நம் காவல்துறையினர் அளவுக்கு அதிகமாகவே வன்முறையைக் கையாளுகிறார்கள் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது என்றே எண்ணுகிறேன். சென்ற வாரத்தில் ஹரியானாவில் ஹோண்டா நிர்வாகத்தை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் ஈவு இரக்கமின்றி காவல்துறையினர் நடத்திய ஊழித்தாண்டவமும், சென்ற மாதத்தில் கேரளாவில் காவல்துறையினரிடமிருந்து மாணவர்களுக்குக் கிடைத்த தடியடிகளும் சமீபத்திய நிகழ்வுகள். அதைவிட எனக்கு ஆச்சரியமளித்தது அரசாங்க ஊழியர்கள் நம் தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிறுத்தம் செய்தபோது நம் போலீஸ் நடந்துகொண்ட முறை - ஆண், பெண் என்றோ, வயது வித்தியாசமோ பார்க்காமல் நடந்த விதமும், போலீஸ் வேனில் ஏறப்போகும் நிலையிலும் அரசு ஊழியர்களை அடித்துத் தள்ளியதும் எல்லா மீடியாக்கள் மூலமாகவும் நம்மை வந்தடைந்தன. ஆச்சரியம் என்னவெனில், அவர்களும் அரசாங்க ஊழியர்களே; போராடுவதும் அரசாங்க ஊழியர்களே. நல்லது நடந்தால் கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்குமே. நமக்கும் சேர்த்துதானே அரசாங்க ஊழியர்கள் போராடுகிறார்கள் என்ற சுயநல எண்ணம்கூட வராத அளவுக்கு எங்கிருந்து அவர்களுக்குக் கடமை உணர்வு சிலிர்த்தெழுந்தது என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. அரசின் உத்தரவை அமல் படுத்தவேண்டிய நிலையில் உள்ளவர்கள்; அதனால் அவர்கள் தங்கள் சுய விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு கடமை ஆற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று ஒருவேளை யாரும் சொன்னால், அவர்களுக்கு ஒரு வார்த்தை. அவர்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும் - கொஞ்சம் மனிதத்தன்மையோடு. வயசான வாத்தியாரையும், கலெக்டர் ஆபிஸ் பெண் குமாஸ்தாவையும் சுவரேறிக் குதித்துத் தப்பியோடவைக்க வேண்டிய அளவிற்கு விரட்டிப் போகவேண்டிய அவசியம் என்ன? அட, அவ்வளவு ஏன்? ஒருவேளை அடுத்து இவரே வந்துவிட்டால் என்ன செய்வது என்றுகூட நினைக்காமல் நள்ளிரவில் காக்காய் கொத்துவதுபோல கலைஞரைக் கொத்திக்கொண்டு போனார்களே அந்த கடமையுணர்வை என்னென்று விளிப்பது?! அந்த மனிதரின் வயதுக்காவது முரட்டுத்தனத்தைக் குறைத்திருக்கலாமே! கொஞ்சநேரம் பொறுத்திருந்தால் குண்டுக்கட்டாய் தூக்கிப்போவதற்குப் பதில் நடத்திக்கூட்டிக் கொண்டுபோகுமளவிற்கு நிலைமையைக் கொண்டுவந்திருக்கலாமே! நான் ஒன்றும் நம் தமிழ்நாட்டுக் காவலர்களைமட்டும் குறை கூறவில்லை. இது ஒரு பொது வியாதியாக நம் நாட்டுக் காவலர்களிடம் வளர்ந்துவிட்ட நிலை. மனிதத்தன்மையை அவர்கள் 'கடமை உணர்வு' இந்த அளவு மழுங்கடித்துவிடுமா, என்ன?
65-ல் நடந்த அன்றைய ஊர்வலத்தில் காவலுக்கு வந்த காவலர்களின் மனப்பாங்கும், ஊர்வலத்தின் இறுதிக்கட்டத்தில் அந்த ஜீப் எரிந்துகொண்டிருந்தபோது அவர்களின் பதபதைப்பும் என் நினைவுக்கு வந்ததாலேயே இதை எழுதும் ஆசை வந்தது. ஊர்வலத்தின் எங்கள் பகுதி அந்த சம்பவ இடத்தை அடைந்ததும், நாங்கள் கல்லூரி மாணவர்கள் அதுவும் முதுகலை மாணவர்கள் என்று விசாரித்தறிந்ததும் 'நீங்கள் சொன்னால் பள்ளி மாணவர்கள் கேட்பார்கள்' என்று சொல்லி எங்கள் மூலமாக நிலைமையை மாற்ற முயன்று, அதில் நாங்கள் வெற்றியடைய முடியாத நிலையில்தான் அவர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டு என்ற முடிவை எடுத்தார்கள். அதைவிட சட்ட எரிப்பு என்ற அந்த நிகழ்ச்சியை எங்கள் கல்லூரி வாசலிலேயே தங்கள் லத்தியாலும், துப்பாக்கியாலும் நடக்கவேவிடாதபடி செய்திருக்கலாம். இன்றைய போலீஸ் அதைத்தான் செய்திருக்கும்.
அன்றிருந்த காவலர்களுக்கும் இன்றைய காவலர்களுக்கும் உள்ள இந்த வெவ்வேறு மனப்பான்மைக்குக் காரணம் என்ன? எனக்குத் தெரிந்த ஒரே காரணம்: IMMUNITY. வேலியே பயிரை மேயும் நிகழ்ச்சிகள் சாதாரணம். காவல்நிலையங்களில் நடக்கும் பல்வேறு சேதிகளைப்பற்றி எல்லோருக்கும் தெரியும். சமீபத்திய எங்கள் ஊர் போலீஸ்காரர்கள் சென்னையில் அடித்த கொள்ளை; இன்னும் (சொல்லவேண்டாமென்றுதான் நினைத்திருந்தேன்) ஜெயலட்சுமி விவகாரம், இதில் எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது: பெரிய (மீசை) போலீஸ்காரருக்கு, [முகம்மது அலிதானே அவர் பெயர்?] ஸ்டாம்ப் பேப்பர் பலகோடி ஊழலில் உள்ள தொடர்பு.
குற்றவாளிகளென்றால் அவர்களெல்லோரும் முகத்தை மூடிக்கொண்டு வருவதைத்தானே பார்ப்போம்; அது என்ன, இந்த போலீஸ்காரர்களும், அரசியல்வாதிகளும் மட்டும் சிரித்துக்கொண்டும், டாட்டா காட்டிக்கொண்டும் வருகிறார்கள்?(இரண்டு வகையினருக்கும் எப்போதும் தண்டனை என்ற பேச்சுக்கே இடமில்லயே, அதுதான்!) அது மட்டுமின்றி, இந்த அலி கோர்ட்டுக்கு வரும்போது ராஜநடைதான், போங்க. அதோடு, அங்கே சீருடையில் இருக்கும் அவரது துறையினர் - பழக்க தோஷமோ என்னவோ - பயங்கரமா சல்யூட் அடிப்பது கண்கொள்ளாக் காட்சி. அவர் தலையை அசைத்து அந்த சல்யூட்டுகளை receive செய்து ஒரு ஸ்டைல் நடைபோடும் அழகே அழகு. அந்த immunityதான் காவல்துறையினரின் பலம். ஒரு குற்றத்தில் ஒரு போலீஸ் - கீழ் மட்டமோ, உயர்மட்டமோ - மாட்டிக்கொண்டாரெனின் அடுத்தநாளே அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவோ, இல்லை பதவி மாற்றம் செய்யப்பட்டதாகவோ செய்தி வரும் - வேலை நீக்கம் எத்தனை நாட்களுக்கோ, அல்லது சில மணிக்கணக்கில்தானோ; பதவி மாற்றம் என்பது பல சமயங்களில் "நல்ல" இடங்களுக்கான மாற்றலாகக்கூட இருக்கலாம். காவலர்களின் தவறுகள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை. பல சமயங்களில் கண்டுகொள்ளக்கூடப் படுவதில்லை. அவர்களின் அராஜகப்போக்கைக் கண்டித்தால் காவல்துறையின் morale போய்விடும் என்ற கருத்தில் மேலதிகாரிகள் தங்களின் கீழ் வேலை செய்யும் காவல்துறையினருக்குத் தண்டனை ஏதும் தருவதில்லை. அதோடு தவறு செய்யும் போலீஸ்காரர்களைப் பிடிக்கவேண்டியதே போலீஸ்தானே. 'இன்னைக்கு எனக்குன்னா நாளைக்கு உனக்கு' என்ற தத்துவம் நிறைய குற்றவாளிபோலீஸ்களைக் காப்பாற்றுகிறது.
திறமையான காவல்துறை என்ற பெயர் நமது தமிழ்நாட்டுக் காவல் துறைக்கு உண்டு. அங்கே மனித்தத்தன்மைக்கும் இடமுண்டு என்றிருந்தால்...?
தண்டனை என்று ஒன்று இல்லாவிட்டால் தவறுகள் செய்வது மனித இயல்பே. Power corrupts என்பார்கள். தண்டிக்கப்படமாட்டோம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் கையில் அதிகாரமும் இருந்துவிட்டால் - that's a deadly combination.
No comments:
Post a Comment