Thursday, December 01, 2011

538. மயக்கம் என்ன?

*

பார்க்கப்போன படம் ஒன்று - Tin Tin; அங்கு ஓடியது இன்னொன்று - மயக்கம் என்ன?

வழக்கமான தமிழ் சினிமாக் காதல் மசாலா, அடிச்சா ஐம்பது அடி தள்ளிப் போய் விழாத சண்டை, இந்த வழக்கமான சரக்குகள் இல்லாவிட்டாலே அது ஒரு வகையில் நல்ல படம்தான். முதல் பாதி நன்றாகப் பிடித்தது. இரண்டாவது பாகத்தின் முதல் பாதி நீளமாய் போய்க்கொண்டே இருந்தது. எடிட்டிங், திரைக்கதை இரண்டும் கொஞ்சம் சுதப்பியது போலிருந்தது.

முதல் பாதி வெறியொடு அலையும் தனுஷ். தன் ஆதர்சன புகைப்படக்காரர் தன் புகைப்படங்களை பார்த்து shit என்று சொல்லியனுப்ப, 'ஆய் போட்டோ' என்று வேதனைப்படுவது .. துவண்டு விடாமல் மேலும் முயற்சிப்பது .. photo shoot-க்காக காடு மேடு சுற்றுவது .. எல்லாம் நன்கு வந்திருக்கின்றன.

ஏமாற்றத்தால் புத்தி தடுமாறி, குடியில் மிதந்து, அதிலும் காமிராவோடு உள்ள உறவைத் தொடர்ந்து, இறுதியில் வெற்றி பெற்ற பின்னும், ஆணவம் ஏதுமின்றி மிகப் பெரிய பரிசை அழகாக ஏற்றுக் கொண்டு அப்போது தன் கடந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது ... தனுஷெல்லாம் ஒரு நடிகரா என்று ஒரு காலத்தில் நினைத்த என்னை முழுவதுமாக மாற்றிப் போட்ட 'ஆடுகளம்' படத்தில் எழுந்த எண்ணத்தை இப்படம் நன்கு உறுதி செய்து விட்டது.

இரண்டு இடங்களில் கைதட்ட வேண்டும் போல் இருந்தது. ஒன்று ராம்ஜி(ஒளிப்பதிவாளர்) - செல்வராகவனுக்கு; இன்னொன்று தனுஷிற்கு.

படமெடுக்க காட்டுக்குள் பயணம். ஒரு பறவை அழகாக ஒரு தூரக்கிளையில் வந்து அமர்கிறது. சிறகை விரிக்கிறது. படமெடுத்து அதன்பின் அழகில் லயிக்கிறான் நாயகன். படமெடுத்தது; அதைக் கதைக்குள் அழகாகச் செருகியது; உயிர்ப்போடு சொல்லப்பட்டிருந்தது. மிகவும் பிடித்த முதல் காட்சி.

இரண்டாவதாக, புத்தி பேதலித்த நாயகன் நண்பர்களோடு தண்ணியடிக்க உட்கார்கிறான். மனைவி தடுக்கிறாள். தடுக்கும் மனைவியைத் தட்டி விட்டு, கண்களில் ஒரு முறைப்பைக் கொண்டு வருகிறார். ஏனோ தெரியவில்லை ... சிவாஜி, கமல், சூர்யா மூவரும் கண்ணுக்குள் வந்து விட்டுப் போனார்கள். அவர்களிடமெல்லாம் பார்க்காத மிக உக்கிரமான பார்வை. தனுஷிற்கு full mark!

கடைசி சீன். பரிசளிப்பு விழா. A Beautiful Mind படம் நினைவுக்கு வந்தது. நாயகனிடம் இருந்த அமைதி, நண்பர்களுக்கான நன்றி; மனைவிக்கான அன்பு (மறந்து போய் மீண்டும் வந்து மனைவிக்கு நன்றி சொல்வது தேவையில்லாத ஒரு cinematic idea என்று தோன்றியது; மறக்கக்கூடிய மனைவியா அவள்?) எல்லாம் நன்கு இருந்தது.

முதல் பாதியில் ராம்ஜி, G.V.P இருவரின் திறமைகள் மிக நன்கு பளிச்சிட்டன.

படத்தில் காண்பிப்பது போன்ற western culture-க்குள் நம் சமூகம் நன்கு விழுந்து விட்டதோ?! கதாநாயகியின் முதல் தொடர்பு, அதனூடே உள்ள உறவுகள், எளிதாக மனம் அடுத்தவனிடம் தாண்ட ... ஆனால், அதற்குப் பின் ஒரேயடியாக 'தவமிருக்கும் தமிழ்ப்பெண்ணின்' தியாகங்கள் ... அவைகளில் சில நெருடல்கள் எனக்கு.

நன்கு உழைத்து, முனைப்போடு எடுக்கப்பட்ட படம். தமிழ்ப்பட உலகின் மீது எந்த நம்பிக்கையுமின்றி எழுதிய பழைய பதிவுகள் நினைவுக்கு வந்தன. இப்போது தமிழ்ப்பட உலகத்தின் மீதான நம்பிக்கை மேலும் மேலும் உறுதியாகிறது.


*







*

12 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) மாற்றிப்பாக்கவேண்டி வந்தாலும் நல்ல படம் தானே..

காட்டில் பறவையைப் படமெடுத்து மெய்மறந்துபோகும் காட்சி மிக அருமையில்லயா..ம்..தனுஷ் எல்லாம் ஒரு நடிகரா என்பது போய் இப்ப நல்லா நடிப்பது மிக உண்மை..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) மாற்றிப்பாக்கவேண்டி வந்தாலும் நல்ல படம் தானே..

காட்டில் பறவையைப் படமெடுத்து மெய்மறந்துபோகும் காட்சி மிக அருமையில்லயா..ம்..தனுஷ் எல்லாம் ஒரு நடிகரா என்பது போய் இப்ப நல்லா நடிப்பது மிக உண்மை..

naren said...

படம் நல்லாயிருக்கு என்பது உண்மை. ஆனால் TIN TIN யை பார்க்காமல் மயக்கம் என்ன பார்தததுதான் கொஞ்சம் வருத்தம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அருமையான படம். ஆனால் பிற்பாதியில் திரைக்கதை சொதப்பல். தனுஷ் நடிப்பில் யதார்த்தம் மிளிர்கிறது. தங்கள் விமர்சனம் சிம்ப்ளி சூப்பர்ப்

தருமி said...

முதல் மரியாதை படம் மிகவும் பிடித்தது. ஆனாலும் ஒரு பெண் தன்னைக் கெடுக்க வந்தவனின் கால் கட்டை விரலை முழுவதுமாகக் கடித்துவிட்டதாக வந்த 'கதை' நம்பமுடியாத, படத்தின் குறையாக ஒட்டி நின்றது.

அதேபோல் இப்படத்திலும் தனுஷ் தான் எடுத்த படங்களை 10 x 12 அளவுகளில் அந்த புகைப்பட மேதைக்குத் தருகிறார். அவரோ அந்தப் படங்களை மட்டும் வைத்துக் கொண்டு உலக அளவில் உள்ள போட்டிக்கு அதை எடுத்துச் செல்கிறார். (memory card என்ன ஆச்சு?) அதை தனுஷ் எதிர்க்காமல் அடங்கிப் போவதும் ஒரு கேள்விக்குறியை எழுப்புகிறது.

சின்னதா logic-ல ஒரு உதைப்பு!!

உண்மைத்தமிழன் said...

இங்க பார்ரா.. நம்ம பெரிசே விமர்சனம் எழுதியிருக்கு..! சின்னப் பசங்களுக்குத்தான் புடிக்கும்னு நினைச்சா இவுகளுக்குமா..

தருமி said...

//சின்னப் பசங்களுக்குத்தான் புடிக்கும்னு நினைச்சா..//

அப்படியெல்லாம் இல்லைங்க .. நம்மள மாதிரி ஆளுகளுக்கும் பிடிக்குமுங்க ...

எப்பூடி!?

ஆனந்தி.. said...

ஸோ...ஒலக சினிமா லிஸ்ட் ல இதுவும் சேர்ந்துடுச்சு...;-))))

kashyapan said...

தருமி அவர்களே!" முதல் மரியாதை" கட்டைவிரல் காட்சியும் காப்பியடித்ததுதான் .(கி.ரா வின் கதையிலிருந்து.)---காஸ்யபன்

Suresh Subramanian said...

nice review.... www.rishvan.com

சித்திரவீதிக்காரன் said...

வாகை சூடவாவிற்கு பிறகு வேறு எந்தப்படமும் பார்க்கவில்லை. பாலை பார்க்கலாம் என்று இருக்கிறேன். அதுவரை திரையரங்கில் அந்தப்படம் ஓடுமா எனத்தெரியவில்லை. மயக்கம் என்ன? குறித்த தங்கள் பகிர்வு அருமை. ஆடுகளத்திலேயே தனுஷ் நம்ம ஊர்க்காரராக நடித்ததால் எனக்கும் பிடித்த நடிகராகிவிட்டார். நன்றி.

தருமி said...

very unusual. இரண்டாம் முறையாக, இன்னொரு (போட்டோகிராபி கிறுக்கு) நண்பனோடு இன்றும் இப்படம் பார்த்தேன்.

Post a Comment