Sunday, March 24, 2019

1035, எங்க காலத்திலெல்லாம் ... 2 FROM A CLEAN SLATE .......





*
பென்சிலைப் பத்தி எழுதிட்டு அதோட  உட்டுட்டா   நம்ம சிலேட்டுக்குக் கோபம் வருமா வராதா? வருமில்ல ... அதான் அதப் பத்தியும் இப்பதிவு. ஆனால் இந்தப் பதிவு 2014 அக்டோபர் மாதத்தில் எழுதியது. தேடிப்பிடித்து மறுபடியும் போட்டுருவோம்னு போட்டிருக்கேன்... ஒரு தொடர்சிக்காக.

                                                              *        *            *

FROM A CLEAN SLATE .......






*
to start with a clean slate - என்று ஆங்கிலத்தில்  ஒர் idiom சொல்வார்கள். இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு tablet என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். ஆனால் slate என்றால் என்னவென்று தெரியுமா என்பது சந்தேகமே. எங்கள் காலத்தில் எங்களின் முதல் கல்வித் துணையே இது தான். இப்போவெல்லாம் பெரிய புத்தக மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு பிஞ்சுக் குழந்தைகள் பள்ளிக்குப் போவது போல் நாங்கள்


போனதில்லை. ஒரு சின்னத் துணிப்பை. அதற்குள் ஒரு ஸ்லேட். இரண்டு மூன்று புத்தகங்களும் நோட்டுகளும் மட்டுமே எங்களுக்கு இருந்தன. இதில் ஸ்லேட் மட்டுமே எங்கள் கல்விக்கு முதல் பிள்ளையார் சுழி.

இது எதனால் செய்யப்பட்டது என்றெல்லாம் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு கல்லிருந்து செதுக்கி எடுத்திருப்பார்கள் போலும். கருப்புக் கலரில் இருக்கும். சுற்றிலும் மரத்தால் ஆன ப்ரேம் இருக்கும். அப்பா ஸ்லேட் வாங்கியதும் என் பெயரை தமிழில் ஒரு பக்கமும், ஆங்கிலத்தில் இன்னொரு பக்கமும் ப்ரேமில் எழுதி விடுவார்கள். முதலில் இந்த ஸ்லேட்டில் எழுத  ஸ்லேட் குச்சி இருக்கும். இந்தக் குச்சியும் ஸ்லேட் செய்ற பொருளிலிருந்தே செய்வார்களோ என்னவோ .. அதுவும் கருப்பாக இருக்கும். பொதுவாக இந்தக் குச்சிகள் வழு வழுன்னு எழுதாது. நடுவில ‘கல்லுக் கோடு’ எழுதும் போது விழும். அதாவது சொற சொறன்னு எழுதிவிடும்.

சில ஆண்டுகள் கழித்து இந்த ஸ்லேட் போய் தகர ஸ்லேட் வழக்கிற்கு வந்தது. பழைய ஸ்லேட் கீழே விழுந்தால் எளிதாக உடைந்து விடும். அநேகமாக எங்கள் ஸ்லேட்கள் இது போல் கீழே விழுந்து கீறிப் போயிருக்கும். சுற்றியிருக்கும் ப்ரேமினால் பிழைத்திருக்கும். நாங்களென்ன use & throw காலத்திலா வாழ்ந்தோம்?  அதனால் கீழே விழுந்தாலும் உடையாத தகரத்தில் ஸ்லேட் வந்தது. ஆனால் இந்த ஸ்லேட் கணக்கில் இரண்டு நஷ்டக் கணக்கு உண்டு. முதல் நட்டம் - எளிதாக இதன் மேல் அடித்துள்ள கருப்பு பெயிண்ட் போய், ஸ்லேட் வழு வழுன்னு ஆகிவிடும். எழுதினால் எழுத்துகளே பதியாது. இரண்டாம் நட்டம் கொஞ்சம் சீரியஸானது. ப்ரேம் கழண்டு போனாலும் ஸ்லேட்டைத் தூரத் தூக்கிப் போட முடியாது. தகர ஸ்லேட் இல்லையா.. உடையாமல் முழுசாக இருக்கும். இதனால் வெறும் மொட்டையான ஸ்லேட் கையில் இருக்கும். பல பசங்கள் தீவிரவாதிகளாக மாறி மொட்டை ஸ்லேட்டை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். யாரையாவது இதை வைத்து மண்டையில் போட்டால் பெரிய வெட்டே விழும்.

இப்போ இதெல்லாம் போய் plastic slate வந்து விட்டது. இன்னொண்ணு... எழுதி அழிச்சிக்கலாம்னு ஒரு ஸ்லேட்  -magic slate அப்டின்னு வந்திருச்சு. ஆனால் இப்போ ஸ்லேட் என்றாலே என்னென்ன தெரியாத மாதிரி ஆகிப் போச்சு. ஸ்லேட்  ... குச்சிகள் எல்லாம் தொல்பொருளாக மாறி விட்டன.

எங்கள் ஸ்லேட்டை refurbish செய்ய வேண்டியது முக்கிய கடமை. அதுவும் தேர்வுக் காலத்திற்கு முன்பு ஸ்லேட்டைப் புதுசாக்க முழு முயற்சியெடுப்போம். அதிலும் இரண்டு மூன்று grades இருந்தது. முதல் முறை ரொம்ப சிம்பிள். வீட்டின் அடுப்படியில்  இருக்கும் கட்டைக் கரியை எடுத்து வைத்துக் கொண்டு ஸ்லேட்டை நன்கு கழுவிக்கொண்டு அதன் பின் எடுத்து வந்த கரியின் மெதுவான பாகம் வைத்து ஸ்லேட்டில் அழுத்தித் தேய்ப்போம். அதன் பின் காய வைத்து விடுவோம். காய்ந்த பின் கழுவினால் ஸ்லேட் ரெடி. 

இன்னொரு advanced method ஒன்றும் இருந்தது. இதில் கரித்துண்டுகள் சிலவற்றை ஊமத்தங்காய் என்று ஒரு செடி இருக்கும். அதன் காய்களோடுசேர்த்து அம்மியில் வைத்து அரைத்து, அதனை எடுத்து எங்கள் ஸ்லேட்டில் தேய்ப்போம். ஆனாலும் இது முக்கியமாக பள்ளியில் உள்ள கரும்பலகைக்கு மட்டுமே பொதுவாக இந்த  advanced process நடந்தேறும். அம்மிக் கல்லுக்குப் பதில் பள்ளிக்கூடத்தில் எங்காவது ஒரு மூலையில் உடைந்த அம்மிக் குழவி ஒன்று கட்டாயம் கிடைக்கும். ஆசிரியர்கள் கரும்பலகைக்கு ஒரு நாள் ஓய்வு கொடித்து, இந்த வேலை மேற்கொள்ளப்படும். கரி கொண்டு வர சிலர் ... ஊமத்தங்காய் பறித்து வர சிலர் ... அரைத்துக் கொடுக்க சிலர் .... கரும்பலகையில் தேய்க்க சிலர் ... கடைசியில் கரும்பலகையைக் கழுவ சிலர்.  அப்பாடா ...ஒரு பெரிய division of labour ! சட்டையெல்லாம் கரியாக்கி  வீட்டில் கிடைத்த அடிகளைப் பற்றிய விளக்கம் அடுத்த நாள் கட்டாயம் கிடைக்கும்!

ஸ்லேட் ரெடின்னா குச்சியும் ரெடியாக வேண்டுமே. அந்த கருப்புக் குச்சிக்கு மட்டும் தான் இந்த மெதட் பயன் படுத்துவோம். குச்சி மேல் லேசாக நல்லெண்ணெய் தேய்த்து. நல்ல கல் தரை மேல் குச்சியை வைத்து பாதத்தை வளைத்து அதன் மேல் வைத்து லேசாக மேலும் கீழும் குச்சியைத் தரையில் தேய்ப்போம். இதில் ஒரு பிரச்சனை. எவ்வளவு மெல்ல தேய்த்தாலும் குச்சி உடைந்து விடும். ஒரு முழு நீளக் குச்சி இந்த மெக்கானிசத்தால் துண்டு துண்டாக உடைந்து விடும். ஆனாலும் ‘மாப்போல’ எழுதும்ல ..! அதாவது மாவு மாதிரி எழுதும்ல ..! அதைவிட குச்சி உடைந்து விடக்கூடாதென்பதற்காக, குச்சியை அதிகமாக அழுத்தாமல் மெல்ல மெல்ல அதனைத் தேய்க்க வேண்டும். அப்படித் தேய்க்கும் போது நமது கடமையில் கண்ணாக .. அல்லது காலாக இருக்க வேண்டும். நினைவு வேறு எங்கு திரும்பினாலும் காலின் அழுத்தம் கூடி குச்சி உடைந்து விடும் என்ற அபாயகரமான நிலை. உண்மையிலேயே இது ஒரு மோன தவம் மாதிரி. அம்புட்டு ஜாக்கிரதையாக செய்யணும்!

ஸ்லேட் பரிமாண வளர்ச்சில் கட்டை ஸ்லேட்டிலிருந்து தகர ஸ்லேட் வந்தது. இதே போல் எழுதும் குச்சிகளிலும் பரிணாம வளர்ச்சி இருந்தது. முதலில் கருப்புக் குச்சி மட்டும் தான் கிடைக்கும். கொஞ்ச நாள் கழித்து மாவில் செய்த கலர் குச்சிகள் கிடைத்தன. பழையதுக்குப் பெயர் ஸ்லேட் குச்சி. இப்போ இருவகை குச்சி வந்ததால் இந்தப் புதிய குச்சிக்கு ’மாக்குச்சி’ என்று நாமகரணமிட்டோம். பழைய ஸ்லேட் குச்சி மாதிரி இதுவும் அதே நீளத்தில் கிடைக்கும். அதுவும் குச்சியின் சைடில் கலர் கலரா கோடுகள் இருக்கும். ஆனாலும் சோகம் என்னன்னா ... குச்சியில் கலர்க் கோடுகள் இருக்கும். ஆனால் எழுதும் போது ஒரே வெள்ளைக் கலரில் தான் எழுதும்.  only B & w; no colour at all!   :(

இந்த ஸ்லேட் & குச்சிகளோடு வேறு சில accessories அதிர்ஷ்டம் இருந்தால் அவ்வப்போது கிடைக்கும். அவைகள் கடல்நுரையும், கடல் குச்சிகளும்.



"கடல் நுரை”

கடல் அலைகள் கரையில் வந்து மோதும் போது நுரையாக இருக்கும். இந்த நுரையெல்லாம் ஒண்ணா சேர்ந்து, அதன் பின் வெயிலில் காய்ந்து இது உருவாவது என்று எங்கள் ‘ஆராய்ச்சி மூளை’ சொல்லியதால் இதை கடல் நுரை என்று எல்லோரும் சொல்வோம். இது நாகணவாய் - ஆக்டோபஸ்ஸிற்கு க்ளோஸ் சொந்தக்காரர் - என்ற கடல்வாழ் உயிரின் ஷெல்.  பரிணாமத்தில் உடலின் உள்ளே சென்று விட்டதாம். இதன் உட்புறம் மெதுவாக இருக்கும். இந்தக் ‘கடல் நுரை’ வைத்து அழித்தால் ஸ்லேட் நன்றாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.


SEA URCHIN
அடுத்து இன்னொரு கடல்வாழ் உயிரியின் மேல் தோலில் உள்ள சின்ன மெல்லிய குச்சிகள் - நாங்கள் இதைக் கடல் குச்சி என்று சொல்வோம். ஆனால் சுண்ணாம்பினால் ஆன இந்தக் குச்சிகள் பெரும்பாலும் கீச் ..கீச்.. என்று தான் எழுதும். இருந்தாலும் கிடைத்தற்கரிய பொருள் என்பதால் எங்களுக்கு அதன் மேல் ஒரு கிக் உண்டு


"கடல் குச்சி”

பெரியப்பாவின் மகன் - அண்ணன் ஒருவன் உண்டு. என்னைவிட இரு வயது மூத்தவன். எல்லா நல்ல விஷயமும் "ஏனைய விஷயமும்" (இதையும் வாசித்துப் பாருங்களேன்!) காதில் முதலில் ஓதியவன் இவனே. நானும் இவனும் சேர்ந்தே பள்ளிக்கூடம் செல்வதுண்டு. அவன் ஐந்தாவது படிக்கும் போது ஒரு நாள் நடந்து போய்க்கொண்டிருந்தோம். (அப்புறம் என்ன ஆட்டோவிலோ... காரிலோவா போயிருக்க முடியும்?!) அப்போது தனது ஸ்லேட்டை எடுத்து ஏதோ எழுதுவது போல் செய்தான். பின் மெல்ல கையால் எழுதியதை அரையும் குறையுமாக அழித்தான். கீழே தன் பெயரை முழுவதுமாக எழுதினான். என்ன பண்ற? அப்டின்னு கேட்டேன். ’வீட்டுப்பாடம் எழுதலை ... அதான் இப்போ எழுதினேன்’ என்றான். ஸ்லேட்டில் எழுத்து இருந்தது மாதிரியும் இல்லாதது மாதிரியும் தெரிந்தது. என்னன்னு கேட்டேன். ‘நான் வீட்டுப்பாடம் எழுதுறதெல்லாம் இப்படித் தான்’ என்றான்.  நான் முயற்சித்தேன். execution சரியாக வரவில்லை. உட்டுட்டேன்!



அதீதம் இதழில் வந்த பதிவின் மறு பதிப்பு


*

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

நான் படித்த போது கூட ஸ்லேட் இருந்தது. அதை அலுமினிய போட்டியில் எடுத்துச் சென்ற நினைவு.

இனிய நினைவுகள்.

G.M Balasubramaniam said...

சிலேட்டும் பலப்பமும் இல்லாமல் பள்ளிப்படிபே கிடையாதே இப்போதும் சிலேட் வேஉ பெயரில் உலா வருகிறது பலப்பம்தான் போச் போயே போச்

ராமலக்ஷ்மி said...

முன்னர் வாசித்திருக்கிறேன். மீண்டும் வாசிக்கவும் சுவாரஸ்யம்.

கடல் நுரை பயன்படுத்தியதில்லை. கடற்குச்சி வைத்து எழுத மிகவும் பிடிக்கும். மாக்குச்சி என்றும் ஒருவகை இருந்தது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எழுத மட்டும்தானே சிலேட்? அப்படியல்ல. கும்பகோணத்தில் திருமஞ்சன வீதி பள்ளியில் படித்தபோது வகுப்பு ஆசிரியர்களிடம் அடி வாங்கிய அனுபவத்தில் ஒன்று சிலேட். எங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளில் ஒன்று சிலேட்டால் தலையில் அடித்து அந்த பிரேமை தலையில் மாட்டிவிடுவார்கள். வீட்டுப்பாடம் செய்யாமலும், பள்ளியில் குறும்பு செய்தபோதும் இவ்வாறு நான் தண்டனை பெற்றுள்ளேன்.

Post a Comment