Wednesday, September 04, 2013

679. என் வாழ்க்கையில் நான் கடந்து வந்த ‘பெரும் அதிசயங்கள்’ .!





*
அதீதம் இணைய இதழில் தருமி பக்கத்தில் வந்த என் கட்டுரையின் மறு பதிப்பு .....

*

முதலிலேயே ஒன்று சொல்லி விடுகிறேன். என் வாழ்க்கையில் எனக்கு அதிசயங்களாகத் தெரிந்தவைகளைச் சொல்லப் போகிறேன். அதையெல்லாம் படிச்சிட்டு ...  ப்பூ .. இம்புட்டு தானான்னு படித்து விட்டு சிரிக்கிற ஆளுக நிறைய இருக்கலாம். அவர்களுக்கு ஒரு வார்த்தை. இப்போதே இதை வாசிப்பதை நிறுத்தி விடுங்கள். இதையும் மீறி வாசித்து விட்டு, 'இதப் போய் ஏன்’யா அதிசயம் அப்டின்னு சொன்ன ...?’ அப்டின்னு கேள்வி கேட்டுட்டு நிற்கக்கூடாது. எனக்கு அன்றைய தேதியில் அவை அதிசயம். இப்போ எனக்கே அது ஒண்ணுமில்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று .. அது அதிசயம் தான்.

ஒரு உதாரணம் சொல்றேனே ... இப்போவெல்லாம் நம்ம பெயரை ஒரு பிரிண்டரில் கொடுத்து அடிச்சிக்கலாம். your name in printed form. இது இப்போ அம்புட்டு ஈசி. ஆனால் ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன் அதெல்லாம் முடியாது. கல்யாண அழைப்பிதழில் மட்டும் தான் முதல் முதலாக உங்கள் பெயரை print-ல் பார்க்கலாம் என்பது மாதிரியான நிலை. அப்போ electronic typewriter வந்தது. நம்ம ஊர்ல நான் பார்த்த்தில்லை. Foreign - அதாவது அமெரிக்காவிலிருந்து ஒரு கடிதம் உங்கள் பெயர் போட்டு வந்தால் அதில் முகவரியில் உங்கள் பெயரை printed form-ல் பார்க்கலாம். அப்படி வருகின்ற கடிதங்களை என்ன செய்கிறோமோ, ஆனால் அது வந்த உறையைப் பத்திரமாக கொஞ்ச நாளாவது வைத்திருப்போம். நம் பெயரை print-ல் பார்க்கிறது அப்படி ஒரு அதிசயம். சொல்லுங்க .. எனக்கு இது அந்தக் கால அதிசயம். உங்களுக்கு ...?

அட .. நம்மல்லாம் தம்மடிக்கிற கோஷ்டியாச்சே. ஆசைக்கு cigar lighter வாங்கணும்னு ஆசை வரும். ஒண்ணு வாங்குவோம். அதுக்கு பெட்ரோல் போட என்ன செய்வது? இப்போது மாதிரி ஆளாளுக்கு ஒன்று இரண்டுன்னு பைக் வச்சிருந்தோமா .. கிடையாது. யாராவது ஒரு நண்பனோட நண்பனோட நண்பனின் மாமா ஒருத்தர்ட்ட ஒரு பைக் இருக்கும்.. மறுபடி இதே ரூட்ல ... நண்பன், நண்பன், நண்பனின் மாமா என்ற ரூட்ல போய் பெட்ரோல் போட்டிருவோம். ஆனால் அதை வைத்து சிகரெட் பத்த வைக்க நாங்க படும் பாடு. முதலில் cigar lighter-யைத் தலைகீழா பிடிச்சிக்கிட்டு கை சுழுக்கிக் கிட்டா உதறுவோமே அது மாதிரி நல்லா கையை உதறணும். இருக்கிற சுழுக்கு எல்லாம் போய்டும். அத உடுங்க .. இப்போ லைட்டரைப் பத்த வைக்கணும். நிச்சயமாக முதல் ஐந்து தடவையில் பொறி வரும்; நெருப்பு வராது. ஒரு கணக்கு போட்டா 5-10 தடவை முயற்சி செய்தால் ஒரு தடவை ஒரு சிகரெட் பத்த வச்சிரலாம்.

இந்த மாதிரி இருக்கிறப்போ நண்பன் தேவராஜ் - அனேகமாக 1970-வது வருடமாக இருக்கும் - ஒரு நாள் நான் சிகரெட் எடுத்து பத்த வைக்கிறப்போ அவன் தன் புதிய லைட்டரை எடுத்தான் .. க்ளிக்கினான் .. நெருப்பு வந்தது. Vini, Vici, Vidi மாதிரி எல்லாம் சுருக்கமா முடிஞ்சிது. நண்பனும் பெரிய ஜூலியஸ் சீசர் மாதிரி சிலுப்பிக்கிட்டான். என்னடா இதுன்னு கேட்டோம். electronic lighter என்றான். மாமா அமெரிக்காவிலிருந்து அனுப்பினார் அப்டின்றது மாதிரி ஒரு கதை சொன்னான். நாங்கள் மூன்று நாலு பேர் அதைப் பரிட்சித்துப் பார்க்க கேட்டோம். தனியொருவர் கோரிக்கைளைப் புறந்தள்ளி விட்டான். பின் கடைசியாக கூட்டணி முயற்சியில் மூன்றே மூன்று முறை க்ளிக் செய்ய அனுமதித்தான். என்ன ஆச்சரியம். மூன்று க்ளிக் ... மூன்று முறையும் ஜிவ்வென்று நெருப்பு வந்தது. நம்ப முடியவில்லை .. நடந்தது ... அதான் அதிசயம்.

அமெரிக்காவிலிருந்து வர்ர ஆளுகளிடமிருந்து பால் பேனா வாங்குறதும், அவங்க அதுக்காகவே அவைகளை வாங்கிட்டு வர்ரதும் ஒரு வழக்கம். அதில் Bic அப்டின்னு ஒரு பேனா ரொம்ப எனக்குப் பிடிக்கும். (இப்படி கிடைக்கிற  பேனாவா சேர்த்து வச்சி ஒரு நாள் எடுத்துப் பார்த்தா டப்பா முழுவதும் பேனாக்கள் மசியாக ’வாந்தி’ எடுத்து வைத்திருந்தன. அத்தனை பேனாவையும் தூக்கிப் போட்டுட்டேன்.
ஆனாலும் அந்தக் ‘கிறுக்கு’ இன்னும் கொஞ்சம் மீதியிருக்கு.
இப்போவெல்லாம் சேர்க்கிறது கொஞ்சம் பெயர் வாங்கின பேனாக்கள் - Cross 4; sheaffer 2 .. இந்த மாதிரி  இருக்கு.)

இந்த சீசன்ல சூரின்னு நண்பன் ஒருவன் அமெரிக்கா போய்ட்டு வந்தான். ஒரு பால்பேனா எடுத்தான். பேனாவைத் திறந்து அதன் முனை சிமிண்டு தரையில் விழுவது போல் போட்டான். எடுத்தான். எழுதினான். அழகாக எழுதியது. (அப்போ அமெரிக்காவில் இது தான் அந்தப் பேனாவிற்குரிய விளம்பரம் என்றான்.) ஆகா .. ரொம்ப நல்லா இருக்கே என்று பார்த்தேன். பேனாவைத் திறக்க முயற்சித்தேன். நண்பன் அது use-and-throw பேனா என்றான். அப்போதெல்லாம் நம்ம ஊர்ல அப்படி பேனாவெல்லாம் இல்லை; ரெண்டு ரூபாய்க்குப் பேனா, முப்பது பைசாவிற்கு ரீ பில் இருந்த காலம் அது. Reynolds பேனா அது. அந்தப் பேனாவைப் பார்த்து அப்படி ஒரு ஆச்சரியம்; அப்போ அது ஒரு அதிசயம்.

1977க்கு முன்பு. ரூபனுக்கு எப்பவுமே அமெரிக்க நண்பர்கள் குழு அதிகம். எங்கள் கல்லூரியில் அப்போது அவன்தான் நூலகத் தலைவர். ஒரு நாள் நூலகம் போய்ட்டு அவன் அறைக்குப் போனேன். செம சைஸில் ஒரு கொகோ கோலா பாட்டில் இருந்தது. 2 லிட்டர். அம்புட்டு சைஸில் ஒரு கொகோ கோலா பாட்டிலை அதுவரைப் பார்த்ததில்லை. இங்கே சின்ன பாட்டிலில் ’கலர்’ இருக்கும். வாங்கிட்டு வாயில ஊத்தி முடிச்சிட்டு போகணும். இது என்ன இம்மாம் சைஸில் ஒரு பாட்டில்! ‘எதுக்குப்பா இம்மாம் பெருசு?’ அப்டின்னேன். ’பார்ட்டி அது இதுக்கு இப்படி இருக்கும்’ என்றான். ஆனாலும் அந்தப் பாட்டிலைப் பார்த்ததும் நமக்கும் மேலை நாட்டுக்கும் ரொம்ப ‘தூரம்’ இருக்குன்னு நினைத்தேன். அந்த சைஸில் பாட்டில் பார்த்த்து அதிசயமாக இருந்தது. இது போல் இன்னும் சில இருக்கு. பிறகு பார்ப்போம் ........


*






7 comments:

நம்பள்கி said...

இந்தியாவில் Msc (zoology)படித்தவர்களுக்கு என்ன வேலை கிடைக்கும்? பாம்புகளைப் பற்றி எல்லாம் பாடம் எடுதீர்ர்களா?

ப.கந்தசாமி said...

அந்தந்த வயசில அவைகள் அதிசயம்தான்.

துளசி கோபால் said...

அதிசயமே அசந்து போகும் அதிசயங்கள்தான்!!!!

G.M Balasubramaniam said...

பால் பாயிண்ட் பேனாவின் ரீஃபில்லில் இங்க் நிரப்பும் (எப்படி என்று இதுவரை தெரியாது)அதிசயம் கண்டிருக்கிறேன்.

Anonymous said...

இதெல்லாம் கேட்டு இப்போ எனக்கு அதிசயமா இருக்கு சார்.

டிபிஆர்.ஜோசப் said...

தூத்துக்குடியில இருந்தப்போ எங்க ஹெட்ஆபீசுக்கு ஃபோன் பண்ணனும்னா எங்க பிராஞ்சுக்கு பக்கத்துலருக்கற தந்தி ஆஃபீசுக்கு போயி நம்பர குடுத்துட்டு பெஞ்சில ஒக்காந்துருக்கணும். லைட்னிங் கால்னா உடனே கிடைச்சிரும். இல்லன்னா பத்து நிமிஷம். என்ன சொல்லணும்னாலும் மூனு நிமிஷத்துல சொல்லி முடிச்சிறனும். என்ன சொல்லணுமோ அத எழுதி வச்சிக்கிட்டு போயி ஒப்பிச்சிருவேன்... அத இப்ப நினைச்சிப்பார்த்தாலும் சிரிப்பு வருது.... எல்லாமே மாறிப்போச்சுங்க...

தருமி said...

இது இந்த மாதம் ..
நீங்க சொன்னது போன மாதம் ..
அதுக்கு முந்துன மாதத்தில என்ன நடந்தது தெரியுமா...?

இங்க வாசியுங்க ..
http://dharumi.blogspot.in/2007/01/195.html

Post a Comment