Sunday, October 04, 2020

1116. கரந்தை ஜெயக்குமாரின் வரிகளில் தருமியாகிய நான்



*


https://karanthaijayakumar.blogspot.com/2020/10/blog-post.html?fbclid=IwAR3ABucfLtrD7nsqwPLWcrsAAxgYQtOJwzVndAL0gSjsaIuX8at1fGZmrDo




தருமி

 


     ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 37 ஆண்டுகள், பேசுவதையே தன் வாழ்வின் பணியாய் கொண்டு வாழ்வை நகர்த்தியவர்.

     பேராசிரியர்.

     கல்லூரிப் பேராசிரியர்.

     பணி ஓய்விற்குப் பிறகு, இவரது வாய் பேசு, பேசு என்று இவரை நச்சரிக்கத் தொடங்கியது.

     பேசியே பழக்கப்பட்டவர் அல்லவா.

     பேசாமல் இருக்க முடியவில்லை.

  

   ஆனால் யாரிடம் பேசுவது?

     யோசித்தார்.

     காலை எழுந்தால், இரவு வரும் வரை, நேரம் கூட, கோலூன்றி மெதுவாக, மிக மெதுவாக நகர்வதைப் போன்ற ஓர் உணர்வு, இவர் உள்ளத்தே எழுந்தது.

     என்ன செய்யலாம்?

     யோசித்தார்.

     37 வருடங்கள் பேசியாகிவிட்டது.

     பேசிப் பேசி தொண்டையே வறண்டு போய்விட்டது.

     எனவே, இனி, தன் எழுதுகோலைப் பேச வைத்தால் என்ன? என்று சிந்தித்தார்.

     எதை எழுதுவது?

     கதையா?

     யோசித்து, யோசித்துப் பார்த்தார்.

     கதை எழுதுவதற்கான, கரு, இவரிடம் பிடி கொடுக்காமல் ஓடி ஒளிந்து, கண்ணாமூச்சு  விளையாடியது.

     கற்பனைக்கு பதில், நிஜத்தை எழுதியால் என்ன?

     யோசித்தார்.

     எந்த நிஜத்தை எழுதுவது?

      ஆங்கில நூல்களில், உலாவும், உண்மை முகத்தை, வரலாற்று முகத்தை, தமழுக்குக் கொண்டு வந்தால் என்ன? என்று யோசித்தார்.

     முடிவெடுத்தார்.

     ஓய்வுகால உற்ற துணையாய், மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்தார்.

     இவர், தன் இளமைக் காலத்தில் மட்டமல்ல, பேராசிரியராய் பணியாற்றிய காலத்திலும், நூல்களைத் தேடித் தேடி வாசிப்பதில், சுவாசிப்பதில் இன்பம் கண்டவர்.

     இவரது பேராசிரிய நண்பர்களை இரு பிரிவாய் பிரிக்கலாம்.

     தமிழ் நூல்களை மட்டும் படித்துக் கொண்டு, ஆங்கில நூல்களின் பக்கமே எட்டிக்கூடப் பார்க்காத நண்பர்கள் ஒரு புறம்.

      ஆங்கில நூல்களை மட்டுமே படித்துக் கொண்டு, தமிழா? தமிழில் என்ன இருக்கிறது? என இளக்காரமாய், தமிழின் பக்கமே திரும்பாத நண்பர்கள் மறுபுறம்.

     இவர் மட்டும், தமிழையும், ஆங்கிலத்தையும் மாறி மாறிப் படித்தார்.

     தமிழும், ஆங்கிலமும் கலந்த கலவையாய் உயர்ந்தார்.

     தமிழில் புலமை.

     ஆங்கிலத்தில் வல்லமை.

     எனவே, மொழிபெயர்ப்புக்குள் நுழைந்தார்.

     சோதனை முயற்சியாக, ஆங்கில நூல் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, தமிழுக்கு உருமாற்றிக் கொண்டிருந்தபோதே, அந்நூல், வேறு ஒருவரால், மொழி மாற்றம் செய்யப்பெற்று, அச்சு வாகனம் ஏறி, நூலாய் விற்பனைக்கு வந்துவிட்டதை அறிந்து, முதல் முயற்சியை மூட்டை கட்டி வைத்தார்.

     சில மாதங்கள் கடந்த நிலையில், ஒரு பதிப்பகம் இவரை அழைத்து, ஒரு ஆங்கில நூலை, இவரின் கரங்களில் திணித்தது.

     சிறுமியோ, வயதான கிழவியோ, பெண்ணாகப் பிறந்தவர்கள் அனைவரும், முகத்திரை அணிந்துதான் வெளியே வரவேண்டும்.

     வியாபாரமோ, தொழிலோ செய்யக் கூடாது.

     தனியாக வசிப்பவர்களுக்கு வேலை கிடையாது.

     வேலைக்குச் செல்லும் பெண்கள், வரி செலுத்தியே ஆக வேண்டும்.

      வேலைக்குச் செல்லும் பெண், குழந்தை பெற்றுக் கொண்டாலும், விடுமுறை என்பது கிடையவே கிடையாது.

     நிலமோ, சொத்தோ வாங்க முடியவே முடியாது.

     இதுதான் அன்றைய நைஜீரியப் பெண்களின் நிலை.

     இந்த நைஜீரியாவில், ஒரு பொந்தில் வசித்த, ஒரு பெண், பொங்கி எழுந்து போர்க்களம் புகுந்த, உணர்வுப் பூர்வ கதை இவரைத் தேடி வந்தது.

     அமீனா.

     சற்றும் காரம் குறையாமல், அமீனாவைத் தமிழில் இறக்கி வைத்தார்.

     அமீனா.

     உடனே, இரண்டு விருதுகள் இவரைத் தேடிவந்து கரம் குலுக்கின.

     பிறகென்ன, எழுத்து, எழுத்தே, இவர் முழுநேரப் பணியாய் மாறிப் போனது.

     பேரரசன் அசோகன்

     பற்றியெரியும் பஸ்தர்

     அம்பேத்கரின் உலகம்

     திரு திருமதி ஜின்னா.

     இவையெல்லாம் இவரது மொழிபெயர்ப்பில், முகிழ்த்துள்ள நூல்கள்.

     இவரது நூல் ஒவ்வொன்றும், கதைக் களத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் வல்லமை வாய்ந்தவை.

     பற்றியெரியும் பஸ்தர்.

     பாதுகாப்புப் படையினருக்கும், ஆயுதப் புரட்சிக் குழுவினருக்கும் இடையில் சிக்கித் தவிக்கும், பழங்குடி மக்களின் சிதறடிக்கப்பட்ட வாழ்வை, அப்பட்டமாய், போட்டு உடைக்கும் நூல்.

     அம்மாநில மக்களின் பெயர்கள், அவர்களின் ஊர்ப் பெயர்கள், அம் மாநில மக்களின் வட்டார மொழி வழக்கு என ஒவ்வொன்றையும் ஆய்ந்து, ஆய்ந்து, தேடித் தேடி அறிந்து, ஓர் உணர்வுக் குவியலாய், பஸ்தரை தமிழில் படைத்திருக்கிறார் இவர்.

     இன்னும் சில நாட்களில், திரு திருமதி ஜின்னாவை தமிழுக்கு அழைத்துவர இருக்கிறார் இவர்.

     ஜின்னாவின் காதல் கதை.

     இந்தியாவையே திடுக்கிட வைத்த காதல் கதை.

     மொழிபெயர்ப்புச் செய்யும் பொழுதே, உணர்ச்சி வசப்பட்டு, தன் முதிர்ந்த வயதையும் மறந்து, பலமுறை அழுதிருக்கிறார் இவர்.

     நம்மையும் கதிகலங்கச் செய்ய, கண் கலங்க வைக்க, விரைவில் வெளிவர இருக்கிறது, இந்தக் காதல் வரலாறு.

     மொழிபெயர்ப்பில் மட்டுமல்ல, உள்ளத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும், பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு உரு கொடுத்து, எழுத்தாக்கி, ஏட்டில் இறக்கி வைத்து, நூல்களாக்கியவர் இவர்.

     மதங்களும் சில விவாதங்களும்.

     கடவுள் என்னும் மாயை. 

இவர்,

கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன்

என்னும் முழக்கத்துடன்

வலைப் பூ ஒன்றினை நடத்தி வருபவர்.

மதுரை, அமெரிக்கன் கல்லூரியின்

மேனாள் பேராசிரியர்

பேராசிரியர் ஞா.சாம் ஜார்ஜ்.

இவர்தான்,


த ரு மி.

தங்களின் மொழிபெயர்ப்புகள் தொடரட்டும்,

புதுப் புது நூல்கள்

தமிழுக்குக் கிடைக்கட்டும்.


*


7 comments:

தருமி said...

zoom கூட்டத்தில் உங்களைப் பார்க்க முடியாது போயிற்று. என் அருகதையைத் தாண்டி என்னைப் பற்றி எழுதிய நல்ல சொற்களுக்கு என் மனமுவந்த நன்றி.

KILLERGEE Devakottai said...

அங்கும் படித்தேன் ஐயா மகிழ்ச்சி.
- கில்லர்ஜி

கரந்தை ஜெயக்குமார் said...

என் கணினியில் ஒளி வாங்கியோ, ஒலி வாங்கியோ இல்லாத காரணத்தால், அன்று தங்களுடன்
பேச இயலாத நிலை.
அன்றைய கூட்டத்தில் தாங்கள் பேசிய பேச்சு அருமை
ரசித்தேன்
நன்றி ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மொழிபெயர்ப்பு உலகில் தனி இடத்தைப் பெற்று வருகின்ற உங்களைப் பற்றிய திரு கரந்தை ஜெயக்குமாரின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. அவருடைய பதிவிலும் படித்தேன். உங்களைப் பற்றிய விவரத்தை அவர் தந்துள்ள விதம் உங்களைப் பற்றி அறியாதோருக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

இப்போது உடல் நன்கு தேறி விட்டது இல்லையா நலமுடன் இருக்க வேண்டுகிறேன்

தருமி said...

KILLERGEE Devakottai மதுரையில் பார்த்தது. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு.
இன்னும் திருக்கி விடப்பட்ட முறுக்கு மீசை தானா?

தருமி said...

G.M Balasubramaniam உடல் நலம் தேறி விட்டதாகவே நினைக்கின்றேன். நீங்கள் நலமுடன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருங்கள். வாழ்த்தும் அன்பும்...

Post a Comment