Thursday, July 25, 2024

இறைநம்பிக்கையற்ற இறையாளர்கள்



*

காஞ்சிபுரம் தேவநாதன் பற்றி அனைவரும் அறிவோம். கோவிலுக்குள், அதுவும் கர்ப்பக் கிரகத்திற்குள் வைத்து பாலியல் தவறுகள் செய்துள்ளார் என்பதும் அனைவரும் அறிவோம். கர்ப்பக் கிரகத்திற்குள் இருந்த நாட்காட்டியும் அவர் எடுத்த வீடியோவில் பதிவாகி, எங்கு நடந்து என்பதையும் உறுதி செய்துள்ளது.

கடவுளுக்கு அருகில் இருந்து சேவகம் செய்வதே அவரது தொழில். சாதி அவருக்கு அந்த வசதியை அளித்துள்ளது. பொதுவாக இவர்கள் வேதம் அறிந்து, பக்தியோடு தொழில் செய்ப்வர்கள் தான். அதனாலேயே அந்த சாதியினருக்கும், அவர்களது தொழிலுக்கும் மக்கள் பெரும் மரியாதை தருகிறார்கள். இந்தப் புரோகிதர்கள் அனைவரும் இறை நம்பிக்கை கொண்டிருப்பவர்கள். இறை நம்பிக்கையுள்ளவர்களுக்கு இறைவன் மீது அச்சமும் இருக்கும். தப்பு செய்தால் தண்டனை தருவான் என்றே நம்புக்கையுள்ளவர்கள் ஆழமாக அஞ்சுகிறார்கள்.

ஆனால் இவரோ அந்த அச்சமேதுமின்றி, ஆண்டவன் உறையும் இடமான கரப்பக் கிருகத்தின் உள்ளேயே – வேறு சாதியினர் யாரும் உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லும் புண்ணிய அறைக்குள்ளேயே – பாலியல் தவறு செய்கிறார். காமம் கண்ணை மறைத்தது என்று நினைக்கின்றனர், ஆனால் என்னைப் பொறுத்த வரையில் அவருக்கு இறை நம்பிக்கை சுத்தமாகக் கிடையாது; அதனால் இறை மீது எந்த பயமோ அச்சமோ சுத்தமாக இல்லை. சிறிதேனும் அச்சமிருந்தால், ஆண்டவன் கண்டிப்பான் என்ற அச்சமிருந்தால் தன் தவறுகளை அந்த இடத்திலாவது செய்யாதிருந்திருப்பார். அந்த அச்சமில்லை; ஏனெனில் இறை நம்பிக்கை இல்லை.

கடவுள் மீது நம்பிக்கையில்லாத ஒருவர் தனது வேலையாக இறைப் பணி செய்கிறார். காசு சம்பாதிப்பதற்கான வழியே அவரது கடவுள் சேவை. அது நம்பிக்கையால் எழுவதல்ல.

என் கருத்தின்படி தேவநாதன் ஒரு இறை நம்பிக்கையற்றவர்; அதனால் தான் அவர் கோவில், புனிதம், புனித இடம் என்று எதற்கும் அஞ்சாமல் அந்தத் தவறை கோவிலின் உள்ளேயே செய்ய முடிந்தது.

****

அடுத்து கிறித்துவ மதத்திலிருந்து ஒரு சான்று:

தினகரன் குடும்பம் பற்றி அறியாதவர் யார்? சமீபத்தில் கூட இரண்டாம் தினகரனின் மனைவி அழுது பிரார்த்தித்து கார், வீடு வாங்கியதைப் பார்த்து அதிசயித்தோம். நாம் சொன்னதை நம்ப ஆட்கள் இருக்கிறார்கள் என்பதால் பல சொந்தக் கதை .. சோகக் கதையை எடுத்து விட்டார்.  உண்மையில் கடவுள் நம்பிக்கையும், இறையச்சமும் இருந்தால் ஒருவரால் இப்படி ஒரு கதையை எடுத்து விட முடியாது. அவருக்கு கடவுள் நம்பிக்கையிருந்திருந்தால் இப்படிப் பச்சையாக ஒரு பொய்யை வெளியில் சொல்ல முடியாது. கடவுள் நம்பிக்கை, இறைத்தண்டனை என்ற அச்சமிருப்பவர், மக்கள் நம்பி காணிக்கை போடுவார்கள் என்றாலும், கடவுள் தண்டிப்பாரே என்று அச்சப்பட்டால் இப்படி பொய் சொல்ல முடியுமா? தேவநாதன் போலவே இவரும் இவர் குடும்பத்தினரும் பணத்திற்காக, தாங்களே  நம்பாத இறையைப் பற்றிப் பேசி காசு பார்க்கிறார்கள்.

இவர் மட்டுமல்ல; சீனியர் தினகரன் தன்னை எப்படி ஏசு தன் கரத்தில் ஏந்தி அவரை மோட்சத்திற்கு அழைத்துச் சென்றாரெனவும், அதன்பிறகு அடிக்கடி தான் மோட்சம் சென்று ஏசுவோடு பேசிவிட்டு வருவதாகவும் காணொளி வெளியிட்டுள்ளார். (பராசக்தி வசனம் தான் நினைவுக்கு வருகிறது; கடவுள் எங்கேடா பேசினார்....) பைபிளில் பல இடங்களில் கடவுள் மனிதர்களோடு direct contact-ல் இருந்திருக்கிறார். பின்பு இப்போதும் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் மாதா தன் முன் தோன்றிப் பேசியதாகக் கூறி வருகிறார்கள். ஆனாலும் இதுபோன்ற பல காட்சிகளை போப், திருச்சபை மறுத்து வருகின்றன. ஆனால் இங்கே நம்மோடு வாழ்ந்த ஒரு மனிதர் அடிக்கடி நேர்முகமாக கடவுளைத் தரிசித்து, பேசி வருகிறேன் என்று கூசாமல் கூறி வருகிறார். பக்த கோடிகளும் நம்புகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இதுவும் காசு சம்பாதிக்க போடும் ஒரு வேஷம்.

தினகரனுக்கு “The fear of the Lord is the beginning of knowledge…என்பது தெரியாதா; தெரியும். ஆனாலும் இன்னொன்றும் தெரியும். கடவுள் என்ற கருத்தே தவறு என்பதும் தெரியும். கடவுள் பெயரைச் சொல்லி காசு சம்பாதிக்கலாம்; ஆனால் கடவுள் என்று ஒன்றில்லை என்பதும் அவருக்கும் தெரியும். அதனால் தான் இத்தனை தைரியமாக மோட்சம் போனேன் .. வந்தேன்.. என்று கதை சொல்கிறார். அவர் மகனோ Build the Prayer Tower, God will build your house என்று அவர் வீடு வாங்க மக்களிடம் காசு கேட்கிறார். உண்மையான இறை நம்பிக்கையிருந்தால் இப்படியெல்லாம் பொய் சொல்ல மனம் வராது.கடவுள் தண்டிப்பார் என்ற அச்சம் இருக்கும். அந்த அச்சம் சிறிதுகூட இல்லாவிட்டால் ... அதிலிருந்து எனக்குக் கிடைக்கும் லாஜிக் – அவர்களுக்கெல்லாம் இறைநம்பிக்கை துச்சமாகக் கூட இருக்காது என்பதே. அதனால் இறையச்சமும் இல்லை. மக்களைக் கவர்ந்திழுத்து காணிக்கை வாங்க வேண்டும்; அவ்வளவே.



                                இங்கேயும் டவர் கட்டியாச்சா ...!?

மதப் பற்றாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரைப் பற்றியும் எனது கருத்தாகவே இது பல்லாண்டுகளாக உருவாகியுள்ளது. பலருக்குக் கோபம் வரலாம். அதிலும் உண்மையான நம்பிக்கையாளர்களுக்கும் கோபம் வரலாம். 

அவர்களுக்கு ஒரு வார்த்தை: 

நீங்கள் வார்த்தெடுத்தபடி உங்கள் நம்பிக்கைகளோடு உள்ளீர்கள். ஆனால் பிரசங்கிகளும், பிரச்சாரர்களும் உங்களைப் போல் உண்மையான இறை நம்பிக்கையோடும், இறையச்சத்தோடும் இருக்கிறார்களா என்று மட்டும் யோசித்துப் பாருங்களேன்.

 

 


2 comments:

கோமதி அரசு said...

நல்ல பதிவு. இறைவன் மேல் அச்சம் உள்ளவர்கள் தவறு செய்ய, பொய் சொல்ல பயப்படுவார்கள்.
இறை நம்பிக்கை உள்ளவர்கள் மற்றவர்களின் தப்பை மன்னிக்க இறைவனை வேண்டி கொள்வார்கள்.அதுதான் அவர்களால் முடியும்.

தருமி said...

அப்போ என்கூற்று சரிதான். இல்லையா? more religious ... more divine என்பதெல்லாம் பொய்!

Post a Comment