Tuesday, September 09, 2025

அசோகர் - பொன்வண்ணன்


      
ஏழெட்டு நாட்களுக்கு முன்பு பெயரில்லாத ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து ஓர் அழைப்பு ஒலித்தது. எடுத்ததும் மறுமுனையில் உள்ளவர் என் பெயர் சொல்ல, நானும் பேச்சைத் தொடர்ந்தேன். யாரென்று கேட்டேன். 'பொன்வண்ணன்' என்றார். அந்தப் பெயரில் எனக்குத் தெரிந்தது ஒரு சினிமா நடிகர்தான். ஆனால் இது எந்த பொன்வண்ணனோ என்று நினைத்து, சொல்லுங்கள்' என்றேன். அந்த முனையிலிருந்து நான் நடிகன் பொன்வண்ணன் என்றார். அட அவரைத்தான் நமக்குத் தெரியுமே என்று நினைத்து, நான் அவர் பற்றி முன்பே நினைத்த ஒன்றை அவரிடம் சொன்னேன்: திறமையான நடிகர்; ஆனால் அந்த அளவிற்குப் பேசப்படாத நடிகர் என்று நினைத்ததை அவரிடம் சொன்னேன். அதோடு அவர் ஒரு நல்ல ஓவியர் என்றும் தெரிந்ததைச் சொல்லி உறுதிப் படுத்திக் கொண்டேன். ஆனாலும், மனதிற்குள் என்ன, ஏது என்ற கேள்விகள் இருந்தன. அவர் என்னை நடிக்கக் கூப்பிட்டு, நான் கால்ஷீட் இல்லைன்னா சொல்லப் போறேன்!
ஆனால் அதற்குள் அவர் பேச ஆரம்பித்தார். நான் மொழியாக்கம் செய்த அசோகர் நூலைத் தான் வாசித்ததாகக் கூறினார். அடுத்தடுத்து புகழ்மாலைகள் என் கழுத்தைச் சுற்றித் தொடர்ந்து விழுந்தன. பரவசமானேன். இருக்காதா ..பின்னே. ஆனால் அதன் பின் அவர் சொன்ன செய்திகள் என்னை அப்படியே கிறங்கடித்தன. அத்தனை வாசிப்பு .. அதுவும் வரலாறு தொடர்பான நூல்கள் மீதான அவாது ஆழ்ந்த ஆர்வமும், அதற்காக அவர் வாசித்த நூல்கள் பற்றியும் கூறும்போது, அவரது நடிகன் என்ற முகம் மறந்து போய், ஒரு பெரும் வாசகரோடு பேசிக்கொண்டிருக்கிறேன் என்ற நினைவு வந்தது.

வாசிக்கும் வரம் வாங்கி வந்தவராகத் தெரிந்தார். (அதன் பின் அவர் அனுப்பி வைத்த புகைப்படங்களில் அவரது சொந்த நூலகம் பார்த்து வியந்து , அசந்து, மருண்டு போனேன்.) உலக வரலாற்றை எழுத நினைத்திருப்பதாகவும், எனது மொழியாக்க நூல் அதில் முக்கிய இடம் வகிக்கும் என்றார். வானத்தில் மிதந்தேன் ...…
அவர் ஓவியர் என்பது தெரிந்திருந்தாலும் அவரின் படைப்புகளைப் பார்த்ததில்லை. பார்த்த போதும் மேலும் வியந்து போனேன். ஓவியராகவும் அவர் என்னை வியக்க வைத்தார்.
பொன்வண்ணன் – நல்லதொரு வீணை .. என்ற முண்டாசுக்காரனின் வரிகள் நினைவுக்கு வந்தன.
மதுரைக்காரனிடம் பேசிக்கொண்டிருகிறோமென நினைத்திருந்திருந்திறார். இல்லை சென்னைவாசி என்றேன். வீடெங்கே என்றார். சொன்னேன். அவரது இருப்பும் அருகில் தானாம். விரைவில் சந்திப்போம் என்றார்.
காத்திருக்கிறேன் ...