Thursday, September 26, 2019

1066. ஒத்த செருப்பு*
பார்த்திபனின் ...
ஒத்த செருப்பு 
சைஸ் 7

இப்போதெல்லாம் படம் ஒரு வாரத்திற்குள் ஓடி விடுகிறதே என்றெண்ணி மூன்றாவது நாளே மழையோடு ஓடிப் போய் பார்த்தேன் - கட்டாயம் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையுடன். பார்த்திபன் கொடுத்த முன்னுரையும் அப்படி  ஈர்த்தது; படத்திற்குப் பின் வந்த அவரது பின்னுரையும் பாவமாக என்னை தியேட்டர் பக்கம் இழுத்தது.படத்தின் நேரம் 2 மணி நேரம் என்று போட்டிருந்தது. அப்படி தெரியவில்லை. முதல் பாதியே வெகு விரைவில் வந்ததாகத் தோன்றியது. அடுத்த பாதியும் அதே வீச்சில் படம் நடந்து முடிந்தது. படம் முடிந்து எழுத்துக்கள் வர ஆரம்பிக்கும் போதும் சில வசனங்கள் வந்து விழுந்தன. படமும் தொடர்ந்து இரண்டே மணி நேரத்தில் எடுத்தது போல் - one-act scene போல் தோன்றியது. நிச்சயம் அதற்கான காரணங்கள் இரண்டு; ஒன்று: திரைக்கதை - தொய்வில்லாமால் தொடர்ந்து, நாடகத்தில் ஒரே சீனில் கதை நடக்குமே அது போல் மிக நேர்த்தியாகக் குழப்பமில்லாமல் தொடர்ந்து நடந்தது. இரண்டாவது: எடிட்டிங். (சுதர்சன்) தொய்வில்லாமல் இருந்ததற்கு அதுவும் ஒரு நல்ல காரணியாக இருக்க வேண்டும்.
படம் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இது ஒரு action-thriller. நாலைந்து கொலைகள் அல்லது மரணங்கள். கொடுமையான கொலைகள். ரத்தமும், இன்னும் வேறு உடல் திரவங்களும் நம்மீது அவ்வப்போது தெறித்து விழுகின்றன. கொலைகார சத்தம் காதைக் கொடூரமாக அறுக்கின்றது. ஒவ்வொரு கொலைக்களமும் கண்முன் விரிகிறது. அச்சத்துடம் ”பார்க்க” வேண்டியதிருக்கிறது - அது ஒரு நிகழ்வாக நம் முன் தெரியாவிட்டாலும். கதாநாயகன் - Is he normal or subnormal? என்ற கேள்வி நம்மைத் துரத்திக் கொண்டே வருகிறது. Joke அடிக்க முடியாத இடத்திலும் Joke அடிக்கிறார் - அதுவும் வேகமாக வந்து நம் மீது மோதி சட்டென மறைந்து போகிறது.

காவல் நிலையத்தில் ஒரே ஒரு அறை.ஒரு பக்கம் ஒரு சுவர் - காந்தி படத்துடன். நடுவில் கதை நாயகன். முன்னால் ஒரு மேசையும் நாற்காலியும். மேசை மேல் ஒரு பட்டம் - வாலில்லாதது; மாஞ்சா நூல் இல்லாதது. பக்கத்தில் ஒரு சன்னல். அது வழியே தெரியும் ஒரு மரக்கிளை.

படத்தில் பிடித்த இன்னொரு விஷயம். பின்னணிக் குரல்கள். அதிகமெல்லாம் இல்லை. ஐந்தாறு குரல்கள் மட்டும் பின்னணியில் ஒலித்தன. அதில் வரும் பெரிய போலீஸ் அதிகாரியின் மிரட்டல் இல்லாத குரல் .. அதைவிட மனோதத்துவ மருத்துரான பெண்மணியின் குரல். (ஒரு வேளை அந்தப் பின்குரல் நடிகை ரோகிணியின் குரலாக இருக்குமோ? தெரியவில்லை.) மிக அழகான குரல். சாந்தமும், அன்பும், அமைதியுமான குரல். கதாநாயகனுக்கு அந்த டாக்டரைப் பிடித்தது. எனக்கு அந்த டாக்டரின் குரல் மிகவும் பிடித்தது. படத்தின் சூழலுக்கும் மிகப் பொருத்தமாகவும் அமைந்திருந்தது.கதாநாயகன் Is he normal or subnormal? என்று கேட்டிருந்தேன். அவன் நிச்சயமாக super-normal என்று தான் சொல்ல வேண்டும். மூன்று கொலை செய்து விட்டு காவல் நிலையத்திலிருந்து விடுபட்டு தன் நோய்வாய்ப்பட்ட மகனோடும் அவனது பட்டத்தோடும் பத்திரமாக வெளியே செல்ல வேண்டுமானால் அவன் நிச்சயமாக பெரிய புத்திசாலி தானே!

ஒரே நடிகன். அவ்வப்போது காமிராவிற்குப் பின்னாலிருந்து வரும் சில பல குரல்கள். ஒரே இடம். மாறாத காட்சி. முன்புலம், பின்புலம் எல்லாம் ஒன்றேதான்.  பாட்டு கிடையாது. ஒரு தமிழ்ப்படம் - அதில் காதல், பாட்டு, சண்டை இல்லாவிட்டாலும் இது ஒரு தமிழ்ப்படம். ஆச்சரியமாக இல்லை? இப்படி ஒரு படம். ஒரே போர் என்று சொல்வதற்கான அத்தனைக் காரணிகளும் இருந்தும் தொய்வில்லாமல் நேர்கோட்டில் செல்லும் படம். இப்படி படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும். பார்த்திபனுக்கு அது அதிகமாகவே இருக்கிறது. ‘குடைக்குள் மழை’ என்றொரு படம் எடுத்தார். பார்க்கவில்லை. ஆனால் படம் வந்து ‘சுருண்ட’ பிறகு “இப்படத்தை நான் எடுக்காமல் வேறு ”பெரிய” - பக்க பலம் உள்ள - நடிகர்கள் எடுத்திருந்தால் இதை ஆஹா .. ஓஹோ .. என்று சொல்லியிருப்பார்கள். நான் அப்படிப்பட்ட பின்புலம் இல்லாத ஆள்” என்று சோகமாக பார்த்திபன் சொல்லியிருந்தார். இப்படத்திற்கும் அவர் அதைச் சொல்லும்படியான சூழல் இல்லாமல் போனால் - பார்த்திபனுக்கும் நல்லது; தமிழ்த் திரையுலகிற்கும் நல்லது.  

இப்போதெல்லாம் பின்னணி இசை / சத்தம் என்னை மிகவும் துன்புறுத்துவதாகவே தெரிகிறது. படத்தின் வசனங்கள் பல என் காதுகளுக்கு வருவதற்கு முன்பே பின்னணி சத்தம் வந்து குழப்பி விடுகிறது. இந்தக் ”குற்றப் பின்னணிக்குப்” பின்னால் இருப்பது என் செவித் திறனா அல்லது தியேட்டர் ஆப்ரேட்டர்களின் சதியா என்பது எனக்கு இதுவரை புரியவில்லை. இந்தப் படத்தில் அந்தக் குழப்பம் நிச்சயமாக இல்லை. வசனம் அட்சர சுத்தமாகக் காதில் விழுந்தது. பெருமை யாருக்கு? - சத்யா / சந்தோஷ் சுப்ரமணியம் / ரெசூல் பூக்குட்டி?


பி.கு.: இதை ப்ளாக்கில் போடுவதற்கு முன் ஒரு படத்தோடு போடலாமென நினைத்து கூகுள் ஆண்டவரின் images பகுதியைத் திறந்தால் அத்தனை எண்ணத்தில் படங்கள் நிறைந்து கிடக்கின்றன. அப்படியானால் மக்கள் மத்தியில் படம் நன்கு ‘நின்று” விட்டது என்றே நினைக்கின்றேன். 

பார்த்திபனுக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்


பி;கு. தாண்டிய இன்னொரு பி.கு.:  மகாமுனி படத்தின் துணை இயக்குநரும் நண்பராகி விட்ட கிருஷ்ண குமார் என் பதிவில் நான் செய்த தவற்றைத் திருத்த நக்கீரன் மாதிரி ”எங்கெங்கே குற்றம் இருக்கிறதோ அங்கெல்லாம் அவதாரமெடுத்து தவற்றை எடுத்துரைப்பேன்” என்பது மாதிரி இங்கேயும் இறங்கி வந்து விட்டார்.பின்னணிக் குரல்கள் பற்றிச் சொல்லும் போது மனோதத்துவ மருத்துரான பெண்மணியின் குரல் எனக்குப் பிடித்தது என்றும், அது யார் குரலாக இருக்கலாமென நான் நினைத்தது பற்றி எழுதியிருந்தேன். அது ஒரு தகவல் பிழை என்று கூறி பின் குரல் கொடுத்த இரு பெண்கள் பற்றி கூறினார். அதையும் சேர்த்து விடுகிறேன்: மனோதத்துவ மருத்துரான பெண்மணியின் குரல் தீபா வெங்கட். நல்ல மிருதுவான குரல். பிடித்தது. மாசிலாமணியின் - அதாங்க இப்படத்தில் பார்த்திபனின் பெயர் -  மனைவிக்காகக் குரல் கொடுத்தது நடிகை காயத்திரி


மிக்க நன்றி கிருஷ்ண குமார்.


1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

விமர்சனம் அருமை. பார்க்கும் ஆவலைத் தூண்டியது.

Post a Comment