Monday, October 16, 2006

180. (கொஞ்சம்) நேரடியாக ஒரு ELECTION REPORT***

நேற்று எங்கள் ஊர் மதுரையில் மாநகராட்சி ஓட்டுப் பதிவு. துணைவியாருக்கு PO1 பொறுப்பு ஒரு பூத்தில். கொஞ்சம் பதட்டத்தோடுதான் எல்லோருமே இருந்தார்கள் - சென்னை பற்றிய சேதி பரவியிருந்ததால். மதியம் உணவுக்கு ஏற்பாடு செய்யப் போகும்போதே பக்கத்து பூத்தில்தால் பிரச்சனை; எங்கள் பூத்தில் பிரச்சனையேதும் இதுவரை இல்லை என்றார்கள். மாலை கூப்பிடச் சென்றால் பூத் கதவுகள் இறுகப் பூட்டப்பட்டு தேர்தல் தளவாடங்களோடு தளவாடங்களாக மக்களும் பூத்துக்குள் பத்திரமாக வைக்கப்பட்ட்டிருந்தார்கள். மாலை ஆறு மணிக்கு மேல் 'ரிலீசா'னார்கள். அதன்பின் அருகாமையிலிலிருந்த மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு இரண்டரை மணி நேரம், செய்த வேலைக்குரிய பணப் பட்டுவாடாவிற்காகத் தேவுடு காக்க வேண்டியதாப் போச்சு. அவர்களோடு நானும் அந்த அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தேன். அந்த ஏரியாவிலுள்ள 20 பூத்துகளில் தேர்தல் வேலை செய்தவர்கள் யாவரும் குழுமினர்.

பலரிடமும் பகல் நேரத்தில் நடந்தவைகளின் தாக்கம் என்னவோ குறையாமலிருந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் தப்பிப் பிழைத்தது பற்றியும், தங்கள் பூத்துகளில் நடந்தவை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என் துணைவியார் இருந்த பூத்தில் - பெண்களுக்கான பூத் என்பதலா என்னவோ - கலாட்டா கொஞ்சம் குறைவாகவே இருந்திருக்கும் போலும். நான்கைந்து பேர் உள்ளே நுழைந்து 'இப்போ ஒரு 25 பேர் வருவாங்க; எந்த கேள்வியுமில்லாமல் ஓட்டுப் போட விடுங்க 'என்ற ஒரு தெளிவான உத்தரவு தேர்தல் ஆபிசருக்கு. அந்தக் கட்டளை நல்லபடியாக நிறைவேற்றணுமே; அதுக்காக மட்டும் அங்கிருந்த நாற்காலி, மேசை எல்லாவற்றையும் கொஞ்சம் போல் உதைத்து, தள்ளி விட்டு, அடையாள மை வைத்திருந்தவரிடமிருந்து மையைக் கீழே தட்டிவிட்டு அவருக்குக் கொஞ்சம் போல அந்த மையால் அபிஷேகம் பண்ணிவிட்டுப் போனார்களாம். இதில் PO4 PO5 இருவரும் பெண்கள். முதல்வர் இவ்வளவு கலாட்டாவிலும் ஓட்டளிக்கக் கொடுக்கப்பட்டிருந்த முத்திரையைப் பாதுகாப்பாக முந்தானைக்குள் எடுத்து வைத்துக் கொள்ள, அடுத்தவரோ இந்தக் களேபர நேரத்திலும் வாக்குப் பெட்டியை அணைத்துப் பாதுகாத்தார்களாம். என் துணைவியாரிடம் 'உனக்கு என்னவாயிற்று' என்று கேட்டேன். 'என்னமோ, என்னைப் பார்த்து என்ன பரிதாபமோ, என் மேசையை தட்டி விடவில்லை; நானும் உட்கார்ந்த இடத்திலே ஆணி அடித்ததுமாதிரி இருந்திட்டேன்; பத்து நிமிஷம்னாலும் வேர்த்து விறு விறுத்துப் போச்சு' என்றார்கள். அதைச் சொல்லும்போதுவரையும் கூட அந்த ஆசுவாசம் நீடித்தது; தணிய இன்னொரு மணி நேரம் ஆச்சு.

ஏறக்குறைய அங்கு குழுமியிருந்தவர்கள் பலரும் ஆசிரியர்களே; அதுவும் இரண்டே இரண்டு பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். ஆகவே, இப்படி காத்திருந்த போதும் எல்லோரும் ஒருவரை ஒருவர் 'நலம்' விசாரிக்கவும், பகலில் நடந்தது பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பூத்தில் PO மட்டும் - அவர் ஒரு தலைமைஆசிரியர் - ஆண்; மற்றவர்கள் அனைவரும் பெண்கள். அவர் கதைதான் இருப்பதில் பயங்கரமா இருந்தது.ஒரு பெரிய கூட்டம் உள்ளே நுழைய, எல்லா பெண் தேர்தல் ஊழியர்களும் அவருக்குப் பின்னால் பதுங்க, வந்த கூட்டத்தில் ஒருவன் அவர் கழுத்தில் கத்தி ஒன்றை வைத்துக் கொள்ள 50 ஓட்டுகள் போல அந்தக் கூட்டம் போட்டுவிட்டுச் சென்றதாம். இன்னொருவர் பூத்தில் கத்தியெல்லாம் ஒன்றுமில்லையாம்...! ஆனால் உள்ளே நுழைந்து அதே வேகத்தில் பூத்தில் இருந்த இரண்டு குழல் விளக்குகளை உடைக்க, அதன் சத்தமும்,தெறித்த கண்ணாடி தலையில் விழவும்...அதற்கு மேல் கூட்டத்தின் அராஜகம்தானாம்.

இந்த பூத்துகள் இருந்த தொகுதியின் தி.மு.க. ஒரு பெண் உறுப்பினர்; இம்முறை மதுரைக்குப் பெண் மேயர் என்பதால், இந்த வேட்பாளர் வென்றால் அவர்தான் எங்கள் "வணக்கத்துக்குரிய மேயராக" ஆகும் வாய்ப்புள்ளதாலேயே இப்பகுதியில் இந்த அளவு வன்முறை என்றார்கள். அதோடு இந்தக் கட்சி வேட்பாளரை எதிர்த்து தி.மு.க.வின் போட்டி வேட்பாளராக இன்னொருவர் - கட்சி வேட்பாளரை விடவும் கட்சித் தொண்டர்களிடம் நல்ல பெயர் பெற்றவர் - போட்டியிட்டதும் இன்னொரு காரணமாம்.

ஒவ்வொருவரும் அவரவர்கள் 'கதை' சொல்லிக் கொண்டிருக்கும்போதே அருகில் ஒரு post-election commotion நடந்தது. எல்லாம் அந்தப் பெண் வேட்பாளரும் அவரது தொண்டர்கள் செய்யும் கலாட்டா என்று சேதி வந்தது.

இந்த அனுபவ பகிர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு பூத்தில் இருந்தவர்களும் சொன்ன ஒரு சேதி ஒரே மாதிரியாகவே இருந்தது: எல்லா பூத்துகளிலும் இந்தக் கலாட்டாக்கள் நடந்தேறும்போது, போலீஸ்காரர்கள் "பத்திரமாக" வெளியில் சென்று நின்று கொண்டார்களாம்.

சென்றைய ஆட்சியில் அரசு ஊழியர்களை - ஆணென்றும் பெண்ணென்றும் பாராது, சுவர் ஏறிக்குதித்து உயிருக்குப் பயந்து ஓடிய அரசுப் பணியாளர்களைக் கூட - இதே போலீஸ் ஓடஓட விரட்டியக் காட்சிகளைக் கண்டது இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. நம் காவல் துறையினரை வாட்டுவது என்ன? - a sick psychology and lousy philosophy?

முதல் நாள் பயமும்,பதட்டமும் முழுசாக விலகி, அடுத்த நாள் என் துணைவியார் என்னிடம் சொன்னது: 'நல்ல adventureதான், இல்ல? அந்தக் காலத்திலன்னு... பேரப்பிள்ளைகளுக்குக் கதை சொல்லலாம்'. அதோடு இன்னும் அடுத்த தேர்தல் வருவதற்குள் ஓய்வு பெற்றுவிடலாமென - இன்னுமொரு ஆண்டுதானே - சொன்னார்கள். ஆனால் எனக்கு என்னவோ நம்பிக்கையில்லை; நடக்கிற நடப்பில அடுத்த தேர்தல் எப்போ வேண்ணாலும் வரலாமோ என்னவோ?!


*
*** இப்பதிவு 30.10.'06 "பூங்கா"வில் இடம் பெற்றது. (3)

*

42 comments:

ஜோ / Joe said...

தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டு தானே தன் தலையில் மண் அள்ளிப் போட்டுக்கொள்வதில் திமுக வினருக்கு இணை இல்லை போலிருக்கிறது

மனசு... said...

ம்ம்ம் என்ன சொல்றதுனு தெரியல. இது அரசியல் வாதிகளின் அராஜக போக்கா... இல்லை மக்களிடம் தட்டிக்கேட்பதற்கு தைரியமில்லையா... ஒருவன் கழுத்தில் கத்தியை வைக்கும் போது அவன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைக்க எவ்வளவு நேரமாகும்? எந்தெந்த தொகுதிகளில் பிரச்சனை வரும் என்று முன்பே தெரிந்தும், ஆயிரக்கணக்கில் போலீசாரும் மத்திய போலீசாரும் பணியில் இருந்து கூட இவ்வளவு அராஜகங்களா? இதற்கு யாரை குறை சொல்வது? பிரச்ச்னைக்குறிய பூத்-களில் கேமராக்கள் வைத்து கவனித்திருந்தால், மக்களின் உரிமையை தட்டிப்பறித்த அந்த நரிகளையும், தேர்தல் பணியை செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் அவர்களை தண்டிக்க முடியுமில்லையா? முடிவில் மக்களின் உரிமை கூட இங்கே பறிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு மக்கள் தங்கள் உரிமையையும் பணத்திற்காக விற்க ஆரம்பித்து விட்டனர். என்ன சொல்லுவது...? இந்த நிலைக்கு முடிவுதான் என்ன?

இருக்கிற கட்சிகள் எல்லாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டும் கொலைக்குற்றம் சாட்டிக்கொண்டுதான் இருக்கின்றவே ஒழிய உருப்படியாய் ஏதும் நாட்டிற்கு செய்ய தயாராய் இல்லை. இவர்களின் சொந்த சண்டைக்கும் மக்கள் வேறு பலி...

மக்கள் திருந்தாத வரை... தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்காத வரை... விற்காமல இருக்கும் வரை இந்த அவலங்கள் தொடரும்... சினிமா படத்தில் காண்பிப்பது போல் ஹீரோ எல்லாம் பறந்து வந்து சண்டை போட்டு நமக்கு நம் வாக்குரிமையை மீட்டுத்தர மாட்டார்... நாம் தான் நம் உரிமையை விட்டுத்தராமல் சண்டை போட வேண்டும்... அதற்கு மக்கள் புரட்சி மட்டுமே சரியானாது...

மக்கள் உணர்வார்களா...???

அன்புடன்,
மனசு...

மணியன் said...

நாம் எங்கே போகிறோம் ? :((

Krishna (#24094743) said...

வாழ்க ஜனநாயகம்.
ஹும். வேறென்ன சொல்ல? தங்கள் துணைவியார் பத்திரமாக திரும்ப வந்ததை எண்ணி மகிழ்ச்சி. என்னுடைய சில நண்பர்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை. ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள். நல்ல வேளை - உயிருக்கு ஆபத்தில்லை.

Dharumi said...

நானும் அதையேதான் நினைக்கிறேன், ஜோ. இந்த முறை எளிதாக வென்றுவருவார்கள் என நினைத்தேன். ஏனிப்படி என்று தெரியவில்லை.

Dharumi said...

மனசு,

//கழுத்தில் கத்தியை வைக்கும் போது அவன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைக்க எவ்வளவு நேரமாகும்?..//

யார் துப்பாக்கியை வைப்பது?

//கேமராக்கள் வைத்து கவனித்திருந்தால், ..//
முதல் குறி காமிராவாக இருந்திருக்கும்...அவ்வளவே.

//மக்கள் புரட்சி மட்டுமே சரியானாது...
//

எனக்கும் இப்படி ஒரு இளமைக் கனவு இருந்தது.

Dharumi said...

மணியன்,
//நாம் எங்கே போகிறோம் ? :(( //

பிரச்சனையே அதுதான், மணியன். நாம் எங்கும் போகவேயில்லை. We are in vicious cycle
- DMK -> ADMK -> DMK ->

Dharumi said...

கிருஷ்ணா,
நண்பர்கள் நலமே விரைந்து வர வாழ்த்துக்கள்

ஜயராமன் said...

தருமி அவர்களே,

நான் வசிக்கும் மயிலையில் என் வயதான என் தாய், தந்தையுடன் வாக்களிக்க போனேன்.

என் தெருவின் எதிர்கடைக்காரர் திமுக உழைப்பாளி. அவரே பார்வையாளராக உட்கார்ந்திருந்தார். என்னைப்பார்த்ததும் "சார், உங்க ஓட்டு போட்டாச்சு. லேட்டு நீங்க." என்றார்

நான் மறுத்தேன். ஏன்சார், உங்களுக்கு என்னை தெரியாதா? என் ஓட்டை மற்றவர்கள் எப்படி போட முடியும். உங்கள் முன்னாலேயே?" என்றேன். அவர் நமுட்டுசிரிப்பு சிரித்தார். "நான் இப்பதான் வந்தேன்" என்று சுரத்தில்லாமல் சொன்னார். பொய் என்று புரிந்தது.

சரிதாம்பா. போட்டுட்டு போகட்டும் என்று அவர் தேர்தல் அதிகாரியிடம் சொன்னார்.

தேர்தல் அதிகாரி சம்பிரதாயங்களை முடித்து வாக்குசீட்டு கொடுத்தார்.

சீட்டு மடிக்கப்பட்டு இருந்தது.

இப்பொழுதுதான் கள்ள ஓட்டு எப்படி போடுகிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். மடித்த ஓட்டில் ஏற்கனவே சூரியனில் முத்திரை இருந்தது. நானும் அதற்கே குத்தினால் அது சரியான வாக்காக ஆகும். இல்லாவிட்டால், செல்லாத்தாகிவிடும். இதுவே அவர்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறாகவே கள்ள ஓட்டு போடப்படுகிறது என்று புரிந்துகொண்டேன்.

நான் சத்தம் போட்டு, மடிக்காத புது வாக்கு சீட்டு கேட்டேன்.

என் எதிர்வீட்டு நண்பர் எடுத்துக்கொடுத்தார்.

ஓட்டுபோட்டு திரும்பினோம்.

திமுகவை தவிர பூத்தில் வேறு யாரும் இல்லை. தேர்தல் அதிகாரி ஏதோ கடனே என்று நின்றுகொண்டிருந்தார். எல்லா நாட்டாமையும் என் எதிர்வீட்டு நண்பர்தாம்.

வெளியே வரும்போது போலீஸ் வாசலில் கும்பலாக நின்றுகொண்டு டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பயல் எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

(மேலும் அதிகாரபூர்வ விவரம் வேண்டுமா. என்னை அணுகவும்...)

இதன் பெயர் தேர்தலா!!

கருணாநிதிக்கு வயசாக வயசாக ஏன் இப்படி புத்தி போகிறது? நான் திமுக இவ்வளவு மட்டமாக போகும் என்று கனவிலும் நினைக்கவில்லையே!!

நன்றி

லக்கிலுக் said...

ஜெயராமன் கதை நல்லா இருந்தது.

நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நானும் பூத் ஏஜெண்ட் ஆக தான் பணியாற்றினேன்.

ரொம்ப ஓவரா ஊத்த வேணாம் :-))))

இலவசக்கொத்தனார் said...

தருமி,

கலவரம் எல்லாம் சென்னையில்தான் மற்ற இடங்களில் இல்லை என்பதற்கு உங்கள் பதிவே பதில் கூறுகிறது. நல்ல வேளை உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.

ஜயராமன் said...

லக்கி,

ரொம்ப இல்லை, கொஞ்சம் கூட ஊத்த எனக்கு என்ன ஆசை இருக்க முடியும்?

உங்கள் புத்தியும் ஏன் உங்கள் தலைவர் போலவே போகிறது. எதுவுமே இல்லை என்று சொன்னால் இல்லாமல் ஆகிவிடும் என்று உங்கள் கட்சி கொள்கையா?

உங்கள் தொலைபேசியை தாருங்கள். நான் வேணுமானால் என் அம்மையை விட்டு உங்களிடம் பேச்ச்சொல்லுகிறேன். என் ஏதிர்வீட்டுக்காரரும் திமுக தொண்டர். நீங்கள் என்னை தொடர்பு கொண்டால் நான் மேலும் தகவல்கள் சொல்வேன். இதை பற்றி நேற்று ஞாயிறு அவரிடமே பின்னால் சிரித்து பேசியிருக்கிறேன்.

ஆனால், நீங்கள் நம்புவதும் நம்பாததும் உங்கள் ப்ராப்ளம்.

நன்றி

Sivabalan said...

தருமி அய்யா,

//நடக்கிற நடப்பில அடுத்த தேர்தல் எப்போ வேண்ணாலும் வரலாமோ என்னவோ?!//

என்ன இப்படி சொல்லிடீங்க..


வாழ்க ஜன நாயகம்.

Dharumi said...

கொத்ஸ், ஜெயராமன், லக்கி லுக்

நன்றி.

கால்கரி சிவா said...

இந்த தேர்தல்களில் EVM உபயோகிக்கவில்லையா? ஏன்? கள்ள ஓட்டு போடமுடியாதென்றா?

அருண்மொழி said...

//இந்த தேர்தல்களில் EVM உபயோகிக்கவில்லையா? ஏன்? கள்ள ஓட்டு போடமுடியாதென்றா? //

எந்த பட்டன அழுத்தினாலும் சூரியனுக்கே ஒட்டு விழுதுன்னு அம்மா புகார் செய்தார்கள். ஒரு வேளை அதனால் இருக்கலாம்:-)

பாருங்க EVM use செய்த மதுரை இடை தேர்தலில் சூரியனுக்கு நிறைய ஓட்டு விழுந்திருக்கிறது.

Dharumi said...

சிவா,
EVM பயன்படுத்திறது இல்லை அப்டிங்கிறதெல்லாம் EC வேலைதானே. அவர்கள் என்ன KK க்கு உடந்தைன்னு சொல்லப் போறீங்களா? எனக்குத் தெரிஞ்ச வரை அவங்க JJ க்குத் தானே உடந்தை - 2001 அப்படி ஒரு ஞாபகம்!

அருண்மொழி said...

தருமி சார்,

மதுரை இடை தேர்தலிலும் இப்படிப்பட்ட நல்ல காரியங்கள் நடந்ததா?

செந்தில் குமரன் said...

நாம் எங்கே போகிறோம்?

பத்திரிக்கைகள் ஏன் இதற்கு அதிக பட்ச எதிர்ப்பை காட்டவில்லை? இது குறித்து போராட்டங்கள் ஏன் நடைபெறவில்லை? இது வழக்கம் போலத் தான் என்று விட்டு விடாமல் ஒரு விழிப்புணர்ச்சி மக்களுக்கு எப்பொழுது ஏற்படப் போகிறது?

Dharumi said...

ஆம் அருண்மொழி.

மன்னிக்கணும் அருண்மொழி. உங்கள் கேள்வியில் 'இடைத்தேர்தலிலுமா' என்பதைக் கவனிக்காது இப்படி பதில் கொடுத்திருந்தேன். இடைத் தேர்தலில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் கேள்விப்படவில்லை. நகராட்சித் தேர்தலில் மட்டுமே இந்தப் பிரச்சனைகள். சென்னையின் தாக்கமாயிருக்க வேண்டும்..

குமரன் எண்ணம்,

//நாம் எங்கே போகிறோம்?//
உங்களின் இந்தக் கேள்விக்கு ஏற்கெனவே பதில் சொல்லியிருக்கிறேன்.

Muse (# 5279076) said...

தருமி அவர்களின் துணைவியாரும், ஜயராமன் அவர்களின் பெற்றோரும் பத்திரமாக திரும்பியது ஆறுதலாக உள்ளது.

ஏதேனும் அட்வென்சர் செய்ய ஆஸையிருந்தால் பங்கி ஜம்ப் மாதிரி ஏதேனும் செய்யவேண்டியதுதானே. ஏன் ஓட்டுப் போடுதல் போன்ற அபாயகரமான விஷயங்களில் எல்லாம் ஈடுபடுகிறீர்கள்?

பொன்ஸ்~~Poorna said...

தருமி,
எங்க ஊர்லயும் இதே கதை தான். நல்லவேளை நான் காலையிலேயே போய் ஓட்டு போட்டுட்டேன்..

EVM இல்லாததால், பேப்பரில் ஓட்டு போடத் தெரியாமல் கொஞ்சம் தடவினேன்.. ஓட்டு செல்லுமா என்ற சந்தேகம் இப்பவும் இருக்கு ( வேட்பாளர் பெயரின் மீது குத்தினால் செல்லாதாமே?! சின்னத்தின் மீது தான் குத்தணும்னு வீட்ல சொல்றாங்க! உண்மையாவா?)

பத்து மணி வாக்கில் அலுவலகத்துக்கு வரும் வழியில் அபிபுல்லா ரோடில் பயங்கர கூட்டம், தடியடி. எப்படியோ தலை தப்பினால் போதும்னு நின்னு வேடிக்கை பார்க்காமல் வேகமா ஓட்டிகிட்டு வந்துட்டேன்..

நாங்க பூத்துக்குள் இருக்கும் போது ஒரு போலீஸ்காரர் வந்து "உள்ளாட்சித் தேர்தல் சும்மா சின்ன தேர்தல் தானே, அவங்க வந்து ஓட்டு போட்டுக்கிறேன்னு சொன்னா விட்டுடுங்க.. டீச்சர்ஸையும் பிரச்சனை பண்ணாம இருக்க சொல்லுங்க" என்று அந்த அறையைக் கண்காணிக்கும் உயரதிகாரியிடம் அறிவுரை சொல்லிவிட்டுப் போனார்!

லக்கிலுக் said...

//ஆம் அருண்மொழி.//

எப்படி என்று சொல்ல முடியுமா தருமி சார்?

ஜெயலலிதாவும், அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பாவும் தேர்தல் அமைதியான முறையில் நியாயமாக நடந்தது என்று தேர்தல் முடிந்ததுமே அறிக்கை விட்டிருந்தார்கள். ஒருவேளை அதுவும் பொய்யோ?

Vajra said...

Muse அவர்களே,

//
ஏதேனும் அட்வென்சர் செய்ய ஆஸையிருந்தால் பங்கி ஜம்ப்
//

அது பஞ்சி jumping என்று சொல்லவேண்டும். Bungee என்பதை bun jee என்று உச்சரிக்கவேண்டும். பங்கி அல்ல...!

Dharumi said...

வேட்பாளர் பெயரின் மீது குத்தினால் செல்லாதாமே?! //

யாரு சொன்னா? அதெல்லாம் உங்க ஓட்டு செல்லும்.
ஆமா, உங்க தொகுதியில யாராவது ஆனைச் சின்னத்தில நின்னாங்களா? at least பூனை..?

பொன்ஸ்~~Poorna said...

//ஆமா, உங்க தொகுதியில யாராவது ஆனைச் சின்னத்தில நின்னாங்களா? at least பூனை..?
//
ஹி ஹி.. அதெல்லாம் இப்போ அனுமதிக்கிறாங்களா என்ன? இரட்டைப் புறாக்களோடு மிருகங்களைச் சின்னமாகப் போடுவது போயிடுச்சு தானே?
அப்படி அனுமதிக்கிறாங்கன்னா, சீக்கிரம் புக் பண்ணி வைக்கணும்.. என்னிக்காவது நமக்கே பயன்படலாம் ;)

Narayanaswamy.G. said...

இதென்ன சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு!

தேர்தல் இப்படி நடக்காம பின்ன எப்படி நடக்குமாம்???

ஒரு பூத்ல 60% கூட கள்ள ஓட்டு விழலைனா அப்புறம் என்ன தேர்தல்?

அப்புறம் எப்படி நாங்க 72% Polling காமிக்கரது?

ரத்தமும் சாராயமும் இல்லாத தேர்தலும் ஒரு தேர்தலா?

ஓட்டுங்கற சமாசாரமே கள்ள்த்தனமா போடத்தானே?

இதெல்லாம் தெரியாம எப்படி நீங்க இத்தனை வருஷம் மதுரையில குப்பை கொட்டினீங்க தலைவரே?

இது இவ்ளோ சாதாரணமா போய்டுச்சு பார்த்தீங்களா?

We are risking our lives to cast our Vote!

எவன் போடுவான்?

செந்தில் குமரன் said...

///
ஏதேனும் அட்வென்சர் செய்ய ஆஸையிருந்தால் பங்கி ஜம்ப் மாதிரி ஏதேனும் செய்யவேண்டியதுதானே. ஏன் ஓட்டுப் போடுதல் போன்ற அபாயகரமான விஷயங்களில் எல்லாம் ஈடுபடுகிறீர்கள்?
///
சூப்பரா இருக்கு படிச்சிட்டு சிரிப்பை அடக்க முடியல.

Ponniyinselvan said...

History repeats
http://vijayanagar.blogspot.com

Dharumi said...

லக்கி லுக்,
இரண்டு பதில்கள்:
1. நான் எழுதியிருப்பது நகராட்சித் தேர்தல் பற்றியது. இன்றைய ஹிந்து தலையங்கம் பாருங்கள். இரண்டு எலக்க்ஷன் கமிஷன்களின் அணுகல் முறை பற்றி எழுதப்பட்டுள்ளது. ஒரு வேளை சென்னை உள்ளாட்சித் தேர்தல் கடைசியில் நடந்திருந்தால் - இப்போது நடந்தது போலவே - மற்ற இடங்களில் பிரச்சனை அதிகம் இல்லாமல் போயிருந்திருக்கலாம். சென்னையில் நடந்தது மற்ற இடங்களிலும் ஆளும் கட்சித் தொண்டர்களுக்கு இன்னும் அதிகமான ஒரு "உற்சாகத்தையோ, தைரியத்தையோ" கொடுத்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

2. நான் எழுதியிருந்த வார்டு, அதன் முக்கியத்துவம் பற்றி சொல்லியுள்ளேன். அதிலும் இன்னொரு காரணியும் சேர்ந்துவிட்டதாக இன்னொரு தகவல். ஏற்கெனவே கட்சிக்குள்ளேயே போட்டி. அதோடு இந்தப் பெண் வாக்காளர் இன்னொரு சாதிய போட்டி வேட்பாளரையும் 'சந்திக்க' வேண்டியதாயிற்றாம்.

மற்ற இடங்களில் இந்த அளவு அராஜகங்கள் நடக்கவில்லையாம். ஆனாலும் ஆங்காங்கே...

அதென்ன jjயும். ரா,செ.வும் அரிச்சந்திரனின் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரர்களா என்ன?

Dharumi said...

நாராயணசாமி எ. சின்னக் கடப்பாரை,

ஆனாலும் இது ரொம்ப ஓவருங்க..
இப்படியெல்லாம் "சுத்தாதீங்க".

Dharumi said...

Ponniyinselvan,
instead of saying 'history repeats', we have to change it this time as ' history is repeated'!

லக்கிலுக் said...

//அருண்மொழி said...
தருமி சார்,

மதுரை இடை தேர்தலிலும் இப்படிப்பட்ட நல்ல காரியங்கள் நடந்ததா?//

//Dharumi said...
ஆம் அருண்மொழி.//


இப்படிச் சொன்ன தருமி சார், இப்போ இப்படிச் சொல்லுறாரு....

///Dharumi said...
நான் எழுதியிருப்பது நகராட்சித் தேர்தல் பற்றியது.///

தருமி சார்!

ஆரிய பவனில் போண்டா ஏதாவது சாப்பிட்டீங்களா? :-)

Dharumi said...

அருண்மொழி,
லக்கிலுக் கேள்விக்குப் பின் உங்களுக்கு ஏற்கெனவே கொடுத்த பதிலைத் திருத்தியுள்ளேன்.

Dharumi said...

லக்கிலுக்,
தவறைச் சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி. திருத்தியுள்ளேன்.

அதென்ன, ஆர்ய பவன் போண்டா..தேவையா இது? நீங்கள் அதச் சாப்பிட்டுவிட்டுதான் ஏஜண்டாகப் போனீர்களா?

வரவனையான் said...

மனசு,

//கழுத்தில் கத்தியை வைக்கும் போது அவன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைக்க எவ்வளவு நேரமாகும்?..//

யார் துப்பாக்கியை வைப்பது?

//கேமராக்கள் வைத்து கவனித்திருந்தால், ..//
முதல் குறி காமிராவாக இருந்திருக்கும்...அவ்வளவே.

//மக்கள் புரட்சி மட்டுமே சரியானாது...
//

எனக்கும் இப்படி ஒரு இளமைக் கனவு இருந்தது.

சொன்னவர்: Dharumi//

cheers comrade !

விரைவில் ஒரு மதுவிடுதி மேசையில் சந்திப்போம் !
அப்போது நிச்சயம் வோட்கா இருக்கும் துணையாக........

:))))))))

Dharumi said...

"க்ளிங்"

அருண்மொழி said...

தருமி சார்,

Just curious to know the result of the ward you mentioned.

அது 25ஆவது வார்டா? வேட்பாளர் சின்னம்மாளா?.

Dharumi said...

ஆமாம் அருண்மொழி.
இவ்வளவு வன்முறை நடத்தியும் இந்த வார்டில் திமுகவின் போட்டி வேட்பாளரே நல்ல வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருகிறார்.

Dharumi said...

அருண்மொழி,
வெற்றி பெற்ற வேட்பாளர் அருண்குமார். தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் சின்னம்மாள்.

Dharumi said...

அருண்மொழி,
வெற்றி பெற்ற வேட்பாளர் அருண்குமார். தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் சின்னம்மாள்.

அருண்மொழி said...

தகவலுக்கு நன்றி சார்,

இதை பற்றிய செய்தியை மாலை மலரில் படித்தேன். ஒரு வேளை இந்த தொகுதியை பற்றிதான் நீங்கள் எழுதினீர்களோ என்ற சந்தேகம் எழுந்தது.

கள்ள வோட்டு, Booth Capturing ஆகிய முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்பது ஆச்சர்யமே.

பழைய படமே இருக்கட்டுமே :-)

Post a Comment