*
ஐந்தாம் வகுப்பில் லூக்காஸ் வாத்தியாரிடம் நல்ல பெயர் வாங்கினேன். ஆறாம் வகுப்பில் ஆங்கில ஆசிரியர் சந்தியாகு சாரிடம் நல்ல பெயர் வாங்கினேன். எட்டாவது வகுப்பில் ஆங்கில வாத்தியாரிடம் செமத்தியாக ‘அடி’ வாங்கினேன். (இந்தப் பழங்கதைகள் பற்றித் தெரிய வேண்டுமானால் இப்பதிவிற்குப் போக வேண்டும்.) ஆனால் கணக்கு வாத்தியார் ‘சவுக்கடி’ சவரிமுத்து சாரிடம் ரொம்ப நல்ல பெயர் வாங்கினேன்.
சாருக்கு ஏன் சவுக்கடின்னு பெயர் வந்திச்சுன்னா, அவர் வேட்டி கட்டி, மேலே கோட் போட்டுதான் வகுப்பிற்கு வருவார். அவர் கோட்டுப் பைக்குள் ஒரு சவுக்கு மாதிரி ... ஏதோ ரப்பரில் செய்ததாம் ... அதை வைத்திருப்பாராம். எடுத்து அடிச்சார்னா ... அம்புட்டு தான். இப்படித்தான் சீனியர் பசங்க சொல்லியிருக்காங்க. ஆனாலும் அவரை ஒரு தடவை கூட சவுக்கோடு பார்த்ததில்லை. அதற்கும் ஒரு காரணம் சொல்லி விட்டார்கள். இப்போ கொஞ்சம் வயசாயிருச்சில்ல ... அதான் இப்போ அந்தப் பழக்கத்தை விட்டுட்டார் என்றார்கள்.
என் கூட அந்த எட்டாம் வகுப்பில் சூரி அப்டின்னு ஒரு நண்பன் இருந்தான். முழுப்பெயர் சூரிய நாராயணன் அப்டின்னு நினைக்கிறேன். அவன் வீடு கூட இன்னும் நினைவில் இருக்கிறது. சிந்தாமணி டாக்கீஸ் இருக்கும்ல ... அதில இருந்து ரோட்ல வடக்குப் பக்கம் போனா நேவி பேனா - அந்தக் காலத்தில் ரொம்ப பேமஸ் பேனா அது; பேனா லீக்கே ஆகாது. இங்க் போட்டுட்டு கழுத்தை நிறைய சுத்திதான் மூடணும்.அதுனால லீக்கே ஆகாது - அந்தக் கம்பெனி இருக்கும். அதைத் தாண்டியதும் பிரியாணிக்கு இன்னைக்கு வரை ரொம்ப பேமஸ் ஆன ‘அம்சவல்லி பவன்’. அதை அடுத்ததும் முனிச்சாலை ரோடு வலது பக்கம் திரும்பும். அந்தத் திருப்பத்தில, முக்கில இருந்த முதல் வீடு. வீட்டு முன்னால அந்தக் காலத்து இரும்புக் கதவு - இழுத்து உட்டா மடங்கிக்குமே - அந்த இரும்புக் கதவு இருக்கும். (இப்போ சமீபத்தில் அந்த வீட்டைப் பார்த்தேன். அதே கம்பிக் கதவு இருந்தது. வீடு பழசா, பயன்படுத்தப் படாமல் இருந்தது. பக்கத்து கடையில் கேட்கலாம்னு போனேன். சின்ன வயதுப் பையன் இருந்தார். வந்து விட்டேன்.இன்னும் புலன் விசாரணயைத் தொடரணும்னு ஆசை.)
நானும் சூரியும் நல்ல தோஸ்துகள். ஆனால் படிப்பில் நல்ல போட்டி. எனக்குத் தெரிந்து படிப்பில் நான் போட்டி போட்ட ஒரே ஒரு ஆள் சூரி மட்டும் தான்னு நினைக்கிறேன். நானும் அவனும் மாறி மாறி முதலிரண்டு இடங்களில் இருப்போம். ஆனால் எட்டு, ஒன்பதாம் வகுப்பிற்குப் பிறகு என் வாழ்வில் ஒரு பெரிய அஸ்தமனம் நடந்து, வாழ்கையின் திசையே முழுவதுமாகத்தான் மாறிப் போச்சே. அது ஒரு பெரிய சோகம். பெரிய வாய்க்காலில் திமிறலோடு வரும் தண்ணீரை ஒரு சிறிய வடிகாலில் திருப்பி விட்டு, அங்கு நீரோட்டம் வற்றிப் போய் ... அட .. அந்த சோகத்திற்குப் பிறகு வருகிறேன். ஆனாலும் இப்போது நினைத்தாலும் மனசு கஷ்டமாக இருக்கிறது. எப்படி இருந்த நான் அப்படி ஆகிப் போனேன்! :(
சவுக்கடி சாரிடம் ஒரு பழக்கம் இருந்தது. கணக்குப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்திலும் முதல் மூன்று கணக்குகள் ... அதன் பின், கடைசி மூன்று கணக்குகள் என்று மாணவர்களை வீட்டுப் பாடமாகப் போட வைப்பார். அதற்கு முன் அத்தியாயத்தில் இருக்கும் ‘மாடல்’ கணக்குகளைப் போட்டுச் சொல்லிக் கொடுப்பார்.
எங்கள் கணக்குப் புத்தகத்தில் முதல் மூன்று கணக்குகளும் மிகவும் எளிதான கணக்குகளாக இருக்கும்; கடைசி மூன்றும் செம டஃப். முதல் மூன்றையும் போட்டு விட்டால் ‘பிரின்சிபிள்’ புரிஞ்சிருச்சுன்னு அர்த்தம். கடைசி மூணு கணக்குகளில் ஏதாவது ஒரு “பொடி” இருக்கும். அப்படித்தான் எங்க வாத்தியார் சொல்வார். இப்போதான் அது என்னன்னு புரியுது. அந்தக் கணக்குகள் எல்லாம் நம்ம analytical brain-யைத் தட்டி எழுப்புற கணக்குகளாக இருக்கும். அந்தக் கணக்குகள் போட்டுட்டா ‘பிரின்சிபிள்’களை முழுசா பிடிச்சிட்டோம்னு அர்த்தம்.
சார் முதல்ல மாடல் கணக்குகளை வகுப்பில் நடத்துவார். அதன் பின் முதல் மூன்று, கடைசி மூன்று கணக்குகள் வீட்டுப் பாடமாகக் கொடுக்கப்படும். அடுத்த நாள் வந்ததும் வீட்டுக்கணக்குகளை நாங்கள் போட்டு வந்திருக்கிறோமான்னு செக் செய்வார். அவரிடம் யாரும் பொய் சொல்ல துணிந்ததாக எனக்கு நினைவில்லை. அடுத்து, அந்த கணக்குகளில் ஏதாவது ஒன்றை வீட்டுக் கணக்கு நோட்டிலிருந்து காப்பி செய்து போர்டில் யாரையாவது எழுதச் சொல்வார். யாரென்று தெரியாது. அதனால் எல்லோரும் ஒழுங்காக வீட்டுக் கணக்கைப் போட்டு வந்து விடுவார்கள். இல்லாவிட்டால் சவுக்கடி விழுமே என்று ஒரு பயம். அவரும் அடிக்கப் போவது போல் கோட்டுப் பையினுள் கையை விடுவார். ஆனால் சவுக்கு வெளியே வந்து பார்த்ததில்லை.
எங்க சார் என்னையும், சூரியையும் ஏதும் வீட்டுக் கணக்கு பற்றிக் கேட்க மாட்டார். அதற்குப் பதில் எந்த அத்தியாயம் என்பார். நானும் சூரியும் வகுப்பில் அவர் நடத்தியிருக்கும் அத்தியாயத்தைத் தாண்டி இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்களில் வீட்டுக் கணக்குகளைப் போட்டிருப்போம்.
எனக்கும் சூரிக்கும் என்ன போட்டியென்றால் இருவரில் யார் அதிக அத்தியாயம் தாண்டியிருக்கிறோம் என்பது தான். தேர்வுகளிலும் நானும் அவனும் ஆங்கிலத்திலும், கணக்கிலும் நல்ல மார்க்குகள் வாங்குவோம். அதில் யார் முதல் மார்க் என்பது எங்களுக்குள் ஒரு போட்டி.
ம்ம் ... ம்.. அப்படி ஒரு காலம்... நான் நன்றாகப் படித்த காலம். பின்னாளில் அது ஒரு கனாக்காலமாகவே மாறிவிட்டது. அதுவும் சரியாகச் சொல்ல வேண்டுமானால் கணக்குப் புலியாக இருந்த நான் கணக்கைக் கண்டு பயந்து ஓடி ... அதனால் என் வாழ்க்கைப் பயணமே திசை மாறி விட்டது.
ஆசிரியர்களின் பங்களிப்பால் வாழ்க்கைப் பயணங்கள் மாறுவதுண்டு என்று சொல்வார்கள். ஒரு நல்ல ஆசிரியரின் கவனிப்பால் என் வாழ்க்கையிலும் ஒரு பெரும் திருப்பம் நடந்தது. ஆனால் அந்தத் திருப்பம் எனக்கு ஒரு நல்ல திருப்பமாக அமையாமல் போனது. நல்ல ஆசிரியர் ... எனக்கு special attention கொடுத்தார். ஆனால் அது ஒரு very negative effect ஆகிப் போச்சு ...
என்ன ஆச்சுன்னா .......
*
6 comments:
சார்
இதோட இரண்டாம் பாகம் பார்த்துவிட்டு கருத்துரை சொல்லலாம்னு நினைக்கிறேன் . கணக்குப் புலி ஆனீங்களா இல்லையா?
என்ன ஆச்சு ஐயா
காத்திருக்கிறேன்
தம +1
பள்ளி நாள்களில் அடி வாங்கியே வளர்ந்தவன் நான். ஆவலோடு படித்துவரும்போது திடீரென்று என்ன ஆச்சுன்னா... எனத் தொடரும் இட்டுவிட்டீர்களே?
//கணக்குப் புலி ஆனீங்களா இல்லையா?//
இப்போ நானிருக்கிறதைப் பார்த்தாலே பதில் கிடைச்சுருமே, சார்லஸ்.
அனுபவங்களை ஒரு சஸ்பென்ஸ் வைத்துச் சொல்வது ரசிக்க வைக்கிறதுஎன் பள்ளிக்கால நினைவுகள் காட்சிகளாக ஒடுகின்றன.
சுவையா இருக்கு தொடர்கிறேன்!
Post a Comment