தலித் மக்கள் ஏனைய இனத்தவர் யாரும் செய்யத் தயங்கும் அனைத்து இழிவான வேலைகளையும் செய்வதற்கே படைக்கப்பட்டவர்கள். அந்த வேலைகளை செய்வதால் அவர்கள் தீண்டத் தகாதவர்கள். மற்றவர்களின் அசுத்தங்களை இவர்கள் சுத்தம் செய்ய வேண்டும்; குப்பையை அள்ள வேண்டும்; சாக்கடையைச் சுத்தமாக்க வேண்டும்; நரகலை தலையில் தூக்கிச் செல்ல வேண்டும்; செத்த கால்நடைகளை எடுத்துச் செல்ல வேண்டும்; அடிமைகளாக விவசாய நிலங்களில் வேலை செய்ய வேண்டும். அந்தந்த சாதிக்குரிய மக்கள் அந்தந்த வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும். இதை மீறி ஏனைய சாதியின் தொழிலைச் செய்தால் அவர்களுக்கு மிகக் கடினமான தண்டனைகள் வழங்கப்படும்; அடித்தல், உதைத்தல், கற்பழித்தல், கொலை செய்தல் … என்று எல்லாமும் நடக்கும்.
ஆதிவாசி மக்கள் வேறு விதமாக வகைப்படுத்தப்படுகிறார்கள். பெயரில் இருந்தே தெரிய முடியும் அவர்கள் அனேகமாக நமது முன்னோர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அவர்கள் படிநிலை மக்கள் இனத்திலிருந்து தனியாக ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களாக இருக்கிறார்கள். காட்டுவாசிகள் என்பது காட்டுமிராண்டிகள் போல் பேசப்படுகிறது. இவர்கள் பொதுவாக மலைவாழ் அல்லது காடு வாழ் மக்கள். இவர்கள் பூர்வீகக் குடிமக்கள். ஆனால் இப்போது அவர்கள் முடிந்தால் தங்களைத் தாங்களே பேணி காத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கமே அவர்களிடம் உள்ள சொத்துக்களான காடுகளையும் மலைகளையும் நிலங்களையும் பிடுங்கிக் கொண்டு அவர்களைக் கேள்விகளின்றி, இரக்கமின்றி அனாதைப் பராரிகளாக்கும்.
No comments:
Post a Comment