Sunday, August 30, 2020

1105. கொரோனாவும் நானும் ... 3
*

ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 

மருத்துவ மனையில் சேர்ந்த முதல் நாள் இரவில்தான் முதல் ஷாக் வந்தது. ஆனால் அடுத்த நாளே இந்த ஷாக்குகள் பழகிப் போக ஆரம்பித்து விட்டன.  புதுக் கட்டிடத்தில் தான் green zone என்று பெயரிடப்பட்ட எங்கள் வார்டு இருந்தது. பழைய மருத்துவ மனையை ஏறத்தாழ 25-30 ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறேன். ஒரு வாழும் நரகம் போல் தோன்றும். எங்கும் அழுக்கு .. எச்சில்.. கழிவு நீர்… வெராண்டாவில் படுத்திருக்கும் நோயாளிகள் என்று அச்சமுறுத்தியன அந்தக் காலத்தில். ஆனால் இப்போது அப்படியேதும் அச்சம் தரும் நிலையில்லை. சுத்தம் இருந்தது; அதிகக் கூட்டமில்லை. ஆனாலும் வார்டுக்குள் நுழைந்ததும் முதலில் சிறிது பயம் தான் வந்தது. நீண்ட ஹால் .. எதிர் எதிராக இரு வரிசையாகப் படுக்கைகள்; படுக்கைகளுக்கு நடுவே ஒன்று அல்லது ஒன்றரை அடி இடைவெளி தானிருந்தது. ஹாலின் நடுவே மருத்துவர்களுக்கான சிறிய அறை. அதனால் ஹால் இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தன. எனக்கு முதலில் அந்தச் சின்ன மருத்துவ அறையின் மேற்குப் பக்கத்தில் இருந்த பகுதியில், வடக்குப் பக்கம் இருந்த வரிசையில்.. நட்ட நடுவே எனக்கு ஒரு கட்டில் கிடைத்தது. (நிலைமை அப்படித்தான்… ஏதோ ஒரு நோயாளி ஏதோ ஒரு நிலையில் - அதாவது உயிரோடு அல்லது அது இல்லாமலே ‘வெளியே’ சென்றால் தான் அடுத்தவருக்கு இடம் என்ற நிலை!) அப்படிப்பட்ட கூட்டத்திலும் எனக்கென்னவோ எளிதாக அட்மிஷன் கிடைத்தது - என் நண்பர்களின் முனைப்புகளினால் எளிதாக அமைந்தது. ரவியும் வைத்தியும் என்னை வார்டில் என்னைச் சேர்த்து விட்டு அடுத்த நாள் மதியம் வரை ஊண், உறக்கம் இல்லாமல் மருத்துவ மனையிலேயே இருந்திருக்கின்றனர். பாவம் பசங்க …


அதோடு மருத்துவ மனையிலிருந்து வெளி வந்து பல நாட்கள் வரை மக்கள் ரகசியமாக வைத்திருந்த செய்திகள் இப்போது தான் மெல்ல கசிந்து எனக்கு வருகின்றன. நிமோனியாவில் அடுத்தடுத்து ஆறு நிலைகள் இருக்குமாம். எனது நோயின் நிலை ஐந்தாவது நிலையில் இருந்திருக்கிறது. நல்ல சீரியஸ் கேஸ் தான் போலும்; இப்போது தான் தெரிகிறது. அதனால் தானோ என்னவோ, மருத்துவ மனையில் சேர்ந்த சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஒரு S.O.S. voice mail கொடுத்து அவர்களை ‘அலற’ வைத்திருப்பேன் போலும். அதைப் பற்றி அவர்கள் என்னிடம் இப்போது பேசிய போது, அப்படி ஒரு மெயில் கொடுத்த நினைவே எனக்கில்லை. அது தான் சொன்னேனே … எது நிஜம் .. எது கனவு .. என்றே தெரியாத ஒரு நிலையில் முதல் சில நாட்கள் இருந்திருக்கிறேன்.


அந்த வார்டில் இருந்த நோயாளிகளில் ஏறத்தாழ 80% விழுக்காட்டிற்கு மேல் ஆண்கள் தான் நோயாளிகளாக இருந்தார்கள். The "weaker" sex were so low in number!!  Reason..? அம்மாமார்களும், மனைவிமார்களும் நோயாளிகளை அக்கறையாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். பெண்குலத்திற்கே என் மனமார்ந்த வணக்கம்.


முதலில் மிரட்சி. மணி பத்து பதினொன்றுக்கு மேலிருக்கும். என் வரிசையின் வலது பக்கக் கடைசியில் இருந்த ஓரிரு கட்டில்கள் முன் கூட்டமாக இருந்தது. மெல்லிய அழுகை ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தது. யாருக்கோ இறுதிப் போராட்டமாக இருந்திருக்க வேண்டும். அங்கே படுத்துத் தூங்கி விடுவேனா என்றும் தோன்றியது. ஆனால் இதுவரை இருந்தது போன்ற அசதியில் தூங்கி விட்டேன். நடுநிசி தாண்டி ஏதோ ஒரு நேரத்தில் சிறுநீர் கழிக்க எழுந்தேன். கழிவறை என்று எங்கே என்று கேட்டு முதன் முறையாக அங்கே சென்றேன். சுத்தமாகவே இருந்தது. ஆனாலும் தரையை சமமாகப் போடாத கொத்தனார்களைத் திட்டிக் கொண்டேன் - ஏனெனில் அறைகளின் நடுவில் இருந்த பகுதி அதற்குள் பள்ளமாக தண்ணீர் - என்ன தண்ணீரோ? - தேங்கி நின்றது. வெஸ்டர்ன் டாய்லட்டில் பழகியாகி விட்டது. அது இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்று இருந்தது. ஆனால் மேல்பாகமெல்லாம் காணாமல் போய் உடைந்து நின்றது. சமாளித்து வந்த வேலையை முடித்து விட்டு, ஹால் பக்கம் நடந்தேன். இரவிலும் ஆள் நடமாட்டம் இருந்தது. ஹாலின் வாசலுக்கு வரும் போது தான் அந்த முதல் ஷாக் கிடைத்தது. வாசலுக்கு அடுத்தாற்போல் ஒரு இரும்பு ஸ்ட்ரெட்சர் … அதில் நீளப் பொட்டலம் போல் வெள்ளைத் துணியில் கட்டப்பட்ட இறந்த உடலொன்று கிடந்தது. வர வேண்டியவர்கள் இன்னும் வரவில்லை போலும் .. கேட்பாரற்று சுவரோரம் ஒதுங்கிக் கிடந்தது. ஆனால் அடுத்த இரு நாளில் பார்த்த மரணங்கள் - என் கணக்கின்படி எட்டு அல்லது ஒன்பது - மெல்ல என்னைப் பழக்கிக் கொண்டிருந்தன. I was getting adapted to those sad but continuous events.


மருத்துவ மனை செல்வதற்கு முன்னும் பின்னும் ஏறத்தாழ பல நாட்களுக்கு இரவுப் பொழுதுகள் கனவிற்கும், நினைவிற்கும் நடுவில் ஊடாடிக்கொண்டே கழிகின்றன. விழித்துப் பார்த்தால் எது கனவு.. எது நிஜமென ஏதும் புரிவதில்லை. குழப்பம் தான் மிஞ்சி நின்றது. Meet the Spartans என்று ஒரு நகைச்சுவைப் படம். அதில் ராஜாவின் அரண்மனைக்குள் ஒரு இருண்ட குழி இருக்கும். ராஜா வேண்டாதவர்களை அதில் தள்ளி விடுவார். ஆழம் தெரியாத குழி. படத்தில் அந்தக் குழியில் வட்ட மேடை ஒன்றைச் சுற்றியிருக்கும். எனக்கென்னவோ மருத்துவ மனையில் சேர்ந்த முதல் மூன்று நான்கு நாட்களுக்கு நான் அந்த மேடையில் இருப்பது போன்ற நினைவே கனவில் வரும். எந்தப் பக்கம் விழுவது என்ற ஒரு திரிசங்கு நிலையில் இருந்தேன்.


இரண்டாவது நாள் நிகழ்ச்சி. என்னை அது ஏதோ ஒரு சமநிலைக்குக் கொண்டு வந்தது. பதினோரு மணியிருக்கும். எனக்கு எதிர்த்த வரிசையில் ஏறத்தாழ எனக்கு நேரெதிரே படுத்திருந்த ஒரு வயதான பெண்மணி உயிரிழந்தார். கோரோனாவா என்று கொஞ்சம் சந்தேகம் தான். அழுகை ஏதும் இல்லை. அதன் பின் ஓரிரு மணியளவில் என்னைப் பார்க்க வைத்தி, ரவி என் படுக்கையருகே இருந்தார்கள். ஏதோ ஒரு ‘சதி’ செய்து, அவர்கள் முதுகிற்குப் பின்னால், என் கட்டிலிலிருந்து நாலாவது கட்டிலில் ஓர் உயிர் பிரிந்திருக்கிறது. அந்தக் கடைசி நிமிடங்கள் என் கண்ணில் படாதவாறு மறைத்து நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் அதன் பின் இறந்தவர்களின் உறவினர்கள் இரண்டு மூன்று பேர் வந்து அழுத போது தான் அந்த இறப்பு என் பார்வைக்கு வந்தது. ஆனால் இதில் இருந்த பெரும் அதிர்ச்சி  என்னவெனில் அந்த இரு உடல்களையும் அப்புறப்படுத்த ஐந்தாறு மணிகளாகி விட்டது. ஆள் பற்றாக்குறையோ என்னவோ…  அந்த இரு உடல்களையும் அதுவரை பார்க்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியவில்லை.


நான் அங்கிருந்த நாட்களில் இன்னொரு விஷயம் எனக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தையும் கொடுத்தது. இறந்ததும் உறவினர்கள், முக்கியமாக மனைவிமார்களின் அழுகை மிக மெல்லியதாக, சில நிமிடங்களுக்கு இருக்கும். அதன்பின் அவர்களில் பலர் ஏதாவது ஒரு சுவற்று மூலையில் சாய்ந்து விசித்துக் கொண்டிருப்பார்கள். சூழ்நிலை அடக்கி வைத்து விட்டதா .. இல்லை அவர்களாகவே அடங்கி விட்டார்களா என்று தெரியவில்லை.


தொடர்ந்து நடந்து வந்த மரணங்கள்.. நானும் என்னையே அந்த மரணக் கிணற்றின் விளிம்பில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நினைவு .. எல்லாமே இணைந்து உலக  அரசுகள் அனைத்தும் வேறெந்த வேலையும் செய்யாமல் அனைத்தையும் துடைத்தெறிந்து விட்டு, மக்கள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனாவை மட்டும் எதிர்த்துப் போரிட வேண்டும் என்று மனதிற்குள் தோன்றியது. இப்படி ஏதேதோ எண்ணங்கள் .. அவைகளைத் தவிர்க்கவும் முடியவில்லை. திருவிளையாடல் படத்தில் …

எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே..   என்று பாடியதும் அனைத்தும் உறைந்து நிற்குமே, அது போல் உலகத்தையும் ஒரு frozen stageக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் சில நினைவுகள். மூளை மந்தமாக ஆனால் வேகமாகவே வேலை செய்து கொண்டிருந்தது போலும் !!


பிள்ளைகளும், நண்பர்களும் என்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்து விட்டதைப் பற்றி என்னிடம் அடிக்கடி பேசினார்கள். அது ஒரு மிகப் பெரும் நல்ல முடிவு என்பது எனக்குப் பின்னால் தான் நன்கு தெரிந்தது. ஒரு முக்கிய காரணத்தைப் பிறகு அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.


மருத்துவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டையும், நன்றியையும் சொல்ல வேண்டும். PPE உடை போட்டிருக்கிறார்கள். மருத்துவர்களுக்கு வெள்ளை நிறம்; மற்றவர்களுக்கு ஊதா. மணிக்கணக்காக அந்த உடையைப் போட்டிருப்பதற்காகவே அவர்களைப் பாராட்ட வேண்டும். தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார்கள், இரவில் கூட யாரும் அமர்ந்தோ, தூங்கிக்கொண்டோ இருந்ததைப் பார்க்கவில்லை. மிகச் சரியாக இரவு இரண்டு, இரண்டரை மணிக்கு வார்ட் முழுவதையும் சுற்றி ஒவ்வொரு நோயாளியையும் கவனித்து, முக்கியமாக ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளதா என்று தொடர்ந்து கவனித்துக் கொண்டும், ஊசி மருந்துகள் போடுவதும் என்று மிகுந்த அக்கறையோடு எல்லோரையும் கவனித்தார்கள். அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுகள். வழக்கமாக அரசாங்க மருத்துவ மனை மருத்துவர்கள் விட்டேற்றியாக இருப்பார்கள் என்ற நமது வழக்கமான எண்ணத்தை முற்றிலுமாக துடைத்தெடுத்து விட்டார்கள். மனமுவந்த பாராட்டுகளும், தலை தாழ்ந்த வணக்கமும் அவர்களுக்கு உரித்தாகட்டும்.


செவிலியர்களும், துப்புறவுத் தொழிலாளர்களும் நம் பாராட்டுக்குரியவர்களே. அதிலும் ’வசூல் ராஜா, எம்.பி.பி.எஸ்.’ படத்தில் ஒரு துப்புறவு தொழிலாளர் இருப்பாரே, அதே போல் பலரும் இருந்ததைப் பார்த்தேன். ஆனால், பாவம் அவர்கள்… கட்டிப்பிடி வைத்தியம் பார்க்க அங்கு யாருமில்லை!

 

 *


1 comment:

ravi said...

உங்கள் மனவலிமையை எண்ணி எண்ணி வியக்கிறேன்.jaallyjumper.

Post a Comment