Wednesday, March 21, 2007

206. அன்புள்ள வித்யாவிற்கு,

அன்புள்ள வித்யாவிற்கு,

கோபமான உன் ( இக்கடிதத்தில் மட்டும் ஒருமையில் உன்னை (உரிமையோடு) அழைத்துக் கொள்கிறேன்; சரியா?) பதிவைப் பார்த்தேன். அதைத் தொடர்ந்த வேறு இரு பதிவுகளையும் பார்த்தேன். ஏற்கெனவே நீ கெளதம் -வேட்டையாடு விளையாடு - பற்றி எழுதியதையும் வாசித்திருக்கிறேன். உன்னைக் குறை சொல்லித்தான் இக்கடிதம் எழுதப் போகிறேன்.

திருநங்கைகள் முகவரி இல்லாதவர்களாக இருக்கிறார்கள்; அவர்களுக்கு குடும்ப அட்டை கொடுப்பதில்லை; வாக்கு அடையாள அட்டையோ, வாக்குரிமையோ இல்லை; இன்னும் மற்ற எந்த சமூக அங்கீகரிப்புகளும் இல்லை; இன்னும் சமூகத்தில் அவர்களின் கஷ்டங்கள் என்னென்ன - இதெல்லாம் எப்போது எனக்குத் தெரியும் தெரியுமா? நீ பதிவுலகிற்குள் வந்து எழுதிய பிறகே முழு வீச்சோடு தெரியும். அதற்கு முன்பு இந்த அளவு சமூகத்தில் ஒதுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறீர்கள் என்பதே தெரியாது.

காலங்காலமாய் அரவாணிகள் என்றால் தொடத்தகாதவர்களாகவோ, கேலிப் பொருளாகவோதான் கருதப்பட்டு வந்துள்ளார்கள் என்பது உண்மை. சமூகத்தில் பலரும் இதே மனநிலையோடு இருந்தவர்கள்தான் -என்னையும் சேர்த்தே. இது தவறு என்ற மனமாற்றத்தைச் சிலராவது பெற்றது மிகச் சமீப காலத்தில்தான். உன்னைப் போல் சிலர் படித்து, அப்படிப்பு தந்த உந்துதலிலும், இதுவரை பெற்ற கசப்பான அனுபவங்களாலும் எழுந்து நிற்கிறீர்கள்; நாங்களும் உங்களைப் புதுக் கோணத்தில் இப்போதுதான் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். ஆனாலும் சமூகம் மிகவும் பெரியது; உங்கள் போராட்டம் இன்னும் வலிமையோடு எழவேண்டும். சமூக மாற்றம் நோக்கி நகரவேண்டும். அதை நீங்கள் நன்றாகச் செய்து வருகிறீர்கள்தான். ஆனாலும் இன்னும் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் இந்த மனமாற்றம் வர காலமாகும்.

அந்தக் காலம் வரும்வரை நீ சொல்லும் தவறுகள் நடப்பது, தொடர்பது இயல்பே. அதைத் தடுக்க, மாற்ற போராட்டம் தொடரவேண்டியதுதான். ஆனால், அந்தப் போராட்டம் தனிநபர்களைச் சாடுவதால் நின்று விடாது. இப்படி மக்களை எளிதில் சென்று சேரும் மீடியாக்களில் இப்படியெல்லாம் தரக் குறைவாகக் காண்பித்தால் சமூக மாற்றம் எப்படி ஏற்படும் என்று கேட்கலாம். ஆனால் தனிநபர் சாடுதலால் மட்டும் அந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியுமா, என்ன?

கெளதமோ, ராதிகாவோ திருநங்கைகளைக் கேவலப்படுத்தும் குறிப்பிட்ட நோக்கத்தோடுதான் இப்படி எடுத்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. அதோடு நமது மீடியாக்களில் யாரைத்தான் கேவலமாகச் சித்தரிக்கவில்லை. கல்லூரி ஆசிரியர்களையும், போலீஸ்காரர்களையும் கேலி செய்வது நமது சினிமாக்காரர்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாச்சே. வெண்ணிற ஆடை மூர்த்தி, டைப்பிஸ்ட் கோபு, மதன் பாப், குமரி முத்து இன்னும் சில ஆட்களையே கல்லூரி பேராசிரியர்களாகக் காண்பிப்பதுதானே வழக்கம். எந்தப் படமும் - நம்மவர் உட்பட - கல்லூரி வகுப்பைச் சரியாக இதுவரை காண்பித்ததாகச் சரித்திரமே கிடையாதே.

திருநங்கைகளைக் காலம் காலமாக சினிமாவில் கேவலப்படுத்தி வந்ததை எல்லோருமே அறிவோம். ஆனாலும், உங்கள் வாழ்க்கையைப் பற்றி, உங்கள் வேதனைகளைப் பற்றித்தெரிந்து கொள்ளும் முன்பு அவைகள் என்னைப் போன்றவர்கள் மனத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவேயில்லையே. We took it all for granted. அது அப்படித்தான் என்ற பார்வை. அந்தப் பார்வை மாறியது (என்னைப் பொறுத்தவரையாவது ) மிகச் சமீபமே.

இதுவரை இருந்த சமூகத்தின் பார்வையும் கருத்தும் மாறிவரும் நேரம் இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. To quote Churchill: This is not the end, not even the beginning; it is just the end of the beginning. அவ்வளவு ஏன்? திருநங்கைகளின் இந்த அவல வாழ்க்கைக்கு அடிப்படைக் காரணம் என்ன? அவரவர்களது குடும்பங்களிலேயே அந்தப் புரிதல் இல்லையே. அதனால்தானே அவர்கள் வாழ்க்கையில் இத்தனை வேதனைகள். பெற்றவர்களுக்கே புரியாததும், புரிந்த பிறகும் அதை ஒத்துக் கொள்ள முடியாத மூடிய மனதும் இருக்கையில் மொத்த சமூகத்திடம் இன்றைய நிலையில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்துக் காரியங்களும் உடனே எளிதாகக் கிடைத்துவிடாதே. காலம் எடுக்கும்; அதுவரை புரியாதவர்களைப் புரியவைக்கும் முயற்சிகளை எடுங்கள். நிச்சயமாக நம் பதிவுலகத்தில் இப்போது உள்ளோர் அனைவருக்கும் நல்ல புரிதல் கிடைத்திருக்கும் உன் எழுத்துக்களால். ஆனால் தனி மனித வசை பாடுதல் மூலமாக அதைச் செய்வது சரியாக இருக்காது.

ஓரிரு வாரங்களுக்கு முன் Oprah Winfre -யின் Talk Show ஒன்றைப் பார்த்தேன். அதையும்கூட முதலில் இருந்தே பார்க்கவில்லை, நடுவில் இருந்துதான் பார்த்தேன். இரண்டு இரட்டையர்கள். Transgenders. அதில் ஒரு இரட்டையரில் ஒருவர் பெண்ணாகவே இருந்து வர, அடுத்தவர் தன் 40வது வயதில் ஆணாகத் தன்னை மாற்றிக் கொண்டவர் - breast-யை அறுவை சிகிச்சையால் எடுத்து விட்டு, artificial penis -யை பொருத்திக் கொண்டவர்; இன்னொரு இரட்டையரில் ஒருவர் பெண்ணாகவே இருக்க அடுத்தவர் ஹார்மோன்கள் எடுத்து ஆணாக தாடியோடு காட்சியளித்தார். மாற்று சிகிச்சை செய்துகொள்ள ஆவல் இல்லை என்றார். அவர்களது மன, உடம்பு பற்றிய நேரடிக் கேள்விகளும் பதில்களுமாக நிகழ்ச்சி நடந்தது. அவர்களது குடும்பத்தினரின் புரிதல் அவர்களுக்குத் துணை நின்றிருந்திருக்கிறது.
breast, penis, size of penis, vagina, scrotum, - போன்ற வார்த்தைகள் பங்கேற்றவர்களாலும் மற்ற பார்வையாளர்களாலும் மிகச் சாதாரணமாகப் பேசப்பட்டன. அந்த நிகழ்ச்சியைப் பார்த்த போது, அந்தச் சமூகத்தில் transgender-களைப் புரிந்துகொள்ளும் நிலையினையும், அங்கு நிலவிய maturity-யையும் பார்க்கும்போது நாம் எல்லோரும் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என்று தோன்றியது. sex-யை மறை பொருளாக வைத்து மனத்தில் நிறைய சகதியைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

வித்யா, போராடுங்கள். உங்களின் போராட்டக்களத்தின் இன்றைய நிலையையும் மனதில் கொள்ளுங்கள். நடக்கும் தவறுகள் தனிமனிதத் தவறுகளல்ல; ஒரு சமூகத்தின் மொத்தத் தவறு.

தனக்கு வந்தாதான் தலைவலியும் காய்ச்சலும் என்ற பழமொழி நினைவில் இருந்தாலும் .. உன் கோபம் இன்னும் முறையாக வெளிப்பட்டு மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்ற ஆசையில் இதனை எழுதியுள்ளேன். புரிந்து கொள்வாய் எனவும் நம்புகிறேன்.

அன்புடன்,
தாத்தா

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:
http://livingsmile.blogspot.com/2007/03/r.html
http://elavasam.blogspot.com/2007/03/blog-post_21.html
http://kuzhali.blogspot.com/2007/03/blog-post_21.html








And miles to go .......

28 comments:

நாமக்கல் சிபி said...

உங்கள் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன் தருமி சார்!

இலவசக்கொத்தனார் said...

நல்ல பதிவு தருமி. நான் சொல்ல வந்ததும் இதுதான். சில மாற்றங்களுடன்.

முதலாவது, இப்படி அடுத்தவரை குறை சாடுவது நம்மிடையே ஒரு பழக்கமாகவே வந்துவிட்டது. அது ஏன் எனக் கேட்டேன்.

அடுத்தது நீங்கள் சொல்வது போல் குடும்ப அட்டை, வாக்கு அடையாள அட்டை, வாக்குரிமை, படிப்பு, வேலை வாய்ப்பு என எத்தனையோ பிரச்சனைகள் இருக்க, இதற்கு இத்தனை முக்கியத்துவம் தேவையா எனக் கேட்டேன்.

என் பதிவு வேறு விதமான விவாதமாகச் சென்றுவிட்டது. மிக அழகாக எழுதப்பட்டிருக்கும் இந்த பதிவு, அதற்கான நோக்கத்தை நிறைவேற்றும் என நம்புகிறேன். ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். (இது உங்களுக்கு பிடிக்காதது எனத் தெரிந்தும்.) :)

காட்டாறு said...

சரியாக சொன்னீர்கள் தருமி அவர்களே. அக்காலம் வரும் விரைவில். நம்பிக்கையோடு இருப்போம்.

துளசி கோபால் said...

உங்க பதிவை நானும் ஆதரிக்கிறேன்.

வித்யா இன்னும் சின்னப் பொண்ணுதானே? இளங்கன்று பயமறியாதுன்னு நாம்
சொல்றதில்லையா? அதான் அந்த வயசுக்கே உரிய மாதிரி பட்ன்னு எதையும்
சொல்லிடறாங்க.

அவுங்க நினைக்கிற சமுதாய மாற்றம் வந்துக்கிட்டுத்தான் இருக்கு...ஆனா
நத்தை வேகத்தில்.

- உடுக்கை முனியாண்டி said...

// அதற்கு முன்பு இந்த அளவு சமூகத்தில் ஒதுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறீர்கள் என்பதே தெரியாது. //

திருநங்கைகளை பற்றிய என்னுடைய புரிதலும் லிவிங்ஸ்மைல் வித்யா பதிவுலகிற்கு வராமல் இருந்திருந்தால் நிச்சயம் மட்டையான ஒன்றாகத்தான் இருந்திருக்கும். அந்த வகையில் லிவிங்ஸ்மைலுக்கு நன்றி.

மற்றும்படி தருமித் தாத்தாவின்(!!) கருத்தை வழிமொழிகிறேன்.

பங்காளி... said...

பெரியவரின் பதிவை நான் வழிமொழிகிறேன்.

Unknown said...

தருமி, நீங்கள் சொன்ன அந்த இரட்டையர்களைப் பற்றி முன்னர் ஒரு பத்திரிக்கையில்படித்துள்ளேன். அதுவும் அந்த பெண் தனது சகோதரியை இழந்ததை (இப்போது சகோதரனாக மாறிவிட்ட) மிகவும் வருத்தத்தோடு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
.
Transgenders-ல் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களைப் பற்றி இந்தியாவில் கேள்விப் பட்டுள்ளீர்களா?
திருநங்கை என்பது Transgenders-ல் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் ஒரு பகுதியினரை மட்டுமே குறிப்பது.
.
Transgenders-ல் பெண்ணாக இருந்து ஆணாக மாறிவயர்களுக்கு திருநங்கைகள் மத்தியில் என்ன பார்வை/புரிந்துணர்வு/மரியாதை/ஏற்றுக் கொள்ளல் உள்ளது? ஒரு முறை இது பற்றி வித்யாவிடம் பின்னூட்டம் மூலம் கேட்டிருந்தேன்.அப்படி ஒருவரை நான் நேரில் பார்த்து பேசி உள்ளேன்(இந்தியாவில் தான்)ஆனால் அவர்கள் திருநங்கைகளுக்கு கிடைக்கும் வெளிச்சத்தில் ஒரு பங்குகூட இல்லாமல் உள்ளார்கள்.ஆண் உணர்வுகளைச் சுமந்து கொண்டு பெண்ணுடையிலேயே உள்ளார்கள்.
.
உடல் ஊனத்தில் இருந்து,செவிடு,ஊமை,திக்கிப் பேசுபவ்ர்கள் என்று சகட்டுமேனிக்கு எல்லாரையும் இந்தியச் சினிமா காயப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.சமுதாயம் அப்படி.
.
நல்ல குழந்தைகளை உருவாக்குவதே நல்ல சமுதாயம் அமைய வழி.
.
Sexual Orientation (Straight or heterosexuality,Gay,Lesbian,Bisexual) மற்றும் Transgender பற்றி எல்லாக் கல்லூரிகளிலும் சிறு அறிமுகப்பாடமாவது இருக்க வேண்டும்.
.
Oh...Shit என்று நொடிக்கு ஒரு முறை சொல்லும் நாகரீகக் கணவான்கள் அதே அர்த்தம் தரும் "அய்யோ பீ" அல்லது "ஓ..மலம்" என்று சொல்வார்களா?

Oh..Shit பரவலாக ஏன் ஏற்றுக் கொள்ளப்பட்டது எனது உளவியல் சார்ந்த விசயம்.
.
நம்மைப் போன்றவர்கள் குழந்தை பெறுவதில் உள்ள சிரமங்கள் பற்றி எழுதலாம்.ஆனால் பெறும் நேரத்தில் ஏற்படும் வலியை பெறுபவள் மட்டுமே உணர முடியும்.பேறு காலத்தின் போது கெட்ட வார்த்தைகளில் கணவனைத் திட்டும் பெண்களைப் பார்த்து இருக்கிறேன். அவர்களின் வலி அவர்களுக்கு.அவர்களே அதனை வெளிப்படுத்தும் மொழியையும் தேர்ந்துடுக்கும் உரிமை படைத்தவர்கள். அது நமக்கு ஏற்பில்லாததாக இருந்தாலும்.
.
வித்யா சொல்லியிருக்காவிட்டால் இந்த செய்திகள் நமது பார்வைக்கு வந்து இருக்காது.இருந்தாலும் ராதிகாவின் சொந்த வாழ்க்கை பற்றிய விமர்சனம் தவறானது தவிர்க்கப்படவேண்டியது.

Unknown said...

என்னுடைய பின்னூட்டத்தில் ஒரு சிறு திருத்தம் :-))
//Oh..Shit பரவலாக ஏன் ஏற்றுக் கொள்ளப்பட்டது எனது உளவியல் சார்ந்த விசயம். //

Oh..Shit பரவலாக ஏன் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது உளவியல் சார்ந்த விசயம்.

Hariharan # 03985177737685368452 said...

நல்ல பதிவுக்கு நன்றி தருமிசார்.

கல்வி கற்பது மட்டுமே இப்பிரிவினர் கலவித்தொழிலில் சீரழிந்து போகும் நிலை மாற்றும்.

ஒரே ஒருவர் பெற்ற கல்வியின் துணையால் இணையம் வழியாக பாதிப்பில் இருக்கும் இச்சமூகத்தின் இன்னல்களை வெகுஜனமக்கள் முறையாகப் பார்க்கும் படி செய்திருக்கிறது.

எடுத்துரைக்கும் விதம் கல்வி கற்பித்த நாகரீகத்துடன் இருப்பின் இன்னும் கவன ஈர்ப்பு பெறும்.

மீடியாவில் முறையற்றதாகக் காட்டப்படும் முதல் சமூகப்பிரிவு இவர்கள் மட்டும் தானா? வெகுஜன சமூகத்தில் எத்தனையோ பிரிவினர் மோசமாகக் காட்டப்படுகிறார்கள்.

ஒருவிதத்தில் மீடியா இவர்களை வெகுஜன சமூகத்திற்கு இணையாகவே பாவிக்கிறது எனவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

இருக்கும் சக்தியை, யுக்தியை மீடியாவிற்கு விரயம் செய்யாமல் படிப்பு, வேலை பெற ஆக்கமாகச் செலவழித்தால் ஏற்றம் பெறலாம்.

லக்கிலுக் said...

இவ்விவகாரம் சம்பந்தப்பட்ட பதிவுகளிலேயே மிக நேர்மையானதாகவும், தெளிவானதாகவும் இப்பதிவை கருதுகிறேன்.

//கல்வி கற்பது மட்டுமே இப்பிரிவினர் கலவித்தொழிலில் சீரழிந்து போகும் நிலை மாற்றும்.//

ஹரிஹரன் அண்ணே!

உங்களுக்கு எந்நேரமும் "கலவி" சிந்தனை தானா?

முத்துகுமரன் said...

//கல்வி கற்பது மட்டுமே இப்பிரிவினர் கலவித்தொழிலில் சீரழிந்து போகும் நிலை மாற்றும்.//

ஹரிஹரன்
கல்வி வயித்துப் பசியை எந்த வகையிலும் போக்கிவிடாது. முதலில் அந்தக் கல்வியைப் பெற அவர்களின் ஜீவாதார தேவையான உணவு
உறைவிடத்திற்கு வழி செய்வது மிகவும் அவசியம். உயிரோடு இல்லாமல் படிப்பது எப்படி. இந்த அடிப்படையை சரி செய்தாலே கலவித் தொழிலுக்கு போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது இருக்கும். அந்த காரணிகளை பேசாது வெறும் கல்வி மட்டும் எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்திவிடும் என்பது கானல் நீரில் வரையும் கவிதையாகவே இருக்கும்.
*

வழக்கம் போல சிறப்பான பதிவு தருமி.

பினாத்தல் சுரேஷ் said...

சொல்வதற்கு ஒன்றுமே இல்லை தருமி.
.
.
.
.
.
.
படித்தேன், முழுக்கவும் ஒத்துப்போகிறேன் என்பதைத் தவிர..

- யெஸ்.பாலபாரதி said...

நல்ல பதிவு வாத்தியாரைய்யா..,

மற்றவர்கள் சொல்லுவது போல திருநங்கைகளும் கல்வியில் நல்ல நிலையை அடைய வேண்டுமெனில் சில முக்கிய திருத்தங்களை முதலில் கொண்டு வருதல் அவசியமாக எனக்குப் படுகிறது.

1. இந்த எல்லா வகையான ஊடகங்களும் கொஞ்ச காலத்திற்கு இம்மனுஷிகளை மோசமானவர்களாக காட்டாமல் இருத்தல் வேண்டும்.

2. நேர்மறையான செய்திகளை தவிர்த்து நல்லவிதமான செய்திகளை தொடர்ந்து பேணுவதன் மூலம் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் பொதுபுத்தியை கொஞ்சம் மாற்றலாம்.

3. இதன் காரணமாக திருநங்கைகளை கிண்டல்+கேலி செய்யும் மனநிலை மாற வாய்ப்புகள் ஏற்படலாம்.

4. இச்சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அம்மக்கள் கல்வியில் எப்படி நல்ல நிலையை அடைய முடியும்...? குடும்பத்தாரின் ஆதரவும் இல்லை. (அதற்கு முக்கிய காரணமே இச்சமூகம் அம்மக்களை பார்க்கும் விதம் தான் என்பது என்கருத்து.)

5. ஏதோ ஸ்மைலி மாதிரி படித்த கொஞ்சப்பேரும் எப்படியான அவமதிப்புக்களை உள்வாங்கி படித்து வந்துள்ளனர் என்று உணரவேண்டும். அப்படி படித்து முடித்தும் கூட, சமூகம் மதிக்கும் படியான வேலைக்கு வருவதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது. படித்தும் கூட இன்னும் பலர் அதில் காண்டம் விநியோகிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் தான் குப்பை கொட்டி வருகிறார்கள்.

6. மற்ற ஆண்,பெண் போல் படித்திருந்தும் இச்சமூகத்தில் இழிவாக பார்க்கப்படும் போதும், நடத்தப்படும் போதும் அவர்கள் கோபப்பட்டு "அநாகரிகமான" முறையில் நடப்பதில் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை.

ஜோ/Joe said...

தருமி சொன்னா அதுல ஒரு தனித்துவம் இருக்கும் .இருக்குதே!

தருமி said...

துளசி கோபால் said:

உங்க பதிவை நானும் ஆதரிக்கிறேன்.

வித்யா இன்னும் சின்னப் பொண்ணுதானே? இளங்கன்று பயமறியாதுன்னு நாம்
சொல்றதில்லையா? அதான் அந்த வயசுக்கே உரிய மாதிரி பட்ன்னு எதையும்
சொல்லிடறாங்க.

அவுங்க நினைக்கிற சமுதாய மாற்றம் வந்துக்கிட்டுத்தான் இருக்கு...ஆனா
நத்தை வேகத்தில்.

பொன்ஸ்~~Poorna said...

கல்வியா? கல்வி, அறிவு எல்லாம் பெற்று கணினியில் இருக்கிறவங்களே இன்னமும் இந்த மக்களைப் பார்த்து "வெள்ளத்தனைய ... ", என்று வில்லத்தனமா சொல்லிகிட்டிருக்காங்க.. படிச்சி மட்டும் என்ன பண்ண முடியும்.

அவங்களை முதல்ல மனுசங்களாப் பார்க்கத் தொடங்கினால் தான் அடுத்த முன்னேற்றம் ம்ஹும், இருப்புக்கே வழி கிடைக்கும்.

அப்புறம், நேற்று(21/3/2007) தேவையில்லாமல் அந்தத் தொடரின் ஒரே ஒரு சீனைப் பார்க்க வேண்டியதாகிவிட்டது. "மிஸ்டர் கங்கா" என்று அந்தப் பாத்திரத்தை அழைக்கிறார் ராதிகா, பிருத்விராஜ், "மிஸ் கங்கா" என்று திருத்திய பின்னரும். திருநங்கைகளின் பால் அங்கீகார சட்டங்கள் வருவதற்காக போராடிக் கொண்டிருக்கையில் அதை மொத்தமாக அடித்துத் தள்ளும் இந்த ஊடகங்கள் "ஏன் நல்லதொரு திருநங்கையைக் காட்டவில்லை என்று கேட்பது சரியான கேள்வி இல்லை" என்று வேறு வாதங்கள்!

தருமி said...

காட்டாறு said:

சரியாக சொன்னீர்கள் தருமி அவர்களே. அக்காலம் வரும் விரைவில். நம்பிக்கையோடு இருப்போம்.

தாணு said...

லிவிங் ஸ்மைல் பதிவுகளை முதல் முறையாக வாசிக்க உங்கள் பதிவு முன்னோடியானது, நன்றி

Hariharan # 03985177737685368452 said...

//கல்வி வயித்துப் பசியை எந்த வகையிலும் போக்கிவிடாது. முதலில் அந்தக் கல்வியைப் பெற அவர்களின் ஜீவாதார தேவையான உணவு
உறைவிடத்திற்கு வழி செய்வது மிகவும் அவசியம். உயிரோடு இல்லாமல் படிப்பது எப்படி.//

இடைப்பட்ட பாலினம் குறித்த அறியாமை நீக்கும் சமூகக் கல்வி முதலில் இவர்களைப் புறக்கணித்து ஒதுக்கும் பெற்றவர்களுக்கு முதலில் விஸ்தாரமாகத் தரப்படவேண்டும்.

இவர்களின் ஜீவாதாரம் இவர்களை பெற்றோர் புறக்கணிக்காமல் இருந்தாலே போதும். பெரும் சமூகப்பிரச்சினையாகாது!

இவர்களது கல்வி மிக அவசியம்! ஊனமுற்றோருக்குச் சிறப்புக் கல்வி அமைப்புகள் இல்லையா? அம்மாதிரியான வகையில் செய்யலாம்!

இவர்கள் குறித்தான வெகுஜனசமூகப்புரிதல் என்பது இவர்களது சமூக நடத்தை கொண்டே அமைகிறது அவ்வகையில் வெகுஜனத்தின் கவனத்தைக் கவர முகஞ்சுளிக்க வைக்கும் எழுத்தும், பேச்சும் நடவடிக்கையும் கல்வி கிடைத்தபின்னும் செய்வது பெரிய தாக்கத்தினை இவர்களுக்கு ஆதரவாகத் திருப்பிவிடாது!

அதிகாரத்தில் இருப்பவர்கள் இவர்கள் குறித்து சமூகத்தில் நிலவிவரும் சமூக அறியாமையை நீக்க குறிப்பாக பெற்றோர்க்கு சிறப்பு எடுத்துரைப்பு செய்ய வேண்டும்!

பெண் சிசுக்கொலைக்குச் செய்த மாதிரி, தொட்டில் குழந்தைத் திட்டம் மாதிரி... அரசு முன்னெடுத்து சமூக வழிநடத்தல் செய்யவேண்டும்!

லக்கி,

மெரீனா பீச்சில் நான் மிக அதிர்ச்சியுடன் கண்டது "கலவித் தொழில்" எனும் சொல்லாடலுக்குப் பின்ணணி.

லிவிங் ஸ்மைல் said...

// அன்புள்ள வித்யாவிற்கு,

கோபமான உன் ( இக்கடிதத்தில் மட்டும் ஒருமையில் உன்னை (உரிமையோடு) அழைத்துக் கொள்கிறேன்; சரியா?) //

permission granted தாத்ஸ்

// அவ்வளவு ஏன்? திருநங்கைகளின் இந்த அவல வாழ்க்கைக்கு அடிப்படைக் காரணம் என்ன? அவரவர்களது குடும்பங்களிலேயே அந்தப் புரிதல் இல்லையே. அதனால்தானே அவர்கள் வாழ்க்கையில் இத்தனை வேதனைகள். //


குடும்பம் புரிந்து கொள்ளாமைக்கும் ஏற்றுக் கொள்ளாமைக்கும் காரணமே சமூகம் தானே. இதைப் பற்றி எனது முந்தைய பதிவில் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளும் நாகரீக மொழியில் தெளிவாகவே தந்துள்ளேன்.
பார்க்க http://livingsmile.blogspot.com/2007/03/blog-post_19.html

சரி சமூகம் ஏன் புரிந்து கொள்ளவில்லை..? சமூகத்திற்கு தெரியவில்லை..? ஏன் தெரியவில்லை..? அல்லது எப்படி தெரியும் ஊடகம் மூலமாகவே...

இதைப் பற்றியும் எனது முந்தைய பதிவில் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளும் அதே நாகரீக மொழியில் தெளிவாகவே தந்துள்ளேன்.

http://livingsmile.blogspot.com/2007/02/blog-post.html


இன்று என் தகாத வார்த்தை கண்டு கொந்தளிக்கும் உங்களில் எத்தனை பார் மேற்படி பதிவுகளுக்கு எதிர்வினையாற்றியுள்ளீர்கள்..?!

//அதோடு நமது மீடியாக்களில் யாரைத்தான் கேவலமாகச் சித்தரிக்கவில்லை. கல்லூரி ஆசிரியர்களையும், போலீஸ்காரர்களையும் கேலி செய்வது நமது சினிமாக்காரர்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாச்சே. //

உண்மை நீங்கள் குறிப்புடும் யாரும் விளிம்பு கிடையாது, இத்தகைய தவறான சித்திரப்பால் யாருக்கும் பாதிப்பு இருந்ததில்லையே...

நினைத்துப் பாருங்கள் ஒரு பெண்கள் விடுதியில் அங்கீகாரத்தோடு நுழைவதற்கு நான் எவ்வளவு போராடியிருப்பேன்.. இன்று அத்தனை பெண்கள் கூட்டத்தில் அந்த காட்சி வரும் போது நான் எவ்வளவு குறுக்கிப் போயிருப்பேன்...

மருந்து உண்டா....

//வெண்ணிற ஆடை மூர்த்தி, டைப்பிஸ்ட் கோபு, மதன் பாப், குமரி முத்து இன்னும் சில ஆட்களையே கல்லூரி பேராசிரியர்களாகக் காண்பிப்பதுதானே வழக்கம். எந்தப் படமும் - நம்மவர் உட்பட - கல்லூரி வகுப்பைச் சரியாக இதுவரை காண்பித்ததாகச் சரித்திரமே கிடையாதே. ///

ஒத்துக்கொள்கிறேன், ஆனால் ஒரு வெண்ணிற ஆடைக்கு மாற்றாய் இன்னொரு ரமணா உண்டுங்கே..
மேலும் பல உதாரணங்கள் நான் சொல்லாமலே உங்களுக்கு தெரியும்...

ஆனால், திருநங்கைகள் குறித்து ஒரு நல்ல பதிவு....?!

லிவிங் ஸ்மைல் said...

/// Hariharan # 03985177737685368452 said...

கல்வி கற்பது மட்டுமே இப்பிரிவினர் கலவித்தொழிலில் சீரழிந்து போகும் நிலை மாற்றும். ////

நீங்க தமிழ்நாடு கிடையாதா.. அப்பிடின்னா தெரிஞ்சுக்குங்க..

படிக்க தெரிஞ்சாலும், அதுக்கு பணமில்லை, சரி பணம் கூட ஹரிஹரன் மாதிரி ஒரு புண்ணியவானே உதவினாலும், கல்லூரியில் அனுமதி கிடையாது, அப்பிடியே கிடைச்சாலும், ஆசிரிய, மாணவ இன்ன பிறரின் கேலி கிண்டலுக்கு தக்க கவசம் கிடையாது..



எல்லாத்துக்கும் மேலே எங்களுக்கு பாலின அடையாளமும், அங்கீகாரமும் சுத்தமே கிடையாது... எங்க போய் படிக்கலாம்னு ஏதாவது வழியையும் சேர்த்து நீங்களே சொல்லிடுங்க...

// ஒரே ஒருவர் பெற்ற கல்வியின் துணையால் இணையம் வழியாக பாதிப்பில் இருக்கும் இச்சமூகத்தின் இன்னல்களை வெகுஜனமக்கள் முறையாகப் பார்க்கும் படி செய்திருக்கிறது.

எடுத்துரைக்கும் விதம் கல்வி கற்பித்த நாகரீகத்துடன் இருப்பின் இன்னும் கவன ஈர்ப்பு பெறும். ///



நாகரீகத்துடன் போட்ட மற்ற பதிவுக்கெல்லாம் எத்தனை முறை கவன ஈர்ப்பு அடஞ்சிருக்கிங்க சார்.. அல்லது எத்தனை முறை வினையாற்றியுள்ளீர்கள்னு தெரிஞ்சுக்கலாமா...!!


/// மீடியாவில் முறையற்றதாகக் காட்டப்படும் முதல் சமூகப்பிரிவு இவர்கள் மட்டும் தானா? வெகுஜன சமூகத்தில் எத்தனையோ பிரிவினர் மோசமாகக் காட்டப்படுகிறார்கள்.

ஒருவிதத்தில் மீடியா இவர்களை வெகுஜன சமூகத்திற்கு இணையாகவே பாவிக்கிறது எனவே எடுத்துக்கொள்ளவேண்டும். ////

இங்க பாருங்க.. சீரியஸா விவாதிக்குறப்ப இப்பிடியெல்லாம் ஜோக் அடிக்கக் கூடாது.. ப்ரிஞ்சுதா...?!

/// இருக்கும் சக்தியை, யுக்தியை மீடியாவிற்கு விரயம் செய்யாமல் படிப்பு, வேலை பெற ஆக்கமாகச் செலவழித்தால் ஏற்றம் பெறலாம். //

படிப்பு : இதோ நீங்கள் அறிந்த லிஸ் முனைவர் பட்டம் பெற விரும்புகிறாள்... பயப்பட வேண்டாம் முதுகலை பயன்பாட்டு மொழியியலில், டிஸ்டிங்க்ஸன் மற்றும் யுனிவர்சிட்டி ரேங்க் வாங்கியுள்ளாள் (மொத்த மாணவர்கள் 6 பேரு தான்!!) வாங்கித் தரமுடியுமா...? ஒரு சீட்...



வேலை: அதே நீங்கள் அறிந்த லிஸ் சென்னையில் பணிபுரிய விரும்புகிறாள். ஒன்றரை வருடம் அனுபவம் உண்டு. 7 ஆயிரத்திற்கு ஒரு குமாஸ்தா வேலை வாங்கித்தர முடியுமா...?

முடியாதா...? நான் ஏன் வாங்கித்தரனும்னு கேக்குறிங்களா.. வாங்கித்தர முடியலைன்னா, கருத்து சொல்றேன் பேர்வழியேன்னு தத்து பித்துன்னு உளறாதிங்க...

enRenRum-anbudan.BALA said...

Very good, balanced views !

This is HOW and WHERE a learned professor stands really TALL !

Thanks !

Hariharan # 03985177737685368452 said...

//படிப்பு : இதோ நீங்கள் அறிந்த லிஸ் முனைவர் பட்டம் பெற விரும்புகிறாள்... பயப்பட வேண்டாம் முதுகலை பயன்பாட்டு மொழியியலில், டிஸ்டிங்க்ஸன் மற்றும் யுனிவர்சிட்டி ரேங்க் வாங்கியுள்ளாள் (மொத்த மாணவர்கள் 6 பேரு தான்!!) வாங்கித் தரமுடியுமா...? ஒரு சீட்...



வேலை: அதே நீங்கள் அறிந்த லிஸ் சென்னையில் பணிபுரிய விரும்புகிறாள். ஒன்றரை வருடம் அனுபவம் உண்டு. 7 ஆயிரத்திற்கு ஒரு குமாஸ்தா வேலை வாங்கித்தர முடியுமா...?

முடியாதா...? நான் ஏன் வாங்கித்தரனும்னு கேக்குறிங்களா.. வாங்கித்தர முடியலைன்னா, கருத்து சொல்றேன் பேர்வழியேன்னு தத்து பித்துன்னு உளறாதிங்க...//


ஹரிஹரன் கருத்துச்சொல்லணும்னா இதெல்லாம் செய்துவிட்டுக் கருத்துச் சொல் என்கிறீர்கள். சரி. கேட்டுக்கிறேன்!

கருத்துச் சொல்வதற்கு இதே அளவுகோல் பாரபட்சமின்றிப் பயன்படுத்தப்பட்டால் தங்கள் பிரச்சினைக் கருத்தைச் சொல்லிய தங்களது பதிவு முதல்கொண்டு, தருமிசாரின் இந்தப் பதிவு வரை, இவைகளில் பின்னூட்டமாக வந்த பலரின் கருத்துக்கள் அனைத்தும் உங்கள் அளவுகோல்படி தத்துப்பித்தல்.. உளறல்தான்!

Aravindhan said...

உங்கள் கருத்துக்கள் சரியே
ஞானி ஆ.வி கட்டுரையில் ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார் - "நம்முடைய சமூகத்தில் sex organs குறிக்கும் வார்த்தைகள் எல்லாமே கெட்ட வார்த்தைகளாக இருக்கிறது "

நம்ம சினிமாவிலும் சமூகத்திலும் பிறர் ஊனத்தை வைத்து கிண்டல் அடிப்பது வாடிக்கை ஆகிவிட்டது
e.x : சொட்ட தல professor,நொண்டி

திருநங்கைகளை குறிக்கும் அலி கூட கெட்ட வார்த்தை தானே
இந்த சமூகம் திருந்தாது

தருமி said...

அரவிந்தன்,

//இந்த சமூகம் திருந்தாது..//

திருந்தும்; திருந்த வேண்டும். உங்களைப் போன்ற இளைஞர்கள் இருக்கும்போது திருந்தாமல் எப்படி இருக்க முடியும்?

எங்கள் (வயசான என் மாதிரி கேசுகள்) நம்பிக்கைகளே நீங்கள்தானே.

M.Rishan Shareef said...

//திருநங்கைகளின் இந்த அவல வாழ்க்கைக்கு அடிப்படைக் காரணம் என்ன? அவரவர்களது குடும்பங்களிலேயே அந்தப் புரிதல் இல்லையே. அதனால்தானே அவர்கள் வாழ்க்கையில் இத்தனை வேதனைகள். பெற்றவர்களுக்கே புரியாததும், புரிந்த பிறகும் அதை ஒத்துக் கொள்ள முடியாத மூடிய மனதும் இருக்கையில் மொத்த சமூகத்திடம் இன்றைய நிலையில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்துக் காரியங்களும் உடனே எளிதாகக் கிடைத்துவிடாதே.//

எப்படிக் கிடைக்கும் தருமி?
சினிமா,தொலைக்காட்சி நாடகங்கள் திருநங்கைகளை இப்படிக் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவர்களாகச் சித்தரிக்கையில் அதனைப் பார்க்கும் வீட்டிலுள்ளோர்க்கு அவர்கள் மேல் மரியாதையா வரும்?
தன் மகன்,சகோதரன் இப்படித்தானே பிற்காலத்தில் கேவலப்படுத்தப்படுவானென எண்ணி எண்ணியே ஆற்றாமையும்,கோபமும் அவர்களைத் தாக்கும்.அது வீட்டில் வளர்ந்து வரும் திருநங்கையின் மேல்தான் காட்டப்படும்.இதில் அவர்களைப் புரிதல் சாத்தியப்படாதே.
வித்யா ஊடகங்களையோ,தனிமனிதர்களையோ சாடுவதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை நண்பரே..!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தமிழ்ச் சமுதாயமும்; இச்சமுதாயத்தில் முக்கிய அங்கம் வகுக்கும் தமிழ்ச் சினிமாவும்
திருநங்கைகள் விடயத்தில் மாறித் தான் ஆக வேண்டும்.
அவர்கள் கேலிக்குரியவர்கள் இல்லை.அப்படிக் கேலி செய்யப்படும்போது அவர்களை அது குறுக
வைக்கிறது.
நம் சிரிப்பு ஒருதரை வேதனைப்படுத்துகிறது என அவர்களே வேண்டும் போது; மீண்டும் மீண்டும்
அவர்களை வேதனைப் படுத்துவதைத் தவிர்பதே நலம்.
மனித இயல்பும் கூட...
உதவிதான் செய்யாத போது உபத்திரமாவது செய்யாதிருப்போம்.
இந்த அளவு மனமாற்றத்துக்குக் கூட ;இவர்கள் எழுச்சியும் ஒரு காரணம்...அதை அவர்கள் தொடர
அனுமதியுங்கள்.

Unknown said...

பேராசிரியர்கள், காவல் துறையினர் போன்றவர்களுக்கு உண்மையில் மக்கள் மத்தியில் மதிப்பிருக்கிறது. அவர்களை திரையில் தவறாகச் சித்தரிக்கும்போது யாரோ ஒன்றிரண்டு கருப்பாடுகள் என எண்ணிக் கொள்ள முடிகிறது.

ஆனால் அதே நிலைமை இங்கில்லை. மக்கள் மத்தியில் கேவலமாக பார்க்கப்படும் பிச்சைக்காரர்கள், அரவாணிகள் முதலியவர்களை மேலும் கேவலமாக காட்டும்போது அவர்களே அப்படித்தான் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

எனவே எனக்கு இரண்டும் ஒன்றாகத் தோன்றவில்லை தருமி ஐயா.

வித்யா விரும்பும் ஊடக மாற்றம்தான் அவர்களை கேவலமாகப் பார்ப்பதிலிருந்தும் மக்கள் மனதை மாற்றும்.

Post a Comment