Tuesday, May 24, 2016

893. நீங்களே பறை அடித்துக் கொள்ளுங்கள் .......... அவர்கள் எதற்கு?


*
 ஞாயிறு மே 22, 2016 தமிழ் இந்துவின் நடுப்பக்கத்தில் அழகிய பெரியவன் எழுதிய “திணிக்கப்பட்ட வேலைகள் இனி வேண்டாம்” என்ற சிறுகதைஇடம் பெற்றுள்ளது. தலித் மக்கள் தங்கள் மேல் திணிக்கப்பட்ட அடிமைத்தனமான, ஈனமான வேலைகளைச் செய்யக்கூடாதென ஒரு முடிவெடுத்து, கதையில் இறுதியில் ஊர்வலமாகச் சென்று பறையை தீக்குள் எரிந்து பொசுக்குகிறார்கள். இது ஒரு மனமொத்த முடிவுமல்ல; பலர் காலங்காலமாய்ச் செய்த வேலையை விடுவதற்குத் தயங்குகிறார்கள். இதே கருத்தை நானும் என் பதிவுகளில் பதினோரு ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுமிருக்கிறேன். (http://dharumi.blogspot.in/2005/06/16_03.html)


 பதிவுகளில் எழுதியவன் ஓரிரு இடங்களில் அந்த வேலையைச் செய்பவர்களிடமும் பேசியிருக்கிறேன். ‘எங்களுக்கு வேறு வேலை தெரியாது’ என்பது தொடர்ந்து கிடைத்த பதில். அதே போல் இக்கதையிலும் ஒருவன் திடீரென்று எழுந்து கேட்டான்.

 “மேளமடிக்கப்போலன்னா அப்புறம் பொளைக்கிறதெப்படி?”

 “செத்துப் போடா”.


 இந்தப் பதிலை நாம் எப்படி இவர்களிடம் சொல்லுவது. ஏதாவது ஒரு வேலை செய்யலாமே என்று சொல்லியிருக்கிறேன். இப்போது இந்தக் கதையை வாசிக்கும்போது 11 ஆண்டுகளுக்கு முந்தி இருந்த நிலை இன்றும் மாறவில்லையே என்ற எண்ணம் தான் தோன்றியது.

சமீபத்தில் ஒரு இழவு வீடு. பணக்கார இடம். 90 வயதுப் பாட்டி இறந்திருக்கிறாள். திருமணச் சாவு என்பார்களே அது மாதிரி. சோறும் கறியும் …. தொடர்ந்து சில நாட்களுக்கு.

உடம்பை எடுக்கும் போது பறையடிக்க வந்த ஆட்கள் பட்ட பாட்டைக் கண்ணால் கண்ட போதும் அதே வருத்தம் அன்றும் தொடர்ந்தது. அவர்களை மனித ஜென்மங்களாகவே யாரும் நடத்தவில்லை.

 தொடர்ந்து இப்படி இழிவு படுத்தப்பட்ட போதும் அவர்களால் எப்படி அவைகளைச் சகித்துக் கொள்ள முடிகிறது? ஏன் கோபம் வரவில்லை? தட்டியெழுப்ப ஒரு தலைவன் என்றாவது வருவாரா?


 சோகங்கள் ….. 

அழகியபெரியவனின் புதினம் வல்லிசையிலிருந்து ஒரு பகுதி:


“யாரோ ஒரு சிலரின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த ஜாதிமுறை காலாகாலமாக வழங்கி வர்றதினாலேயே சரியாயிடுமா? அதை அப்படியே ஏத்துக்கணுமா? உனக்கும் எனக்கும் இந்த ஜாதிமுறை அவமானத்தையும் இழிவையும் தந்ததில்லாம வேற எதை தந்தது? இந்த முறையை கடவுள் ஏற்படுத்தினார் என்றால் அப்படி ஓரவஞ்சனை கொண்ட கடவுளே நமக்குத் தேவையில்லை.”

 *

13 comments:

‘தளிர்’ சுரேஷ் said...

உண்மைதான்!

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் ஐயா

ப.கந்தசாமி said...

இது ஒரு சமுதாயப் பிரச்சினை என்று நான் உணர்கிறேன். ஆனால் இதை எப்படி மாற்றுவது என்று எனக்கு தெரியவில்லை.இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவனாகக் காட்டிக்கொள்ளும் சில அரசியல் தலவர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகார்கள் ஏன் முயற்சி செய்வதில்லை என்று எனக்குப் புரியவில்லை. மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதில் தலையிட முடியுமா என்பதுவும் புரியவில்லை?

தருமி said...

//அரசியல் தலவர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகார்கள்..//

அக்கறையில்லை .... ஏறத்தாழ எல்லோருக்கும்!

Dr B Jambulingam said...

இக்கொடுமை தொடர்கிறது.வேதனைதான் ஐயா.

வேகநரி said...

சக மனிதர்களை மனித ஜென்மங்களாகவே நடத்தாததை பெருமையாக நினைக்கும் மனிதர்கள் கொண்ட நாடு.

chandrasekar jk said...

தப்பித்தவறி வருகிற தலைவர்களையும் அவர்களுக்கு சாதகமாக பறையடிக்க வைத்து விடுகிறது மேலாதிக்கம்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//அரசியல் தலவர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகார்கள்..//
அவர்கள் தங்களை வேறாக உணர ஆரம்பித்து விடுகிறார்களோ?

அ. வேல்முருகன் said...

கடவுள் வேண்டாம் என கதை சொன்னவரும், நாமும் ஏற்றுக் கொள்வோம். இதில் பின்னுமிட்டவர்கள்........... என்னால் அதிலிருந்து வெளி வர முடியாது அது எனது நம்பிக்கை.

கல்வி கிட்டாத எந்த சாதியும் ஏதோ ஒரு வேலை என ஏற்றுக் கொள்ள பழகி கொண்டது. மந்திரம் ஓதும் வாத்தியார் வேலை என்னதான் கீழானது என்றாலும் அவர்களை இந்த பட்டியலில் சேர்க்க முடியாது.

ஆக அடிப்படை கல்வி இலவசமா கிடைச்சா நல்லது. இப்போ ஸ்கூட்டர் இலவசமா கிடைக்கும் காலம். வேறென்ன சொல்ல

சார்லஸ் said...

பணம் பெருகும் தொழிலாய் இருந்திருந்தால் பறை அடிக்கும் தொழிலும் இந்நேரம் அவர்கள் கையை விட்டு போயிருக்கும் . எல்லா சாதியினரும் பறை அடிக்க ஆலாய் பறந்திருப்பார்கள். நவீன சலூன்கள், நவீன சலவையகங்கள் நிறைய பெருகியிருக்கின்றன. அதையெல்லாம் அதே சாதியினரே நடத்துகிறார்களா என்ன!? அது போல இந்தத் தொழிலுக்கும் எல்லோரும் புகும் காலம் வரும் என்றே தோன்றுகின்றது .

Srimalaiyappanb sriram said...

உண்மை அய்யா

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கல்வி ஒன்றுதான் அவர்களை மேம்படுத்தும் வழி

தருமி said...

//கல்வி ஒன்றுதான் அவர்களை மேம்படுத்தும் வழி//

எங்கள் வீட்டுப் பக்கம் குப்பை எடுக்கவருபவர்களில் ஒரு சின்னப் பெண். படித்தது பி.ஏ. பாத்திமா கல்லூரி. பேசிப்பார்த்தேன்.இதுவரை பயனில்லை!!

Post a Comment