Monday, April 01, 2013

650. நீயா .. நானா ..?






 *



மார்ச் 31,2013 ... நீயா .. நானா ..?
காதல் திருமணங்களும் அவைகளுக்கான எதிர்ப்பும் என்ற தலைப்பில் ஆரம்பித்தது. இந்நிகழ்ச்சிக்குரிய விளம்பரத்தில் ‘கெளரவம்’ என்ற படத்தினரும் இருந்தனர். இது ஒரு புதிய விளம்பர யுத்தி என்று நினைத்தேன். ஏனிப்படி இந்தப் படத்திற்கு மட்டும் இப்படி ஒரு தனியிடம் என்று நினைத்துக் கொண்டேன்.

**************************

வழக்கமான பாணியில் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் ஒரு இளம் தாய் தன் மிகச் சிறு குழந்தையுடன் தன் வாழ்க்கையைப் பற்றிச் சொன்னதும் சில விஷயங்கள் வெளிப்படையாக வந்தன. இதில் சாதி வேற்றுமைகள் என்பதை விட, தலித்துகள் ஒரு புறமும், மற்ற சாதியினர் அனைவரும் இன்னொரு பக்கம் என்பது வெளிப்படையாக வெளி வந்தது. அந்த தாய் தன் குழந்தை ஒரு தலித்தின் குழந்தை; அதற்காகவே அதை வாழவிடக்கூடாது என்று தன் உறவினர்களே கூறுவதாகக் கூறினார். வெகு பச்சையான உண்மை.

இதற்குப் பின் வந்த கருத்தோட்டங்கள் அனைத்துமே தலித் vs மற்ற சாதியினர் என்ற கூறுபாட்டைத் தெளிவாக வெளிக்கொணர்ந்தது. கெளரவக் கொலைகள் பற்றிய பேச்சு தொடர்ந்தது. இதே போன்ற ஒரு நீயா நானா நிகழ்வில் ஒரு தகப்பன் தன் மகள் சாதி மாறிக் கல்யாணம் செய்தால் அவளை வெட்டிக் கொல்லுவேன் என்று மூன்று முறை அந்த மனித மிருகம் சொன்னதை ஒருவர் இங்கு நினைவூட்டினார்.  எனக்கு அந்த நிகழ்வைப் பார்த்த அன்றே அந்த வெறிப் பேச்சுக்காக அவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாதா என்று தான் தோன்றியது. இப்படிப் பேசுவதைப் பெருமையாக மக்கள் நினைப்பதை இயக்குனர் சேரன் வருத்தத்தோடு கூறினார்.

எனக்கென்னவோ எல்லா சாதியினருமே தலித்துகளை ஒதுக்கி வைப்பதாக இருந்தாலும் நம் தமிழகத்தின் வடக்குப் பக்கம் உள்ள வன்னியர்களும், தெற்குப் பக்கம் உள்ள தேவர் இனத்தவரும் இன்னும் தங்கள் புத்திகளை வளரவிட்டு, சாதித் திமிரைக் குறைத்தால் சமூகத்தில் இன்னும் விரைவில் நிலைமை மாறும் என்றே நினைக்கிறேன். சில விஷயங்களை மூடி போட்டுப் பேசுவதை விட்டு விடுவது எல்லோருக்கும் நலம். நாம் எல்லோருமே சாதி விஷயத்தில் மிகவும் மோசமென்றாலும் பலரும் உள்மனத்துக்குள் தங்கள் எண்ணங்களை ஒளித்து வைத்துக் கொள்கிறோம். ஆனால் நான் சொன்ன இரு சாதியினரும் இதில் வெளிப்படையாக இருப்பதை ஒரு பெருமையாகவே நினைக்கிறார்கள்.

ஊடகங்களில் இன்னும் மேல் சாதி / caste hindus / ஆதிக்க சாதி போன்ற சொல்லாக்கங்களைத் தவிர்த்தலும் கட்டாயமே.

*****************************

இன்னும் சேரி மக்கள் ஆண் நாய்களை வளர்க்கக் கூடாது என்ற கட்டமைப்பு இன்னும் நமது ஊர்களில் இருப்பது அறிந்து, அர்த்தம் புரிந்து அதிர்ந்தேன். அடப் பாவிகளா ...!  நாத்தம் பிடித்த  பிறவிகள் !

*****************************

பேசிய ஒரு சமூகவியலாளர் சாதி ஐந்தாயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் இருந்து வருகிறது. ஆனால் தீண்டாமை கடந்த கி.பி.500-லிருந்து தான் இருக்கிறது என்றார். ஆனாலும் புராணக் கதைகளிலேயே சாதியும், தீண்டாமையும், தாழ்வு நிலையும் சொல்லி இருக்கிறதே என்று நினைத்தேன். எனக்கு நந்தன் கதையும் நினைவுக்கு வந்தது.

*****************************

கமல் ஹாசன் தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களை எடுத்து ஒரு சாதியினரைத் தூக்கிப் பிடிப்பது பற்றி பலரும் எழுதியாயிற்று. தேவர் மகனில் தேவர் சாதி பற்றிய பாடலை முதலில் கேட்ட போது அது சிவாஜி கணேசனுக்காக எழுதியது என்று தான் நினைத்தேன். ஆனால் அது முத்துராமலிங்கத்துக்காக எழுதியது என்பது பின்புதான் புரிந்தது. அதுவும் நான வாழும் பகுதியில் இந்த இனத்தவர் அதிகம். இதே பகுதியில் உள்ள ஒரு தலித் வேறு ஒரு ரிசர்வ்டு தொகுதியில் எம்.எல்.ஏ. ஆனார். அவர் தன் பெற்றோரைப் பார்க்க எங்கள் பகுதிக்கு வரும்போதெல்லாம் பயங்கர உச்ச சத்தத்தில் இந்தப் பாடல் திரும்பத் திரும்ப போடப்படும். வக்கிரமம் தான்; வேறென்ன..?

கமல் இந்த சாதிக்கு இன்னும் கொடி கட்டுவதை விட்டு விட்டால் நலம். கமலின் விஷ்வரூபம் பிடித்தது. ஆனாலும் எடுத்த கருத்து எனக்கு ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்தது. நிச்சயம் அப்படம் இஸ்லாமியர் மீது ஒரு அச்சத்தையோ, ஐயத்தையோ உண்டு பண்ணக்கூடிய படம். கமல் இதைப் போன்ற துவேஷ சிந்தனை தரும் படங்களை எடுப்பதை விட அன்பே சிவம் போன்ற அருமையான படங்களை எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

***********************************

கெளரவம் படம் எடுக்க என்ன காரணம் என்று கேட்ட போது பிரகாஷ்ராஜ் கொடுத்த பதில் இதமாகவும், இனிமையாகவும், பெருமையாகவும் இருந்தது. எங்கும் விரவிக்கிடக்கும் சாதியக் கொள்கைகளுக்கு இவ்வளவு நேர்மையாக எதிர்ப்பு தெரிவிக்கும் அவரது மனது வாழ்த்துக்குரியது. பணத்தைப் பற்றி நினைக்காமல் தான் வாழும் சமூகத்திற்கு தான் கொடுக்கும் ஒரு வேண்டுகோளாக இப்படத்தை எடுப்பதைக் குறிப்பிட்ட போது அவர் மேல் இதுவரை இருந்த மரியாதை மிக அதிகமாயிற்று. வாழ்க ... வளர்க ...

********************************

நீயா நானா பரிசளிக்கும்போது  சமூகத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட விழியற்ற இருவருக்கும், அந்த இளம் தாய்க்கும் கொடுத்தது மனதைத் தொட்டது. அந்த தாய் பரிசை வாங்கும்போது அவரது குழந்தையை இயக்குனர் பாலாஜி வாங்கி தூக்கி வைத்துக் கொண்டதில் மனித நேயம் மிளிர்ந்தது. பரிசு வாங்கும்போதும் கூட முகத்தில் உறைந்திருந்த சோகத்தோடு அந்தப் பெண் நின்றது வேதனையாக இருந்தது. அவருக்கு உதவிட மகளிர் உதவிக் குழுக்களோடு மற்றோரும் உதவினால் நன்றாக இருக்கும்.

********************************

கெளரவத்திற்கு இப்படி ஒரு விளம்பரமா என்று முதலில் நினைத்தது தவறு என்பது புரிந்தது. நல்ல ஒரு கொள்கையுடன் எடுக்கப்பட்ட ஒரு படம். இதற்கு இப்படி ஒரு வரவேற்பும், விளம்பரமும் கொடுப்பது தவறல்ல என்றும் புரிந்தது.

ஆனாலும் தேவர்மகனில் ‘போங்கடா .. போய் பிள்ளைகளைப் படிக்க வைங்கடா ...’  என்ற புத்திமதி யார் மனத்திலும் விழுந்து, விளைந்து, முளைத்ததாக நான் பார்க்கவில்லை. இப்படத்திற்கும் அப்படிப்பட்ட முடிவு இல்லாமல் இருக்க ஆசைப்படுகிறேன்.

******************************

அந்த இளம் தாயின் சோகம் காண்க ....


*

13 comments:

நம்பள்கி said...

//அன்பே சிவம் போன்ற அருமையான படங்களை எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.//

அது ஏனோ தெரியவில்லை சுந்தர் C மாதிரி பிராமணர் அல்லாத இயக்குனர்களுக்கு என்ன நல்ல படம் எடுத்தாலும் 'அந்த' நல்ல பெயர் மட்டும் அவர்களுக்கு போகாமல் ஊடங்கங்கள் பார்த்துக்கொள்ளும்.!

அன்பே சிவம் படத்திற்கு கமலுக்கு credit கொடுத்தது அநியாயம். ஒரு வேளை மாதவனுக்கு கொடுக்காதவரை நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ளவேண்டியது தான் போல...!

படம் புட்டுக்குச்சுனா அப்ப சுந்தர் c படம் என்று சொல்வார்கள் போல.

அதே சமயம், பாலச்சந்தர், மணிரத்னம் படம் எடுத்தால் அதில் எவன் நல்லா நடிச்சாலும் அந்த நல்ல பெயர் இந்த இயக்குனர்களுக்கு மட்டுமே; நடிகனுக்கு போகாது.

சிவாஜி இந்திரன் படம் ஓடியது சுஜாதாவிற்காக...சங்கர் மற்றும் ரஜினி சும்மா. ஹி! ஹி!!

பாய்ஸ் படம் ஆபாசம்...காரணம் சங்கர்...சுஜாதா அல்ல! ஹி! ஹி!!

சுந்தர் C. சுமார் நடிகர்; ஆனால், ஒரு அற்புதமான இயக்குனர்! ஸ்ரீதர், பீம்சிங் இயக்குனர்கள் மாதிரி சுந்தர் C எனக்கு பிடித்த ஒரு இயக்குனர்...!

துளசி கோபால் said...

அருமையான அலசல்.

ஆண்நாய் விவரம் கேட்டு அதிர்ந்து போயிட்டேன்:(

சாதி ஒழியுமான்னு கேட்டால்.....

அரசியல் வியாதிகள் அதை ஒழியவிடமாட்டாங்க என்பதே உண்மை:(

திண்டுக்கல் தனபாலன் said...

கெளரவம் - படத்தை நன்றாக கெளரவப்படுத்திருப்பார் என்ற நம்பிக்கை வருகிறது... பார்ப்போம்...

அன்பேசிவத்தில் முடிவில் "பிழைச்சிப் போ" என்று சொல்லும் அறிவுரைகளைப் போல் எல்லோரும் மாறி (?) விட்டதால்...! தேவர்மகனில் முடிவில் சொன்ன புத்திமதி எடுபடவில்லையோ...?

CS. Mohan Kumar said...

அருமை; நீங்கள் எழுதியதில் பல உணர்வுகள் எனக்கும் நிகழ்ச்சி பார்க்கும் போது வந்து போனது

TBR. JOSPEH said...

சாதாரணமாக இந்த நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. ஏனெனில் சமீப காலமாக ஒன்றுக்கும் உதவாத விஷயங்களை பற்றியெல்லாம் படு சீரியசாக விவாதிப்பார்கள். ஆனால் என் குடும்பத்தாருக்கு இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. ஆனால் கடந்த வார நிகழ்ச்சி உண்மையிலேயே இந்த காலக்கட்டத்திற்கு பொருத்தமானது. ஏனெனில் சுமார் இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போதுதான் இந்த சாதீய கலாச்சாரம் தமிழகத்தில் தலைதூக்கியுள்ளது. நன்கு படித்து மேலைநாடுகளில் பணியாற்றும் இன்றைய இளைஞர்கள் கூட சாதியைச் சார்ந்து எழுதுவது வேதனை அளிக்கிறது. அதுவும் தலித் மக்களுக்கு எதிராக அனைத்து மேல் சாதியினருமே ஒன்றுபட்டு நினைப்பது கேவலமான விஷயமே. கணவனை இழந்த அந்த இளம்பெண் கண்ணீர் மல்க பேசியது உண்மையிலேயே மனதை தொட்ட விஷயம். இதை அப்படியே திரையில் வடித்தாலும் கூட யாரும் நம்புவார்களா என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி முடிந்து வெகுநேரம் வரை இதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். நானும் இதைப் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தேன். உங்களுடைய பதிவை படித்ததும் நானே எழுதியது போன்ற ஒரு உணர்வு. நன்றி.

TBR. JOSPEH said...

அரசியல் வியாதிகள் அதை ஒழியவிடமாட்டாங்க என்பதே உண்மை:(//

அரசியல்வாதிகள் மட்டுமில்லீங்க, இந்த அதிகாரவாதிகளும் நாங்களும் இதற்கு சளைத்தவர் இல்லை என்கிறார்களே. அரசியல்வாதி ஒரு தேர்தலில் ஒழித்துவிடலாம். ஆனால் பணியிலிருந்து ஓய்வுபெறும் வரை நீடிக்கும் இந்த அதிகார வர்க்கத்தை என்ன செய்வது?

தருமி said...

//இப்போதுதான் இந்த சாதீய கலாச்சாரம் தமிழகத்தில் தலைதூக்கியுள்ளது. //

உங்கள் கருத்தில் உள்ள இந்த மாற்றம் மகிழ்ச்சி தருகிறது. முன்பு ஒரு முறை நான் சாதியைப் பற்றியெழுதும்போது உங்கள் கருத்து சிறிதே விலகியிருந்ததாக ஒரு நினைவு.

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

தருமி, கமல்ஹாசன் விசயத்தில் நாம் இருவரும் இப்பொழுது ஒரே பக்கத்தில் இருப்பதாக உணர்கிறேன்.

அண்மைய காலங்களில் அவரின் உண்மையான சமூக நோக்குதான் என்ன என்ற கேள்வி என்னுள் விளைந்துள்ளது. நானும் விஸ்வரூபம் படம் பார்த்தேன். பார்த்து முடிந்ததும் தோன்றியது, படத்தின் தொழிற்நுட்பம் தவிர்த்து பார்த்தால் ஒரே ஒரு கேள்வி- இவருடை ஆடியன்ஸ் யார். எதற்காக தமிழகத்தில் இப்படியான படத்திற்கான தேவை என்ற கேள்வியே தொக்கி நின்றது.
*****************

அடுத்து நானும் ப்ரகாஷ்ராஜ் ப்ரோக்ராம் பார்த்தேன். அவர் கூறியது போன்று ‘இந்த சமூக அவலம்’ பதிவு செய்யப்பட வேண்டும் எனது குழந்தைகளாவது, பிரிதொரு நாள் எனது அப்பாவின் நிலைதான் என்ன என்று தேடும் பொழுது கிடைத்து விட்டு போகட்டும் என்று கூறியது... இங்கே நீங்களும் நானும் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை அப்படியே மறு பிரதிபலித்தது போன்றே இருந்தது.

ப்ராகாஷ் ராஜ் பல தொலைவுகள் செல்வார். அவரிடம் கமலைக் காட்டிலும் பல நேர்மைகள் அப்படியே உண்மையாக இருக்கிறது!

Thekkikattan|தெகா said...

இந்த அருவருப்புக்கான மன நிலை எங்கிருந்து வந்திருக்க முடியும்? இந்த சாதீய கொடுமைகள் பொறுத்து உவ்வே சொல்லுற ஒவ்வொருவருக்குள்ளும் திறக்கப்படாத மன இருட்டறைகளில் ஒளிந்தே கிடக்கிறது என்று எண்ணுகிறேன்.

வெளியில் எடுத்துப் போட்டு நசுக்கிக் கொன்னாலே ஒழிய நம்மிடம் வெறும் உவ்வே என்று காலத்துக்கும் சொல்லி கடந்து போகும் மனநிலையே எஞ்சி நிற்கும்!

தருமி said...

//இந்த சாதீய கொடுமைகள் பொறுத்து உவ்வே சொல்லுற ஒவ்வொருவருக்குள்ளும் திறக்கப்படாத மன இருட்டறைகளில் ஒளிந்தே கிடக்கிறது என்று எண்ணுகிறேன்.//

I plead guilty - நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

ஜோதிஜி said...

ப்ராகாஷ் ராஜ் பல தொலைவுகள் செல்வார். அவரிடம் கமலைக் காட்டிலும் பல நேர்மைகள் அப்படியே உண்மையாக இருக்கிறது!


தொடக்கம் முதல் இன்று வரைக்கும் நான் ப்ரகாஷ்ராஜ் இடம் பார்த்த உண்மைகளை தெகா தெளிவான வார்த்தைகளில் கொடுத்துள்ளார்.

இந்த பதிவு உங்கள் எழுத்துக்களில் தெறித்த ஆதங்கம் என்னையும் தொற்றியது.

வவ்வால் said...

தருமிய்யா,

//ஆனால் தீண்டாமை கடந்த கி.பி.500-லிருந்து தான் இருக்கிறது என்றார். ஆனாலும் புராணக் கதைகளிலேயே சாதியும், தீண்டாமையும், தாழ்வு நிலையும் சொல்லி இருக்கிறதே என்று நினைத்தேன். எனக்கு நந்தன் கதையும் நினைவுக்கு வந்தது.//

தீண்டாமை குறித்து அவர் சொன்னது சரியாக இருக்கவே வாய்ப்புள்ளது, 3 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் ஜாதியே உருவாகி இருக்கணும்னு கூட சொல்கிறார்கள், அவர் சொன்ன 5000 ஆம் ஆண்டுகளாக ஜாதி இருந்தது என்பது கப்சா.

புராணங்களில் எல்லாம் இருந்ததேனு நீங்க நினைக்கலாம், ஆனால் புராணங்கள் எல்லாம் மிகப்பழமையானவைனு சொல்ல ஆதாரமேயில்லை.

ராமாயணம்,மகாபாரதம் என இப்போ இருப்பது எல்லாம் முழு எழுத்துவடிவில் ஆதி காலத்தில் இல்லை, சில ஓவியங்கள் குறிப்புகள் தான் கல்வெட்டுக்களில் கிடைத்து இப்படி ஒரு நூல் இருந்ததுனு சொல்லிக்கிட்டு இருந்தது திடீர்னு 11 ஆம் நூற்றாண்டில் தான் முழு நூலை கண்ணில காட்டினார்கள், அங்கே தான் இருக்கு டிவிஸ்ட் :-))

எனவே புராணம் வேதம்னு சொல்தெல்லாம் ஆதியில் இப்போ இருக்கும் கருத்துக்களில் முழூசாக இருந்துச்சானு யாருக்கும் தெரியாதமெல்லாமே இடைச்செருகல் தான்.

நந்தனார் கதை சொல்லும் 63 நாயன்மார் வரலாற்றுக்கும் 8 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஆதாரம் இல்லை. எல்லாம் பின்னாடி தான் எழுதி "கருத்தை" சேர்த்தார்கள்.

# //இவ்வளவு நேர்மையாக எதிர்ப்பு தெரிவிக்கும் அவரது மனது வாழ்த்துக்குரியது. //

பிரகாஷ் ராஜரை மிக நேர்மையானவர்னு எப்படி கண்டுப்பிடித்தீர்கள்னே தெரியலை அவ்வ்.

அவர் பல தில்லாலங்கடி செய்திருக்கார்,சரி அதையெல்லாம் விட்டு தள்ளுவோம், கவுரவம் படமே "நேர்மை"யாக எடுக்கப்படவில்லை.

ஓம்புரி நடித்த "khap" என்ற இந்திப்படத்தினை சுட்டு எடுத்தது தான் "கவுரவம்.

நாட்டுல எல்லா மொள்ளமாரித்தனமும் பண்ணிட்டு டீவில வந்து நேர்மையாக பேசுவதை சினிமாக்காரர்கள் கச்சிதமாக செய்கிறார்கள்,,அதை எல்லாம் நம்பிக்கிட்டு இருக்கும் கருப்பு வெள்ளைக்கால பாமரத்தனம் இன்னமும் இருக்கேனு நினைச்சா ஆச்சர்யமாத்தான் இருக்கு.

# //தொடக்கம் முதல் இன்று வரைக்கும் நான் ப்ரகாஷ்ராஜ் இடம் பார்த்த உண்மைகளை தெகா தெளிவான வார்த்தைகளில் கொடுத்துள்ளார்.
//

ஜோதிஜி வேற கூடவே இருந்து நேர்மையா இருக்கிறதை நேருக்கு நேராப்பார்த்தாப்போலவே பேசுவார் :-))

அவரு கூட பழகினவங்க சொன்னதையே நேராக்கேட்டிருக்கேன் :-))

Post a Comment