Thursday, September 20, 2012

591. ஏலேய் வைத்தி! நல்லா இருக்கியா’ல? - காணாமல் போன நண்பர்கள் ... 4




*




*





1957-ல் ....
கோடை விடுமுறையென்றால் உடனே பிறந்த மண்ணுக்கு ஓடியது ஒரு காலம். எங்கள் வீட்டைப் போலவே மதுரையிலிருந்து இன்னொரு பெரியப்பா குடும்பம்; பாளையங்கோட்டையிலிருந்து இன்னொரு பெரியப்பா குடும்பம். ஏறத்தாழ இந்த சமயத்தில் தான் ஊரில் அம்மன் கொடை நடக்கும். அதற்காக பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து ஊரை நிறைத்திருப்போம். மதுரையில்பூட்டிக் கிடந்தவாழ்க்கை - வீடும் இத்தனூண்டு இருக்கும். மிஞ்சிப் போனால் வெளியே போய் தார் ரோட்டில் விளையாடலாம். ஆனால் இங்கே ஊருக்கு வந்தாலோ திறந்த வாழ்க்கை’! ஊரே நமது என்ற எண்ணம் வந்திருமே. எங்கே போனாலும் உறவினர். அதுவும் வெளியூரிலிருந்து வந்திருப்பதால் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு; கவனிப்பு; விசாரிப்பு. வீடும் பெரிது; ஊரும், காடும் விரிந்தது. எல்லாமே நிறைந்து கிடக்கும் திறந்த வாழ்வு’!

எல்லா உறவினர்களும் சந்திக்கும் நாட்கள். அது பெரியவர்களுக்கு எப்படியிருந்ததோ .. நாங்க .. சின்னஞ்சிறுசுகளுக்கு ஏக சந்தோஷம். விளையாட்டுகளுக்கும் குறைவில்லை. சிறு வயதில் எல்லோரும் சேர்ந்து ஒளிந்து விளையாடி .. பின் வயதாக வயதாக விளையாட்டுகளும் மாறின. பிள்ளையார் பந்து (எறிப் பந்து); குச்சி தூக்கி விளையாடுதல்; தேர்ந்தெடுத்த அகத்திக்குச்சியின் முனையை வெட்டிச் சரிசெய்து ஹாக்கி மட்டை தயார் செய்து, பனங்கொட்டையை பந்தாக்கி விளையாடியது; ஓடைகளில் ஓணானை விரட்டி அடித்து வேட்டையாடியது; கிட்டிப் புள்ளு; கருங்கல்லை தேய்த்து தேய்த்து செய்த குண்டு வைத்து கோலி விளையாட்டு;  புளிய மரங்களில் மரக்குரங்கு விளையாட்டு;  நொங்கில் வண்டி செய்து ஓட்டியது;  விட்டில் பிடித்து சுட்டு தின்பது;  ... அது மட்டுமா, மே மாதம் மாதா மாதம் - அதாவது மேரி மாதாவின் மாதம் - மாலைகளில் அத்தை நடத்திய ஜெபக்கூட்டம்; அது முடிந்ததும் கையில் அரிக்கேன் விளக்கோடு இருட்டுக்குள் வரிசையாக நடந்து கிறித்துவ உறவினர்கள் வீட்டுக்குப் போய், ஜெபம் செய்து விட்டு அவர்கள் தரும் கருப்பட்டிக் காப்பியில் முறுக்கை ஊறவைத்து தின்ற மகிழ்ச்சி ... அடேயப்பா .. Variety was the spice of life then! கொஞ்சம் வயசானதும் காட்டுக்குள் போய் திருட்டுப் பீடி குடித்துப் பழகியது ... இளமையின் ராஜ்ஜியமாக அந்த நாட்கள் கழிந்தன.

வழக்கமாக இப்படி விளையாட்டுகளில் மூழ்கிப் போனாலும் அவ்வப்போது சில இடிகளும் தலை மேல் வந்து இறங்கும். இன்னைக்கு எல்லோரும் வேட்டைக்குப் போவோம்னு நண்பர்களோடு முடிவெடுத்து மதியச் சாப்பாட்டிற்குப் பின் மெல்ல கிளம்பும் போது அப்பா ஆளை நிறுத்தி, ஊரிலிருந்து எடுத்து வந்திருக்கும் Wren & Martin ஆங்கில இலக்கண புத்தகத்தை எடுத்து அதிலுள்ள கேள்விகளுக்குப் பதில் எழுது என்னும் போது வரும் கோபம் ... ம்ம் .. அந்தக் கோபத்தையும் வெளியே காண்பிக்கவா முடியும். கடவுளேன்னு படிக்க உக்காரணும்!

ஆனால் ஒரு வருஷம் மிக மகிழ்ச்சியாகப் போனது. என் பாட்டையா அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளி நடத்தி வந்தார். ஊருக்குப் பக்கத்தில் நல்லூர் என்ற ஊரில் ஒரு பெரிய பள்ளி; உயர் நிலைப்பள்ளி; ரொம்ப வருஷத்துக்கு முந்தி ஆரம்பித்த பள்ளி. அந்த ஊரிலிருந்து அரைக் கிலோ மீட்டர் தூரம் தான் எங்கள் ஊர் - காசியாபுரம். நல்லூர், கொஞ்சம் அரசியலால் பெயர் வாங்கிய ஆலடி, எங்கள் ஊர் காசியாபுரம் – மூன்றும் ஆயுத எழுத்து மாதிரி அடுத்தடுத்து இருக்கும். நல்லூரில் இருந்த அந்தப் பெரிய பள்ளி .. அடுத்து எங்கள் ஊரில் பாட்டையாவின் பள்ளி. பக்கத்தில் வேறு பள்ளி ஏதும் கிடையாது. அதனால் பக்கத்து ஊரில் இருந்தெல்லாம் எங்கள் பள்ளிக்கு நிறைய மாணவர்கள் வருவார்கள். அந்தப் பள்ளிக்கு three-wheeler-ல் போய் வண்டியை பள்ளியின் நடுவில் இருந்த வாதமடக்கி மரத்து நிழலில் park செய்து நான் மூன்றிலிருந்து ஐந்து வயது வரை அந்தப் பள்ளியில் படித்தேன்’. எனக்கு இருந்த நான்கு அத்தைகளும் அப்பள்ளியில் ஆசிரியர்களாக அவ்வப்போது இருந்தார்கள். ஏன் அந்த வயதிலேயே, மூன்று வயதிலேயே நான் அப்படி மாஞ்சு மாஞ்சு பள்ளிக்கூடம் போனேன்னு தெரியணும்னா அங்கே போய் படிச்சிக்கிங்க.  

அந்தப் பள்ளியில் ஒரு கோடை விடுமுறையில் பெரிதாக ஒரு விழா நடந்தது. இன்னும் சில நிகழ்வுகள் நினைவில் உள்ளன. ஒரு கண்காட்சி, சின்னச் சின்ன விளையாட்டுகள் என்று பகலெல்லாம் நடந்தன. மாலையில் தான் ஒரு பெரிய நிகழ்ச்சி - நாடகம் ஒன்று நடந்தது. நான் தான் ஹீரோ! அடிச்சி தூள் கிளப்பிட்டோம்ல! நாடகம் பார்த்த என் அப்பம்மா  என் உணர்ச்சி மிக்க நடிப்பில்அப்படியே அழுதுட்டாங்கல்லா ..! நாடகம் பற்றி இங்கே ஒண்ணும் சொல்லலை.  ஏன்னா அது பற்றி ஏற்கெனவே  சொல்லியிருக்கேன். கண்ணீரையெல்லாம் அடக்கி வச்சிக்கிட்டு நீங்களே அதை இங்கே வாசிச்சிக்கங்கோ ...சரியா?  

வாசிச்சிட்டீங்களா ..? ரொம்ப மனசு கனமா இருக்குமே!  சரி .. அது ஒரு பக்கம் இருக்கட்டும். கண்ணீரையெல்லாம் தொடச்சிக்கிட்டு நம்ம கதைக்கு வருவோம்.  அந்த நாடகத்தில கிளப் முதலாளியா வந்தானே வைத்தியலிங்கம், அவன் தான் இந்த நாடகத்தின் மூலம் எனக்கு நல்ல நண்பனானான். அது வரை எனக்கு அவனைத் தெரியாது. எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை தான் உண்டு. ஆனால் கொஞ்சம் பெரிய பையனாக இருக்க வேண்டுமென்பதற்காக எங்கள் பள்ளியில் படித்து முடித்து, பின் நல்லூர் உயர் நிலைப்பள்ளியில் படித்து கொண்டிருந்த வைத்தியலிங்கத்தை அத்தை பிடித்து இழுத்து வைத்திருந்தார்கள். மற்ற முக்கால்வாசி கதாபாத்திரங்களைத்தான் டவுன் பிள்ளைகளான நாங்கள் அமுக்கிக் கொண்டோமே..!

நாடகம் முடிந்த அடுத்த நாள் வைத்தியலிங்கத்திடம், ‘ஏண்டா! அப்படி கால் சட்டையையும் கழட்டச் சொன்ன?’ என்று கேட்டேன். இருந்தாலும் எனக்கு மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி. ஏன்னா  அந்த சீன் அப்படி இருந்த்தால் தானே அப்பம்மா  அப்படி அழுதுட்டாங்க! அந்த நாளிலிருந்து அவன் எனக்கு நல்ல ஒரு நண்பனாகி விட்டான். திருநெல்வேலிப் பழக்கத்தில் ஏலே!என்று கூப்பிடும் பழக்கம் இருந்தாலும் நான் அந்த வயதில், ஏன் அதற்குப் பிறகும் அப்படி யாரையும் கூப்பிட்டதில்லை. வைத்தியலிங்கமும் நானும் அன்றிலிருந்து  ஒருவரை ஒருவர்ஏலேஎன்று கூப்பிட ஆரம்பித்தோம். நான் அப்படி ஏலேஎன்று அன்போடு கூப்பிட்டது அவன் ஒருத்தனைத்தான்.  (இப்போ பேரப் பசங்களை அப்பப்போ ‘ஏலேன்னு கூப்பிடுறது நல்லா இருக்கு!)  ஒவ்வொரு விடுமுறைக்கும் ஊருக்குப் போனதும் முதல் வேலையாக அவன் வீட்டுக்குத் தான் ஓடுவேன். ஊரில் இருக்கும் வரை அவன் கூடவே இருப்பேன். ஆனாலும் என்ன, இந்த மாதிரி இருந்தது ஓரிரு ஆண்டுகள் மட்டுமே.

ஒரு விடுமுறையில் ஊருக்குப்  போனதும் அவன் வீட்டுக்குப் போனேன். அவன் வீட்டில் மட்டுமல்ல ஊரிலேயே இல்லை. அவனை சென்னைக்கு அவன் வீட்டார் அனுப்பி விட்டார்கள். படிக்கிறதாகச் சொன்னார்கள். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவன் படிப்பை விட்டு விட்டு காவல் துறையில் கான்ஸ்டேபிளாகச் சேர்ந்து விட்டதாகச் சொன்னார்கள். சில ஆண்டுகள் கழித்து அவன் வீட்டிலும் யாரும் இல்லை. எல்லோரும் சென்னை வாசிகள் ஆகிவிட்டார்கள் போலும்.

நாடகத்தில் என் ட்ரவுசரை உருவிட்டான்’; ஆனால் இப்போ அவனும் அந்தக்கால போலீஸ்காரராக  அரை ட்ரவுசர் சீருடை உள்ள வேலைக்கே போய்ட்டான். என்னே ஒரு  dramatic irony!!! ஜீ பூம்பா போட்டு பழைய ஆட்களைக் கண்முன் கொண்டு வரும் மந்திரம் தெரிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! வைத்தியை எதிரே கொண்டு வந்து, ‘ஏலேய் வைத்தி! நல்லா இருக்கியால?என்று உரத்துக் கேட்டு விடலாமே!



*

இப்பதிவிட்டு சில நாளில் எங்கள் ஊர் பதிவர் வேல்முருகன் என்பவர் என்னைத் தொடர்பு கொண்டார். எங்களூரில் அவரது வீடு வைத்தியலிங்கத்தின் வீட்டிற்குப் பக்கத்து வீடு என்றார். கிராமத்தில் பக்கத்து வீடு என்றால் நிச்சயமாக உறவாகத்தானிருக்கும். அவர் மூலம் முயன்று கடைசியில் வைத்தியைக் கண்டு பிடித்து விட்டேன்.

வேல்முருகன் கொடுத்த ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு அங்கிருந்து வைத்தியின் எண்ணைக் கண்டுபிடித்தேன். அம்புட்டு மகிழ்ச்சி ... உடனே தொடர்பு கொண்டேன். வா .. போ .. என்று பேச ஆசை. ஆனால் அந்தப் பக்கத்திலிருந்து வைத்தி ரொம்ப மரியாதையாகப் பேசியதால் எனக்கும் வேறு வழியில்லாமல் போயிற்று. வைத்தியின் தம்பி தான் காவல் துறைக்குப் போயிருந்திருக்கிறார். வைத்தி எண்ணூர் அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்று சென்னையில் அத்திப்பெட்டு என்னுமிடத்தில் சொந்த வீட்டில் மக்கள். பேரப் பிள்ளைகளோடு இருப்பதாகச் சொன்னார். அவரோடு பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது - போன ஜென்மத்து உறவைப் புதுப்பித்தது போல் இருந்தது. 



காணாமல் போன ஒரு 
நண்பனைக் கண்டு பிடிச்சிட்டோம்ல ...........


*







. *

1 comment:

Vijaiy from colombo said...

அருமை அருமை அருமை ......

உங்களை பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கு ..பள்ளி பருவம் உங்களக்கு பாடம் படிக்கும் பருவம் என்பதை தாண்டி நிறைய என்சாய் பண்ணும் பருவமா இருந்து இருக்கு....உங்களின் அனுபவங்களில் ஓனான் வேட்டை தவிர வேற எதுவுமே பண்ணது இல்ல...(இப்போ கொழும்புல ஓணான் இருக்குதான்னு தெரியல )...சொந்த ஊரு ,கிராமம் ,மக்கள் இது எல்லாம் எனக்கு கனவுல மட்டுமே காண கிடைக்குற விஷயம் தான் இன்னும் ...(வேற பன்னம்பாறைக்கு அப்பா கூட்டிட்டு போனா தானே ???????)

Post a Comment