*
ஆயிரம் சொல்லுங்க ... அது எந்த பெரிய ஊராகவும் இருந்துட்டுப் போகட்டும். அது பெரிய ஆப்பிளோ .. இல்ல பெரிய மெட்ரோவோ .. இல்ல உலகத்துக்கே தெரிஞ்ச எலெக்ட்ரானிக் நகரமோ .. எதுவாயிருந்தாலும் எங்க ஊரு மதுர மாதிரி வருமா? என்னா சுகம் ... எப்பிடி இப்படி ஒரு அருமையான ஊரா இருக்கு எங்க ஊரு ...
என்ன திடீர்னு மதுரக்காரனுக்கு இப்படி ஒரு குதூகலம் அப்டின்னு நினைக்கிறீங்களா. வேற பெரிய ஊருகளுக்குப் போய்ட்டு வந்து, நம்ம ஊருக்குள்ள நுழஞ்சதும் வர்ர சந்தோஷம்... அப்படி வர்ர சந்தோஷத்தோடு வீட்டுக்குள்ள நுழஞ்சி .. நம்ம கட்டில்ல ‘அக்கடா’ன்னு சாயும் போது வர்ர சந்தோஷம் இருக்கே ... அத அனுபவிக்கணும் .. ஆராயப்படாது! சும்மாவா ஒரு எழுத்தாளர் ‘வீடு என்பது விடுதலை உணர்வு’ அப்டின்னு எழுதினார். அந்த எழுத்தாளர் யாரு ...? பாலகுமாரனா ..?
நேத்து - 11.11.13 - பெண்களுரிலிருந்து மதுரைக்கு ரயில் பயணம். மைசூர்-தூத்துக்குடி ரயிலில் பயணம். இரவு 9.20க்கு பெண்களூர் சிட்டி ரயில் நிலயத்தில் புறப்படுகிறது. நாங்கள் இருந்தது எலெக்ட்ரானிக் சிட்டி. எப்போ புறப்படலாம்னு உறவினர்களின் நடுவே ஒரு பட்டி மன்றம் நடந்தது. சரி .. மாலை 7 மணிக்குப் புறப்படலாம் என்று முடிவானது. ஆனாலும் பட்டிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஒரு அனுபவமான குரல் - தம்பியின் குரல் - ஒலித்தது. ஒரு காலத்தில் ராணுவத்தில் எல்லாம் இருந்த ஆளில்லையா ... அதனால் அவர் சொன்னது போல் 7 மணி என்பதை ஒத்தி வைத்து, 6.45க்குப் புறப்படுவதாக முடிவெடுத்து, பின் அதையும் மீறி 6.40க்கு வீட்டை விட்டுப் புறப்பட்டோம்.
மென்பொருள் கம்பெனிகள் நிறைய இருக்கா அந்த இடத்தில. ஆபிஸ் முடியிற நேரம் வேற. கூட்டமாக இருந்தது. ஆனாலும் தான் இருக்கவே இருக்கு நம்ம elevated express way அப்டின்னு அந்த பாலத்தில் போனோம். 70-80 வேகத்தில் போனோம். நல்லாவே இருந்தது. உயரமான பாலத்தில் போய்க்கொண்டு சுற்றியிருந்த பெரிய கட்டிடங்களையும், ஒளிக்கோலங்களையும் பார்த்துக் கொண்டு 10 கிலோ மீட்டர் போனோம். அந்தப் பாலம் 12 கிலோ மீட்டர் நீளமாம். பத்து கிலோ மீட்டர் போனதும் வேகம் குறைந்தது. சில நிமிடங்களில் போக்கு வரத்து அனேகமாக நின்றே போனது. மடிவாலாவில் ஒரு சிக்னல் இருக்குமே அங்கே ரொம்ப கூட்டமாக இருக்கும்; அதனால் என்றார்கள்.
ஊர்வலம் ஆரம்பமானது அங்கே. மிக மிக மெல்ல போகவேண்டியதிருந்தது. அந்தப் பாலம் முடிந்து சிறிது தொலைவு .. பின் மறுபடி இன்னொரு சின்ன பாலம். இந்தச் சின்னப்பாலம் வரை elevated express way-யை கொண்டு வந்திருந்தால் நன்கிருந்திருக்குமோன்னு ஒரு சிந்தனை. சின்னப் பிள்ளைகளை ஏமாற்றுவது போல் ’இதோ .. இப்போது ஒரு சிக்னல் வரும்; அதைத் தாண்டி விட்டால் வேகமாகப் போய்விடலாம்’ என்றார் தம்பி. இதிலும் நேராக சிட்டி போகலாமா .. அதிக நேரம் ஆவதாயிருந்தால் நேரடியாக கன்டோன்மெண்ட். போகலாமா என்று முடிவுக்கு வர முடியவில்லை. It was a race between time and distance. இரண்டிற்கும் ஒரே வழிதான். கடைசிப் பகுதியில் மட்டும் எந்தப் பக்கம் போவது என்று முடிவெடுத்துத் தாண்டிக் கொள்ளலாமென முடிவு செய்தார்.
எப்படியும் ஒரு 20 சிக்னல்களைத் தாண்டியிருப்போம். ஒரே ஒரு சிக்னலில் மட்டும் பச்சை விளக்கு. மற்ற எல்லாவற்றிலும் ஒரே சிகப்பு தான். ஒரே சிக்னலில் சிகப்பில் நின்று, அடுத்த பச்சையில் முன்னேறி, மறுபடியும் அதை சிகப்பாக ...இன்னும் காத்திருந்து அடுத்த பச்சையில் முன்னேறினோம். இது பத்தாது என்பது போல் காரிலிருந்த கடிகாரம் 25 நிமிடம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. தங்ஸிற்கு அது தெரியாது. திடீரென ’அட ... முக்கால் மணி நேரம் தான் இருக்கு. போக முடியுமா?’ என்று ஒரு அபயக்குரல் எழுப்ப, கடிகாரம் விரைந்து செல்கிறது என்று சொல்லி சமாதானம் செய்ய வேண்டியதாயிருந்தது.
நேரம் ஒழுங்காக ஒடுது. ஆனால் தூரம் மட்டும் நெருங்க முடியாமல் இருந்தது. மணி எட்டரை தொட்டு விட்டது. தூரம் பற்றி எனக்கும், தங்ஸிற்கும் தெரியாது. ஆனால் அங்கங்கே சிகப்பு நெஞ்சில் துடிப்புகளை அதிகமாக்கியது. இப்படியே நாலு தடவை அந்த ஊரில் பயணம் செய்தால் கட்டாயம் ரத்த அழுத்தம் வந்திரும் போலும்.
சிட்டியா, கன்டோன்மெண்டா என்ற முடிவெடுக்கும் நேரம் வந்தாச்சு. ஒரு குருட்டு தைரியத்தில் சிட்டி என்று முடிவு செய்து சாலையைத் தேர்ந்தெடுத்தோம். அந்தப் புள்ளியில் ஒரு ஐந்து நிமிடம் வண்டி வேகமாகப் போனது. வந்தது அடுத்த சிகப்பு. தத்தித் தத்தி ஒரு வழியாக சிட்டி நிலையம் வந்தாச்சு. இங்கு அடுத்த ஒரு பிரச்சனை. நிலையத்தின் பின் பக்கம் போனால் படியேற வேண்டியதில்லை என்பதால் அந்தப் பக்கம் போக திரும்பியாச்சி. ஆனால் இங்கே எங்களைப் போன்ற ஒரு பெரும் படை.. எல்லோருக்கும் மனசுக்குள் வேகம். ஆனால் ஒரே கூட்டம். முக்கி முனங்கி , பின் பக்கத்திற்கு ஊர்ந்தோம். ஒரு வழியாக எங்களை அங்கே இறக்கி விட்டு விட்டு தம்பி காரை நிறுத்த சென்றார். நானும் தங்ஸும் 5-ம் மேடைக்குப் போக வேண்டும். யாரோ ஒருவரிடம் கேட்டேன். பாவி மனுசன் 8ம் நடை மேடையை காட்ட அங்கே தங்ஸை ‘இழுத்துக் கொண்டு’ (அப்படி போனால தான் காரியம் நடக்கும்!) அங்கே போனோம். அதன் பின் 5ம் மேடை எதிர்ப்பக்கம் என்று தெரிந்து அந்தப் பக்கம் போனால் மைசூரிலிருந்து வந்த அந்த ரயில் ஒரு மாதிரி உருமிக்கொண்டு இதே புறப்படப் போகிறேன் என்பது போல் நின்றது. ஏற வேண்டிய எங்கள் பெட்டி நெடுந்தொலைவில் தள்ளி நின்றது. நாலு எட்டு வைக்கவே கஷ்டப்படும் தங்ஸை இழுத்துக் கொண்டே பாதி தூரம் போனோம். கடிகாரத்தைப் பார்த்து அதன் பின் சிறிதே மெல்ல இழுத்துக் கொண்டு சென்று ஒரு வழியாக சரியான பெட்டியை அடைந்து, உள்ளே ஏறி எங்கள் இடத்திற்குப் போய் உட்கார்ந்தோம். புறப்பட வேண்டிய நேரம் 9.20. மணி அப்போது 9.14. ஆறு நிமிடத்தில் வெற்றி. அப்பாடா ...! தங்ஸிற்கு திடீரென்று ஒரு ‘பிரசவ வைராக்கியம்’! இனி பெண்களூரு போகவே வேண்டாம் என்றார் - ஆனால் தங்கையிடம் அடுத்த மாதம் வருவதாக ஏற்கெனவே ஒரு சபதம் செய்திருந்தார். அடுத்த மாதம் நிலைமை எப்படியோ ...?!
அதோடு எனக்கும் தங்ஸிற்கும் ஒரு விவாதம். பெட்டியில் ஏறி உட்கார்ந்ததும், ’எப்படியும் ரயிலைப் பிடித்து விடுவோம்னு தெரியும். ஏன்னா, நான் சாமிட்ட வேண்டிக்கொண்டேன்’ என்றார்கள். நம்ம மனசுக்குள்ள இருந்த நாட்டாமை, ‘அதெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது. அப்படி நம்பிக்கையிருந்தால் காரில் வைத்து ஏன் அவ்வளவு டென்ஷன். நிச்சயமா சாமி வண்டியில் ஏத்தி உட்ரும்னு ஜாலியா இருந்திருக்கலாமே! அதனால் இப்போ சாமி நம்மளை ஏத்தி உட்டுச்சு சொல்றது செல்லாது. இது ஆட்டைக்கு சேராது’ அப்டின்னு ஒரு தீர்ப்பை நாட்டாமை எடுத்து உட்டார்!
ரயிலில் படுத்துத் தூங்கி காலையில் அரை மணி தாமதமாக மதுரை வந்து சேர்ந்தோம். தெரிந்த ஆட்டோக்காரர் காத்திருந்து பெட்டியை அவரே வாங்கி வண்டிக்கு இட்டுச் சென்றார். 7.55க்கு ஆட்டோவில் ஏறினோம். ஊரை விட்டு வெளியே வளர்ந்து வரும் எங்கள் குடியிருப்பிற்குப் போய் வீட்டு முன்னால் இறங்கினோம். மணி 8.11. பதினாறே நிமிடம் வீட்டுக்குப் போய் விட்டோம். இதல்லாவா எங்கள் ஊர்! காலை வேளை என்றில்லை; மாலையாக இருந்திருந்தால் இன்னொரு பத்து நிமிடம் அதிகாம ஆகியிருக்கலாம். அவ்வளவே.
நம்ம ஊரு நம்ம ஊருதான். என்ன சுகம் ..! பெண்களூரை நீங்களே வச்சிக்கங்க’ப்பா!!!
*
19 comments:
படித்த எங்களுக்கே, தாங்கள் தொடர் வண்டியைப் பிடிப்பிர்களா, தவற விட்டு விடுவீர்களா என இரத்த அழுத்தம் ஏறத் தொடங்கி விட்டது.
சொந்த வீட்டில் இருக்கும் சுகமே சுகம். நன்றி ஐயா
பெண்களூரு, பெண்களூருன்னு முழங்கிட்டு இருக்கிறாரே, ஏதாச்சும் இருக்கும்போல என்று வந்தால் ஒண்ணையும் காணோம்?
அதெல்லாம் சரி, பெங்களூரு கிளைமேட்டையும் மதுரை கிளைமேட்டையும் கம்பேர் பண்ணி ஒரு பதிவு போடுங்களேன்.
வேண்டாம்பா இந்த பெங்களூரு.
அங்க இருக்கறவங்க இதை எல்லாவற்றையும் மீறி அங்கே இருக்கத்தான் ஆவல் என்கிறார்கள்.!!!!
வீட்டுக்கு வீடு எலிகாப்டர் வாங்கிப்பாங்களோ என்னவோ.
அப்படியான பெங்களூரில் (அதாவது உங்களுடைய பெண்களூரில்) ஆறு வருடங்கள் குப்பை கொட்டியவன் நான்! எப்படி இருந்திருக்கும்?
நீங்கள் பட்ட சிரமத்தைத்தான் தினசரி இங்கே எல்லாரும் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் தற்போது தினமும் யஷ்வந்தபுரத்திற்குச் சென்றுவர வேண்டிய பணி. முன்பெல்லாம் எங்கள் வீட்டிலிருந்து வாகனத்தில் இருபத்தைந்து நிமிடங்களில் கடந்த தூரத்தைக் ( ரிங்ரோட்டில்) கடக்க இரண்டு மணிநேரம் ஆகிறது. இரண்டொரு சிக்னல்கள், கூடவே இரண்டு இடங்களில் புதிய பாலங்கள் கட்டுகிறார்கள்.அதனால் இப்போதெல்லாம் ரிங்ரோட்டைத் தவிர்த்துவிட்டு நகருக்குள் புகுந்து சென்றுவருகிறேன் .
நீங்கள் சொன்ன வழியில் நகர்ப்புறத்திலிருந்து சில்க் போர்டு வருகிறவரை மட்டுமே இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடுவது உண்மைதான். எல்லாமே இந்த ஐ.டி கம்பெனிகளால் வந்த வினை. இந்தியாவிலேயே பெங்களூரில்தான் அதிகமான கார்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. கார்கள் போவதற்கேற்ற அடிப்படை வசதிகளைச் செய்யாமல் சரியான வழித்தடங்களை ஏற்படுத்தாமல் கட்டுக்கடங்காத கார்களைச் சாலையில் இறக்க அனுமதி கொடுத்துவிட்டு விழிபிதுங்கி நிற்கிறது பெங்களூர்.
இப்போதைய நிலைமையில் வேறு ஏதேனும் வசதிகள் செய்யமுடியுமா என்பதும் சந்தேகம்தான். அவதிப்படுவது அவனவன்பாடு என்கிற ரீதியில் பேசாமல் இருக்கப்போகிறது அரசாங்கம் என்றுதான் படுகிறது.
Next time onward you board at Hosur station, Hardly it will take 30-45 mins from Electronic city to Hosur station. You can start by 9 PM, Mysore - Tuticorin express reach hosur at 10.15 PM. Im staying in Attibele, Karnataka - TN border.
- Baranee
இங்கே தினமும் எல்லோரும் இப்படிதான் நகர் ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறோம்:)! பழகி விட்டது.
சில நிமிடங்களே வண்டி நிற்குமென்றாலும் (மிக அதிகமான லக்கேஜ் இல்லாதவரையில்) கன்டோன்மெண்டில் ஏறுவதுதான் எளிது.
சொந்த வண்டிகளில் யாரும் பயணிக்கக் கூடாது, பொது வண்டிகளில்தான் பயணம் செய்ய வேண்டும் என்ற நிலை வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையலாம். அல்லது நகரும் சாலைகள் வர வேண்டும்! நிச்சயம் குறைந்து விடும்.
//நகரும் சாலைகள்...//
அப்டின்னா என்னங்க ..?
நகரும் சாலைகள் : வண்டிகள் எதுவும் போக்குவரத்தில் கிடையாது! நீங்கள் கோரிப்பாளையத்திலிருந்து புதூர் செல்ல வேண்டும். அண்ணா பஸ் ஸ்டாண்ட் சாலையில் - நகரும் சாலையில் பயணித்து - திருப்பத்தில் இறங்கி ரோட் மாறி புதூர் சாலையில் ஏறி நிற்கிறீர்கள். சாலை உருண்டுகொண்டே இருக்கும்! மெகா கன்வேயர் பெல்ட் சாலைகள். புதூர் வந்தவுடன் மெல்ல இறங்கி ஓரம் சென்று புதூர் சர்ச்சுக்கு சென்று வரலாம்! சும்மா கற்பனை! :)))))))
எந்த ஊர்ல இப்படியெல்லாம் இருக்குங்க ..!
எங்கும் இப்படி இல்லை! கற்பனை ஸார்.. கற்பனை. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒவ்வொரு ஊரிலும் இது மாதிரி நகரும் சாலைகள் அமைத்து விட்டால் என்று முன்பு ஒருமுறை' எங்கள் ப்ளாக்கிலும்', வேறு ஒரு வலைத்தளத்தில் யோசனைகள் கேட்டபோதும் செய்த கற்பனை! :)))
Futuristic sciences-ல் Possible, Probable and Preferable என்ற மூன்றில் ஒன்று என்று சொல்வார்கள். இதில் ‘உங்கள் நகரும் சாலைகள்” எதில் சேர்த்தி?
மூன்றாவது!
தாங்கள் எலக்ட்ரோனிக் சிட்டியில் இருந்து பெங்களூர் சிட்டி வரும் நேரத்தை காட்டிலும் ஹோசூர் நிலையத்திற்கு சென்றால் விரைவில் சென்று விடலாம் . ரயில் இரவு 10.30 க்கு தான் வரும்
நானும் ஒருமுறை மடிவாலாவிலிருந்து சாந்தி நகர் பஸ் நிலையத்திற்கு போவதற்கு பட்ட பாடு மறக்க முடியாது ,நம்ம மதுர நம்ம மதுரதான்!
த.ம +1
நானும் ஒருமுறை மடிவாலாவிலிருந்து சாந்தி நகர் பஸ் நிலையத்திற்கு போவதற்கு பட்ட பாடு மறக்க முடியாது ,நம்ம மதுர நம்ம மதுரதான்!
த.ம +1
எனக்கும் கார்த்திக்கிற்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு. என்னை ரயிலில் ஏற்றிவிட போய்க்கொண்டிருந்த பொது ரயில் ந்ல்லையம் கூப்பிடு தூரத்தில் இருக்க ''அம்மா ரயில்' என்றான் கார்த்திக் என்னது நான் ரயிலை பார்த்ததே இல்லையா என்று குழம்பிய பிறகுதான் தெரிந்தது நான் செல்ல வேண்டிய ரயில் அது என்று.எங்கள் கார் ரயில் நிலையத்திற்குள் நுழைகிறது. ரயிலும் ரயில் நிலையத்திற்குள் நுழைகிறது .பர்சையும், செல் மட்டும் எடுத்துக் கொண்டு 4 கால் பாய்ச்சலில் கிடைத்த பெட்டியில் ஏறி சீட்டை பிடித்து உட்கார, கார்த்தி பறந்து வந்து பையை கொடுக்க ,ஒரே களேபரம்தான்.
கார்த்திக் அம்மா
பல்லவன் .. கார்த்திக் அம்மா ... பல்லவனை ‘அமுக்கினால்’ வகுப்பறை போகுது. அங்க ‘வாத்தியார்’ இருக்கார்.
என்னங்க இது ...?ஒரே மேஜிக்கா இருக்கே ..!
Post a Comment