Wednesday, May 17, 2017

937. புலம்பல் … 1 இனி சீரியல் மட்டுமே பார்ப்பது





*



இனி சீரியல் மட்டும் பார்ப்பது என்று கடந்த சில நாட்களில் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். அதுவும் நேற்று நடந்தது என்னை இந்த முடிவெடுக்கக் கட்டாயப் படுத்தியது.

சீரியல் பார்ப்பது நம்மை இயக்குனர்கள் கேலி செய்வது போல் தோன்றியது. உதாரணமாக ஒரு கதாநாயகி மடிக்கணினி ஒன்றை அழுக்காகி விட்டது என்று சோப்பு போட்டுக் கழுவி கொடியில் காயப் போடுவதைக் கண்டதும் எனக்கு அழுகையே வந்து விட்டது. படிக்காத பெண் என்பதை இயக்குனர் என்ன அழகாக சிம்பாலிக்காகக் காட்டி விட்டார் என்ற பெருமிதத்தில் வந்த கண்ணீர். அடுத்ததாக மூச்சுக்கு முன்னூறு தடவை இந்த சாமி பக்தி வேறு வந்து மனசை உலுக்கி விடுகிறது. அதிலும் அடுத்தவனைக் கொல்லப் போகிறவனு(ளு)ம் விஷப்பாட்டிலை சாமி படத்து முன்னால வச்சி சாமி கும்பிட்டு, ‘சாமி… இந்த விஷம் நல்லா வேலை செய்யணும்’ என்று வேண்டிக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும் அப்டியே உடம்பெல்லாம் வேர்த்தும் கடைசியில கண்ணும் வேர்த்திருச்சி.

இதெல்லாம் பார்த்ததும் இனி சீரியல் பார்க்க வேண்டாம் அப்டின்னு (முழுசா அப்படியே இல்லை … ரெண்டு சீரியல் மட்டும் பார்க்கலாம்னு ..) முடிவெடுத்து. ப்ரைம் டைம்ல வர்ர 8 -9 மணியில் செய்திச் சேனல்களில் வரும் அரசியல் விவாதங்களைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து அவைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். அதுவும் சீரியல் மாதிரி ஆகிப் போச்சு. நாலஞ்சு முகங்கள் .. அந்த அசட்டு முகங்களே எப்போதும் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்க ஆரம்பித்தார்கள். பேச்சாற்றலும் இல்லை .. பேசுவதில் பொருளுமில்லை. ஆனாலும் அந்த மஹானுபவர்களே திரும்பத் திரும்ப வந்து அழுகிறார்கள் … I mean …. பேசுகிறார்கள்.

எல்லா அரசியல்வியாதிகளும் மக்களுக்குச் சேவை செய்ய அரசியலில் இருப்பதாகச் சொல்வதைப் பார்க்கும் போது விஷத்தை சாமி முன்னால் வச்சி கும்புடுற ஆளை விட மிக மோசமாக அது தெரிந்தது. அட … நெறியாளர்களோ.. அல்லது இப்போது சாமான்யர் என்ற தலைப்பில் சிலரைக் கொண்டு வந்து உட்கார வைக்கிறார்களே அவர்களாவது இந்த அரசியல்வியாதிகளை நறுக்குன்னு நாலு கேக்குறாங்களா? மண்வெட்டியை மண்வெட்டின்னு சொல்லக்கூடாதா… அதாவது … calling a spade a spade அப்டின்னு சொல்லுவாங்களே அது மாதிரி சொல்லக் கூடாதா?

அந்தக் காலத்தில மாணவர்களிடம் சொல்வதுண்டு. பணம் சம்பாதிக்க அதுவும் சீசீசீக்கிரமாகச் சம்பாதிக்க ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு ஏதாவது ஒரு அரசியில்வியாதியாக வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு சாமி பெயரைச் சொல்லிச் சம்பாதிக்கணும். இரண்டாவதில் அடி தடி … சிறுதாவூர், கூவத்தூர் என்று எதுவும் இல்லை என்பதால் முதல் வழியை விட இரண்டாம் வழி சிறந்தது. நான் சொன்னது சரி என்பதை வரலாறு நிரூபித்து விட்டது. (ஆனால் அதெல்லாம் கேடு கெட்ட வழிகள் என்றும் கடைசியில் சொல்வதுண்டு.)

ஆக, விவாதங்களுக்கு வந்து  எங்கள் கட்சி சரி, மக்களுக்குச் சேவை செய்யவே இந்தப் பிறப்பெடுத்தோம் என்று சொல்ற ஆளுங்க மூஞ்சுக்கு முன்னால் … ‘அட ..போங்கடா… அரசியல் முதல் போடாத ஒரு வியாபாரம்; அதப் பண்ற ஆளுங்களுக்கு எதுக்கு இத்தனைப் பேச்சு’ என்று சொல்லணும்னு இருக்கிற ஆசை நடைபெறவே நடைபெறாதா?
நேற்று (16.5.17) சிதம்பரம் அவரு பிள்ளை எல்லார் மேலேயும் சி.பி.ஐ. விசாரணை. (இந்த ஆளு மேல ஒரு காலத்தில எனக்கு ரொம்ப நல்ல நினைப்பு இருந்தது. அட … போங்க சார் .. ஒரு கெட்ட பழமொழி நினைவுக்கு வருது … கழுதை விட்டையில் முன்னதா இருந்தா என்ன; பின்னதா இருந்தா என்ன??!! எல்லா இழவும் ஒண்ணு தான்.) உடனே காங்கிரஸ்காரங்க ‘ஆஹா… இது அரசியல் சதி’ அப்டின்னு குதிக்கிறாங்க. அவங்க திமுககாரங்க கையை முறுக்கியது அவங்களுக்கு மறந்து போச்சு. அப்போ அதிமுக மந்திரிகள் மேலும் சி.பி.ஐ. விசாரணை என்றதும், அம்மா கட்சி, புரட்சித் தலைவி அம்மா கட்சியைப் பார்த்து ஏன் ஓ.பி.எஸ். மேல விசாரணை போடலைன்னு ஒரு கேள்வி. உடனே பாஜககாரர் ’நாங்கல்லாம் கஞ்சாவை நாங்களே போட்டுட்டு அவங்க மேல் கேஸ் போடுற அதிமுககாரங்க மாதிரி இல்லை அப்டிங்கிறார். எந்த கேசையும் போட்டுக்கோ.. ஆனா எங்க பதவியை மட்டும் பிடுங்காதீங்கன்னு சொல்ற திமுக மாதிரி நாங்க இல்லைங்கிறாங்க இன்னொருத்தர்.


எல்லாமே காசு மட்டும் தான். அதுவும் ஜெயிலுக்குப் போகாம எமனிடம் சரணடைந்த அந்த பொம்பிளைக் கட்சியை இப்போது பார்க்கும் போது அது நல்லாவே ஆட்களை வளர்த்து விட்டுப் போய் சேர்ந்திருச்சின்னு தான் நினைப்பு வருது.

அம்மாடி …… எப்படி கோடி கோடியா திருடிட்டு, வெள்ளைச் சட்டை போட்டுக்கிட்டு, சட்டைப் பையில ஒரு படத்தை வச்சிக்கிட்டு எல்லோரும் அலையிறாங்க.

மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு …………

அதுனால இனிமே தொலைபேசியில் சீரியல் மட்டும் பார்ப்பது என்று முடிவு செய்து விட்டேன். 

நாலு நல்ல சீரியல் சொல்லுங்க.






 *

2 comments:

வேகநரி said...

:) சுவாரஸ்யம்
ஜெயிலுக்குப் போகாம எமனிடம் சரணடைந்த சீமாட்டி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒரு தலை வலியிலிருந்து தப்பித்து மற்றொரு விதமான வலியில் மாட்டப்போகின்றீர்கள் போலுள்ளது ஐயா.

Post a Comment