Monday, January 23, 2012

547. சல்மாவும், சல்மான் ருஷ்டியும்

*




சல்மாவும், சல்மான் ருஷ்டியும்.

சல்மான் ருஷ்டியைப் பற்றிய செய்திகளை இரு நாட்களாக தினசரிகளில் வாசிக்கும்போது அதைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்தேன். ஆனால் இன்று (22.1.12) மாலை காலச்சுவடு நடத்தும் 'அற்றைத் திங்கள்' நிகழ்ச்சியில் சல்மா அவர்களது சந்திப்பு நடந்தது. அதனைப் பற்றியும் எழுத நினைத்தேன். இரண்டுக்கும் தான் தொடர்புண்டே .. இருவருமே பாவப்பட்ட மக்கள் தானே!

வெறும் ஒன்பதாம் வகுப்பு மட்டும் படித்த, அதன்பின் படிப்பு மறுக்கப்பட்ட சல்மாவின் பேச்சில் இருந்த நேர்மையும், தீவிரமும் மிக அழகானவை. படிப்பை நிறுத்திய பின் நான்கு சுவர்களுக்குள் இறுக்கமான ஒரு வாழ்வு. தீவிர வாசிப்பால் விரிந்த சிந்தனைகள், சிறு சிறு இளம்பிராயத்துக் கவிதைகளோடு ஆரம்பித்து, அவைகள் பதிக்கப்பட்ட பின் அவர் பெயர் இதழில் வந்ததால் எழுந்த சமூக, குடும்பச்சிக்கல்கள், இளம் வயதுத் திருமணம் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகள், யாருக்கும் தெரியாமல் எழுதிய கவிதைகளை இதழ்களுக்கு அனுப்புவது என்று தன் வாழ்வில் சந்தித்த எதிர்ப்புகளை மீறி தன் படைப்பாற்றலை வளர்த்த முறை பற்றி கூறினார். சமூகக் கட்டுப்பாடுகளுக்குப் பயந்து புனைப்பெயர் சூட்டிக் கொண்டு எழுதிய கவிதைகள் வெளியிடப்படும் விழாவிற்கு 'தலைமறைவாக' வந்தது பற்றியும் சொன்னார். எங்கள் மதம் சொல்லாதவற்றை ஆணாதிக்கச் சமூகம் தொடர்ந்து, பொதுவாக கல்வி, அதிலும் பெண்களுக்கான கல்வியைத் தடை செய்வது பற்றிச் சொன்னார். பொதுவெளிகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்ளாததைப் பற்றியும் சொன்னார். (வந்திருந்த கூட்டத்தில் இஸ்லாமியப் பெண்கள் அதிகம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது! எனக்குத் தெரிந்து ஒரு பெண் வந்திருந்தார். இஸ்லாமியர் இக்கூட்டத்தில் அதிகமில்லை என்று சல்மா சொன்ன போது ஓரிரு குரல்கள் நாங்களும் இருக்கிறோம் என்று ஒலித்தன!)

பெண்கள் கவிதை எழுதுவதைப் புதிதாக தான் ஆரம்பித்ததாகக் கூறினார். எழுதிய நாவல் பற்றியும் கூறி, தனது நாவலுக்கும் கவிதைகளுக்கும் எதிர்த்து எழுந்த ஆண்களின் குரல்கள் பொறாமையால் எழுந்தவை என்றார். ஆனால் இந்த ஆணாதிக்கப்பாதிப்பு உலகம் முழுமைக்கும் பொது என்றார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு கருத்தரங்கில் இவரது மொழிபெயர்க்கப்பட்ட நாவலைப் பற்றிய கருத்தரங்கு பற்றிச் சொல்லும்போது, இதே போன்றுதான் மற்றைய நாடுகளிலும் ஆணாதிக்க எதிர்ப்பு இருப்பதாகக் கூறி, பெண்கள் நாங்கள் ஒன்று சேர்ந்து அதைப் பற்றிய ஒப்பாரி வைத்தோம் என்றார்!

கேள்வி பதில் நேரத்தில் இஸ்லாமியச் சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். கல்வியறிவைப் பெருவதில் எவ்வித சுணக்கமும் இருக்கக்கூடாது. கல்வி ஒரு அடிப்படை உரிமை. அதை எல்லோருக்கும் கிடைக்க மறுக்கக்கூடாது என்றார். இளம் வயது வேகத்தில் கடவுளைப் பற்றிய எதிர்மறை உணர்வுகள் பதின்ம வயதினில் இருந்தன. ஆனால் இப்போது கடவுள் மறுப்பு என்று ஏதும் கிடையாது. ஆனாலும் இதுதான் கடவுள் என்ற குறிப்பிட்ட நம்பிக்கையுமில்லை; கூட்டத்தில் கடவுளைப் பற்றித் தெரிந்தவர்கள் கூறுங்கள் என்றார்.

ஒரு பெண்; அதுவும் ஒரு இஸ்லாமியப் பெண் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவளுக்கு மறுக்கப்படும் கல்வி, கொடுக்கப்படும் கட்டுக் கோப்பு என்பதைத் தாண்டி தன்னை மேலே வரச் செய்தது தனது எழுத்தே. என் எழுத்துச் சுதந்திரத்திற்காக எதையும் தியாகம் செய்வேன். எழுத பேனா எடுத்த எந்த படைப்பாளியும் இத்தகையக் கட்டுப்பாடுகளால் துவண்டு விட மாட்டார்கள் என்றார். (சல்மான் ருஷ்டிக்கும் இந்த வாக்கியம் மிகப் பொருத்தம் என்றே நினைத்துக் கொண்டேன்.)

* * *

ராஜஸ்தானில் நடக்கும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவிற்கு உலகெங்கிலிருந்தும் பெரும் எழுத்தாளர்கள் வந்திருந்து அந்த விழா இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. இவ்விழாவிற்கு சல்மான் ருஷ்டியும் வருவதாக இருந்தது. ஆனால் நமது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வழக்கம் போல் தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்தனர். அவருக்கு விசா கொடுக்கக்கூடாது என்று சொல்ல, அவருக்கு விசாவே தேவையில்லை என்றதும், அவர் வர அரசு தடை விதிக்க வேண்டுமென்றனர். நடக்கப் போகும் தேர்தலில் இஸ்லாமிய ஓட்டுகள் வேண்டுமென்று விரும்பும் மைய அரசு எம்முடிவையும் எடுக்கத் தயங்கியது. ராஜஸ்தான் அரசோ கலகம் விழையும் என்று ஒரு பூதத்தைக் கிளப்பி விட்டு விட்டு, அதோடு நிற்காது ஒரு குழு சல்மான் ருஷ்டியைக் கொல்ல ராஜஸ்தானுக்குள் வந்து விட்டது என்று ஒரு 'சினிமா' ஓட்டியுள்ளார்கள்.

விழாவை நடத்துபவர்களுக்கும் அடியில் நெருப்பு மூட்டியது போலானது. எழுத்தாளர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக சல்மான் ருஷ்டிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். அதோடு இரண்டு மூன்று எழுத்தாளப் பெருமக்கள் சல்மானின் Satanic Verses-லிருந்து சில பகுதிகளை மேடையில் வாசித்துள்ளார்கள். உடனே இங்கே 'சட்டப்படி' அது தவறு என்று வாசித்த மக்களை, உங்கள் மேல் வழக்கு போட்டு விடுவார்கள் என்று சொல்லி அவர்களை விழா நடத்துவோரே விழாவிலிருந்து காலியாக்கி விட்டார்கள்.

இந்த 'திருவிழாக் கூத்தில்' இரு கடிதங்கள் இந்துவில் வந்துள்ளன. வழக்கமாக இந்துவில் வரும் கடிதங்கள் sensible ஆக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனால் இம்முறை இரு கடிதங்கள் எனக்கு வேடிக்கையாக, குறுகிய நோக்கோடு இருந்தன. அதில் ஒருவர் சல்மான் ருஷ்டி is guilty of violating the moral and legal principles' என்று எழுதியுள்ளார். உங்கள் moral எல்லோருக்கும் moral தானா? அடுத்து இதில் violating the legal principles என்பது எங்கே, எப்படி நடந்திருக்கிறதென்று தெரியவில்லை.

இன்னொருவர் சல்மான் ருஷ்டி hurting the sentiments of Muslims the world over என்கிறார். அதற்குத்தான் பத்வா போட்டார்கள். அந்தக் கதை முடிந்து விட்டது. ஆனால் அதோடு நிற்காது, அவரை அங்கே போக விடாதே .. இங்கே உட்கார விடாதே என்கிறார்கள். எல்லோருக்கும் அவரவர் மதம் புனிதமானது. இதிலேதும் ஐயமில்லை. ஆனால் மற்ற மதத்தினர் யாரும் தங்கள் கடவுளையோ வேறு யாரையுமோ இப்படித் தாங்கிப் பிடிக்கவில்லை. இப்படி அளவுக்கு மீறி கொலைத்தண்டனை .. அது இது ...என்று சொல்வது நிச்சயமாக மதத் தீவிர வாதம். இது அந்த மதத்தினருக்கு மட்டுமே சரியாகத் தோன்றும். அடுத்தவர்களுக்கு இது ஒரு கேலிக்குறிய, கேள்விக்குறிய விஷயமே. இந்த மதத் தீவிரவாதம் மேலும் பிளவுகளையும் கசப்பையும் ஏற்படுத்துமேயொழிய அம்மதத்தின் மேல் யாருக்கும் எந்த மரியாதையையும் தராது. குண்டு வைப்பது மட்டும் தீவிரவாதமல்ல. இது அதைவிட மிக மோசமான விளைவுகளைத்தான் தரும்.

சலமானின் Midnight Children பல ஆண்டுகளுக்கு முன் வாசிக்க ஆரம்பித்து 150 பக்கங்கள் மட்டும் வாசிக்கவே மிகச் சிரமப்பட்டேன். இப்போது Satanic Verses-ன் திறனாய்வு வாசிக்கும்போதே தலை சுற்றத் தொடங்கியது. என்னமோ magical realism என்கிறார்கள். நமக்குத் தாங்காது. புத்தகத்தை வாசிக்க முயற்சித்தும் முடியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாகக் கத்தாமல், புத்தகத்தை வாசித்த அடிப்படைவாதிகள் யாரேனும் இருந்தால் எதிர்ப்புக்குள்ளான பகுதி எது என்று சொன்னால் நானும் அதை மட்டுமாவது வாசித்துப் புரிந்து கொள்ள முடியும். ஆகவே வாசித்த புண்ணியவான்கள் யாராவது அப்பகுதி எது .. பக்கங்கள் எவை .. என்று சொன்னால் நானும் வாசித்துக் கொள்வேன். எப்படி வாசிப்பேன் என்று கேட்பீர்களோ .. நம் நாட்டில் வாசித்தாலே தப்பாமே. எங்கேயாவது நாடு கடந்து போய் வாசித்துக் கொள்கிறேன்!

அது என்னவோ .. தமிழ்மணமாயிருந்தாலும், உலக இலக்கிய விழாவாக இருந்தாலும் இஸ்லாமியரின் அரட்டல் என்பது சகஜமாகி விட்டது. நல்லவேளை நம் தமிழ்மணம், இந்த விழா நடத்துபவர்கள், மைய, மாநில அரசுகள் போலல்லாமல், தங்களைத் தாழ்த்திக் கொள்ளவில்லை; எல்லோரும் விலகுவோம் என்றதும், சரி .. அதற்காக கவலையேதுமில்லை என்று தமிழ்மணம் சொன்ன பதிலில் தரம், தைரியம், நியாயம், தீர்க்கம் இருந்தது.




*

25 comments:

சார்வாகன் said...

அருமையான மிக தேவையான பதிவு,
மிட்னைட் சில்ட்ரன் படித்தேன் .போர் அடிக்கும் நடை,மேஜிகல் ரியலிசமாம் என்னமோ போங்க. படித்து அறிந்தது ஒன்றும் இல்லை. இந்த பிரச்சினை மட்டும் வராமல் இருந்தால் ருஷ்டி யாரென்றே தெரிந்து இருக்காது.

ஏன் ருஷ்டி வருவதற்கு எதிர்ப்பு என்றால் மத உணர்வுகளை காயப் படுத்தி விட்டார்கள் என்பார்கள்.

சரி இதே விவரம் இபின் இஷாக் & அல் தபரி ம் கூறியுள்ளாரே.வரலாற்றில் அவர் புத்தகம் தடை செய்யபட்டாதாக் தெரியவில்லையே.
http://wikiislam.net/wiki/Qur'an,_Hadith_and_Scholars:Satanic_Verses
இதற்கு சிலரை புத்தகத்தில் கெட்ட வார்த்தையில் சொல்லி விட்டார் என்பார்கள். ஒரு வேளை கண்டு கொள்ளாமல் விட்டு இருந்தல் இப்படி எழுதி இருப்பது 99.99% ஆட்களுக்கு தெரியாமல் இருக்கும்.இப்போது அனைவருக்கும் இப்படி எழுதியது தெரியும்.

இப்ப‌டி எழுதினால் மரண த‌ண்ட‌னை விதிப்போம் என்ற‌ மிர‌ட்ட‌ல் ம‌ற்றும் எதிர்கால‌த்தில் யாரும் இப்ப‌டி செய்ய‌க் கூடாது என்ப‌துதான் நோக்க‌ம்.தமிழ் ப‌திவுல‌கிலும் இம்மாதிரி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் பார்த்து இருக்கிறோம்.

இவ‌ர்க‌ள் இப்ப‌டி செய்வ‌து எதிர்வினைக‌ள்,எதிர் ம‌த‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளின் செய‌ல்க‌ளை நியாய‌ப் ப‌டுத்தும்,ஆட்சிக்கு கூட‌ வ‌ர‌ வ‌ழி வ‌குக்கலாம்.

MaduraiGovindaraj said...

vanakkam

\\ நானும் அதை மட்டுமாவது வாசித்துப் புரிந்து கொள்ள முடியும். ஆகவே வாசித்த புண்ணியவான்கள் யாராவது அப்பகுதி எது .. பக்கங்கள் எவை .. என்று சொன்னால் நானும் வாசித்துக் கொள்வேன். எப்படி வாசிப்பேன் என்று கேட்பீர்களோ .. நம் நாட்டில் வாசித்தாலே தப்பாமே. எங்கேயாவது நாடு கடந்து போய் வாசித்துக் கொள்கிறேன்!\\

கருத்து,மற்றும் பேச்சு சுதந்திரம் இந்தியாவில் இல்லையா?

பதிவுக்கு நன்றி

நம்பிக்கைபாண்டியன் said...

\\\\கல்வியறிவைப் பெருவதில் எவ்வித சுணக்கமும் இருக்கக்கூடாது. கல்வி ஒரு அடிப்படை உரிமை. அதை எல்லோருக்கும் கிடைக்க மறுக்கக்கூடாது என்றார்///

சல்மாவின் இந்த கருத்து நியாயமானது சரியான‌து,

Narayanaswamy G said...
This comment has been removed by a blog administrator.
naren said...

சல்மா அவர்கள் உயிர்மை மனுஷ்யபுத்திரனின் சகோதரி என நினைக்கிறேன்.

இலக்கியம் என்பது பொதுவான கலாச்சாரம் அது மனித மேம்பாட்டில் ஒன்றிப்பினைந்தது. அதை எதிர்க்கும் மதகலாச்சாரங்களும் இருக்கின்றன.

satanic verses யை முழுமையாகப் படித்துள்ளேன் ஆட்சேபனை உள்ள பகுதிகள் அதில் இல்லை என்கிறப்போது அதில் மதத்துவேஷம் எப்படி வரும்.

ஆனால் அதில் இரண்டு மனோரீதியாக எதிர்ப்பு வரக்காரணம்.

1) Satanic Verses என்ற பெயர்தான். இது முகமதுவிற்கு சாத்தான் சொன்ன வசனங்களை வஹியாக அறிவித்தார் என்றுப்பொருள் பட வந்து, உண்மையாக அது இருந்து, குரானின் மற்றும் முகமதுவின் நம்பகத்தன்மையே கேள்விகுறியாக்குகின்றன.

2)முகமதுவின் மனைவி ஆயிஷாவின் பெயர் கதையில் வருவது.

இந்த கட்டுரையை படித்துப் பாருங்கள் http://kafila.org/2012/01/18/satanic-versus-moronic-how-salman-rushdie-lost-the-up-election/

முதல் பாகத்தில் அரசியலைப் பற்றி பேசினாலும் பிற்பாகத்தில் satanic verses யின் magic realism characterization உள்ளே எடுத்துச் செல்வார் கட்டுரையாளர்.

Anonymous said...

நான் வேலை செய்த (முஸ்லிம்) கல்லூரியில் இவரது புத்தகங்களை படித்திருக்கிறேன். இவர் பெயர் முஸ்லீம் போல இருக்கிறது என்று வாங்கி வைத்துவிட்டார்கள். ஆனால் அந்த பிரச்னை நடந்துகொண்டிருக்கும்போது கூட கல்லூரி நிர்வாகத்துக்கோ நூலகருக்கோ அந்த புத்தகம் நம் கல்லூரியிலேயே இருக்கலாம் என்று தெரியவில்லை.

உண்மையிலேயே இரண்டும் நல்ல புத்தகங்கள். மிட்நைட் சில்ரனை விட சடனிக் வர்ஸஸ் நல்ல புத்தகம். ஆனால் சடானிக் வர்ஸஸ் புத்தகத்தில் இந்து மதம் இஸ்லாமை விட அதிகமாக ஓட்டப்படும் என்பது நிறைய பேருக்கு தெரியாது. படித்திருந்தால்தானே?

தருமி said...

satanic verses யை முழுமையாகப் படித்துள்ளேன்

நான் வேலை செய்த (முஸ்லிம்) கல்லூரியில் இவரது புத்தகங்களை படித்திருக்கிறேன்

நரேன் & இ.சா.,

ரெண்டு பேரும் பெரியா ஆளா இருக்கீங்களே... என்னால் அந்த புத்தகத்தை முழுமையாக வாசிக்க முடியாது என்று நினைக்கிறேன். அதனால் தான் அந்தப் பகுதி மட்டுமாவது யாராவது - அதுவும் நமது இஸ். பதிவர்கள் - கொடுத்துவிட மாட்டார்களா என்று நினைத்தேன்.

தருமி said...

சல்மா அவர்கள் உயிர்மை மனுஷ்யபுத்திரனின் சகோதரி என நினைக்கிறேன்./

இல்லை என்று நிச்சயமாக நினைக்கிறேன். இருவரும் ஒரு மார்க்கத்துக்காரர்கள். அதுதான் தொடர்பாக இருக்குமென நினைக்கிறேன்.

ஆட்சேபனை உள்ள பகுதிகள் அதில் இல்லை என்கிறப்போது .../

என்னங்க நீங்க .. இப்படி சொல்லிட்டீங்க. ஒண்ணுமில்லாததுக்கா இந்த ஆட்டம்!

தருமி said...

/நான் வேலை செய்த (முஸ்லிம்) கல்லூரியில்...//

That makes me feel interested in you ... but..

ராஜ நடராஜன் said...

நானும் பதிவர் வவ்வாலும் எனது கலிலியோ பதிவின் பின்னூட்டத்தில் சல்மான் ருஷ்டி பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.(நீங்க முன்பு சொன்ன Exodus படத்தை தேடி தேடிப் பார்க்கிறேன்.கண்ணில் மாட்ட மாட்டேன்கிறது:))

யாரும் சல்மான் ருஷ்டி பற்றி பதிவுகளில் வாய் திறப்பதில்லையே ஏன் என்ற கேள்வி கடந்த சில நாட்களாகவே.முதலில் அவருக்கு உயிர் பயமுறுத்தல் என்று அவராகவே வரவில்லையென்றும் பின் கான்பரன்ஸ் மீட் மூலமாக நேற்று மாலை 3.30க்கு நிகழவேண்டிய நிகழ்வு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் இறுதி நேரத்தில் மத குண்டர்கள் சுற்றித்திரிகிறார்கள் என்பதால் விழா முடிந்து இரவு 10.30 க்கு என கேள்வி.

சல்மான் ருஷ்டியின் Satanic verses சூடான காலகட்டத்திலேயே வாசிக்க கிடைத்தது.சராசரி வாசிப்புக்கு சரிப்பட்டு வராத நடையென்று நான் சொல்ல சுஜாதா மாதிரி சின்ன சின்ன வரிகளாகத்தானே இருக்குதென்கிறார் வவ்வால்:)

காங்கிரஸ் அரசு சல்மான் விசயத்தில் கள்ள மௌனம் சாதிப்பதில் இரண்டு விசயங்கள் உள்ளன.முதலாவது வரப்போகும் தேர்தல்.இரண்டாவது இந்திரா காந்தியின் கணவரின் மரணத்துக்கு இந்திரா காந்தியும் ஒரு காரணம் என்கிற தொனியில் முன்பு கருத்து சொன்னதும் ஒரு காரணம்.பூட்டோவையும்,ஜியா உல் ஹக்கையும் உருவகப்படுத்தி வேறு கதை சொன்னதால் பாகிஸ்தானில் வேறு சல்மான் ருஷ்டிக்கு எதிர்ப்பு.

ஈரானின் கோமினி பிரச்சினை கிளப்பவில்லையென்றால் சல்மான் ருஷ்டி யாரென்றே தெரியாமல் போயிருக்கும்.சல்மான் ருஷ்டியின் பெயர் உருவகப்படுத்தலுக்கு கூட பொருள் அர்த்தம் கண்டு பிடித்து பிரச்சினையை பூதகமாக்கியவர்கள் மதவாத முல்லாக்களே.

இலக்கியத்துக்கு நோபல் பரிசு வாங்கிய V.S.Naipaul பற்றியோ India: A Wounded Civilization என்ற புத்தகம் பற்றியோ எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள்:)

மத தீவிரவாதங்கள் வளருவதற்கு ஒசாமாவின் வஹாபியிசம் ஒரு காரணமென்றாலும் தீவிரவாதங்கள் வளர்வதற்கும்,ஜனநாயக குரல்கள் ஒலிக்க விடாமல் வளைகுடா எண்ணை வளப்பொருளாதாரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென்று முடியாட்சிக்கான ஆதரவும்,பாலஸ்தீனிய பிரச்சினையை தீர்க்காமல் இஸ்ரேலிய ஆதரவு நிலை கொள்வதால் பிரச்சினைகளின் மையம் அமெரிக்கா என்பதும் ஒன்று.

தருமி said...

ராஜ நடராஜன்

(நீங்க முன்பு சொன்ன Exodus படத்தை தேடி தேடிப் பார்க்கிறேன்.கண்ணில் மாட்ட மாட்டேன்கிறது:))

வாசித்த கதையைப் பற்றித்தானே எழுதியிருந்தேன். படம் இருக்கிறதா நான் பார்த்ததேயில்லையே ..!

//ஒசாமாவின் வஹாபியிசம்..//

அடடா ... ஓசாமா வாஹாபி ஆளா. .நம்ம இஸ். பதிவர்கள் வஹாபிக்குத்தானே கொடி கட்டுவார்கள். அதன் 'ஆட்சி' வரவேண்டுமென்பார்கள். பயமா இருக்கே!

naren said...

//சல்மா அவர்கள் உயிர்மை மனுஷ்யபுத்திரனின் சகோதரி என நினைக்கிறேன்....
இல்லை என்று நிச்சயமாக நினைக்கிறேன். இருவரும் ஒரு மார்க்கத்துக்காரர்கள். அதுதான் தொடர்பாக இருக்குமென நினைக்கிறேன்//

எனக்கும் சந்தேகமாக உள்ளது..

ஆனால் http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_13.html என்ற பதிவில்
///இது மட்டுமா..? இன்னொரு சம்பவம்.. அப்போது 'குமுதம்' குழுமத்தில் இருந்து 'குமுதம் ஜங்ஷன்' என்னும் பத்திரிகையும் வந்து கொண்டிருந்தது. இலக்கிய சாயல் கொண்டது. அதில் கவிஞர் சல்மா ஒரு முறை தன்னுடைய பால்ய வயது புத்தக வாசிப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் தானும் மனுஷ்யபுத்திரனும் சிறு வயதிலேயே போட்டி, போட்டுக் கொண்டு புத்தகங்களை வாசித்ததாகச் சொல்லியிருந்தார்.

இதைப் படித்ததும் மனுஷ்யபுத்திரன் என்பது இவரைத்தானோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. அந்தச் சமயத்தில் எழுத்தாளர் அண்ணன் எஸ்.ரா.வின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன். அப்படியொரு முறை சென்றபோது இந்தக் கட்டுரையைப் பற்றி அவரிடம் சொன்னேன். “ஆமா சரவணன்.. அவங்க ரெண்டு பேரும் அக்கா, தம்பிக..” என்றார். “ஓ.. அப்படியா..?” என்று கேட்டுக் கொண்டேன்..!////

உண்மையை உண்மைத்தமிழினிடம் கேட்டுகுங்க ஐயா.

சார்வாகன் said...

சகோ இராஜராஜன்
//நீங்க முன்பு சொன்ன Exodus படத்தை தேடி தேடிப் பார்க்கிறேன்.கண்ணில் மாட்ட மாட்டேன்கிறது:))//

நம்ம கிட்ட சொலவே இல்லையே இந்தப்படம் பார்க்க வேண்டும் என்று.யு ட்யூபில் இருக்கிறது.

http://www.youtube.com/watch?v=ySvaWWYGbq0&feature=related

பார்த்து நல்ல விமர்சன பதிவு இடுங்கள் இல்லையெனில் தருமி அய்யா விமர்சன பதிவு இடுங்கள் விமர்சனம் படிக்காமல் படம் பார்க்க முடியாது. அதன் பிறகு பிடித்தால் படம் பார்க்கிறேன்.படம் பார்க்க சோம்பேறித் தனம்.
ஹி ஹி

நெல்லை கபே said...

சல்மா அவர்கள் உயிர்மை மனுஷ்யபுத்திரனின் சகோதரி என நினைக்கிறேன்./ ஆம் சகோதரிதான். ஆனால் உடன் பிறந்த சகோதரி இல்லை.

ராஜ நடராஜன் said...

//வாசித்த கதையைப் பற்றித்தானே எழுதியிருந்தேன். படம் இருக்கிறதா நான் பார்த்ததேயில்லையே ..!//

சல்மான் ருஷ்டி குறித்த எனது பதிவுக்கு எனது பின்னூட்டத்தை காபி செய்ய வந்தேன்.இதைக் காண நேர்ந்தது.நீங்க கதை பற்றித்தான் எழுதியிருந்தீர்கள்.அதன் பி.டி.எஃப் இன்னும் எனது கணினியில் பாதுகாப்பாக இருக்குறது.

Exodus பெயரில் படமும் இருக்கிறது.ஆனால் பொதுவெளியில் காணப்படுவதில்லை.அமெரிக்க நண்பர்கள் யாராவது உங்களுக்கு உதவக்கூடும்.

வவ்வால் said...

தருமிய்யா,

நான் ராஜ் நடராஜன் பதிவில் போட்ட பின்னூட்டம் இது,
//ஹூசைனுக்கு கொடுத்த ஆதரவை ஏன் சல்மான் ருஷ்டிக்கு கொடுக்க கூடாது என்ற கேள்விக்குள் ஒரு மத அரசியல் இருக்கு என்பதும் ஒரு காரணம்.

ஹூசைன் இந்துக்கடவுள் சரச்வதியை வரைந்து பிரச்சினைக்குள் மாட்டியதால் அவர் இந்துதுவாக்களின் கோபத்துக்கு ஆளானார்.தன்னிச்சையாகவே இஸ்லாமிய கருத்தாக்கம் கொண்டவர்கள் ஆதரவு தந்தார்கள். மதச்சார்பின்மை பேசும் அரசும் ஆதரவு அளித்தது.

ருஷ்டி இஸ்லாமியருக்கு எதிரான கருத்தாக்கம் கொண்டது போல் நாவல் எழுதியதால் இஸ்லாமிய மதவாதிகள் எதிர்ப்பை பெற்றார். ஆனால் இந்துத்துவாக்களும் ஆதரவு தெரிவிக்கவில்லை, என்ர நிலையே இருக்கிறது. மேலும் மதச்சார்பின்மை அரசும் தவிர்க்க பார்க்கிறது. மேற்கத்திய உலகம் தான் தொடர்ந்து அவரை சுவிகரித்து வைத்துள்ளது.

இதுக்கு பெயர் தான் இந்திய மதச்சார்பின்மை :-))

நீங்க சொன்னாப்போல பெருச்சாளியை பெருமாள் ஆக்கியது மத அடிப்படை வாதிகளே.

முகது நபி ஏதொ ஒரு இடத்தில் சாத்தானின் தூண்டுதலால் மெக்காவில் 3 ஏஞ்சல்கள் இருப்பதாக சொன்னேன் என்கிறாராம், அதனை சாத்தானின் வேதம்னு குறிப்பிடுவார்களாம், புத்தகத்தின் பேரும் அதில் வரும் ஒரு கேரக்டர் (மகுண்ட்) பேரும் மறைமுகமாக இஸ்லாத்தை குறிக்கிறது என்று தான் இந்த கலாட்டா. ஏன் மகுண்ட் என்பது முகுந்த் என்ற் இந்து பெயர் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. எல்லாம் மதவாதிகளின் ஏகபோக முடிவு :-//

நம்ம அரசு மைனாரிட்டி ஓட்டு வங்கி அரசியலில் தான் ஆர்வம் காட்டுது. அதன் விளைவே இந்தக்கூத்து எல்லாம்.

மத அடிப்படிவாதிகல் அவங்களா அவசரப்பட்டு தீவிரம் காட்டி ருஷ்டிக்கு தான் விளம்பரம் கொடுக்கிறாங்க. சாத்தான் வேதத்துக்கு அப்புறம் ருஷ்டி போட்ட புக் பேரு என்னனு கேளுங்க யாருக்கும் தெரியாது :-))

இப்போ தீபா மேத்தா மிட் நைட் சில்ரன்ஸ் வைத்து படம் எடுக்கிறாங்கனு செய்தி(படம் வந்துடுச்சா தெரியலை) அதுக்கு ஒரு ரணகளம் வெயிட்டிங்ல இருக்கு :-))

வவ்வால் said...

தருமிய்யா,

//அடடா ... ஓசாமா வாஹாபி ஆளா. .நம்ம இஸ். பதிவர்கள் வஹாபிக்குத்தானே கொடி கட்டுவார்கள். அதன் 'ஆட்சி' வரவேண்டுமென்பார்கள். பயமா இருக்கே!//

வஹாபிய ஆரம்பிச்சு வச்ச "இமாம் முஹம்மது இபின் அபுட் அல் வஹாபியோட" வழித்தோன்றல்கள் தான் சவுதிய ஆட்சி செய்கிறார்கள்.

வஹாபிக்கு மேல சலாபினு ஒன்னு இருக்கு அவங்க தான் தலிபான்கள், ரொம்ம்ப்ப நல்லவங்க :-))
--------------------

அப்துல் ஹமீது என்கிற மனுஷ்யபுத்திரனின் சகோதரி ரொக்கைய என்கிற சல்மானு படிச்ச நியாபகம். யாராவது தெளிவா சொன்னா சரி தான்.

ராஜ நடராஜன் said...

//நம்ம கிட்ட சொலவே இல்லையே இந்தப்படம் பார்க்க வேண்டும் என்று.யு ட்யூபில் இருக்கிறது.

http://www.youtube.com/watch?v=ySvaWWYGbq0&feature=related//

Oh!That's lovely.எல்லாத்தையும் மூடி வச்சிட்டு படம் பார்க்க போயிடறேன்.நன்றி!சகோ.சார்வாகன்.

Vetirmagal said...

//சலமானின் Midnight Children பல ஆண்டுகளுக்கு முன் வாசிக்க ஆரம்பித்து 150 பக்கங்கள் மட்டும் வாசிக்கவே மிகச் சிரமப்பட்டேன். இப்போது Satanic Verses-ன் திறனாய்வு வாசிக்கும்போதே தலை சுற்றத் தொடங்கியது. என்னமோ magical realism என்கிறார்கள்.... நாடு கடந்து போய் வாசித்துக் கொள்கிறேன்!//

அருமை. எங்களுக்கும் இதே அனுபவம். ஆனால் ஏதோ நான் மட்டும் தான் இப்படி என்று நினைத்தேன். இப்போது ஆறுதலாக உள்ளது.

சல்மான் ருஸ்டி எத்தனை 'புகழ்' பெற்றாலும் அந்த படைப்புகளை அதிகமான அளவில் யாரும் படிக்க போவதில்லை. 100 வருடங்கள் புறகு பல்கலை பட்டங்களுக்கு பயன் பெற வாய்ப்பு உள்ளது.

தருமி said...

//ஆனால் ஏதோ நான் மட்டும் தான் இப்படி என்று நினைத்தேன். இப்போது ஆறுதலாக உள்ளது.//

அட போங்க! உச்ச நீதிமன்ற கட்ஜுவே இதைத் தான் சொல்லியிருக்கிறார். வாசித்ததும் எனக்கும் ஆறுதல்தான்.

ராஜ நடராஜன் said...

//
சல்மான் ருஸ்டி எத்தனை 'புகழ்' பெற்றாலும் அந்த படைப்புகளை அதிகமான அளவில் யாரும் படிக்க போவதில்லை. 100 வருடங்கள் புறகு பல்கலை பட்டங்களுக்கு பயன் பெற வாய்ப்பு உள்ளது. //

D.H.Lawrence had written a novel "Lady Chatterly's Lover" which made a controversy during his life time.Now it become a literature:)

Anonymous said...

வாரீர் வாரீர்
பாரீர் பாரீர்
ஜோராக ஒரே ஒரு முறை நடந்த
நம்ம தவ்ஹீத் அண்ணனும் ஜெர்ரி அண்ணாச்சிகளும் போட்ட குஸ்தி

போயே போச்சு. போயிந்தே.

Radhakrishnan said...

பதிவுகள், பின்னூட்டங்கள் என நிறைய விசயங்கள் கற்று கொள்ள முடிகிறது. ராஜ நடராஜன் குறிப்பிட்ட புத்தகங்கள் முதற்கொண்டு நீங்கள் குறிப்பிட்ட இந்த புத்தகங்கள் எல்லாம் வாசித்தது இல்லை.

நன்றி தருமி ஐயா.

தருமி said...

//வலைப்பூக்களுக்கு என்னால் எளிதாக பின்னூட்டம் இடவே முடிவதில்லை.(http://www.greatestdreams.com/2012/01/blog-post_31.html)//

இப்படியிருந்தும் பின்னூட்டமிட்ட உங்களுக்கு மிக்க நன்றி

உண்மைத்தமிழன் said...

சல்மா, மனுஷ்யபுத்திரனின் அக்கா. ஆனால் உடன்பிறந்தவர் அல்ல.!

இதெல்லாம் பெரிய மனுஷங்க இடம்கிறதால பின்னூட்டத்தை வாசிக்காமலேயே போயிட்டோம். சாத்தானின் கவிதைகள், மிட்நைட் சில்ரன் தமிழில் வந்திருந்தால் சொல்லுங்கள். படித்துவிட்டு ஜோதியில் கலக்கலாம். எனக்கும் ஆங்கிலத்திற்கும் ரொம்ப தூரம்..!

Post a Comment