*
”அதீதம்” இணைய இதழில் வந்த கட்டுரையின் மறு பதிப்பு ....
*
ஐந்தாம் வகுப்பில் லூக்காஸ் வாத்தியாரிடம் நல்ல பெயர் வாங்கினேன். நல்ல மாணவனாக இருந்திருப்பேன் போலும்! எனக்கு அவரிடம் தனி மரியாதை உண்டு. எங்கள் வகுப்பில் என்னை மானிட்டர் மாதிரி வைத்திருந்தார். நான் படித்து முடித்து கல்லூரியில் படிக்கும் போதும் அவரை அவ்வப்போது பார்ப்பேன். படிக்கும் போது வைத்திருந்த அதே அன்பை எப்போதும் என்னிடம் காட்டுவார்.
அவர் முன்னால் தான் நான் தமிழில் ஒரு சூரப்புலி (!) என்று ராஜாவுடன் நடந்த ஒரு போட்டியால் முடிவானது. முதல் வகுப்பின் முதல் நாளிலிருந்து ஐந்தாவது வகுப்பில் ராஜாவுடனான போட்டியும், சிவகுமாரோடு போட்ட சண்டையும் தான் நினைவில் உள்ளன. பழைய நினைவுகளில் ஆரம்பப் பாடசாலை நினைவுகள் இவை மட்டுமே நினைவில் உள்ளன.
ஆறாம் வகுப்பில் தான் அப்போதெல்லாம் எங்களுக்கு ஆங்கில எழுத்துக்கள் சொல்லித் தர ஆரம்பிப்பார்கள். ஆனால் ஐந்தாம் வகுப்பிலேயே எங்களுக்கு லூக்காஸ் சார் a .. b .. c .. d.. சொல்லிக் கொடுத்தார். ஆறாம் வகுப்பு a .. b .. c .. d.. ல் ஆரம்பித்து பாடங்கள் தொடர்ந்தன. எனது ஆறாவது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் படங்கள் எல்லாம் குச்சி குச்சியாக வரையப்பட்டிருக்கும். அதென்னவோ தெரியவில்லை… அந்தப் புத்தகம் எழுதியவருக்கு ராமன் என்ற பெயர் அதிகம் பிடிக்கும் போலும். Raman is playing .. Raman is eating … Raman is a good boy … Raman is a thief … என்று நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் ராமனைக் கூப்பிட்டிருப்பார். அப்போது இதை வைத்து ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்தது. ஏன் இப்படி ராமனைப் போட்டு வதைக்கிறீர்கள் என்று கட்டுரையின் ஆசிரியர் கேட்டிருப்பார்.
ஏழாவது, எட்டாவது வகுப்பில் சந்தியாகு சாரும், என் அப்பாவும் ஆங்கிலம் எடுத்தார்கள். இருவரும் ஆங்கில இலக்கணத்தை எடுப்பது அவ்வளவு அருமை. நல்ல ஆழமான அஸ்திவாரம் போட்டார்கள். சந்தியாகு சார் வினைச் சொல் பயன்படுத்தும் முறை – conjugation of verbs – சொல்லிக் கொடுத்தார். வாய்ப்பாடு மாதிரி தான். ஒரு வினைச்சொல் சொல்லி, காலக் குறிப்பும் கொடுத்தால் I, we, you, he, she, it and they என்று கட கடன்னு 8 எழுவாய்களுக்கும் சொல்லணும். எட்டு வாய்ப்பாடுகள். மனப்பாடமா படிக்கணும். அவர் கேட்கும்போது வேகமாக ஒரே தடவையில் நடுவில மூச்சு விடாமல் சொல்லணும். மூச்சு விட்டுட்டா மறுபடி முதலில் இருந்து சொல்லணும். எனக்கு இது ரொம்ப பிடிச்சிப் போச்சு .. இன்னைக்கி வரை அதை அப்படிச் சொல்லிப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டு. வாழ்க சந்தியாகு சார்.
அடுத்து அப்பா… நல்ல வாத்தியார். அப்பா என்பதை விட ஆசிரியர் என்ற முறையில் அவர் மேல் மரியாதை அதிகமாக உண்டு. ஆங்கில இலக்கணமும், கணக்குப் பாடமும் எடுப்பதில் மன்னர். பசுமரத்தாணி மாதிரி, சொல்லித் தருவதை மனதில் ஆழமாக இறக்கும் அசாத்தியத் திறமை. என் ஆசிரியர்களுக்குள் அவருக்குத்தான் முதலிடம். அப்பா என்பதால் அல்ல … அருமையான ஆசிரியர் என்பதால் மட்டுமே. சந்தியாகு சார் போட்ட இலக்கணத்தின் அடுத்த படி அப்பா போட்டது. என் மண்டையிலேயே அன்று சொல்லிக் கொடுத்ததும், சொல்லிக் கொடுத்த முறையும் இன்னும் நினைவில் இருக்கின்றன. சாதா வாக்கியத்தை கேள்வி வாக்கியமாக மாற்றுவது, எதிர்ப் பொருளாக மாற்றுவது .. direct, indirect speech, change of voices, degrees of comparison எல்லாம் எனக்குத் தண்ணி பட்ட பாடுதான்!
இதில் எனக்கு இன்னொரு வசதி. அப்பாவிடம் ட்யூஷன் படிக்க கொஞ்சம் மக்குப் பசங்க வருவாங்க. எங்கள் காலத்தில் ட்யூஷன் படிக்க வர்ரதே மக்குப் பசங்க மட்டும் தான். ட்யூஷனுக்கு வர்ர பசங்களோடு நானும் உட்காரணும். அவங்க எழுதுறதைத் திருத்தணும்… சேர்ந்து எழுதணும். ஆக எனக்கு இலக்கணப் பாடம் டபுள் டோஸ்ல கிடச்சுது. அந்தக் கிளாஸ்லேயே பாதி வாத்தியாராக இருப்பேன். சிலருக்குத் திருப்பிச் சொல்லித் தரும் பொறுப்பும் கிடைக்கும்.
சில உண்மைகளையும் சொல்லணும். அன்று பல ஆசிரியர்களின் கற்பிக்கும் தன்மையின் சிறப்பு இன்று வரை நன்கு நெஞ்சில் இருக்கிறது. devoted teachers என்பார்களே அந்த வகைதான். தெரிந்து, தெளிந்து, விரும்பிக் கற்றுக் கொடுத்த பெரியவர்கள் அவர்கள். இன்னும் பல ஆசிரியர்களின் உருவம் கண்முன் வருகிறது. நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். ஆசிரியனாக இருந்த போது என் ஆசிரியர்களிடம் நான் பார்த்த பல நல்லவைகளை நான் ‘காப்பி’ அடிக்க முனைந்திருக்கிறேன். என்றாலும் என் அனைத்து ஆசிரியர்களிடம் நான் பார்க்காத ஒன்று உண்டு. பாடங்களை அழகாகக் கற்பித்தார்கள். ஆனால் மாணவர்கள் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும்; வாழ்க்கையில் மேலேறி வரவேண்டும் என்பதைச் சொல்ல விட்டு விட்டார்கள் என்ற எண்ணமும், ஏமாற்றமும் எனக்கிருந்தது. அதனால் தானோ என்னவோ நான் மாணவர்களுக்கு வெறும் ’சிலபஸ்’ என்பதோடு நில்லாமல் எல்லாமும், எல்லாவற்றையும் பற்றிப் பேசினேன். ஒரு வேளை கொஞ்சம் ‘அதிகமாகவே’ பேசியிருப்பேன் என்றே நினைக்கின்றேன்.
நல்ல கடமையுணர்வோடு இருந்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைக் கெடுத்த ஒரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. அது ஆசிரியர்களே கண்டு பிடித்த ஒரு ’மட்டமான தயாரிப்பு’ தான். நான் படித்த காலத்தில் ஆங்கில இலக்கணம் என்றால் Wren Martin தான். ஆதிகாலத்து ஒரிஜினல் நூல். மாணவர்களை விட ஆசிரியர்களுக்கு இது ஒரு நல்ல கற்பிக்கும் நூல். ஆசிரியரை நன்றாகவே தயார் செய்யும். இப்படி இருந்த நிலை மாறி ஆசிரியர்களையும் இலக்கணத்தையும் முழுவதுமாகப் பிரித்தது – the so called ‘exercise books’ – hell with them ! இந்த நூல் முதலில் ஆசிரியர்களின் வேலையை எளிதாக்கியது; இதனால் அவர்களும் இலக்கணம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை மாறியது;
ஆசிரியர்கள் இலக்கணம் படிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுபட்டார்கள். மாணவர்களுக்கு வேலை எளிதாயிற்று. ஏன் எதற்கு என்று தெரியாமல் பதில் மட்டும் கிடைக்கும் வகையான நூல்கள்.
ஒரு பள்ளி மாணவன் தன் exercise bookல் தப்பும் தவறுமாகப் பதில் எழுதியிருந்தான். அவனிடம் கேட்டேன். - பத்து கேள்விகளுக்கும் ஆசிரியர் பதிலைக் கரும்பலகையில் எழுதினார்; அப்படியே பார்த்து எழுதினேன் என்றான். பிறகு தான் புரிந்தது – ஆசிரியர் பதில் எழுதிப் போட்டதில் இவன் தவறுதலாக ஒரு பதிலை விட்டு விட்டு எழுதியிருக்கிறான். பல குழப்படிகள். He was eating football …. Meena wrote an apple …. Krish is waiting for a poetry…. இப்படி அர்த்தமில்லாமல் அனர்த்தமாக இருந்தது. ஒரு பதிலைத் தப்பாக எழுதியதால் அதன் பின் வந்தவை அனைத்தும் தப்பு. ஆக, ஆசிரியர் படிக்க வேண்டாம் … கற்றுக் கொடுக்க வேண்டாம் .. வெறும் புள்ளிக் கோலம் போடுவது போல் வெற்றுப் புள்ளிகளில் வார்த்தைகளைப் போட்டு விடலாம். மாணவனுக்குப் புரிகிறதோ இல்லையோ … இப்படியே போயிற்று ஆங்கில இலக்கணம்.
ஆங்கில இலக்கணம் இந்த லட்சணத்தில் போனதென்றால், தமிழ் வளராமல் போனதற்கு எனக்குத் தெரிந்த ஒரு காரணம் நம்ம “கோனார்” தான்! யார் தமிழ்ப் புத்தகங்களைப் படித்தார்கள். பார்த்தது .. படித்தது .. உருப்போட்டது எல்லாமே கோனார் தான். இதற்கு ஆசிரியர்கள் அருளிய வரம் என்னவென்றால் இலக்கணக் குறிப்புகள் எல்லாமே கோனாரிடமிருந்து கடன் வாங்கி தான் தேர்வில் கேட்பார்கள். மற்ற கேள்விகளும் அனேகமாக கோனார் சொன்ன கேள்வி பதில்கள் தான். கோனார் நோட்ஸோடு தமிழும், இலக்கணமும் சவமாகிப் போய்விட்டன. அப்பாவிடமும், சந்தியாகு சாரிடமும் படித்த ஆங்கில இலக்கணம், கந்தசாமிப் புலவரின் தமிழ் வகுப்பு இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் இந்த exercise books பள்ளிப் படிப்பை எப்படி நாசமாக்கியது என்பது தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. இன்றைக்கு அறிவியலை ஏகத்துக்கும் சொல்லித் தருகிறார்கள். ஆனால் அதை வெளிப்படுத்த வேண்டிய மொழித் திறமையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. எவ்வளவு பெரிய அறிவியல் அறிவாளியாக இருந்தாலும் அதைத் திறமையாக வெளிப்படுத்தும் மொழித்திறமை இல்லாமல் மாணவர்கள் இருப்பதைக் காண்பது பெரும் சோகம். அந்த சோகத்தின் வெளிப்பாடே இந்த digression. விஷயத்துக்கு வருவோம்.
அப்பாவிடம் படித்துவிட்டு அவரிடம் அடி வாங்கியதைச் சொல்லாமல் போவதெப்படி? எட்டாம் வகுப்பு. அப்பா ஆங்கில வாத்தியார். அதனால் வகுப்புக்கு அவர் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா. தங்கவேல் எங்கள் வகுப்பிலேயே பெரிய பையன். ஒல்லியாக உயரமாக இருப்பான். சின்னச் சின்னதாக முகத்தில் எங்காவது ஓரிடத்தில் வெள்ளை ப்ளாஸ்டர் ஒட்டி ஸ்டைலாக வருவான். அனுப்பானடியில் இருந்து வருவான். அப்பாவிடம் ட்யூஷன் வேறு படித்தான். அங்கு என்னிடம் மாட்டியிருப்பானோ என்னவோ ...! இரண்டு வகுப்புகளுக்கு நடுவே இருந்த நேரத்தில் வகுப்பில் பேசுவோர் பெயரைக் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும். என் பெயரை ஒரு நாள் எழுதினான். நான் பேசவில்லை என்று அவனிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்பா வகுப்பு. உள்ளே நுழைந்தார். என் பெயரை போர்டில் பார்த்தார். கையிலிருந்த டஸ்டர் என்னை நோக்கிப் பறந்து வந்து மண்டையில் விழுந்தது. மகன் தவறு செய்ததும் தேரேற்றிக் கொன்றானே … மனுநீதிச் சோழன் .. அப்படி ஆகி விட்டார் அப்பா. பொறிந்து தள்ளி விட்டார். அன்று வாங்கிய அடி மாதிரி அவ்வளவு அடி அவரிடமிருந்து எப்போதும் வாங்கியதில்லை. செமத்தி …! அதன்பின் வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்தார். வர்ர போற ஆசிரியர்கள் எட்டிப் பார்த்து பாவம் போல் என்னைப் பார்த்து விட்டுப் போனார்கள். (ஆமா … அது என்ன நீதிச் சோழன் என்பதில்லாமல் ஏன் “மனு” நீதின்னு அந்த மன்னனுக்குப் பெயர் வைத்தார்கள்; இங்கே எங்கே வந்தார் ’மனு’?)
இப்படி சோகமாக என் எட்டாம் வகுப்பை முடித்து வைத்தேன் ……….
*
6 comments:
மலரும் நினைவுகள்
தம 1
இவ்வாறான சில அனுபவங்களை நானும் சந்தித்துள்ளேன். தாங்கள் பகிர்ந்த விதம் நன்றாக இருந்தது. (Fullscape அல்ல) Fool's cap என்ற சொல்தான் சரி என்று நான் அறிந்தது இவ்வாறான ஒரு விவாதத்தில்தான்.
மனு கொடுத்ததால் நீதி கிடைத்தது! அந்த மனு. நீங்க எப்பவுமே கலர்கண்ணாடி போட்டுக்கிட்டுப் பார்த்தா எப்படி? :)
பாம்ப்பே போன்ற பெரு நகரங்களின் கார்பரேஷன் பள்ளி மாணவர்கள் கூட பிழையில்லாமல் ஆங்கிலம் பேசி விடுகிறார்கள் .
தமிழ் பசங்கள் பாடு தான் ரொம்ப திண்டாட்டம் அதற்கான முழுப் பொறுப்பையும் ஆசிரியர்கள் தான் சுமக்க வேண்டும். இளைஞர்களுக்கு வச்சுகிட்டா வஞ்சனை , அஸ்திவாரமே இல்லாம எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள்.
நீங்கள் எல்லாம் ரொம்ப லக்கி நல்ல ஆசிரியர்களிடம் படித்திருக்கிறீர்கள்.
//நல்ல ஆசிரியர்களிடம் படித்திருக்கிறீர்கள். //
ஆனால் நல்ல ஆசிரியர்களாக இருந்தோமா என்பது தான் கேள்வி!
சார்
சந்தியாகு சார் எனக்கு கணித ஆசிரியராக வந்தார். கணிதத்தை விட ஆங்கிலப் பாடம் பிரமாதமாக நடத்துவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரும் English excercise book தயாரித்து கொடுத்தவர்தான். எல்லா ஆசிரியர்களும் வழிகாட்டிகளாக மாறிவிட்டால் காலம் நமக்குக் கற்றுக் கொடுக்காமலே போய்விடும் .
Post a Comment