Thursday, October 20, 2022

1189. இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம் - 1




                                                      

*


ஸ்மார்த்தா பிராமணர்களின் வழக்கு பற்றிய செய்தி ஒன்றினை ஓரிரு வரிகளுடன் என் முகநூலில் இரு நாட்களுக்கு முன்பு போட்டிருந்தேன். அது எதற்காகப் போட்டேன் என்று நிச்சயமாக உங்களில் யாருக்கும் புரியவில்லை. அதைப் பார்த்த நாலைந்து பேரில் ஒருத்தரு திட்டுனாரு... இன்னொருத்தர் அது யாருங்க smarta Brahmins அப்டின்னு கேள்வி கேட்கிறாரு.
வாத்தியாரா இருக்கும் போது புரியாத பசங்களுக்கு notes கொடுப்போம்ல ... அது மாதிரி உங்களுக்கும் நீளமா ஒரு விளக்கத்தை ஒரு நூலிலிருந்து மேற்கோளாகக் கொடுக்கிறேன். (யாரும் வாசிக்க மாட்டீங்க... இருந்தாலும் என் பணியைச் செய்து விடுகிறேன். அப்படித்தானே கீதையில சொல்லி இருக்காம்!)
படம் போட்டிருக்கிறேனே .. அந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்ததும் அது என்னைக் கெட்டியாகக் கட்டிப் போட்டது. அதில் வரும் முதல் சில பக்கங்களை உங்களுக்கு ஒரு விளக்கமாகத் தந்திருக்கிறேன், அதுவும் ஏன் நான் அதை இந்தக் கால கட்டத்தில் தந்திருக்கிறேனென்று புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்....புரிந்தாலும் என்ன கிழித்து விடப் போகிறீர்கள்!!!)
1850களில் தான் ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக ... அனைத்து ஜாதி மக்கள் கூட்டத்தையும் மொத்தமாக ஒரே பெயரால் அழைப்பதற்கு “இந்து” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. .. இப்போது ஆங்கிலேயர்கள், ‘மிலேச்சர்களையும்’ தங்களோடு ‘இந்துக்கள்’ என்று அழைப்பதைப் பார்ப்பனத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பெயர் தங்களுக்குத் தேவையில்லை என்ற நிலையை எடுத்தார்கள்.
விஷ்ணுபுவா பிரம்மச்சாரி போன்றவர்கள் “இனி ‘இந்து தர்மம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. ‘வேதோக்த தர்மம்’ என்பதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றார். தயனாந்த சரஸ்வதி, ‘ஆரிய தர்மம் அல்லது சனாதன சர்மம்’ என்று அழைக்க வேண்டுமென்றார்.
பார்ப்பனர் அல்லாத மக்களும் தங்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தப் படுவதை ஏற்க மறுத்தார்கள்.
1911ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக கமிஷனர் எட்வர்ட் ஆல்பர்ட் கெய்ட் இதை முடிவு செய்ய முயற்சியெடுத்தார் . ... இந்தியா முழுக்க இருந்த பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தது. மற்றவர்கள் அவ்வாறு பொருந்திப் போகவில்லை. அவர்கள் அனைவரையும் எவ்வாறு ‘இந்து’ என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அடைப்பது என்ற நியாயமான கேள்வியை கெய்ட் எழுப்பினார்.
அதுவரை “மிலேச்சர்களை இந்துக்களாக சேர்த்துக் கொள்ள முடியாது” என்று சொல்லிக் கொண்டிருந்த பார்ப்பனத் தலைவர்களுக்கு ஆங்கிலேயர்கள் உருவாக்கி இருந்த சட்ட சபைகளும் பதவிகளும் சில கணக்குகளைப் புரிய வைத்தன. அனைத்து ஜாதிகளையும் இணைத்து ‘இந்து’ என்ற அடையாளச் சொல்லுக்குள் கொண்டு வருவது தான் இனி வரும் நாட்களில் தங்களுக்கான அரசிய்ல் சலுகைக்கு உகந்ததாக இருக்கும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். மக்கள் தொகையில் மூன்று சதவிகிதத்திற்குள் மட்டுமே இருக்கும் தங்களை மட்டும் ‘இந்து’ என்று ஒதுக்கிக் கொண்டால் மற்ற ஜாதியினர் ஒன்று சேர்ந்து பெரும்பான்மை ஆகிவிடுவார்கள். .... அவர்களை இந்துக்களாக அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கும் சேர்த்து தாங்களே தலைமை வகிக்கக் கூடிய ‘இந்துப் பெரும்பான்மை’ (Hindu Majoritarianism) உருவாகிவிடும் என்று முடிவு செய்கிறார்கள். அதுவரை நாட்டின் தலைவர்களாக அறியப்பட்டவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே! .. எனவே காங்கிரஸ் மற்றும் இந்து மகா சபை இரண்டையும் சேர்த்து அனைவரும் இந்துக்களாகி விடுகின்றனர்.
இதற்காகக் கடுமையாக உழைத்தவர் திலகர். அவரைக் கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா பூலே. இப்போது காங்கிரஸ் சார்பாக அந்தச் செயலை ‘சுதந்திரப் போராட்டம்;, ‘தேச ஒற்றுமை’ என்ற பெயர்களில் கச்சிதமாக ச் செய்து முடித்தவர் மோகந்தாஸ் காந்தி.
காந்தியின் இத்திட்டத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் டாக்டர் அம்பேத்கரும், பெரியாரும் தான். அதனால தான் வட்ட மேசை மாநாட்டில் ‘தீண்டத்தகாத மக்கள் இந்துக்கள் அல்லர்’ என்று அறிவித்த டாக்டர் அம்பேத்கரை, எந்த ஓர் அரசியல் அறமும் அற்று, தனக்கு ‘ம்காத்மா’ என்று ஒரு பெயர் இருப்பதையும் மறந்து, முரட்டுத்தனமாக எதிர்த்தார் காந்தி.
டாக்டர் அம்பேத்கரின் தனித்தொகுதி கோரிக்கை பற்றி பிரதமர் ராம்சே மெக்டோனால்டுக்கு எழுதிய கடிதத்தில் “இதனை இந்து மதத்தை சீர்குலைக்க வந்த நஞ்சாகவே பார்க்கிறேன்” என்று காந்தி எழுதுகிறார்.
..... 1932ஆம் ஆண்டு தீண்டத்தகாத மக்கள் தனித் தொகுதி கேட்பது பற்றிய தன் கருத்தை வல்லபாய் பட்டேலிடம் அவர் சொன்னதைக் கேட்க வேண்டும்: “தனித்தொகுதியை அனுமதித்தோம் என்றால் இந்த தீண்டத்தகாத போக்கிரிகள் (untouchable hoolgans) சேர்ந்து கொண்டு கலகம் செய்து, ஜாதி இந்துக்களைக் கொன்று குவித்து ரத்த காடாக்கி விடுவார்கள்”.
இதுதான் இந்த நாட்டின் அரசியல் வரலாறு. ‘இந்து’ என்பதற்கு பார்ப்பனர்களைப் பொறுத்தவரை “அரசியலில் பெரும்பான்மை” என்பதைத் தவிர வேறு அர்த்தம் கிடையாது.



*

No comments:

Post a Comment