Monday, August 19, 2013

677. என் முதல் காதலி




*

இணைய இதழ் அதீதம் தருமி பக்கத்தில் எழுதிய கட்டுரையின் மறுபதிப்பு



*

தருமி  பக்கம்  -  என்  முதல்  காதலி (4)


இரண்டாம் முறையாக பொன்னியின் செல்வன் வாசித்துக் 
கொண்டிருந்தேன். 


வந்தியத்தேவன் சிறையில் இருக்கிறார். அவரைச் சந்திக்க குந்தவி தேவி உயர்த்தி போடப்பட்ட கொண்டையுடன், ஒல்லியாக .. ஆனால் உயரமாக ராஜ கம்பீரத்துடன் வருகிறார். இருவரும் பேசிக் கொள்கிறார்கள். ஒளிந்திருந்த காதல் வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது. பொன்னியின் செல்வனின் மூன்றாவது பாகத்தின் நடுப்பகுதியில் இது நடக்கிறது என்று நினைக்கிறேன். அப்போது எப்படியோ முயன்று பார்த்து விட்டேன். முடியவில்லை. நானும் குந்தவியைக் காதலிக்க ஆரம்பித்து விட்டேன் – கொஞ்சம் பயத்தோடு! முதல் காதல் என்பதால் வந்த பயம் பாதி; அதோடு வந்தியத்தேவனும் காதலிக்க ஆரம்பித்து விட்டாரே என்று நினைத்தேன். ஆயினும் அப்போது நானே வந்தியத்தேவன் ஆகி விட்டேனே! பிறகென்ன … காதல் வயப்பட்டால் கற்பனை வரும். கற்பனை கனவுகளாக விரிய,  அப்படியே மொட்டை மாடியில் கீற்றுக் கொட்டகைக்கு கீழ் படுத்துத் தூங்கி விட்டேன்.


மதியம் இரண்டு மூன்று மணி இருக்கும். தூங்கிக் கொண்டிருந்த என்னை எங்கள் தெரு பசங்கள் தட்டி எழுப்பினார்கள். அன்று எங்களது S.S.L.C. தேர்வு முடிவுகள் வெளி வந்திருந்தன. செய்திகளை முந்தித் தரும் தினசரியுடன் பசங்கள் ரொம்ப சோகமாக என்னை எழுப்பினார்கள். என் எண்ணைத் தேடி அது இல்லாத அதிர்ச்சி அவர்களுக்கு. அங்கு வந்தவர்களில் சில சந்தேகக் கேசுகளும் இருந்தார்கள். ஆனால அவர்களே பாஸாகி விட என் எண் இல்லாததால் அதிர்ச்சியோடு என்னை எழுப்பினார்கள். செய்தி சொன்னார்கள். பேப்பரை வாங்கிப் பார்த்தேன். என் எண் இல்லை. கொஞ்சம் யோசித்து மறுபடி பார்த்தேன். என் எண்ணோடு மொத்தம் நூறு எண்களை மொத்தமாக ஸ்வாகா பண்ணியிருந்தார்கள். அட .. இப்படியா என்று தெளிந்து, இருந்தும் அடுத்த தினசரி வாங்க நண்பர்களோடு புறப்பட்டேன்.


பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு மூன்றையும் முன்பே வாசித்து விட்டேன். பொ.செ. மட்டும் இது இரண்டாவது தடவை வாசித்தேன். மூன்றாம் முறை 60-களின் கடைசியில் கல்கியில் மீண்டும் வந்த போது வாசித்தேன். இரண்டாம் தடவை வாசிக்கும் காலத்தில்  தமிழ்நாட்டு ராஜ பரம்பரைகளோடு ஊறிப் போய் விட்டேன். எவ்வளவு தூரம் என்றால் சிவகாமியின் சபதத்தில் மாமல்லர் குதிரையில் போய்க்கொண்டிருக்கும் போது அவரது ஒற்றர் தலைவன் பெண் வேடத்தில் எதிரில் வருவான். பெண்ணைப் பார்த்ததால் மறுபடியும் அவளைப் பார்க்காமல் மன்னன் குதிரையில் போய் விடுவார். ஆஹா .. மன்னன் என்றால் இவனல்லவோ மன்னன் .. அப்டின்னு பெருமூச்சு விட்டுக் கொண்டதோடு நானும் அந்தக் காலத்து ராஜா மாதிரி இனி ‘சைட்’ அடிக்கக் கூடாது என்ற மனோதிடத்தில் சில காலம் இருந்தேன். நண்பர்களுக்கும் அதை உபதேசித்து … அடி வாங்கினேன்.


பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் இரண்டு ஆள் உயரத்திற்கு ரோட்டில் பள்ளம் தோண்டி மண்ணை வெளியே அள்ளிப் போட்டிருந்தார்கள். அடி மண் மேலாகக் கிடந்தது. இந்த மண்ணில் தானே அந்தக் காலத்து மக்கள் நடந்திருப்பார்கள் என்று நினைத்து, ஒருவரும் பார்க்காத நேரத்தில் சிறிது மண்ணை வாய்க்குள் போடுமளவிற்கு ‘ஞானம்’ வளர்ந்திருந்தது. வ. தேவன் மாதிரி குதிரையில் போக முடியாது போயிற்றே என்று எவ்வளவு வருத்தம் எனக்கு! அப்போதெல்லாம் எப்போதும் குதிரையில் தான் சவாரி. குதிரையில் போவது போல் சைக்கிளில் பெடல் சுத்தாமல் போயிருக்கிறேன். குதிரையிலிருந்து சைக்கிளும், பைக்கும் வர ரொம்ப நாளாச்சு….


இப்போ அந்த நூலைப்பற்றி எழுத ஆசை. ஆனால் அதற்காக மறுபடியும் புத்தகத்தை வாசித்துப் பார்த்து எழுதப் போவதில்லை. நினைவில் உள்ளதை மட்டும் வைத்து எழுத வேண்டும். பிழைகள் இருந்தால் ஒதுக்கி வையுங்கள்; வையாதீர்கள்.


மீண்டும் மலிவுப் பதிப்பு வரும்போது ஒன்று வாங்கலாமோவென நினைத்தேன். ஆனால் ஆர்வமில்லை. முதலில் வாசித்த போது I was a green horn! அப்போது வாசித்த போது கல்கி என்னிடம் பேசினார்; நான் பேசாமல் கேட்டுக் கொண்டேன். இப்போ வாசித்தால் நிச்சயமாக அப்படி இருக்காது. அப்போது எல்லாமே ஒரே rosy picture என்பதாகத் தெரிந்தது. இப்போது நிச்சயமாக அப்படி இருக்காது. வாசித்த காலம் – அறியாப் பருவம். சாதி சமய வேறுபாடுகள் எதுவும் புரியாத, தெரியாத காலம். ’அந்தக் rosy காலம்’ மட்டுமே தெரிந்தது. ஆனால் இப்போது வாசித்தால் முதல் கேள்வியே பொ.செ.யில் இரண்டே சாதியினர் மட்டும் வருகிறார்களோ? – அய்யரும், தேவரும்? என்ற கேள்விதான் எழும்.


இப்போது கதை வாசித்தால் அநிருத்த பிரம்மராயரும், ஆழ்வார்க்கடியானும் கதாபாத்திரங்களாக மட்டும் தெரிய மாட்டார்கள். அன்று வாசித்த போது தமிழ்வாணனின் ‘கத்திரிக்காய்’ மாதிரி இவரையும் பிடித்துப் போயிற்று. ஆனால் இன்றும் கல்கியில் வரும் இரு சாதிக்காரர்களைப் பற்றியும், இன்னும் சில வரலாறுகளும் தெரிந்த பிறகு எப்படி அவர்களைப் பிடிக்கப் போகிறது. ராஜராஜ சோழனைப் பார்த்து போதுமளவிற்கு பிரமிப்பு கொண்டாயிற்று. ஆனால் அவர் ஆட்சியில் அவர் அரியணையில் இருந்து ஆட்சி செய்ததை விட பிராமண சாதியினரின் ஆட்சியாக அது இருந்ததாகத் தெரிவதை எப்படிப் புகழ்வது. குடவோலையின் பெருமைகளைச் சின்ன வயதில் நிறைய படித்தாகி விட்டது. ஆனால் election commission மாதிரி சில சட்டங்கள் .. அந்தச் சட்டங்களைப் பார்த்தால் அது ஒரு சாதியினர் மட்டுமே வர வேண்டியதற்காக வைத்த சட்டங்கள் போல் தெரிகிறது. படிப்பறிவு வேண்டும். – மற்ற சாதியினரின் கல்வியறிவு எப்படி, எவ்வளவு இருந்திருக்கும் என்பது ஒரு கேள்வி. நிலம் உடையவர்களாக இருத்தல் வேண்டும். – அதாவது இப்போது மன்மோகன் ரிலையன்ஸிற்காக ‘உழைக்கிறாரே’ அது போல் அன்று பணக்காரர்கள் பக்கம் அரசு என்ற நிலை. இதில் பிராமணருக்கு ‘மங்கலங்கள்’ என்ற பெயரில் அவர்களை நிலவுடைமையாளர்களாக ஏற்கெனவே மன்னன் மாற்றியிருக்கிறான். அவர்களே குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். ராஜ ராஜ சோழன் – மங்கலம் கொடுத்த ‘பெருமை’  இப்போது நம்முன் கேள்விகளாக அல்லவா நிற்கும். கல்லூரிகளில் ‘கப்’ இல்லாதவன் மட்டும் தேர்தலில் நிற்கலாம் என்பார்கள். முன் பெஞ்சுக்காரன் அடங்கிப் போவான் என்பதுதானே காரணம். அது மாதிரி இந்த சாதிக்காரன் சட்டாம்பிள்ளையாக வேண்டும் என்பது அரசனின் கொள்கை. திறமையாகக் குடஓலை மூலம் அதை நிறைவேற்றி விட்டார்கள் போலும். A GOOD TRICK !!  கதையிலும், நிஜ வரலாற்றிலும் ஊடோடி நிற்கும் இந்தச் சாதிய சிந்தனைகளை எப்படிப் புறந்தள்ளுவது? அன்றிலிருந்த அந்தச் சாதிய மேலாளுமை இன்னும் அப்படியேதான் இங்கே இருக்கிறது. இன்றும் Pantene shampoo தான் பயன்படுத்தணும்னு ’அவா அவாளோட பாஷைய்ல சொல்றதைத் தான் நாமளும் அசடாட்டம் கேட்டுண்டு இருக்கோம்’ … இல்லீங்களா?


பழுவேட்டரையரை அன்று பார்த்தால் அவரது மீசையில் அவரின் வீரம் தெரிந்தது. பார்க்கவே பயமாகவும் இருந்தது. வீரப் பிரதாபங்கள் பிடித்தன. ஆனால் இன்று அவர் மீசையைப் பார்த்தால் அதே மாதிரி கடா மீசை வைத்துக் கொண்டு ‘நீயா நானா?’ நிகழ்ச்சியில், வேறு சாதிப் பையனை என் பெண் திருமணம் செய்தால் அவளை வெட்டிப் போடுவேன்’ என்று ஒருவன் ‘கர்ஜித்தது’ தான் நினைவுக்கு வருகிறது. எங்கிருந்து பெருமை வரப் போகிறது? அட .. ந்ம்ம வந்தியத்தேவனை அன்று அவ்வளவு பிடித்தது. ஆனால் இப்போது அவரைப் பார்த்தால் ஒரு வேளை எங்கள் ஊர் மதுரையில்  இருசக்கர வண்டிகளின் பின்னால் தங்கள் சாதியைக் காண்பிக்க ’ஒரு கேடயம், இரு வாட்கள்’ இருக்கும் ‘லோகோ’வை அடுத்தவர்களைப் பயமுறுத்துவதற்காகவே வைத்திருக்கும் இளைஞர்கள் அல்லவா நினைவுக்கு வருவார்கள்.


காலம் மாறி விட்டது. பால் போல் அனைத்தையும் குடித்த காலம் போயே போயிற்று. இப்போது கள்ளமும், கபடும் தெரிந்தும் போயிற்று; மனதுக்குள் வந்துமாயிற்று.


ஆனால் என்ன சொல்லுங்கள் .. என் முதல் காதல் செத்துப் போகவில்லை. இன்னும் அது என்னவோ .. என்ன வரலாறு படித்தாலும், எதையெல்லாம் யோசித்தாலும் அந்த முதல் காதல் இன்னும் மறையவில்லை. 

என் முதல் காதலி .. இன்றும் எப்போதும் குந்தவி தேவிதான்

1 comment:

இ.பு.ஞானப்பிரகாசன் said...

இதயம், மூளை இரண்டையும் தொட்டுவிட்டீர்கள்!

Post a Comment