Sunday, March 18, 2012

558. பழைய்ய்ய்ய வகுப்புத் தோழன்






*

ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு கண் மருத்துவரைப் பார்க்கப் போனேன். நண்பன் ஒருவன் அறிமுகப்படுத்திய மருத்துவர். என்னைப் பார்த்ததும் மருத்துவர் நான் வந்த வேலையையும் மறந்து என்னை உற்றுப் பார்த்தபடியே இருந்தார். உங்களை எங்கேயோ பார்த்தது போலுள்ளது என்றார். நானும் ஆதியோடு அந்தமாக என் வாழ்க்கைக் கதையின் முக்கிய மைல்கல்களை அவர் முன்னே எடுத்து வைத்தேன். படித்த பள்ளி, கல்லூரி, வேலை பார்த்த இரு கல்லூரிகள், தஞ்சையில் வேலை பார்த்த போது இருந்த இடங்கள், 'வயது காலத்தில்' விளையாடிய, ஊர் சுற்றிய இடங்கள் .. லிஸ்ட் என்னவோ மிக நீளமாகக் கொடுத்து வந்தேன். நான் சொல்லியதை எல்லாமே அவர் தலையை ஆட்டி மறுத்தார். இருவருமே கடும் முயற்சி எடுத்தோம். கடைசியில் அவரே நம்பிக்கையிழந்து நான் தான் தப்பாக நினைத்து விட்டேன் போலும் என்று முயற்சியைக் கைவிடும் போது நான் மதுரையை விட்டு விலகி இருந்த ஓராண்டு என் நினைவுக்கு வந்தது. P.U.C. படிக்க மட்டும் பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரி என்று சொன்னேன். ஆஹா .. என்றவர் படித்தது 1960-61-ல் தானே என்றார்.  ஆமாம் என்றேன். E section  தானே என்றார். சில ஆசிரியர்களின் பெயரை நானும் அவரும் மாறி மாறி சொல்லிக் கொண்டோம். எங்கள் வகுப்பின் topography, நான் வகுப்பில் இருந்த இடம் எல்லாம் பற்றி நாங்கள் மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டோம். சும்மா சொல்லக் கூடாது .. மனுஷனுக்கு நல்ல நினைவாற்றல். (அதனால் தான் அவர் டாக்டராகி விட்டார்!) வகுப்பில் பலரது பெயர்கள், அவர்கள் இப்போது எங்கே, என்ன செய்கிறார்கள் என்ற தகவல்களும் சொன்னார். அவர் சொன்ன முழுத் தகவல்களையும் உங்களுக்குத் தரும் முன் ..

ஒரு flash back ....

நான் S.S.L.C.முடிக்கும் போது Secondary Grade ஆசிரியராக இருந்த அப்பா தனியாக B.A. முடித்து, short term B.Ed.  படிக்க சென்னை போக வேண்டியதிருந்ததால் பாளையில் இருந்த சித்தப்பா பொறுப்பில் என்னை அனுப்பி விட்டார். சவேரியார் கல்லூரியில் P.U.C. சேர்த்து விட்டார்கள். பாவப்பட்ட ஜென்மம். நாலைந்து pants; போட முடியாத கால் சட்டை; கட்டத் தெரியாத நாலு முழ வேட்டி, சிரைக்காத மீசை முளைத்த முகம், வீட்டிலிருந்து தனியாக இருந்து பழக்கப்படாத பையன் ... உண்மையிலேயே பாவப்பட்ட பயலாக ஒரு வருடத்தை அங்கே ஓட்டினேன்.
1961-ல் நான் ...

இரண்டாம் term முடிந்ததும் வாழ்க்கையில் சிறிது வெளிச்சம். அரையாண்டு மதிப்பெண்கள் வந்ததும் கல்லூரி முதல்வர் Father சூசை வகுப்பிலிருந்து சிலரைக் கூப்பிட்டனுப்பினார். முதல் term-ல் சாதா மாணவனாக இருந்தவன் இப்போது  நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். இப்படியே படி; கட்டாயம் இரண்டாம் வகுப்பு கட்டாயம் கிடைக்கும் என்று ஆசி கொடுத்தார். (இரண்டாம் வகுப்பே அப்போ அப்படி கஷ்டம்!)

Britto Hostel-ல் Warden, Father ஜார்ஜுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அடிக்கடி திட்டு வாங்குவேன்; பைன் வேறு போடுவார்.  ஆனால் இரண்டாம் term முடிந்து ஜனவரியில் விடுதிக்கு வந்ததும் என் மேல் ஒரே அன்பைப் பொழிந்தார். இரண்டு நாள் கழித்து தன் அறைக்கு வரச்சொல்லியனுப்பினார். ஏதோ வாங்கிக் கட்டப் போகிறோமென நினைத்து பயந்து போனேன். மறுபடி ஒரே அன்பு. என்ன ஆச்ச்சுன்னா ... அவர்தான் எங்களுக்கு economics பாடம் எடுத்தார். எங்கள் வகுப்பில் முதல் மார்க் 58; எனக்கு 56. வகுப்பில் இரண்டாவது மார்க். அட .. நம்ம ஹாஸ்டல் பையன் நல்ல மார்க் எடுத்துட்டானேன்னு ஒரே அன்பாகிப் போச்சு. வருடம் இறுதி வரை அது நீடித்தது அது மட்டுமல்லாமல், எனக்கும் economics மேலே ஒரே லவ்வாகிப் போச்சு. கல்லூரியில் டெஸ்ட் எல்லாம் சீரியசாக நடக்கும். என் பக்கத்திலிருந்த மூன்றாமாண்டு economics அண்ணனை விடவும் நான் நிறைய additional sheets வேகமாக நிறைய வாங்கி எழுதியதை அண்ணன் ஹாஸ்டல் முழுவதும் பரப்பிட்டார்லா ..!

கல்லூரி உள்ளே ஒரு சிற்றாலயம். என்ன architecture என்று தெரியாது. அனேகமாக இந்துக் கோவில் + கிறித்துவக் கோவில் அமைப்புகள் கலந்து கட்டியது என நினைக்கிறேன், ரொம்ப அழகாக இருக்கும்; அந்தக் கோவிலுக்குள் சென்று ஜெபிப்பது மிகவும் பிடிக்கும். அதோடு அந்தக் கோவில் மணிகளிலிருந்து 'ஆவே மரியா' என்ற பாடல் இசையோடு ஒலிக்கும். அது ரொம்பவே பிடிக்கும். ரொம்ப பக்தியான பையனல்லவா ..!

முதல்வர் Father சூசைக்கு கைப்பந்து மிகவும் பிடித்த விளையாட்டு. நாங்கள் படிக்கும்போது முருகன் என்றொரு கைப்பந்துப் புலி இருந்தார். மூன்றாமாண்டு என நினைக்கிறேன். சில நாட்கள் பாதர் சூசை விளையாட்டு மைதானத்திற்கு வந்து விடுவார். அன்று முருகனின் விளையாட்டு ரொம்ப ஸ்பெஷலாக இருக்கும். எதிர் தரப்பில் வட்டம் போட்டு அதில் பந்தை அடிக்கச் சொல்லி ரசிப்பார். அந்த நேரங்களில் கைப்பந்து மைதானம் முழுமையாகப் பார்வையளர்ளால் நிறைந்திருக்கும்.  முருகன் பின்னாளில் தமிழகம் சார்ந்து விளையாடினார். இந்திய வாலிபால் கழகத்தின் செயலராக இருந்தார்.

ஜான்ஸ் கல்லூரி சவேரியார் கல்லூரிக்கு மிக அருகில் இருக்கும் அதன் பக்கத்தில் ஒரு ஹாக்கி மைதானமிருக்கும். அப்போது எங்களுக்குள் ஒரு கதை உலாவும். அந்த மைதானம் ஜான்ஸ் கல்லூரிக்குரியதாம். ஒரு முறை இரு கல்லூரிகளும் தங்கள் மைதானங்களைப் போட்டியாக வைத்து ஹாக்கியில் மோதினார்களாம். சவேரியார் வெற்றி பெற்றதால் அந்த மைதானத்தை ஜான்ஸ் கல்லூரி சேவியர் கல்லூரிக்குக் கொடுத்து விட்டதாகச் சொல்வார்கள். எவ்வளவு உண்மையோ?!

இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் நடுவில் மரியா காண்டீன் எனற ஒனறு பல ஆண்டுகாலமாக இருந்தது. பன்-பட்ட்ர்-ஜாம் ரொம்ப பேமஸ். பல ஆண்டுகளுக்குப் பின் பாளை சென்ற போது அங்கே போய் ஒரு பன்-பட்ட்ர்-ஜாம் சாப்பிட்டு டீ குடித்து வந்தேன்.

எங்கள் துணை முதல்வர் அந்தோனிசாமி. எங்களுக்கு ஆங்கில non-detailed பாடம் எடுப்பார். அவர் வகுப்பிற்குள் நுழைந்ததும் நீண்ட ஜன்னல் கதவுகளை மூடச்சொல்வார். பாவம் .. ஆஸ்துமா. விடுமுறை, தண்டனை ...  இந்த மாதிரி எல்லாத்துக்கும் அவரிடம் தான் போவோம். அவர்ட்ட போனா ஆங்கிலத்திலதான் 'அளவளாவணும்'! அங்க போறதுக்கு முன்னால் நாங்க படுற பாடு ... ஒரே ஒருதடவை அவரிட்ட போய் இங்கிலிபீசுல்ல பேசிட்டு திட்டு வாங்காம வந்துட்டோம்ல ..!

Dr. ஆராய்ச்சி எனறு ஒரு தாவரவியல் ஆசிரியர். அப்போதுதான் அவர் படித்து முடித்து எங்களுக்கு ஆசிரியராக வந்தார். நெடிதுயர்ந்த ஆள். நம்ம ஊர் ஆள் மாதிரி இல்லாம சிகப்பா, வித்தியாசமான லுக்கோடும் neatly dressed ஆகவும் இருப்பார். ஆங்கிலத்தில பரத்துவார். நாங்களோ தமிழ் மீடியத்தில்ருந்து ஆங்கில மீடியத்துக்கு தவ்விய ஆட்கள். பேசுவது பாதிதான் புரியும். ஆனால் அவர் வேகமாகப் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். பின்னாளில் ஆசிரியர் தொழிலில் இதே போல் நான் பேச முயற்சிக்க அவர் எனக்கு ஒரு மாடல்.

அந்தோனி குரூஸ் - தமிழாசான்; வயதானவர். வகுப்பில் கொஞ்சம் கலாட்டா நடக்கும். பொன்னரசு - இன்னொரு தமிழாசிரியர். நன்றாக வகுப்பெடுப்பார். ஒவ்வொரு முறையும் ஜோக் அடித்து, உடனே மூக்கைத் தடவி விட்டுக் கொள்வார். அப்போது நாம் சிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு timing தான் ... இன்னொரு ஆங்கில ஆசிரியர். கரடு முரடான முகம். பெயர் நினைவில்லை. அவரது ஆங்கில உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கும்.

என்னுடைய பெஞ்சில் பக்கத்தில் தடிமாடு மாதிரி - அவன் பெயர் ஆரோக்கிய சாமின்னு நினைக்கிறேன் - இருப்பான். எப்போதும் எங்கள் பெஞ்சில் உள்ள அனைவரையும் ஒரு சேரத் தள்ளி தள்ளி விளையாடுவான். கஷ்டப்படுத்துவான். பக்கத்தில் ரோசரி என்றொரு மாணவன். அவன் படித்து பாதிரியாராகச் சேர்ந்தான். அப்போது ஒரு முறை பார்த்தேன். இவர்கள் இருவருமே என்னோடு விடுதியில் இருந்தவர்கள். வேறு மாணவர்கள் பெயர் ஏதும் நினைவில்லை.

....

இப்போ நம்ம விட்ட இடத்திற்கு வருவோம் ....








நம் கண் மருத்துவர் கன்னியப்பன் அன்று சில விஷயங்களைச் சொன்னார். அதன்பின் சில முறை சந்தித்தோம். இப்போது நாங்கள் ஒரே இடத்தில்தான் குடியிருக்கிறோம். என் விகடனுக்கு நன்றி. சமீபத்தில் என் வலை பற்றி அதில் வாசித்ததும் அவரும் ஒரு பதிவராக நினைத்து, அதற்காக என்னைச் சந்திக்க நினைத்திருக்கிறார்.  சரியாக சந்தித்தோம். இன்று (18.3.12) வெகுநேரம் பதிவுகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். மனிதர் பெரிய கவிஞராக இருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலம்; ஆங்கிலத்தில் இருந்து தமிழ் என்று கவிதைகளைப் புலம் பெயர்க்கிறார். சொந்தக் கவிதைகளும் ஏராளம். இதைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்த போது அவர் P.U.C.-ல் வாங்கிய ஆட்டோகிராபைக் காண்பித்தார். நான் ஏதாவது எழுதியிருப்பேனான்னு தேடினேன். ஒன்றையும் காணோம். ஆனால் இன்னொரு பெயர் - எல்லோருக்கும் தெரிந்த ஒரு பெயர் - அதில் இருந்தது. வை.கோ. வின் பெயர் அது. அவர் எங்கள் வகுப்பு மாணவராம். அதாவது வை.கோ. எங்களின் பழைய்ய்ய்ய்ய வகுப்புத் தோழன். குறள் ஒன்று எழுதி வாழ்த்தியிருந்தார். நண்பரை வாழ்த்தி ஒரு வரி எழுதியிருந்தார். வீட்டு முகவரியில் ஊர்ப் பெயர் கலிங்கத்துப் பட்டியென்று எழுதியுள்ளார். வை.கோ.வின் கையெழுத்திட்ட அப்பக்கத்தின் நகலை நண்பர் கன்னியப்பன் தன் பதிவில் போட்டிருக்கிறார்.  அன்று .. யாருக்கும் தெரியாத ஒரு சின்ன ஊர்; இன்று தன் மூலம் ஊர்ப் பெயரைப் பெருமைப்படுத்தி, பிரபலப்படுத்தி விட்டார். {நான் மதுரைக்காரன் என்பதால் அது போனற முயற்சிகளை எடுக்கத் தேவையில்லாமல் போய் விட்டது :)  }

பழைய வகுப்புத் தோழர்கள்


நானும் கன்னியப்பனும் திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்குள் நுழையும் சாலையில் தான் வசிக்கிறோம். வை.கோ. அந்த வழியாக வந்தால் 'மறித்து விடுவோமா' என்று பேசிக்கொண்டிருந்தோம்!

*

நண்பர் கன்னியப்பனும் இந்த நிகழ்வைப் பற்றி
ஒரு பதிவிட்டிருக்கிறார்.  காண்க ...
கன்னியப்பன் ஒரு group photo போட்டிருக்கறார். நானும் என் முகத்தைச் சல்லடை போட்டுத் தேடினேன். அரை குறையாகத் தெரியும் ஒரு முகம் ஒருவேளை என் முகமோ எனறு நினைத்தேன். நிச்சயமில்லை :(   ( என் முகம் எனக்கு மறந்து போச்சு ! )


*




8 comments:

சித்திரவீதிக்காரன் said...

வைகோ தருமி அய்யாவின் வகுப்புத்தோழன் என்று எண்ணும் போது பெருமையாக இருக்கிறது.
'நினைத்தாலே இனிக்கும்' இளமைக்கால நினைவுகள். பகிர்விற்கு நன்றி.

ப.கந்தசாமி said...

நினைவுகள் வாழ்க. அவைதான் நம்மை வாழ வைக்கின்றன.

naren said...

பதிவை படிக்கும் போது,

அப்போது இருந்த வகுப்பு மற்றும் கல்வி சூழல் இப்போது இல்லை என்பது வருத்தம் தான்.

நீங்கள் மறிக்க வேண்டம், வை.கோ, இதைப் பற்றி அறிந்தால் அவராகவே வருவார். அவரை போல மனிதர்கள் யார்?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வை.கோவுக்கு ஒரு லெட்டர் தட்ட வேண்டியதுதானே சார்.:-)))))))))

தருமி said...

புதிய படம் (1961) ஒன்று காணீர் !

Dr.V.K.Kanniappan said...

சாம்,
உற்றுப் பார்த்தால் ஒற்றுமை தெரிகிறது.
இப்பொழுது நம் புகைப் படத்தில் எங்கு இருக்கிறீர்கள் என்று தெரிகிறதா?
வ.க.கன்னியப்பன்

ராஜரத்தினம் said...

What happened to your friend's other eye!!!:-)))

தருமி said...

ராஜரத்தினம்,

தனி முகவரிக்கு எழுதுங்களேன்.

Post a Comment