Tuesday, March 27, 2007

208. பார்த்தது, கேட்டது, படிச்சது

இதுவரை ...

1. சுரேஷ் கண்ணன் --> 2. கார்த்திக் --> 3. மோகன்தாஸ் --> 4. பொன்ஸ் --> 5. இராம் --> 6. வரவனையான் --> 7. தருமி --> ?


இந்த ஆளு வரவனையானுக்கு எப்படியோ மூக்குல வேர்த்திருச்சி போல. நான் அவரது பெயரை weird chain-ல கோர்த்துட்டு தமிழ் மணம் வந்து பாத்தா அதே நேரத்தில என்னைய இந்த பா.கே.ப.-ல மாட்டி விட்டுருக்கார். என்ன பொருத்தம் இந்த பொருத்தம், போங்க.

பார்த்தது அப்டின்றதுல பார்த்த சினிமாவைப் பத்திதான் மக்கள்ஸ் எழுதறது மாதிரி தெரியுது. அதே மாதிரி கேட்டதில பாட்டு, படிச்சதுல கதைப் புத்தகங்கள் அப்டின்னு தெரியுது. முன்னால் போன மூத்தவங்க, பெரியவங்க போட்ட கோட்டைத் தாண்டலாமா? நம்ம வழி தனி வழி அப்டின்றதெல்லாம் நமக்குச் சரியா வருமா?


பார்த்தது:

வெறும் தூர்தர்ஷன் மட்டும் இருந்தபோது சில சமயம் பார்க்கக் கிடைச்ச படங்கள் மாதிரி இப்போ அதிகமா கிடைக்கிறதில்லைன்னு நினைக்கிறேன். தலைவிதியே அப்டின்னு இருக்கிற ஒரே சேனலைப் பார்த்துக்கிட்டு இருந்த காலத்தில, வெகு தற்செயலா பார்த்த படம் Oh! God. George Burns அப்டின்னு பெருசு ஒருத்தர் கடவுளா நடிச்சிருப்பார். பயங்கர சிரிப்புப் படம் மாதிரி; ஆனா நிறைய விஷயத்தோட உள்ள ஆழமான, அழகான படம்.

ஆரம்பத்திலேயே வயசான ஆளா, பேக்கு மாதிரி கடவுள் வந்து முன்னால் நின்னதும் ஹீரோ ஆடிப் போயிடுவார். ஏன் என்னிட்ட வந்தீங்க? அப்டின்னு கேட்டதும், கடவுள் Why not? அப்டிம்பார். அடுத்து ஏன் இப்படி வயசான கோலத்தில வந்தீங்க அப்டின்னதும் மறுபடி Why not? ரத்தினச் சுருக்கமான வசனங்கள்; ஆனால் ரொம்பவே பொருள் பொதிஞ்ச வசனங்களாக இருக்கும். கிறித்துவ மத போதகர்களையும், அவர்களது தகிடுதத்தங்களையும் காட்டுவாங்க. ஆனா, பொதுவா கடவுள் கொள்கைகள், மத நம்பிக்கைகளை வைத்து எடுத்த படம். கடைசியில் கடவுள் மனசு வெறுத்து திரும்பிப் போறத பாத்தா நமக்கே மனசு கஷ்டமாயிரும். ரொம்ப பிடிச்சி போச்சு அந்தப் படம்.

இந்தப் படத்தை அடிப்படையாக வைத்துதானோ என்னவோ தமிழில் பிரபாகாரன் இயக்கத்தில் கடவுள் அப்டின்னு ஒரு படம் வந்தது. வசன சிக்கனமும் பொருள் பொதிவான வசனங்களும் ஆங்கிலப் படத்தின் அடிப்படை என்றால் நம் படத்தில் ஒரே பேச்சு..பேச்சு..அதுவும் மேடைப் பிரசங்கம் மாதிரி. subtle அப்டின்னு ஒண்ணு நம்ம தமிழ்ப்படங்களில் எப்போதுதான் வருமோ?

படிச்சது:

படித்த புத்தகங்கள் அப்டின்னதும் முதலில் நினைவுக்கு வருவது பொன்னியின் செல்வன். பள்ளி மாணவப் பருவத்திலேயே இரண்டுமுறை வாசித்து பின் 67-69 வாக்கில் கல்கியில் மீண்டும் தொடராக மணியம் படத்தோடு வரும்போது, மொத்தமாக பைண்டு செய்ய வேண்டுமென்று வாராவாரம் வாங்கிச் சேமித்து, கடைசிவரை பைண்டு செய்யாமலேயே வைத்திருந்து, வேலையிலிருந்து ஓய்வு பெரும் வேளையில் மஞ்சளாக ஒடிந்துவிடும் நிலையில் இருந்த கதைக் கட்டை அரைமனசோடு தூக்கிப் போட்டது ...என்று எல்லாமே அந்தப் புத்தகத்துக்கு ஒரு தனி மரியாதையைக் கொடுத்தாகி விட்டது. ஆனால் ஒரு சந்தேகம்; இப்போதும் கதை பிடித்த கதையாக இருப்பதற்குக் காரணம் சின்ன வயசில் படித்து அந்த வரலாற்றுக் காலத்தைக் காதலித்து ...அதனால் இப்படி ஆயிற்றா, இப்போது படித்திருந்தால் அந்த பிடிப்பு இருந்திருக்குமா என்றெல்லாம் கேள்விகள் அவ்வப்போது வருகின்றன.

எண்பதுகளின் ஆரம்பத்தில் படித்த இன்னொரு ஆங்கில நாவல் - மூன்று முறை நான் வாசித்த மற்றொரு புத்தகம் - Exodus by Leon Uris. ஆசிரியர் சொல்லாமலே தெரிந்துவிடும், ஒரு யூதர்; இரண்டாம் உலகப் போரில் அவர்கள் குலம் பட்ட கஷ்டம்; தமக்கென ஒரு நாடு வேண்டும் என்ற வெறி எப்படி ஒவ்வொரு யூதனிடமும் தோன்றி, அப்படி ஒரு நாட்டை யூதர்கள் எப்படி நிறுவினார்கள்; என்று ஒரு உண்மை வரலாற்றை கற்பனை + நிஜ பாத்திரப் படைப்புகளோடு உலவ விட்டு எழுதப்பட்ட நாவல். என்னையறியாமல் ஓவ்வொரு முறையும் என்னை அழவைத்த நாவல். இதைப் படித்த பின் சில ஆண்டுகள் முன்பு வரை நான் ஒரு pro-israelites ஆகவே இருந்து வந்தேன்; கதையின் தாக்கம் அவ்வளவு. ஆனால் அவர்களின் மேல் கொண்ட பிரமிப்பு இன்னும் நீங்கிய பாடில்லை. அதுவும் ஆங்கில நாவல்கள் அதிகம் வாசித்த காலத்தில், எழுதப்படும் நாவல்களில் பெரும்பான்மை யூதக் கதாசிரியர்களால் எழுதப்பட்டதைப் பார்க்கும் போது நிறம்ப ஆச்சரியம்தான்.


கேட்டது:

நமக்கு இசை தெரியாது; புரியாது. ஆங்கிலப் பாடல்களை ரசிக்குமளவிற்கு ஆங்கில அறிவோ, மேற்கத்திய இசை அறிவோ கிடையாது. மிச்சம் இருக்கிறது கொஞ்சூண்டு instrumental music (KennyG, Yanni ..) அதையும் விட்டா நம்ம தமிழ் சினிமாப் பாட்டுக்கள் .... தமிழ் சினிமாப் பாட்டுக்கள்தான்.. அதைத் தவிர வேறொன்றும் தெரியாது. அப்படி கேட்ட சினிமாப் பாட்டுக்களில் கேட்ட மாத்திரத்தில் மந்திரம் போட்டுக் கட்டியது போல் கட்டிப் போட்ட பாட்டுக்கள் நாலைந்து...

தஞ்சையில் 1966-70 வரை வாழ்க்கை. புகைவண்டி நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் இருந்த ஒரு டீக்கடை நமக்கு மாமூலான கடை. டீ நல்லா இருக்குமோ இல்லையோ, 24 மணி நேரமும் பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கும். அதனாலேயே நம்ம குரூப்புக்குப் பிடிச்ச joint அது. ஒரு நாள் இரவு டீ குடிக்க வந்தவங்க ஒரு பாட்டை கேட்டுட்டு அப்படியே சமஞ்சு போய் நின்னுட்டோம். பாட்டு முடிஞ்சதும் எங்கள் (நேயர்) விருப்பம் அறிந்து கடைக்காரர் ரிக்கார்டை தொடர்ந்து மூன்று தடவை போட்டார் எங்களுக்காக. பாட்டைக் கேட்ட மூன்று பேருமே சிவாஜி ரசிகர்கள். எங்களுக்குள் ஒரு விவாதம்: இந்தப் பாட்டில் இசையமைப்பாளர், பாடிய டி.எம்.எஸ். இந்த இரண்டிலும் யார் வின்னர்?; இப்படிப்பட்ட பாட்டை டி.எம்.எஸ். பாடியிருந்தால் நிச்சயமாக அது சிவாஜிக்காகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் இசையமைப்பாளர்- விசுவநாதன் - ராமமூர்த்தி, டி.எம்.எஸ்., சிவாஜி மூன்று பேரில் யாருடைய திறமை மிகவும் சிறப்பாக இருக்குமென்று பார்க்கவேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்தது மாதிரியே அந்தப் பாடல் இடம்பெற்றது சிவாஜி நடித்த படம்தான். படம் பார்த்த பிறகு ஒருமனதாக நாங்கள் வெற்றியாளராகத் தேர்ந்தெடுத்தது: டி.எம்.எஸ்.தான்.

படம்: வியட்நாம் வீடு
பாட்டு: உன் கண்ணில் நீர் வழிந்தால் .....
இன்றும் அந்தப் பாட்டைக் கேட்டால் சிவாஜி - பத்மினி நினைவுத் திரையில் வருவதை விடவும், தஞ்சாவூரில் நாங்கள் நின்று கேட்ட அந்த டீக்கடை முன்னால் நின்று மீண்டும் கேட்பதுபோல்தான் தோன்றும்.

70-ல் மதுரை வந்து அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியனாகி விட்டாலும் பழைய தொடர்பு விடாமல் நண்பர்களைப் பார்க்கச் சென்று அப்போதைய எங்கள் வழக்கம்போல் மாலையில் தஞ்சையிலிருந்து புறப்பட்டு திருச்சியில் தொடர்ந்து இரண்டு படம் பார்த்துவிட்டு இரவு ஒரு மணி அளவு புகைவண்டி நிலையம் அருகே வந்தோம். நான் மதுரை செல்ல வேண்டும்; நண்பர்களிருவரும் தஞ்சை செல்ல வேண்டும். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டியதிருந்தது. கை கொடுத்தது இங்கே இன்னொரு டீக்கடை. வசந்த மாளிகை படம் வெளிவருவதற்குள் பாட்டுக்கள் வெளிவந்திருந்த நேரம். நாங்களே முதல் முறையாக அந்தக் கடையில்தான் அப்படப் பாடல்களைக் கேட்டோம். அந்த இரண்டு மணி நேரத்துக்குள் எங்களுக்காக ஐந்தாறு முறை திரும்ப திரும்ப "இரண்டு மனம் வேண்டும்" என்ற பாட்டைக் கேட்டோம். ஆனால் இந்தப் பாடலைப் பொறுத்தவரை பாடலைவிட நாங்கள் காத்திருந்தது, அந்தக் காத்திருப்பில் மீண்டும் மீண்டும் அந்தப் பாடலைக் கேட்டது என்று அந்த situation effectதான் மனதில் தேங்கி நின்று விட்டது.

வருடம் நினைவில் இல்லை. மகள்களோடு தெருவில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது ஒலிபெருக்கியின் சத்தத்திற்குப் பயந்து வேகமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு பாட்டைக் கேட்டதும் மூவரும் ஒதுங்கி நின்று முழுப்பாட்டைக் கேட்டோம். நிரம்பவே வித்தியாசமாக கவிதைக்காகவும், இசைக்காகவும் நின்று கேட்ட பாடல் ரஹ்மானின் முதல் படம் புதிய முகத்தில் உள்ள "கண்ணுக்கு மையழகு..."

இப்போது சமீபத்தில் டிவியில் ஒரு பாட்டு வர, ஆரம்பமே பிடித்துப்போக - பாட்டு ரொம்ப பிடிச்சா விஷுவலைப் பார்ப்பதில்லை - பாட்டை மட்டும் கேட்டுக் கொண்டு வரும்போது ஏனென்றே தெரியவில்லை .. பாட்டு முடிவுக்கு வரும் வேளையில் கண்ணில் கொஞ்சம் கண்ணீர்; ஒரு மாதிரி மனசு என்னமோ பண்ணியது. ஏன் முதல் முறை அப்பாட்டு கண்ணீர் வரவழைத்தது என்று தெரியவில்லை. பாட்டு முடிந்ததும் மகளுக்குத் தொலைபேசியில் பாட்டைப் பற்றிச் சொல்லி என்ன படம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

படம்: ஒரு நாள்; ஒரு கனவு
பாட்டு: காற்றில் வரும் கீதமே ...


சரி... இப்போ இன்னொரு ஆளை இந்தச் சுற்றுக்கு சொல்லணும். +2 -க்குக் கஷ்டப்பட்டு படிச்ச மகள்கூட சேர்ந்து கஷ்டப்பட்டுட்டு, இப்போ கொஞ்சம் ரிலாக்ஸா இருக்குறாங்க தாணு. அப்படியெல்லாம் ஒரு பதிவரை இருக்க விடலாமா? வாங்க தாணு ...


1. சுரேஷ் கண்ணன் --> 2. கார்த்திக் --> 3. மோகன்தாஸ் --> 4. பொன்ஸ் --> 5. இராம் --> 6. வரவனையான் --> 7. தருமி --> 8. தாணு

7 comments:

பட்டணத்து ராசா said...

அப்பா ரொம்ப நாளா இந்த subtle புரியாம இருந்தது, தெரிய வச்சதுக்கு நன்றி.

தாணு said...

ராமநாதன் நாலைஞ்சு நாளுக்கு முன்னரே மாட்டி விட்டாச்சு. எதைப் பத்தி எழுதறதுன்னு தெரியாமல் நழுவிட்டு இருந்தேன். ஆனால் வாத்தியார் சொல் தட்டாத மக்கு நான். எனவே உங்கள் வார்த்தைக்கு மதிப்பளித்து இன்னும் சில மணி நேரங்களில் .... மீதி வெள்ளித்திரை.. சாரி.. கணிணித் திரையில்...

டிபிஆர்.ஜோசப் said...

தினமலர் வாரமலர்ல வர்ற பா.கே.ப. தொடர் மாதிரியா?

நல்லாத்தான் இருக்குது..

நீங்க சொன்ன ஓ காட் படத்த நானும் பாத்துருக்கேன்.. நல்ல கற்பனை.. கடவுள்ங்கற பேரால இன்னமுந்தான் இதே பேர்ல ஒரு சானல்ல கூத்தடிக்கறாங்க.. இதுவே ஒரு பொழப்பா போச்சி.. இது எல்லா மதத்துலயும் நடக்கறதுதானே.. என்ன சொல்றீங்க?

Doctor Bruno said...

//இசைக்காகவும் நின்று கேட்ட பாடல் ரஹ்மானின் முதல் படம் புதிய முகத்தில் உள்ள "சின்னச் சின்ன ஆசை ..." //


அந்த படம் ரோஜா......

தருமி said...

doctor bruno, thank you.
திருத்திட்டேன்.....

SurveySan said...

உங்கள் இசை ரசனை சூப்பர். நீங்க சொன்ன எல்லா பாடலும், முத்தானவை.

Anonymous said...

அழகான பாடல்கள்..என் தந்தையாருக்கும் பிடிக்கும்

Post a Comment