Wednesday, May 05, 2021

1167. அம்பேத்கரும் அவர் எழுதிய நமது அரசியலமைப்புச் சட்டமும்




*
முந்திய பதிவு: அம்பேத்கரை குறை சொல்கிறேன் ….

***


அம்பேத்கர் அவர்களை இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று இன்றும் நாம் பெருமையோடு கூறிவருகிறோம். ஆனாலும் எனது முந்தைய கட்டுரையில் - அம்பேத்கரின் தவறு தானே இது .... ?  - என்ற  ஒரு கேள்வியை எழுப்பியிருந்தேன். அத்தனை பெரிய மனிதரை எளிதில் குற்றம் சாட்டி விட்டோமோ என்றொரு எண்ணம் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது. அதற்காக வரலாற்றுப் பக்கங்கள் சிலவற்றைப் புரட்டிப் பார்க்க நினைத்தேன். அம்பேத்கரை ஒரு “சூழ்நிலைக் கைதியாகப்” பார்க்க வேண்டிய சூழல் எனக்கமைந்தது. அரசியலமைப்பு எழுதுவதில் புலமை மட்டுமில்லாமல், அதிகார பூர்வ அரசியலமைப்புக் குழு அமைப்பதற்கு முன்பே தானாகவே அவர் ஒரு புதிய அரசியலமைப்பை எழுதியுள்ளார். ஆனால் அதற்காகவே ஒரு குழு உருவாகி, அதன் தலைவராகவே ஆன போது நடந்தவைகள் அவருக்குத் திருப்தியளிக்காதவைகளாகவே அமைந்து விட்டன.

அரசியலமைப்பை எழுதும் பணியில் அம்பேத்கரும் அவரோடு சேர்ந்த ஏழு பேரும் பகலில் விவாதித்தவைகளை இரவில் அம்பேத்கர் ஆங்கிலத்தில் எழுத வேண்டும். அதாவது, அம்பேத்கரின் ஆங்கிலப் புலமைக்குக் கிடைத்த “தண்டனை” இது. ஆகவே அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குழுவினரின் முடிவை அவர் ஆங்கிலத்தில் எழுதும் பணி தான் நடந்திருப்பதாகத் தெரிகிறது. பல இடங்களில் அம்பேத்கரின் சொந்த விருப்புகளுக்கு அங்கு இடமில்லாமல் போய் விட்டது. எந்த அளவிற்கு என்றால் ”நான் பொதி சுமக்கும் கழுதையாக” அவர்கள் கொடுத்தவைகளை மனமின்றிச் சுமந்தேன்” என்று சொல்லியுள்ளார். (People always keep on saying to me, ‘Oh! you are the maker of the Constitution.’ My answer is I was a hack. What I was asked to do, I did much against my will.”) 

நமது அரசியலமைப்புச் சட்டம் பல நாட்டு சட்டங்களை முன் மாதிரியாக வைத்து எழுதப்பட்டது. பத்து வெவ்வேறு நாடுகளின் அரசியலமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டது. இங்கிலாந்தின் பாராளுமன்ற அமைப்பும், அமெரிக்க நாட்டின் பெடரல் அமைப்பும் முக்கிய இடம் பெற்றன. பி.என்.ராவ் (Sir Benegal Narsing Rau,  26 February 1887 – 30 November 1953) என்பவரின் பங்களிப்பு இதில் மிகவும் முக்கியமானது  அரசியலமைப்புக் குழுவிற்கு அவர் ஆலோசகராக பணியிலமர்த்தப்பட்டார். ஜனநாயக அரசியலமைப்பின் கட்டமைப்பிற்கும், அடக்கத்திற்கும் அவரது பங்களிப்பு பெரிது. இது எழுதப்பட்டு, பின் விவாதங்கள் மூலம் திருத்தப்பட்டு 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் நாள் தன் இறுதி வடிவத்திற்கு வந்தது. 

ஆனால் இறுதி வடிவம் வருவதற்குள் அம்பேத்கர் மிகக் கடின உழைப்பு தரவேண்டியதிருந்தது. அவர்தான் அரசியலமைப்பு எழுதும் குழுவின் தலைவர். இன்னும் ஏழு உறுப்பினர்கள் இருந்த போதும், அரசியலமைப்பில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் அம்பேத்கரின் எழுத்துகளே. குழுவின் ஆலோசனைகளின் படி இரவெல்லாம் விழித்து எழுதுவார். ஆனால் அடுத்த நாளே குழுவின் எதிர்ப்புகளும், மாற்றங்களும் நிறைய வரும். பின், மக்களவையில் எப்பகுதியைக் கொண்டுவந்தாலும் எதிர்ப்புகள் வரும்; ஒவ்வொரு முறையும் இதுவே நடந்து வந்தது. மிகக் கடினமான பாதையை அம்பேத்கர் தாண்ட வேண்டியதிருந்தது. இவ்வாறு சிரமப்பட்டு எழுதி முடித்த பிறகும் அதன் இறுதி வடிவம் அம்பேத்கருக்குப் பிடிக்காதவாறே இருந்தது. அதோடு, தாம்ஸ் ஜெபர்சன் சொன்னது போலவே, அம்பேத்கரும் ஒவ்வொரு தலைமுறையும் புத்தம்புது அரசியலமைப்புகளைக் கொண்டு வர வேண்டும்; அப்போது தான் இந்த உலகம் சோர்வின்றி, சாகாது, முழு உயிர்ப்போடு எப்போதும் இருக்கும் என்று நம்பினார். 

அரசியலமைப்புக் குழுவின் தலைவராக ஆவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பே அம்பேத்கர் தான் விரும்பிய ஒரு திட்டத்தை மக்களவைக்குக் கொண்டு வந்தார். அத்திட்டம் “இந்திய ஐக்கிய நாடுகள்” - (United States of India (U.S.I.) - என்ற அரசியலமைப்பு. இது ஏறத்தாழ அமெரிக்க அரசை ஒட்டிய அமைப்பு. மாநிலங்களுக்கு அதிக சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் அளிக்கும் அமைப்பு.  உச்ச நீதி மன்றம் முழுமையான சுதந்திரமான தனியமைப்பாக இருக்கும். அமெரிக்க சட்டங்கள் போலவே  இங்கும் அடிப்படை உரிமைகள் பேணிக் காப்பாற்றப்படும். இந்த திட்டத்தை எழுதிய அம்பேத்கரின் மொழி நடையும் கூட அமெரிக்க சுதந்திர அறிவிப்பு போலவே அமைந்திருந்தது. மேலும் அவர் ஆங்கிலேய பாராளுமன்ற முறைகள் சிறுபான்மையோருக்குத் துன்பம் தரக் கூடியதாகவும், அதனால் அவர்களின் சுதந்திரங்களும், கனவுகளும் நசுங்கிவிடும் என்றும் கூறியுள்ளார். 

ஏன் அம்பேத்கருக்கு தான் எழுதிய அரசியல் சட்டம் முழுமையாகப் பிடிக்காமல் போனது? அரசியலமைப்பு எழுதி, அதுவும் ஏற்றுக் கொண்ட பிறகும் அம்பேத்கர் தன் அதிருப்தியை பலமுறை வெளிக்காண்பித்துள்ளார். 

அரசியலமைப்புச் சட்டம் பெரும்பான்மை மக்களுக்குச் சாதகமாக இருப்பது அம்பேத்கரைத் தொல்லைபடுத்தியது. இந்துப் பெரும்பான்மையுள்ள நம் நாட்டிற்கு இவ்வித அரசு பொருந்தவே பொருந்தாது என்று எண்ணினார். ஏற்கெனவே முதலில் அவர் எழுதிக்கொடுத்த அரசியலமைப்பு இச்சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நம்பினார். 

அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து, பாராளுமன்றத்திலேயே 1953-ல் தன் விருப்பமின்மையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்: ”நான் தான் அரசியலமைப்பை உருவாக்கினேன் என்று என் நண்பர்கள் கூறுவதுண்டு. ஆனால் வெளிப்படையாகச் சொல்வதென்றால், அதை எரிக்க வேண்டும் என்றால் அதற்கான முதல் ஆளாக நானிருப்பேன். எனக்கு இந்த அரசியலமைப்பு பிடிக்கவேயில்லை; இது யாருக்கும் பொருந்தாத ஒன்று.” 

1953-ம் ஆண்டில் பி.பி.சி.க்கு கொடுத்த பேட்டியில், “ஜனநாயகம் இந்தியச் சூழலுக்குப் பொருந்தாது; ஏனெனில், பாராளுமன்ற குடியரசும், நாட்டில் நிலவும் சமூக அமைப்புகளும் ஒன்றுக்கொன்று பொருந்தாதவை.” 

பெருத்த கல்வியாளர்; பல்துறை விற்பன்னர்; ஆங்கில மொழியில் அத்தனை தேர்ச்சி; சமூக ஏற்றத் தாழ்வுகளில் தன் கவனத்தை முழுமையாகச் செலுத்தியவர்; சிறுபான்மையருக்காகத் தொடர்ந்து போராடியவர்; தாழ்த்தப் பட்ட மக்களுக்கு மட்டுமின்றி இடைநிலை சாதியினருக்கும் தன் உரத்த குரலைக் கொடுத்தவர். ஒரு வேளை அவர் முதலில் கொடுத்த அவரது அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தால் நாம் நிச்சயம் இப்போதிருக்கும் அரசியல் நிலமையை விட கட்டாயம் நல்ல நிலையை எட்டியிருந்திருக்கலாம். அல்லது முழு அரசியலமைப்பையும் அவர் மட்டுமே தனித்து எழுதியிருந்திருந்தாலும் நல்லூழ் நம் பக்கம் இப்போது இருந்திருக்கும். ஒன்றிய அரசைப் பார்த்து அஞ்சும் இன்றைய நிலை இல்லாமல் போயிருந்திருக்கும். ஆனால், அவரது ஆங்கிலப் புலமையைக்காகவே அவருக்கு முற்றும் பிடிக்காத ஓர் அரசியலமைப்பை எழுத வேண்டிய கட்டாயம் அவர் தலைமேல் விழுந்து விட்டது. கொடுத்த பணியைச் செய்து முடித்தார் - ஆனால், அவர் மனதிற்கு அது பிடித்ததாகவும் இல்லாமல் போனது.

அம்பேத்கர், தாம்ஸ் ஜெபர்சன் இருவரும் கூறியது போல் ஒரே அரசியலமைப்பை வைத்துக் கொண்டிராமல் அவ்வப்போது அதனைப் புதுப்பித்து, சீர் திருத்தி, மாற்றி எழுதினால் தான் வரும் தலைமுறையினருக்கும் நம் அரசியலமைப்பு பொருத்தமானதாகவும், பொருள் உள்ளதாகவும் இருக்கும். ஆனால் அப்படி நல்லது ஒன்று நடப்பதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை.


****


https://www.thequint.com/news/india/father-of-the-indian-constitution-dr-ambedkar-wanted-to-burn-it

https://caravanmagazine.in/law/ambedkar-disappointment-final-draft-india-constitution

https://indianexpress.com/article/research/when-ambedkar-defended-time-taken-for-drafting-constitution-4970935/

https://zeenews.india.com/news/india/br-ambedkar-did-not-write-constitution-he-just-corrected-its-language_1892708.html

https://www.thequint.com/voices/opinion/why-ambedkar-did-not-like-indian-constitution

 

 முந்திய பதிவு: அம்பேத்கரை குறை சொல்கிறேன் ….


 

 

 


 

 

 






*



No comments:

Post a Comment