Wednesday, May 31, 2023

1225. பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு .....



*



இன்று காலை ஒரு காட்சி.

ஒரு தாய் தன் கைப்பிள்ளையைக் கையில் ஏந்தி நிற்கிறார். கொஞ்சம் அறிவுத் திறன் குறைந்த குழந்தை போலும். அவர்களுக்கு எதிரில் நான் முன்பே சொன்ன உடல் நலம் குறைந்த பெண். ஆடி ஓடித் திரிந்த குழந்தை ஆறு ஏழு வயதிற்குப் பிறகு நடக்க முடியாமல் போன பெண். நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். அவள் பின்னால் அவளது தாய்.

கைப்பிள்ளை வைத்திருந்த தாய் தன் பிள்ளையிடம் எதிர்த்தாற் போலிருக்கும் பெண்ணைக் காண்பித்து, ‘ இதோ பார், அக்கா...” என்கிறார்கள். குழந்தையிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்ணும் அந்தக் குழந்தையை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இவர்களைத் தாண்டிப் போகும்போது இந்த நிகழ்வைப் பார்த்தேன். யாருக்காக வருந்துவது என்பதே தெரியவில்லை. எந்த உணர்வும் இல்லாத குழந்தையைப் பார்த்துக் கவலைப்படுவதா? இளம் வயதிலும் நடக்க முடியாத அந்தப் பெண்ணைப் பார்த்தா? அல்லது குழந்தைகளையும் அதனால் ஆன சோகங்களையும் மனதில் தேக்கி வைத்திருக்கும் இரண்டு அம்மாமார்களையும் நினைத்து வருந்துவதா?

தெரியவில்லை ...

Absurd philosophy என்று Albert Camus சொன்னவைகள் நினைவுக்கு வந்தன. வாழ்க்கையென்னும் ஓடம் .. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ... என்று பல பாடல்களும் நினைவில் ஆடின.

இத்தனை துயரத்தில் உழலும் மக்கள் நித்தமும் கடவுள் முன்னால் நின்று வேண்டிக் கொள்வது எனக்கு சில சமயத்தில் அர்த்தமில்லாததாகவும், சில வேளைகளில் பாவம் போலும் தோன்றுகிறது. எது சரியென்று எனக்கும் தெரியவில்லை. எப்படி இந்த நம்பிக்கை? என்ன கிடைக்கிறது என்று இந்த நம்பிக்கை. தெரியவில்லை.

Camus சொன்ன philosophical suicide சரியா என்றும் புரியவில்லை. எல்லாமே அபத்தமாகவும், குழப்பமாகவும் தெரிகிறது. கடவுளை நம்புவதும் இது போன்ற ஒரு அபத்தம் என்றே தெரிகிறது.

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு ..... 

என்ன வாழ்க்கை இது? புரிந்தால் சொல்லுங்கள்...

புரிந்து கொள்கிறேன்.

 


No comments:

Post a Comment