Sunday, July 11, 2010

413. FIFA 2010 - மூணும் நாலும் ... உருகுவே - ஜெர்மனி

*
WHAT A MATCH!
மூன்றாம் நாலாம் இடத்துக்காக உருகுவே – ஜெர்மனி நடுவே நடந்த போட்டியின் விளையாட்டை இப்படித்தான் சொல்லணும்.
A furious game என்றும் சொல்லலாம்; ஏனெனில் ஒரு நிமிடம் கூட ஆட்டத்தில் தொய்வில்லை. ஆட்டம் ஆடுபவர்களுக்குத்தான் டென்ஷன் என்றில்லை; பார்ப்பவர்களுக்கும்தான். பந்து எங்கேயிருக்கிறது, யார் பக்கம் இருக்கிறது என்பதே மாறி மாறி நம்மை அலைக்கழித்தது.

0 – 10 நிமிடம்:
விளையாட்டு வேகமாகவே ஆரம்பித்தது. எடுத்த உடனேயே பந்து வேகமாக அங்குமிங்குமாகச் சென்றது. இந்த பத்து நிமிடத்தில் உருகுவேயின் கால்களில்தான் பந்து அதிகமாக இருந்தது. பத்தாவது நிமிடத்தில் உருகுவே வீரர் போர்லான் அடித்த பந்து கோலின் மேல் கம்பில் பட்டு திரும்ப, ஜெர்மனியின் கோல் முதல் முறையாகத் தப்பித்தது.

10 – 19 நிமிடம்:
ஏறத்தாழ 30 மீட்டர் தூரத்திலிருந்து SCHWEINSTEIGER அடித்த பந்து வெகு விரைவாக உருகுவேயின் கோலை நோக்கிச் சென்றது. கோல் கீப்பர் தடுத்தார். திரும்பி வந்த பந்தை எளிதாக ம்யூலர் கோலாக மாற்றினார். முதல் கோல் உருகுவேக்கு விழுந்தது.

19 – 27: நிமிடம்:
விளையாட்டு மேலும் சூடு பிடிக்க 24வது நிமிடத்தில் உருகுவேக்கு ஒரு அழகான வாய்ப்பு வந்தது. அழகாக தலையால் செலுத்திய பந்து ஜெர்மனியின் கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. அடுத்த நிமிடமே உருகுவேக்கு கோல் விழுவது போன்ற நிலை. கோல் கீப்பர் தடுத்து விட்டார். அடுத்த இரண்டு நிமிடங்களில், 27 வது நிமிடத்தில் உருகுவேயின் SUAREZ அடித்துக் கொடுத்த பந்தை Carvani அழகாக ஒரு கோலாக்கினார்.

27 – 45+ நிமிடம்:
இந்த கோல் விழுவது வரையிலும் உருகுவேயின் கை .. இல்லை.. இல்லை கால்தான் ஓங்கியிருந்தன. ஆனால் ஆளுக்கொரு கோல் என்றானபின் ஜெர்மனியின் வேகம் அதிகமானது. விளையாட்டில் வேகம் இருந்தாலும், இரு அணிகளுமே திறமையாக ஆடினார்களே ஒழிய, அநியாய தப்பாட்டம் – fouls – ஏதுமில்லை. விளையாட்டில் மொத்தமே இருமுறைதான் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதென நினைக்கிறேன். மழையும் ஆரம்பித்தது. அதிக வலுவான மழையில்லா விட்டாலும் மெலிதாக ஆரம்பித்து, அரையிறுதி நெருங்கும்போது வலுவாகி, மீண்டும் ஆட்டம் தொடரும்போது மழை சுத்தமாக நின்றிருந்தது.

41வது நிமிடத்தில் உருகுவேக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஆனாலும் கைகூடவில்லை.

45 – 60 நிமிடம்:
47வது நிமிடத்தில் ஜெர்மனியின் ம்யூலருக்கு கார்னர் ஷாட் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அது கோலாகவில்லை. 51வது நிமிடத்தில் அசிரோலாவின் லாங் ஷாட்டை ஒரு அழகான கோலாக போர்லான் மாற்றினார். இப்போது உருகுவே ஒரு கோல் அதிகமாக இட்டு முன்னின்றனர். ஆனால் அடுத்த 5 நிமிடத்தில் ஜெர்மனியின் ஜெரோம் கொடுத்த பந்தை ஜென்சன் கோலாக மாற்றி, இரு அணிகளும் 2:2 என்ற சம அளவில் இருந்தன.

60 – 79 நிமிடம்:
இந்த நிமிடத்திலிருந்து அடுத்த பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு ஆட்டத்தில் பொறி பறந்தது. அதுவும் இது உருகுவே அணியின் விளையாட்டால்தான் . விளையாட்டு ஆரம்பிக்கும்போது ஜெர்மனி வெல்லும் என்ற நினைப்பில் பார்க்க ஆரம்பித்த எனக்கு இந்த பத்து பதினைந்து நிமிடங்களில் உருகுவே ஆடிய ஆட்டத்தைப் பார்த்ததும் அவர்களே வெல்ல வேண்டும் என்ற ஆவல் வந்தது. டென்னிஸ் விளையாட்டு பார்க்கும்போது rally-ல் பந்து இரு பக்கமும் மாறி மாறிப் போகுமே அதேபோல் இங்கும் பந்து மாறி மாறி இரு கோல்களுக்கும் சென்று வந்தது மிக்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு நிமிடம் பார்க்காமல் இருந்து மீண்டும் பார்த்தால் பந்து அடுத்த பக்கம் இப்போது இருக்கும். மிக அழகாக இருந்தன இந்த நிமிடங்கள்.

60வது நிமிடத்தில் உருகுவே அடித்த கோலை ஜெர்மனியின் கோல் கீப்பர் தடுத்து விட்டார். ஆனாலும் திரும்ப காண்பிக்கும்போது அவர் கோலுக்குள் – அந்த கோட்டுக்கு உள்ளே – இருந்தே அந்தப் பந்தைத் தடுத்ததாக எனக்குத் தோன்றியது. அது கோலாக மாறியிருந்தால் கதை வேறு!

79 – 90 நிமிடம்:
79வது நிமிடத்தில் உருகுவேக்கு மாறி மாறி சில கார்னர் ஷாட்டுகள் கிடைத்தன. ஆனால் கோல் ஏதுமில்லை. மிகத் தீவிரமாகப் போய்க்கொண்டிருந்த விளையாட்டில் 82வது நிமிடத்தில் ஜெர்மனிக்குக் கிடைத்த கார்னர் ஷாட்டை கெதிரா தலையால் தடுத்து ஜெர்மனியின் மூன்றாவது கோலை அடித்தார்.

அந்த நிமிடம்:
90 நிமிடங்கள் முடிந்து விட்டன. கோல் ஜெர்மனிக்கு 3; உருகுவேக்கு 2; ஜெர்மனி வெற்றி முகாமில் இருக்கும் நிலை. 90 நிமிடங்களுக்குப் பிறகு எக்ஸ்ட்ராவாக இரு நிமிட விளையாட்டே மீதி இருந்தது. அதிலும் ஏறத்தாழ ஒரு நிமிடமும் 40 வினாடிகளும் கழிந்தன. எல்லாம் முடிந்தது என்ற நிலையில், உருகுவேக்கு ஜெர்மனியின் பெனல்ட்டி ஏரியாவைத் தாண்டி சற்றே வெளியே ஒரு free kick கிடைத்தது. நடுவர் ஜெர்மன் வீரர்களை எதிரே நிற்க வைக்க போராட வேண்டியதிருந்தது. free kick செய்ய போர்லான் தயாராக நின்றார். ஏற்கெனவே இன்னொரு free kick –ல் முதல் பத்து நிமிடத்திலேயே அவர் அடித்த பந்து, கோல் கம்புகளில் பட்டு திரும்பியது ஒரு முறை. இப்போது மிகச் சரியாக அவர் அடித்து அது கோலானால் கோல் கணக்கு 3:3 ஆகி இன்னும் ஆட்டம் தொடர்ந்திருக்கும். அந்த நிலையில் நான் அவர் அடிக்கும் பந்து கோலாக வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அப்படி அது கோலாகா விட்டால் Forlan என்ற பெயரை Postlon என்றுதான் மாற்ற வேண்டுமென மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்!!!

போர்லான் பந்தை அடித்தார். அழகாக ஜெர்மானிய வீரர்களின் தடுப்புச் சுவரை உயரமாகத் தாண்டி, கோலை நோக்கிச் சென்று ….. கோலின் மேல் தடுப்புக் கம்பியில் பட்டு … வெளியே போயிற்று …. சோகம்தான்.

ஜெர்மனி வெற்றி பெற்றது. எல்லாம் இந்த ஆக்டோபஸ்ஸினால் இருக்குமோ??!!


*


3 comments:

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

இன்னும் இரண்டு மணி நேரத்தில், இறுதிப்போட்டி! யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் சார்?

தருமி said...

மணியா? பாலா?

பால் சொல்றதுதானோ?!

மின்னுது மின்னல் said...

முதல் கோல் உருகுவேக்கு விழுந்தது.
//

ஜெர்மனிக்கு தானே முதல் கோல் விழுந்தது ??

Post a Comment