Friday, July 06, 2007

227. யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? 4

உங்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பது தெரியும்; அதனால் இன்னும் அதிகமாக சோதிக்காமல் இந்தப் பதிவோடு 'யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? ' என்ற இந்த மெகாசீரியலை முடித்துக் கொள்கிறேன்; சரியா?!

மனசுதான் முக்கியம் அப்டின்னு நாம பொதுவா சொல்றதுண்டு. அதுமாதிரிதாங்க .. எங்க ஊர்ல நிர்வாகம் ஒரு நல்ல காரியம் ஒண்ணு பண்ணணும்னு நினச்சாங்க. அதாவது மதுரையில் ஒரு பெரிய ஆறு - வைகைன்னு பேரு - இருக்கா. அதில எப்பவாவது வெள்ளம் - அதாங்க, ரொம்ப தண்ணி வருமே அதுதான் - வந்திச்சின்னா மக்கள் கஷ்டப் படுவாங்களே அப்டின்னு ஒரு எண்ணம்; அதோடு, விட்டா மதுரக்காரங்க ஆற்றோரம் எல்லாம் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பு பண்ணி, பேருக்கு கூட வைகை இல்லாம் பண்ணிடுவாங்க அப்டிங்கிற உண்மையான பயத்தில வைகைக் கரையின் இரு பக்கமும் ரோடு போட்டுட்டா, நதியைக் காப்பாத்திடலாம் அப்டிங்கிற நல்லெண்ணத்தில இரு பக்கமும் உயரமா கரையை உயர்த்தி அழகா ரோடு போட்டாங்க.

ஆனா பாருங்க, ஆற்றின் தென்கரையில் நெடுக போட்ட சாலை ஒரு இடத்தில மட்டும் நடுவில நின்னு போச்சு. இப்ப, இங்க ஒரு சேஞ்சுக்கு கோவில் இல்லை, அதுக்குப் பதிலாக ஒரு பெரிய பள்ளிக் கூடம் கரையோரம் உயர்ந்து நின்னுது. ஆக்கிரமிப்புகளை நீக்கும் நேரத்தில் எந்த நேரமும் ஆற்றுக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் அந்தப் பள்ளி இடிக்கப் படும் என்ற நிலை. ஆனா விஷயம் அறிஞ்ச சிலர் சொன்னாங்க.. அதெல்லாம் அந்தப் பள்ளிக்கூடத்துக்காரருக்கு முன்னால் அதெல்லாம் நடக்க முடியாது அப்டின்னாங்க; அவரு அவ்வளவு பேமஸான ஆளு அப்டின்னாங்க; நமக்கு என்ன தெரியும்? அது மாதிரியே இன்னும் அந்தப் பள்ளிக்கூடம் ஆற்றின் கரையோரம் நிலச்சு நிக்குது, ஆற்றோர சாலை அப்படியே துண்டு துண்டா ரெண்டுபக்கமும் நிக்குது. ஒரு தனி மனிதனின் செல்வாக்கு மொத்த ஊர் மக்களின் நன்மைக்கு எதிரா இருந்து வெற்றி கொடி நட்டுரிச்சி. இது தென்கரையோர சாலையின் கதை. இது என்ன பெரிய விஷயமா அப்டின்றவங்களுக்கு அடுத்த சாலையின் கதை நிச்சயமா இன்னும் கொஞ்சம் interesting -ஆ இருக்கும் அப்டின்னு சொல்லிக்கிறேன்.



தெரியுதுங்களா .. இதுதான் வைகையின் தென்கரை நெடுக போடப் பட்டுள்ள ரோடு. இடது பக்கம் பச்சையா தெரியறதுதான் எங்க வைகை. தண்ணீர் இருந்தா வெள்ளையா தெரியும்; இல்லைன்னா இப்படி கருவேல புதர்கள்தானே தெரியும். என்ன இவ்வளவு பெரிய ரோடு போட்டிருக்காங்க ... ஆனா போக்குவரத்து, வண்டிகள் அது இதுன்னு எதுவுமே இல்லையேன்னு பாக்றீங்களா? அது எப்படி வண்டிகள் போக்கு வரத்து இருக்க முடியும்? அடுத்த படம் பாருங்க ...






வரப்போற மேம்பாலத்திற்காக கட்டப்பட்டுள்ள பெருந்தூணைத்தான் பாக்றீங்க... என்ன இது ரோடுமேல இருக்கேன்னு பாக்கிறீங்களா? எனக்கும் அதுதாங்க புரியலை. ரோடு போட்டும் ரொம்ப வருஷமாயிடலை. இப்போதான் போட்டாங்க. அதனால போடும்போதே இங்கே ஒரு பாலம் வரும்; அதுக்கு தூண்கள் வரும் என்று எல்லாம் தெரிஞ்சிருக்கும்; தெரிஞ்சிருக்கணும். ஆனா அரசு இயந்திரங்கள் ஒன்றோடு ஒன்றுக்கும் அப்படி ஒரு இணைவு. ஏன் இப்படி என்று கேட்டால் வைகை ரோடு நகராட்சி போட்டது; பாலம் போடுறது நெடுஞ்சாலைத் துறைன்னு பதில் வருகிறது. எப்படி ஒரு coordination! இப்போ போட்ட ரோடு நம்ம காசை மட்டும் விழுங்கிட்டு எனக்கென்னன்னு நிக்குது .. இல்ல ... படுத்திருக்குது!

எனக்கு ஒரு கார்ட்டூன் நினைவுக்கு வருது. தலைப்பு: TEAM WORK !


Image and video hosting by TinyPic

இங்கிலாந்துக்கும், பிரான்ஸுக்கும் இடையில் கடலுக்கடியில் ஒரு சாலை அமைத்துள்ளார்கள். இதில் ஒரு பாதியை ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டு கடலுக்கடியிலும், அதே போல் பிரான்ஸ்காரர்கள் அவர்கள் பாதியை அவர்கள் நாட்டு கடலுக்கடியிலும் தோண்டினார்களாம். இறுதியில் இரண்டு பகுதியும் இணையும்போது மிக மிகச் சரியாக இரு சாலைகளும் கடலுக்கடியில் ஒன்றோடொன்று சேர்ந்தனவாம். ம்..ம்ம்.. நம் நாட்டுல இப்படி ஒண்ணு நடந்தா என்ன ஆகியிருக்கும்னு தெரியலையே ..?

Monday, July 02, 2007

226. மதுரைத் தேர்தல் துளிகள்

ஆளே ரொம்ப நாளா காணாம போயிருந்தாலும் வந்ததும் சுடச் சுட ரெண்டு பதிவு போட்டிருக்கிற தமிழினி தன் பதிவில் சொல்லியிருந்த ஒரு 'வசனம்' இது:
//கைநீட்டீ காசை வாங்கிட்டா சரியா குத்திடறான்.பண விஷயத்தில் துரோகம் செய்ய தமிழன் நினைக்கறதேயில்லை//

இதப் படிச்சதும் நம்ம நேரடி அனுபவத்தைச் சொல்லணும்னு நினப்பு வந்திருச்சி. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பே இந்த காசு விவகாரம் தெரிய ஆரம்பிச்சது. மொதல்ல சொன்ன ரேட்டு 500 ரூபாய்தான். ரெண்டு பெரிய கட்சி பெயரையும் சொல்லியிருக்காங்க தங்கமணிட்ட படிக்கிற பசங்க. தங்கமணி வேலை பார்க்கிற பள்ளிக்கூடம் மதுரை மேற்குத் தொகுதியின் முக்கிய இடத்தில் இருக்கிறது. நாள் நெருங்க நெருங்க பணம் குடுக்கிறதில் ஆளும் கட்சியின் பெயர் மட்டுமே வந்தது. தங்கமணியுடன் வேலைபார்க்கும் ஒருவரே சொன்னாராம் அவங்க வீட்டுக்கு ரூபாய் 1500 பட்டுவாடா செய்யப் பட்டது என்று. பிக்ஸ் பண்ணினது ரூபாய் 2000; அதில் 'நெல்லுக்கு பாயும் நீர் புசியுமாமே அங்கே உள்ள புல்லுக்கும்' என்ற தத்துவத்தில் 1500 மட்டுமே இறுதியாகக் கொடுக்கப் பட்டது என்ற பேச்சும் இருந்தது.

எஸ். எஸ். காலனின்னு இன்னொரு பகுதி. அங்கிருக்கும் ஒரு நண்பர் சொன்னது: 'எங்க ஏரியாவில் யாரும் பணம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி விட்டோம்.' முதல்ல சொன்னது கொஞ்சம் ஏழைபாழைங்க இருக்கிற இடம்; இரண்டாவது மிடில்க்ளாஸ் & வசதிப் பட்டவங்க இருக்கிற இடம். பரவாயில்லையேன்னு நினச்சுக்கிட்டேன்.

காசு கொடுக்கிறதுக்கும் கட்சிகளுக்குள் ஒரு அக்ரிமென்ட் போட்டுக்கிட்டது மாதிரி முதல் சொன்ன பகுதியை ஆளுங்கட்சி எடுத்துக் கொண்டதாகவும், வேறு சில ஏரியாக்களை அடுத்த கட்சி தத்து எடுத்துக் கொண்டதாகவும், முதலில் இரு பெருங்கட்சிகளுக்கும் பணம் கொடுப்பதில் போட்டி இருந்தாலும் பின்னால் எதிர்க்கட்சி போட்டியில் பின் தங்கிவிட்டது / காசை அவர்களே வைத்துக் கொண்டார்கள் என்று பேச்சும் வந்தது.

தேர்தலுக்கு முந்திய நாள் பழக்கப்பட்ட ஆட்டோகாரர் தன் குடும்பத்துக்கும் மொத்தமா 1500 வந்ததாகச் சொன்னார். நான் ரொம்ப மேதாவித்தனமா, கொடுத்ததை வாங்கிகிட்டு ஓட்டை மாற்றிப் போட்டுவிட வேண்டியதுதானே என்றேன். அது சரியில்லை என்றார்.

"காசு கொடுக்கிறவங்களை அப்படித்தான் தண்டிக்கணும்; அப்பதான் அடுத்ததடவை காசு யாரும் கொடுக்க மாட்டாங்க".

"இல்ல சார், அது தப்பு".

"காசு கொடுக்கிறது தப்பு இல்லையா?", என்றேன்.

"காசு வாங்குறதும் தப்புதானே!", என்றார் பதிலடியாக.

அவரின் நியாய உணர்ச்சியும், அதனால் வாங்குன காசுக்கு ஓட்டு போட்டே ஆகணும் அப்டிங்கிற உணர்ச்சியையும் பார்த்து, எனக்குப் பேசுவதற்கு ஒன்றுமில்லாமல் நின்றேன்.

அதன்பிறகு அவரே சொன்னார்: "நீங்க சொல்றது மாதிரியும் சில பேர் சொல்றாங்க; அதிலேயும் அந்த மாதிரி சொல்றவங்க, அவனுக்கும் வேண்டாம்; இவனுக்கும் வேண்டாம்; விஜயகாந்த கட்சிக்கு போடலாம்'னு சொல்றாங்க. பார்ப்போம் என்ன ஆகுதுன்னு" என்றார்.

இந்த நியாய உணர்வின் தாக்கமே 75 விழுக்காடு ஓட்டு விழுந்ததற்கும், விஜயகாந்த் கட்சிக்கு இந்த அளவு ஓட்டு விழுந்ததற்கும் உரிய காரணங்களாக இருக்கலாம். என்னென்னமோ நடக்குதுங்க அரசியலில்.

வாழ்க ஜனநாயகம்!

Tuesday, June 26, 2007

225. ஓர் உதவாக்கரையின் 'எட்டாட்டம்'

தொடாத உயரங்கள்...(ஓர் எட்டாட்டம்)

என்னையும் இந்த எட்டாட்டத்துக்கு அழைத்த மணியனையும், கண்மணியையும் என்னவென்று சொல்லித் திட்டுவது என்று தெரியாமலேயே ... இதோ .. என் எட்டாட்டம்.

கண்திருஷ்டி பொம்மையாக என்னை நானே இந்த "8-பதிவு"களில் இணைக்க வேண்டியதுள்ளது வருத்தமாகத்தான் இருக்கிறது. இதுவரை எழுதியவர்களின் பதிவுகளில் பலவற்றை வாசித்ததும் பெருமூச்சு மட்டுமே வந்தது. இப்படி ஒரு கூட்டத்தில் நானும் கொஞ்சம் அங்கீகரிக்கப் பட்டுள்ளேன் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. வயதில் சின்னவர்களாக இருக்கும் பல பதிவர்களின் ஆழ்ந்த, தெளிந்த கருத்தோட்டங்கள் எப்போதும் வியப்பையையே அளித்து வந்துள்ளன. ஆனாலும், நான் இக்கூட்டத்து மக்களோடு பல விஷயங்களில் ஒட்ட முடியாதவனாக இருந்தும் எப்படியோ என்னை நான் இவர்களோடு இணைத்துக் கொண்டதை நினைக்கும்போது தாழ்வு மனப்பான்மையையும் தாண்டி ஒரு சந்தோஷம்.

விஷயத்துக்கு வருவோம் ...

If you want to be successful in life, take me as your model. ... But take me as your negative model! - என் மாணவர்களிடம் நான் சொல்வது. சும்மா humble pie எல்லாம் இல்லை.எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படி எல்லாம் இருந்தாச்சு. procrastination - எல்லாவற்றையும் எப்போதும் நாளைக்கு .. நாளைக்கு என்று தள்ளிப் போடுவது உடன் பிறந்த வியாதியாய் இன்னும் தொடர்கிறது. சாதித்திருக்கக் கூடியது என்று நிறைய இருந்தும் இதுவரை எதையுமே சாதிக்காமல், பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்ற வகையினுள் ஒருவனாய் இதோ இதுவரை இருந்தாயிற்று.

1. பள்ளிப் படிப்பில் தமிழ்,ஆங்கில, கணக்குப் புலி என்று ஒன்பதாம் வகுப்பு வரை - IV Form - இருந்தாயிற்று. அதன்பின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறப்புக் கணிதம் எடுத்த அன்று வாழ்க்கையில் முதல் சறுக்கு. மனப்பாடம் செய்ய முடியாத ஒருவன் அல்ஜீப்ராவையும், தியரங்களையும், ரைடர்களையும் பார்த்து ஓட ஆரம்பித்தது கல்லூரி வரும்போது கணக்கே இல்லாத பாடத்திட்டத்தில் சேரும்வரை தொடர்ந்தது.

2. கல்லூரி வந்தபிறகு ஆங்கிலம் அல்லது பொருளாதாரம் எடுக்க ஆசைப்பட்டு, அதில் சேர்ந்து 30 நாட்கள் ஓட்டிய பின்னும், அப்பாவின் ஆசைக்கு அறிவியலில் தூக்கிப் போடப்பட்டேன். இளங்கலையில், ஆங்கிலத்திற்கும், தமிழுக்கும் கொடுத்த ஆர்வத்தை, முயற்சியை எடுத்துக் கொண்ட அறிவியலுக்குக் கொடுத்திருந்தால் முன்னேறியிருந்திருக்கலாம். அடுத்த சறுக்கு.

3. இளங்கலை முடித்ததும் எல்லா விலங்கியல் மாணவர்கள் போலவே மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்து, இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை; மருத்துவத் தேர்வு முடிவுகள் வெளியே வரும் முன் இடம் கிடைத்து விட்டதாக குறுக்கு வழித் தகவல்.பாதி டாக்டராகி விட்டது மாதிரி கனவுகள். ஆனால் முடிவு வெளியே வரும்போது பெயர் இல்லை. மதுரையிலிருந்து என் கூட வந்தவர் என்னை விடவும் குறைந்த மதிப்பெண்கள் வாங்கியும் அவருக்குக் கிடைத்திருந்தது. முதலில் தகவல் சொன்னவரிடம் கேட்ட போது (அந்தக் காலத்து) இடப் பங்கீடுதான் காரணமென்றார். இடம் கிடைத்த நண்பரோ இன்றுவரை உனக்கே அந்த இடம் கிடைத்திருக்கலாம் என்று வருந்துவது வழக்கம்.

4. முதுகலை முடித்ததும், எனக்குப் பிடித்த ஆசிரியருக்கு என்னைப் பிடித்துப் போக ஆராய்ச்சி மாணவனாக வரும்படி அழைத்தார். மூன்று ஆண்டுகள் வரை வீட்டில் உத்தரவு கிடைக்கவில்லை. அதற்குள் வயது கடந்து போட்டித் தேர்வுகள் எழுதும் வாய்ப்பை இழந்தாயிற்று. அதற்குப் பின்னும் ஆராய்ச்சியில் சேர்ந்து ஒரு பட்டம் வாங்கும் அந்த முயற்சியை கடைசிவரை முழுமையாக எடுக்காததற்கு இன்று வரை சரியான காரணம் ஏதும் கிடையாது.

5. கல்லூரியில் சித்தாள் வேலையில் சேர்ந்த பிறகு முதல் நான்கு வருடங்களில் கிடைத்த சில நல்ல அனுபவங்கள் ஆசிரியத்தொழில் ஈடுபாடு கொள்ள வைத்தது. அது என்ன மாயமோ .. முதலில் இருந்தே மாணவர்களோடு நல்ல உறவு; செய்யும் தொழிலில் ஒரு பெரிய பிடிப்பைக் கொடுத்ததே அந்த உறவுகள்தான். இன்னும் பல மாணவர்கள் தொடர்ந்து வைத்திருக்கும் உறவுகளே வாழ்க்கைக்கு வளம் தருகின்றன. சில ஆசிரியர்கள் தரும் testimonial-களை மாணவர்கள் பத்திரமாக வைத்திருப்பதுண்டு. நான் அதுபோல் மாணவர்கள் சொன்னவைகளை நினைவில் வைத்திருக்கிறேன்.

மாணவர்களை கன்னடர்-தமிழர் தகராறு இருந்த ஒரு சமயம் பெண்களூருக்கு அழைத்துச் சென்றபோது ரயில் நிலையத்தில் பதிவுச்சீட்டை மறுத்து தகராறு செய்த ரயில்வே ஊழியரிடம் முதலில் தயவாகவும், அதன் பின் எல்லாம் முற்றிய பின் மதுரை 'சலம்பலை' அரங்கேற்றியபோது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மாணவன், You do what you say' என்று சொன்னதும்,

முதுகலை வகுப்பில் புதுப் பாடத்திட்டம் ஒன்றை புகுத்தி அதை 'I wont be a teacher for you. I will be just a lecturer' என்று கூறி பாடம் எடுத்து முடித்ததும் மாணவர் இருவர் பின்னாலேயே வந்து, 'Sir, ஒண்ணுமே புரியலை ..தலை சுத்துது' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரு மாணவிகள் வந்து, 'Sir, thank you for bringing in fresh breath into our class' என்று சொன்னதும்,

பழைய மாணவன் ஒருவன் படித்துச் சென்றபின் சில ஆண்டுகள் கழித்து கடிதத்தில், 'நீங்கள் சொல்லிக்கொடுத்தது எவ்வளவு புரிந்தது, நினைவில் இருக்கிறது என்பதையெல்லாம் விட இப்போதும் அந்தப் பாடத்தோடு தொடர்புள்ள விஷயங்களைப் பார்க்கும்போது உங்கள் நினைவு வந்துவிடுகிறது' என்று எழுதியதையும்,

I dont know how much you know things; but you always make us feel pretty awe about you' என்ற ஒரு மாணவியின் comment-யையும்,

மாணவனின் கல்யாணத்துக்குப் போயிருந்த போது அவனின் தந்தை மணப்பெண்ணின் தந்தையிடம் என்னை அறிமுகப் படுத்தும் போது, 'I am just his father; but he is his god-father' என்றதையும் எப்படி மறக்க முடியும்?

6. சார்ந்த துறையை ஒட்டி புத்தகங்கள் எழுத கிடைத்த வாய்ப்புகளைத் தவற விட்டதோடு, இப்போதும் ஒரு புத்தகமாவது எழுதவேண்டும் என்று மனத்தளவில் ஆவல்; ஆனால், நிறைவேற்ற முயற்சி இல்லாது .. காலம் நழுவிக்கொண்டிருக்கிறது விரைவாக.

7. creativity உள்ள ஆட்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு பொறாமை. அதிலும் ஓவியர்களுக்கும், பாடகர்களுக்கும் முதலிடம். சித்திரமும் கைப் பழக்கம் என்று யாரோ சொன்னதை நம்பி நானும் அந்தக் காலத்திலிருந்து கிறுக்கி கிறுக்கிப் பார்த்தேன்; கிறுக்கலாகவே நின்றுவிட்டது; ஓவியமாக என்றும் வரவேயில்லை. பென்சில், water colour, oil paint என்று பல முயற்சிகள். எல்லாம் விழல்கள்.

பாடத்தான் வராது; ஏதாவது இசைக்கருவி பழகலாமென்றும் பல முயற்சிகள். mouth-organ மிக எளிது என்று சொல்ல நாலைந்து டைப் mouth-organs வாங்கி ஊதி ஊதி .. சத்தம் மட்டும்தான் வரும்; அதிலிருந்து ஒருநாள்கூட சங்கீதம் வந்ததில்லை. இருப்பதிலேயே எளியது என்று சொல்ல, அடுத்து புல்-புல் தாரா ஒன்று வாங்கினேன். சொல்லிக் கொடுத்தவர் 'என்ன என்ன வார்த்தைகளோ ..' (வெண்ணிற ஆடை) பாட்டின் அந்த முதலடியை மட்டும் சொல்லிக் கொடுத்துவிட்டு மீதியை நீயே 'பிடித்துக் கொள்' என்று போய்விட்டார். எங்க பிடிக்கிறது? ஆன மட்டும் முயற்சித்தும் அது என் பிடிக்குள் அகப்படவேயில்லை.

8. சரி, சித்திரமும் இசையும்தான் நம்மளை விட்டு இப்படி ஓடுது; விளையாட்டில் ஏதாவது முயற்சிக்கலாமென நினைத்து முயன்றதும் உண்டு. இங்கு ஒரே ஒரு வித்தியாசம். யாரோடு சேர்ந்து பழக ஆரம்பித்தாலும் அந்தக் குழுவில் முதலாக எல்லோரையும் தோற்கடிக்கும்படி முதலிடத்தை முதலில் பெற்றுவிடுவேன். எல்லாம் ஒரு ஸ்டேஜ் வரைதான். அதன்பின் நான் அதிலேயே தேங்கிவிட எல்லோரும் என்னை ஓவர் டேக் செய்வது வழக்கம். அனேகமாக கிரிக்கெட் தவிர எல்லா விளையாட்டிலும் கொஞ்சமாவது கைவண்ணம் காட்டியிருப்பேன்.

.........அப்பாடா..ஒரு வழியா நம்ம பற்றி கொஞ்சம் சொல்லியாச்சு .. ஆள விடுங்கப்பா .. weird விஷயங்கள் எழுதச் சொல்லி 'i am a lousy guy' அப்டின்னு முன்னொரு பதிவில் சொல்ல வச்சாச்சு. இப்போ எட்டு கேட்டு உதவாக்கரைன்னு சொல்ல வச்சாச்சு. போதுமப்பா போதும்.. மக்கள்ஸ், இனிமேலும் இந்த மாதிரி confessions பண்ண வச்சு என்னை முழுசுமா வெளிக்காண்பிக்க வைக்காதீங்க. கட்டாயமா நம்ம பதிவர்களுக்கு என் சுயரூபம் தெரியணுமா, என்ன? பாவம் நானு .. உட்ருங்க...

ஓ! அடுத்து எட்டுபேரை கை காண்பிக்கணுமோ. பாவப்பட்ட அந்த எட்டு ஆட்கள்:

கடப்பாரை
ஜாலி ஜம்பர்
ஸ்ரீதர் வெங்கட்
ராம்
லிவிங் ஸ்மைல் வித்யா
ப்ரபு ராஜதுரை
தெக்கிக் காட்டான்
கல்வெட்டு


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Monday, June 18, 2007

224. காவல்துறையினரோடு ஓர் அனுபவம்

*

சில சமயங்களில் நாம போட்டு வச்சிருக்கிற கணக்கு சுத்தமா தப்பா போகும் போது ரொம்ப சந்தோஷமா ஆயிடுது. சமீபத்தில நடந்த காவல் துறை ஆட்களோடு தொடர்புடைய இரண்டு நிகழ்வுகள் அப்படித்தான் ஆகின.

சில நாட்களுக்கு முன் நானும் தங்கமணியும் இருட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது எங்களைத் தாண்டிச் சென்ற ஒரு தம்பதிகளின் மொப்பட் ரோடின் நடுவில் இருந்த so called median-ல் தடிக்கி வண்டியோடு விழுந்தார்கள். பச்சிளம் கைக் குழந்தை வேறு. சும்மா சொல்லக்கூடாது அந்த தாயை. தான் விழுந்தும் அந்த நிலையிலும் எப்படியோ அணைத்த குழந்தையை விடவில்லை. பெரியவர்கள் இருவருக்கும் உடனே எழுந்திருக்க முடிந்தாலும் ஓரளவு நல்ல அடிதான். ஆனால் குழந்தை தாயின் அணைப்பில் எந்தவித அதிர்வுமின்றி பேசாமலிருந்தது.

அவர்கள் விழுந்ததற்கு முழுக் காரணமாக இருந்தது எது அல்லது யார் என்று எப்படிக் குறிப்பிட்டுக் கூறுவது என்று தெரியவில்லை. அரசாங்கம் என்று பொதுவாகச் சொல்லவா; நகராட்சி என்பதா; காவல்துறை என்பதா என்று தெரியவில்லை. ஏனெனில், (அவர்கள் விழுந்தது மதுரை மீனாட்சி கல்லூரி அருகில், செல்லூர் ரோடு ஆரம்பிக்கும் இடம் - இக்குறிப்பு மதுரைக்காரர்களுக்காக ) அந்த இடத்தில் சாலையைப் பிரிக்கும் அந்த மீடியன் அரை அடி உயரம்கூட இல்லாதது; கறுப்பு வெள்ளை பெயிண்ட் அடிப்பார்களே அதெல்லாம் இல்லாதிருந்தது; சரியாக அந்த இடத்தில் மின் தெருவிளக்கும் இல்லாதிருந்தது; இவை எல்லாமே அந்த விபத்துக்குரிய காரணிகள். வண்டியோட்டிகளுக்கு அந்தத் தடை இருப்பதே சரியாகத் தெரியாது. பார்த்த விபத்தினால் வழக்கமாக வரும் எரிச்சலோடு அன்றைக்கு வீட்டுக்குப் போயாகிவிட்டது. ஆனால் நல்லூழாக - luckily!? - அடுத்த ஓரிரு நாளிலேயே மீண்டும் அந்த இடத்தைத் தாண்டி வரும்போது சில காவல்துறை அதிகாரிகள் அதே இடத்தில் நின்று கொண்டிருக்க நானும் அவர்கள் ஜீப் அருகில் நிறுத்தி நின்று கொண்டிருந்த ஓட்டுனரிடம் இவர்கள் யாரென்று கேட்க, ஏ.சி., ட்ராஃபிக் என்றதும் நேரே அவரிடம் போய் நடந்த அந்த விபத்தைப் பற்றிக் கூறினேன். "ஏன் சார், ரோடுன்னா ஆயிரத்தெட்டு accidents நடந்துகிட்டுதான் இருக்கும். அதுக்கெல்லாம் நாங்க என்ன பண்ண முடியும்? வண்டி ஓட்டுறவங்கதான் கண்ணைத் திறந்து ஒழுங்கா ஓட்டணும். எங்கள என்ன பண்ணச் சொல்றீங்க? பெருசா சொல்ல வந்துட்டீங்க ...போங்க சார், போய் உங்க வேலை எதுவோ அத ஒழுங்கா செய்யுங்க" - இப்படித்தான் ஒரு பதிலை எதிர்பார்த்தேன். ஆனால் அந்த கொஞ்ச வயசு அதிகாரி பொறுமையாகக் கேட்டார். என்ன செய்யலாம்னு என்கிட்டயே கேட்டார். சொன்னேன். பீட்டில் இருந்த போலீஸ்காரரைக் கூப்பிட்டார். இன்னும் இரண்டுமணி நேரத்தில் இந்த இடத்தில் ஒரு பீப்பாய் அடையாளத்துக்கு வைத்தாக வேண்டும் என்றார். எனக்கும் நன்றி சொன்னார். நானும் சொன்னேன்.

Image and video hosting by TinyPic
செம்மை செய்த பின் எடுத்த படம்.




அடுத்த நாள் அந்த இடத்தில் ஒரு பீப்பாய் சமர்த்தாய் உட்கார்ந்திருந்தது. அதைவிடவும் அதிலிருந்து ஒரு வாரத்துக்குள் அந்த இடத்தை மேலும் செம்மைப் படுத்தி இப்போது அது ஒரு பாதுகாப்பான இடமாக மாறி விட்டிருக்கிறது. சே! காவல் துறை ஆட்களை வைத்து நம்ம போட்ட கணக்கு இப்படி ஒரேயடியா தலைகீழா தப்பா போச்சேன்னு எனக்கு ஒரே சந்தோஷம்!

சரி அதுதான் அப்டின்னா, இப்போ அஞ்சு நாளைக்கு முன்னால எங்க வீட்டுக்குப் போற வழியில் (மதுரைக்காரங்களுக்கு - பாத்திமா கல்லூரிக்குப் பக்கத்தில் ) உள்ள ஒரு traffic island-ல் உள்ள ஒரு பாதுகாப்பின்மையை அங்கு நின்ற கான்ஸ்டேபிளிடம் - பெயர்: திரு. குமார் - சொன்னேன். அவரும் தன்மையாக் கேட்டுட்டு நாளைக்கு இந்த இடத்திற்குப் பணிக்கு வரும் காவலரிடம் ட்ராஃபிக் ஏ.சி.ன் தொலைபேசி எண் கொடுத்தனுப்புகிறேன். நீங்கள் அவரிடம் பேசுங்கள் என்றார். அதே போல அடுத்த நாள் அங்கு நின்ற காவலர் - பெயர்: திரு. அபு பக்கர் - ஏ.சி.யின் எண் கொடுத்தார். ஏ.சி.யின் பெயர் கேட்டேன். சிவானந்தன் என்றார். வீட்டுக்கு வந்து உடனே தொலைபேசினேன். ரிங் போய்க்கிட்டே இருந்தது; எடுக்க ஆளைக் காணோம். சரி அவ்வளவுதான்னு இருந்தேன். தொலைபேசி வைத்ததுமே மறுபடி என் தொலை பேசி கிணுகிணுத்தது. வேறு யாரோன்னு நினச்சி எடுத்து, யாருங்க பேசுறதின்னு கேட்டா, இப்போ நீங்கதான இந்த எண்ணுக்கு பேசியது என்று ஒரு குரல். சரி.. ஏ.சி.யின் அலுவலகத்திலிருந்து யாரேனும் பேசுவார்கள் என்று எண்ணினால் பேசியது ஏ.சி.யேதான்! - ஆச்சரியமாக இருந்தது.

அடுத்து, என்ன விஷயம் என்று கேட்டார்; சொன்னேன். ஆங்.. அதெல்லாம் தெரியும். வேண்டியதைச் செய்வோம். ம்ம்.. - இப்போதும் இப்படித்தான் பதில் வரும் என்று நினைத்தேன்.ஆனால் எந்த வித அதிகார தோரணையற்ற குரலில் பேசினார்; விளக்கம் கேட்டார். ஏற்கெனவே அந்த இடத்தில் செய்யப் போகும் மாற்றங்கள் பற்றியும் விளக்கினார்.நீங்கள் சொல்லும் குறையையும் நினைவில் வைத்திருந்து வேண்டியதைச் செய்கிறேன் என்றார்.

இந்த இரண்டு ஏ.சி.யும் ஒரே ஆளா என்று தெரியாது. ஆனால் அப்படித்தான் இருக்கணும். ஒரேமாதிரியான utmost courtesy. நிரம்பவே எனக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக போயிற்று. அதிகாரத்தில் இருப்பவர்கள், அதுவும் போலீஸ் துறையில் உள்ள ஓர் உயர் அதிகாரி ஒரு சாதாரண குடிமகன் சொன்ன சில கருத்துக்களுக்குச் செவி சாய்ப்பது என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. சொன்னதை செய்தும் காட்டுவது மிகப் பெரிய விஷயம்தான். நம் நாடு நல்லாதான் சென்று கொண்டு இருக்கிறதோ...? நான்தான் ரொம்பவே cynical-ஆன ஆளாக இருக்கிறேனோ?

Tuesday, June 12, 2007

223. யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? 3

பதிவர் நல்லடியார் என் பெயரிட்டே இதுவரை மூன்று பதிவுகள் இட்டுள்ளார்; அவைகளை நான் இதுவரை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது என் பதிவொன்றில் ஒரு பின்னூட்டம் இட்டு தன் பதிவுக்கு அழைத்துள்ளார். அவருக்காகவே இதைப் பின்னூட்டமாக எழுத ஆரம்பித்து நீளம் காரணமாக இதை ஒரு தனிப்பதிவாக்கியுள்ளேன்.

நல்லடியார்,

உங்கள் பின்னூட்டத்திற்கு கடைசியிலிருந்து பதில் சொல்ல வேண்டியதுள்ளது.
//எனது பதிவிலும் சில கேள்விகள் இருக்கலாம். பொடிநடையா வந்து வாசித்து செல்லுங்கள்.//
பொடிநடை நடந்து உங்கள் பதிவை ஏற்கெனவே வாசித்துள்ளேன்; ஆனாலும் கண்டு கொள்ளாமல் வந்ததற்குரிய காரணம் -

உங்கள் எழுத்தில் உள்ள எள்ளல்தான். கருத்துக்களைச் சாடுங்கள்; பதில் இருந்தால் தருகிறேன். அதை விட்டு விட்டு தனிமனித எள்ளலோடு எழுதுபவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது? அப்படி என்ன எள்ளல் என்று நிச்சயம் கேட்பீர்கள். ஒரு சில துளிகள் உங்கள் எழுத்திலிருந்து....

1. //சமூக அக்கறையில் எழுதுவதாக நம்பச் சொல்லும் தருமி மாதிரியான என்றாவது குடிக்கும் பழக்கமுள்ள நாத்திகராக இருந்தாலும்கூட .........//
நான உங்களை எப்போது நம்பச்சொன்னேன்?
என்ன சொல்ல வருகிறீர்கள்?
நாத்திகனாக இருந்தும் குடிக்கிறானே என்றா?
இல்லை, குடித்தும் நாத்திகனாக இருக்கிறானே என்றா?
இல்லை, இவன் என்றாவது மட்டும்தானே குடிக்கிறானே என்றா?

2. தலைப்பையே பாருங்களேன்: தி.நகரில் தருமிக்கு என்ன வேலை? (பதில் கட்டாயம் சொல்ல வேண்டுமோ? அப்படியெனில் பதிவின் முதல் வரியைப் படியுங்களேன்; ஓ! நீங்கள் 'எங்கேடா இவன் இஸ்லாத்தை / இஸ்லாமியரைப் பற்றி எழுதுவான்; அதை மட்டும் வாசிப்போம்' என்றிருந்தால் நான் என்ன சொல்ல?

3. அந்த உங்கள் பதிவில் என்னைக் கொஞ்சம்தானே "கவனித்துள்ளீர்கள்". மீதியெல்லாம் நேசகுமாருக்குத்தானே!

இந்த காரணங்களால் பதில் சொல்லாமலிருந்தேன்; இந்தப் பதிவுக்கு மட்டுமல்ல; குழப்பத்திலிருக்கும் பஸ் பயணியாக தருமியை ஆக்கிய பதிவு, நோக்கியா வாங்கிய தருமி இந்தப் பதிவுகளுக்கும் பின்னூட்டமிடாதது இது போன்ற உங்கள் மொழியாள்மைக்காகத்தான். இப்போது என் 'வீட்டுக்கே' வந்து கேட்கும்போதும் மெளனம் சாதிப்பது நாகரீகமாகாது என்பதாலும், என் பெயர் போட்டே இத்தனை பதிவுகள் போட்டு என்னைப் பெருமை படுத்தியமைக்காகவும் உங்கள் கேள்விகளுக்கு என் பதிலை இப்படி ஒரு தனிப் பதிவாகவே இடுகிறேன்.

//சென்ற மாதப்பதிவில்"குண்டு எல்லாம் எதற்கு?" என்ற நாத்திகப் பதிவைக் காண நேர்ந்தது.//
இப்பதிவில் என்ன நாத்திகம் கண்டீர்களோ எனக்குத் தெரியவில்லை. இஸ்லாமை அல்ல, இஸ்லாமியரைக் குறை சொன்னாலே நாத்திகமா, என்ன?

//முஸ்லிம்கள் ஐவேளை தொழ அழைக்கும் பாங்கொலியும் L.R.ஈஸ்வரியின் கற்பூர நாயகியே கனக வல்லியோ அல்லது குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் கும்மிப் பாட்டும் ஒன்றா?//
உங்களுக்குப் பாங்கொலி இனிமையாக இருக்குமென்றால் எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும், இருக்கும் என்பது உங்கள் எண்ணமா? நீங்கள் சொல்லும் இந்து சமயப் பாடல்கள் உங்களுக்குக் குத்துப் பாட்டு என்றால் எல்லோருக்கும் அப்படிதானா? நீங்கள் சொன்னதில் முதல் பாட்டு எனக்குகூட பிடிக்குமே! கும்மிப் பாட்டு என்று மற்றொரு சமயப் பாடலைக் கூறுவது ஒருவேளை அவர்களுக்குத் தவறாகப் படலாம் வருத்தம் தரலாம் என்றுகூட நீங்கள் நினைக்கவில்லை இல்லையா? 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்பது தெரியாதவரா நீங்கள்? உங்களுக்குக் குத்துப் பாட்டாகப் படுவதுபோல் பாங்கொலி மற்றவருக்கு எப்படியிருக்கும் என்றும் நினைத்துப் பாருங்கள் - இசையில்லாமல், ஒரு புரியாத மொழியில் ஒரு சத்தம் என்பதைத் தவிர மற்ற மதத்தினருக்கும் அது இனிமையாக இருக்கும் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; மற்ற சமயத்தினர் நாலு பேரிடம் கேட்டுப் பாருங்கள்.

//போக்குவரத்திற்கு இடையூறாக தொழுகை நடத்துதை வேண்டுமானால் குறையாகச் சொல்லலாம்.// அதைத்தான் நானும் சொல்லியுள்ளேன். ஆனால் அதோடு, // அந்த இடையூறை யாரும் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை; அதுவே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது -பரவாயில்லை நம் மக்கள் adjust செய்து கொள்ளுகிறார்களே என்று.// என்று நான் சொல்லியிருப்பதன் பொருள் என்ன? படித்தீர்களா அதை?

//முஸ்லிம்கள் முடிந்தவரை இத்தகைய தற்காலிக இடையூறுகளையும் தவிர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள முஸ்லிம்கள் இவ்விசயத்தில் மாற்று மதத்தவரின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று சொல்வதில் நியாயமிருக்கிறது//
மிக்க நன்றி.

//'அடப் பாவமே' அப்டின்னுதான் சொல்ல முடிஞ்சுது.// யாரை, எதற்காக, ஏன் நொந்து கொண்டேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

//அப்படீன்னா தருமியும் நேசகுமாரும் யார் என்கிறீர்களா? யாருக்குத் தெரியும் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் !//
இவ்வரிகளும் இதற்கு முந்திய பத்தியும் என்ன நினைத்து, என்ன சொல்ல வருகிறீர்கள் என்று உண்மையிலேயே புரியவில்லை.

// நிரந்தர இடையூராக சாலையை அடைத்துக் கொண்டு வீற்றிருக்கும் தெருப்பிள்ளையார்,உண்டியல்களும், தாரை தப்பட்டையுடன் சிவலோகம் செல்லும் சவ ஊர்வலங்கள் பற்றி உங்கள் நாத்திகம் என்ன சொல்கிறது? சாமி சிலைகளுக்குப் போட்டியாக நிற்கும் பகுத்தறிவுச் சிலைகள் பற்றியும் சொல்லுங்களேன்.//
இதைத்தான் மேலேயே ஒரு முறை கூறியுள்ளேன். நீங்கள் இருப்பது "ஒற்றைச் சாளர வீடு". எதைப் பார்க்க வேண்டுமென்று மெனக்கெடுகிறீர்களோ அதை மட்டும் பார்க்கிறீர்கள்.கொஞ்சம் நீங்கள் வாசித்த பதிவுக்கு அடுத்ததாக, "யாரைத்தான் நொந்து கொள்வதோ...?" என்று எழுதியுள்ள, இன்னும் எழுத உள்ள பதிவுகளைப் படித்து விட்டு உங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள், சார். நீங்கள் சொல்லும் 'தாரை தப்பட்டையுடன் சிவலோகம் செல்லும் சவ ஊர்வலங்கள்' பற்றி இங்கே பார்க்கவில்லை போலும். என்னைப் பற்றிய தீர்ப்பெழுதும் முன் என் பதிவுகள் எல்லாவற்றையும் பாருங்கள், ஐயா.

நீங்கள் நம்ப முடியாத ஆனால் நான் நம்பும் சமூக அக்கறையுடன்தான் இவைகளை எழுதியுள்ளேன். இங்கு இஸ்லாமியரை மட்டும் குறை சொல்ல எழுதப் பட்டதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. இத்தவறுக்குக் காரணம் நான் ஏற்கெனவே சொன்னதுதான்: 'எங்கேடா இவன் இஸ்லாத்தை / இஸ்லாமியரைப் பற்றி எழுதுவான்; அதை மட்டும் வாசிப்போம்' என்றிருந்தால் நான் என்ன சொல்ல? குண்டு எல்லாம் எதற்காக என்ற அந்த "நாத்திகப்" பதிவை இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து வாசித்துப் பார்த்தால் நான் முக்கிய குறையாகச் சொல்வது என்ன என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். பொறுமையில்லை உங்களுக்கு. இப்படி எழுதிய பதிவு மட்டும்தானா கண்ணில் பட்டது. அதைத் தொடர்ந்து எழுதியுள்ள பதிவுகளும், அவைகளில் எழுதியிருப்பவைகளையும் ஏன் படிக்க உங்களுக்குப் பொறுமையில்லை? ஏதோ இஸ்லாமை எதிர்க்க மட்டுமே நான் பதிவுகள் எழுதுவதாக நினைத்து விட்டீர்களா?

என் மதப் பதிவுகளிலும் நான் நம்பிய என் மதத்தைப் பற்றிய நான் எழுப்பிய ஐயங்கள் உங்கள் கண்களில் படவில்லை; நான் இஸ்லாமைப் பற்றி எழுதியது மட்டுமே உங்களை வந்தடைகிறது என்றால் அதற்குக் காரணம் உங்கள் ஒற்றைச் சாளர வீடு. நான் என் வீட்டுக் கதவுகளையும், சாளரங்களையும் முழுமையாகத் திறந்து வைத்துள்ளேன் - கொடுப்பதற்கும், பெறுவதற்கும். நாம் இருவருமெழுதி வரும் பதிவுகளின் உள்ளீடே இதைச் சொல்லும். உங்கள் மதம் சார்ந்த பதிவுகளை மட்டுமே எழுதும் உங்களை ஒரே ஒரு பதிவு மாற்றி எழுதட்டுமே என்றுதான் 'அழகான ஆறு' தொடர் பதிவிற்கு உங்களை அழைத்தேன். அழைப்புக்கு எந்த response-ம் இல்லை. அதைத் தப்பு என்று கூறவில்லை. எழுத முடியாமைக்கு வருத்தம்கூட சொல்லவில்லையே என்று கூட நான் நினைக்கவில்லை. ஏனெனில் மத ஈடுபாடு மட்டுமே உங்கள் பதிவுகளுக்கான காரணம் என்று புரிந்து கொண்டேன். ஆனால் இப்போது என் ஒரு பதிவில் நான் இஸ்லாமியரின் வழிபாட்டை, அதற்கான ஒரு சமூக மீறலைப் பற்றி சொல்லியதும்.அதற்குப் பிறகு நான் குற்றம் கண்டது யாரை என்றுகூட புரிந்து கொள்ளாமல், ஏன் அந்தப் பதிவுக்கு அந்தத் தலைப்பை வைத்தேன் என்று கொஞ்சமும் யோசித்துப் பார்க்காது, 'ஆஹா, என் மதக்காரர்களை குறை சொல்லிவிட்டாயா' என்ற உங்கள் கோபமும் எரிச்சலும் உங்களின் பார்வையை எனக்கு முழுவதுமாகப் புரியவைக்கிறது. 'அந்த இடையூறை யாரும் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை; அதுவே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது' என்று சொல்லி அதன்பின் ஏன் அந்தத் தலைப்பு வைத்தேனென்பதைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

ஒரு சமூகம் அங்கீகரித்து விட்ட, அதற்காக நான் சந்தோஷமும் பெருமையும் படும் ஒரு சமூக மீறலைப் பற்றிப் பேசியபோது வந்துள்ள உங்கள் கோபம், அதன்பின் //சமூக அக்கறையில் எழுதுவதாக நம்பச் சொல்லும் தருமி// எழுதி வரும் மற்ற சமூக மீறல்களைப் பற்றியும் உங்களுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். என் பதிவில் நடுத்தெருக் கோவில் ஒன்றைப் பற்றி எழுதியதில் மிகுந்த மத நம்பிக்கைகொண்ட ஒரு பதிவர், 'சாமியெல்லாம் இப்படி இடைஞ்சல் தரும்படி சொல்லவில்லை; இப்படிப்பட்ட கோவிலை, அத்துமீறலை இடித்து அகற்ற வேண்டும்' என்று சொல்லியுள்ளார். உங்களால் அப்படி ஒரு நிலைப்பாட்டை இஸ்லாமைப் பொருத்தவரை எடுக்க முடியாது. குதிரைக்கு கண்ணில் மாட்டும் blinkers போல் ஒரே நேர்கோட்டுப் பாதை உங்களுக்கு என்று நினைக்கிறேன். நான் நாலு பக்கமும் பார்க்கிறேன். எது சரியென்று நான் தீர்ப்பிடவில்லை.

நல்லடியார், உங்கள் நம்பிக்கையை, மதத்தை, நடைமுறைகளை யாரும் கேள்வி கேட்டாலே தவறு என்று நினைக்கிறீர்கள். எல்லா மதங்களுமே மக்களுக்கான பொது விஷயங்கள். அவைகளைப் பற்றிய விவாதங்கள் நீங்களே உங்கள் பதிவுகளில் சொல்லியுள்ளது போல காலம் காலமாய் இருந்து வருபவை; என்றும் இருக்கும். மார்க்ஸியமும், இன்றைய உலகமயமாக்கலும் விவாதத்திற்குள்ளாவது போல்தான் மதங்களும் விவாதத்திற்குட்படும். அதுவே நியதி. நாத்திகனாக ஒருவன் மதத்தைப் பற்றிய விவாதத்தை வைத்தால் அதற்குப் பதில் தெரிந்த நம்பிக்கையாளர்கள் பதில் தர முனைவதும், பதில் தெரியாத நம்பிக்கையாளர்கள் 'நீ என்னமும் சொல்லிட்டு போ; எனக்கு என் கடவுள் நம்பிக்கை பெரிது' என்று சொல்லிப் போவதுதான் நடைமுறை. இதில் கேள்வி கேட்டாலே அது தவறு என்ற நிலைப்பாடு சரியா? ஏன், இஸ்லாமியர்கள் மற்ற மதங்களைப் பற்றிய சர்ச்சையில் கலந்து கொள்வதில்லையா? சொல்லில் மரியாதையோடு, புண்படுத்தாத மொழியில், sensible-ஆக, சரியான logic-ஓடு மதங்களைப் பற்றிய கேள்விகளை நாத்திகர்கள் எழுப்பிக் கொண்டிருப்பது தொடரத்தான் செய்யும். இதில் எந்த மதத்திற்கும் விலக்கு இல்லை. பதில் இருந்தால் தாருங்கள்; இல்லையேல் விட்டு விடுங்கள்.

உங்கள் பதிவுக்கு மட்டுமல்ல; என் பெயர் சொல்லிவரும் சில பதிவுகளை நான் கண்டு கொள்வதில்லைதான். மொழியாளுமை ஒரு காரணம் என்றால் சில நேரங்களில் என் பதிலுக்கு எந்த பயனுமிருக்கப் போவதில்லை என்று தெரியுமாதலால் விட்டு விடுகிறேன்.

இரண்டு உதாரணங்கள்:
1. //தான் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேற பிரதானக் காரணமாக, இயேசுவை கர்த்தர் காப்பாற்றவில்லை என்பதால் கடவுளின் வல்லமை, கேள்விக்குரியதாகிறது என்றார்.//
இதற்குப் பதில் சொல்லிவிட்டோம் ஆகவே எங்கள் மதத்திற்கு வந்துவிட வேண்டியதுதானே என்றொரு கேள்வி உங்களிடமிருந்தும், மற்றும் உங்கள் நண்பரொருவரிடமிருந்தும். இதற்கு நான் இதுவரை பதில் சொல்லவில்லை. காரணம் - இவர்கள் தாங்கள் செய்யும் விவாதம் என்னவென்று தெரியாமல் செய்கிறார்களே என்றுதான். ஏனெனில் நான் இதைப் பற்றிப் பேசும்போது predeterminism vs free will; predeterminism vs prayers என்ற தளத்தில் பேசுகிறேன். அதையெல்லாம் விட்டு விட்டு அல்லாஹ் ஈசாவைக் காப்பாற்றி விட்டாரே; பின் என்ன? இங்கே வந்துவிடு என்பது ....?! குண்டு பதிவில் நான் கூறியதில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அப்பதிவின் spirit-யை தவற விட்டது போலவே இங்கும் தவறு செய்துள்ளீர்கள். உங்கள் கருத்துப்படியே வைத்துக் கொண்டாலும், கிறித்துவம் பற்றிப் பேசியபோது, ஜிப்ரேல் பற்றி சொன்னதுபோல, இரண்டு மதக்காரர்களுக்கு இரு வேறு நம்பிக்கைகள்; இதில் எது சரி? அல்லது, எல்லாமே கதைதான் என்கிற என் மூன்றாவது option-ம் சரியாக இருக்கலாமில்லையா? என் பதிவுகளில் நான் சொன்னதை முழுமையாக உள்வாங்கியிருந்தால் இந்த உங்கள் குற்றச்சாட்டுக்குத் தேவையே இருந்திருக்காது.

2. உங்கள் நோக்கியா பதிவையே எடுத்துக் கொள்ளுங்களேன். நான் கேட்டது ஏன் மனிதனுக்கும் கடவுளுக்குமிடையில் இப்படி ஒரு கொடூரம் என்று. அதற்கு நோக்கியா வாங்கிய தருமியில் பதில் கொடுத்துள்ளீர்கள்.

என் கேள்வி: ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்."

உங்கள் பதில்: தன் மகன் எக்காரணம் கொண்டும் நஷ்டமடைந்து விடக்கூடாது என பேரன்புகொண்ட தந்தை தேவைப்பட்டால் மென்மையாக அடித்தும்கூட எச்சரிப்பார்.

ஒன்று செய்யுங்கள் - இந்த இரண்டு விவாதங்களையும் உங்களுக்கு இஸ்லாமியரல்லாத நண்பர் யாருமிருப்பின் அவர்களிடம் கொடுத்து, அவர்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுக் கொள்ளுங்கள். என் கேள்வியில் உள்ள 'கடவுளின் கொடூரம்' உங்கள் பதிவில் 'மென்மையாக' மாறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரு இஸ்லாமியரல்லாத ஒருவரைப் பார்க்க ஆசை. ஆனால் நான் உங்கள் ஒரு சாளர வீட்டிற்கு வந்து இதைச் சொன்னால் என்ன பயன்? இருவரும் ஆளுக்கொரு முயல் வைத்துக் கொண்டு, குருடர்கள் பார்த்த யானைக் கதை போல் ஏதாவது தொடர்ந்து பேசிக்கொண்டிருப்போம். என்ன பயன் இருக்கும்?

இருந்தாலும், உங்களின் அந்தப் பதிவில் நான் போட நினைத்த பின்னூட்டம் இதுதான்:

நல்லடியார்,

இந்த எழுத்து என் ஸ்டைல் கிடையாது. உங்கள் ஸ்டைலிலேயே பதில் சொல்ல முயன்றுள்ளேன்.

நோக்கியாவில் நீங்கள் சொன்ன இந்த ஒப்பந்தங்கள் மட்டும் இருந்தால் சரி. ஆனால் கடைசியாக இன்னுமொரு ஒப்பந்தம் இப்படி இருந்திச்சுன்னா என்ன பண்ணணும்னு சொல்லுங்க:

"நோக்கியா போன் வாங்கியது வாங்கியதுதான். இனி எப்போதேனும் அந்த உரிமையாளர் இந்த போனை மாற்ற நினைக்கவோ, இல்லை அதன் தரம் பற்றிய ஐயங்கள் ஏதும் எழுப்பவோ, இந்த போனை விட்டு விட்டு வேறு போன் ஏதும் வாங்க நினைக்கவோ கூடவே கூடாது. அப்படியின்றி "...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், நோக்கியா கம்பெனி அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடும்" என்றால் ...?"


என்னைப் பொறுத்தவரை மதம் ஒன்றும் கழட்ட முடியாத, கழட்டக் கூடாத கவச குண்டலமல்ல; பிடித்தால் போடவும், இல்லையென்றால் கழட்டிப் போடவும் கூடிய ஒரு சட்டை. அப்படி இருந்தமையால்தான் இந்துக்களாக இருந்த நம் முன்னோர் மாற்று மதங்களுக்குச் செல்ல முடிந்தது.


பதிவர் கல்வெட்டு போன்று சிலர் என்னிடம் 'நம்பிக்கையாளர்களிடம் விவாதிப்பது தேவையற்ற ஒரு வீண் வேலை' என்றார்கள். நானோ எப்படியோ இதை ஒரு academic interest ஆக ரொம்ப ஆண்டுகளாக வளர்த்துக் கொண்டு விட்டதால் என்னால் நாய்வாலை நிமிர்த்த முடியவில்லை. ஆனாலும் மதங்கள் பற்றிய என் பதிவுகளை நான் எப்போதோ முடித்துக் கொண்டேன். எல்லா மதங்களைப் பற்றிய என் கேள்விகள் பலவும் கேள்விகளாகவே இன்னும் இருக்கின்றன. அவ்வப்போது உங்களைப் போன்றோர் தரும் பதில்களுக்கு எதிர்வினையாற்றுவது மட்டுமே செய்து வருகிறேன். கொஞ்சம் நாய்வாலை நிமிர்த்தி வச்சிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

ரொம்ப நாள் கழிச்சி, நீண்ட, எனக்குப் பிடித்த மதம் பற்றிய ஒரு பதிவை இட வழிசெய்தமைக்கு நன்றி.
===============================================================================


12.06.'07 காலை 10 மணிக்கு சேர்த்த பின் குறிப்பு:
1. மற்ற மதத்தினரின் பாடல்களை உங்கள் பதிவில் கும்மிப் பாட்டு, குத்துப் பாட்டென்று நீங்கள் சொல்லியிருந்தாலும் உடனே உங்கள் பதிவுகளுக்கு வந்து யாரும் எதிர்ப்பாட்டு பாடவில்லை. ஆனால் இதேபோல் பாங்கொலி பற்றி யாராவது கொஞ்சம் கேலி செய்திருந்தால் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்த வேற்றுமை ஏனென்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன். என் மதம் என் உயிருக்கும் மேலானென்பதைத் தவிர வேறேதும் பதில் உண்டா?

2. நான் நடுத்தெரு இந்துக் கோவில்களைப் பற்றி விமர்சனம் செய்திருந்தும் ஒரே ஒரு இந்துவாவது ஏதாவது நொண்டிச் சாக்கு சொல்லியுள்ளாரா? அவனை நிறுத்தச் சொல்; நான் நிறுத்துகிறேன் என்ற தத்துவத்தைப் பொழிந்துள்ளார்களா? வேறு மதக்காரர்கள் சாலைகளில் அப்படி பண்ணவில்லையா? இப்படி செய்யவில்லையா என்று கேள்வி கேட்டிருக்கிறார்களா? சாலைகள் எல்லாமே மிக நன்றாகவா இருக்கு; வேறு தடைகளே கிடையாதா என்றெல்லாம் கேட்கவில்லை. இதனால்தான் குடி கெட்டுவிட்டதாக்கும் என்றெல்லாம் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் காட்டும் இந்த தீவிரம் ஏன், அது சரிதானா என்று தயவு செய்து உங்களையே ஒரு முறை கேட்டுக் கொள்ளுங்கள்.

3. என்னை வேற்றொரு மதக்காரனாகப் பார்த்தாலும் இந்து கோவில்களைப் பற்றிப் பேசும்போது கூட நான் என்ன சொல்கிறேன்; அது சரியா என்றுதானே அந்த மதக்காரர்கள் பார்த்தார்கள். நான் மதத்தைத் தாக்குவதாக யாரும் கிஞ்சித்தும் நினைக்கவில்லையே. ஏன்? எது சரி? ஒருவேளை உங்களைப் போல அவர்களும் இருந்தால்தான் சரியா? புரியவில்லை.