Thursday, May 02, 2013

652. தாத்தா கட்டாயமாகக் கதை சொல்லி, தூங்க வைக்கணுமோ ...?






*




பேரப் பிள்ளைகளுக்குக் கதை சொல்லித் தூங்க வைப்பது எனக்கு ஒரு அரிதான விஷயம். நானிருப்பது ஒரு புறம். வருடத்திற்கு நாலைந்து நாள் உடன் இருப்பதே பெரிது. இதில் பேரப் பிள்ளைகளுக்குக் கதை சொல்லித் தூங்க வைக்கும் வாய்ப்பு அதிகமாக இல்லை. ஆனால் சென்ற வாரம் சென்னை சென்ற போது பெரிய பேத்தி - மூன்றாம் வகுப்பு முடிக்கிறாள் - இருந்த இரு நாட்களில் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டு கதை சொல்லுங்கள் என்றாள்.

கதை சொல்லும் முன் பேத்தியின் அம்மா, அதாவது என் இளைய மகள் சிறு வயதில் என் மடியில் படுத்துக் கொண்டு எனக்கு அடிக்கடி கதை சொன்ன நினைவு வந்தது. அவள் கதைகளில் கட்டாயம் ஒரு குள்ளன், நிறைய ரத்தம் சிந்துதல், யாராவது செத்துப் போவது என்று நிறைய களேபரமான கதையாக இருக்கும்.

முதல் நாள் .. என்ன பெரிய கதை என்று நினைத்துக் கொண்டு நானே அப்போது ஒரு கதையை synthesize செய்து, திக்கித் திணறி ஒரு கதை சொன்னேன். எனக்கே அது கதை மாதிரியாகத் தெரியவில்லை. நான் சொல்லி முடித்ததும் அவள் நான் ஒரு கதை சொல்கிறேன் என்றாள். ஐந்தாறு ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தவளுக்கு இப்போது “தாய்மொழி” ஆங்கிலமாக மாறியிருந்தது. எங்கே வாசித்தாளோ எப்படியோ .. ஒரு கதை சொன்னாள். நான் சொன்னது போலல்லாமல், தங்கு தடையில்லாமல் விரைவாகச் சொன்னாள். சரி .. நாமளும் நமக்குத் தெரிந்த கதை ஒன்றை எடுத்து விடலாம் என்று நினைத்து அடுத்து பீர்பால் கதை ஒன்றை எடுத்து விட்டேன். தப்பா போச்சு. அடுத்த ரெண்டு கதைகள் அவளிடமிருந்து வந்தன. அதில் ஒன்று பீர்பால் கதை. அடுத்த கதை கேட்டாள். எனக்கோ பயங்கர தூக்கக் கலக்கம். அதையே ஒரு சாக்காகச் சொல்லித் தப்பி விட்டேன்.

அடுத்த நாள் மறுபடியும் கதை கேட்டாள். வேறு எதையெதையோ பேசினேன். சில புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருந்தேன். அவளது favourite புத்தகமான Tinkle வாங்கிக் கொடுத்திருந்தேன். அதோடு பழைய ஆங்கில abridged classics வாங்கிக் கொடுத்திருந்தேன். அதைப் பற்றிக் கேள்விகள் கேட்டேன். எந்தெந்த புத்தகம் வாசித்தாள்; இன்னும் எந்தப் புத்தகம் வேண்டும் என்றும் சொன்னாள்.

இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போது, அப்படியே எனக்கு ‘சுப்பாண்டியைத்’ தெரியுமாவெனக் கேட்டாள். நமக்கு எங்கே அவரைப் பற்றியெல்லாம் தெரியப்போகிறது. தெரியலையே’டா என்றேன். Tinkle-ல் வரும் குட்டிக்கதைகளில் வரும் ஒரு பாத்திரமாம். சரியான ‘பேக்கு’ போல இருப்பானாம். எப்படி என்றேன். ரெண்டு மூன்று சுப்பாண்டி பற்றிய கதைகள் சொன்னாள். நல்ல பிள்ளையாய் கேட்டுக் கொண்டேன்.

காலையில் எழுந்ததும் Tinkle கொடுத்து சுப்பாண்டி பற்றி வாசிக்க வைத்தாள். அதென்ன நம்ம ஊர் ‘பாண்டி’ பெயர் வைத்து இப்படி ஒரு மக்கு ப்ளாஸ்த்ரி பற்றி கதை எழுதியிருக்கிறார்கள் என்று மனசுக்குள் கோபமாக நினைத்துக் கொண்டேன்.

அடுத்த தடவை சென்னை செல்லும் போது ஏதாவது கதை யோசித்துக் கொண்டு போகணும்!! இல்லைன்னா மாட்டிக்குவேன்.

 ****************************

மதியம் ஊருக்குப் புறப்பட பொட்டி படுக்கையை ரெடி பண்ணிக்கொண்டு இருந்தேன். பொட்டியில் ஒரு ஸ்க்ரூ நீட்டிக்கொண்டு நின்றது. சரி செய்ய ஸ்க்ரூ ட்ரைவர் ஒன்றை எடுத்து வர பேத்தியிடம் கேட்டேன். கொண்டு வந்து கொடுத்தாள். அதோடு அன்று நான் வாங்கிக் கொடுத்திருந்த கலர் பென்சில்களை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்றாள். எட்டிப் பார்த்தேன். ஒரு பக்கம் முழுவதும் கலர் பென்சில்களை வைத்து தீட்டிக் கொண்டிருந்தாள். சரி .. கலர்களையெல்லாம் டெஸ்ட் செய்கிறாள் என்று நினைத்தேன்.

ஸ்க்ரூ ட்ரைவரை வைத்து முடுக்கி விட்டு, துணிமணிகளை அடுக்கிக் கொண்டிருந்தேன். ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்துச் சென்றாள். பாதி துணிகளை அடுக்கி முடித்தேன். பேத்தி ஒரு தாளை நீட்டினாள். கலர் பென்சில்களை வைத்து ஒரு பக்கம் முழுவதும் தீட்டி, அதன் மேல் ஸ்க்ரூ ட்ரைவரை வைத்து scalpel painting போல் ஒரு படம் வரைந்து வந்து கொடுத்தாள்.





எனக்கு வழக்கமான பிரமிப்பு வந்தது. யாரும் சொல்லிக் கொடுக்காமல் அவளாகவே இப்படி ஒரு படம் - scalpel painting போல் - வரைய எப்படி அவளுக்குத் தோன்றியது என்று நினைத்தேன். அதிலும் A REALISTIC DAY என்று எழுதியிருந்தாள். I don't know why! வீட்டின் சுவர்களை ஏன் வளைந்து வரைந்துள்ளாய் என்று கேட்டேன். அதற்கும் ஏதோ பதில் சொன்னாள்.

****************************************

மதுரை வந்த பிறகும் அந்தப் படம் என்னைத் துரத்திக் கொண்டிருந்தது. அவள் சென்னையில் drawing class-க்குப் போகிறாள். இப்போது சில படங்களைக் கொடுத்து அதைக் காப்பியடிக்க சொல்லித் தருகிறார்களாம். அந்தப் படங்களில் எந்தவித கற்பனையுணர்வும் இல்லை; அப்படியே நகல் எடுப்பது தானாம். முன்பே ஒரு சித்திரக்கார நண்பர், பிள்ளையை எந்த drawing classக்கும் அனுப்பாமல் அவளே தனது சித்திரக் கலையைக் கற்றுக் கொள்ள வையுங்கள். Just motivate her. Let her learn the art herself. பின்னால் drawing classக்கு அனுப்புங்கள் என்று அறிவுறுத்தியிருந்தார். இதைக் கேட்காமல் அவளை சித்திர வகுப்பிற்கு அனுப்பியது தவறு என்று தெரிந்தது. மகளிடம் அவளை drawing class-க்கு அனுப்ப வேண்டாம்; நிறுத்தி விட்டு அவளாகவே படம் வரையச் செய் என்று அறிவுரை சொன்னேன். (பொதுவாக அறிவுரைகளை யார் கேட்டு நடக்கப் போகிறார்கள்??!!)

ஆனாலும் இதிலும் ஒரு டேஞ்சர்! அமெரிக்காவில் இருக்கும்போது இசைப் பயிற்சிக்குப் போயிருக்கிறாள். நோட்ஸ் பார்த்து key board வாசிக்கப் பழகியிருக்கிறாள் இங்கு வந்ததும் ஆங்கிலத்தில் சொல்லித் தரும் வாத்தியார் வேண்டுமென்று கேட்டதால் இசைப் பயிற்சி நின்று போனது. key board வீட்டின் மூலையில் தூங்குகிறது. சித்திர வகுப்பு வேண்டாமென்று நிறுத்தினால் இதையும் மூட்டை கட்டி வைத்து விடுவாளோ என்று பயமாக இருக்கிறது.

But in case you want to advise/motivate her you can write to: jessica.jegan@gmail.com 

Who knows, it may have better impact! 

********************

ஒரு காலத்தில் அமெரிக்கன் கல்லூரிக்கு அமெரிக்க மாணவர்கள் வந்து இங்கு ஓரிரு ஆண்டுகள் தங்கி கல்வி தொடர்வதுண்டு. அப்போது பார்த்த போது ஒவ்வொரு மாணவனும் ஏதாவது ஒரு hobby வைத்திருந்தார்கள். ஆனால் அது போல் எனக்கோ, நமது மாணவர்களுக்கோ ஏதும் இல்லை என்று கவலைப்பட்டதுண்டு. ஆனால் வளரும் சந்ததியினருக்கு இந்த வசதி இப்போது பெரும்பான்மையாகப் பெற்றோர்களால் செய்து கொடுக்கப்படுகிறதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

நாமும் வளர்கிறோம் ...


************************ *

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பேத்தி நன்றாகவே கதை சொல்லி இருக்கிறார்கள்... அழகாகவும் வரைந்துள்ளார்கள்... ரசித்தேன்...

பேத்திக்கும் வாழ்த்துக்கள்...

Dhiyana said...

தாங்க‌ள் பேத்திக்குக் க‌தை சொன்ன‌ அனுப‌வ‌ம் அழ‌கு..ந‌ம்மைவிட‌ அவ‌ர்க‌ள் அழகாக‌வும் கோர்வையாக‌வும் க‌தை சொல்கிறார்க‌ள்.

த‌ங்க‌ள் பேத்திக்கு நான் ஒரு ம‌ட‌ல் அனுப்பி உள்ளேன். தங்க‌ளையும் இணைத்து உள்ளேன். ஜெஸிகாவுக்கு வாழ்த்துக்க‌ள்!!!

அமர பாரதி said...

மகள் அமெரிக்காவில் இருந்து திரும்பி இந்தியாவில் செட்டில் ஆகி விட்டார்களா தருமி சார்.

துளசி கோபால் said...

இந்தக் காலத்திலும் கதை கேக்க வர்றாங்களா!!!! விட்டுடாதீங்க. பழைய கதைகள் ஏராளம் இருக்கே:-)

என் மகள் குழந்தையா இருக்கும்போது தினம் கதை சொல்வேன். அவளுக்கு ஒரே ஒரு கதைதான் தினம் கேட்கணும். த்ரீ லிட்டில் Bears and Goldilocks.

Avargal Unmaigal said...

பேரக் குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ளும் காலம் இது

thamizhparavai said...

scalpel painting really அட்டகாசம்...!
நிறைய ஓவியங்கள் பார்க்கவையுங்கள்,அது சம்பந்தமான படங்கள் ,பாடல்கள்...
கலர் மெட்டீரியல்ஸ் கிஃப்ட் பண்ணுங்க. வெகு இயல்பாகவே அவர்களை ஒரு ஓவிய என்விரான்மெண்டிற்கு மாற்றுங்கள்.
குழந்தைகள்லாம் கற்பூரம். ஜெஸ்ஸிகா சிறப்பாக வளர வாழ்த்துக்கள் தருமி ஐயா...

கோமதி அரசு said...

சுப்பாண்டி கதை தெரியவில்லையா தாத்தாவிற்கு?

என் பிள்ளைகள் சின்னபிள்ளையாக இருக்கும் போது பூந்தளிர் கதை புத்தகத்தில் சுப்பாண்டி கதை இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த கதை.

என் பேத்திக்கு பீர்பால் கதை, தெனாலிராமன் கதை, பஞ்சத்ந்திர கதை எல்லாம் சொல்வேன்,
பேரன் கதை கேட்க மாட்டான் அவனிடம் கிரிக்கெட் பற்றி தான் பேச வேண்டும்.

//ஒவ்வொரு மாணவனும் ஏதாவது ஒரு hobby வைத்திருந்தார்கள். ஆனால் அது போல் எனக்கோ, நமது மாணவர்களுக்கோ ஏதும் இல்லை என்று கவலைப்பட்டதுண்டு. ஆனால் வளரும் சந்ததியினருக்கு இந்த வசதி இப்போது பெரும்பான்மையாகப் பெற்றோர்களால் செய்து கொடுக்கப்படுகிறதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.//

ஆம், நீங்கள் சொல்வது சரி குழந்தைகள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதை பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள் .

TBR. JOSPEH said...

என் பேத்திக்கு கதை சொல்ல தாத்தாவே தேவையில்லை. ஐந்து வயதில் சாம்சங் டாபில் யூட்யூப் பார்த்து பழகிப்போனவளுக்கு தாத்தா கதை எதற்கு? படிக்க தெரியாத வயதில் iconகளை அப்படியே மனப்பாடம் செய்து கார்ட்டூன் படங்களை செலக்ட் செய்து பார்க்கும் அளவுக்கு பழகிப்போயிருக்கிறது. நாம் சொல்வதை ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து கேட்க பொறுமையில்லை. கதை சொல்லும் கடமையில் இருந்து எனக்கு விடுதலை:))

ஜோதிஜி said...

பதிவு எழுதுவதை விட குழந்தைகளுக்கு கதை சொல்வது மிக மிக சவாலான வேலை.

மூவருக்கும் பிடிக்க வேண்டும்.
கட்டாயம் மந்திர கதையாக இருக்க வேண்டும்.
இடையில் சிரிக்க வைக்க வேண்டும்.
சஸ்பென்ஸ் இருக்க வேண்டும்.
முடிவு கட்டாயம் சுபமாக இருக்க வேண்டும்.

பலமுறை தடுமாறிய போதும் அந்த நிமிடத்தில் யோசித்து யோசித்து பல முறை வென்று உள்ளேன்.

சரியாக சொல்லி இருந்தால் முடிவின் இறுதியில் மூவரும் ஆழ்ந்த தூக்கத்திற்கு போய்விட்டார்கள் என்று அர்த்தம்.

வவ்வால் said...

தருமிய்யா,

நல்ல அனுபவம். இளையத்தலைமுறையிடம் பாடம் பயின்றுள்ளீர்கள் ,தாத்தாவுக்கு பிரணவம் சொல்லி தந்த பேத்தினு (முருகந்சிவன் கதை) சரித்திரம் பேசும் :-))

ஹி..ஹி என்ன மாதிரியே 3 ஆம் வகுப்பிலேயே வாசிக்க ஆர்வம் காட்டுறாங்க :-))

ஆனால் அப்போலாம் நான் வாசிக்கனு கேட்டால் கூட புக்கு கிடைக்காது, என்ன கதைப்புக்கு வேண்டிக்கிடக்கு பாடம் படினு பாட்டுத்தான் கிடைக்கும்.

இப்போ காலம் மாறிடுச்சு, அப்படியே வாசிப்பார்வம்,ஓவியம்னு கொண்டுப்போங்க.

# படம் நல்லா வந்திருக்கு,அனேகமா காற்று வீட்டை நோக்கி வீசுவதாகவும், அதுக்கு மரம் போல வீட்டின் சுவர்கள் வளைவதாகவும் கற்பனைனு நினைக்கிறேன்.இப்படி செய்வதால் வீட்டுக்கும் ஒரு "எக்ஸ்பிரஷன்" கிடைக்குது.

ஒரு வகையில் கார்ட்டூன் டெக்னிக்,கார்ட்டூன் சேனல் பார்த்து மனதில் பதிந்து இருக்கலாம்.

Post a Comment