*
ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்... 2
ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்... 3
I. ஒரு நிகழ்வு .....
*
LUKAT - L ET US KNOW AND THINK இந்தப் பெயரில் மரத்தடிக் குழுமம் ஒன்றை என் மாணவர்களுக்காகத் தொடர்ந்து நடத்தி வந்தேன். ஆரம்பிக்கும்போது U.P.S.C. தேர்வுகளுக்கு மாணவர்களை உந்துவதற்கு என்ற எண்ணத்தில் ஆரம்பித்தாலும் அதன் பின் பொதுவான எந்த விஷயங்களையும் பற்றிப் பேசவும், விவாதிக்கவும் ஒரு களமாக ஆக்கிக் கொண்டோம். சில ஆண்டுகளில் ஓரிருவர் மட்டுமே வந்ததுமுண்டு; பத்துப் பதினைந்து பேர் என்று பெருங்கூட்டமாக இருந்ததுமுண்டு. நான்கு சுவர்களுக்குள் இருந்துகொண்டு ஆசிரியர்-மாணவர்கள் என்ற நினைப்போடும், ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டுமோவென்ற தயக்கத்தோடும் இருப்பதைத் தவிர்க்க மரத்தடி கல் பெஞ்சுகளே எங்கள் இடமாயிற்று.
இதில் ஆர்வம் காட்டிய சில மாணவர்கள் நல்ல பதவிகளுக்குச் சென்றது திருப்தியளித்தது. அதைவிடவும் இக்கூட்டங்களுக்கு வந்த மாணவர்கள் எல்லோருமே நியாய உணர்வோடு வாழ்க்கையில் சில திடமான வரைமுறைகளோடுதான் பணியாற்ற வேண்டுமென உறுதியோடு இருந்ததே மிக்க பெருமைக்குரியதாகவும் மகிழ்ச்சிக்குரியதாகவும் இருந்தது. கல்லூரி முடித்து நல்ல 'வரும்படி' வரும் வேலையில்(Excise Dept), வீடு தேடி காசு வரும் ஊரில் (ஊர் பெயர் எதுக்கு?!) கிடைத்த ஊரை விட்டு உடனே மாற்றல் வாங்கிய ஒரு மாணவனும், அப்படி ஒரு வேலையையே உதறிவிட்டு வேறு வேலைக்குச் சென்ற மாணவனும் இன்னும் நினைவில் இருக்கிறார்கள். ஆசிரியர் தொழிலில் செய்த வெகு சில நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று என்ற திருப்தி எப்போதும் மனதின் ஒரு ஓரத்தில் உண்டு.
இதில் நான் கற்றதும் அதிகம். Zen பற்றி நான் முதன் முதலில் ஒரு மாணவன் மூலம் கேள்விப்பட்டதும் விளக்கம் பெற்றதும் இங்குதான். ஹைக்கூ பற்றியும் தான் எழுதிய ஹைக்கூகளை எங்களிடையே அரங்கேற்றம் செய்த மாணவனிடமிருந்து அறிந்தேன். ஓஷோ, ஜிட்டு,ஹிட்லர்,பாலஸ்தீனம், கம்யூனிசம், பொருளாதாரம், பட்ஜெட், - எல்லாம் அந்த மரத்தடியில் இடம் பெற்றன(ர்).
டிசம்பர் 6, 1992 இந்திய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுவிட்ட நாள். அதிலும் ஏதோ சாகா வரம் பெற்றதுபோல் அந்த நாள் ஆகிவிட்டதை நினைக்கும்போது அச்சமாகவும், வருத்தமாகவும் உள்ளது. இந்த நாள் நினைவு நாளாக நின்று நிலைப்பது எந்த அளவு நமக்கும், நம் நாட்டு இறையாண்மைக்கும், நம் எதிர்கால சந்ததிக்கும் நல்லது என்பதை நினைத்துப் பார்ப்பது நல்லது. வளர ஆரம்பித்த வன்மங்களை நீர் ஊற்றி வளர்த்து வேர் விடச்செய்யும் நாளாக இந்த நினைவு நாள் இருப்பது யாருக்கும் நல்லதில்ல; அதிலும் வளர்ந்து வரூம் சமூகத்திற்கு மிகவும் கெடுதலே என்பதை எப்போது எல்லோரும் புரிந்து கொள்ளப் போகிறோமோ?
எங்கள் குழுமத்தில் இந்த நிகழ்விற்கு முந்திய வாரத்திலும், முடிந்த அடுத்த வாரத்திலும் இதைத்தான் விவாதப் பொருளாகக் கொண்டிருந்தோம்.
முந்திய வாரத்தில் பேசும்போது ரொம்ப நிச்சயமாக பாபர் மசூதியில் வன்முறை நடக்கும்; பாபர் மசூதிக்குக் கேடு வரும் என்று பேசினோம். இடித்து விடுவார்கள் என்று நினைக்கவில்லை; ஆனால் ஓர் அடையாளத்திற்காவது ஏதாவது அரங்கேற்றப்படும் என்பதில் நிச்சயமாக இருந்தோம். நரசிம்ம ராவ், கல்யாண் சிங்கிற்கு உத்தரவு தருவதும், நீதி மன்றங்கள் கல்யாண் சிங்கிற்கு உத்தரவு தருவதும் வெறும் கண்துடைப்பே; நடக்கப் போவது நடந்தே தீரும் என்பதே எங்கள் விவாதங்களில் இருந்தது.
நிகழ்வு நடந்து முடிந்த பிறகு அதன் காரணங்கள், விளைவுகள் இவற்றைப் பற்றிப் பேசினோம். எங்களுக்கே இது இப்படிதான் நடக்கப் போகிறது என்பது தெரிந்திருந்த போதும் மத்திய, மாநில அரசும் அமைச்சர்களும் ஏதோ எதிர்பாராதது நடந்தது போலவும், தங்களையும் மீறி இவைகளெல்லாம் நடந்தது போலவும் ஒரு நாடகம் நடத்தியது வேடிக்கையான, வேதனையான விஷயம். passing the buck விளையாட்டு போல் ஒருவரை ஒருவர் குறை சொல்வதும், நடத்தி முடித்த B.J.P., V.H.P., பஜ்ரங் தள் பெரிய காரியம் ஒன்றை செய்து முடித்த மகிழ்ச்சியில் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்ததும் நடந்தேறியது.
இப்படியெல்லாம் நடந்ததற்காக யாரும் மகிழ்ச்சியடையவில்லை. ஆனாலும் காரண காரியங்களைப் பற்றிப் பேசினோம்.
மசூதியை இடித்தது சரி என்று யாருமே நினைக்கவில்லை. அது நடந்திருக்கக்கூடாத ஒரு காரியம்.
ஆனால், 1949 டிசம்பர் 23ம் தேதியன்று மசூதிக்குள் அதே வளாகத்தில் இருந்து வந்த இந்து மதக் கோவிலிலிருந்த ராமர் சிலைகளை இரவோடிரவாக வைத்து அதன்பின் இரு தரப்பினரும் வழக்கு மன்றம் சென்ற பின்,
(1) அதுபோன்ற விவாதங்கள் - disputes - இருக்குமிடங்களை தொழுகைக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதாக (அந்த சமயத்தில் ஊடகங்களில் வந்த செய்தி) இஸ்லாமிய ஒழுங்கு இருப்பதால் அங்கு இஸ்லாமியர்கள் எந்த தொழுகையும் நடத்துவதில்லை. இது ஒரு புறம்.
அடுத்ததாக, (2) இங்குதான் எங்கள் கடவுள் ராமர் பிறந்தார் என்பது ஒரு சமய நம்பிக்கை சார்ந்த விஷயம். அதற்கு அத்தாட்சி வேண்டுமென்றால் எங்கு போவது? ஒவ்வொரு மதத்திலும் சில நம்பிக்கைகள். இது கிறிஸ்து பிறந்த இடம் என்று ஒன்றைக் காண்பித்து அங்கு ஒரு கோயிலும் கட்டினால், அதற்கு சான்று என்று எப்படிக் கேட்க முடியும்? கேட்டால்தான் எதைச் சான்றாக காண்பிக்க முடியும்? இது நபியின் தாடியிலுள்ள முடி என்று சொன்னால் அது ஒரு நம்பிக்கை சார்ந்த விசயம்தானே ஒழிய சான்றோடு நிரூபிக்க முடிந்த ஒன்றல்ல.
(3) அப்படி நம்பிக்கை கொள்பவர்கள் பெரும்பான்மை மக்களான இந்துக்கள்.
இந்த மூன்றையும் வைத்துப் பார்க்கும்போது இஸ்லாமியர்கள் தாங்கள் தொழுகைக்காக பயன்படுத்தாத ஓரிடத்தை, பெரும்பான்மை இந்துக்களின் சமய நம்பிக்கைக்கு மதிப்பு கொடுத்து ஏன் விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது.
ஆனால், அவ்வாறு அவர்கள் விட்டுக் கொடுத்திருந்தால் இரண்டு காரியங்கள் நடந்திருக்கக் கூடும் என்றும் பேசினோம். இதுதான் சரியான நேரமென்று இந்துக்கள் காசி, துவாரகை போன்ற இடங்களிலும் இதுபோல் பிரச்சனையுள்ள மற்ற இடங்களையும் கேட்க ஆரம்பிக்கலாம். இஸ்லாமியர்கள் விட்டுக் கொடுப்பதை அவர்களின் பெருந்தன்மை என்று பார்க்காமல் அவர்களது பலவீனம் என்று எடை போட்டுவிடவும் கூடும். மைனாரிட்டிகளாக இருப்பவர்களின் எதிர்காலத்துக்கு இது நல்லதல்ல.
எப்போதுமே எங்களின் விவாதங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட முடிவைத் தரவேண்டும் என்று நாங்கள் நினைப்பதில்லை. யாரு யாருக்கு எந்த விஷயங்கள் சரியாகப் படுகிறதோ அதை நாங்கள் எடுத்துச் சொல்வதுண்டு. எல்லோரும் ஒருமித்த கருத்தொன்றுக்கு வரவேண்டுமென எப்போதும் நினைப்பதில்லை.
அன்றைய சந்திப்பிலும் இதுபோன்று அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பேசிக் கலைந்தோம்.
........................................................ தொடரும்.
18 comments:
என்னைப் பொருத்தவரையில்... அந்த மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது. மசூதியாகத் தொழுகைக்கு ஆகவில்லையென்றாலும் அது ஒரு பழங்கட்டிடம். குறிப்பிட்ட ஒரு காலத்தைக் குறிப்பிடும் பழஞ்சின்னம். எல்லோரா கைலாசநாதர் கோயிலில் கூடத்தான் வழிபாடு இல்லை. அதற்காக இடித்து விட்டு பல்கலைக்கழகம் கட்ட முடியுமா?
இந்த விஷயத்தில் தவறு இந்துக்களின் பக்கம் என்பதே என் கருத்து. ஆப்கன் புத்தர் சிலையிடிப்பிற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை என்பதே என் கருத்து. அங்கு முஸ்லீம்களின் தவறு. இங்கு இந்துக்களின் தவறு.
வெகு சில ஆசிரியர்களே இம்மாதிரியான முயற்சிகளில் இறங்குவர். 'வீணா பசங்கள்ட்ட மாரடிக்காம வீட்டுக்குப் போனமா கொளந்த, குட்டின்னு குடும்பத்த கவனிச்சமான்னு இல்லாம பொழப்பத்தவன்யா அந்தாளு' என்ற ஏச்சுக்கு நடுவிலும் நல்லெண்ணமுள்ள சில ஆசிரியர்கள் எனக்கும் கிடைத்தது பெரும் பாக்கியமே.
அந்த சிலரை மட்டுமே குருவாக அன்புடனும் மரியாதையுடனும் எம்மால் நினைக்க முடிகிறது.
நீஙகளும் அது மாதிரி ஒருவர் என நினைக்கும் போது மனம் மகிழ்கிறது. அந்த உயர்ந்தோர்களையும் நினைக்க வைக்கிறது.
//ஜிட்டு//
ஜே.கே?
ஐயோ அந்த நாளை இன்று நினைத்தாலும் பதறுகிறது. தொலைக்காட்சியில் கண்டது கண் முன் நிற்கிறது.
No doubt the kar seva was completely stage managed..
என்னைப்பொருத்தவரை இதனால் இழப்பு ஹிந்துக்களுக்கே.. இப்பொழுது உள்ள சூழ்நிலயில் அங்கே காலத்திற்கும் ராமர் கோவில் வராது.. மசூதியை இடிக்காமல் அந்த இடத்திலிருந்து 100 அடி தள்ளி ஒரு அட்டகாசமான கோவில் கட்டியிருந்தால்.. காசி, மதுரா போல் சீரும் சிறப்புமான வழிப்பாட்டுத் தலமாக ஆகியிருக்கும்..
jiraa,
//இங்கு இந்துக்களின் தவறு.//
அப்படியா சொல்லுகிறீர்கள்? தொடர்ந்து போய் பார்க்கணும் ..
சுல்தான்,
உங்கள் ஆசிரியர்களை நினைக்க வைத்ததற்காக மிக்க மகிழ்ச்சி.
ஆமாம் கபீஷ்.
குமரன்
//அந்த நாளை இன்று நினைத்தாலும் பதறுகிறது. //
ஆமாம் இப்போதும் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பதறும் நாளாக இருப்பது வேதனைதான்.
பரத்,
//No doubt the kar seva was completely stage managed..
என்னைப்பொருத்தவரை இதனால் இழப்பு ஹிந்துக்களுக்கே.. //
இரு கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்.
அன்பார்ந்த ஆசிரியருக்கு, பல நாட்களாக உங்கள் பதிவைப் படித்து வந்தாலும், கம்ப்யூட்டர் கைநாட்டான எனக்கு பின்னுட்டம் ஈட இயலவில்லை. பிளாக்கர் ஆக இல்லாவிட்டாலும் கூகிள் ஐடி இருந்தால் போதும் என்று தெரிய இத்தனை நாள். சீரான தெளிவான மற்றும் நேர்மையான தங்கள் பதிவுகளைப் படிக்கும் போது உங்கள் மாணவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றே எண்ணுகிறேன். உணர்ச்சிவசப் படமால் எழுதுவது தங்களின் சிறப்பு.
வணக்கத்துடன்
மெச்சு
//ஜி.ரா
என்னைப் பொருத்தவரையில்... அந்த மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது//
வழி மொழிகிறேன்.
//ஆனால், 1949 டிசம்பர் 23ம் தேதியன்று மசூதிக்குள் அதே வளாகத்தில் இருந்து வந்த இந்து மதக் கோவிலிலிருந்த ராமர் சிலைகளை இரவோடிரவாக வைத்து //
நெஜம்மாவா? 1949 டிசம்பர் 23ம் தேதிக்கு முன்னாடி வரை அங்கே தொழுகை நடந்ததா? அந்த இடம் பாபர் இந்தியாவை வெற்றி கொண்டதன் அடையாளமாக எழுப்பட்ட நினைவு சின்னம் என்று தான் எதிலோ படித்திருக்கிறேன்.
டிஸ்கி: இது தெரிஞ்சுக்கறதுக்காக கேட்டது. மத்தபடி இருக்கற எல்லா மத வழிபாட்டு தலங்களையும் யாரும் இடிக்காம இருந்தாலே போதும். புதுசா கட்டறத விட உருப்படியா எவ்வளவோ பண்ணலாம் அப்படிங்கறது
என்னோட கருத்து (அப்பாடா!நானும் கருத்து சொல்லிட்டேன். ஹி ஹி)
நாராயணன்,
//உங்கள் மாணவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றே எண்ணுகிறேன். //
அது எப்படியோ, நான் மிகவும் "ஆசிர்வதிக்கப்பட்டவன்" என்றுதான் நினைக்கிறேன். என் தகுதிக்கும் மேல் மாணவர்கள் என்னிடம் அன்பு செலுத்தினார்கள். நான் அதற்குத் தகுதி உடையவனா என்பது ஐயமே.
அதுசரி, நாராயணன் உங்க பெயர். பிறகுஅது என்ன 'மெச்சு'?
கபீஷ்,
அடடா அந்த மாதிரியா நினச்சிக்கிட்டு இருக்கீங்க. பெயரே பாபர் மசூதியாச்சே.
விக்கீபீடியா பார்த்தால்கூட போதுமே. இன்னும் நிறைய விஷயம் பார்க்கலாமே! இல்ல கூகுள் ஆண்டவர்ட்ட கேளுங்க ...
ஆமா, அப்படித்தான் நினைச்சுட்டுருந்தேன். நான் வேற ரொம்ப புத்திசாலி ஆச்சா, அதனால அப்போ ஏன் அதோட பேருல மசூதி இருக்குன்னு கேள்வி கேட்டு தெரிஞ்சிக்கல்ல. நான் கூகிள், விக்கீபீடியா ல தேட மாட்டேன். ஏன்னு இன்னொரு நாள் சொல்றேன். இப்போ டைப் பண்ணி டயர்ட் ஆகிட்டேன்
என் அன்பு மகளின் பெயர் "மெச்சு". எனக்கும் வெகு நாட்களாக பிளாக்-ல் எழுத வேண்டும் என்று ஆசை. ரொம்ப சுவராஸ்யமாக எழுத எனக்கு அனுபவம் போறாது. இருந்தாலும் எழுத எழுத திறமை கைகூடும் என்ற நம்பிக்கை தான். இப்போது தான் நேரம் கிடைத்தது. என் சுதந்திரத்திற்கு வலை இணைப்பும் கிடைத்தது இப்போது. என் வலைப்பூ பெயராக அதை நிறுவ ஆசை. எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது. phonetic fonts- ஐ என் கணினியில் நிலை நிறுத்த பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேஅன். ( தட்டச்சு உபயம்: google Indic Tanslietr) அன்புடன் மெச்சு
கபீஷ்,
உங்களைப் போல் அந்த நாள் விவகாரங்கள் தெரியாதவர்களுக்கும் போய்ச்சேரவேண்டுமென நினைத்தே இந்த பதிவையிட்டேன்.
மெச்சப்பா நாராயணன்,
//எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது.//
எங்களுக்கென்னாப்ல என்னவாம்? ஏதோ இகலப்பை இருக்கோ என்னவோ அதுனால பிழைப்பு ஓடுது. நீங்க என்னடான்னா பதிவு ஆரம்பிக்கிறதுக்கு முந்தியே க.கை. அப்டின்றது எல்லாம் தெரிஞ்சு உள்ள இறங்குறீங்க. நானெல்லாம் ஆரம்பிக்கும்போது just wet behind the ears கேசு!!
Post a Comment