Monday, June 28, 2010

406. அமினா - ஒரு 'திருட்டுப் பதிவு'

*

பதிவர் கபீஷ் நான் மொழிபெயர்த்த அமினாவைப் பற்றிய பதிவொன்றை 'போகிற போக்கில்' என்ற தன் கூட்டுப் பதிவில் இட்டிருந்தார்.  

அப்பதிவை அவரின் அனுமதியோடு இங்கு மறுபதிப்பாக இடுக்கிறேன். அவருக்கும் சஞ்சய்க்கும் மிக்க நன்றி.

முன்னுரை:

நூலகத்தில் இந்த புத்தகத்தை எடுக்கும்போது தருமி என்பது வலைப்பதிவர் தருமி என்று தோன்றவில்லை. யாரும் எனக்கு பரிந்துரைக்காத நூலை எடுத்து படிக்க வேண்டுமா என்று யோசித்தேன். 29 மொழிகளில் வெளிவந்து உலக கவனத்தை கவர்ந்த நூல் என்று அட்டையில் இருந்ததாலும், கிழக்கு பதிப்பக நூலானதாலும், எப்படியும் மோசமாக இருக்காது என்று எண்ணி எடுத்துவந்தேன். (காசு கொடுக்கமால் நூலகத்தில் இருந்து புத்தகத்தை எடுக்க எவ்வளவு யோசனை) புத்தகத்தின் முதல் பக்கத்தைப் படித்திருந்தால் வலைப்பதிவர் தருமி தான் நூலாசிரியர் என்று தெரிந்திருப்பேன். அவசரக் குடுக்கையாக நாவலைப் படிக்க ஆரம்பித்து விட்டேன். வேறு நாட்டைக் கதைக்களமாக கொண்டாலும் அந்நியத் தன்மை, ஆசிரியர் கருத்து இடைச்செருகல், தேவைக்கதிகமான விவரணை இல்லாதது, எளிமையான நடை மற்றும் பெரும்பாலும் உரையாடல் மூலமாக கதை இருந்தது நாவலை சுவாரசியமாக்கியது. ஒரு வேளை பதிவர் தருமியா இருக்குமோ என்று அவரிடம் கேட்டேன் ஆமாம் என்றார். ஒரு வேளை தருமி எழுதியது என்று தெரிந்து படித்திருந்தால் எதோ ஒரு முன்முடிவுடன் படித்திருப்பேனோ என்னவோ தெரியாது. முக்கியமாக தருமி என் வங்கிக்கணக்குக்குப் பணம் எதுவும் இதுவரை அனுப்பவில்லை :-(((

பதிவர் தருமியின் அமினா 

ஆங்கிலத்தில் முகம்மது உமர் எழுதி, தருமி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நண்பரின் நூலைப் பற்றிய அறிமுகம், விமர்சனம் இல்லை :-))

நாவலின் பெயர், கதையின் நாயகியின் பெயரே, அமினா. நைஜீரியாவின் பக்காரோ நகரின், அழகான மேல்தட்டு வர்க்கப் பெண். பணக்கார, ஆளும் கட்சி அரசியல்வாதி கணவன் ஹாருணாவுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றியின் போதும் ஒரு கல்யாணம் செய்யும் பழக்கம், அமினா நாலாவது மனைவி. அமினாவின் கல்லூரி கால நெருங்கிய தோழி ஃபாத்திமா, ஒரு பணக்காரருக்கு மூன்றாவது மனைவியாகி, கணவர் கொடுமையின் காரணம் விவகாரத்து செய்து, வழக்கறிஞர் படிப்பைத் தொடர்கிறாள், மாணவ இயக்கத்தில் சேர்ந்து சமூகத்துக்காகப் போராடுகிறாள். அமினாவுக்கு, பெரிய தொழிலபதிராகி, நாட்டிலேயே பெரிய பணக்காரியாவது தான் நோக்கமாக இருக்கிறது, கணவர் ஹருணாதான் அமினா தொழில் செய்ய தூண்டுகோலாய் இருக்கிறார்.

கணவர் திடீரென அமீனாவின் நடத்தையின் மீது சந்தேகம் கொண்டு அடித்த தருணத்தில், ஃபாத்திமா கொடுத்த ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்து, அவள் நோக்கத்தில் மாறுதல் ஏற்படுகிறது. ஃபாத்திமாவின் தூண்டுதலால், மற்ற பணக்காரப் பெண்களை உடன் சேர்த்து பெண்கள் இயக்கம் ஆரம்பித்து ஏழைப் பெண்கள் கல்வி கற்க உதவி செய்ய ஆரம்பிக்கிறாள், கல்வியின் மூலமே சமூகத்தில் மாறுதல் ஏற்படும் என்பதால். சமூகத்தின் மீது எந்தவித அக்கறையும் இல்லாமல் இருந்த அமினா படிப்படியாக பெண்களுக்காக போராட ஆரம்பித்து, பெண்களுக்கு எதிராக சட்டமியற்றும் அரசாங்கத்தை எதிர்க்க நேர்ந்து பக்காரோ நகரின் பெண்களுக்கு வழிகாட்டியாகி, ஐ நா சபை பாராட்டும் அளவுக்கு உயர்கிறாள்.

நைஜீரியாவின் அரசியல் நிலைமையையும் முஸ்லிம் பெண்களின் நிலைமையையும் இந்நாவல் அழகாகச் சொல்கிறது. நைஜீரியாவின் இயற்கை வளம் எவ்வாறு அன்னாட்டு அரசியல்வாதிகள் துணையுடன் ஏகாதிபத்திய அரசுகளால் சுரண்டப்படுகிறது என்பதை பாட்டூர் என்னும் கதாபாத்திரம் மூலம் விளக்குகிறார். பாட்டூர், லண்டனிலிருந்து நைஜிரீயாவில் குடியேறிய அரசின் தொழில் ஆலோசகர். அரசியல்வாதிகள் ஊழலில் சம்பாதித்த பணத்தை அவர்கள் சார்பாக ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யும் சேவையை செய்து வருகிறார். நைஜீரியாவின் கல்வித்திட்டம் தொழில்நுட்பத்தை கற்க, ஆராய்ச்சி செய்ய ஏதுவாகவில்லை. முன்னேறிய நாடுகளில் உள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நைஜிரியாவிலுள்ள இயற்கை வளங்களை ஆராய்ச்சி செய்து, அரசியல் வாதிகள் உதவியுடன் மற்ற நாடுகளுக்கு அவை குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இதற்கு பிரதிபலனாக அரசியல் வாதிகளுக்கு உள் நாட்டில் அரண்மணை போன்ற வீடுகளும், வெளிநாட்டில் விலையுயர்ந்த வீடுகள், வெளிநாட்டுச் சுற்றுலா, வெளி நாட்டு வங்கியில் பணம் முதலானவை கிடைக்கிறது, பாட்டூர் மூலம்.

நைஜீரியாவில் மேல்த்தட்டு முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளலாம். இந்திய பெண்களின் நிலை போலத்தான் இருக்கிறது, குறிப்பாக சொன்னால் இந்தியப் பெண்களைவிட இந்த நாவலில் காட்டப்பட்ட நைஜீரிய முஸ்லிம்கள் நிலை பரவாயில்லை போல என்று தோன்றுகிறது. ஒரு வேளை பணக்கார பெண்ணின் நிலையை மட்டும் ஆழமாக விவரித்ததன் மூலம் இப்படித் தோன்றியிருக்கலாம். கணவன் வந்தவுடன் அமினாவும் அவள் தோழி ஃபாத்திமாவும் முழந்தாளிட்டு முகமன் சொல்கிறார்கள்(இது இந்தியாவில் நடப்பதில்லை என்று நினைக்கிறேன்) சமையல் வேலை அமினாவுக்கு கிடையாது, நாவலின் சந்தோசமான இடம் இது.:-) ஒரே ஓர் இடத்தில் அவள் சமைப்பதற்காகச் சீக்கிரம் செல்ல வேண்டும் என்று ஒரு பொதுக்கூட்டத்திலிருந்து செல்கிறாள், தருமியிடம் ஏனென்று கேட்க முடியாது, உமரிடம் கேட்க வேண்டிய கேள்வி.:-)))


அமினா வீட்டிலிருந்து வெளியே செல்ல காரில் ஏறும் போதும், இறங்கும் போதும், அவளைத் துதித்து பாட்டு பாடி சில நாய்ராக்கள் பெறும் சிறு கூட்டம், அமினாவின் கணவனின் ஒரு மனைவியின் மகனான அப்துல்லாஹியுடன் ஃபாத்திமா செய்யும் சீண்டல்கள், அமினாவின் கல்லூரி கால ஒரு தலைக் காதல், அமினாவின் பெண்கள் அமைப்பு தோழி பில்கிசு, குலு, "பக்கோரோவின் ரேடியோ" என்று அழைக்கப்படும் மைரோ, இதுபோல சுவாரசியமான சம்பவங்களும், பாத்திரங்களும் நாவல் வறண்டு போகாமல் இருக்கச் செய்கின்றன.

அமினா பெண்கள் அமைப்பைத் தொடங்கி உரையாற்றும் போது இவ்வாறு முடிக்கிறாள்

"ஒரு சொலவடை உண்டு:
ஓராண்டுக்குத் திட்டமிட்டால் சோளம் விதை;
பத்தாண்டுக்குத் திட்டமிட்டால் ஒரு மரம் நடு;
நீண்ட நெடு வாழ்க்கைக்குத் திட்டமிட்டால் கல்வி கொடு.

பெண்கள் நாங்கள் பக்காரோவின் எதிர்காலத்தைத் திட்டமிட ஆரம்பித்திருக்கிறோம் வளமான, சந்தோஷமான, ஒளிமயமான, எதிர்காலத்தை பக்காரோ காணவேண்டும். அதற்காகவே பெண் கல்வியோடு எங்கள் திட்டத்தை ஆரம்பிக்கிறோம். பெண்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்ந்தாலே, நகரம், மாநிலம், நாடும் வளம் பெறும். நன்றி ! "



ஆங்கிலத்தில் படிக்கவில்லை. தமிழில் இயல்பாக, படிக்கத் தொய்வில்லாமல் இருக்கிறது. அமினாவின் அழகை விவரித்து சொல்லும் இடங்களில் என் தோழி ஞாபகத்துக்கு வந்தாள். நம் நாட்டு நிலைமையுடன் பெரிதும் ஒப்புமைப் படுத்தி பார்க்கும் விதமான சூழலைக் கொண்டது நைஜிரியா என்று எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய சில ஆஃப்பிரிக்க தோழிகள் சொல்லியிருக்கிறார்கள் எங்கள் நாடும் உங்கள் நாட்டைப்போல இயற்கை வளங்கள் அதிகம் கொண்ட, அரசியல்வாதிகள் மற்றும் முன்னேறிய நாடுகளால் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்ட, பட்டுக்கொண்டிருக்கும் நாடு என்று. உண்மை தான் என்று தோன்றுகிறது. இங்குள்ள (இங்கிலாந்து) அருங்காட்சியகங்களில் பெரும்பாலான பழம்பொருட்களின் கீழ், ஆஃப்ரிக்காவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் ராணிக்கு அன்பளிப்பாக கிடைத்தவை என்ற குறிப்பு இருக்கும்.


மொத்தத்தில், அமினாவின் மூலம் சின்ன குழுவின் மூலமே பெரிய மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்திவிட முடியும் என்ற நேர்மறைச் சிந்தனையைத் தருகிறார் நாவலாசிரியர். தனி மனிதன் நினைத்தாலே மாற்றம் வரும் என்பதற்கு 2004 ல் நோபல் பரிசு வென்ற கென்ய நாட்டு வாங்கரி முடா மாத்தாய் (Wangari Muta Maathai) மற்றும் தமிழக்தின் கிருஷ்ணம்மா முதலிய சமூக ஆர்வலர்கள் வாழும் சாட்சிகளாய் இருக்கிறார்கள்.

இந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனத்தில் இது ஒரு பெண்ணீய நாவல் என்று படித்தேன். முதல் முறையாக பெண்ணீயத்தின் பொருள் தேடினேன் கூகிளில். இதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.


மூல ஆசிரியர்: முகம்மது உமர்
தமிழில்: தருமி
பதிப்பகம்: கிழக்கு
விலை : Rs. 200/-

Post by : Kabheesh

பின்னூட்டங்கள்:
ரோகிணிசிவா – (June 24, 2010 7:22 PM)
i have not read the book u have shared , but u have put it in good way, i wil seek to read it, thank u for sharing

முத்துலெட்சுமி/muthuletchumi – (June 24, 2010 7:22 PM)
நல்லதொரு அறிமுகம் கபீஷ்..வாசிக்க ஆவலைத்தூண்டுகிறது.

வினையூக்கி – (June 24, 2010 7:23 PM)
அக்கா நல்லதொரு அறிமுகம் !! நன்றி

அதிஷா – (June 24, 2010 7:25 PM)
பிம்பிலிக்கி!

Thekkikattan|தெகா – (June 24, 2010 7:28 PM)
நல்ல அறிமுகம், சீராக சென்றது - வாசிப்பதற்கு. நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி – (June 24, 2010 7:50 PM)
GOOD

ஆதிமூலகிருஷ்ணன் – (June 24, 2010 10:33 PM)
தருமி ஐயாவுக்கு வாழ்த்துகள்.

Chitra – (June 25, 2010 1:46 AM)
Seems to be an interesting book. பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் – (June 25, 2010 2:18 AM)
அறிமுகத்திற்கு நன்றி கபீஷ்!
இது மாதிரி இன்னும் நிறைய சொல்லலாமே?

cheena (சீனா) – (June 25, 2010 8:22 AM)
அன்பின் கபீஷ்
புத்தகம் வாங்கி விட்டேன் - படிக்கிறேன் - கருத்து சொல்கிறேன்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

SanjaiGandhi™ – (June 25, 2010 9:09 AM)
சூப்பரப்பு.. படிக்கும் ஆவலைத் தூண்டுது..
//இது மாதிரி இன்னும் நிறைய சொல்லலாமே?//
நல்லா சொல்லுங்க நடராஜன்.. நான் சொல்லி சொல்லி களைச்சிட்டேன்.. கேக்க மாட்டேங்கறா..

Bharath – (June 25, 2010 2:22 PM)
pretty crisp review rather intro. :)

//இந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனத்தில் இது ஒரு பெண்ணீய நாவல் என்று படித்தேன். முதல் முறையாக பெண்ணீயத்தின் பொருள் தேடினேன் கூகிளில். இதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.
//
பொம்பளை, சாதனை, பாராட்டுனாலே பெண்ணியம்ன்னு ப்ராக்கெட் போட்டுர்றாங்கப்பா.. கூகிள் என்ன சொல்லிச்சுன்னு தெரிஞ்சுக்க ஆசயா இருக்கோம்..




4 comments:

நேசமித்ரன் said...

நல்ல பார்வையும் பதிவு செய்திருக்கும் விதமும் கபீஷ்

தருமி அய்யாவினுடைய இப்பணியின் முக்கியத்துவம் வரலாற்றை மறு பதிவு செய்தல் என்பதைக் கடந்தது.

தருமி சார் நற்பணிகள் தொடர்க

கபீஷ் said...

வாசித்தேன்னு போடற இடத்தில் படித்தேன்னு எழுதியிருக்கேன்.ஒரு வேளை திரும்ப திரும்ப வாசிச்சா படிச்சேன்னு போட்டுக்கலாமா :)) சில சந்திப் பிழைகள், எழுத்துப்பிழை. மன்னிச்சுகோங்க மக்கள்ஸ்.

Sanjai Gandhi said...

ஆஹா.. எனக்கெதுக்கு சார் நன்றி.. எல்லாம் கபீஷ் பணி மட்டுமே. எனக்கு அதில் எந்த பங்களிப்பும் இல்லை.. போஸ்ட் வந்தப்புறம் தான் நான் படிச்சேன்..

மதுரை சரவணன் said...

kapish discribe ur book very beautifully. thank u for sharing . i expect one more translation book from u ,sir. for us pl write soon.

Post a Comment