Friday, July 15, 2022

1173. என் படப்பிடிப்பு ... ஆதி காலத்தில் ... டாலருக்கு எட்டு ரூபாய் காலத்தில் எடுத்தது



*


ஒரு டாலருக்கு 80 ரூபாய் ஆகப் போகிறதாம்.

இது ஒரு பழைய நினைவை கிளப்பி விட்டிருச்சிர்ரா
, பேராண்டி!

கூகுள் ஆண்டவரைத் தேடிப்போய் எப்போது ஒரு டாலருக்கு 8 ரூபாய் இருந்தது என்று பார்த்தேன். 1974. சட சடவென்று பழைய நினைவுகள். என்னோடு வேலை பார்த்த  ஒரு பெரிய சீனியர் அமெரிக்கா போய் பல வருடங்கள் இருந்து விட்டு கல்லூரி திரும்பியிருந்தார். புகைப்படக் கலையில் திறமை வளர்த்துக் கொண்ட தமிழ்ப் பேராசிரியர். அவர் தன்னுடைய் நிக்கான் காமிரா, அதனோடு பல லென்ஸ் எல்லாம் வைத்திருந்தார். இவைகளோடு மமியா – MAMIYA  Sekor SLR காமிரா ஒன்று வாங்கி வந்திருந்தார். அதுவ்ரை நான் ஒரு TLR பொட்டியோடு போராடிக் கொண்டிருந்தேன்.

அவர் அமெரிக்காவில் அந்தக் காமிராவை 880 டாலருக்கு வாங்கி வந்திருந்தார். ஒரே ஒரு தடவை கீழே போட்டு ஒரு சின்னப் பள்ளம் ஒன்றும் இருந்தது. அதை விலைக்குத் தர இசைந்தார். எனக்காக 800 டாலர் விலை போட்டுக் கொடுத்தார். டாலருக்கு 8 ரூபாயும் சில்லறையும் இருந்தது. அதையும் 8 ரூபாய் என்று கணக்குப் போட்டு ....800 x 8 =

அப்போதெல்லாம் 50 அடி பில்ம் வாங்கி நாங்களே பழைய டப்பாவிற்குள் ஐந்தடி ஐந்தடியாக வெட்டி லோட் பண்ணி வைத்து படமெடுத்துக் கொண்டிருந்த காலமது. என்னிடம் அப்போது ஐந்தடிக்குக் குறைவாக ஒரு “துண்டு” பில்ம் இருந்தது. அதைப் புதுப்பெட்டியில் போட்டு என் மூத்த மகளை .. அப்போது அவளுக்கு அநேகமாக 3 வயதிருந்திருக்கும் ... படம் எடுத்தேன். மொத்தமே ஏழெட்டு படம் எடுத்திருப்பேன்.



அடுத்த நாள் கல்லூரியில் போய் பில்மை டெவலப் செய்தேன். 

ஹா ... பின்னிட்டேன் போங்கோ. எல்லா படமும் அத்தனை அழகாக இருந்தன. மகள் ஒரு அயல்நாட்டுச் சட்டை போட்டிருந்தாள். கொஞ்சம் கனமான, உல்லன் மாதிரியான துணி. படத்தில் அந்தத் துணியின்  texture அத்தனை அழகாக வந்திருந்தது. க்ளோசப் படம் எடுக்கும் போது கண்களை வைத்து போகஸ் செய்ய வேண்டுமாமே ... அதனால் கண்களும் அதே லெவலில் அவளது உடையும் அப்படியே மிக அழகாக போகஸ் ஆகியிருந்தது.

அசந்து விட்டேன் போங்கள் ... ஆனால் அதன் பிறகு அத்தனை நல்ல படம் எடுத்தேனா என்பது இன்று வரை ஒரு பெரிய கேள்விக்குறி .......

அந்தப் படத்தை இங்கே போடலாமென்று அதைத் தேட ஆரம்பித்தேன். காக்கா தூக்கிட்டு போயிருச்சு போலும் ... காணோம். அதனால் அந்த சமயத்தில் எடுத்த மூன்று படத்தைப் போட்டிருக்கிறேன்.  ஒன்று (அந்த வயதில் மட்டும்)ஒழுங்காக போஸ் கொடுத்த பெரிய மகள்; இரண்டாவது காமிரா கொடுத்த நண்பரிடம் ஒரு டெலிலென்ஸ் ஓசி வாங்கி, ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஒருவரை அவரிடம் அனுமதி வாங்கி எடுத்த படம் ஒன்றையும் இங்கே போட்டிருக்கிறேன்.


பழைய நினைப்புடா ... பேராண்டி !





*


No comments:

Post a Comment