Saturday, September 22, 2007

235. பத்மாமகனுக்கு ஜே!

அம்முவாகிய நான் .. இன்னொரு நல்ல தமிழ்ப் படம். கொஞ்சம் மெச்சூர்டு ஆடியன்ஸை மனசில வச்சி எடுத்திருக்கார் பத்மா மகன். அப்புறம் என்ன ..? ஒரு ஃபைட்டு கிடையாது; காமெடிக்குன்னு ஒட்டாத தனி ட்ராக் கிடையாது. இந்த மாதிரி தைரியத்துக்கே அவருக்கு வாழ்த்து சொல்லணும். விலைமாதுகளை வச்சி கதை எடுத்தாலும் கதாநாயகியின் வளர்ப்புத் தாயான ரிட்டையர்ட் விலைமாதுவாக வரும் பாத்திரத்தின் மேல் எந்த வித அருவருப்பும் இல்லாமல் தனி மரியாதைதான் வருது. அந்த மாதிரி இடங்களுக்கு வருபவர்களின் sexual perversions-களையும் கூட ஒரு ஸ்கிப்பிங் கயிறு, ஒரு விஸ்கி பாட்டில், ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் என்பதை வைத்து வேறு விரசமில்லாமல் காண்பித்திருப்பதே பாராட்டுக்குரியது.

கதாநாயகி விளையாட்டாகவே ஒரு சேலஞ்சாகவே கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறாள். ஆனாலும் அவளின் மனமாற்றங்களை சின்னச் சின்ன விஷயங்களாலேயே காட்டுவது அழகு.

*விபச்சார விடுதிக்கு கைது செய்ய வந்த அதே காவல்துறை அதிகாரி தன் கணவனிடம் காட்டும் மரியாதையையும், அவன் மனைவி என்பதாலேயே தனக்குக் கிடைக்கும் மரியாதை,

*தன்னிடம் காசு கொடுத்துப் படுத்தவன் (அபிஷேக்) இப்போது தன் தலையை ஆதரவாகத் தொட்டு மரியாதையும் அன்போடும் வாழ்த்தும் இடத்தில் தன் ஊடலை மறந்து நெகிழும் நேரம்
- எல்லாமே கதாநாயகியின் மனத்துள் நடக்கும் சின்னச் சின்ன ரசாயன மாற்றங்கள்.

*வழக்கமான தமிழ்ப் பட ரசிகர்களை மடையர்களாக நினைத்து இதற்கெல்லாம் வழக்கமாக வரும் foot notes எதுவுமில்லாமல் கதையை நகர்த்தும் பாங்கு,

*ஒரு நல்ல சிறுகதை போல் நாலைந்து பாத்திரப் படைப்புகளுக்குள் எந்த வித சிக்கல் இல்லாமல் அமைத்திருக்கும் திரைக்கதை.

*பார்த்திபனாவது ஒரு அனுபவப்பட்ட நடிகர். ஆனால் அந்தப் புதுமுக பாரதியையும் இப்படி இயல்பாய் நடிக்க வைத்திருப்பது.

*கதாநாயகனின் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த அழகு செங்கல் வீடு, அதன் பழைய காலத்துக் கதவு, சுற்றி இருக்கும் புல்வெளியும் தோட்டமும் (நிஜ வீடோ, ஆர்ட் டைரக்டரின் கைத்திறனோ?)

*படத்தின் முடிவை நாமே முடித்துக்கொள்ளக் கொடுத்திருக்கும் சுதந்திரம்.

*எல்லாவற்றையும் விட, ஒரு நல்ல டைரக்டர் தன் இருப்பைப் படம் பார்ப்பவர்களுக்கு உணர்த்தாத அளவு படத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது ஒரு விதியாகவே கூறப்படுவதுண்டு. டைரக்டர் படத்தின் ஒவ்வொரு ப்ரேமின் ஓரத்திலும் உட்கார்ந்து கொண்டு தன் இருப்பை நிலைநாட்டவில்லை.

---> இவைகள் அனைத்துக்கும் சேர்த்து, மீண்டும் தலைப்பு: பத்மாமகனுக்கு ஜே!


நெகட்டிவா ஏதாவது சொல்லணும்னா, அம்முவைத் தேடி ராணி வீட்டுக்குப் பார்த்திபன் வரும்போது அந்த வீட்டுக் கதவு பார்த்திபன் வீட்டுக் கதவு மாதிரில்ல தெரிஞ்சுது -அவசரத்துக்கு மாத்தி நிக்க வச்சி எடுத்தாலும் அதையெல்லாம் யாரு பாக்கப் போறாங்கன்னு டைரக்டர் நினச்சிட்டாரோ...

இலக்கிய கழகத்தின் தலைவரின் டப்பிங் வாய்சில் மலையாள வாடை அடிச்சுது. ஒருவேளை ஒரு தமிழ்ப் படத்தில் தெலுங்கு நடிகர் மலையாளப் பாத்திரமாக வந்தால் நல்லதுன்னு நினைச்சிருக்கலாம்!


கதாநாயகி வயசுக்கு வந்ததும் ஒரு பாட்டு படத்தில். கேட்டால் காம்ப்ரமைஸ் என்று பதில் வரலாம். படத்துக்கு வயிறு காமிச்சி நாலஞ்சு பொம்பளைங்க வந்து டான்ஸ் ஆடலைன்னா என்னாகிறது? (அந்தப் பாட்டு வந்ததும் பழைய நினைப்புதான் வந்தது. பதிவுலகத்திற்கு வந்ததும் போட்ட ஒரு பதிவு. துளசி டீச்சர் தவிர யார் கண்ணிலும் படாத அந்தப் பதிவு இந்தப் பதிவுக்கு உறுதுணையா இருக்கும்னு நினைக்கிறேன். அதையும் வாசிச்சி பாருங்க...)

நம்ம தமிழ்ப்படங்களின்உண்மையான ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் பாட்டுக்கள்தான். அவைகள் இல்லாவிட்டால் நிச்சயமா தமிழ்ப்படங்களின் slickness அதிகமாகும்; படங்களின் தரம் நிச்சயமாக உயரும். ஆனால் அதெல்லாம் எப்போ நடக்குமோ..தெரியலை. தமிழ்நாட்டு அரசின் தமிழ்ப்பெயர் வச்சா வரிவிலக்குன்ற மடத்தனமான சட்டம் போய், பாட்டு இல்லாத படங்களுக்கு வரி விலக்குன்னு சொன்னா நிச்சயம் இன்னும் வேகமா தமிழ்ப் படவுலகம் வேகமா வளரும்; முன்னேறும். ஆனா என்ன, அதுக்குப் பிறகு பாட்டெழுதுறவங்க எல்லாம் இப்போ மாதிரி ஆட்சியாளர்களை வானுக்குயர்த்திப் பாட்டெழுத மாட்டார்கள்; தாங்குவார்களா நம் அரசியல்வாதிகள்!

சிவாஜி, போக்கிரி மாதிரி படங்கள் பெரும்பான்மையருக்காக எடுக்கப் பட்டாலும், முனைந்து சிறுபான்மையருக்காக இந்த மாதிரி படங்கள் எடுக்கும் டைரக்டர்களைக் கட்டாயம் பாராட்டியே ஆகணும். இப்போதைக்குச் சமீபத்தில் வந்த 4 படங்களின் டைரக்டர்கள் என் நினைவுக்கு வருகிறார்கள்:

மொழி - சொன்ன விஷயத்தின் நேர்த்தி...
அம்முவாகிய நான்...- சொன்ன விஷயமும், சொன்ன நேர்த்தியும்....
வெயில் -சொன்ன விஷயத்தின் நேர்மை
பருத்திவீரன் - சொன்ன விஷயத்தின் பச்சைத்தன்மை rawness

பாராட்டுக்களும் இதே வரிசையில் - என்னப் பொறுத்தவரை. இத்தகைய டைரக்டர்கள் பெருகட்டும்.

காத்திருப்போம்.

இதே கருத்தை ஒட்டிய என் மற்றொரு பதிவு: http://dharumi.blogspot.com/2007/06/221.html

13 comments:

உண்மைத்தமிழன் said...

//அந்த மாதிரி இடங்களுக்கு வருபவர்களின் sexual perversions-களையும் கூட ஒரு ஸ்கிப்பிங் கயிறு, ஒரு விஸ்கி பாட்டில், ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் என்பதை வைத்து வேறு விரசமில்லாமல் காண்பித்திருப்பதே பாராட்டுக்குரியது.//

நிசமாலுமே விரசமாத் தெரியலையா..? அல்லாட்டி படத்துல பூந்து கவுந்துட்டீங்களா..? பெருசு உம்மையெல்லாம்..

வடுவூர் குமார் said...

நானும் பார்த்தேன்.பல காட்சிகள் எங்கே தவறிடபோறாங்களோ என்ற பயம் வந்தது.
முதலிரவு மற்றும் கடைசி சீன் அப்படியே படத்தை தூக்கிவிடுகிறது.
நல்ல படம் ஆனால் குழந்தைகளுடன் பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை.

Kasi Arumugam said...

பெருகட்டும். :-}

Voice on Wings said...

அடுத்தடுத்த நாட்கள் 'பள்ளக்கூடமும்' 'அம்முவாகிய நானும்' பார்த்தேன். பள்ளிக்கூடம் அளித்த நிறைவை அம்மு தரவில்லை என்பதுதான் எனது முடிவு.

ஆமை வேகத்தில் நகரும் (அல்லது நகராத) கதை, (என்னதான் எழுத்தாளனாக இருந்தாலும்) நாயகனின் தொடர்ந்த அதிமேதாவித்தனமான பேச்சுக்கள், நண்பன் பாத்திரம் அறிவுரை செய்கிறேன் என்ற பெயரில் அத்து மீறிப் பேசும் பேச்சுக்கள் / அபத்தங்கள், ஆகியவை ஒரு செயற்கைத்தன்மையையே நமக்கு வழங்குகின்றன. நாயகன் தனது அனுபவங்களை ஒட்டி எழுதியதாகச் சொல்லப்படும் நாவலில், ஒரு இலக்கியப் பரிசு பெறும் அளவுக்கு சம்பவங்களோ திருப்பங்களோ உள்ளனவா என்ற சந்தேகமும் எழுகிறது. (ஏனென்றால், கதையில் அதுவரை படுக்கையறைக் காட்சிகளைத் தவிர குறிப்பிடும்படியாக வேறெதுவும் நிகழவில்லை). இறுதியில் நாயகனின் நாயகத்தன்மை (கயவனை அடித்துத் துவைத்துப் போடுவது), நாயகியின் வேற்று மனிதரைப் புணராமை (a.k.a. கற்பு) நிலைநாட்டப்படுவது, என்று தமிழ் சினிமா தனக்கு வரைந்து கொண்டுள்ள வட்டத்திற்குள்ளேயே கதை பயணம் செய்கிறது. இதை ஒரு wannabe படமாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது.

தருமி said...

உண்மைத்தமிழன்,

உங்களை யாரு அந்தப் படத்தைப் பார்க்க சொன்னா? இங்க பாருங்க வடுவூர் குமார் கரெக்டா சொல்லிட்டாரு: //நல்ல படம் ஆனால் குழந்தைகளுடன் பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை.//

தருமி said...

வடுவூர் குமார்,

பாலன்ஸ் தவறாமலிருப்பது பெரிய ப்ளஸ் பாய்ண்ட்தான் ..
நன்றி

தருமி said...

காசி,

பெருகணும்

தருமி said...

voice of wings,
பள்ளிக்கூடமா, அம்முவா என்று நினைத்து இதைப் பார்த்தேன். பள்ளிக்கூடத்தைத் தள்ளி வைத்ததற்கு 2 காரணம்: அதில் இரு பள்ளிப்பிள்ளைகளின் காதல் டூயட் ஒன்று இருப்பதைப் பார்த்து, கேட்டு எதிராக முடிவு செய்தேன்.
2. ரொம்ப தேவையில்லாம பேசிட்டு, இப்படியெல்லாம் எடுத்திருக்காரா என்று ஒரு எரிச்சல்.

மற்றபடி நீங்க சொன்னதில சிலது ஒத்துக்கிறேன். மறுக்கிறதுக்கும் சில இருக்கு. முக்கியமாக ..//கதையில் அதுவரை படுக்கையறைக் காட்சிகளைத் தவிர குறிப்பிடும்படியாக வேறெதுவும் நிகழவில்லை//

Voice on Wings said...

தருமி,

பள்ளிக்கூடத்தைப் பொறுத்த வரை, ஆண் - பெண் பேதமின்றி அனைவரும் எடுத்ததற்கெல்லாம் விசுக் - விசுக்கென்று அழுவது ஒரு மாபெரும் turn-off. நீங்கள் கூறும் காரணங்கள்: பள்ளிப் பிள்ளைகள் duet பாடியதாக நினைவில்லை. ஒருவரையொருவர் விரும்பும் இரு பிள்ளைகளும் தங்கள் ஆசிரியையுடனும் மற்ற நண்பர்களோடும் ஒரு நகரத்துத் தெருக்களில் உலா சென்றது ஒரு பாடல் காட்சியாக காட்டப்பட்டது என்று நினைக்கிறேன். அது நினைவில் கூட நிற்காத (மற்றும் என்னை உறுத்தாத) ஒரு காட்சியாகவே அமைந்தது. மற்றபடி, ஆஹா ஓஹோ என்று கூற முடியாவிட்டாலும், செய்ற்கைத்தனம் கலந்திருந்தாலும், நல்ல கதை, படமாக்கம் என்பதே எனது கருத்து. அந்தப் பள்ளியில் படித்த ஒரு கைதி, சிறையில் தனது உழைப்பில் சம்பாதித்த மொத்த பணத்தையும் அப்பள்ளிக்கு நன்கொடையாக அளிப்பது ஒரு நெகிழ வைக்கும் காட்சி.

Back to Ammu - பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்த ஒரு பெண்ணிடம் வெட்கம், மானம் போன்ற அடிப்படை குணங்கள் இருக்காது என்பது போன்ற கருத்தியலை படம் subtleஆக முன்வைப்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? ஒரு சாமானியப் பெண்ணுக்கு வழங்கப்படும் அடிப்படை கண்ணியம் கூட அந்தப் பாத்திரத்திற்கு வழங்கப்படாமல், அவளை பல காட்சிகளில் மேலாடையோ (அ) கீழாடையோ இன்றி உலாவ விட்டு காட்சிப் பொருளாக்கியிருப்பதில் ஒரு மேட்டிமைத்தன்மை (elite mindset) வெளிப்படவில்லையா? ஒரு பாலியல் தொழிலாளரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு படத்தில் அவருக்கு ஒரு அடிப்படை மதிப்பு கூட வழங்கப் படாததுதான் என்னை அதிகம் பாதித்தது.

பின்னூட்டத்தில் போரடிப்பதற்கு மன்னிக்கவும் :)

தருமி said...

voice on wings,
உங்கள் பின்னூட்டத்திற்குக் கடுமையான என் கண்டனங்கள் - அந்த கடைசி வரிக்காக மட்டும்.

உங்கள் தீர்ப்பின்படி 'பள்ளிக்கூடம்' -அதையும் 'படித்து' விடுகிறேன்.
நன்றி.

தருமி said...

voice on wings,
எனக்குச் சரியாகப்பட்டது உங்களுக்குத் தவறாகத் தெரிகிறது. முதல் கஸ்டமரை திருப்பி அனுப்பியதுக்கு மன்னிப்பு கேட்குமளவிற்கு இருக்கும் பெண் எப்படியிருப்பாள்? அதுவும் அந்த நிலைக்குத் தொட்டில் காலத்திலிருந்து பழக்கப் படும் ஒரு பெண்; தன்னை யாரும் கூப்பிட்டுக் கொள்ளவில்லை என்று அழும் பெண் ...

ஒரு விவாதப்பொருளாகும் அளவிற்கு இருப்பதே அது ஒரு தரமான படம் என்பதற்கான அறிகுறி என்பது என் கருத்து.

Thekkikattan|தெகா said...

தருமி,

இன்னும் இந்தப் படத்தை பார்க்கவில்லை. இருந்தாலும், நீங்கள் கூறியதில் எனக்கு உடன் பாடு இல்லை...

////முதல் கஸ்டமரை திருப்பி அனுப்பியதுக்கு மன்னிப்பு கேட்குமளவிற்கு இருக்கும் பெண் எப்படியிருப்பாள்? அதுவும் அந்த நிலைக்குத் தொட்டில் காலத்திலிருந்து பழக்கப் படும் ஒரு பெண்; தன்னை யாரும் கூப்பிட்டுக் கொள்ளவில்லை என்று அழும் பெண் ....//

அப்படின்னா அது போன்ற தொழிலில் கட்டாயத்தின் பேரில் நடத்தப் படுபவர்கள் கூட தன்னுடைய மனசையும், மென்மைத் தன்மையையும் இழந்து விடுவார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? நூறு பேர் வந்து போகும் அது போன்ற பெண்ணிடத்தில் ஒருவன் கொஞ்சம் இனக்கமாக மனிதத் தன்மையுடன் நலம் விசாரித்தால் கூட அவளிடத்தில் அது போன்ற மனித உணர்வுகள் வெளிப்பட வாய்ப்புகள் உள்ளனவே, அவளும் ஒரு மனுஷிதானே... ஆனால், நீங்கள் எதிர் பார்க்கவே முடியாது என்பதனைப் போலல்லவா சொல்லியிருக்கிறீர்கள்.

பொத்தாம் பொதுவாக இப்படி கூறீ விட்டீர்களே தருமி...

தருமி said...

தெக்ஸ்,
எதுக்கும் படத்தைப் பார்த்துவிட்டு சொல்லுங்க...
நீங்கள் சொன்னதுபோல் ஏதும் நான் சொல்லவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

Post a Comment