Sunday, August 02, 2026

1386. நீட் தேர்வுகளின் நீட்சி மாறுமோ?

நீட் தேர்வுகளின் நீட்சி மாறுமோ?

 

· 


    தொடர்ந்து நமது அரசியல்வாதிகளின் தவறுகளால் நாமும், நம்  குடியரசும் பல்வேறு பள்ளங்களில் விழுந்தெழ வேண்டிய சூழல் தொடர்ந்து உருவாகிக் கொண்டே வருகின்றது. இந்த குற்றவாளிப் பட்டியலில் நான் அம்பேத்கரையும் அடக்கியுள்ளேன். நமக்குக் கிடைத்த அரசியல் சட்டமைப்புச் சட்டம் பெருங்குறைகளுடன் உள்ளதால் அதன்  எதிரொலி இன்று நடைமுறையில் நம்மைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. நாம் வாக்களித்து நமது முதலமைச்சரைக் கொண்டு வருகிறோம். ஆனால் அவரை விட ஒன்றிய அரசின் ஏஜெண்டாக இருக்கும் ஆளுநர் அதிக அதிகாரமும், அரசியல் வலிமையும் கொண்டவராக உள்ளார். இது எப்படி ஒரு அரசியல் நியாயமாக இருக்க முடியும். மெட்ரோ ரயிலுக்குப் பிச்சை எடுத்தாலும், இல்லையென்ற பதிலே திரும்பவும் வருகிறதே; ஏன்? இந்தக் கேள்வியை. அம்பேத்கரும் அவர் எழுதிய நமது அரசியலமைப்புச் சட்டமும்NEE (https://dharumi.blogspot.com/2021/05/1167.html) என்ற எனது பழைய கட்டுரை ஒன்றில் முன் வைத்துள்ளேன். கூகிளில் தேடிப் படிக்க அழைக்கிறேன்.

** அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் கல்வி நமது மாநில விருப்புப் பட்டியலில் இருந்தது. மொழிகளால், இனங்களால் வேறுபட்ட பல்வேறு மக்கள் வாழும் இந்த நாட்டில் இது மிகச் சரியான ஒன்றாக இருந்தது, ஆனால் இந்திரா காந்தி அவரது நெருக்கடி கால நடவடிக்கைகளில் ஒன்றாக அதை பொதுப் பட்டியலுக்கு மாற்றினார். அதன் இறுதி நடவடிக்கையாக இப்போது நம்மைத் துன்புறுத்துவது நீட் தேர்வுகள். ஏனெனில் இப்போது நம்மிடம் இருக்க வேண்டிய கல்வி அதிகாரம் முழுமையாக ஒன்றிய அரசிடம் போய்ச் சேர்ந்து விட்டது.

*** R.S.S. Syndrome  இப்போது நம் நாட்டை ஒட்டிப் பிடித்திருக்கும் நோய்.  இந்த அமைப்பே நம் நாட்டில் இப்போது தன் அசுர ஆட்சியை நடத்திக்  கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அதன் ஊரறிந்த ரகசியப் பிள்ளை. R.S.S. கொள்கைகளையை வழி நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மோதியும், அமித் ஷாவும், இந்த அமைப்பின் உள்ளார்ந்த கொள்கைகள்  அகண்ட பாரதம்; ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே இனம்; ஒரே உணவு; ஒரே கலாச்சாரம் ... இதையும் தாண்டி 3:97 தத்துவம் வேறு உண்டு. (புரிகிறதா?)  இந்த சாதிப் பிரச்சனையில் மட்டும் “ஒரே சாதி”  என்ற நிலைமையில்லை; பதிலாக,  சாதியப் படிநிலைகளை உறுதியாக வைக்க வேண்டும் என்பதே இவ்வமைப்பின் அடிப்படைக் கொள்கை. இப்படியே நீண்டு செல்லும் அந்தப் பட்டியல்.  இங்கிலாந்து. பிரான்ஸ் போன்ற நாடுகளில் அண்மையில் குடியேறிய ஆட்களைத் தவிர்த்தால் அங்குள்ள மக்கள் பொதுவாக அனைவரும்  ஒரே மொழி பேசும் ஒரே இனத்து மக்கள். அங்கு மொழிப்பிரச்சனை கிடையாது, இனப் பிரச்சனைகள் கிடையாதுல் சாதிப் பிரிவினைகள் கிடையாது. ஆனால் நாம் பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனத்து, பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் நிறைந்த ஓர் ஐக்கிய நாட்டில் வாழ்கிறோம். இங்கு ஒற்றைத் தன்மையைக் கொண்டு வரவேண்டும்; அதில் தலைமக்களாக 3% இருக்க வேண்டும் என்பது விஷமத் தனமானது என்பதை விட விஷத் தனமானது என்றே கூற வேண்டும்.

நாட்டில் நடக்கும் அனைத்திற்கும் ஒரே ஒரு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் எப்று இந்த அரசு வலியுறுத்துகிறது. இந்த முயற்சிகளின் இப்போதைய குவியமாக நீட் தேர்வுகள் இருக்கின்றன. இந்தத் தேர்வுகளுக்கு முன்பு பற்பல நுழைவுத் தேர்வுகள் நடந்தன; capitation fees என்ற பெயரில் பணப் பர்மாற்றங்கள் இருந்தன; தனியார் கல்லூரிகள் பணம் கொழிக்கும் இடங்களாக இருந்தன; இந்த இடர்பாடுகளை நீக்கும் என்று ஒரு தேசிய நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு அனைத்து மாநில மக்கள் மீது திணித்துள்ளது. இதை தமிழ்நாடும் அதன் அரசும் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளன.

ஒரே தேர்வு என்று கொண்டு வந்து அதற்கு CBSC பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்தது. இதுவே முதல் தவறு. ஓர் அனைத்திந்திய திட்டம் என்றால் அதை இப்படி நட்ட நடுவில் ஏதோ ஒரு வகைப் படிப்பை அடிப்படையாக வைப்பது தவறு. நம் மாநிலத்தைப் பொறுத்தவரை இந்த CBSC பாடத்திட்டம் தனியார் பள்ளிகளிலும், அதிகப் பணம் கட்டிப் படிக்கும் “உயர்தரப்” பள்ளிகளிலும் மட்டுமே நடைமுறைப்படுத்துகின்றன. சாதாரண மக்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளை நம்பியிருக்கும் போது உயர்கல்விக்கு அவர்கள் இத்தகைய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வது ஏறக்குறைய முடியாத ஒன்று.  இடுக்கில் நுழைவது போல் திடீர்ரென்று CBSC தரம் என்று கொண்டுவந்தால் இங்குள்ள சாதாரண பள்ளிகள், அங்கு பயிலும் பிள்ளைகள் நிலை என்று எதுவும் யோசிக்காமல் கொண்டு வந்த திட்டம். இதனால் கொழித்தது நீட் தேர்வுகளுக்காக நடத்தும் தனியார் பயிற்சிக் கூடங்கள். லட்சக் கணக்கில் பணம் கட்டி, ஓராண்டிற்கும் மேலாக அங்கு பயிற்சி எடுக்க வண்டிய கட்டாயம் வந்தது. செல்வந்தர்களால் பணம் செலவு செய்ய முடியும். மற்றவர்கள் ..?

இதைவிட இன்னொரு மிக மோசமான முறையும் உள்ளது.  சென்ற ஆண்டு தேர்வு நடந்து அதிலிருந்து கிடைத்த தரவுகள்:

Stage

Candidates

Registered

22,79,743

Actually appeared

19,99,895

Qualified NEET

11,21,185

Total MBBS seats (Govt + Private)

1,36,939

Government MBBS seats

63,297

Private MBBS seats

73,643

22 லட்சம் பேர் எழுதி, பதினோரு லட்சம் பேர் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் மருத்துவ இடங்கள் வெறும் 1 லட்சத்து முப்பத்தியாறு பேர் மட்டுமே.  அதில் 63 ஆயிரம் பேர் மட்டுமே அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடம் பெறுவார்கள். இந்த இடத்திற்கு மட்டும் வெற்றி பெற்ற மாணவர்கள் தர வரிசைப்படி இடம் பெறுவார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 73 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு  தகுதி பெற்ற பட்டியலிலிருந்து எந்த தரத்திலும் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் பணம் பெற்று சேர்க்க முடியும். capitation fees என்ற பெயரில் நடந்த பழைய முறை மீண்டும் இங்கு எளிதாக, சட்ட பூர்வமாக நடந்தேறும் அவலம் நடக்கும். புதுப் புது “கல்வித் தந்தைகள்”  தோன்றுவார்கள். ஏன் இங்கும் தரம் பார்க்கப் படக் கூடாது; தேவையில்லை என்பது என்ன நியாயமோ தெரியவில்லை. அதிகப் பணம் .. அது மட்டும் தான் மீதியுள்ள 73 ஆயிரம் இடங்களுக்கான தேவை.இதனால் கல்வி பணக்காரர்களுக்கு மட்டுமே என்கிற வலதுசாரிக் கொள்கை, R.S.S. கொள்கை வலுப் பெறுகிறது.

நமது ஒன்றிய அரசு நடத்தும் பல்வேறு முயற்சிகள் பொதுவாகவே பணக்காரர்களுக்கான அரசு இது என்பதை நிலை நாட்டுகின்றன. தேசியச் சொத்துகளை விற்பதோ, பல்வேறு தடங்கல்களை கல்வித் துறைக்குள் கொண்டுவருவதோ ஒரு சில சாதியனருக்குத் தோதாக அமைந்து விடுகிறது. பனியாக்கள் செல்வந்தர்கள் ஆகிறார்கள். 3% மக்களின் கருத்துகளுக்கு ஏதுவாக கல்வி அடித்தட்டு மக்களுக்குச் செல்லாமல் அதிலும் சாதிய வேறுபாடுகளைக் கொண்டு வந்து அடிபட்ட மக்களை மேலும் அடித்து மேலே வர முடியாமல் செய்யும் திறன் இந்தத் திட்டங்களுக்கு உண்டு.

நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகள் இன்னும் நிறையவே உண்டு. அதில் ஒரு முக்கியமான கருத்தை மட்டும் இங்கே சொல்ல ஆசைப்படுகிறேன். மாணவர்களின் 16-18 வயதில் இந்தத் தடங்கல்களுக்கு உள்ளாகிறார்கள். ஆசையோடு விருப்பப்பட்டதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் போய் அனைத்துக் கோணங்களிலிருந்தும் அவர்களுக்கு வரும் அழுத்தங்களை நினைக்கும் போதும், இந்தப் படிப்பு படிக்கணும் என்ற பெற்றோரின் வெறி அவர்களை அழுத்தும் போதும் ... பாவம், இந்தப் பிள்ளைகள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

நம் பிள்ளைகளுக்கு விடியும் பொழுது எப்போது வருமோ?