Monday, October 15, 2007

239. கற்றது தமிழ்

வழக்கமாக, காலை (இரவு ?) 1-3 மணிக்குள் ஒரு முறை எழுந்து பாத்ரூம் சென்று விட்டு மீண்டும் வந்து படுத்தால் அடுத்து 7 மணிக்கு மேல்தான் பள்ளியெழுச்சி. ஆனால் சென்ற வெள்ளியன்று மாலை 'கற்றது தமிழ்' படம் பார்த்துவிட்டு வந்து படுத்து தூங்கி பின்னிரவில் வழக்கம்போல் எழுந்து அதன் பின் படுத்தால் தூக்கத்தில் 'ப்ரபாகர்' வந்து தொல்லை கொடுத்து தூங்க விட மாட்டேனென்றான்.

//பார்த்து முடித்துவிட்டு என்னால் சீராய் மூச்சுவிடமுடியவில்லை.
இந்த பதிவில் என்ன எழுதவென்று சரியாய் தெரியவில்லை.தொடங்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இருந்தது (இனி அது பார்த்துக்கொள்ளும்)// -
(அய்யனாருக்கு நன்றி)

மலைக்கோட்டை மாதிரி ஒரு தமிழ்ப் படம் பார்த்தோம்; அதற்கு விமர்சனம் ஒன்று எழுதினோம் என்றால் எவ்வளவு சுலபமா இருக்கு. காமெடி பற்றி ரெண்டு வார்த்தை; சண்டை பற்றி வழக்கமா வச்சிருக்கிற டெம்ப்ளேட்ல இருந்து ஒண்ணு; குத்துப் பாட்டு பற்றி ஒண்ணு அப்டின்னு எழுதிட்டு நாற்பதிலிருந்து நாற்பத்தைந்துக்குள் ஒரு மார்க் போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கலாம். வழக்கமா வர்ர நம்ம தமிழ்ப்படங்களுக்கு விமர்சனம்னு ஏதாவது எழுதிப் பாத்திட்டு, இப்போ இந்த மாதிரி படத்துக்கு முயற்சிக்கும்போதுதான் திரைப்பட விமர்சனம் என்பதே உண்மையிலேயே எவ்வளவு கஷ்டமான விஷயம்னு தெரியுது.


//நம் தமிழ்ப் படங்களை இரண்டே வகையாய் பிரிக்கலாம்; இரண்டுமே படங்கள் எடுக்கும்ஆட்களின் sincerity பற்றியது. முதல் வகை: புத்தியைப் பயன்படுத்தி, கொஞ்சமாவது லாஜிக்கோடு எடுக்கப்படும், அல்லது எடுக்க முயற்சிக்கப்படும் சீரியஸ் படங்கள். இரண்டாவது வகை: முட்டாள்களால், முட்டாள்களுக்காக, முட்டாள்தனமாக எடுக்கப்படும் படங்கள்.//
இது என் பழைய பதிவொன்றில் நான் எழுதியது.

'கற்றது தமிழ்'- இந்தப் படம் நான் சொன்ன இருவகைகளில் முதல் வகையில் வரக்கூடிய படம்தான். என்றாலும் லாஜிக் கொஞ்சம் அதிகமாகவே உதைக்க இடம் கொடுத்துவிட்டார் இயக்குனர் ராம்.


இப்படம் obsessive-compulsive disorder என்ற மனநோய்வாய்பட்ட ஒருவனின் கதை என்று நான் கொண்டுள்ளேன். சிறு வயதிலிருந்தே தொடர்ந்த பல இழப்புகள், கொடூர மரணங்களின் அருகாமை, அதன்பின் ஏற்படும் ஏமாற்றங்கள், அவமானங்கள் எல்லாமே அவனை ஒரு மனநோயாளியாக்குகின்றன என்பது சரியே. தற்கொலை முயற்சியும் தோல்வியடைய முழு மனநோயாளியாகி, பின் ரத்தவெறி ஏறியவனாக மேற்சொன்ன obsessive-compulsive disorder என்ற நிலைக்கு வருகிறான். போதைக்கு அடிமையான ஒருவன் போதைப் பொருள் கிடைக்காத போது அனுபவிக்கும் வேதனையான நிலை - cold turkey - அவனுக்கும் வருவதாக இயக்குனர் காண்பித்துள்ளார். அந்த நிலையில் கொலைவெறி உச்சநிலைக்கு வர தொடர்கொலைகள் செய்கின்றான்.இதுவரை சரியே. ஒரு psychopath-ன் கதை என்று கொண்டிருக்கலாம்.

ஆனால், இந்த அவனது மனநிலைக்கு அவன் தள்ளப் படுவதை உறுதிப் படுத்தவோ என்னவோ, கொடூர மரணங்களை, இழப்புகளை, இகழ்ச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து காண்பிக்கிறார். அதில் ஒரு செயற்கைத்தனம் வந்துவிடுகிறது. அதோடு பல லாஜிக் இல்லாத காரியங்கள்:
* அப்பாவின் மரணத்திற்குப் பிறகு வந்திருக்கக்கூடிய பணம் அவனது வறுமை நிலையை மாற்றியிருக்க வேண்டுமே?
* துப்பாக்கி, குண்டு எப்படி வாங்கினான்? காசு ஏது?
* தொடர் கொலைகள் செய்தும் - அப்படி ஒன்றும் பிரமாதமாகத் திட்டம் தீட்டி ஏதும் செய்யாதிருந்தும் - எப்படி எதிலும் மாட்டிக் கொள்ளவேயில்லை?
* முதல் கொலையைச் செய்துவிட்டு சர்வ சுதந்திரனாக எலெக்ட்ரிக் ரயிலில் கையில் வழியும் ரத்தத்தோடு செல்வது ...
* வெறும் பலூன் சுடும் ஏர்கன் சத்தத்தோடு துப்பாக்கி சத்தத்தையும் இணைத்து இரண்டு பேரைச் சுட்டுக் கொல்வது..
* ஒரு காவல் துறையதிகாரியை ஒரு வாரம் தொடர்ந்துவிட்டு குருவியைச் சுடுவதுபோல் எவ்விதத் தடயமின்றி சுட்டுவிட்டுச் செல்வது...
* இவனது திடீர்வருகை நியாயமாகத் தரக்கூடிய அதிர்ச்சியோ, ஆனந்தமோ ஆனந்திக்கு ஏற்படாதது ...
* "தற்செயலாக" மறுபடியும் ஆனந்தியைச் சந்தித்து, காப்பாற்றி, சர்வ சாதாரணமாக அங்கிருந்து அவளோடு வெளியேறுவது ...
* படத்தின் கடைசியில் சில இடங்களில் அழகான ஆங்கிலம் பேசுவதாகக் காண்பித்ததை முதலிலேயே காண்பித்திருந்தால் ப்ரபாகருக்கும் அவனது கம்ப்யூட்டர் அறை நண்பனுக்கும் இடையில் உள்ள தராதர வித்தியாசத்தைக் காட்டியிருக்கலாமே...
* அல்லது 1100 மார்க் வாங்கிய ப்ரபாகரின் அந்த அறைத் தோழன் 890 மார்க் மட்டுமே வாங்கியவன் என்று காண்பித்தும் வித்தியாசத்தைக் கோடிட்டிருக்கலாமே ...
* எல்லாம் முடிந்து "முதன்முறை கதவு திறந்ததே" என்று பாட்டு பாடிவிட்டு, மறுவாழ்க்கை நோக்கிச் செல்ல முடிவெடுத்த பிறகும் எதற்காக தன் பழைய கொலைகளை விலாவாரியாக விவரித்து அதைப் படமாக்கி தொலைக்காட்சி நிலையத்திற்குத் தானே நேரே போய் கொடுக்க வேண்டும்?

- பட்டியலை இன்னும் நீட்டலாம் ...

2500 ஆண்டுகாலத் தமிழ் படித்தவனை விட 25 வருஷ கம்ப்யூட்டர் படித்தவனுக்குக் கிடைக்கும் சம்பளம், BPO வேலைக்குக் கிடைக்கும் சம்பளம், உலகமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகள் - இன்ன பிற பல சமூகக் காரியங்களை அவனது மனப் பிறழ்வுக்குக் காரணம் காண்பிப்பதற்காகவே படத்தில் இயக்குனர் திணித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவன் வாழ்க்கையில் நடந்த இழப்புகளும் சோகங்களும் மட்டுமே போதுமே அவன் மனநிலை பாதிக்கப் படுவதற்கு. இவையெல்லாம் எதற்கு?

எனக்குப் பிடித்த நல்ல விஷயங்களையும் ஒரு பட்டியலிடலாம்.

* அந்த ருத்ர தாண்டவம் மிகவும் பிடித்தது.
* ராஜஸ்தான் காட்சிகளும், ஆனந்தியோடு செய்யும் பயணமும், அந்த மலைகளுக்கிடையே நீண்டு கிடக்கும் சாலையும் மிக அழகு
* யதார்த்தமான இடங்கள் -அது ஆனந்தி வசிக்கும் ஒட்டுக் குடித்தன வீடாகட்டும்; ப்ராபகர் தங்கியிருக்கும் பிரம்மச்சாரிகளின் விடுதியாகட்டும் - உண்மையோ, ஆர்ட் டைரக்டரின் படைப்போ எல்லாமே மிக பொருத்தமாக உள்ளன.
* அந்த தமிழ் வாத்தியார்தான் அழகன் பெருமாளாமே .. இயல்பான இறுக்கமான பாத்திரப் படைப்பு. (இயக்குனர் தன் ஆசிரிய-நண்பரின் பெயரைக் கதாநாயகனுக்கு வைத்ததாகக் கேள்வி (?). அதற்குப் பதிலாக அந்த தமிழ்வாத்தியாருக்கு அந்தப் பெயரை வைத்திருக்கலாமோ?)
* புதுமுகம் அஞ்சலியின் யதார்த்தமான நடிப்பு
* ஜீவாவின் நடிப்பு
* தரமான படப் பிடிப்பு
* ஆடியன்ஸ் இருக்கும் இடத்தில் கருணாஸை உட்கார வைத்திருக்கும் உத்தி. இயக்குனர் படம் பார்ப்பவர்களைத் தொடர்பு கொள்ளும் அந்த உத்தி, கருணாஸைப் பார்த்து ப்ரபாகர் கேள்வி கேட்பது, பலவற்றிற்கு அவர் (நானும்தான்!) பதில் தெரியாமல் முழிப்பது - பிடித்தது.

- இன்னும் உள்ளன.

படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பதை விடவும் படங்களின் நீளத்தைக் குறைத்தால் வரிவிலக்கு கொடுக்கலாமென்று ஏற்கெனவே ஒரு பழைய பதிவில் எழுதியிருந்தேன். அதைப் போல இந்தப் படம் இரண்டரை மணி நேரம் ஓடுவதற்குப் பதில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடும் படமாக எடுத்திருந்தால், அந்த BPO ஆளைப் புரட்டி எடுக்கும் நீள காட்சியோ, கம்ப்யூட்டர் அலுவலகத்தில் நடத்தும் ஆர்ப்பாட்டம் - (அந்தக் காட்சி எதற்கு? கடைவாயின் ஓரத்தில் ஓர் அலட்சியப் புன்னகையால் உணர்த்த வேண்டிய காட்சிக்கு இத்தனை நீளமா?)- இவைகளையும், இன்னும் சில காட்சிகளையும் வெட்டியிருந்தால் கதையின் தேவையற்ற பல கூறுகளைத் தவிர்த்திருக்கலாம். நடுவில் சிலரது பேட்டிகள் படத்தை ஒரு செய்திப் படமாக மாற்றக்கூடிய நிலையைத் தவிர்த்திருக்கலாம். அதோடு இவைகள் படத்தைத் தூக்கி நிறுத்துவதைவிடவும், கதையை அதன் மய்யக் கருத்திலிருந்து விலக்கி எடுத்துச் செல்லத்தான் காரணமாயுள்ளன.

ஒருவேளை
இந்த சந்தைப் படுத்தப் படும் சமுதாயத்தின் அவலங்களையும்,
உலகமயமாக்கலின் தாக்கம் எளியவர்களை எப்படி வருத்துகிறது என்பதையும்,
உண்மையான புத்திசாலிக்கு மரியாதை இல்லை,
நுனிநாக்கு ஆங்கிலத்திற்கு இருக்கும் மரியாதை நம் தாய்மொழிக்கு இல்லை,
- என்பது போன்ற விஷயங்களைத் தனது கதைக்களனாக, மய்யக் கருத்தாகக் காண்பிக்கத்தான் இந்த கதையமைப்பை இயக்குனர் தேர்ந்தெடுத்திருப்பாரோ என்று நினைத்தேன். அப்படி நினைத்திருந்தால் கதையில் ப்ரபாகரின் இளம்வயது சோகங்கள் எதற்கு என்று கேள்வி வந்தது. அவனது மனப் பிறழ்விற்கான காரணங்கள் அந்த இளம் வயது சோகங்களே என்றுதான் தோன்றுகிறது. அப்படியெனில் இந்த மற்றைய சமூகக் காரணிகளை, பதில் கொடுக்காமல் கேள்விகளை மட்டும் எழுப்பும் காட்சிகளின் தேவை என்ன?

இவைகளையெல்லாம் தாண்டி, இயக்குனரைப் பாராட்ட பலவிஷயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஃப்ரேமிலும் இயக்குனரின் sincerity and seriousness தெளிவாகத் தெரிகிறது. நம் இயக்குனர்கள் வழக்கமாக commercial compromises என்ற ஒன்றின் பின்னால் தங்கள் குறைகளை ஒளித்துக் கொண்டு தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் மேல் பழியைத் தூக்கிப் போட்டு போவது போல் இல்லாமல் முதல் படத்திலேயே எந்த காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுக்கப் பட்டிருப்பதே இந்த இயக்குனரை தனிப் படுத்துகிறது. கனவு டூயட் கிடையாது. பாடல்களும் பின்புலப் பாடல்களாக - montage type - வருகின்றன. கதாநாயகிக்கு மேக்கப் கிடையாது. ஹீரோ மேல் எந்தவித ஹீரோயிசமும் திணிக்கப் படவில்லை. இப்படி பல நகாசு வேலைகள் செய்து தன் திறமையை முதல் படத்தில் காண்பித்திருக்கிறார். The parts are quite good but not the whole.

கடைசி சீனில் சிறுவயதில் ஆனந்தி கொடுத்த அந்த இறகை மீண்டும் அவளிடமே கொடுக்க, பறக்கும் இறகைச் சிறு வயதில் துரத்தி ஓடும் காட்சி - அதைப் பார்க்கும்போது Tom Hanks நடித்த Forrest Gump படம் நினைவுக்கு வந்தது.

Is the feather an eternal eluding thing to Prabhakar and Ananthi...?


.

28 comments:

Ayyanar Viswanath said...

தமிழ் திரைப்படங்களின் நீளத்தை குறைப்பது அதன் தரத்தை உயர்த்த ஒரு விசையாய் இருக்கலாம்.பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் நேரத்தை அடிப்படையாக கொண்டே செய்யப்படுகின்றன (மொத்தம் 150 நிமிசம்,இதில 6 பாட்டு 28 நிமிசம்,மூணு சண்டை 15 நிமிசம் ஒரு செண்டிமெண்ட் சீன் 10 நிமிசம் பஞ்ச் டைலாக் 10 நிமிசம்..இத்யாதி..இத்யாதி )

பெரும்பாலான கமர்சியல் படங்களுக்கான வாய்ப்பாடு நான் அடைப்புகுறிகளுக்கிடையே எழுதியிருப்பதுதான் ( இந்த தகவல் ஒரு கோடம்பாக்கத்து துணை இயக்குநர் நண்பரிடமிருந்து பெறப்பட்டது)

இப்படியிருக்கையில் தரமான படங்களை நம் சூழலில் எப்படி பெறுவது?இதற்கு படைப்பாளிகள் காரணமா அல்லது பார்வையாளர்கள் காரணமா என்பது பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் சண்டை..

எது எப்படியோ அவ்வப்போது இது போன்ற சில படங்கள் (குறைகளுடனாவது) வருவது ஆறுதலளிக்கிறது.

என் வரிகள் உங்களுக்குப் பொருந்துவதில் மகிழ்வே :)

கோவை சிபி said...

good critic.i saw the film.your analaysis is excellent.

ஆடுமாடு said...

நண்பரே... கற்றது தமிழ் தவறான படம். மிடில் சினிமா என்பது கூட ரொம்ப தவறு. பருத்திவீரன் கூட ஒரு விதத்தில் தவறான சினிமாதான். 'தமிழ் படித்தவனுக்கு தமிழ் நாட்டில் என்ன நிலை இருக்கிறது' என்பதைத்தான் படம் சொல்லுகிறது என்கிறார் இயக்குனர் ராம்(ஒரு பேட்டியில்) ஆனால், அவரது கருத்து படத்தில் ஒரு பகுதியாகத்தான் வருகிறது. ஒரு சைக்கோவின் கதை என்பதை கூட அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தப் படம் தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தியிருக்கும் படம். எப்படி என்பது பற்றி நானும் விரிவாக ஒரு பதிவு போடுகிறேன்.
நன்றி.
ஆடுமாடு

தருமி said...

நன்றி அய்யனார்.
//படைப்பாளிகள் காரணமா அல்லது பார்வையாளர்கள் காரணமா //

உறுதியாக இதற்கு என் பதில்: படைப்பாளிகள்தான்

தருமி said...

9k Nagar,
நன்றி.
பெயரைக் கேட்டா அட்ரஸ் சொல்றதுமாதிரி இருக்கு !!

தருமி said...

ஆடுமாடு,
எழுதுங்கள். காத்திருக்கிறேன்.


kadananathi - இதை வாசிக்க முயற்சித்து முழுத் தோல்வியடைந்து விட்டேன்! help !!

குசும்பன் said...

தருமி அய்யா இனி நீ எல்லாம் விமர்சனம் எழுதுவியான்னு என்னை பார்த்து கேட்பது போல் இருக்கு உங்க விமர்சனம்.

http://kusumbuonly.blogspot.com/2007/10/blog-post_14.html

இயக்குனருக்கு இந்த கதை கரு தாம்பரம் இரயில் நிலையத்தில் ஒரு தமிழ் படித்த மனநலம் சரி இல்லாதவர் பொது அறிவு சம்மந்தமான விசயங்களை எல்லோரிடமும் சொல்வாராம் அதற்காக அனைவரும் அவருக்கு காசு போடுவார்கள், வருமையினால் தான் அவர் அப்படி ஆனாராம் அவர்தான் இந்த படத்துக்கு இன்ஸ்பிரேசன் என்று ஒரு பேட்டியில் சொன்னதாக நினைவு.

இலவசக்கொத்தனார் said...

அடுத்தது பெனாத்தலார் என்ன எழுதப் போறாருன்னு தெரியுதே!!! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இப்போ இந்த மாதிரி படத்துக்கு முயற்சிக்கும்போதுதான் திரைப்பட விமர்சனம் என்பதே உண்மையிலேயே எவ்வளவு கஷ்டமான விஷயம்னு தெரியுது.//

உங்கள் விமர்சனத்தைப் பார்த்த பின்னர், இதே போல் உணர்வு எனக்கும் தோன்றியது தருமி ஐயா!
சில விமர்சனங்களே படத்துடன் ஒட்டி, படம் பார்ப்பது போலவே ஒரு பிரமையை எழுப்பும்!

//The parts are quite good but not the whole//

நச்
and the end of the review is "feathery" touch!

தருமி said...

கொத்ஸ்,
ஏங்க இப்படி சிண்டு முடியிறீங்க? ஆனா உங்க பப்பு வேகாது தெரியுமா? வேணும்னா, இதுக்கு முந்திய என் பதிவில் பெனாத்தலார் என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க ..

ஹூம்... :)

தருமி said...

என்ன இப்படி சொல்லீட்டீங்க, குசும்பா! உங்கள் பதிவை வாசித்திருந்தேன். நானும் இப்படத்தைப் பற்றி எழுதணும்னு நினச்சாதாலதான் பின்னூட்டம் இடவில்லை.

உங்கள மாதிரி 'நறுக்' / 'நச்'ன்னு எழுதாம இப்படி வழக்கம்போல நீஈஈஈஈஈஈளமா எழுதிட்டோமே .. குசும்பன் என்ன சொல்லுவாரோன்னு நினச்சி பயந்துகிட்டு இருக்கேன் .. நீங்க என்னடான்னா ...!

தருமி said...

டெல்பின்,
நன்றி டாக்டர்.

தருமி said...

kannabiran, RAVI SHANKAR (KRS),

"வருடலுக்கு" நன்றி.

வல்லிசிம்ஹன் said...

தருமி சார்,
படத்தைப் பொறுமையாகப் பார்க்க வைத்திருக்கிறார்கள்.
அதனால் ஏதோ ஒரு நல்ல பாயிண்ட் இருக்கிறது.

விமரிசனமும் படித்து விட்டு, டிரெயிலர் படம் டிவியில் பார்த்தால் போதும்னு நினைக்கிறேன்:00)))

ஆடுமாடு said...

தருமி பாஸூ... அது கடனாநதி பாஸூ. எங்க ஊரு நதியோட பேரு....நாங்களும் வைப்போம்ல.

ஆடுமாடு said...

தல நானும் என் பங்குக்கு எழுதிட்டேன். படிச்சுட்டு எழுதுங்க.
http://aadumaadu.blogspot.com/2007/10/blog-post_5477.html

தருமி said...

வல்லிசிம்ஹன்,
நீங்க படம் முழுசா பார்த்திட்டீங்க தான?

cheena (சீனா) said...

படம் இன்னும் பார்க்கவில்லை- விமர்சனங்கள் நிறையப் படித்து விட்டேன். கருத்து அப்புறம் கூறுகிறேன்.

Veera said...

மற்ற தமிழ் படங்களுடன் ஒப்பிடும் போது, 'கற்றது தமிழ்' தரமானதாகத் தோணலாம். ஆனால், படத்தில் சொல்ல நிறைய தவறான கருத்துக்களைத் திணித்திருக்கிறார்கள். உதாரணம், ஐ.டி. துறையின் மீதான தாக்குதல்.

சில குறைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், வரவேற்கப்பட வேண்டிய படம்தான்.

G.Ragavan said...

அப்பப் படம் பாக்க வேண்டாங்குறீங்க. சரி.

தருமி said...

ஜிரா,
எங்கே அய்யா நானப்படிச் சொன்னேன்?
ஒழுங்கா படத்தைப் பாருங்க.. பார்க்க வேண்டியது நிறைய இருக்கு..

more controversial better the movie, இல்லியா?

G.Ragavan said...

// தருமி said...
ஜிரா,
எங்கே அய்யா நானப்படிச் சொன்னேன்?
ஒழுங்கா படத்தைப் பாருங்க.. பார்க்க வேண்டியது நிறைய இருக்கு..

more controversial better the movie, இல்லியா? //

நல்லா யோசிச்சிப் பாருங்க... நல்ல படம்னா.. ஒடனே போய்ப் பாருங்கன்னு சொல்லீருப்பீங்க. இப்பிடி சுத்தி வளைச்சிக் கஷ்டப்பட்டிருக்க மாட்டீங்கள்ள. அதுனால சொன்னேன்.

more controversial better the movieன்னு சொல்றீங்களா? ம்ம்ம்ம்... தெரியலைங்க. என்ன படம் அது...குற்றப்பத்திரிக்கை...என்னா controversy...15 வருசங் கழிச்சித்தானே படமே வந்துச்சு. ஆனா படம்? கிழிஞ்ச பப்படம். அந்த மாதிரி ஆயிரக்கூடாதேன்னுதான். ஆனாலும் நீங்க சொல்றீங்க. நல்ல பிரிண்ட் நெட்டுல டவுண்லோடு கிடைக்கிறப்போ பாக்கிறேன். இல்லைன்னா எனக்கு வேற வழி இல்ல.

துளசி கோபால் said...

நம்ம முத்துவின் குரல்வலையில் நேத்து எழுதுன பின்னூட்டத்தை இங்கேயும் போடறேன்.

------

நேத்துத்தான் இந்தப்படம் பார்க்க ஆரம்பிச்சு, இன்னிக்குக் காலையில் முடிச்சோம்.

என் மனசுலெ இதைப்பத்தி எழுதணுமுன்னு தோணுச்சு. என்னாங்கடா இப்படியெல்லாம்....? தமிழ்ப் படிச்சா இப்படியெல்லாம் ஆயிருமா? எதோ மெண்டலோட கதையை எடுத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சுக்கிட்டே, நம்மாட்கள் யாராவது விமரிசனம் போட்டாங்களான்னு வலையில் தேடுனேன்.


சினி சவுத், தமிழ் சினிமாவுலெ வர்ற விமரிசங்களை எப்பவுமே கணக்கில் எடுத்துக்கறதில்லை என்றது வேற விஷயம்:-)

பொதுவா எந்த சினிமாவையும் பார்க்கரதுக்கு முன்னே விமரிசனங்களைப் படிக்கும் வழக்கம் இல்லை. எந்த ஒரு முன் முடிவும் வந்துறக்கூடாதுன்னுதான்.


நான் நினைச்சதை அப்படியே எழுதிட்டீங்க. (எனக்கும் ஒரு வேலை மிச்சம்)

அந்தப் பையன் 'ஜீவா' நடிச்ச ராம் படத்தோட ரெண்டாவது பார்ட்டா இது?

அந்தத் தாடி மேக்கப் சகிக்கலை. படத்துக்காக ரொம்ப இளைச்ச மாதிரி இருக்கு உருவம்.

நாய் செத்ததுதான் வருத்தமாப்போச்சு.


----
நம்ம ஆடுமாடு சொன்னதுபோல 'பருத்தி வீரனும்' அவ்வளவா இம்ப்ரெஸ் ஆகலை. எல்லாரும் தலையில் தூக்கி வச்சு ஆடுறதை வேடிக்கைப் பார்க்கத்தான் தோணுச்சு.

அய்யனார் சொன்ன கோடம்பாக்கம் ஃபார்முலாவில் இருக்கும் 6 பாட்டுலே ஒரு நாலு பாட்டாவது வெளிநாட்டுலே இருக்கும் நடுத்தெருவில் எடுக்கணும்:-)

தருமி said...

துளசி,
//'பருத்தி வீரனும்' அவ்வளவா இம்ப்ரெஸ் ஆகலை. //
எனக்கும்தான். அதைவிட மொழி, வெயில் இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தன.

Arivu kolunthu said...

namaku pirakum kulanthai siru kuraiyudan piranthal nam epadi avarkalai verupathilaiyo atay pola nalla padangal silla kuraikaludan vanthalum nam athai othuka kudathu

ச.மனோகர் said...

எனக்கு தெரிந்த ஒருவன்.."இந்தப் படத்தை ...'கஞ்சா' அடித்துவிட்டு போய் பாரு..படமே வேறு மாதிரி தெரியும்" என்றான்."எப்படி..படம் தலகீழா தெரியுமா?" என்றேன்.. முறைத்துவிட்டு போனான்.

தருமி சார்..உங்கள் விமர்சனம் படம் பார்க்கத்தூண்டுகிறது.கொடுக்கின்ற காசுக்கு ஏதோ தேறும் போலத் தெரிகிறது.பார்த்துவிடுகிறேன்.

Madhu said...

Search in தமிழ் http://www.yanthram.com/ta/

திருச்சிராப்பள்ளி தமிழச்சி said...

கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?
படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?



எண்ணாமல் எவரொருவரும் எப்பொருளையும், எச்செயலையும் ஆராயவோ, விளங்கிக்கொள்ளவோ, விளக்கவோ முடியாது. எண்ணங்களே அனைத்து அறிவியல்களுக்கும், இலக்கியங்களுக்கும், குழப்பங்களுக்கும், போரட்டங்களுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படையாகும். ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்பதில் பல கற்று, பல பட்டங்களையும், விருதுகளையும் அள்ளிச்சென்ற மாமேதைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானிகளுக்கும் தெளிவில்லை. தெளிவில்லாத விஷயங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.


ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை? இக்கேள்வியில் மனித அறிவின் சூட்சுமம் பொதிந்துள்ளது. படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும் என்ற மூடநம்பிக்கையை இன்றைய கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும், சிந்திக்க முடியும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது.


கல்வித்தகுதி என்பதின் அடிுப்படையில் சமுதாயத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து முன்னுரிமைகளும் சமூகக் குற்றமாகும். படித்தாவனால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியும் என்பதற்கு உள்ள ஆதாரங்கள் என்ன?


படிக்கத்தெரிந்தவர்களும், படிப்பறிவற்றவர்களும், கற்றவர்களும் ஒன்றைப்பற்றி எண்ணுவதென்ன என்பதை http://www.tamil.host.sk/ , http://tamil.isgreat.org போன்ற இணையத்தளங்கள் ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதை அழகான தமிழில் சித்தரிக்கின்றன.


எனவே, ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை அல்லது உன்னைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்ற தலைப்பில் தாங்களறிந்த அறிஞர்களைக் கொண்டு ஒரு விவாத்தைத் தொடங்கினால் பல பயனுள்ள, மக்கள் மனதைக் கவரும் சூடான, சுவையான பல தகவல்களும், கருத்துக்களும் மக்களிடமிருந்து வெளியாகும். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?



- திருச்சிராப்பள்ளி ஷாம்ளின் ஜோஸஃபின்

Post a Comment