Sunday, June 13, 2021

1175. ஒரு சீரியசான பதிவு



*


ஒரு வறட்டுக் கிழவனின் அநியாயப் புலம்பல்கள் -- என்று இன்னொரு தலைப்பும் வைத்துக் கொள்ளலாம்.

என் அளவுகோலில் பெரியார்:

பெரியாருக்கு எந்த கடவுளின் மீதும் கோபமில்லை. எந்த சமயத்தின் மீதும் வெறுப்பில்லை. ஆனால் தான் இருக்கும் சமூகத்தில் 3% விழுக்காடு இருக்கும் மக்கள் 97% அளவு அதிகாரப் பதவிகளில் இருப்பதைப் பார்த்து ஒரு நேர்மையான சமூகக் கோபம் கொண்டார். இதை அடைய மனிதர்களை இனவாரியாகவும், படிநிலையிலும் 3% மக்கள் நிலை நிறுத்தி வந்துள்ளதையும், அதற்காகப் பன்னெடுங்காலமாக இந்து சமயத்தைப் பயன்படுத்தி வந்ததையும் பார்த்து பெருங்கோபம் கொண்டார். மதம் சாதி பேதங்களைத் தாங்கிப் பிடிப்பதைப் பார்த்து இந்து மதம் மீது கோபம் கொண்டார். மனிதர்களை அழிப்பது தவறல்லவா, ஆகவே சாதிகளை அழிக்க மதத்தின் மீது தன் ஆயுதங்களைத் திருப்பினார். கடவுள் மறுப்பு இந்தக் கோபத்தில் தான் விளைந்தது. His atheism is just a bye-product of his social activism.

என் அளவுகோலில் அம்பேத்கர்:

பெரும் அறிஞர். அளப்பறிய முறையில் கல்விக் கடலில் மூழ்கியவர். தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை அவரை கவலைக் கடலிற்குள் தள்ளியது. மதங்களை வைத்து தங்களைப் பெரும் புண்ணிய சாதிகளாகக் காட்டிய மக்களின் மீது நம்பிக்கையிழந்தார். அரசியலில் தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த வித உரிமையும், பங்கும் பெறாமல் இருப்பதை அறிந்து, அந்தக் குறையை நீக்க தன் வாழ்நாளையே அதற்கு ஆகுதியாக்கினார்


அரசியல் சட்டத்தில் இந்த மக்களின் விடுதலைக்காகச் சில விஷயங்களையாவது உள்ளடக்கி விடவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தனக்குப் பிடிக்காவிட்டாலும் வேறு வழியின்றி, ”சுமை தாங்கும் கழுதைபோல் தனக்குப் பிடிக்காதவைகளையும் சட்ட அமைப்புக் குழுவின் அழுத்தத்தினால் தாங்கிப் பிடித்து அரசியல் சட்டத்தை தலைமை தாங்கி எழுதி முடித்தார். ஒன்றிய அரசிற்கு அத்தனை அதிகாரங்களையும் இந்திய அரசியல் சட்டம் தந்துள்ளது. வெறுப்போடு அதை எழுதி முடித்தார். இச்சட்டத்தை எறிக்க வேண்டுமானால் அதன் முதல் ஆளாக நானிருப்பேன் என்று சொல்லுமளவிற்கு அவருக்கு அரசியல் சட்டத்தின் மேல் அத்துணை வெறுப்பு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏதாவது அரசியல் சட்டத்தின் மூலம் சில சலுகைகளையாவது பெற்றுத் தரவேண்டுமென்பதற்காக சட்ட ஆலோசனைக் குழுவின் வற்புறுத்தலில் அரசியல் சட்டக்குழுவின் தலைவராகச் செயல்பட்டுள்ளார்.

 

இந்திய அரசியல் சட்டம் பற்றி புவியரசன் தமிழ் இந்துவில் எழுதிய 13 கட்டுரைகளின் தொகுப்பாக ஒரு கட்டுரையும், அதற்கு மேலும் நான் தேடிக் கண்டடைந்தவைகளையும் வைத்து இன்னொரு கட்டுரையும் எழுதிப் பதிப்பித்தேன். அவைகளின் தொடுப்பு:

https://www.facebook.com/sam.george.946/posts/10222506395001893

 

https://www.facebook.com/sam.george.946/posts/10222518960156014

 

ஆனால் இதில் சோகம் என்னவெனில், ”அம்பேத்கரின் தவறு தானே இது …?” என்றொரு தலைப்பைக் கொடுத்தும், இதை ஒரு தடவை கூட வாசிக்காமலேயே என் முகநூல் பதிவில் பலர் பதில் கொடுத்தனர்; விவாதித்தனர்.  என்னைப் பொறுத்தவரை அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக விட்டுக் கொடுத்திருந்தாலும், நமக்குக் கிடைத்த அரசியல் சட்டத்தின் குறைபாடுகளுக்கு அவரும் ஒரு முக்கிய காரணம் தான் என்பது என் கருத்து. மாநில அரசுகளுக்கு எவ்வித உரிமைகளும் கொடுக்காமல் அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசின் கைகளில் தான் கொடுக்கப்பட்டுள்ளன.

*******

 

முன்பிருந்த காங்கிரஸ் கட்சியினர் அரசியல் சட்டங்கள் இடம் கொடுத்தும் மாநில அரசுகள் மீது எதேச்சதிகாரம் செலுத்தவில்லை. ஆனால் இப்போது நமக்கு வாய்த்திருக்கும் ஒன்றிய அரசு சட்டத்தினைக் கரைத்துக் குடித்து விட்டார்கள் போலும். மாநிலங்களை ஒதுக்கி வைத்து விட்டு, தங்களின் முழு அதிகாரத்தையும் சரியோ தவறோ நன்கு பயன்படுத்துகிறார்கள். பாசிச அரசு என்பதற்கான முழு உண்மையையும் எடுத்து வைக்கும் அளவிற்கு அவர்களது அடக்குமுறைகளும், அழுத்தங்களும் மாநிலங்களைத் தடுமாற வைத்துக் கொண்டுள்ளன. கொரோனாவிற்கு மருந்து வாங்குவதில் அவர்கள் காட்டிய மெத்தனமும், அம்மருந்துகளுக்கு வரி விதிப்பில் அவர்கள் முதலில் காட்டிய முரட்டுத்தனமுமே இதற்கான அத்தாட்சி.

 

கொரோனாவாவது இன்று வந்து நாளை போகும் வியாதி. (ஒரு நம்பிக்கை தான்!) ஆனால் காலா காலத்திற்கும் நம் மீது ஏறி நம்மை மிதிக்கும் கல்விக் கொள்கைகள் பற்றிய அச்சம் எனக்கு மிகுதியாக உள்ளது. ஆனால் இன்றைய இளம் சமூகத்தினருக்கு இதைப் பற்றிய அறிவும் இல்லை; ஆர்வமும் இல்லை; அதைவிட அச்சமும் இல்லை. சரியப்பா … இது தான் விஷயம் என்று வெள்ளித் தட்டில் வைத்துக் கொடுத்தாலும் அதை வாசிக்க மனதில்லை.

 

என் அடுத்த கட்டுரை கல்விக் கொள்கை பற்றியது. சென்ற வாரத்தில் பழைய பல்கலை துணைவேந்தராயிருந்த பாலகுருசாமி, இக்கல்வித் திட்டம் வாராத வந்த மாமணி என்று போற்றியிருந்தார். வாசித்த எனக்கு அதிர்ச்சி. என்ன எதிர்பார்த்து அவர் அக்கட்டுரை எழுதிருந்தாரோ தெரியவில்லை. நல்ல வேளையாக இன்று இன்னொரு துணைவேந்தர் அதற்குப் பதிலாக நீண்டதொரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கமும் எனக்கு இன்று கிடைத்தது. நீள கட்டுரை … அதை எங்கே நம் மக்கள் வாசிப்பார்கள் என்று நினைத்து சில முக்கிய வரிகளை அடிக்கோடிட்டு வைத்துள்ளேன். அதை நாளை பதிவிடுகிறேன்.

 

Uncle's Tom’s Cabin என்றொரு ஆங்கில புதினம் ஒன்று வெளிவந்ததாம். ஒரு ஆப்ரிக்க அடிமையின் வரலாறு அது. அந்த புதினம் அமெரிக்க உள்நாட்டுப் போரிற்கு ஒரு வித்தாக இருந்ததாம். அடிமைகளை ஒழிக்க நடந்த போரிற்கான வலுவான காரணங்களில் அந்த புதினமும் ஒரு காரணம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். போரிற்கான ஒரு வலுவான அடித்தளம் இப்புதினம் அமைத்துக் கொடுத்தது என்கிறார்கள். புவியரசன் நம் அரசியல் சட்டம் பற்றி எழுதிய கட்டுரைத் தொகுப்பு எனக்கு அப்[படி ஒரு விழிப்புணர்ச்சியைக் கொடுத்தது. 


புவியரசன் சுட்டிக் காட்டிய அரசியல் சட்டத்தின் குறைபாடுகளுக்கு அம்பேத்கரையும் காரணமாகக் காட்டி என் இரண்டாம் கட்டுரையை எழுதினேன். இப்போது கல்வித்திட்டம் பற்றிய ஒரு கட்டுரை மேலும் என்னை அச்சுறுத்தியது. அதை உங்கள் முன் படைக்கின்றேன் … படைக்கின்றேன் என்ன படைக்கின்றேன். உங்கள் முன் “வைக்கின்றேன்”. படித்து விழிக்க மாட்டார்களா என்று முட்டாள் தனமான ஆசை எனக்கு. அது நடக்கப் போவதில்லை. யாரும் இந்தக் கட்டுரைகளை சீந்தவும் போவதில்லை என்று தெரியும். இருந்தும் ஒரு கிழவனின் ஆசை இது.

 

ஆனாலும் இந்தக் கிழவன் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். இனி இது போன்ற சமூகநலன் கருதி தொடர்ந்து எழுதுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.  இது இளைஞர்களையும் அவர்களின் பிள்ளைகள் வாழ்வையும் தாக்கும் கொரோனா. அவர்களுக்கு இதைத் தெரிந்து கொள்ள ஆர்வமோ, அதைப் பற்றிய சீரிய சிந்தனையோ இல்லையென்றால் .. எனக்கென்ன கவலை!

 

என் காலம் நல்லபடியாக முடிந்து போனது குறித்த மகிழ்ச்சியோடு … பேசாமல் நாலைந்து சினிமா பார்த்து, வீடியோ போடுவது … இல்லையா  கணினியில் ஃப்ரி செல் விளையாடுவது என்று நேரம் கழிப்பது என்று முடிவெடுத்துள்ளேன்.

 

இனி ‘கிழவனின் புலம்பல்’ என்ற தலைப்பில் ஏதும் எழுதக்கூடாது; …”வேடிக்கை மட்டும் பார்ப்பது” என்பது என் முடிவு. இது பிரசவ வைராக்கியமாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

 





*


No comments:

Post a Comment