நியூயார்க் பக்கம்; நியூபோர்ட் என்ற இடத்திற்குப் பக்கத்தில பலமாடிக் குடியிருப்பில் மாணவ-நண்பன் - அவன் இன்னும் சின்னாளில் 'காட்டான்' என்ற பெயரில் பதிவுலகத்தில் நுழைவதாகத் திட்டம் - அவனது விருந்தாளியாக ஒரு வாரம் தங்கியிருந்தேன். ஒரு நாள் அவனது ஃப்ளாட்டில் நுழையப்போகும் போது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பெண்மணியும், அவரது குட்டிக் குழந்தையொன்றும் வெளியே வந்தார்கள். நான் அந்தக் குழந்தையைப் பார்த்து சிரித்து, 'டாடா'காண்பித்து என் 'அயலானை அன்பு செய்' என்ற தத்துவத்தை நிலைநாட்டினேன். காட்டான் ஒண்ணுமே கண்டுக்கவில்லை. ஏன்'பா என்று கேட்டேன். இதெல்லாம் எதுக்கு; நம்ம ஜோலிய நாம பாத்து போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான் என்றான். சரி இது ஒரு அமெரிக்கத்தனம் போல என்று நினைத்துக் கொண்டேன்.
பிறகு ஒரு நாள் மாலை ஸ்டார் பக்ஸ் போனோமா, அங்கே காஃபி குடித்துவிட்டு, அப்போதுதான் முதல் முறையாக நம்ம ஊரில் பச்சைப் பழம், மோரிஸ் பழம் என்றெல்லாம் சொல்லுவோமே அதே பழம், ஆனால் அழகு மஞ்சள் கலரில் வழுவழுன்னு இருந்தது. அதுக்கு முந்தி அந்த மாதிரி பழம் நம்ம ஊர்ல பார்த்ததில்லை. ஆனா அதுக்குப் பிறகு முதலில் பெங்களூரில் பார்த்தேன். அன்று அத வாங்கலாமான்னு நானும் காட்டானும் பேசினோம். அப்போ கவுண்டரிலிருந்து 'fresh பழம்தான் ,வாங்குங்க' அப்டின்னு தமிழில் ஒரு குரல். 'ஆ'ன்னு வாயப் பொழந்து பேசினவரைப் பார்த்தேன். தமிழ் மூஞ்சி; ரொம்ப friendly-ஆ எங்களைப் பார்த்தார். ஆனால் நம்ம காட்டானோ கண்டுக்கவேயில்லை. கடையை விட்டு வெளியே வந்ததும் 'ஏன்'பா, கண்டுக்கவேயில்லை' என்றேன். ஆமா, இவன் இன்னைக்கி இங்க; நாளைக்கி எங்கேயோ; இதில் என்ன பெரிசா கண்டுக்கிறது' அப்டின்னான். அடுத்த அமெரிக்கத்தனம் என்று நினைத்துக் கொண்டேன்.
அதன் பின் நான் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் Midway Mall அப்டின்னு ஒரு இடம். சனி ஞாயிறுகளில் நானும் நம்ம சைனா நண்பரும் அங்கு சும்மாவாவது போவதுண்டு. அங்கே போய் ஒவ்வொரு சாமான்களாக எடுத்துப் பார்ப்போம். Made in China என்றுதான் நூத்துக்கு தொண்ணூரு பொருட்களில் இருக்கும் (இப்போ நம்ம ஊர்லயும் அப்படி ஆகிப் போச்சு; அப்போ அது ஒரு பிரமிப்பு) அவர் பெருமையாக அதை எனக்குக் காண்பிப்பார். அதன்பிறகு நம்ம ஊர் காசிலேயும், அவரது காசிலேயும் டாலரின் மதிப்புக்கு ஈடாக எவ்வளவு என்று பார்ப்போம். அதற்கு அவர் அவரது palmtop எடுத்து on செய்வதற்குள் நான் அவரது சைனா காசுக்கு (எட்டால் பெருக்க வேண்டியதிருந்தது - நமக்கு எட்டாம் வாய்ப்பாடு எல்லாம் ஜுஜுபியா) டக்குன்னு சொல்லிடுவேன். அவருக்கோ அப்படி ஒரு ஆச்சரியமா இருக்கும். உங்க காசில எவ்வளவு என்பார். அப்போ டாலுருக்கு 48 ரூபாய் என்று நினைக்கிறேன். 50-ஆல் பெருக்கி விட வேண்டியதுதானே; அடுத்த ஜுஜுபி வேலை.ஆனால் நண்பருக்கு பயங்கர ஆச்சரியமா இருக்கும்; இதலாலதான் இந்தியர்கள் software-ல் பெரிய ஆளாக இருக்கிறீர்கள் என்பார். அது ஒரு கதை. நம்ம கதைக்கு இப்போ வருவோம். அந்த மாதிரி மால் ஒன்றுக்குள் நுழைந்து கடை கடையாய் சுற்றிக்கிட்டு இருந்தப்போ, ஒரு 45-50 வயது அம்மா ஒருவர் - சேலையில்; காரில் இறங்கி கடைக்குள் வந்தார்; என் மூஞ்சைப் பார்த்ததும் நான் அவர்கள் உடையைப் பார்த்ததுமே புரிந்துகொண்டோம். எனக்கு அவர்களைப் பார்த்து ஒரு பிரமிப்பு. இங்க பார்ரா, வெள்ளைக்காரன் ஊரில் நம்ம ஊர் அம்மா...கார்ல வந்து... ஒரு மாதிரியாக மூக்கின் மேல் விரல் வைக்காமல் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன். அவர்கள் ஒரு ராயல் லுக் விட்டார்கள். ஆனாலும் அப்பப்போ திரும்பி திரும்பிப் பார்த்தார்கள். ஏதாவது சிரிச்சி வச்சா பேசலாம்னு நினச்சேன். ஆனால் அம்மணி அப்படி கெத்தாக இருந்துவிட்டுப் போய்ட்டாங்க. அடுத்த அமெரிக்கத்தனம்...
சிக்காகோவிலும் இதே போல்தான். சிக்காக்கோவிலிருந்து நம்ம சென்னை எலக்ட்ரிக் ரயில் மாதிரி ஒன்றில் - ஆனால் கூட்டமே கிடையாது - பக்கத்து suburb-க்குச் சென்றேன் இன்னொரு நண்பரோடு. முதல் வார்னிங்காக அவர் சொன்னது - ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் இருக்கும்போது எந்தக் காரணம் கொண்டும் black என்ற சொல்லை ஆங்கிலத்தில் சொல்லிவிடவேண்ட்டாம் என்றார். அடுத்தது - நம்ம ஊர் ஆளுக யாரும் இருந்தாலும் கண்டுக்க வேண்டாம்; ஏன்னா அவங்க நம்மளைக் கண்டுக்க மாட்டாங்க என்றார். அதே போல் எங்கள் சீட்டுக்கு சில இடம் தள்ளி நம்ம தமிழ் மூஞ்சி ஒன்று ஆங்கில நாவலைக் கையில் வைத்துக்கொண்டு, சீரியஸாக வாசித்துக் கொண்டு இருந்தது. ஓரக் கண்ணால் பார்த்தேன். அந்தக் கேசு எங்களைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ரெகுலராக ரயிலில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் நாங்கள் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்றார். நான் தங்கியிருந்த இடத்தில் தமிழில் பேச ஆள் கிடைக்காமல், வாடி வதங்கி இருந்த எனக்கு இதெல்லாம் கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது. ஒன்றுமில்லையென்றாலும் ஒரு மணி நேரப் பயணத்தில் பேச்சுத் துணையாகக் கூட ஒரு தமிழனை இன்னொரு தமிழன் கண்டு கொள்வதில்லையென்பது விநோதமாயிருந்தது; இருக்கிறது.
இந்த அனுபவத்திற்கு முன் தங்கை ஒருத்தி குடும்பத்தோடு இரண்டு மூன்று ஆண்டுகள் அமெரிக்காவிலிருந்து வந்த போது, எடுத்திருந்த வீடியோ, போட்டோ எல்லாவற்றையும் பார்த்து விட்டு, எல்லாம் அவர்கள் கம்பெனியில் இங்கிருந்து சென்று வேலை பார்க்கும் கூட்டத்தைத் தவிர ஒரு ஆள் கூட வேறு மாநிலத்து நண்பர்களாகவோ, அமெரிக்க நண்பர்களாகவோ இல்லாது இருந்ததைப் பார்த்த போதும் மிக்க ஆச்சரியமாக இருந்தது.
இப்போ 20 நாளைக்கு முன் அமெரிக்கா சென்றடைந்த சின்ன மகள் அப்பப்போ தொலைபேசியில் பேசுவாளா...அவள் சொன்னது: பார்க்கிலோ, கடைகளிலோ, அவ்வளவு ஏன் கிறித்துவக் கோயில்களிலோ எதிர்த்தாற்போல் அமெரிக்கர்கள் வந்தால் ஒரு ஹலோ, அல்லது ஒரு புன்சிரிப்பு. ஆனால் நம்ம ஊர் ஆட்கள் நம்மை நேருக்கு நேர் - கண்ணோடு கண் - தற்செயலாகப் பார்த்து விட்டாலும் கூட ஒரு ஜடப்பொருளைப் பார்க்கும் reaction-ஓடு கடந்து சென்று விடுகிறார்கள்; ஏன் இப்படி என்றாள். அதுதான் அமெரிக்கத்தனம் என்றுதான் சொல்ல முடிந்தது.
அமெரிக்கக்காரர்களுக்கு ஒரு வேளை பதில் தெரியலாமேவென இங்கே இதைப் பதிவு செய்கிறேன். தருமியல்லவா...அதனால் ஒரு கேள்வி. வழக்கமாக எனக்கு யாரும் மதுரைக்காரர் ஒருவர் பதிவரெனத் தெரிந்தால் ஒரு பாசம்; அட, நெல்லைக்காரர் என்றால் கூட பிறந்த மண் பாசம் பெருக்கெடுக்கிறது. அடுத்த மாநிலத்தில் நம் மாநிலத்தவரைப் பார்க்கும்போதும் ஒரு பாச ஊற்று பொங்கிவிடுகிறது; பொங்கியிருக்கிறது. அப்படியானால் அடுத்த நாட்டில் நம் நாட்டினர் என்றாலே அந்தப் பாசம் வராதா? அதுவும் தமிழ்நாட்டுக்காரன்/ர்/ரி என்று தெரிந்தாலும் எப்படி, ஏன் கண்டுக்காமல் போகி(றீ)றார்களாம்? கண்டுக்கிட்டா அத ஒரு மாதிரி தப்பாதான் எடுத்துக்கொள்கி(றீ)றார்களாமே ஏன்?
.
.