Saturday, December 04, 2021

1241. இசை ராஜா




*

என்னமோ போங்க … ஏதோ போகிற போக்கில் ஒரு பாட்டைக் கேட்டோம்னு இருக்குற ஆளுதான் நான். இசையில் நானொரு ஞான பூஜ்யம். ஸ்ருதி, தாளம், அப்படி இப்படின்னு நிறைய சொல்லுவாங்க. எல்லாமே என் தலைக்கு மேல் காற்றாகிப் போயிடும், அப்படிப்பட்ட ஒரு ஞான சூன்யமான என்னை இறுக்கிப் பிணைத்தது நம்மாளு ராஜாவின் பாட்டுகள் தான். எம்.எஸ்.வியைக் கேட்டுதான் வாலிப வயது போனது. இனிமை தான். அதிலும் மிகப்பல பாட்டுகள் கட்டிப் போட்டதுண்டு. ஆனால் பின்னால் இந்த ராசா வந்த பிறகு ‘அவர்’ கொஞ்சம் பழைய ஆளாகி விட்டார். இவரது இசை மேல் அப்படியோர் ஈர்ப்பு. விகசிப்புன்னு ஒண்ணு சொல்வாங்களே .. அது இப்படியா இந்த ஆளு பாட்டைக் கேட்டு வரணும். வந்திச்சு… என்ன பண்ணச் சொல்றீங்க …

வெறுமனே இப்படியாகப் போய்க்கொண்டிருந்த நாளில் கொஞ்சம் சமீப காலத்தில் யூ ட்யூபில் ஏதாவது கேட்டுக் கொண்டே வேலை செய்ய ஆரம்பித்த போது பல இசைச் சுரங்கங்கள் காதில் விழுந்தன. இசையை அக்குவேறு ஆணிவேறு என்று பிழிந்தெடுக்கக் கூடிய ஆட்கள் ராசாவின் பாட்டை அலசும் விதத்தைப் பார்த்தேன்.Class recognizes class என்பார்கள். அது போல் பல இசை வல்லுநர்கள் ராசாவின் பாட்டை ஆய்வு செய்ததைப் பார்த்து வியந்தேன். ஒரு வேளை ராசா a musician for musicians என்று தோன்றியது. கற்றோரைக் கற்றோரே காமுறுவர் என்பார்களே அது போல் பெரிய இசைஞானக் கலைஞர்கள் ராசாவை வியந்தேற்றுவதைப் பார்க்கும் போது ஏற்கெனவே மேரு மலையாக இருந்தது இன்னும் அதிகமாக உயர்ந்தது.

இன்றைக்குப் பாருங்களேன். ’நமது சினிமா’ என்றொரு வாட்சப் க்ரூப். ஒரு ரஜனியின் விசிறி ஆரம்பித்ததால் தானோ என்னவோ .. ரஜினியின் ரசிகர்கள் …ம்ம்.. அப்படி சொல்லக்கூடாது … ரஜினியை ஆராதிப்போர் ... பெருங்கூட்டமாக அங்கே இருந்தார்கள். ஆராதனைன்னா அப்படி ஒரு ஆராதனை. எல்லாம் மெத்தப் படித்த ‘வயசான பசங்க’ தான். என்னால் உண்மையிலேயே தாங்க முடியவில்லை; தங்கவும் முடியவில்லை.. வெளியே ஓட பல முறை நினைத்தும் நம்மை அதில் சேர்த்தவருக்காகத் தங்கியிருந்தேன். ஆனாலும் அவ்வப்போது அத்தி பூத்தது போல் நல்ல சில விஷயங்கள் காதில் விழும். இன்று அப்படி ஒரு பதிவு வந்தது.

உள்ளதே ‘குணா’என்றாலே எனக்குக் கொஞ்சம் பதற்றம் வரும். அதிலும் சேட்டனய்யா பாடும் அந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் முதன் முதலாகப் படத்தில் நான் கேட்ட போது ஜிவ்வென்று முகத்தில் ஒன்று கொஞ்சித் தீண்டியது போலிருந்ததே … அது நினைவுக்கு வந்து விடும்.; அந்தப் பாட்டைப்  பற்றி ஜி, ராமானுஜன் என்ற மனநல மருத்துவர் உயிர்மையில் தொடராக எழுதிய கட்டுரைகளில் இந்தப் பாட்டு பற்றிய பதிவு கண்ணில் விழுந்தது. வாசித்ததும் கண்ணில் நீரும் வந்தது.

அணுஅணுவாக ரசிப்பது என்பார்களே .. இந்த இசைவித்தகர்கள் எல்லோருமே அதே போல் ராசாவின் பாட்டை அப்படி வினாடிக்கு வினாடி ரசிக்கிறார்கள். ரசிப்பது மட்டுமல்லாமல் அவரின் இசை மேதாவிலாசத்தைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். அவர்கள் கொண்டாடித் தீர்ப்பது மட்டும் எனக்கு தெரிகிறது. அவைகள் புரியாவிட்டாலும் அவர்களின் பாராட்டு மிரட்டிப் போட்டு விடுகிறது. இசைக்கும் எனக்கும் உள்ள தூரத்தை நினைத்து கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அதுவும் தெரிந்திருந்தால் இன்னும் அதிகமாக ரசிக்க முடியுமோவென்று தோன்றுகிறது.

இவர் மட்டுமல்ல வேறு சிலரின் யூ ட்யூப் காணொளிகள் நிறைய என் கண்ணில் பட்டன. அவைகளில் சிலரின் காணொளித் தொடுப்புகளைக் கொடுத்திருக்கிறேன். கேட்டுப் பாருங்களேன்.

ராசாவிடம் ஒரே ஒரு வருத்தம். How to name it?, Nothing but wind போன்ற இசைப் பொக்கிஷங்களை இன்னும் நிறைய தந்திருக்காமல் அப்படியே விட்டு விட்டாரே என்ற கவலை தான். (ஜெயகாந்தனிடம் ஏன் எழுதுவதைநிறுத்தி விட்டீர்கள் என்று நேரடியாகக் கேட்க வாய்ப்பு ஒன்று கிடைத்தது.) இப்போது வந்த ராசாவின் படங்களில் சைக்கோ படப்பாட்டுகள் பிடித்தன. சினிமா பாட்டு திசை மாறிவிட்டது. நீங்கள் சினிமாவுக்குப் பாட்டு போடுவதை விட்டு விட்டு, வரும் பரம்பரைக்குக் காலமெல்லாம் நிற்கும் இன்னும் சில இசைக்கோர்வைகளை விட்டுச் செல்லுங்களேன் என்று இவரிடம் கேட்க ஆசை ……

****

Shri Sriram



Gopal Sapthaswaram - Rhythms of Raja 


இன்னும் பலப் பல ....








*








No comments:

Post a Comment