுசங்களும் ...)இருப்பதை ஏன் பார்க்க மறந்து விட்டீர்கள்?
என்னையும் உங்களையும் (?) போலல்லாமல் ஜாதியை மறுத்தவர்கள் நல்லவர்களில்லையா, அவர்களைத்தான் குறிப்பிட்டுள்ளேன். சரிதானே?
Post a Comment