Tuesday, March 01, 2016

890. PAIN IN THE ASS !






*



 நேற்று, 29.2.16. லீப் வருஷம் இல்லையா … அதான் நான் கொஞ்சம் லீப் பண்ணிவிட்டேன் – என் ஸ்கூட்டரிலிருந்து.

எங்க ஊர் பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள காம்ப்ளக்ஸ் பேருந்துப் பகுதியில் நுழைந்து அதன் வழியே பெரிய பாலத்தில் நுழைவதை இன்னும் அனுமதிக்கிறார்கள். இது தேவையில்லாதது என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. நேற்று நுழையும் போது அதை நினைத்துக் கொண்டே நுழைந்தேன்.

இடது பக்கம் முழுவதுமாகக் கடைகள். அந்த கடைகளுக்கு முன்னால் பழ வியாபாரிகள். அதில் கடைசியில் இருக்கும் பெண்மணியிடம் தான் கொய்யாப்பழம் வழக்கமாக வாங்குவேன். (சிலரிடம் வாடிக்கையாகப் பொருட்கள் வாங்குவதுண்டு. அவர்களை எனக்குப் பிடித்திருந்தால் (சிரிச்ச மூஞ்சாக இருக்க வேண்டும்.) முதலிலேயே ஒரு ஒப்பந்தம் போட்டு விடுவேன். நல்ல பொருள் கொடுக்கணும். நான் பேரம் பேச மாட்டேன். எனக்குப் பிடித்த ஒப்பந்தம். இதனால் அவர்கள் பலரும் ‘நண்பர்களாகி’ விடுவார்கள். இப்போது அன்னாசிப்பழம், பப்பாளிப் பழக்காரர் ஒருவருடனும், இந்தக் கொய்யாப்பழ அம்மாவுடனும் இந்த ஒப்பந்தம் உண்டு.)

அந்த கொய்யாப்பழ அம்மா இருக்கிறாரா என்று பார்த்துக் கொண்டு இடப்புறம் ஓரமாக மிக மெல்ல சென்று கொண்டிருந்தேன். அவர் கடையைப் பார்த்தேன். அப்போது என்ன நடந்தது என்று தெரியாது. அடுத்த செகண்ட் அந்த இடத்தில் வண்டியோடு பொத்தென்று விழுந்தேன். எப்படி விழுந்தேன். ஏன் விழுந்தேன் என்று எதுவும் தெரியாது. தூக்கி விட்டவர்கள் சொன்ன பிறகு இரண்டு பசங்க இடிச்சிட்டு பறந்திட்டானுக அப்டின்னு தெரிஞ்சிது.

ஆனா இன்னொரு வினாடி அப்படியே மனசுக்குள்ள frozen momentஆக நின்னு போச்சு. நான் horizontalஆக அந்தரத்தில் இருக்கிறேன். கண்ணுக்கு முன்னே வானம் தெரியுது. விழப்போறோம்னு தெரியுது. தலையில் ஹெல்மட் போட்டிருக்கோம்னு நினைக்கிறேன்.

அடுத்து …. என் குண்டி (இது ஒண்ணும் கெட்ட வார்த்தை இல்லையே!) நச்சுன்னு தரையில் land ஆச்சு. விழுந்தது கூட தெரியாது. ஆளாளுக்கு ஓடி வந்தாங்க .. வயசுக்காரர் வண்டியைத் தூக்கி நிறுத்தினார். வயசானவர் என்னைத் தூக்கி விட்டார். பக்கத்துக் கடை பாட்டியம்மா ஒரு சின்ன ஸ்டூல் எடுத்து உட்காரச் சொன்னாங்க. கொய்யாப்பழக்காரம்மா ஒரு தம்ளரில் தண்ணீர் கொண்டு வந்தாங்க. வண்டிக்கு சேதமில்லை. எனக்கு சேதமான்னு பார்த்தேன். தோளில் தொங்கிய ஜோல்னா பை அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. மூக்குக் கண்ணாடி மூக்கிலேயே இருந்தது. யாரோ ஹெல்மட் கழற்றச் சொன்னார்கள். கழற்றி வண்டியில் மாட்டினேன். எழுந்து நின்றேன். உடம்புக்கும் சேதமில்லை என்று தெரிந்தது.

உட்கார வேண்டாமென நினைத்தேன். எல்லோரும் வற்புறுத்தியதால் உட்கார்ந்தேன். இரண்டு மிடக்கு தண்ணீர் குடித்தேன். பின் எழுந்து நின்று கொய்யாப் பழம் வாங்கிக் கொண்டு, எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு ஹெல்மட் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

தங்க்ஸிடம் லேசாக வண்டி சாய்ந்து விட்டது என்றேன். கொஞ்சம் டைம் எடுத்துக் கொண்டு விழுந்ததைச் சொன்னேன். எதற்கும் உடம்பை நல்லா பார்த்திருவோம்னு நினச்சி உடை மாத்தினேன். சும்மா சொல்லக்கூடாது. போட்டிருந்தது கருப்பு பாண்ட்ஸ். நன்றாக அழுக்கு தெரியணும். அது கூட சுத்தமாக அழுக்கில்லாமல் இருந்தது. போட்டிருந்த டி-ஷர்ட்டும் டார்க் கலர். அதிலும் தூசி தும்பு என்று ஏதும் தெரியவில்லை. ஆச்சரியமாகத்தானிருந்தது. “நன்றாகத்தான் விழுந்திருக்கிறேன்!” என்று என்னையே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.

விழுந்தது மதியம். இரவு வரை கூட ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. வழக்கமான நாற்காலியில் உட்கார முடியவில்லை. பிரம்பு நாற்காலி வசதியாக இருந்தது.  ஆனால் ராத்திரி படுத்ததும் தான் pain in the ass என்பது தெரிந்தது. புரண்டு படுக்க கஷ்டம். நேரே படுக்க முடியவில்லை. pain in the ass!!! 

இன்று இரண்டாவது நாள். pain in the ass தொடர்கிறது. சரியாகி விடும். இந்தப் பதிவை எழுத நடுவில் இரண்டு தடவை கொஞ்சம் நடுவே எழுந்திருந்து நான்கு எட்டு நடந்தால் நல்லது என்று தோன்றியது. நடந்தேன். நாளைக்கு சரியாகி விடுமென நினைக்கிறேன்.

அதற்குள் இனி இரண்டு சக்கர வண்டி எடுக்கக் கூடாதுன்னு ஒரு தடா சட்டம் வந்தது. அட .. போங்கடா என்று சொல்லி விட்டேன். மதுரைக்காரங்க காரை மட்டும் நம்பினால் பொழப்பு நடக்காது. எங்கும் போக, எங்கும் நிறுத்த இரட்டைச் சக்கரம் தான் சரி …. தொடரணும்.




 *



18 comments:

வெங்கட் நாகராஜ் said...

அடடா.... Take Care...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள் ஐயா.

சார்லஸ் said...

சார் கொஞ்சம் கவனமாய் இருங்கள். கார் பாதுகாப்பானதே! கார் நுழைய முடியாத இடத்துக்கு ஆட்டோ அல்லது நடை என்று மாற்றிக் கொள்ளலாமே! டிராபிக் சென்ஸ் மிகவும் குறைந்து வருகிறது. அருகில் யார் இருக்கிறார்கள் எது இருக்கிறது என்ற எண்ணமெல்லாம் சிறுவர்களிடம் மட்டுமல்ல வாகனம் ஓட்டும் எவரிடமும் இல்லை.

ப.கந்தசாமி said...

வாழ்க்கை கடினமாகிக் கொண்டு வருகிறது.அதற்குத் தக்க மாதிரி நாம் மாறிக் கொள்ள வேண்டும். ஆனால் "நாம் பார்க்காத மதுரையா" என்ற வீம்பு இருக்கிறதே, அது மறையாது. அதுதான் பிரச்சினை.

நம்பள்கி said...

[[அடுத்து …. என் குண்டி (இது ஒண்ணும் கெட்ட வார்த்தை இல்லையே!) ]]

குண்டி கெட்ட வார்த்தை என்று எவன் சொன்னான்! பிறந்த குழந்தைக்கு குண்டி இருக்கா, அதில் லத்தி ஒட்டிக்கொண்டு இருக்கா என்று தான் "முதலில்" பாப்போம்! குண்டி இல்லையென்றால் நாம எல்லாம் சிங்கி அடிக்கவேண்டியது தான்.

எதுக்கும் குண்டியைப் பற்றி ஒரு பதிவு போட்டால் போகுது!

Natraj said...

Get well soon sir

விசு said...

ஏன் ஐயா? கொய்யாபழம் வாங்க நீங்கதான் போகவேண்டுமா? நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் மற்றவர்களின் கவன குறைவால் இப்படி நடக்க வாய்ப்பு உண்டு அல்லவா?

இனிமேல் காய் கறி பழத்திற்கு எல்லாம் நடந்தே பொங்கல். அது சரி. கொய்யா பழம் எப்படி இருந்தது.

தருமி said...

விசுAWESOME
we are not in a downtown. காய்கறி வாங்க நீங்கள் சொல்வது போல் செல்லலாம். மற்றதெற்கெல்லாம் ஏதாவது ஒரு வாகனம் தேவை.

தருமி said...

அட... சொல்லலையே... கொய்யாப்பழம் இன்று ஸ்பெஷல் சுவை!

தருமி said...

நம்பள்கி
//எதுக்கும் குண்டியைப் பற்றி ஒரு பதிவு போட்டால் போகுது!//

உங்கள் குண்டிப் பதிவிற்காக waiting.
லத்தி கழுதையிடமிருந்து வரும். குண்டியிலிருந்து வருவது பீ.

ஆமாம் .. எதுக்கும் shit என்கிறோம். ஆனால் ஏன் பீ, குண்டி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த இப்படி கூசுகிறோம். மொழி வல்லுனர்கள், சமூகவியலாளர்கள் பதில் சொல்லுங்களேன்.

தருமி said...

பழனி.கந்தசாமி,
//ஆனால் "நாம் பார்க்காத மதுரையா" என்ற வீம்பு இருக்கிறதே//

அண்ணா ..."நாடி"யை மிகச் சரியாகப் பிடித்து விட்டீர்கள்!

தருமி said...

வெங்கட் நாகராஜ்,
Dr B Jambulingam,
Natraj

மிக்க நன்றி

Anonymous said...

Sad....

//நல்ல பொருள் கொடுக்கணும். நான் பேரம் பேச மாட்டேன்.//
Dealing is super.

நம்பள்கி said...

[[உங்கள் குண்டிப் பதிவிற்காக waiting.
லத்தி கழுதையிடமிருந்து வரும். குண்டியிலிருந்து வருவது பீ.]]

அண்ணே! சரியாக சொன்னால் கழுதை போடுவது விட்டை! லத்தி என்பது நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது...பொது வெளியில் உபயோககப்படுத்தும் வார்த்தை!

வேகநரி said...

இரண்டு பசங்க இடிச்சிட்டு பறந்திட்டானுக :(
உடலை கவனித்து கொள்ளுங்கள்.
//அன்னாசிப்பழம், பப்பாளிப் பழம், கொய்யாப்பழம்//
உங்களிடமிருந்து பல நல்ல விஷயங்களை நாம் பழகி கொள்ள வேண்டும்.

தருமி said...

//கழுதை போடுவது விட்டை!//

ஒரு சிறு சொல்லாய்வு:
விட்டை = சாணி உருண்டை; ass dung என்பதற்கு முன்னால் 'இறுகிய மலக்கட்டி' என்றொரு பொருள் முதலில் குறிக்கப்படுவதாலும்,
லத்தி = dung of elephants, horses, asses, camels...என்று tamilcube.com & க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் உள்ள குறிப்புகளைப் பார்க்கும்போது .. கழுதைக்கும் லத்திக்கும் உள்ள நெருங்கிய உறவு புரிகிறது.

any hardened dung may become a விட்டை (எலி, பூனை ..) but லத்தி is closer to ass!

அப்பாடா ....!

நெல்லைத் தமிழன் said...

தருமி ஐயா... இப்போது நலம்தானே...

யானை லத்தி, கழுதை விட்டை, ஆட்டுப் புழுக்கை, கோழிப் பீ - இதெல்லாம் நம் சாதாரணமாக உபயோகப் படுத்தும் சொல்தானே.. (தமிழன் ஒவ்வொன்றுக்கும் காரணமாக சரியான பெயர் வைத்துள்ளானே.. வெறும் dung என்ற ஒற்றைச் சொல் இல்லாமல்). இதில் என்ன உங்களுக்கும் நம்பள்கீக்கும் சந்தேகம்? இதற்கெல்லாம் தற்காலத் தமிழ் அகராதியைப் பார்க்கிறீர்களே...

சார்லஸ் said...

ஐய்யய்ய....பின்னூட்டங்கள் ரொம்பவும் வீசுதே!

Post a Comment