Friday, August 16, 2019

1060. எங்க காலத்திலெல்லாம் ... 6 - நல்லவேளை .. அந்த போலீஸ்காரங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பாகம்: 1




*
அடுத்த பதிவு: 
https://dharumi.blogspot.com/2019/08/1061-2.html   

*


நெருப்போடு பழகிறது மாதிரி ராசாக்கள் கூட பழகணுமாம். சொல்லியிருக்காங்க. ஆனா நாம எங்கே ராசா கூட பழகிறது. அட மந்திரியோடு கூட பழக முடியாது. முடிஞ்சதெல்லாம் போலீஸ்காரங்க கிட்ட மட்டும் கொஞ்சம் பழகியிருக்கோம்... கஷ்டப்பட்டிருக்கிறோம். ஆனா அப்படியே ரீவைண்ட் பண்ணப்போ ஒரு காலத்தில் நம்ம ராசி செமயா இருந்திருக்கு. போலீஸ்காரங்க கிட்ட கொஞ்சம் உரசல் அது இதுன்னு இருந்தாலும் ‘சூடு’ எதுவும் வாங்காம பொழச்சிக்கிட்டேன். நல்ல காலமா .. இல்ல அந்தக் காலத்தில இருந்த போலீஸ்காரவுங்க அம்புட்டு நல்லவங்களான்னு தெரியலை.




 கொஞ்சூண்டு ரீ வைண்ட் பண்ணினேன். போலீஸ்காரங்க கிட்ட உரசினதெல்லாம் நாலஞ்சி ஞாபகத்துக்கு வந்தது. அதெல்லாம் இப்போ பண்ணியிருந்தேன்னா உசிரு பொழச்சிருக்காதுன்னு தெரிஞ்சது.  யோசிக்கும் போது . இன்னொண்ணும் நினைவுக்கு வந்திச்சி. என்னன்னா .. ரீ வைண்ட்ல வந்த நிகழ்ச்சி எல்லாமே என் கல்யாணத்துக்கு முந்தினது. அதாவது 1973க்கு முந்தினது. இதுல ஒரு சின்ன குழப்பம் ... கல்யாணத்துக்கு முந்தி தைரியமா இருந்து போலீஸ்காரங்கட்ட கூட தைரியமா இருந்திருக்கிறேன். ஆனால் கல்யாணத்துக்குப் பிறகு அந்த தைரியமெல்லாம் ஒரேயடியாகப் போயிருச்சோன்னு தோணுச்சி. எப்படியோ பொழப்ப ஓட்டிட்டு இருக்கேன். ஓடட்டும் ...





அந்தக் கால பஸ்ஸில கடைசி வரிசையில் ஆறு பேர் உட்கார்ரது மாதிரி நீள சீட் ஒண்ணு இருக்கும். பஸ்ஸில் ஏறுவதற்கான வாசல் இந்த வரிசைக்கு முன்னல தான் இருக்கும். இந்த சீட் ரொம்ப அடக்கமான சீட்.  எவ்வளவு கூட்டம் வந்தாலும் நமக்குத் தொந்தரவு கிடையாது. கதவு பக்கத்தில இருக்கிறதுனால காத்து சும்மா ஜில்லுன்னு வரும். காலை கைய யாரும் மிதிக்க மாட்டாங்க. ஏன்னா ஏறும் படியை ஒட்டி ஒரு அடைப்பு இருக்கும். அதற்குள் தான் சொன்ன அந்த கார்னர் சீட். ராசா மாதிரி உக்காந்துட்டு வரலாம். அதனால் தனியா வர்ரவங்க, சுமை ஏதும் இல்லாதவங்க டக்குன்னு மொதல்ல பிடிக்கிற சீட் இது தான். ஒரு நாள் எங்கிருந்தோ மதுரைக்குப் போகும் பயணம். முதல்ல ஏறினதுனால அந்த சீட் கிடைச்சிது. ஏறி உக்காந்திட்டேன். ஆட்களும் ஓரளவு  வந்திட்டாங்க. 

அப்போ ஒரு போலீஸ்காரர் - முழுக்கால்சட்டை போட்டிருந்தார். ஏன்னா அப்போவெல்லாம் கான்ஸ்டேபிள்களுக்கெல்லாம் அரைக்கால் சட்டை தான் - அவரு இன்ஸ்பெக்டராக இருந்திருக்கணும். பஸ்ஸில ஏறினார் . ஒரு லுக் உட்டார். பாதிக்கு மேல் பஸ்ஸில ஆட்கள் இருந்தாங்க. எனக்கு அடுத்த சீட்டும் காலியாக இருந்தது. ஏறியவர் என்னைப் பார்த்து ‘அங்க தள்ளி உக்காருங்க’ன்னு சொல்லிட்டு என் சீட்டைப் பிடிக்கப் பார்த்தார். நான் நல்லா தள்ளி நான் இருந்த சீட்டில் உக்காந்திட்டு, பக்கத்து சீட்டைக் காண்பிச்சேன். ‘அங்க உட்காருங்க’ன்றதை அப்படி செஞ்சேன். அவருக்குக் கோபம் வருமா வராதா? வந்திச்சி. ‘ஏன் நீங்க அங்க உட்கார மாட்டீங்களா?’ன்னார். நான் உடனே “ஏன் நீங்க அங்க உட்கார மாட்டீங்களா!’ன்னு கேட்டேன். அது இன்னைக்கி நடந்திருந்தா ... சரி.. அந்தக் கற்பனை இப்போது எதுக்கு? அன்னைக்கி என்ன நடந்திதுன்னா ... இன்ஸ்பெக்டர் முன்னால ஒரு ஜன்னல் சீட் பார்த்து அங்க உக்காரப் போய்ட்டாரு. நல்லவரு தானே?




அடுத்து, அந்தக் காலத்தில மதுரையில கால்பந்து வருஷா வருஷம் நடக்கும். அண்ணா பத்தி அப்டின்ற கம்பெனி நடத்தும். எங்களுக்கெல்லாம் அது திருவிழாக் காலம். மாலையில பஸ்ஸைப் பிடித்து தமுக்கம் மைதானத்துக்குப் போய் அந்தக் காலரியில் உக்காந்து பார்த்தா ... அடடே..! அதிலும் அந்தப் பக்கத்தில் தேர்முட்டியில் கடை வச்சிருக்கிற கூட்டம் நிறைஞ்சி இருக்கும். எல்லாம் கடை முதலாளிகள். வயசும் நாப்பதைத் தாண்டி இருக்கும். அவங்க பக்கத்தில இருந்து மேட்ச் பார்க்கிறது ரொம்ப நல்லா இருக்கும். அப்படி லூட்டி அடிப்பாங்க. எல்லா டீம் பற்றியும் தெரிஞ்சி வச்சிருப்பாங்க. பிளேயர்களின் பெயர்களெல்லாம் அத்து படி. மதுரைக் கூட்டத்திற்கே அப்போ கூர்க்கா டீம், அடுத்து பெங்களுரிலிருந்து வரும் H.M.T. டீமிற்குத்தான் விசிறிகள் அதிகம். எங்க காலேஜ் விளையாட்டு வாத்தியார் லைன் அம்பயரா வருவார். அவருக்கு தலை வழுக்கை. அத வச்சி அவருக்கு ஒரு பட்டப் பெயர் - டைனமோ தலையான்னு கத்துவாங்க. 

சரி .. விளையாட்டு ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம கதைக்கு வருவோம். ஒரு நாள் டைம் ஆகிப் போச்சு. கீழ வெளி வீதியில பஸ்ஸில அவசரமா போறோம். பஸ்ஸில நிறைய கால்பந்து ரசிகர்கள் தான். கீழவாசல் ஸ்டாப். அப்போவெல்லாம் டிவிஎஸ் தான் பஸ் ஓட்டிச்சின்னு நினைக்கிறேன். அவங்க பஸ் ஓட்டும் போது யாராயிருந்தாலும் பின்னால் இருந்து தான் ஏறணும்... முன் வழியில தான் இறங்கணும். அன்னைக்கி பாவம் ஒரு பிள்ளைதாய்ச்சி. பெரிய வயிறோடு கஷ்டப்பட்டு, முன் பக்கம் ஏற பார்த்தாங்க. நடத்துனர் கண்டிஷனா சொல்லிட்டார். பின்னால் போய் ஏறும்மா என்றார். அந்த அம்மாவால நடக்க முடியலை. பஸ்ஸும் கிளம்பியிருச்சி. அடுத்த ஸ்டாப். அப்போதிருந்த சிந்தாமணி தியேட்டர். இப்போ அங்க ராஜ்மகல் துணிக்கடை. அங்க பஸ் நின்னுது. பஸ் புறப்படும் போது முன் வழியா ஒரு போலீஸ்கார அய்யா - அரைக்கால் சட்டையோடு - முன்னால ஏறினார். நடத்துனர் என் பக்கம் நின்று கொண்டிருந்தார். அவர் அதைத் தடுக்கவில்லை. பஸ் புறப்படப் போச்சு. நான் சத்தமா நடத்துனரிடம் ’பாவம் அந்தப் பொம்பிளைய ஏத்தலை; இப்போ இவரை மட்டும் ஏத்துறீங்க’ன்னு கேட்டேன். இது நடந்தது அந்தக் காலத்தில இல்லையா? இப்போன்னா எல்லோரும் அவரவர் வேலையப் பார்த்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. ஆனால் அப்போவெல்லாம் அப்படியெல்லாம் கிடையாது. பலபேர் எனக்கு சப்போர்ட் பண்ணி சவுண்டு உட்டாங்க. போலீஸ்காரர் என்னன்னு கேட்டார். சொன்னோம். நான் இறங்கிக்கிறேன் சொல்லி அவரே இறங்கி விட்டார். 


நல்ல போலீஸ்காரர். 

நியாயத்துக்கு ஆதரவளிக்கும் மக்கள்

அன்று அப்படி ... இன்று எப்படி ...?


இன்னும் தொடரும் ....

*

7 comments:

TBR. JOSPEH said...

நானும் திருமணத்திற்கு முன்பு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த எல்லா football matchக்கும் போவேன். நான் அப்போதைய ICF Teamன் பரம விசிறி. வங்கி team என்பதால் zRBI, SBI Teamகளையும் பிடிக்கும் .அப்போது பிரபலமாக இருந்த நடிகர்கள் மூத்துராமனும் நாகேஷும். எல்லா மேட்சுக்கும் வருவாங்க...சைக்கிள்லதான் போவேன்.. ஹும் அது ஒரு காலம்.

தருமி said...

ஆமால்ல ... ICF TEAMக்கும் எங்க ஊர்ல மவுஸ் தான்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அது அந்தக்காலம்..உண்மைதான் ஐயா.

G.M Balasubramaniam said...

போலீஸ்காரர்களிடம் உரசின சில நிகழ்வுகள் நினவுக்குவருகின்றன

வேகநரி said...

அந்தக்காலம் என்ன, இன்று என்ன! இதுவரை நான் இந்தியாவில் அறிந்தளவில் போலீஸ் என்பது தனது அதிகாரத்தை மக்களுக்கு எதிராக பயன்படுத்தி அளவிற்கு அதிகமாக எல்லை மீறியே நடந்து வருகிறார்கள்.
சார் இப்போது ரெட் லைட் வந்துள்ளது நீங்க இப்போது செல்ல கூடாது காத்திருக்க தான் வேண்டும் அடுத்த பச்சை வரும் வரை என்று இந்தியர்களிடம் தெரிவிக்கும் வெளிநாட்டு போலீஸ் கான்ஸ்டேபிள் மீது மதிப்பே வருகிறது.

srinivasan Nattarasan said...

அப்பலேருந்து இப்படித்தானா?

தருமி said...

//அப்பலேருந்து இப்படித்தானா?// எப்படி தானா?

Post a Comment