Saturday, December 17, 2011

543. நானும், photography-யும் ... 4





*
தொடர் பதிவுகள்: 
......... 1,
......... 2,
......... 3,
......... 4

*
முதலில் கலந்து கொண்ட போட்டியில் முதல் பரிசு. அதன் பிறகு இரு ஆறுதல் பரிசுகள். அதோடு சரி. தோல்விச் சுவை வந்த பின், அதற்குப் பிறகு அதிகமாக அனுப்பவும் இல்லை. Madurai Photographic Association  ஒன்று ஆரம்பித்து இரு ஆண்டுகள்  இரு போட்டிகள் நடத்தினோம். பதிவுலகத்தில் நுழைந்ததும் புகைப்படங்களுக்காக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தேன். முதலில் வேகமாக படங்களை அதில் சேர்த்துக் கொண்டிருந்தேன். AUTOBIO(PHOTO)GRAPHY என்று சொந்தக் கதை சோகக் கதை ஒன்றையும் எழுதியிருந்தேன். பின் அதிலும் தேக்கம். நல்ல படங்களைக் காணும்போது நாமும் இதுபோல் எடுக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும். ஆனாலும் நடைமுறையில் அந்த அளவு படங்கள் எடுக்க முடியாதது சோகம் தான்.ஒரு handycam - பெரிய மகளிடமிருந்து - இருந்தது. ஒரு short film எடுக்க ஆசை. ஆசையோடு நின்று விட்டது.

அதே போல் வேறு சில பொறாமைகள்:

முதலில் பதிவுலகில் பார்த்து வியந்த படங்கள் ஆனந்த். இரண்டு ஆச்சரியங்கள். முதலில் அவர் எடுக்கும் subjects -




அவை எதுவாகவும் இருக்கலாம். தக்காளிப் பழமாக இருக்கலாம். ஒன்றும் கிடைக்கவில்லையெனில் வைத்திருக்கும் லென்ஸ்களில் ஒன்றை எடுத்து, இன்னொரு லென்ஸால் அதைப் படமெடுப்பார். அவரைப் பார்த்து சில படங்களை எடுத்து 'ஏமாந்திருக்கிறேன்'.



இந்தக் கட்டிடத்திற்குக் கிடைத்த lighting மிக அழகு. எடுத்த angle  பிரமாதம். திரண்டிருக்கும் மேகங்களும் பல வண்ணக் கலவைகளில் நிற்கின்றன. PP வேலை நிறைந்த படம் என்று நினைக்கிறேன். ஒரு surrealistic படமாக எனக்குத் தெரிகிறது.











எல்லாம் இவர் சொன்ன சொல் கேட்கும் என்பது போல் மேகங்கள் அழகாக அடுக்கடுக்காக நிற்கின்றன. கோவிலும் சரியாக துல்லிதமாக  இருக்கின்றன. சரியான exposure போலும்.

முயற்சித்துப்  பார்க்கணும்.


கருவாயன்: (எதற்கு இந்த பெயரோ? நேரில் பார்த்தால் கேட்கணும்!.) இவரது படத்தில் ஒரு mysticism இருப்பதாக எனக்கு ஒரு நினைப்பு. கிழவியும் புகையும் .. அவரது பல candid shots களில் இது ஒன்று. இவரது படைப்பில் பல இது போன்ற candid shots இருக்குமென நினைக்கிறேன். மழையில் விவசாயி போன்ற படங்கள் நினைவுக்கு வருகின்றன.


காற்று, மேகம், ஒளி, செடிகள் எல்லாமும் இவருக்கு இப்படி ஒத்துழைக்கின்றனவே!
நானும் இதே வண்ணத்துப் பூச்சியை விரட்டிப் பார்த்திருக்கிறேன். பசை போட்டு ஒட்டி வைத்தது போல் செடியில் இவருக்காக உட்கார்ந்தது போல் எனக்கு ஏன் உட்கார மாட்டேன் என்கின்றன இந்த வண்ணத்துப் பூச்சிகள்?!


இரு பெண்கள். வழக்கமாகக் காணும் காட்சிதான். பூவைத்து செல்லும் இவர்களைப் பார்த்ததும் காமிராவைத் தேடும் விரல்கள் இளவஞ்சிக்கு.

மொழியை தங்கள் இஷ்டத்திற்கு வளைத்து தங்களுக்கு சேவகம் செய்ய வைக்கும், நான் மிக விரும்பும்,  இரு பதிவர்களில் இவர் ஒருவர். வார்த்தைகளில் ஜாலம் காட்டும் இவரது படங்களுக்கும் அதே ஜால வித்தை தெரியும். மிக சாதாரணமானவைகளை வித்தியாசமாகப் பார்க்கும் பார்வை இவருக்கு - அது காலி பீர் டப்பாவாக இருந்தாலும் சரி .. கூத்து கட்டி ஆடும் மக்களாக இருந்தாலும் சரி... இவர் காமிராவிற்குள் அழகாக  அடக்கமாகி விடுகிறார்கள்.


தெரு விளக்கும் ஜாலம் காண்பிக்கிறது. படம், PPயில்  கொடுத்திருக்கும் வண்ணம், நின்றிருக்கும் நண்பர் குழாத்தின் moodயை நன்கு பிரதிபலிக்கிறது.




ஆனாலும் இப்படி ஒரு சுரங்கப் பாதை .. அதில் தூரத்தில் நடக்கும் ஒருவர் .. கையில் காமிரா .. சரியான ஒரு தருணத்தில் ஒரு geometric படம் .. வாரே வாவ்!



தருணங்கள் இவர்களைத் தேடி வருகின்றனவா .. இல்லை .. இவர்கள்  அதைத் தேடிப்போகிறார்களா ... தெரியவில்லை. magic moments !


முத்துச்சரம் ராமலஷ்மி ராஜன்:



இவர் படங்களில் எனக்குப் பிடித்தது - படங்களின் நேர்த்தி. அப்படியே picture card quality முழுவதுமாக நிறைந்திருக்கும். எடுக்கும் இடத்தை அப்படியே அச்சுக் குண்டாக கண்முன் இவரது படங்கள் கொண்டு வருகின்றன.

கட்டிடத்தில் எத்தனை மாடி? எண்ணிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்பது போன்ற precision உள்ள படங்கள்.


சரி .. கட்டிடம் அங்கேயே நிற்கும்.
அதை precise ஆக எடுக்க அடுத்த தடவை முயற்சிக்க வேண்டும்.

ஆனால் ஆங்காங்கே பறந்து திரியும் பறவைகளைப் படமெடுக்க நிறைய பொறுமை

வேண்டும். ஆனாலும் எப்படி இந்த படங்களை
எடுக்கிறார்கள் என்பது எனக்கு ஒரு ஆச்சரியம்தான்!  அதில் framingயையும் சரியாகக் கொண்டு வருவது வெறும் PP யால் மட்டுமே முடியாது.




சரி .. சரி .. படம் எடுக்கத் தெரிஞ்சவங்க படம் எடுக்குறாங்க. நம்ம படம் எடுக்க வந்தா வண்ணத்துப் பூச்சிகளெல்லாம் செடியில், மலரில் உட்காராமல் இந்த மாதிரி ரோட்டில் உட்கார்ந்து பாடாய் படுத்துது. என்ன பண்றது, சொல்லுங்க!

..

நாம பார்க்காத தோல்விகளா?

தோல்விகளின் தொடர் பட்டியலில் புகைப்படக் கலையையும் சேர்த்து விட வேண்டியது தான். ஆனால் அதைக் கைவிட வேண்டியது இல்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். ஆச்சு .. அதுக்காச்சு .. எனக்காச்சு ... பாத்துக்குவோம்!

தோல்விகளின் தொகுப்பிலும், களைப்படையாத விக்கிரமாதித்தன் வேதாளத்தைத் தோளில் போட்டுகொண்டு போவது போல், காமிராவைத் தோளில் போட்டுக்கிட்டு தொடரணும் ......


*


















*




*

Thursday, December 15, 2011

542. ஒரு சில்லறை ...

*

hi tharumi sir அவர்களே..

blogger ல ஒரு இடம் கிடைத்துட்டா நீங்க என்ன பெரிய ஆலா? கேல்வி கேட்க மட்டும்தான் தெரியும்னா உனக்கெல்லாம் எதுக்குடா blogger?நீ இஸ்லாத்தப் பற்றி கெட்ட கேல்வியை எல்லாம் என்கிட்ட கேலுடா..ஆனா ஒன்று மற்றவன் சொன்னத டப்பிங் பன்னாம நீயாகவே யோசித்து, இஸ்லாத்தில் உள்ள தவருகளை கேலுடா..

*
அழகுத் தமிழிலும், பண்பிலும் மேலோங்கிய இம்மடல் ரியாஸ் என்ற பெருந்தகையிடமிருந்து எனக்கு வந்துள்ளது. ("S. Riyas" முகவரி: riyaamail@gmail.com)

தமிழ் வாழ்க .. அவரது மார்க்கமும்..!

*



*

Wednesday, December 14, 2011

541. நானும் photography-யும் ... 3




*
தொடர் பதிவுகள்: 
......... 1,
......... 2,
......... 3,  
........  4.

*
காமிராவைத் தூக்கிய அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் தான் எத்தனை வித்தியாசம். auto focusing, VR lens, digital, படம் எடுத்த அடுத்த விநாடியில் படம் கண்முன்னே... சரியாக வந்ததா இல்லையா என்று instant result .. சரியாக வரலையா அடுத்த முயற்சி.. படம் எடுத்து முடித்த பிறகு இருக்கவே இருக்கிறது PP - post production ... adobe photoshop, light room போன்று ஆயிரத்தெட்டு மென் பொருள்கள் .. எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோம்.

ஆனால் அந்த காலத்தில் எல்லாமே manual மட்டும் தான். காலமும் நன்கு கைகளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கும். ஒரு ரோல் பில்ம் வாங்கி மாட்டினால் படம் எடுத்து முடித்து எப்போது develop செய்வோமோ அதுவரை என்ன எடுத்தோம்; எப்படி வந்திருக்கும் என்பதெல்லாமே தெரியாமல் இருப்போம். தனிக்குறிப்பாக exposure details எழுதி வைத்துக் கொண்டதும் உண்டு - பின்னால் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக. சொந்தமாக develop செய்யும் போது கிடைக்கும் thrill பயங்கரம் தான். fixer-லிருந்து எடுக்கும் போது நிச்சயமாக இதயம் பட படத்துத் துடிக்கும். பாவம் .. இப்போ காமிரா வைத்திருக்கும் இளைய நண்பர்களுக்கு அந்த துடிப்பை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்காது தான்.

fixer-லிருந்து எடுத்துக் கழுவி காய வைத்து விட்டு அதன் பின் ஒவ்வொரு ப்ரேமாகப் பார்க்கும் போது ஏற்படும் சந்தோஷங்கள் .. சோகங்கள் .. ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேனே ...

மதுரை வைகை நதியின் கல்பாலத்தில் பட்மெடுப்பது மிகவும் பிடிக்கும். வாழ்க்கையின் பல குறுக்கு வெட்டுத் தோற்றங்களை அங்கே காணலாம். பலவகை வியாபாரங்கள், ஆற்றுக்குள் தொட்டி கட்டி காசு கொடுத்து குளிக்கும் மக்கள், காற்றில் காயும் துணிகள் .. வாழ்க்கை மிகவும் சுறுசுறுப்பாக நடக்கும். அந்தப் பாலத்திலும், ஆற்றுக்குள் இறங்கியும் பலமுறை படமெடுத்ததுண்டு. ஒரு நாள் படமெடுத்து பாலத்தில் ஏறப்போகும்போது இரண்டு கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன. நல்ல back lighting .. படமெடுக்க ஆசை. முதல் ஷாட்
U  &  I

எடுத்தேன். எதற்கும் இன்னொன்றும் எடுத்துக் கொள்ளலாமா என்று நினைத்தால் அதுவே கடைசி ப்ரேமாக இருந்திருக்கிறது. அப்பவே ஒரு பயம் தான் -  கடைசி ப்ரேம் என்பதால். ரோல் டெவலப் செய்து முதலில் க்ழுதைகளைத்தான் பார்த்தேன். பயந்தது நடந்திருந்தது. exposure  சரிதான். ஆனால் கடைசி ப்ரேம் என்பதால் நன்றாக ஒரு scratch. - emulsion உறிந்திருந்தது. படம் போட்டால் ஒரு கருப்பு வட்டம் வயிற்றில் வரும். சோகப்படத்தான் முடியும். இப்போதென்றால் உடனே அடுத்த படம். நீங்களும் அங்கே தான் இருப்பீர்கள்; கழுதைகளும் அப்படித்தான். பிரச்சனை ஏதுமில்லை. இப்போது நெகட்டிவ் இப்படி ஆன பின் நான் கழுதைகளைத் தேடிப் போகவா முடியும். என் தலைவிதியும், கழுதைகளின் தலைவிதியும் இப்படித்தான்  என்று தான் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும்  அந்த நெகட்டிவ் என்னிடம் பத்திரமாக இருந்தது. adobe photoshop கை கொடுக்க படத்தை பல ஆண்டுகள் கழித்து தேற்றி விட்டேன்! இப்போது காமிரா உலகமே மாயலோகமாக அல்லவா மாறிவிட்டது ! (கழுதைகளுக்குக் கொடுத்த தலைப்பு உங்களுக்குப் பிடிக்கிறதான்னு சொல்லுங்க ...)

நெகட்டிவ்களோடு இவ்வளவு பிரச்சனையென்றால் படங்களை ப்ரிண்ட் போடுவதும் தனி ஒரு சுகம்.  பெரிய படம் போடுவதற்கேற்ற நல்ல நெகட்டிவ்கள் கிடைப்பது முதல் சுகம். அதன் பின் பெரிய ப்ரிண்டுகள் போட நடக்கும் முஸ்தீபுகள் பற்றித் தனிப்பதிவே போடலாம்! கெமிக்கல்ஸ் கலப்பது, பெரிய wet table-ல் வேண்டிய வசதிகள் செய்து கொள்வது. enlarger-யைத் திருப்பி, சுவற்றை நோக்கி நிறுத்தி, சுவற்றில் printing paper-யை நிறுத்த சில ஸ்பெஷல் ஏற்பாடுகள் ... இப்படியே போகும். blow up  என்றால் முதலில் 10 x 12 என்ற சைஸ்தான் இருந்தது. அதிலிருந்து முன்னேறி 18 x 24 சைஸ் வரை ப்ரிண்ட் போட்டதாக நினைவு. அதற்கு மேல் போகவும் ஆசை. K.பாலச்சந்தரின் 'அக்னிசாட்சி' படத்தில் சரிதா முகத்தை மிகப் பெரிதாக blow up செய்திருக்குமே .. அதைப் பற்றியக் கட்டுரைகள் எல்லாம் வாசித்து அதில் பாதியாவது செய்ய வேண்டுமென்ற ஆசையெல்லாம் இருந்தது. அதற்கு, முதலில் .. காசுக்கு எங்கே போவது!!??



ஆனாலும் முதலில் blow up என்றால் அது 10 x 12 என்ற சைஸ்தான். அந்த அளவில் முதன் முதல் போட்ட படம் தான் இது.






முதலில் பட்டென்ற வளர்ச்சி ...பின் slowing down ... இதுதானே நம்ம வாழ்க்கை. அதே போல்தான் புகைப்படக் கலையிலும் நமது வளர்ச்சி.

ஆனாலும் காலத்தோடு காலமாக நானும் கொஞ்சம் at least காமிராக்களைப் பொறுத்தவரை மாறித்தான் வந்துள்ளேன். Mamiya போய் Nikon FE வந்தது. அதன்பின் Nikon F2. அடுத்த கட்டம் டிஜிட்டல். 2002-ல் அமெரிக்கா போனபோது முதல் Olympus - digital. 2 MP!! ஆனால் இப்போது வெறும் போனிலேயே அதைவிட அதிக பிக்செல்களோடு காமிரா வந்து விட்டன. Olympus-க்குப் பிறகு Canon Power shot  சின்ன மகளின் முதல் வருகையில் கிடைத்தது. அவளது இரண்டாம் வருகையில் போனால் போகுதுன்னு Nikon 60 with 18 - 55mm & 70 -300mm கிடைத்தது. 500 mm கூட வேணுமானால் நண்பனிடம் இருக்கிறது.

நண்பனும் ஐந்நூறும் ...

ஆக, இப்போ தெருக்கோணல்; அதனால் தான் நடனம் வரவில்லை என்றெல்லாம் நான் பொய் சொல்ல முடியாது!

நல்ல தெரு .. நல்ல மேடை .. நெடுநாள் ஆடிப் பழகிய நடனம் ... ஆனாலும் இன்னும் கட்டுக்குள் வரவில்லையேன்னு கவலை. இதிலும் அடுத்தவங்க எடுக்கிற படமெல்லாம் கண்ணுக்குள் ஒத்தி வச்சிக்கிறது மாதிரி இருக்கு. of course, ஒண்ணு சொல்லுவாங்க .. எத்தனை படம் எடுத்தாலும் நல்ல படத்தை மட்டும் வெளியே காண்பிக்கணும் அப்டின்னு. அப்படிப் பார்த்தா சமீபத்தில் எடுத்த எந்தப் படத்தை நான் பெருசா வெளியே சொல்ல முடியும்னு தெரியலை. அந்தக் கதைகளை அடுத்தப் பதிவில் சொல்றேனே ...

.......... தொடரும்


*

Tuesday, December 13, 2011

540. நானும் photography-யும் ... 2



*
தொடர் பதிவுகள்: 
......... 1,
......... 2,
......... 3,  
........  4.

*

காமிரா வாங்குவதற்கு முன்பேயே அந்த ஆசை கொஞ்சம் இருந்தது நினைவுக்கு வருகிறது. S.S.L.C. முடிப்பது அந்தக் காலத்தில் ஒரு முக்கிய கால கட்டம். அந்த விடுமுறையில் எதிர்த்த வீட்டு ஜாபர் தன்னை படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டு, எங்கிருந்தோ ஒரு டப்பா காமிரா வாங்கி வந்தான். நான் அவனைப் படமெடுக்க வேண்டுமென்றான். 'ஒரு கண்டிஷன்' என்றேன். என்ன .. உன்னையும் படம் எடுக்கணுமா என்றான். 'அதெல்லாம் என் ஆசை இல்லை'. ஆனால் ஒரே ஒரு படம் மட்டும் என் ஆசைக்கு உன்னை எடுப்பேன் என்றேன். சரியென்றான். எங்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்றோம். அந்தக் காலத்தில் கையை நீட்டிக் கொண்டு, அந்தக் கையில் பின்னாலிருக்கும் ஏதாவது ஒன்று உட்கார்ந்திருப்பது போல் படமெடுப்பது வழக்கம். அதே போல் கேட்டான்.   இன்னும் சில போஸ்கள். மொத்தம் எட்டோ பன்னிரண்டோ படம் என்று நினைக்கிறேன். கடைசிப் படம் .. என் ஆசைக்கு எடுக்கப் போகும் முதல் படம்!

எப்படி எடுக்க வேண்டுமென்றான். எங்கள் சைக்கிளை ஒரு வேப்ப மர நிழலில் நிறுத்தி, அதன் பின் சீட்டில் அவனை எறி நிற்கச் சொன்னேன். நான் கீழே படுத்து அவனை - cat's view என்பார்களே, அந்தக் கோணத்தில் - ஒரு படம் எடுத்தேன். உயரமான மரத்தின் கீழே அவன் உயரமா, சாமி மாதிரி பெருசா தெரிவான் என்று மனதுக்குள் ஒரு எண்ணம். கொஞ்ச நாள் கழித்து படத்தின் ரிசல்ட் தெரிய ஆர்வத்தோடு இருந்த என்னிடம் நாலைந்து படங்கள் மட்டும் காண்பித்தான். இதுதான் வந்ததாம் என்று சொல்லி விட்டு என் முதல் படத்தில் 'மண்ணைத் தூவி' விட்டுப் போய்விட்டான்.

அதற்குப் பிறகு 1971-ல் சொந்தக் காமிரா. எல்லா படமுமே ஸ்ரீதர் பின்னேயிருந்து சொல்ல, பக்கத்திலிருந்து வின்சென்ட் உதவ எடுத்த படங்கள் என்ற நினைப்புதான்! மழை, கிழட்டு முகங்கள், என்று ஏதேதோ ... அநேகமாக 1977-ல் முதல் S.L.R..  Mamiya Sekor .. சுடச் சுட அமெரிக்காவிலிருந்து வந்தது. அப்போது ஒரு டாலருக்கு 8 ரூபாய் எண்பது பைசா.  100 டாலருக்கு வாங்கியதை என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்டு உடன் வேலை பார்த்த ஆசிரியர் 800 ரூபாய்க்குக் கொடுத்தார். அடேயப்பா ..! அந்தக் காமிராவை வாங்கியதும் ஏதோ விண்ணைத் தொட்ட ஓர் உணர்வு. அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வர  பஸ்ஸுக்காகக் காத்திருந்தது ... காமிராவைத் திருப்பித் திருப்பி பார்த்து மகிழ்ந்தது ...  எதுவும் இன்னும் மறக்கவேயில்லை. அப்போதைக்கு ஒரு S.L.R. காமிரா ஒரு அபூர்வம். அதோடு எனக்கு அது அப்பொது மதிப்பேயில்லாததாகத் தோன்றியது. மதுரையில் அப்போது S.L.R. காமிராவுக்கு அப்படி ஒரு மவுசு. ஒரு S.L.R. காமிரா வைத்திருப்பதே பெரிய prestige!

வீட்டிற்கு வந்ததும் முதலில் மூத்த மகள் - அப்போது அவளுக்கு மூன்று வயது என்று நினைக்கிறேன் -மாடலாக மாறினாள். கதவுக்குப் பக்கத்தில் நிற்க வைத்து ஒரு படம் எடுத்தேன்.

எப்போதுமே படங்களின் பின்னணி கறுப்பாக இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும். இப்படத்தில் அதே போல் அமைந்தது. அவள் போட்டிருந்த உடையின் இழைகள் நன்கு focus-ல் இருந்தன. முகத்தில் அவளது இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு ஒரு நேர்கோடு வரைந்தால் வெளுப்பிலிருந்து கறுப்பாக grey tonal gradation  கிடைத்திருந்தது. (இந்த கடைசி பாய்ன்ட் மதுரையில் அப்போது மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்டோபர் என்ற பெரிய, எனக்கு மிகவும் பிடித்த புகைப்படக்காரர் சொன்னது.) முதல் ரோலிலேயே நல்ல படம் கிடைத்ததால் mamiya காமிரா  மீது காதலில் விழுந்தேன்.

(இந்தப் படத்திற்கு இன்னொரு கிளைக் கதை உண்டு! இந்தப் படத்தை என்னிடமிருந்து வாங்கிச் சென்ற பழைய இயல்பியல் மாணவன் BARC - பாபா அட்டாமிக் ஆராய்ச்சிக் கூடத்தில் Ph.D. செய்யச் சென்றான். அதனைப் படம் வரைவேன் என்று சொல்லி வாங்கிச் சென்றவன் ஓராண்டிற்குப் பிறகு என்னைப் பார்க்க வந்தான். படம் வரைந்து விட்டேன். என் வீட்டிற்கு வந்து பாருங்கள் என்றான். ஒரு மாலை சென்றேன். என்னை அமர வைத்து விட்டு ஏதேதோ ஏற்பாடுகள் செய்தான். உங்கள் பிள்ளையின் படத்திற்குப் பக்கத்தில் ஒரு விளக்கு வைக்கலாமா என்று கேட்டேன். ஓகே சொன்னேன். ஒளி மங்கிய நேரத்தில் வீட்டிற்குப் பின்னால் கூட்டிச் சென்றான்.

இதே படத்தை வெறும் பென்சிலால் மிக மிக அழகாக வரைந்திருந்தான். பெரிய் அளவு. அனேகமாக 16 x 24 இருக்கும். அவளின் உடையில்  இருந்த இழைகள் கூட அவ்வளவு தெளிவாக அழகாக வந்திருந்தன. விளக்கு வெளிச்சத்தில் அவ்ளோ அழகு. அந்தப் படம் வரைந்த பின் அவனது டைரக்டர் நூலகத்தில் அதை மாட்டச் சொன்னாராம். என்னிடம் காட்டுவதற்காகவே எடுத்து வந்தேன். மீண்டும் திரும்பிய பின் எங்கள் துறையில் நூலகத்தில் வைத்து விடுவேன் என்றான். அப்படத்தோடு மகளை நிற்க வைத்து எடுத்த படம் மிஸ்ஸிங்!)



கல்லூரியில் இரு dark rooms இருந்தன. என் ஈடுபாட்டைப் பார்த்த பின் இயல்பியல் துறைத் தலைவர் எனக்காக புதிய dark room ஒன்றை ஆரம்பித்தார். அதோடு புகைப்படத்திற்காக ஒரு elective course ஒன்றையும் உருவாக்கினார். சில நாளில் dark room முழுவதும் என் வசமே  இருந்தது. அதற்குக்காரணமான படம் இதுதான். சாலையில் போய்க்கொண்டிருந்த ஒருவரை அவரின் அனுமதி கேட்டு எடுத்த படம். (தனுஷ் 'மயக்கம் என்ன' என்ற படத்தில் ஒரு பாட்டியை எடுத்தது மாதிரின்னு வச்சுக்கோங்களேன்!! ஆனால் அதில் மாதிரி நிறைய படம் எடுக்க முடியுமா? இரண்டு படம் எடுத்த நினைவு. அதில் ஒன்று இது.) புதியதாக போட்ட பிரிண்டுகளை அவரிடம் காண்பிப்பதுண்டு. அப்படி காண்பித்த இந்தப் படம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் அதை அவரது துறை தகவல் பலகையில் அந்தப் படத்தைப் பற்றிய குறிப்புகள், என்னைப் பற்றிய குறிப்புகள் என்று போட்டு வைத்தார். கல்லுரியில் எனக்கு இது ஒரு தனியிடத்தைப் பெற்றுத் தந்தது. ஒரு புதிய dark room முழுச் சுதந்திரத்தோடு என் வசமாச்சு! காமிராவைத் தூக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் பொது ஆளானேன். எனக்குத் தெரிந்து, என்னோடு 'சுற்றித் திருந்த' இரு மாணவர்கள் அடையாறு திரைப்படக் கல்லூரியில் cinematography course-ல் சேர்ந்தார்கள்.)

காமிராக் கூட்டம் கல்லூரியில் பெருகவே இயல்பியல் துறையில் U.G. & P.G. துறைகளில் இரு இரு dark rooms கிளைத்தன. அது பற்றாது என்று விலங்கியல் துறை, தாவர இயல் துறைகளிலும் புது  dark rooms முளைத்தன. மொத்தம் கல்லூரியில் ஆறு dark rooms! ஆச்சரியம்தான். தாவர இயல் dark rooms முழுவதும் என் கையில்! இரவு, பகல்,  கல்லூரி நாள், விடுமுறை நாள் என்று எந்த வித்தியாசமும், கட்டுப்பாடும் கிடையாது. அப்போது கிடைத்த உற்சாகத்திற்கு அளவேயில்லை. இயல்பியல் துறைத் தலைவர் V.சீனிவாசன், தாவரவியல் தலைவர் Dr. ஜேம்ஸ் இருவருக்கும் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
WHAT'S  STILL  BEYOND ...?



முதன் முதலாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நடத்திய புகைப்படப் போட்டி ஒன்றிற்கு ஒரு படம் அனுப்பினேன். முதன் முதல் போட்டிக்கு அனுப்பிய அந்தப் படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. நூர் முகமது என்ற என் கல்லூரி நண்பனின் தந்தை அவர். நண்பன் படிப்பு முடித்து இரு சக்கர வண்டி பட்டறை வைத்திருந்தான். அவன் தான என் ஜாவாவிற்கு மெக்கானிக். அவனை மாதிரி என்னையும் அவன் தந்தை வாடா .. போடா..ன்னுதான் கூப்பிடுவார். அவரும் எனக்கு 'அத்தா' தான். படத்திற்குப் பரிசு என்றதும் அத்தாவுக்கு பயங்கர பெருமை.  ஒரு படம் ப்ரேம் செய்து கொடுத்தேன். ஒரு வாரம் பட்டறையில் இருந்தது. அதன்பின் காணோம். 'எங்கே அத்தா படம்?'  என்றேன். 'உங்க அம்மா கடையில் வேண்டான்னு சொல்லிட்டா ...  என் மேல் கண்ணு பட்டுருமாம்' என்று சொல்லிச் சிரித்தார். வீட்டிற்குள் பத்திரமாக மாட்டியிருந்ததைக் காண்பித்தார். எனக்கு புகைப்படத்தில் அலுப்பு வரும் போதெல்லாம் - எப்போவெல்லாம் படங்கள் சரியாக வரலையோ அப்போவெல்லாம் - எனக்கு பயங்கரமாக தைரியமூட்டுவார். இந்தப் படத்தை விட அதற்கு நான் கொடுத்த தலைப்பு பலருக்கு மிகவும் பிடித்தது!



........... தொடரும்

*




539. நானும், photography-யும் .. 1



*
தொடர் பதிவுகள்: 
......... 1,
......... 2,
......... 3,  
........  4.


சமீபத்தில்தான் புகைப்பட வல்லுனராக வேண்டுமென்ற வெறியில் இருக்கும் கதாநாயகனைக் கொண்ட 'மயக்கம் என்ன' படம் வேற பார்த்தேனா... தொடர்ந்து சில புகைப்படங்களை, அதுவும் நம் பதிவர்களின் படங்களைப் பார்க்க ஆரம்பித்தேனா ... சில இரவுத் தூக்கமே போய்விட்டது!

வயசான காலத்தில் வாழ்க்கையில் என்ன இப்படி ஒரு சோதனை ..?!

சில சுய பரிசோதனைகள் .......

வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை புதுசா கத்துக்கிடணும்னு சின்ன வயசில இருந்து அப்படி ஒரு ஆசை. ஏதாவது ஒண்ணுன்னா ... ஏதாவது ஒரு கலையைக் கத்துக்கிடணும்னு ஆசை. எங்க காலத்தில் அப்பா அம்மாக்களுக்கு இது மாதிரி ஆசைகளை பிள்ளைகளிடம் வளர்த்து விடணும்னு எல்லாம் தெரியாது. இப்போ கொஞ்சம் பரவாயில்லை.

இதில் ஒரு side track. எங்க கல்லூரிக்கு அமெரிக்காவிலிருந்து இளம் பசங்க வருடா வருடம் வருவாங்க. சில வருஷம் மொத்தமாகவும் வந்து சேருவாங்க. கல்லூரி வளாகத்தில் 'வெள்ளைத் தோல்கள்' சுற்றியலைவது மிகச் சாதாரணம். ஒரு முறை பார்க்க வந்த நண்பரை canteen-க்கு கூட்டிச் சென்றிருந்தேன். ஒரு சின்ன வயசுப்பொண்ணு - அமெரிக்க பொண்ணுதான் - ஒரு நீள பாவாடை கட்டிக் கொண்டு, கையில் ஒரு பீடியை வச்சி 'வலிச்சிக்கிட்டு' கடிதம் எழுதிக்கிட்டு இருந்ததைப் பார்த்து மனுசன் அசந்துட்டாரு. இப்படி அமெரிக்காவிலிருந்து வர்ர மக்களிடம் ஒரு விசயம் பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு hobby-ல் நிச்சயம் தொடர்பும், அறிவும் இருக்கும். அங்க இருந்த வர்ர ஆளுங்களுக்கு மட்டும் எப்படி ஒரு 'கலைத்தேடல்' இருக்கு; நம்ம பசங்க கிட்ட அப்படியெதுவும் இல்லையே என்று அப்போது கவலைப்பட்டதுண்டு. ஆனால் இப்போது பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் இளம் வயது திறமைகளை வளர்க்க ஆசைப்படுவது பார்த்து மிக்க மகிழ்ச்சி. அடிப்படைத் தேவைகளைத் தாண்டிய பின் தான் இப்படி நடக்கும் போலும்.

சரி ... என் கதைக்கு மறுபடியும் வருவோம்!

நாமளா ஒரு கலையைக் கத்துக்கணும்னா படம் வரையறது தான் எளிது. எனக்கும் 'கிறுக்குவது' மிகவும் பிடித்த ஒன்று. கிறுக்க ஆரம்பித்தேன். வாராந்தரிகளில் வரும் படங்கள் தான் நமக்கு மாடல். பார்த்து வரைந்து பார்க்க முயற்சித்தேன். ம்ம்..ம்.. வருவது போலில்லை. அடுத்த கட்டம் ... படங்களைக் கட்டமாகப் பிரித்து வரைவது .. ஒரு நாலைந்து படம் தேறியது. ஒன்று சிவாஜி கணேசன் படம். பார்த்ததும் சிலர் இது சிவாஜி 'மாதிரி' இருக்குதே என்றார்கள்! அப்போ லதா என்ற பெயரில் ஒரு ஓவியர் (சாண்டில்யன் கதைகளுக்குப் படம் வரைவதில் அவர் specialist! பெருசு பெருசா வரைவார்!) - அவரின் படங்களை வரைய ஆரம்பித்தேன். ஆனால் கட்டம் போட்டு வரைவதை விடவும் free hand - scribbling art தான் பிடித்தது. அதை முயற்சித்தேன். என் தலையில் கட்டிய பாடமான விலங்கியலிலும் படம் நிறைய வரைய வேண்டி வந்தது. அந்தப் படங்கள் எல்லாம் சுலபமாக வந்து விடும் - சும்மா காப்பியடிக்கிறதுதானே. ஆனால் அதைத் தாண்டிப் போக முடியவில்லை. பின்னாளில் water colour, paints-ல் படம் வரையறது எல்லாம் முயற்சித்தேன். தேறவில்லை.

ஓவியம் கைவிட்டு விட்டதே என்று, அடுத்து ஏதாவது இசைக் கருவி ஒன்று பழகணும்னு ஆசை. கிட்டார் தொட்டுப் பார்த்தேன். கை மட்டும்தான் வலித்தது. இசை ஒன்றும் பிறக்கவில்லை. புல்லாங்குழல் கேட்க நிரம்ப பிடிக்கும். ஊதிப் பார்ப்போமே என்று ஊதிப் பார்த்தேன். அடுப்புக்குப் பக்கத்தில் வந்து அதைச் செஞ்சா கொஞ்சமாவது பிரயோஜனமாயிருக்கும் என்றார்கள். அப்படி ஊதியிருக்கிறேன்! முயற்சியில் தோல்வியடைந்தும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக அடுத்த முயற்சியில் இறங்கினேன். புல்புல் தாரா என்று ஒரு இசைக்கருவி. யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்களே .. அதே தான்! அந்தக் கருவியில் எளிதாகப் பழகலாம் என்று நண்பர் ஒருவர் அறிவுரை சொல்லி ஒன்று வாங்க வைத்தார். வாங்கியதும் அவர் 'என்ன என்ன பார்வைகளோ...' அப்டின்னு வெண்ணிற ஆடையில் வரும் ஒரு பாட்டு மிக எளிது என்று சொல்லி முதலடியை மட்டும் போட்டுக் காண்பித்தார். நானும் நாலஞ்சு நாள் கஷ்டப்பட்டு, 'என்ன என்ன பார்வைகளோ...' என்பதை மட்டும் போட்டுக் கொண்டே இருந்தேன். அடுத்த அடிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நண்பரிடம் கேட்டேன். அடுத்தடுத்து நீயே கண்டுபிடிச்சி வாசிக்கணும் என்றார். நானும் கண்டுபிடிக்கலாம் என்று கம்பிகளைத் தட்டிக்கொண்டே இருந்தேன். 'சீ .. போடா ..' என்றது புல்புல் தாரா! அடுத்த முயற்சியும் தோல்வியா ..? மனம் தளரவில்லை; இருப்பதிலேயே எளிது mouth organ என்றார்கள். அது ஒன்று வாங்கினேன். அதில் படித்தது ஒன்றே ஒன்றுதான். நம்ம படத்தில வர்ர ஹீரோக்கள் ஒற்றைக் கையில் அதை வைத்துக் கொண்டு வாசிப்பார்களே அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று மட்டும் தெரிந்து கொண்டேன். இரண்டு கையில் எப்படியெல்லாம் அதைப் பிடிக்க வேண்டுமென்று கற்றுக் கொண்டேன். ஆனால் இசை மட்டும் வரவேயில்லை.

கடைசி முயற்சி. சினிமா பாட்டை விசிலில் அடிப்பது சுத்தமான சொந்த முயற்சியால் என்று ஒருவர் சொல்ல அதையும் முயன்றேன். விசிலடித்தேன்; காற்று நன்றாக வந்தது. இசை .. ம்ம் .. அது எப்படி வரும்! சரி ... ஓவியக் கலைக்கும்,இசைக் கலைக்கும் நமக்கும் உள்ள தொலைவு ரொம்ப அதிகம் என்று உள்ளுணர்வு சொல்லித் தொலைத்தது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்தேன். சரி .. நாம் முயற்சி செய்த கலைகளுக்கான ஆற்றல் இரத்தத்திலேயே இருக்க வேண்டும் போலும்; நம்ம ரத்தத்தில் அதெல்லாம் இல்லைன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து, இனி விளையாட்டு வீரனாகி விட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். இதற்குள் மூன்று கழுதை வயது (8 x 3 = 24) முடிவடைந்திருந்தது. பள்ளியில் பிடித்தது கால்பந்து. ஏதோ கொஞ்சம் .. இப்போது கால்பந்து விளையாட முடியாது. indoor games தான். bachelor life வேறு. (இரண்டையும் சேர்த்து வைத்து ஏதாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்!)

தஞ்சை வாசம். நாலு நண்பர்கள் ஒன்றாயிருந்தோம். என் ஆவலை அவர்களிடம் கிளப்பி விட செஸ் பழகுவதென்று முடிவு செய்து ஒரு போர்டு ஒன்று வாங்கினோம், அதுவரை தெரிந்ததை வைத்துக் கொண்டு விளையாட ஆரம்பித்தோம். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸில் white wins in two moves என்று வாரத்திற்கொரு போட்டியிருக்கும். அதையும் விளையாட ஆரம்பித்தோம். நால்வருமே துவக்க ஆட்டக்காரர்கள் தான். சமமாக இருந்தோம். சில நாட்களில் என்னை அடிக்க அங்கே ஆளில்லை என்று ஆயிற்று. அதனால் மற்ற மூவரும் அவர்களுக்குள் விளையாடி அதில் வெல்பவர் என்னோடு விளையாட வேண்டுமென்று வைத்துக் கொண்டோம். சில வாரங்களுக்கு நானே முடிசூடா ராசா! கொஞ்ச நாள் தான். ஒவ்வொருவராக என்னை முந்த ஆரம்பித்தார்கள். சில மாதங்களில் நான் தான் கடைசி ஆளாகிப் போனேன். வாழ்க்கை வழக்கம் போல் வெறுத்தது. ஆனாலும் .. முயற்சி .. அதைக் கைவிடுவோமா?

அடுத்து ரயில்வே கிளப்பில் எங்களைச் சேர்த்துக் கொண்டார்கள். table tennis விளையாட ஆரம்பித்தோம். மலேஷியாவிலிருந்து ஜப்பான் butterfly bat எல்லாம் வாங்கினோம். செஸ் கதை இங்கும் தொடர்ந்தது. சில நாட்களிலேயே எல்லோரையும் அடித்துத் 'தூள் பரத்தினேன்'. கொஞ்ச நாளில் பழைய கதை போல் மற்றவர்கள் என்னை முந்த ஆரம்பித்தார்கள். நல்ல வேளை விளையாட்டை மாற்றினோம். கொஞ்சூண்டு billiards .. carrom  ( ivory striker தொலைந்ததும் இந்த விளையாட்டு நின்னு போச்சு.) என்று தொடர்ந்தோம் சின்னாட்களுக்கு.

மதுரைக்கு வந்தபின் அமெரிக்கன் கல்லூரியில் டென்னிஸ். முப்பது முப்பத்தைந்து வயது வரை விளையாட முடிந்தது. அதன் பின் நாக்கு தள்ளவே அடுத்த ஆட்டம் - shuttle cock - ஆரம்பமானது.

நான் தான் ...! போஸ் குடுத்து எடுத்தோம்ல ...!!


எல்லாம் எங்க ஏரியா டீம் தான்!


அது இன்றும் தினமும் காலையில் தொடர்கிறது.

தொன்னூறுகளின் ஆரம்பத்தில் எங்கள் துறை மக்களுக்கு scrabble  ஆட்டத்தை அறிமுகப் படுத்தினேன். மக்களுக்கு இருந்த உற்சாகத்தால் துறைக்குள்ளேயே ஒரு tournament நடத்திக்கொண்டோம். எங்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் பல முறை சிறைக்குச் சென்றேன். அதில் ஒரு தடவை 28 நாட்களோ என்னவோ சிறைவாசம். அப்போது இந்த விளையாட்டு ஏறத்தாழ 20 பேராசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, சிறை வாழ்க்கையை scrabble வாழ்க்கையாக மாற்றிய புண்ணியம் உண்டு.

அடுத்த ஆட்டம் - இந்துவில் வரும் Crossword puzzle. தினமும் மெனக்கெட்டு அந்தப் பக்கத்தை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தேன். இரு பேராசிரியர்களுக்கும் அது மிகவும் பிடித்துப் போச்சு. அப்போ நான் 30 - 40 விழுக்காடு வார்த்தைகளைக் கண்டுபிடித்த நேரம். அவர்கள் ஆரம்பித்தார்கள்.  60 வார்த்தைகளோடு நான் போராடும்போது அவர்கள் எழுபதைத் தாண்டி விட்டார்கள். வழக்கம்போல் நான் கழண்டு கொண்டுவிட்டேன். இப்போது அவர்கள் முழுவதும் முடிக்கும் அளவிற்கு வந்து விட்டதாகச் சொன்னார்கள்.

இப்படியாக 'ஆடிய ஆட்டங்கள்' நடந்தேறின. அதன் பின் .........

ஸ்ரீதர் படம் அந்தக் காலத்தில் மிகவும் பிடிக்கும். பாட்டு வந்தால் கூட தம்மடிக்க அவர் படத்தில் வெளியே செல்ல முடியாதபடி இருக்கும் அவர் படங்கள். அவரது படத்தின் போஸ்டர்கள், costumes எல்லாமே அழகு. அதைவிட அவர் படங்களுக்கு வின்சென்ட் காமிராமேன். இருவரின் கூட்டு மிக நன்றாக இருக்கும். அதை மிகவும் ரசிப்பதுண்டு. அவரது படங்களைப் பார்த்து விட்டு வித்தியாசமான கோணங்களைப் பாராட்டுவது வழக்கமாயிருந்தது. இது ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்தது - அடுத்த ஆசைக்கு!

1971-ல் Yashica J என்று ஒரு range finder 35 mm வாங்கினேன். புகைப்படக் கலையை ஒரு கை பார்த்து விடுவது என்று இறங்கினேன் .........

...............தொடரும்

Thursday, December 01, 2011

538. மயக்கம் என்ன?

*

பார்க்கப்போன படம் ஒன்று - Tin Tin; அங்கு ஓடியது இன்னொன்று - மயக்கம் என்ன?

வழக்கமான தமிழ் சினிமாக் காதல் மசாலா, அடிச்சா ஐம்பது அடி தள்ளிப் போய் விழாத சண்டை, இந்த வழக்கமான சரக்குகள் இல்லாவிட்டாலே அது ஒரு வகையில் நல்ல படம்தான். முதல் பாதி நன்றாகப் பிடித்தது. இரண்டாவது பாகத்தின் முதல் பாதி நீளமாய் போய்க்கொண்டே இருந்தது. எடிட்டிங், திரைக்கதை இரண்டும் கொஞ்சம் சுதப்பியது போலிருந்தது.

முதல் பாதி வெறியொடு அலையும் தனுஷ். தன் ஆதர்சன புகைப்படக்காரர் தன் புகைப்படங்களை பார்த்து shit என்று சொல்லியனுப்ப, 'ஆய் போட்டோ' என்று வேதனைப்படுவது .. துவண்டு விடாமல் மேலும் முயற்சிப்பது .. photo shoot-க்காக காடு மேடு சுற்றுவது .. எல்லாம் நன்கு வந்திருக்கின்றன.

ஏமாற்றத்தால் புத்தி தடுமாறி, குடியில் மிதந்து, அதிலும் காமிராவோடு உள்ள உறவைத் தொடர்ந்து, இறுதியில் வெற்றி பெற்ற பின்னும், ஆணவம் ஏதுமின்றி மிகப் பெரிய பரிசை அழகாக ஏற்றுக் கொண்டு அப்போது தன் கடந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது ... தனுஷெல்லாம் ஒரு நடிகரா என்று ஒரு காலத்தில் நினைத்த என்னை முழுவதுமாக மாற்றிப் போட்ட 'ஆடுகளம்' படத்தில் எழுந்த எண்ணத்தை இப்படம் நன்கு உறுதி செய்து விட்டது.

இரண்டு இடங்களில் கைதட்ட வேண்டும் போல் இருந்தது. ஒன்று ராம்ஜி(ஒளிப்பதிவாளர்) - செல்வராகவனுக்கு; இன்னொன்று தனுஷிற்கு.

படமெடுக்க காட்டுக்குள் பயணம். ஒரு பறவை அழகாக ஒரு தூரக்கிளையில் வந்து அமர்கிறது. சிறகை விரிக்கிறது. படமெடுத்து அதன்பின் அழகில் லயிக்கிறான் நாயகன். படமெடுத்தது; அதைக் கதைக்குள் அழகாகச் செருகியது; உயிர்ப்போடு சொல்லப்பட்டிருந்தது. மிகவும் பிடித்த முதல் காட்சி.

இரண்டாவதாக, புத்தி பேதலித்த நாயகன் நண்பர்களோடு தண்ணியடிக்க உட்கார்கிறான். மனைவி தடுக்கிறாள். தடுக்கும் மனைவியைத் தட்டி விட்டு, கண்களில் ஒரு முறைப்பைக் கொண்டு வருகிறார். ஏனோ தெரியவில்லை ... சிவாஜி, கமல், சூர்யா மூவரும் கண்ணுக்குள் வந்து விட்டுப் போனார்கள். அவர்களிடமெல்லாம் பார்க்காத மிக உக்கிரமான பார்வை. தனுஷிற்கு full mark!

கடைசி சீன். பரிசளிப்பு விழா. A Beautiful Mind படம் நினைவுக்கு வந்தது. நாயகனிடம் இருந்த அமைதி, நண்பர்களுக்கான நன்றி; மனைவிக்கான அன்பு (மறந்து போய் மீண்டும் வந்து மனைவிக்கு நன்றி சொல்வது தேவையில்லாத ஒரு cinematic idea என்று தோன்றியது; மறக்கக்கூடிய மனைவியா அவள்?) எல்லாம் நன்கு இருந்தது.

முதல் பாதியில் ராம்ஜி, G.V.P இருவரின் திறமைகள் மிக நன்கு பளிச்சிட்டன.

படத்தில் காண்பிப்பது போன்ற western culture-க்குள் நம் சமூகம் நன்கு விழுந்து விட்டதோ?! கதாநாயகியின் முதல் தொடர்பு, அதனூடே உள்ள உறவுகள், எளிதாக மனம் அடுத்தவனிடம் தாண்ட ... ஆனால், அதற்குப் பின் ஒரேயடியாக 'தவமிருக்கும் தமிழ்ப்பெண்ணின்' தியாகங்கள் ... அவைகளில் சில நெருடல்கள் எனக்கு.

நன்கு உழைத்து, முனைப்போடு எடுக்கப்பட்ட படம். தமிழ்ப்பட உலகின் மீது எந்த நம்பிக்கையுமின்றி எழுதிய பழைய பதிவுகள் நினைவுக்கு வந்தன. இப்போது தமிழ்ப்பட உலகத்தின் மீதான நம்பிக்கை மேலும் மேலும் உறுதியாகிறது.


*







*

537. EMBRYOLOGY IN THE QURAN




*
"குர்ஆனிலிருந்து அறிவியலுக்கு முரணான ஒரு வசனத்தை காட்டுங்கள் என்று பலமுறை கேட்டு விட்டேன். இதுவரை அதற்கு எந்த பதிலும் ஏன் இல்லை?"  -- சுவனப்பிரியன்.

சிறு வயதிலேயே ஒரு கிறித்துவனாக எனக்கு வேத பாடங்கள் சொல்லித் தருவார்கள். அப்போது சொல்லித் தரும் சில  வாக்கியங்களை, அல்லது கதைகளை மனதின் அடியில் சேமித்து வைத்துக் கொள்வோம். அந்த வாக்கியங்களோ கதைகளோ அவ்வளவு எளிதில் மனதைவிட்டு அகலுவதில்லை. இதை கதைதான் இஸ்லாமியருக்கும் இருக்கிறது என்பதை பதிவுலகில் அவர்களோடு நிகழ்த்திய விவாதங்களிலிருந்து புரிந்து கொண்டேன்.

1400 ஆண்டுகளாக எல்லாவிதக் கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டோம் என்பது அதில் மிக முக்கியமான ஒன்று. இதனாலேயே கேட்ட கேள்விகளுக்கு நாம் கொடுத்துள்ள பதில் முழுமையானதா, சரியானதா என்று அவர்கள் எப்போதும் சிந்திப்பதில்லை. அடுத்த பக்கத்தில் வரும் விவாதத்தில் உண்மையிருக்கிறதா என்ற கேள்விகள் அவர்களுக்கு வருவதேயில்லை. கண்ணாடி முன் நின்று பதில் சொல்லும் பாணியைத்தான் பார்க்க முடிகிறது.

*





*